வியாழன், 11 டிசம்பர், 2014

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் யார்?


மா.அழகிரிசாமி,
மாநில துணைத்தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்
இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே என அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரபணு மாதிரிகளை இதற்காகச் சேகரித்து ஆய்வுகள் நடத்தி, உலகம் முழுவதும் இந்த ஆய்வுக்காகச் சென்று , பல நாடுகளில் ஆய்வு மய்யங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக மரபணு மாதிரிகள் சேகரித்து அந்த ஆய்வின் முடிவாக இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே; ஆரியர்கள் பின்னர் தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கு மரபியல் ரீதியான தெளிவான ஆதா ரங்கள் உள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார். இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்பதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் சிந்துவெளியில் கிடைத்த போதிலும் அதனை ஏற்க மறுக்கும் பார்ப்பனர்கள் ,இப்போது அறிவிக்கப்பட்ட மரபியல் சான்றுகளை மறுக்க இயலாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது .இன்று உலகில் காணப்படும் அனைத்து மக்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் வழித் தோன்றல்களே என ஸ்பென்சர் வெல்ஸ் கண்டறிந்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் மனித இனம் எவ் வாறு சென்றது என்பதை கண்டறிந்து விளக்கி உள்ளார்.
உலகம் முழுவதும் ஸ்பென்சர் வெல்ஸ் ஏற்படுத்திய ஆய்வு மய்யங் களில் ஒன்று மதுரையில் அமைந்த தாகும். உலகம் முழுவதும் அமைந்த மய்யங்களுக்குத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களை முதன்மை ஆய்வாளர் களாக ஸ்பென்சர் வெல்ஸ் நியமித்தார் .இந்திய மையத்திற்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் அறிவியல் அறிஞர் ராமசாமி பிச்சப்பன் இருந்தார். தனது ஆய்வின் காரணமாக ஸ்பென்சர் வெல்ஸ் புது டெல்லி, மதுரை, மும்பை வந்துள்ளார். செய்தியா ளர்களை அவர் சந்தித்த போது, இந்தி யாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள் தான் என்றும், ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார் .
இதனை ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”)  என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார் .இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது யூ-_டியூப் (youtube)  காணொலிப் பதிவிலும் இதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவசியம் காண வேண்டிய ஒன்று .
இப்படத்தில் இவரே தோன்றி உலகின் நிறைய இடங்களுக்குச் சென்று விளக் குவதை காண முடிகிறது. இது குறுந் தகடாகவும் வெளியிடப் பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ் “Deep Ancestry Inside The Genographic Projectஎன்ற இன்னொரு புத்தகத்தையும் இது தொடர்பாக எழுதி உள்ளார் .
அவர் செய்தியாளர்களிடம் பேசிய தன் சுருக்கத் தொகுப்பு :
கேள்வி: மனிதனின் பயணம் எப்படி இருந்தது?
பதில் : இந்த ஆய்வு படமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் 10 ஆண்டு களுக்கு முன்னரே இருந்தது .உலகின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்து, பழகிக் கொள்ள வேண்டி இருந்தது மய்ய ஆசியா ,ஆஸ்திரேலியா அலாஸ்கா போன்ற இடங்களில் பயணிக்க வேண்டும்.நாம்(மனிதர்கள்) எங்கே தோன்றினோம்? உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எப்படி வந் தோம்? இதுவே முக்கியக் கேள்விகளாக எழுந்தன. எனது முக்கிய கண்டு பிடிப்புகளில் ஓன்று கஜகஸ்தானில் கண்டறியப்பட்டது .இங்கே வாழும் நியாசோவ்  என்பவர். மய்ய ஆசியா மனிதரின் வழித்தோன்றல் ஆவார். இந்த மய்ய ஆசியா மனிதர்தாம் அய்ரோப்பாவுக்கும், இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் சென்று பரவி யிருக்கின்றார்கள்.
இவர்களின் வழி தோன்றல்கள் இந்தோ  யூரோப்பிய மொழிகளைப் பேசினார்கள் .
கேள்வி : மனிதப் பயணம் என்ற கண்டுபிடிப்பினால் பழைய பரிணாம கொள்கையில் ஏதேனும் தவறு காணப்பட்டதா ?
பதில் : ஆம். பல இட மனிதத் தோற்றம் என்ற கொள்கை (multi region origin theory) உலகின் பல இடங்களிலும் மனிதன் தோன்றியிருக்க கூடும் என்ற கொள்கை தவறு என உறுதியாகிவிட்டது. மனித இனம் ஒரே பகுதியில்தான் தோன்றியது (single origin theory)
என்ற கொள்கை உண்மை என நிறுவப்பட்டுள்ளது .
கேள்வி : உங்களது ஆய்வில் 60,000 ஆண்டுகளில் மனிதனின் அறிவார்ந்த கூறுகளிலும், உடற்கூறுகளிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என தெரிகிறது?
பதில் : மிகவும் வேகமான மாற்றம் நடந்துள்ளது. விலங்காண்டிகளாக வேட்டையாடி உணவு சேகரித்த, வேட்டைச் சமுதாயம் ஓவியம் வரையும் திறனையும், இசையில் திறனையும் பெற் றது. பின்னர் மொழிகள் தோன்றின.
கேள்வி : சிலர் ஆரியர்கள்தாம் இந்தியாவின் முதல் முதலானவர்கள் என்று சொல்கிறார்களே ,இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்தியாவிற்கு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு மரபியல் சான்றுகள் உள்ளன கேள்வி: ஆனால் சிலர் ஆரியர்கள் தான் இந்தியாவின் முதல் குடிகள் என்று கோருகிறார்களே ? நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரியர்கள் பிறகுதான் வந்தார்கள் .
கேள்வி: எத்தனை பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது?
பதில்: உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங் களில் different populations  ஏறத்தாழ 20,000மக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.
கேள்வி: மக்களில் பல இனங்கள் (races) உள்ளனவா? அதுபற்றி?
பதில் : இல்லை நாம் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள்.இனப் பாகுபாடு (Racism) என்பது சமுதா யத்தை பிளவுபடுத்துவது. அறிவியல் படி தவறானது. நாம் அனைவரும் ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முன்னோர்களின் வழித்தோன்றல்கள்தான்.
இவ்வாறு தனது நூலில் ஆதாரத் துடன் விவரமாக எழுதி உள்ளார் .
நமது மூதாதையர் ஆப்பிரிக்காவி லிருந்து தான் வந்தார்கள்.இவ்வுண்மை மனிதனிடம் காணப்படும் Y குரோமோ சோம் மரபணுக்கள் மூலம் ஸ்பென்சர் வெல்ஸ் அவர்களின் ஆய்வினால் கண் டறியப் பட்டுள்ளது. ஆண்களிடம் மட் டுமே Y குரோமோசோம் காணப்படும். தந்தையின்  Y குரோமோசோம் மகனுக்கு மட்டும் செல்லும். இதே போல் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் மாற்றமின்றியே செல்லும். மிகவும் அரிதாக இந்த மரபணுவில் மாற்றங்கள் நடக்கும். இந்த Y குரோ மோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தை மரபு காட்டி (genetic marker)  என்கிறார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இந்த மரபு காட்டிகளை  (genetic markers) ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் இம்மனிதர் கடந்து வந்த பாதையினை நாம்  அடையாளம் காணலாம்.
ஆரியர்களின் தோற்றம்:
5000 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் தோன்றிய மரபு காட்டி  எம்_17  (genetic marker M 17) கூர்கன் மக்கள்  (Kurgan people) மூலம் யுரேசியா, ஸ்டெப்பி பகுதியில் முழுதும் பரவியது .தற்போது மிக அதிக அளவில் 40 விழுக்காட்டுக்கு மேலும் செக் குடியரசு முதல் சைபீரியாவில் உள்ள அட்லாய் மலைப்பகுதி வரை மற்றும் தெற்கு மய்ய ஆசியா முழுவதும் காணப் படுகிறது. இந்த  மூதாதையர் வழிR1A1  (HAP LOGROUP  R1A1)  வழித் தோன் றல்கள் இந்தோ - யூரோப்பிய மொழி களைப் பேசியவர்கள். இந்த ஸ்டெப்பி பகுதியில் தான் குதிரைகள் பழக்கப்படுத் தப்பட்டன (domesticated).
ரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போருக்குக் குதிரைப்படைகளும் ரதங் களில் போர் புரியும் ஆற்றலும் தோன் றின. இம்மக்கள் இந்தோ-யூரோப்பிய மொழிகளுக்கு (Indo europian) உரியவர்கள். (The Journey of Man : A Genetic  Odessey - - நூல். பக்கம் 167).
ஆரிய பார்ப்பனர்களிடம் காணப் படும் மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1
மரபுகாட்டி M17  (GENETIC MARKER M 17) ஆகும். இந்த ஸ்டெப்பி பகுதியில் இருந்து இப்பிரிவினர் மய்ய ஆசியாவை அடைந்தார்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் அய்ரோப்பாவை அடைந்தார்கள். இன்னொரு பிரிவினர் இந்தோ ஈரானிய கிளையாகி, கி.மு. 1800 ஆண்டுகளில் ஈரானுக்குள் சென்றனர். ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் இந்தியாவிற்குள் வந்தனர்.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வுடன் அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?
இந்தியாவில் நுழைந்தவுடன் ஆரி யர்கள் சிந்துவெளிப் பகுதியில் திராவி டர்கள் தங்களைவிட நாகரிகத்திலும், அறிவிலும், சிறப்புற்று விளங்கி அமைதியுடன் வாழ்வதைக் கண்டனர். உள்நாட்டு வாணிபத்திலும், கடல் வாணிபத்திலும், வானவியல், கணிதவியல் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பதை அறிந்தனர். ஆயுர்வேத மருத்துவம், யோகா அறிந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்தான். வேளாண்மை யில் விற்பன்னர்களாக தமிழர்கள் இருப்பதை கண்டனர். மொகஞ்ச தாரோவில் இரண்டு, மூன்று அடுக்கு மாடி வீடுகளுடன், கோட் டைகளுடன் காணப் பட்ட நாகரிகம் இது ஒன்று தான். நீண்ட தெருக்கள், வரிசை யில் அமைந்த வீடுகள். வீடுகளில் நான்கு அல்லது அய்ந்து அறைகள். அங்கு காணப்பட்ட மாட்டு வண்டி களிமண் பொம்மைகள் அதே வடி வில் இன்றும் மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மக் களிடம் புழக்கத்தில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. இம்மக்கள் குஜராத் லோதல் துறைமுகம் முதல் தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரகூய் என்ற திராவிட மொழி பேசும் பகுதி வரையிலும் மற்றும் மேகர்கார் பகுதி வரை காணப்பட்டனர். பாகிஸ் தானிலும் பிரகூய் என்ற திராவிட மொழி தற்போதும் பேசப்படுகிறது. சிந்துவெளி தமிழர் நாகரிகம் கி மு 3300 என இதுவரை கருதப்பட்டு வந்தது. மெகர்கார் பகுதியில் அண்மையில் நடந்த அகழாய்வு மூலம் தற்போது சிந்துவெளி நாகரிகம் 7000 ஆண்டு களுக்கு முற்பட்டது எனத் தெரியவந் துள்ளது. இதனை இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை அறிஞரு மான அகமது அசன் தனி  என்பார் தெரிவித்துள்ளார். சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் இருந்த அதே காலத் தில் தமிழகத்திலும் அந்த நாகரிகம் சிறப்பாகவே இருந்தது.
சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத் தின் பல இடங்களிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளது .
சிந்துவெளி மக்கள் தமிழ் எழுத்துக் களையும், முத்திரைகளையும் கையாண் டனர். இக்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டது. றி.ஸி. சர்க்கார் என்ற ஆய்வாளரும், ஆரியர்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார் .
ஆரியர்கள் செய்தது என்ன?
திராவிடர்கள், ஆரியர்களாகிய தங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; யாகங்களை ஏற்க வில்லை; மொழியினை ஏற்கவில்லை; கடவுள்களை ஏற்கவில்லை; தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்றவுடன் தமிழர்கள் மேல் வெறுப்புற்று அவர் களை தாசர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், கருப்பு நிறத்தை உடையவர்கள் என்றும் இழிவாக உரைத்தார்கள். திராவிடர்கள் தந்திரங்கள் தெரிந்த வர்கள் என்றார்கள். திராவிடர்களின் அறிவாற்றலை தந்திரங்கள் என்று உரைத்தார்கள்.
உட்டோ பல்கலை கழக ஆய்வு
உட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மைக்கேல் பாம்செட்  என்ற அறிஞர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை நிறுவு கின்றன .
அனலாபா பாசு  மற்றும் 11 அறி ஞர்கள் கொண்ட குழு (Ethnic India : A Genomic View ,with special reference to peopling  and structure  - research report)  ஆய்வு அறிக்கையின்படி ஆரியர் கள் இந்தியாவிற்கு வருமுன் திராவிட பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த கருத்தைத்தான் இந்திய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பாரும் தெரிவிக்கின்றார். இந்தியா வின் சிந்துவெளிப் பகுதிக்கு வந்த ஆரி யர்கள் கங்கைவெளி பகுதியில் பரவ ஆரம்பித்தனர். அவர்களின் ஆதிக் கத்தை தவிர்க்க திராவிடர்கள் தென் இந்தியா நோக்கி நகர்ந்தனர்.
திராவிடர்களின் தொன்மை, தமிழின் தொன்மை
திராவிடர்களின் மூதாதையர் வழி L  (HAPLOGROUP –L)  மரபுக் காட்டி  M 20 (Genetic Marker  M20) ஆகும். திராவிடர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள் ளார்கள். மூதாதையர் வழி L  (HAPLOGROUP- L)   என்பது  இந்திய வழி (INDIAN CLAN) என்று அழைக் கப்படுகிறது. திராவிடர்களின் மரபு காட்டி M 20  இன்றைய தென்னிந்தி யாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிக மாகவே காணப்படுவதாக டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் குறிப்பிடுகிறார்.
(ஸ்பென்சர் வெல்சின் புத்தகம் “Deep Ancestry Inside The Genographic Project”பக்கம் 217)
தமிழ் சமஸ்கிருதத்தைவிட தொன் மையானது. தென் இந்திய மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் 6000 ஆண்டுகள் தொன்மையானது. இதனை அமெரிக்க அறிஞர் ரோர் ஜோன்ஸ்  என்பார் தெரிவித்துள்ளார். தொன் மையான தமிழின் வடிவமாக தற்போது பிரகூய் மொழி பாகிஸ்தானின் பலு சிஸ்தான் பகுதியிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஈரான், ஈராக், கத்தார் பகுதியில் 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முடிவுக்குவந்த பின்னரும், ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த பின்னரும், சிந்துவெளியில் இருந்த திராவிட மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பலுசிஸ்தான் நோக்கிச் சென்றனர். இந்த வட திராவிட மொழி யாகிய பிரகூய் மொழி, சிந்து வெளியில் திராவிட மொழிகள் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.
-விடுதலை ஞாயிறு மலர்,6.12.14

ஞாயிறு, 23 நவம்பர், 2014

சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே

சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன்

 

உறுதி

சென்னை, நவ.16-_ சிந்துச்சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கினார். சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மய்யத்தில், சிந்துச்சமவெளி குறியீடுகளை விளக்கும், 'டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா' என்ற புத்தகத்தின் வழியாக, அய்ராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரை களை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.
அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்துச் சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துச்சமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துச் சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத் திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துசமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப் பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், 'பூசன்' என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத் தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங் குகிறது. சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்
விடுதலை,ஞாயிறு, 16 நவம்பர் 2014 

ஞாயிறு, 2 நவம்பர், 2014

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா? பெரியார்


திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும்.

இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமையாததாக இருக்கின்றது.

--------------------

01.05.1947
அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசாரக் குழு பயிற்சிப் பாசறையில் நடத்திய வகுப்பின் உரைத் தொகுப்பு. - குடிஅரசு” - சொற்பொழிவு - 03.05.1947

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா