வெள்ளி, 23 டிசம்பர், 2016

தமிழ்நாடு - கேரளா, திராவிடப் பண்பாட்டு உறவுகள்


இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் உள்ள இரு இணை மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா, அரசியல் ரீதி யாக இவை மொழிவாரியாக தனித்தனி மாநிலங்களானது இந்திய விடுதலைக் குப்பின் 1956இல் நிகழ்ந்தது. ஆங்கிலக் காலனி ஆதிக்கம் இங்கே வேர்விட்ட போது,ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களால் 1801இல் சென்னை ராஜதானி புனித ஜார்ஜ் கோட்டையைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப் பட்டது.
1799 இல் நான்காவது மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆட்சிப்பகுதிகளாக இருந்த தென்கர்நாடகமும், மலபாரும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் நேரடி ஆதிக்கத்தில் வந்தன. பாளையக்காரர் கிளர்ச்சி 1801இல் ஒடுக்கப்பட்ட சூழலில் சென்னை ராஜதானி என்னும் ஓர் ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. ஏற் கெனவே தஞ்சையின் மராத்திய சரபோஜி யும், ஆற்காடு நவாபும், ஆங்கிலேயரி டமிருந்து பெரும் கடனையும் பென்ஷ னையும் பெற்றுக்கொண்டு, தங்களது நிலப்பகுதிகளுக்கு கிழக்கிந்தியக் கம் பனியாரை ஆட்சியாளராக்கி இருந்தனர்.
இந்த ஆடம்பரப் பென்ஷனில்தான் பல மனைவியரைக் கொண்ட இரண்டாம் சரபோஜி, வெட்கமின்றி ‘ராஜா’ என்ற பட்டத்துடன் தன் நேரத்தைப் பொறுப் பின்றி இசை. ஆடல், பாடல் போன்ற கேளிக்கைகளில் செலவிட்டு வந்தான், தியாகய்யர் போன்ற கருநாடக இசை மேதைகள் அவனது தாராளமான கொடை களில்தான் வளர்ந்தனர் என்றாலும் இம்மண்ணை அன்னியருக்கு இவர்கள் தான் தங்களது சுகபோகங்களுக்காக அடகு வைத்தவர்கள் என்பதையும் நாம் நினை விற்கொள்ள வேண்டும்.
“கேரளோற்பத்தி”
ஆங்கிலேயர் வடிவமைத்த சென்னை ராஜாதானியில் நான்கு பெரும் மொழிப்  பிரிவினர் இருந்தனர். மலையாள மொழி பேசும் மலபார் பகுதி, கன்னட மொழி பேசும் தென் கர்நாடகப் பகுதி, தெலுங்கு மொழி பேசும் ஆந்திரப் பகுதி ஆகியவை அவை. துளு, ஒரியா, பேசும் சிறுபகுதிகளும் சென்னை ராஜதானியில் இருந்தன.
தமிழ் பேசும் அனைத்துப் பகுதிகளும் (புதுக் கோட்டை மன்னர் பகுதி தவிர) சென்னை ராஜதானியிலேயே இருந்தன. ஆனால் பிற தென்னிந்திய மொழிகளுக்கு அவ்வாறு ஒரே ஆட்சிப்பகுதியில் இருக்கும்
வாய்ப்பு அமையவில்லை. திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் மலையாள மொழி பேசும் பகுதிகள். அவை சென்னை ராஜதானிக்கு வெளியே இருந்தன. அது போன்று கன்னட மொழியைக் கொண்ட மைசூர் தனி சமஸ்தானமாக இருந்தது.
பெருமளவு தெலுங்கு பேசும் அய்தராபாத் பகுதி நிஜாமின் ஆட்சியில் இருந்தது. இவ்வாறு தமிழ் மொழி பேசும் பகுதிகள் மட்டுமே ஒரே ஆட்சியில் இருந்தன.
1858 வரை இந்தியாவின் பலவேறு பகுதிகளில் நடந்த ஆங்கிலேய எதிர்ப்புக் கிளர்ச்சிகள், கலகங்கள் மன்னர்களால் நிலமானியப் படைத்தலைவர்களால், அவர்களை மய்யப்படுத்தியே நடந்தன. 1858க்குப் பிறகு உருவான தேசிய இயக்கம் மக்களை மய்யப்படுத்தி நடந்தது. இந்திய தேசிய இயக்க வரலாறு என்பது உண்மை யில் ஒரு பன்முக இயக்கமாகக் காணப்பட வேண்டும்.
1929 வரையில் இந்திய ஆட்சி யில் இந்தியர்களுக்கு உரிய பங்கு என்பது தான் கோரிக்கையாக இருந்ததே தவிர, ஆங்கில ஆட்சியை அகற்றுவது என்பது அதன் முதன்மை நோக்கமாக அமைய வில்லை. ஆனால் இந்திய தேசிய இயக்க வளர்ச்சி என்பது, ஒன்றுபட்ட இந்திய தேசத்தை உருவாக்குதல் பிரதிநிதித்துவ மக்களாட்சி நிறுவனங்களை வளர்த்தெடுத் தல்,  பழைமையிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகங்களை மேம் படுத்துதல் என்ற தாக்கங்களுக்காகவும் விளைவுகளுக்காகவும் ----- பயன்பட்டது இந்திய விடுதலையுடன் இந்தியாவில் மன்னராட்சி யுகம் மறைந்து மக்களாட்சி யுகம் மலர்ந்தது.
மக்களாட்சி, மக்களுக்குப் பொறுப்பான மக்களால் அமைந்த ஆட்சியில், ஆட்சி யாளருக்கும் மக்களுக்குமிடையே உள்ள இடைவெளிகள் அகற்றப்பட வேண்டும். மக்கள் மொழியில் ஆட்சி நடைபெற வேண்டும். இதற்காகத்தான் 1920 க்குப்பின் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் மொழிவாரி மாநிலங்கள் பரிந்துரைக்கப் பட்டன.
ராஜாக்களின், நிஜாம்களின் நவாபுகளின் சமஸ்தானங்கள் இருக்கும் வரையிலும் அவைகளுக்கு அரவணைப் பாக இருந்த ஆங்கில ஆட்சி அகலும் வரையிலும் மொழிவாரி மாநிலங்களும் அமையவில்லை. அவை அகன்று 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது வரலாறிலேயே முதன்முறையாக தமிழ்த்தேசமும் கேரள தேசமும் நடை முறை உண்மைகளாயின.
மலபாரும் திருவிதாங்கூர் கொச்சியும் இணைந்து கேரள தேசம் உருவானது. மைசூர் ராஜதானியும் ஏனைய கன்னடப் பகுதி களும் இணைந்து கருநாடகதேசம் உரு வானது. இவ்வாறு தான் அய்தராபாத் பகுதியும் பிற தெலுங்கு பகுதிகளும் இணைந்து ஒரு தெலுங்கு தேசம் உரு வானது. இன்று அது தெலங்கானா, ஆந்திரா என ஒரு மொழி பேசும் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
"கேரளோற்பத்தி" என்னும் புராணம் கடந்த  மூன்று நான்கு நூற்றாண்டுகாலமாக மலையாளப் பகுதியில் பரப்புரை செய்யப் பட்டு வருகின்றது.
அதன்படி கேரள மாநிலத்தை படைத்த வன் பரசுராமன் என்ற பிராமண அவதாரம் - சத்திரியர்களைப் பூண்டோடு அழிப்பதாக சபதம் மேற்கொண்டு ஆரியவர்த்தத்தின் அனைத்து சத்திரியர் (மன்னர்)களையும் அழித்து விந்தியம் கடந்து தென்னகம் வந்தானாம், அவன் வந்தபோது மேற்கு மலைத் தொடர்ச்சியே கடல் எல்லையாக இருந்ததாம். மழுவை மேற்கு நோக்கி எறிந்து அது கடலில் விழும் வரையிலுள்ள பகுதியில் கடல் பின்னடைந்து நிலம் மேலே வந்ததாம்.
அதுதான் கேரளமாம்; தான் படைத்த நிலத்தில் குடியேற ஆரிய வர்த்ததிலிருந்து பிராமணர்களை அழைத் தானாம்; ஆனால் வடக்கேயிருந்து பிரா மணர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தினால் எரிச்சலடைந்த பரசுராமன் இங்கேயிருந்த மீனவர்களில் ஒரு பிரிவினரை பிராமண (நம்பூதிரிகளாக)ராக வர்ணமாற்றம் செய்து அவர்களுக்கு,அந்த நம்பூதிரி பிராமண ருக்கு இந்த புதிய பூமியின் மீது முதன்மை அதிகாரத்தையும் முழுமையான  அதி காரத்தையும் கொடுத்தானாம்;
இப்பகுதியின் மண், பொன், பெண் என அனைத்தையும் அனுபவிக்கும் முதலுரிமை முழுஉரிமை நம்பூதிரிக்குதான்; அவன் விட்டுக்கொடுப் பவற்றை மட்டுமே மற்றவர்கள் அனுபவிக்க முடியும் என்பதான வர்ண தர்மம் பரசு ராமன் மூலமாக கேரளோற்பத்தியில் வலி யுறுத்தப்படுகிறது.
அந்தக் கேரளோற்பத்தி மலையாள மொழியின் தோற்றத்தை ஒரு மொழிவாரி மாநில உற்பத்தியைக் குறிக்கவில்லை. இந்தப்புராணம் அறிமுகப் படுவதற்கு முன்னரும் கேரளம் இருந்தது. மிகத்தொன் மையான சங்க இலக்கியங்களின் காலத்தில் கேரளம் தமிழ் கூறு நல்லுலகமாக இருந்தது. “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று அறியப்பட்ட
தமிழ்ப்பகுதிகள் பின் வருமாறு:
கிழக்குப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காக,
தென்பாண்டி நாடு
பன்றி நாடு
புனல் நாடு
அருவா நாடு
அருவா வடதலை நாடு
இடைப்பகுதியில்
மலாடு (மலைநாடு)
சீதநாடு
கற்கா நாடு
மேற்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக:
பூழி நாடு
குட நாடு
குட்ட நாடு
வேணாடு
நாஞ்சில் நாடு
இறுதியாகக் கூறப்பட்டுள்ள பூழி (வட மலபார்) குடநாடு குட்ட நாடு வேணாடு பகுதிகள் இணைந்ததுதான் இன்றைய மலையாள நாடாம் கேரளம்.
சங்க இலக்கியங்களில் பரசுராமனும் இல்லை, நம்பூதிரியும் இல்லை, ஆனால் பூழி நாட்டு நன்னன் உண்டு. தொண்டி முதிறி போன்ற அரபிக்கடல் பகுதி துறை முகங்கள் உண்டு. சேரமன்னர்களான ஆதன்களும் பொறையர்களும் இருந்த னர். குறுநில மன்னர்களான பூழிநாட்டு நன்னன், கொல்லம் பகுதி ஆய்வேள் ஆகியவர்களும் இருந்தனர் கடற்கொள் ளையரான கடம்பர்களும், யவனர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
ஆனால் கேரள தேசம் இருந்ததில்லை (அசோகன் கல் வெட்டுகளில்- கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கேரள புத்திரர்கள் உண்டு) இங்கே நாம் குறிப்பிடுகின்ற மலையாள மொழி பேசும் மக்கள் தேசத்தை, முதல் உரிமை முழு உரிமை பிறமொழி பேசும் பிற சிறு ஆதிக்கப்பிரிவுக்குத் தராமல் அனைத்து மலையாள மக்களுக்கும் உரிமையைப் பொதுமை ஆக்குகின்ற மொழிவாரி கேரள தேசத்தை உருவாக்கியது புராணத்து பர சுராமனல்ல; மாறாக தேசிய இயக்கங்களும் மக்களாட்சி இயக்கங்களும்தான். கேரளத் தைப் படைத்தவர்கள் என்பதை உணர்ந் திட வேண்டும்.
திராவிட வேர்கள்
கேரளத்தின் தோற்றம் என்பதை வைதீ கத்துடன் சமஸ்கிருதத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும், சமஸ்கிருதம் இங்கே காலூன்றுவதற்கு முன்னரே கேரளம் தமிழகத்துடன் பொது மைப்பட்டிருந்தது, இதனைத்தான் இங்கே நாம் திராவிட வேர்கள், திராவிடப் பண்பாட்டு உறவுகள் என்று விளக்க விழைகிறோம்.
திராவிடம் என்றால் என்ன?
இந்தியா என்பது ஒற்றைப் பண்பாட்டு நாடல்ல என்பதை அனைத்து அறிஞர் களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சில பாரம்பரிய ஆதிக்கவாதிகள் இந்தியா என்பது ஒற்றைப் பண்பாட்டைக் கொண்ட தேசம் என்றும் வேதமே அதன் மூல மென்றும் சமஸ்கிருதமே முதன்மையான அடிப்படை என்றும் பிற இந்திய மொழி களின் தாய் என்றும் வேதமொழியே தேவ மொழியென்றும் கூறுவதுண்டு. ஆனால் அறிவு பூர்வமான வரலாற்றுக் கண்ணோட் டத்தில், வேத அல்லது வைதீகப் பண்பாடு இந்திய நாகரிகங்களில் முதன்மையானது அல்ல என்பதை அறிய முடியும்.
வேதங்களில் மிகப் பழைமையான ரிக்வேதத்தை ஊடுருவி ஆராய்ந்தால் ஒன்று தெளிவாகிறது. ரிக் வேத ஆரியர்கள் தங்களது எதிரிகளான, அவர்கள் அழிக்கத் துடிக்கின்ற ஆரியர்களல்லாத இனப் பிரிவு களை வன்மத்துடன் குறிப்பிட்டுள்ளனர். தஸ்யூ, தாச, அசுர, பாணி நிஷாத, ராட்சச யட்ச, கின்னர என்பதுடன், அவர்களின் உருவத் தோற்றங்களையும், வழிபாட்டு முறைகளையும் நிந்தித்துள்ளனர். உதார ணமாக தங்களது எதிரிகளை 'கருமை நிறத்தவர் (கிருஷ்ணவர்ண) என்றும் மூக் கில்லாதவர் அல்லது சப்பையான மூக் கினை உடையவர் (அனஸ்ய) என்றும் இழிவாகக் குறிப்பிடுகின்றனர்.
அதுமட்டு மல்ல அவர்கள் ஆண் குறிகளை, பெண் குறிகளை வழிபடுபவர் (சீஷ்ணதேவா) என்றும் பெண் தெய்வங்களை (உருவங் களை) வழிபடுபவர் என்றும் குறிப்பிட்டுள் ளனர். ரிக்வேத கால ஆரியர்கள் நிறப் பெருமிதம் உடையவர்கள், உருவ வழி பாட்டைக் கைக்கொள்ளாமல், இயற்கை சக்திகளை (இந்திர, வாயு, வருண, அக்னி, பர்ஜன்ய, ஆதித்ய) பாடல்களில் உரு வகப்படுத்தி, யக்ஞங்களில் பலியிட்டு, அவற்றின் ஆசிகளை நாடுகின்ற வழி பாட்டு முறை ஆரியர்களுடையது.
அன்று ஆரியர்கள், தங்களது எதிரிகளான ஆரியரல்லாதவர்களின் உருவத் தோற் றத்தையும், வழிபாட்டு முறைகளையும் இழித்துக் கூறிய அதே வேளையில் அந்த எதிரிகள் கட்டிய கற்கோட்டைகளையும், அணைகளையும் கண்டு மலைத்துப் போய், போர்க்கடவுளான இந்திரனிடம் உனது இடியாயுதத்தால் (வஜ்ராயுதத்தல்) இக் கோட்டைகளை அழிப்பாயாக" என்றும் வேண்டுகின்றனர். இந்த எதிரிகள் யக்ஞ-மந்திரங்களை ஏற்காதவர்கள், பிராமணப் புரோகிதர்களுக்கு கொடை வழங்கத் தயங்கும் பாணிகள், நிறைய சொத்துக் களை உடைய வணிகர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்.
ரிக் வேத ஆரியர்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார் கள். பர்ணசாலை போன்ற மூங்கிற் கூடாரங்களிலேயே வாழ்ந்தவர்கள் என்ற செய்திகளையெல்லாம் டி.டி.கோசாம்பி போன்ற புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆரியர் வரு கைக்கு முன்னரே இங்கே நிலைத்து தழைத்திருந்த, நிலையான கோட்டை கொத்தளங்களில் வாழ்ந்து, பாசன நீர்த் தடுப்புகளை உருவாக்கியிருந்த, வணிகத் தில் செழித்திருந்த, சமஸ்கிருத ஆரியருக்குப் புரியாத மொழி பேசிய, நிறம் குறைந்த இன மக்களை ரிக் வேதமே சுட்டிக் காட்டுகிறது.
உருவத்திலும், பண் பாட்டிலும் வழிபாட்டு முறைகளிலும், நகர வாழ்விற்கான வசதிகளை உருவாக்கு வதிலும் வேதத்திலும் மேம்பட்ட ஆரியரல் லாத, ஆரியருக்கும் முந்தைய அந்த நாகரிகம் யாருடையது? அந்த நாகரீகம் சரஸ்வதி நதி ஆரியர்களிடமிருந்து தோன்றவில்லை, மாறாகஆப்கானிஸ்தானி லிருந்து உத்திரப்பிரதேசம் வரை, காஷ்மீரத்திலிருந்து மகாராஷ்டிரம் வரை பரந்து விரிந்து சிறந்திருந்த சிந்து வெளி நாகரீகத்திலிருந்து தொடர்ந்தது என்பதை 1920 களிலிருந்து நடத்தப்பட்டு வரும் அகழ்வராய்ச்சிகளால் அறிய முடிகிறது. அதனை திராவிட நாகரீகம் என்று ஆய் வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
திராவிட அல்லது திரமள என்ற சொற்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டி லிருந்து தமிழ் சார்ந்த நிலங்களையும் மக்களையும் குறிப்பிடுவதற்கும் பாலி மொழியிலும் சமஸ்கிருதத்திலும் கையா ளப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண் டில் கலிங்கத்தை (இன்றைய ஒடிசா)  ஆண்ட சேதி வம்சத்து மன்னன் கார வேலன் வெளியிட்ட ஹதிகும்பா குகைக் கல்வெட்டில் திராமிள மன்னர்களின் கூட்டணியை அவன் முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது இந்தக் கூட்டணி 113 ஆண்டுகளாக இருந்துவந்ததாம்,  அதாவது மௌரியர்கள் காலம் தொடங்கி வட பகுதியிலிருந்து படையெடுத்து வரும் (ஆரிய) மன்னர்களை எதிர்ப்பதற்காக திராவிட மன்னர்களின் கூட்டணி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அசோகச் சக்ரவர்த்தியின் கல்வெட்டுகளிலும் சோழ புத்திரர், பாண்டிய புத்திரர் சேர (கேரள) புத்திரர், சத்திய புத்திரர் பூழி அல்லது துளு நாட்டுத் தலைவர்கள்) அவரது ஆட்சிக்கு வெளியே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சேரர் -சோழர் - பாண்டியர் கொண்ட, ஒன்றோடென்று நெருக்கமாக இருந்த ஆரியரல்லாத, வேறு பண்பாட்டு அடையாளம் கொண்டவர்கள் என்ற முறையில் ஒரு பொதுவான பண்பாட்டு குறியீடாக திரமிளம் அல்லது திராவிடம் என்ற பொதுப் பெயரை ஆரிய மன்னர் களும், இலக்கியவாதிகளும் பயன்படுத் தினர். ‘தட்சிண’ என்பது விந்தியத்திற்குத் தெற்கே இருந்த நிலப்பகுதியைக் குறித்தது, ஆனால், திராவிட என்பது அங்கே இருந்த பண்பாட்டுத் தனித்துவத்தைக் குறிப்பதாக இருந்தது.
வைதீக மரபிற்கும், பிராமணர் புலம் பெயர்விற்கும் முட்டுக்கட்டையாக இருந்த தென் திசையை பின் வேதகால இலக்கியங்கள் ‘யமதிக்கு’ என்று அச்சத் துடன் குறிப்பிட்டன. கிறிஸ்துவ சகாப்தத் திற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கிரேக்க, ரோமானிய, யாத்திரைக் குறிப்பு களில் இண்டிகே, இண்டிகா, இண்டி, இந்து என்பதாக இடப்பெயர்கள் இந்தியத் துணைக் கண்டம் அனைத்தையும் சுட்டு பவையாக இருக்கவில்லை. அதே அய் ரோப்பியப் பயணக்குறிப்புகள் தென்னிந் தியப் பகுதியை அதாவது திராவிடப் பகுதியை தாமரிகே என்றே குறிப்பிட்டன. இத்தகைய வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் இந்தியாவின் தென் கோடி முனை வைதீகத்திற்கு உட்படாத தனியான திராவிடப் பண்பாட்டு பகுதியாகவே இருந்து வந்துள்ளதை அறிய முடியும்.
யக்ஞ மதமும் ஷண்மதமும்
சிந்து வெளி அகழ்வாய்வில் காணப் படும் உருவ வழிபாட்டு முறையை, தாய்த் தெய்வ வழிபாட்டு முறையை, யோகீசுவர சிவ வழிபாட்டு முறையை, லிங்க வழி பாட்டு முறையை ரிக் வேத ஆரியர்கள் காழ்ப்புடன் நிந்தனை செய்தனர். ஆனால் அதே வைதீகம் கி.பி. இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு சிந்து வெளித் திராவிடத் தெய்வங்களைக் சுவிகரித்துக் கொண்டது. யக்ஞம், ஹோமம், மந்திரம் இவற்றை தமது தனி உடைமை, தனி உரிமைகளாகவே தக்க வைத்துக் கொண்ட பிராமணியம், ஆகமங்களையும், புராணங் களையும் உருவாக்கி திராவிடத் தெய்வங் களுக்கு பூசகர்களாகவும் மாறினர்.
"ஷண்மதம் எனும் ஆறுவகை வழி பாட்டு முறைகளை  ஆதிசங்கரரும் ஏற்பு செய்தார். அவை பின் வருமாறு
சிவனை மய்யமாகக் கொண்ட சைவம்
விஷ்ணுவை மய்யமாகக் கொண்ட வைஷ்ணவம்
சக்தியை மய்யமாகக் கொண்ட சாக்தம்
சூரியனை மய்யமாகக் கொண்ட சௌரபம்
கணபதியை மய்யமாகக் கொண்ட கணாபத்யம்
குமரனை மய்யமாகக் கொண்ட கௌமாரம்
வைதீகம், திராவிட வழிபாட்டு முறையை அங்கீகரித்ததின் எடுத்துக்காட்டு இவை விக்ரகமும், கோயிலும் அறியாத வைதீகம் திராவிடரிடமிருந்து அவற்றை ஏற்றுக் கொண்டன. புராணங்கள் மூலமும், ஆகம தந்திரங்கள் மூலமும் திராவிடக் கடவுளரையும், திராவிட வழிபாட்டு முறைகளையும் பிராமணியப்படுத்தின. திராவிட மன்னர்கள் பேரரசுகளைப் படைத்தபோது, பெருங்கோவில்களைக் கட்டமைத்தபோது ஆகம - புராணங்கள். பிராமணிய ஆதிக்கத்திற்கு வழி வகுத்தன. (பிரம்மாவிற்கு கோயிலும், ஆகமங்களும் இல்லாமற் போனது ஆய்விற்குரியது.) சிவ ஸ்தலங்களில் 90 விழுக்காடும் வைஷ்ண வரின் 108 திவ்ய ஸ்தலங்களில் மிகப் பெரும்பான்மையும், திராவிடப் பகுதியில் தான் உள்ளன. இது திராவிட மரபின் ஆணிவேர் இனியும் இங்கே தான் வலு வாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
திராவிடம் என்னும் 
பண்பாட்டு மரபு
உடற்கூறுகளை வைத்துக் கொண்டு இன்றைய இந்தியர்களை இனம் பிரிப்பது பயனற்றது. நிறம் வெண்மையா? கரு மையா? மண்டையோடு உருண்டையா னதா? நீளமானதா? நீண்ட மூக்கா/ தட்டையான நாசியா? தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கின்றனவா? உதடுகள் தடிமனாக உள்ளனவா? தலை முடி கருப்பா? பொன் நிறமா? நீண்ட முடியா? சுருள் முடியா? என்றெல்லாம் இன்றைய மனிதர்களை இனம்  பார்க்க முற்படுவது முட்டாள்தனம்.
ஏனென்றால் மனித குலம் வளர்ச்சியடையும்போது ஒவ்வொரு பிரிவும், பிற பிரிவுகளுடன் கலப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத் தகைய கலப்பில், இணைவில்தான் மாற் றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படு கின்றன. கலப்பைத் தவிர்த்தே வந்தி ருந்தால் நாம், அந்தமான் நிக்கோபார் பழங்குடியினரைப் போன்று இனியும் நாகரிகமடையாத காட்டு மிராண்டிக் காலத்திலேயே தொடர்ந்திருப்போம்.
ஆனால் நாம் இங்கே குறிப்பிடும் வைதீகம் (ஆரியம்), திராவிடம் என்பவை இன்றைய இந்திய தேசத்திற்கு வகை செய்துள்ள பண்பாட்டுக் கூறுகளை, பண்பாட்டு மரபுகளையே என்பதை வலி யுறுத்த விரும்புகிறோம், இந்த தொடர்புகள் பூகோளத்தாலும், வரலாறாலும், மொழி மரபு களாலும் இன்றும் தொடரும் நிதர் சனமான உண்மைகளே ஆகும். அத்த கைய வர லாறு பூர்வமான திராவிடப் பண்பாட்டு மர பில் வந்தவற்றில் மூத்தவள் தமிழ், இளை யவள் மலையாளம்; இடைப்பட்ட நிலை யில் தெலுங்கும் கன்னடமும் உள்ளன.
திராவிட மொழிக் குடும்பம்
மலையாள இலக்கிய வரலாறை எழு திய பி.கே.பரமேஸ்வரன் நாயர் மலை யாளம் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்கிறார். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தி லிருந்தே தோன்றின என்ற வாதம் சூழ்ச் சியான நோக்கமுடையது, முன்னேற்ற மடைந்த இந்திய மொழிகளில் பெரும் பாலானவை இரண்டு வேறுபட்ட மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. என்பது மொழியியல் வல்லுநர்களின் முடிவு. ஒன்று சமஸ்கிருத மொழிக் குடும்பம், மற்றொன்று திராவிட மொழிக்குடும்பம்.
-விடுதலை ஞா.ம,12.11.16

தமிழ்நாடு - கேரளா,
திராவிடப் பண்பாட்டு உறவுகள் (2)

கடந்த வாரத் தொடர்ச்சி....
பதினெட்டு பத்தொன்பதாம் நூற் றாண்டுகளில் இந்தியப் பகுதிகளுக்கு குறிப்பாக வங்காளப் பகுதிக்கு ஆட்சியா ளராக மாறிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள, சமூகத்தின் மேல் தட்டிலிருந்த பிராமணகாயஸ்தர்களை நாடினர். அவர்களது செல்வாக்கினால் மக்கள் மொழிகளை விட, சமஸ்கிருதத் திற்கே முக்கியத்துவம் அளிக்கலாயினர். மனுஸ்மிருதியை, ஹிந்து சிவில் சட்டம் என்று ஏற்பு செய்தனர்.
இந்திய ஆதிக்க வர்க்கத்திடம் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும். அவர்களைத் திருப்பதிப்படுத்தவும் சமஸ்கிருத மொழி யிலும், சமஸ்கிருத இலக்கியங்களிலும் அதிக ஆர்வம் காட்டலாயினர். சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்திலும், ஜெர் மனி போன்ற பிற அய்ரோப்பிய மொழி களிலும் மொழி மாற்றம் செய்யலாயினர். புதிய ஆங்கில ஆட்சியாளரிடம் லாபகர மான நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள பிராமண-காயஸ்தர்களும் இதில் அய் ரோப்பியர்களை ஊக்குவித்தனர். கிருஸ் தவ மிஷனரிகளும் சமஸ்கிருதத்தின் மூல மாக இந்து மதத்தையும் புரிந்து கொள்ள முற்பட்டனர்.
1767இல் கூவர்தூ பாதிரியார் தான் முதன்முதலாக சமஸ்கிருதத்திற்கும் அய் ரோப்பிய மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறினார். 1783 இல் கல்கத்தா உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சர்.வில்லியம் ஜோன்ஸ் இந்த சமஸ்கிருத-அய்ரோப்பிய மொழித் தொடர்புகளில் ஆர்வம் காட்டலானார். அவரால் உரு வான ஆசியக் கழகம் சமஸ்கிருத ஆய்வில் முனைப்புடன் ஈடுபட்டது. 19ஆம் நூற் றாண்டின் துவக்கத்தில் கல்கத்தாவில் சமஸ்கிருத கல்லூரியும், நிறுவப்பட்டது. சமஸ்கிருத மொழியியல் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட்டது.
இங்கி லாந்து வந்த ஜெர்மனியரான மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் தான், சமஸ்கிருதப் புனித நூல்களை அய்ரோப்பிய மொழி களுக்கு மாற்றம் செய்யும் பணியை மேற் கொண்டார். அவரது ஆய்வுகள் மூலமாகத் தான் இந்தோ - ஆரிய அல்லது இந்தோ ஜெர்மனிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தியல் உருவானது. சமஸ்கிருதம், ஜெர்மனி, லத்தின், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்குள் உள்ள அடிப் படையான பொதுக்கூறுகள் விளக்கப் பட்டன.
த்வம் என்பது (Two) டூ
த்ரிதீய எண்பது (Three) த்ரி
பிதா என்பது (Father) பாதர்
மாதா என்பது (Mother) மதர்
என்று சொற்களின் மூலங்கள் விளக்கப் பட்டன.
ஆரியப் பெருமிதம், ஆரிய மொழிப் பெருமிதம் இந்திய உயர் ஜாதிப் பிரிவின ரிடமும், அய்ரோப்பியரிடமும் வேரூன்ற லாயின. தீவிரமான தேசியவாதி என்றறி யப்பட்ட பாலகங்காதர திலகரும் இதன் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தி, ஆரியர்களின் பூர்வீகம் அய்ரோப்பாவின் ஆர்க்டிக் பகுதியே என்று திடமாகக் கூறினார். (Arctic Home of the Aryan) இந்த ஆரியப் பெருமிதத்தின் உச்ச கட்டம்தான் ஜெர்மானிய ஹிட்லரின் ஆரியப் புனித வாதமும் யூத இனப் படுகொலைகளும்.
திராவிட மொழிக் குடும்பம்
ஒரு தலைப்பட்சமான ஆய்வுகளுக்கு சரியான பதிலடி 1816இல் வெளிவந்தது. பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis White Ellis) என்பவர் முதன் முதலாக தென் னிந்திய மொழிகளின் தனித்தன்மையை, அவை சமஸ்கிருத மொழிக் குடும்பத்திலி ருந்து வேறுபட்டது என்பதை ஆதாரங்க ளுடன் சுட்டிக்காட்டினார். மொழியியல் ஆய்வில் புதிய உண்மைகள் நிறுவப்பட லாயின. ஏ.டி. காம்பெல் (A.D. Campell) லாசர் (Lasser) பேராசிரியர் ஸ்டிவன்சன், வில்லியம் கேரி (William Garry) பேராசி ரியர் ஸ்டீவன்சன், ஆர்.பி.ராபர்ட்ஸ், ஸ்மிட், ஆர்.லீச், வேய்ஸ், எம்பூலர், ஜான் பெர் சிவல், செ.பி.ஹாட்சன் போன்றோர் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி தொன்னிந் திய மொழிகளின் திராவிடப் பொது மையை உறுதி செய்தனர்.
இதன் உச்சக் கட்டமாகத்தான் 1856இல் திராவிட மொழி களின் ஒப்பிலக்கணத்தை கால்டுவெல் பாதியார் வெளியிட்டார். திராவிட மொழி குடும்பம் என்ற வரலாற்று உண்மை நவீன ஆய்வாளர்களால் ஏற்கப் பட்டுவிட்டது. சமஸ்கிருதத்திற்கு உறவில்லாத, சமஸ் கிருதம் இன்றியே முழுமையாக இயங்கக் கூடிய தென்னிந்தியத் திராவிடமொழிகள், திராவிடப் பண்பாட்டின் வேர்களைக் கொண்ட திராவிட மொழிகள் என்ற உண்மை என்பதுடன், இந்திய மொழி களில் முதன்மையானதும், மூத்த மொழியும் சமஸ்கிருதம் அல்ல, திராவிடத் தமிழே என்பதை பன்மொழி இலக்கணங்களை ஒப்பீடு செய்தபின் தனது “ஆதி பாஷா” என்ற அற்புதமான ஆய்வு நூலில் சட்டம்பி சுவாமிகள் என்ற கேரளத்து ஞானியும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளார்.
தமிழின் தொன்மையை, தனித்தன்மையை மறுக்க முடியாத நிலை வந்தபோது சமஸ் கிருத அபிமானிகள், தமிழ்-சமஸ்கிருதத் தொடர்பால் தான் மலையாளம் போன்ற பிற தென்னிந்திய மொழிகள் உருவாயின என்ற வாதத்தை வைத்தனர். அதாவது தமிழ் தாயென்றால் சமஸ்கிருதம் தந்தை என்றனர். இது பொய்யான, விஷமத்தனமான வாதம் என்பதை மலையாள மொழியை ஆழமாக ஆய்வு செய்தால் தெளிவாகும்.
மலையாள மொழியின் வளர்ச்சி என்பதை கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்கும் பிறகு தான் உணரமுடிகிறது. அதுவரையில் தொன்மைத் தமிழ் தான் தமிழகம்-கேரளம் இரு பகுதிகளுக்கும் பொது மொழி. சங்க இலக்கியங்கள் இரு மக்களுக்கும் பொது வானவை என்று மலையாள மொழி ஆய் வாளர் கூறுகின்றனர்.
இன்றைய மலையாள மொழியில் அன்றைய பதிற்றுபத்து  போன்ற சங்க இலக்கியங்களை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும் என்கின்றனர். ஒரு சில மலையாள மொழியியலார் மலை யாளம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது தமிழிலிருந்து தோன்றியது, தமிழின் சேய் என்பதை மறுக்கிறார்கள், அவர்கள் கண்ணோட்டத் தில் தமிழுக்கும் - மலையாளத்திற்கும் உள்ள உறவு தாய் - சேய் உறவல்ல, மாறாக அக்காள் - தங்கை உறவே என்பதாம், ஆனால் இந்தப் பார்வையிலும் கூட தமிழும், மலையாளமும் திராவிட மொழிக் குடும்பத்தவை என்ற அடிப்படை மறுக்கப் படவில்லை.
ஆயினும் அக்காள்-தங்கை உறவே என்பது தமிழுக்கும் முந்தைய ஒரு தொன்மை திராவிட மொழி இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவ தாக உள்ளது. சிந்துசமவெளி எழுத்துக்கள், அவை திராவிட மூலமுடையவை என்ப தான வாதங்கள் உறுதிப்படுமானால் அந்த தொன்மை சிந்து சமவெளி மொழியே மூல மொழியாகவும் இருந்திருக்கக் கூடும். எப்படியாயினும் தொன்மை திராவிடத் தாய் மொழியினின்று வட்டார நடை என்ற முறையில் தனி அடையாளம் பெற்றதாக மலையாளம் குறிப்பிடப்படுகிறது. வட்டார நடை தனிமொழியாக வடிவம் பெறுவதற்கு சமஸ்கிருதம் தான் ஊற்று என்பது தவறு.
ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு முன்னரே பாலி, அர்த்தமகதி போன்றவை, பவுத்த, ஜைனர்கள் மூலமாக இங்கே அறிமுகமாகி இருந்தன. அத்துடன் தமிழே அரசாங்க மொழியாக 17, 18 நூற்றாண்டு வரையில் கேரள மண்ணில் தொடர்ந்தது. அதுமட்டு மின்றி இன்றையத் தமிழகத்தில் வழக் கொழிந்துவிட்ட பல தொன்மையான சொற்கள் இனியும் மலையாளத்தில் வழக்கிலிருக்கின்றன.
இது தொடர்பாக "மலையாள இலக்கிய வரலாறு" என்னும் நூலில் திரு. பி.கே. பர மேசுவரன் நாயர் கூறியுள்ள சில வரி களைக் கீழே தருகிறோம்.
"தமிழ் சொற்களின் ஈற்றில் "ஐ" கார மாக உருப்பெற்றிருக்கும் கூறு (அம்சம்) மலையாளத்தில் "அ" காரமாகவே இன் னும் நிற்கிறது. வினைச் சொற்களோடு பால் இடவிகுதிகளைச் சேர்த்தல் தமிழில் வந் திருக்க (எடுத்துக்காட்டு: அவன் வந்தான்; அவர் போனார்; அவள் வந்தாள்) மலை யாளத்தில் பழைய முறையே தொடர்ந்து வருகிறது.
அ ஈ என்னும் சுட்டெழுத்துகள் தமிழ்க் கவிதைகளிலன்றி மற்றெங்கும் வழக்கில் இல்லாதிருக்க, பேச்சு வழக்கில் கூட அவை மலையாளத்தில் பயின்று வருகின்றன. மூலத் திராவிட மொழியில் மட்டுமே இருந்த சில சொற்கள் இன்று தமிழில் (எடுத்துக்காட்டு: தெல்லு, நின், ஆயி) சில உச்சரிப்புகளும் அப்படியே (எடுத்துக் காட்டு: ‘‘ற்ற்’’). இன்று தமிழில் இல்லாதிருக்க, மலையாளத்தில் இருந்து வருகிறது. இந்த ஏதுக்களால் மலையாளம் மூலத் திராவிட மொழிக்கு மிகுந்த நெருக் கமானது என்பதும், அது தொன்மையான தனித் திறனுடையது என்பதும் நிருபிக்கப் படுகின்றன அல்லவா? தமிழ் இலக்கண நூல்களில் மிகப் பழைமை வாய்ந்த தொல் காப்பியத்தின் இலக்கண விதிகளுக்கொத்த சொல்லாட்சிகள் பல தமிழில் கிடைக் காமலிருக்க, அவை மலையாளத்தில் காணப்படுகின்றன என்று பண்டிதர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பழைய மலை யாளச் சொற்கள் பலவற்றின் விஷயமுமே அப்படித்தான். கேரளநாட்டுடன் நெருங் கிய தொடர்படைய சிலப்பதிகாரம், பதிற் றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களில் பயின்று வருவனவும், ஒரு காலத்தில் வழக்கிலிருந்தனவும் ஆன எண்ணிறந்த திராவிடச் சொற்கள் (எ-டு: துன்னல்காரன், பீடிக, அங்ஙாடி, அளியன், பத்தாயம், ஈடு, தோணி, பாணி, பாவ, புலரி இன்ன பிற) இன்றைய தமிழர்களால் நிகண்டுவின் உதவி கொண்டு புரிந்துகொள்ள வேண்டிய அருஞ் சொற்களாயிருக்க மலையாளி களைப் பொறுத்த வரையில் அவை இன்னமும் வழக்கிலுள்ள சொற்களாகவே நிலவி வருகின்றன." (மலையாள இலக்கிய வரலாறு பி.கே. பரமேசுவரன் நாயர் சாகித்ய அகாடமி 1984. தமிழில் ஆர்.கோபி நாத் பக்கம் 6-7)
பல தூய தமிழ் - திராவிடச் சொற்கள், பழைய நிலையிலோ அல்லது மருவியோ மலையாளத்தில் தொடர்ந்து வருவதைக் காணமுடியும். எடுத்துக் காட்டு:
பிணக்கம்
இணக்கம்
நேர்ச்சை
காழ்ச்சை
பறம்பு
இல்லம்
மூப்பிலான்
அச்சி
அச்சன்
முத்தச்சன்
முத்தச்சி
மச்சுனன்
ஒடம்பிறந்தோர் - (உடன் பிறந்தவள்)
வெளுப்பினு - (வானம் வெளுக்கும் முன்)
புலர்ச்ச - (விடியல்)
புலருந்து - (விடிகிறது)
உச்ச - (உச்சிவேளை)
வைகிட்டு - (பகல் கழிந்தபின்)
ராவு - (இரவு)
ராவிலே - (இரவு முடிந்தபின், காலை)
படிஞ்ஞாறு (படி ஞாயிறு, சூரியன் வீழும் திசை, மேற்கு)
குந்நு (குன்று)
உணர்ந்து (உணருதல், விழித்தல்)
குருதி - (ரத்தம்)
காவு - (காடு, தோப்பு)
தோடு - (ஓடை)
பற (பறைதல், சொல்லுதல்)
ஒருங்கு- (தயாராகுதல்)
ஒருக்கம்
தழுவு - (தழுவு)
மிழி - (விழி)
ஒடுக்கம் - (இறுதி)
ஒச்ச - (ஒலி)
நன்ம - (நன்மை)
தின்ம - (தீமை)
நந்நி - (நன்றி)
பொருது - (மோது)
கலி - (சினம்)
நாவாய் - (படகு, கப்பல்)
தெங்நு - (தெங்கு, தென்னை)
பண்டு - (முன்னர்)
மாரி - (மழை)
மாரிவில் - (மழைவில், வானவில்)
புத்தன் - (புதிய)
ஊண் - (உணவு)
புழ - (ஆறு)
சமஸ்கிருதம், பாலி போன்ற வட சொற்கள் கலவாமலேயே கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூறக்கூடிய திராவிட / தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியில், பேச்சு வழக்கில் இனியும் செல்வாக்குடன் இருப்பதும், இத்தகைய தூய திராவிடச் சொற்களை மலையாள இலக்கியங்களிலும் பயன்படுத்துவதைக் காண்கையில் மலை யாள மொழியின், பண்பாட்டின் திராவிட வேர்கள் எவ்வளவு வலிமையாக வேரூன் றியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
தமிழுக்கும் மலையாளத்திற்கும் பொது வான பழமொழிகளும் விடுகதைகளும் மலையாள வெகுமக்களிடையே இன்றும் வழக்கிலுள்ளன.
(எ.க)
கடய்க்கல் நனச்சாலே தலக்கல் பொடிக்கு
(வேரைநனைத்தால்தான் நுனியில் அரும்பு)
அக்கர நிக்கும்போழ் இக்கர பச்ச
(இக்கரைத்கு அக்கரை பச்சை)
உரிநெல்லு ஊரான்போயிட்டு பற நெல்லு பந்நிதிந்து
(உரிநெல் உருவப்போய் பறை நெல்லை பன்றிதின்றது)
அரி நாழிக்கும் அடுப்பு மூந்து வேணம்
(அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கு மூன்றுகல் வேண்டும்)
விடுகதை:
ஆள கேறா மல, ஆடு கேறா மல, ஆயிரம் காந்தாரி பூத்திறங்ஙி
(யானை ஏறா மலை, ஆடு ஏறா மலை, ஆயிரம் மிளகாய் பூத்தது  - நட்சத்திரங்கள்)
பின்னால வந்தவன் முன்னால போயி
(பின்னால் வந்தவன் முன்னால் போனான் - பற்கள்)
மலையாளச் சொற்றொடர் அமைப்பில் (வாக்கிய அமைப்பில்) தொன்மையான எளிய முறை கையாளப்படுகிறது. தமிழில் பால் வேறுபாடு பெயர்ச் சொல்லில் மட்டு மல்ல வினைச் சொல்லிலும் அழுத்தமாகக் கூறப்படும். அவ்வாறே ஒருமையும் பன் மையும்:
எடுத்துக் காட்டு
அவன் வருகிறான்
அவள் வருகிறாள்
அது வருகிறது
அவர்கள் வருகிறார்கள்
மலையாளத்தில் பழைய எளிய முறையே தொடர்கிறது.
அவன் வருந்நு
அவள் வருந்நு
அது வருந்நு
அவர் வருந்நு
அதாவது இலக்கண விதிகளால் கடினப் படாத தொன் தமிழாக மலையாளம் தொடர் கிறது. சுட்டம்பிசுவாமிகளது ("ஆதிபாஷா") கருத்துப்படி எளிமையான ஒலி, சொல் சொற்றொடர் அமைப்பு அம்மொழியின் தொன்மை நிலை தொடர்வதையே சுட்டு வதாகும்.
ஆகவேதான், கால்டுவெல், ஏ.ஆர். ராஜராஜவர்மா (கேரள பாணினீயம்) போன்ற அறிஞர்கள் "மலையாளம் (தொன் மைத்) தமிழின் கிளை மொழி என்கிறார்கள்.
சொற்களில் வெளிப்படும் ஒற்றுமை, இலக்கண அமைப்புகளில் காணப்படும் திராவிடத்தன்மை, மலையாளத்தையே "மலைநாட்டு" அல்லது "மலையாய்ம” அல்லது "மலையாண்மத்" தமிழ் என்று அழைத்து வந்த மரபு, இந்த இரு மொழி களுக்கிடையேயான திராவிட உறவுகளை உறுதிப்படுத்துவதாகும்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்ன டம், துளு ஆகிய திராவிட மொழிகளில் குறைந்த பட்சம் 5000 பொதுச் சொற்கள் அதுவும் தொன்மையான மூலத் திராவிடச் சொற்கள் இருப்பதாக அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளது இங்கே நினைவிற் கொள்ளத்தக்கதாகும். கரி நாட்டுத்தமிழ் கன்னடமாகியது போல துளுநாட்டுத் தமிழ் துளு ஆனதுபோல மலைநாட்டுத் தமிழ் அல்லது மலை ஆண்மத் தமிழ், மலை யாளம் ஆயிற்று. (மலையாளம் மலை + அளம் - மலை சார்ந்த நாடு).
பண்பாட்டு உறவுகள்
நம்பிக்கை மரபிலும், பிற பண்பாட்டுக் கூறுகளிலும் தமிழக - மலையாள வெகு மக்களிடையே வியக்கத்தக்க தொடர்புகள் தொடர்கின்றன. வைதீகம் எப்படி திராவி டரது உருவக் கடவுளரை ஆகம - புரா ணங்கள் மூலம் சமஸ்கிருத - பிராமணமய மாக்கியது என்பது முன்னர்  விளக்கப் பட்டது. அவ்வாறு ஆகம்படுத்தப்பட்ட கடவுளர் அதுவரை செல்வாக்கு மிக்க வணிகர்களாலும் நிலவுடைமையாளர்களா லும், அவர்களது மன்னர்களாலும் போற் றப்பட்டவை.
அவற்றை மறுத்தோ நிந் தனை செய்தோ, பிராமணர்கள் இங்கே காலுன்ற முடியாது என்ற சூழலில் வசதி யான வலிமைமிக்க திராவிடர்களின் கடவுளர்களை வைதீகப்படுத்தினர். இத னால் கோயில்களில் பிராமணர்களும், சமஸ்கிருதமும் ஆதிக்கம் பெற்றன. பக்தி இயக்கம் நாயன்மார் - ஆழ்வார் மூலமாக இந்த கோயில் சார்ந்த சைவ - வைணவ வழிபாட்டு நம்பிக்கையை வெகுமக்களி டம் பரப்புரை செய்து அவர்களை ஆகம மத சம்பிரதாயங்களுக்கு இணங்க வைத் தது.
இந்த நாயன்மார்களிலும், ஆழ்வார் களிலும், ஏறக்குறைய அனைவருமே தமி ழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர் கள். குலசேகர ஆழ்வாரும், சேரமான் பெருமாள் என்னும் கழறிற்றறிவார் நாய னாரும் சேரநாட்டு அரசர்கள்; விறன் மிண்டர் நாயனார் செங்குன்றூர் என்னும் செங்கனூர்ப் பகுதி வேளாளர். பக்தி இயக்கம் பேரரசுகளையும் பேரரசர்களை யும் சார்ந்த இயக்கம். எனவே பல்லவ, சோழ, பாண்டியப் பேரரசுகள் தழைத்த பகுதிகளில் பெரும்பாலான திருக்கோயில் கள் அமைந்தன. கேரளப் பகுதியில் அப் போது பேரரசுகள் தோன்றாது சிற்றரசுகளே இருந்ததினால் சேரநாட்டு ஆழ்வார்கள் நாயன்மார்கள் எண்ணிக்கையும் குறைவு. அங்கு பாடல் பெற்ற திருத்தலங்களும், திவ்ய தேசங்களும் குறைவான எண்ணிக் கையிலேயே அமைந்தன.
பக்திகாலம் தமிழக கேரள வரலாற்றில் சமுகப் பின்னடைவின் காலம். தண்டியடி களும், ஏனாதிநாதரும் நாயன்மார் பட்டி யலில் உள்ளனர். அவர்கள் ஈழக் குலச் சான்றோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் சாதியாகக் கூறப்படாமல் குல மாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னருக்கும் கூட போர்க் கலையை பயிற்று விப்போராகக் குறிப்பிடப் படுகின்ற னர். பக்தி இயக்கத்தின் முடிவில் சோழப் பேரரசின் உச்சகட்டத்தில் இவர்கள் புறக் கணிக்கப்பட்ட பிரிவினராகத் தாழ்ந்தனர்.
நொபுரு கராஷிமா என்ற ஜப்பானிய அறிஞர் சோழர் காலத்து கல்வெட்டுக் களில் காணப்படும், ஊருக்குப் புறத்தே வைக்கப்படும் பறைச்சேரி, ஈழச் சேரி களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். சோழ நாட்டிலும், சேர நாட்டிலும் ஜைன, பௌத்த மதங்களைப் போற்றி வந்த இந்தக் குடிகள் பக்தி காலத்தில் பிராமணிய வர்ண விவஸ்தைகளுக்கு இணங்க மறுத்ததால், அவர்கள் அரச - அந்தணர்க் கொடுமை களுக்கு ஆளாயினர். விளைநிலங்களிலி ருந்து விரட்டப்பட்டனர்; கழுவேற்றிக் கொல்லப்பட்டனர்.
அவர்களது வாழ் விடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; அவர் களது வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப் பட்டன, அல்லது ஜைன-பவுத்தக் கட வுளர்கள் வைதிகக், கடவூளர்களாக மாற்றப்பட்டனர். சம்பந்தர், சுந்தரர் தேவா ரங்களிலும், திருமங்கை போன்ற ஆழ்வார் பாசுரங்களிலும் ஜைன, பவுத்தர்களுக்கு எதிரான காழ்ப்பு - பகைமை வெளிப் படுகிறது.
(மயிலை சீனி, வேங்கட சாமியின் நூல்கள்)

-விடுதலை ஞா.ம,19.11.16
தமிழ்நாடு - கேரளா,
திராவிடப் பண்பாட்டு உறவுகள் (3)

கடந்த வாரத் தொடர்ச்சி....
ஆயினும், வைதீகம் வருவதற்கு முற் பட்ட காலத்தில் மண்ணின் மைந்தர்கள் அனுபவித்த சமத்துவத்தையும், செழிப் பையும் இம்மக்களால் மறக்க முடிய வில்லை. அக்காலத்தை இவர்கள் மீண்டும் வரவேண்டிய பொற்காலமாகப் பார்த்தனர். கேரளத்தில் இன்றும் சிறப்புறக் கொண்டா டப்படும் ஒணம் பண்டிகை இதனை நினைவுறுத்துகிறது. அறுவடைத் திருவிழா வான ஒணப்பண்டிகை நாட்களில் அவர் கள் வாழ்த்துவதும், வரவேற்பதும் விஷ்ணு வின் அவதாரமான வாமனனை அல்ல.
மாறாக என்றோ புராணச் சதியால் ஒழிக் கப்பட்ட மகாபலி அல்லது மாவேலி என்ற (திராவிட) அசுர அரசனை நன்றியோடு நினைவு கூர்கிறார்கள். மாவலி (மாவேலி) ஆண்ட அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
"மாவேலி நாடு வாணிடும் காலம்
மானுஷ்ய ரெல்லாரும்  ஒந்து போலே
என்ற மலையாள ஒணப்பாடல் வைதீக வருகைக்கு முன் இங்கே இருந்த சமத்துவ சமூக நிலையை, ஒழுக்கம் செழித்த அறவாழ்க்கையை மாவேலி ஆண்ட காலத்தில் அனுபவித்ததாகக் கூறுகிறது. "அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் அவதரிப்பேன்” என்ற "சம்பவாமி யுகே யுகே", மண்ணின் மைந்தர்களுக்கு விபரீத மாகவே அமைந்தது என்பதால்தான் வாமணனை கோயில் கட்டிக் கும்பிடாத கேரளமக்கள் மாவேலியை நன்றியோடு போற்றுகிறார்கள்.
மராத்திய மகாத்மா ஜோதிபா பூலே அவர்களும் பலிச்சக்ர  வர்த்திதான் நல்லாட்சி தந்தவன் என்று போற்றுவதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். மாவேலி திராவிட அரசியல் விழுமியங்களின் எடுத்துக் காட்டு என்றே கொள்ளப்பட வேண்டும்.
ஓணத்தைப் போல, தமிழகத்தில் தைப் பொங்கலும் அறுவடைத் திருவிழா தான். வேளாண் செழிப்பைப் போற்றும் திராவிடர் பண்டிகை. அது கேரளத்தில் மகரப் பொங்கல் என சிறு விவசாயப் பண்டி கையாக சுருங்கி விட்டாலும், தமிழகத்தில் அது புராணவயப்படாத திராவிடர் திரு நாளாகவே தொடர்கிறது. மகர சங்கராந்தி, உத்திராயனம் தட்சிணாயனம் போன்ற சமஸ்கிருதமயப்படுத்தல் தமிழர் விழாவான பொங்கலில் இன்னமும் எடுபடவில்லை.
அறுவடையை, வேளாண்மையை ஆற்றுப்பெருக்கை, மாமழையைப் போற் றுவது திராவிடர் மரபு. அவதாரங்களையும், சம்ஹாரங்களையும் (தங்களுக்கு இணங் காதவர்களை அழித்தொழிப்பது) போற்று வது வைதீக மரபு: திராவிடப் பகுதிகளான தமிழகம் மற்றும் மலையாள மண்ணில் பண்டிகைகள், விழாக்கள் என்ற பெயரில் செழிப்பைப் போற்றுகிறார்களேயன்றி, வைதீக மரபில் உள்ளவாறு அழிப்பைப் போற்றவில்லை.
தமிழகம் - கேரளத்திற்குப் பொதுமையான
திராவிட வழிபாட்டு மரபுகள்
திராவிட மரபின் ஒரு சிறப்பான கூறு "தாய்த் தெய்வ வழிபாடு” ஆகும். ரிக்வேத ஆரியர்களின் முதன்மைத் தெய்வங்கள் ஆண்களே உஷஸ், சாவத்ரி, காயத்ரி போன்றவை பெண்களாக உருவகப்பட் டாலும் அவை இரண்டாம் தரமான தெய் வங்களாகவே இருந்தன. தெய்வத் தலைமை பெண் தெய்வங்களுக்குத் தரப்படவில்லை.
திராவிடம், சுமேரியம் போன்ற நாகரி கங்களில் தாய் கடவுளர் முதன்மைக் கட வுளராயினர். சங்கத் தமிழ் இலக்கியங்களில் மூன்று வகையான தாய் தெய்வங்கள் காணப்படுவதாக ஆய்வாளர் பி.எல். சாமி குறிப்பிடுகிறார். ‘கொற்றவை’ என்பவள் பாலை நிலத்திற்குரியவள் என்று அறியப் பட்டாலும், ஒவ்வொரு ஊரின் குடியிருப்பு நடுவிலும் காவல் தெய்வமாக ஒரு தாய் தெய்வம் வைக்கப்பட்டிருந்ததை அறிஞர் கள் சுட்டிக்காட்டுவர்.
அந்தத் தாய் தெய் வம் இளமையாகச் சித்தரிக்கப்படவில்லை. பெருத்த வயிறும், மார்பகங்களும் கொண்ட பேரிளம் பெண்ணாகவே சித்த ரிக்கப்படுகிறாள். எந்த ஆண் கடவுளு டனும் அவளை இணைக்கவில்லை. ஆனா லும் எல்லோரையும் பெற்ற பெரு வயிறு உடையாள் என்ற பொருளில் "மோடி" (மோடு - வயிறு) என்ற கன்னித்தாய்க் கடவுள் என பெரும்பாணாற்றுப் படை குறிப்பிடுகிறது.
அவள் பெற்றெடுத்த சேய்களான "சேயோன்", "சாத்தன்” என்ற இளம் ஆண் கடவுளர் ஊருக்கு வெளி யிலும், குளம் ஏரிகளின் கரைகளிலும் ஆயுதங்களுடன் வைக்கப்படுவர். “உலகம் முழுதீன்ற பெருங்கன்னி” என்று திருவாரூர் புராணம் குறிப்பிடுகிறது.
கொற்றவை என்பவளுக்கு உயிர்ப்பலி தரப்பட்டது. கொற்றவைக்கு தம் கழுத்தைத் தாமே அரிந்து பலியிடுவதான குறிப்புகளும் கூட (நவகண்டம்) உள்ளன. (சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் தாய் தெய்வமொன்றிற்கு ஒருவன் தன் தலையை அரிந்து கொடுக்கும் காட்சி உள்ளது.)
மற்றொன்று கடல்கெழுச் செல்வி என்று அகநானூறில் (370) குறிப்பிடப்படும் தெய் வம். மணிமேகலையில் கூறப்படும் சம்பாபதி என்னும் தெய்வம். மேகலா தெய்வம் கட லோடிகளின் காவல் தெய்வம் ஆகும். குமரிமுனையில் உள்ள கன்னித் தெய் வமும் இந்த வகையில் உள்ளதே.
மூன்றாவதாக உள்ளது கானமர் செல்வி (அகம் 345) அல்லது காடமர் செல்வி (மணிமேகலை) என்றறியப்படும் பெண் தெய்வம். காடுறைக் கடவுள், பெருங்காட் டுக் கொற்றி, கான நாடியம்மன் என்றெல் லாம் அழைக்கப்பட்ட இத்தெய்வம் வைதீ கத்தால் வனதுர்க்கை எனப்பட்டது. நன்னன் ஆண்ட பூழி நாட்டில் இத்தெய்வம் மிகவும் போற்றப்பட்டதாம் இன்று மலபாரில் உள்ள கானங்காடு எனப்படும் கானங்காடு பகுதி யில் பதினாறு பெண் தெய்வக் கோயில்கள் உள்ளன.
கன்னித்தாய்களான இந்தத் தெய்வங்கள் பெண் தலைமைச் சமுதாயத்தின் அடை யாளங்களே. வைதீகம் இங்கே வேர்விட்ட பின் சக்தி விழிபாட்டினை (சாக்தம்) ஏற்றுக் கொண்டாலும் அவளை ஆண்கடவுளுக்கு அடங்கிய மனைவியராகவே மாற்றினர்.
கொற்றவை காளியானாள்; சிவனுக்கு மனைவியாக்கப்பட்டாள்; கொற்றவையின் சேய்களான சேயோன் (முருகன்), சாத்தன் சிவனுக்குப் பிள்ளைகளாக்கப்பட்டனர். பவுத்த மூலமுடைய விநாயகர் மூத்த பிள்ளையானார்.
தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு ஆகமங்களால் முதன்மை நிலையிழந்தது. அவை இன்று பெரும்பாலும் கிராமத்து அம்மன்கள். செல்வாக்கும், செல்வமும் பெருகிய அம்மன் கோயில்கள் பிராமண பூசகத்திற்கு மாற்றப்பட்டன. பெரும்பலான ஏழை அம்மன் கோயில்கள் உள்ளூர் பூசகர்களால் உயிர்ப்பலி தரப்படுகின்றவை யாகத் தொடர்கின்றன.
ஆனால் கேரளத்தில் அம்மன் சிதைப்பு வெற்றி பெறவில்லை. சிவனைப் போரில் வெல்லுகின்ற மலையாள பகவதியை இங்கே காண முடியும். சிவனுக்குத் தங்கை யான சக்தியை இங்கே காண முடியும். முத்தச்சி (பழையோள், மூதோள் என்று தொன் தமிழ் இலக்கியங்களில் அழைக்கப் படுபவள்) வழிபாடு கேரளத்தில் உண்டு, தனித்துவமிக்க பல பகவதி கோயில்கள் கேரளத்தில் இன்றும் இருக்கின்றன.
கொடுங்கல்லூர் பகவதி கோயில் போன்ற வற்றில் கள்ளும், உயிர்ப்பலியும் கொடுக் கப்படுவது அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது; சில பகவதிகள் கண்ணகி வுழிபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளனர் (எ.கா.  ஆற்றுகால் பகவதி) கண்ணகியை இணைக்கும் கோயில்கள், ஏறக்குறைய அனைத்தும் மலையாள மண்ணில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியங்களில் தாய் தெய்வங் களை பல பெயர்களில் அறிகிறோம்.
காடுகாள்
காரித்தாய்
கொற்றி
மாரி
சூரி
வடுகி
அய்யை
காளி
மாதரி
முக்கண்ணி
மாகாளி
வேதாளி
எண்டோளி
விந்தை
கன்னி
குமரி
பாலைக்கிழத்தி
அயிரை
செல்வி
வடக்கு வாய்ச்செல்வி.
செல்வி இன்று செல்லியாகவும், செல் லாண்டி அம்மனாகவும் அறியப்படுகிறாள். வடக்குவாய்ச் செல்வி எல்லையம்மனாகி விட்டாள்.
ஏறக்குறைய அனைத்துமே இன்று சிறுதெய்வங்கள். வெகு மக்களி டையே எல்லையம்மனும், மாரியம்மனும், செல்லியம்மனும் இன்றும் செல்வாக்குடன் இருந்து வைதீகத்திற்கு முற்பட்ட திராவிட வழிபாட்டு மரபுகள் வேறூன்றி இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தை விட கேரளத்தில் தாய் தெய்வ வழிபாடு பக வதியின் பற்பல நிலைகளில் சாமானிய மக் களிடையே செல்வாக்குடன் தொடர்கிறது.
அங்கெல்லாம் ஆண் தெய்வங்கள் பரிவார தேவதைகளாக, பூத கணங்களாக இரண் டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை மீனாட்சியும், காஞ்சி காமாட்சியும் போற்றப்பட்டாலும், அவர்கள் இங்கு பகவதிகளைப் போன்று ஆண் துணையின்றி, ஆண்களை ஏவல் செய்யும் தெய்வங்கள் அல்ல. இங்கே அவர்கள் ஆகம ஆண்கடவுளரின் பத்தினிகளாக்கப் படுகின்றனர்.
சாத்தன் வழிபாடு; சங்க காலத் தமி ழகத்தில் (கேரளமும் உள்ளிட்டது) சாத்தன் என்ற தெய்வம் செல்வாக்குடன் இருந்தது. சாத்தன் என்ற பெயரும் பரவலாகக் காணப்பட்டது.
(எ.கா) சீத்தலைச் சாத்தன் - மணிமேக லையை இயற்றியவர், பவுத்தர்
ஆமூர் சாத்தன்
ஆலம்பேரிச் சாத்தன்
மோசிச் சாத்தன்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தன்
வடம வண்ணக்கண் பெருஞ் சாத்தன்
வடம வண்ணக்கண் பேரிச்சாத்தன்
பூதஞ் சாத்தன்
அந்துவன் சாத்தன்
பாண்டிய அரசன் கீரன் சாத்தன்
சேரமான் சாத்தனார், கருவூர்
மா சாத்தன்
மா சாத்துவன்
அறஞ் சாத்தன்
புறநானூறு (394) ஆவது பாடல், உறை யூருக்குக் கிழக்கேயிருந்த பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் என்ற தெய்வத்தைக் குறிப்பிடுகிறது.
இந்தச் சாத்தனை மிகவும் இளைய வனாக (மூவா இளநலம் கொண்டவனாக) உருவகப்படுத்தினர். ஆயுதம் தாங்கியவ னாக குதிரையின் மீது அல்லது யானையின் மீது வீற்றிருக்கும் வேட்டை தெய்வமாக வும் சித்தரிக்கப்படுகிறான். பெரும்பாலும் ஊர் எல்லையில், குளம், ஏரி ஆகியவற் றின் கரைகளில் காவல் புரியும் பூதநாதனாக சாத்தன் உள்ளான்; இத்தெய்வத்தை முல் லைத் திணை தெய்வமான சேயோனுடன் தொடர்புபடுத்துவதும் உண்டு.
சங்க காலத்தில் புறம்பணையான் (ஊருக்கு வெளியே உறையும் தெய்வம்) வழிபாட்டுத் தலங்களில் கள்ளும், உயிர்ப் பலிகளும் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஓட்டக்கூத்தர் எழுதிய ‘தக்க யாகப் பரணி’யில் பேய்கள், காரி என்னும் சாத்தனுக்கு கள்ளும், இறைச்சியும் எடுத்து வருவதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் "பாசாண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு” என்று சாத்தனிடம் நோன்பிருந்து வேண்டுதல் செய்யும் மகளிரைப் பற்றிய குறிப்பு உள்ளது.
சங்கம்  மருவிய காலத்தில் சாத்தனை பவுத்தர்களும், ஜைனர்களும் தம் தெய்வ கணங்களில் சேர்த்துக் கொண்டனர். பவுத் தர்கள் சாத்தனுக்கு குதிரை வாகனத்தை யும், ஜைனர்கள் யானை வாகனத்தையும் தந்தனர். அத்துடன் குருதி பலிக்குப் பதிலாக கிழங்கு, தேன் போன்ற சைவப் படையல்களை வைத்தனர். இவ்வாறு சாத்தன், சாஸ்தாவானான், அறச்சாத்தன் என்பவன் தர்ம சாஸ்தாவானான், பெருஞ் சாத்தன் என்பவன் மகா சாஸ்தாவனான். தமிழகத்தில் இன்று சாத்தன் சிறுதெய்வ மாகிவிட்டான்.
அய்யனார் என்ற கிராமக் காவல் தெய்வமானான். இன்று சாத்தனுக்கு புறம்பணையான் கோட்டம் போன்ற கோவில்கள் இல்லை. ஆனால் கேரளத் தில், குறிப்பாக அவர்ணப் பிரிவினரிடம் சாஸ்தா கோவில்களும் சாஸ்தா காவுகளும் புகழுடன் இருக்கின்றன. சபரி மலை சாஸ்தா இன்று பவுத்த தர்ம சாஸ்தா இல்லை.
பிராமண மூலம் கொண்ட சிவ னுக்கும் விஷ்ணுமோகினிக்கும் பிறந்த சாஸ்தாவாகி விட்டான். ஆனாலும், காடு களில் வாசம், புலியின் மீது பயணம் போன்ற புராணக் கதைகள் துவக்கத்தில் சபரிமலை சாஸ்தா ஒரு வேட்டை தெய்வ மாக அல்லது வேடுவர்களின் தெய்வ மாகவே உருவாகியிருக்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றன. மல பாரில் இன்றும் பிரபலமாக இருக்கும் ‘பார்சினிக் கடவு முத்தப்பன்’ என்னும் தெய்வத்தின் கதையிலும், அக்கடவுள் கண்டெடுக்கப்பட்ட குழந்தையாக இருந்து பின் பல அற்புதங்களைச் செய்ததாக உள்ளது.
அந்த முத்தப்பனும் துவக்கத்தில் ஒரு வேட்டை தெய்வமாகவே இருந்தி ருக்க வேண்டும், சபரிமலை சாஸ்தா, பவுத்த மயமாகி, பின்னர் பிராமணிய வயமாகிப் போனதினால் சைவப் படையல்களை ஏற்பவனானான். அவ்வாறு பவுத்த, ஜைன, பிராமணிய வயப்படாத பார்சினிக் கடவுள் முத்தப்பனுக்கு இப்போதும் இறைச்சியும் கள்ளும் படைக்கப்படுகிறது. மலையாளச் சாத்தன் மலையாளக் கருப்பன் என்று தமிழகத்தில் அறியப்படுகிறான். தமிழக சாத்தனான அய்யனாருடன் இணைத்து வைக்கப்படுகிறான். மலபாரில் இன்றும் தொடரும் களியாட்டங்களில் சாத்தன் ஆட்டம் என்ற ஒன்றும் உண்டு.
வைதீகம் பின்னர் சாத்தனைச் சிவனின் மகனாக்கியது. காளியின் மகனாக்கியது. பரிவாரதேவதைகளில் ஒன்றாக சிறு தெய்வமாக மாற்றியது. பல்லவர் காலத்தில் சிவனுக்கு மகனாக்கப்பட்ட சாத்தன் சோழப் பேரசின் காலத்தில் சிவன் கோயில் பரிவார தேவதையாக குறைக்கப்பட்டான். முருக வழிபாடு என்பது வைதீக மாக்கப் பட்ட சாத்தன் வழிபாடே என்ற வாதங் களும் உண்டு.
கேரளத்தில் இன்னும் செருமர், தீயர் முதலிய சமூகப்பிரிவினிடம் சாத்தன் பெயர் பெரிதும் வழங்குகிறது. இடைநிலை சமூகப்பிரிவுகளிடமும் சாத் தன் பெயர் வழங்கப்படுகிறது. (எ.கா. சாத்து, சாத்துநாயர், சாத்துண்ணி. தென் தமிழகத் திலும் சாத்தையன் போன்ற பெயர்கள் வழக்கிலுள்ளன.)சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குரவை, வெறியாட்டு போன்றவை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களில் கேரளத்தின் வெகுமக்கள் விழாக்களில் இனியும் தொடர்ந்து வருவதைக் காண முடிகிறது. கொட்டு, முழவு, பறை என்பவையான இசைக்கருவிகள் தொடர்கின்றன.
பழைய திராவிடக் கலைகள் மற்றும் சடங்குகளின் எச்சங்களை மலையாள மண்ணில் மிகுதி யாகக் காண முடியும். வள்ளிக்கூத்து, கழ நிலைக்கூத்து என்று தொல்காப்பியம் கூறு பவற்றின் சாயலை கேரளத்தின் சவுட்டு நாடகத்தில் பார்க்கலாம். கூத்து என்ற சொல்லும் கருத்தியலும் கேரளத்தில் இன்றும் உண்டு, கலைத்துறையில் தமிழக-கேரளத் தொடர்புகள் இன்றைய நூற் றாண்டுகளிலும் இருப்பதைப் பார்க்க முடியும்.
இசைக்கலைஞர்களும் தஞ்சை நால்வர் என்று சிறப்பிக்கப்படுவர்களுமான சரபோஜி காலத்து  சின்னையா, பொன் னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியவர் களை திருவிதாங்கூரின் சுவாதி திருநாள் அரசர் தம் அரசவைக்கு அழைத்து வந்து சிறப்பித்திருக்கிறார். இதில் வடிவேலு நிரந்தரமாகவே திருவனந்தபுரத்தில் குடியேறி, சுவாதி திருநாளின் ஆஸ்தான வித்வான் என்று சிறப்பிக்கப்பட்டார். 1847இல் திருவனந்தபுரத்திலேயே அவர் இயற்கை எய்தினார்.
சமூகப்புரட்சியில் தமிழகமும் கேரளமும்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறபொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்னும் வள்ளுவரின் குறள் திராவி டரது சமூக அடிப்படையை தெளிவுப் படுத்துகிறது. மாவேலிப் பாட்டில் வரும் “மானுஷ்யர் எல்லாரும் ஒந்து போல” என்ற வரியும் அதனையே கூறுகிறது.
ஆனால் வைதீகம் கூறும் சமூகக் கட்டமைப்பு வேறு விதமானது.
“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” என்ற கீதை வரிகள் ஏற்றத்தாழ்வின் அடிப் படையிலான சமூகக்கட்டமைப்பை நியா யப்படுத்தின, புனிதப்படுத்தின. வைதீக-ஆகம நெறிகள் மயக்கத்திற்கு உள்ளான திராவிட மன்னர்களின் ஆதரவிலும், அரவணைப்பிலும் இங்கு வேரூன்றிய பின் சமூக ஏற்றத்தாழ்வுகளும், சமூகச் சுரண்டல் களும் மிகுந்தன. வெகுமக்கள் விலங்கு களை விடக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆரிய வர்த்தத்தில் இதனை எதிர்த்த முதல் குரல் கவுதம புத் தருடையது. தமிழக-கேரளப் பகுதிகளில் ஜைனமும், பவுத்தமும் செல்வாக்குப் பெற்றிருந்த வரை வர்ண தர்மம் இங்கே காலூன்ற முடியவில்லை. பக்தி-கோயில்-ஆகமம்-புராணம் வாயிலாகவும், அரச ஆதரவில் சைவ-வைணவ   வெறியர் களால், பவுத்தர்களும், ஜைனர்களும் ஒடுக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டு, அவர்களது வழிபாட்டுத் தலங்களும் தரைமட்ட மாக்கப்பட்ட பின், வைதீக வர்ணதர்மம் திராவிட மண்ணில் கோலோச்சத் தொடங் கியது.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில், வங் காளத்திலும், குஜராத்திலும், பஞ்சாபிலும் எழுந்த சீர்திருத்த இயக்கங்கள் ஜாதி களுக்குள் சீர்திருத்தம் என்பதாகப் பேசின. ஆனால் ஜாதி மறுப்பு, ஜாதி மறுப்பை பேசிய மகான்களும், இயக்கங்களும் தென்னகத்தில்தான் தோன்றினர். பிற்கால சோழர் காலத்திற்குப் பின் வந்த தமிழ்ச் சித்தர்கள் ஜாதி மறுப்பு - ஜாதி ஒழிப்பில் முதலடி எடுத்து வைத்தனர். கோயில்-தீர்த்தம்-நோன்பு போன்ற மூடமரபுகளுக் கெதிராகவும் குரல் கொடுத்து, சிந்தனைப் புரட்சிக்கு வழிவகுத்தனர்.
பத்தொண்பதாம் நூற்றாண்டில் நாஞ் சில் பகுதி வைகுண்ட சாமியும், வடலூர் ராமலிங்க வள்ளலாரும் "ஒரு தெய்வம் ஒரு மனிதம்” என்ற சமூகப் புரட்சிக்கு கால்கோளிட்டனர். இதனைத் தொடர்ந்து நாராயண குரு "ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதருக்கு” என்ற சமத்துவப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தினார். தென் தமிழ்நாட்டில் ஆலய நுழைவிற் காகவும், ஆலயப் பகுதிகளில் நடமாட்ட உரிமைகளுக்காகவும் ரத்தம் சிந்திப் போராடிய அதே காலத்தில் நாராயண குரு அனைவருக்குமான ஆகம சிவலிங்கப் பிரதிஷ்டையை அருவிப்புறத்தில் நடத்தி னார்.
-விடுதலை ஞா.ம.,26.11.16

தமிழ்நாடு - கேரளா, திராவிடப் பண்பாட்டு உறவுகள் (4)



பேராசிரியர் அ.கருணானந்தன்
வரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி,
சென்னை
கடந்த வாரத் தொடர்ச்சி....
"ஒழிவில் ஒடுக்கம்" "திருக்குறள்” போன்ற தமிழ் இலக்கியங்களால் தாக்கம் பெற்ற குரு "ஜாதி நிர்ணயம்" "ஜாதி லட்சணம்" என்பதான ஜாதி மறுப்புப் படைப்புகளைத் தந்தார். ஜாதி என்பது போலியானது, வக்கிரமானது என்று மகாத்மா காந்தியிடம் வலியுறுத்தினார். அவரது சீடர் டி.கே.மாதவன் துவக்கி வைத்த "வைக்கம் போராட்டம்” நடமாட்ட உரிமைக்கானது. இதில் சமூக உணர்வுள்ள தமிழ்த் தலைவர்களது பங்கு, குறிப்பாக தந்தை பெரியாரின் தலைமைப் பங்கு வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரியாருடன், அவரது மனைவி நாகம்மை, சகோதரி கண்ணம்மாள், தோழர்கள் ராமனாதன், கோவை அய்யாமுத்து போன்றோரும் பங்கேற்றனர். இளைஞர்களாக இருந்த காமராஜரும், பொதுவுடைமைத் தோழர் ஜீவானந்தமும், வைக்கம் போராட்டத்தைக் காண வந்திருந்தனர்.
மலையாள மண்ணில் நாராயண குரு ஜாதி மறுப்பை மய்யப்படுத்தி, ஒரு சமூகப்புரட்சிக்கு வித்திட்ட போது அதே பணியை தமிழ் மண்ணில்  பெரியார் செய்தார். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர், ரெட்டை மலை சீனிவாசன் போன்றோர் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் உரிமைக்காகச் செயல்பட்டதைப் போன்றே திருவிதாங் கூரின் அய்யங்காளியும் பெரும் பணி ஆற் றினார். நாராயண குரு - பெரியார் போன் றவர்கள் பழமையில் பெருமிதம் உடைய வர்கள் அல்லர். மேலை நாட்டு அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், இலக்கியங்களை உட்கொண்டு இங்கேயுள்ள நம் மக்களும் சமநீதி-சமவாய்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நவீன சமுதாயமாக மாறவேண்டும் என்ற வலியுறுத்தி வந்தனர். ஆணுக்குச் சமமாக பெண்ணிற்கும் கல்வி, உரிமை, உடமை வேண்டுமென்பதில் இருவருக்குமே ஒத்த கருத்து இருந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் விழுமியங்களைத்தான் நாரா யண குருவின் தர்மமான “ஒரு சாதி - ஒரு மதம் - ஒரு தெய்வம் மனிதருக்கு" என்பதும் கொண்டிருந்தது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற திராவிட விழுமியங்களுக்கு இசைவாகவே இருவரின் சிந்தனைகளும் இருந்தன.
1891-இல் திருவிதாங்கூர் மன்னருக்கு 10,000 பேர்களால் கையெழுத்திட்டு அளிக்கப்பட்ட மலையாளி விண்ணப்பம் (விணீறீணீஹ்ணீறீமீமீ விமீனீஷீக்ஷீவீணீறீ) என்பதும், அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 13,000 பேர்கள் கையெழுத்திட்டு மன்னருக்குத் தந்த "ஈழவ விண்ணப்ப”மும் வரலாற்றுத் திருப்பு முனைகளாக அமைந்தன. அரசுப் பணிகளில் பிராமண ஏகபோகத்தை எதிர்த்தும் மண் ணின் மைந்தர்களுக்கு கல்விக்கூடங்க ளிலும், அரசுப்பணிகளிலும் உரிய பங்கு கோரியும் தரப்பட்ட அரசியல் விண்ணப் பங்கள் அவை. 1900 களின் துவக்கத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்தன. 20-ஆம் நூற்றாண்டின் பிராமணரல்லாதார் அல்லது திராவிட எழச்சிக்குத் துவக்கங்களாக அவை அமைந்தன. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பிராமணரல்லாதார் உயர்நீதிமன்ற நீதிபதி யான சர்.சி.சங்கரண் நாயர் எழுதிய கடி தங்கள், கட்டுரைகள் திராவிட உணர்வுக்கு உரமூட்டின. இந்திய தேசியக் காங்கிரசில் இருந்த கருணாகர மேனன் கூட இத்தகைய உணர்வுடன் எழுதி வந்தார். 1916-இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியை உருவாக்குவதில் முப்பெரும் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள், தெலுங்கரான பிட்டி தியாகராயரும், மலையாளியான டாக்டர். டி.எம்.நாயர் அவர்களும், தமிழரான சி.நடேச முதலியார் அவர்களும் ஆவர்.
டாக்டர். நாயர் திறமை மிக்க மருத்துவர். சீனிவாச சாஸ்திரி, அன்னிபெசண்ட் போன் றோருக்கு இணையான ஆங்கிலப் புலமை உடையவர், சீரிய எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் அவரது புகழ்வாய்ந்த ஸ்பர்டாங்க் சாலைப் பேருரை வைதீகக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டிய ஒன்றாகும். சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரான அவர் திராவிடர் மேம்பாட்டுக்காக தமது பொருளை இழந்து, உயிரையும் விட்டவர். 1919 ஆண்டு இந்திய அரசுச் சட்டப்படி, சென்னை ராஜ தானியில் இரட்டையாட்சி அறிமுகமானது. பிராமணரல்லதாருக்குப் போதுமான இடங்கள் சட்டமன்றத்தில் கிடைப்பதற்கும், சென்னை ராஜதானியில் திராவிடர் அரசியல் இயக்கம் எழுச்சி அடைவதற்கும் நாயர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவை.
இது போன்றே இந்தியத் துணைக் கணடத்தில் 1920 களில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வலிமையாகச் செயல் பட்டதும் திராவிடப் பகுதியான சென்னை ராஜதானியில்தான். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றோருடன், மலையாளிகளான இ.எம். சங்கரன் நம் பூதிரிப்பாடு, ஏ.கே.கோபாலன் போன்றோரும் சென்னை ராஜதானியில் பொதுவுடைமைப் பாட்டாளிகளுக்கான போராட்டங்களை நடத்தியிருந்தனர். விடுதலைக்குப் பின் நடந்த முதல் தேர்தலில் அண்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் பிரதான எதிர்க் கட்சியாக உருவெடுத்தது.
திராவிட மண்ணான தமிழக-கேரளா மாநிலங்களில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தழைத்துத் தொடர்ந்து வரும் பொதுமையான திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் இரு மாநிலத்தவருக்கும் பொது மையான அரசியல், சமூக, பண்பாட்டு நோக்கங்களைத் தந்துள்ளன. கடந்த காலத்தில் வர்ண பேதங்களால் ஏற்பட்ட சமூகச் சீரழி வுகள் மூட நம்பிக்கைகளால், சம்பிரதாயங் களால் உருவான அவலங்கள், வைதீகத்தால், பிராமணீயத்தால் ஏற்பட்டவையே.
வைதீகத்தால் வீழ்ந்திருந்த நாம் திரா விடத்தால், திராவிட உணர்வால், திராவிட  விழுமியங்களால் எழுச்சி பெற் றிருக்கிறோம். இனியும் எழுச்சி பெற முடியும்.
இதுவரை ஏற்பட்ட மாற்றங்களால் திருப்தி அடைந்து விட முடியாது. இனியும் மாற் றங்கள் தேவைப்படுகின்றன. நவீன, முன் னேறிய சமூகமாக நாம் வலுப் பெறுவதற்கு திராவிடப் பண்பாட்டுப் புரிதல்கள் உதவும்.
மக்களாட்சி செம்மைப்பட மொழிவாரி மாநிலங்காக தமிழகமும் கேரளமும் இன்றுள்ளன. ஒரே மாநிலமாக இருந்தவை இன்று இரு அண்டை மாநிலங்களாக ஆகி விட்டன. மொழி என்பவை இரண்டானாலும் பண்பாட்டால், வரலாற்று அனுபவத்தால் நாம் ஒரே திராவிடக் குடும்பம்தான் என்ற உணர்வும், அதனடிப்படையிலான சிந்தனை களும், செயல்பாடுகளும் இரு மொழியினருக் கும் செழிப்பைத் தரும்.
“மொழிவழி பிரிந்து இனவழி இணை வோம்."
என்ற பேரறிஞர் அண்ணாவின் விருப் பத்தை நாம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்த உணர்வும், புரிதலும் மேன்மேலும் வலுப்பெற்றால் அது திராவிட ஒற்றுமை மட்டுமல்ல, நவீன இந்தியாவின் ஒற்றுமைக்கும் உர மூட்டுவதாகி விடும்.
இத்தகைய திராவிடப் புரிதலை, திராவிட உணர்வை வளர்ப்பதற்காக திராவிட மொழி அறிஞர்களும், சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும் இனியும் முனைப்புடன் செயல்படுமென எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தைப் போல கேரளமும் அடிப் படையில் ஒரு திராவிட பூமியே என்பதற்கான மற்றொரு சான்று அங்குள்ள ஊர்ப் பெயர்களாகும். மலையாள மாநிலத்தில் உள்ள இடப் பெயர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை தூய தமிழ்/திராவிடப் பெயர்களே. புரம்' ‘ஷேத்ரம்’ ‘நகர்’ போன்று முடிகின்ற பெயர்களும் ஸ்ரீ என்பனவற்றை முதன்மையாகக் கொண்டு வருகின்ற பெயர்களும் மிகக் குறைவே. அத்தகைய பெயர்களும் இடைக்காலத்தில் திரிபு செய்யப்பட்டவை. அல்லது சமீப காலத்தில் உருவான குடியிருப்புகள்.
எழில் மலை யை 'எலி மலையாக்கி, பின்னர் அதனை மூஷிக பர்வதம்' என சமஸ்கிருதப் படுத்துகின்ற கேலிக்குரிய திரிபுகள், வைதீகத்தின் விஷமங்களே  மொழியியலார் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர். அதுபோன்ற திரிபுகளை ‘திருச்சி பேரூர்’ என்னும் தமிழ்ப் பெயர் த்ரி-சிவப்-பேரூர் என்றும் திருப்பொறையார் என்பதை த்ரிபொறையார்' என்பதிலும் காண்கிறோம்.
‘திரு' என்ற தூய தமிழில் துவங்கும் ஊர்ப் பெயர்கள்
(எ-டு) திருவனந்தபுரம், திரூரங்ஙாடி
‘சேரி’ என்று முடியும் ஊர்கள் (தலைச்சேரி)
‘காடு' என்று முடிபவை (பாலக்காடு, மண்ணார்க்காடு, கண்ணங்காடு)
‘கோடு’ (குன்று) என்று முடிபவை (நந்தன்கோடு, கோழிக்கோடு, கொல்லங் கோடு)
தலை' என்று உள்ளவை (மண்ணந்தல, சேர்த்தல)
‘கரை' என்று முடிபவை (நெய்யாற்றின் கரை)
‘புழை' என்று முடிபவை (ஆலப்புழை, அம்பலப்புழை, மூவாற்றுபுழை)
‘பாறை' என்று முடிபவை (கோழிப்பாற, கொழிஞ்ஞாம் பாற)
‘ஊர்' என்று உள்ளவை (அடூர், கொடுங் கல்லூர், கண்ணுர்)
‘காவு' என்று (தோப்பு அல்லது காடு என்று பொருள்) வட்டியூர்க் காவு
‘பறம்பு' (தளிப்பறம்பு)
‘அங்காடி’ (திரூர் அங்ஙாடி)
‘துருத்தி’ (முளந்துருத்தி)
புறம் (சமஸ்கிருத புரம் அல்ல) குற்றிப் புறம்
இவ்வாறு பெரும்பாலான இடப் பெயர்கள், மலை-காடு-ஆறுகளைச் சுட்டும் பெயர்கள் தமிழ் திராவிட மூலமுடையவை என்பது கேரளம் தமிழகத்தைப் போன்று, தொன்மையாலும், பண்பாட்டாலும் திரா விடப் பகுதியாகவே இன்றளவும் உள்ளது என்பதைத் தெளிபடுத்துபவையாகும்.
-நிறைவு-
-விடுதலை ஞா.ம.,3.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக