வெள்ளி, 29 நவம்பர், 2024

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை

 ஞாயிறு மலர்

அடையாளம் காணப்பட்ட சிந்து சமவெளி-பாணன்


விடுதலை நாள 
ஞாயிறு மலர்

திராவிட நாகரிகத்தின் 100ஆம் ஆண்டு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை  கிராமங்களில் சிந்துவெளி திராவிட நாகரீகம்

நாம் இதுவரை பண்பட்ட நாகரீக நகரங்களாக இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா, மொகஞ்சதாரா. ராஹிகரி மற்றும் தொலவீர என்பவற்றைத்தான் பார்த்திருக்கிறோம்.

மொசபடோமியாவில் (இன்றைய ஈராக்) அகழாய்வு செய்து ஜெர்மன் கொண்டு சென்ற சில (பண்ட்லிப்பி) களிமண் எழுத்துகளில் இருந்து எடுத்த தகவலின் படி சிந்துச்சமவெளி திராவிட நாகரீகத்தின் நகரங்களில் ஒரு லட்சம் முதல் லட்சத்து எண்பதாயிரம் பேர் வரை வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.

இந்த மக்களுக்கான உணவுத்தேவை வயலில் இருந்து வந்திருக்கவேண்டும், வெறும் உணவுத்தேவை என்பது மட்டுமல்ல, இன்றும் நகரங்களில் கிடைக்காத பல பொருட்கள் தூரக் கிராமங்களில் இருந்துதான், வருகிறது.

மெசபடோமியா குறித்த பதிவுகளில் சிந்து திராவிட நாகரீகப் பகுதிகளில் இருந்து மயிற்தோகை, யானைத்தந்தம், மசாலாப் பொருட்கள், பட்டு நூல்கள், பருத்தி ஆடைகள், அரிசி, பார்லி, கம்பு, கேள்வரகு, பால் பொருட்கள் ஆடு, மாடு, எரிப்பதற்கு மரக்கட்டைகள் என 80 விழுக்காடு பொருட்களுக்கு நகர மக்கள் கிராமங்களை நம்பித்தான் இருந்தனர்.

அப்படி என்றால் நாகரிக நகரங்களை மட்டுமே பேசும் நாம், சிந்துவெளி திராவிடச் சமூக மக்களின் கிராமங்கள் குறித்து கவனம்

செலுத்தவில்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பே!

இன்றுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா அன்று ஹிந்துகுஷ் மலைக்கு கீழான இந்தியத் தீபகற்பம் மட்டுமே.
சிந்துவெளிக்கு தெற்கே தார் பாலைவனம், அதனைக் கடந்தால் தக்காண பீடபூமி – அதற்கு கீழே தமிழ்பேசும் பகுதி – இதன் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 5000 ஆண்டுகளாக அரபிக்கடல் மார்க்கமாக வணிகம் நடந்து வந்துள்ளது.

இந்தக் கடலும் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக அமைந்தது.
கிறிஸ்துவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரகாம் மண்ணை ஆண்ட ராஜா சுலைமான் அரசவையில் கீழைத்தேய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களின் பட்டியல் பண்டைய நூல்களில் இருந்தும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதநூல்களில் இருந்தும் கிடைக்கிறது.

மொழி பெயர்ப்பு

நிலம் மற்றும் கடல் மார்க்கமாக வர்த்தகம் செய்வதற்கான மூலோபாய இடத்தின் காரணமாக பாலஸ்தீனம் ஒரு முக்கியமான மய்யமாக இருந்தது. இது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் தரைவழியாக இணைக்கிறது. எகிப்துடன் சேர்ந்து, அட்லாண்டிக் – மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடல் – இந்தியப் பெருங்கடல் நீர்வழிகளில் துறைமுகங்களைக் கொண்ட ஒரே பகுதி இதுவாகும்.
தகவல் களஞ்சியமான பிரிட்டானிக்காவில் இருந்து https://www.britannica.com/biography/Solomon.

சுலைமான் பாலஸ்தீனத்தின் வணிக விதியை நிறைவேற்றி அதனை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது பேரரசின் இயல்பு முக்கியமாக வணிகமாக இருந்தது. மேலும் அது அவருக்கும் நட்பு ஆட்சியாளர்களுக்கும் நிலம் மற்றும் கடல் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்க உதவியது. சாலமன் ஆட்சியில் குறிப்பாகக் கொண்டாடப்பட்ட ஒரு அத்தியாயம் அவர் வருகை – ஷெபாவின் ராணி, அதன் செல்வந்த தெற்கு அரேபிய இராச்சியம் செங்கடல் பாதையில் இந்தியப் பெருங்கடலுக்குள் இருந்தது. சாலமனுக்கு அவரது வர்த்தக வலையமைப்பைப் பராமரிக்க அவரது தயாரிப்புகள் மற்றும் அவரது வர்த்தக வழிகள் தேவைப்பட்டன, மேலும் அவரது பாலஸ்தீனிய துறைமுகங்கள் வழியாக மத்தியதரைக் கடலில் தனது பொருட்களை சந்தைப்படுத்த சாலமனின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

அதாவது சிந்து வெளி திராவிட நாகரீகத்தின் தொடர்ச்சி தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்த பிறகான ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தீபகற்பத்தில் தெற்கில் இருந்து(இன்றைய தமிழ்நாடு கேரளா, கருநாடகா மேற்குப் பகுதி) பொருட்கள் தொடர்ந்து சென்றது மேலே கூறிய பதிவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,000 ஆண்டுகளுக்கு முன்பு

சிந்துவெளி திராவிட நாகரீகம் திடீரென்று உருவாகி இருக்காது. 4000 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நகரங்கள் உருவாகிறது என்றால் அதற்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளாக கிராமங்கள் உருவாகி இருக்கவேண்டும்.

ஞாயிறு மலர்

இதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே மகாரட்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆரவல்லி மலைத்தொடரில் நடந்துள்ளது. ஆனால், கீழடி போல் மிகவும் நுட்பமாக நடக்கவில்லை.

கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம்.
காதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் ‘கோட்டா திம்பா’ என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்துவந்தனர்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள அய்.அய்.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப் பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிறு மலர்

நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.
நில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், அது வளம் மிக்க மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.

“சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலா விரா ஒரு பன்னாட்டு வர்த்தக நகராகவும் இருந்துள்ளது.”

“தோலா விரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது.”

ஞாயிறு மலர்

“பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர்.”

“தோலா விரா நகரின் இரு பக்கங்களிலிலும் மான்சர் மற்றும் மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.”

“நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசை திரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர் தேவைகளை சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்.”

கட்ச் பகுதியில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின், இன்றைய குஜராத்தில் அமைந்துள்ள, கிராமங்கள் இருந்த பகுதிகள் ஆகும். இக்கிராமங்கள் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அரியானாவில் உள்ள “ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழைமையானது என்பதை உணர்த்துகிறது.”

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், டில்லியிலிருந்து வடமேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.

105 எக்டேர் பரப்பளவு கொண்ட இராக்கிகடி பகுதி நீர்வளமும் நிலவளமும் அதிகம் உள்ள பகுதி ஒருபுறம் சட்லஜ் மறுபக்கம் யமுனா, கிளைநதியான காகர் ஹக்ரா போன்றவை ஓடியதால் நிலத்தடி நீர் எப்போதும் குறையாமல் இன்றும் உள்ளது. அதே போல் மூன்று நதிகளின் வண்டல்களும் இப்பகுதியில் படிந்து மண்ணை வளமாக்கி உள்ளது.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய இராக்கிகடி தொல்லியல் களம் கி.மு. 6420 – 6230 மற்றும் கி.மு. 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கி.மு. 2600 – 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் அரசால் வெளியிடப்படுகிறது.

மே, 2012இல் இராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகாளவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.

இத்தொல்லியல் களத்திற்கு அருகே காளிபங்கான் குணால், பாலு மற்றும் பிரானா போன்ற சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளன.

சிந்துசமவெளி திராவிட நாகரீகத்தின்

மத்திய இந்திய கிராமங்கள் தைமாபாத் (Daimabad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில், சிறீராம்பூர் வருவாய் வட்டத்தில், கோதாவரி ஆற்றின் துணை ஆறானா பிரவரா ஆறு பாயும் தொல்லியல் களமும், கிராமமும் ஆகும்.

இத்தொல்லியல் களத்தை முதலில் 1958-இல் பி.ஆர்.போபார்திகர் கண்டுபிடித்தார். பின்னர் 1958-1959 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தைமாபாத் தொல்லியல் களத்தை மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. இறுதியாக 1975-1976 மற்றும் 1978-1979 ஆண்டுகளிலும் தைமாபாத் தொல்லியல் களத்தை எஸ்.ஏ.சாலி தலைமையில் ஆய்வு செய்தனர்.

தைமாபாத் தொல்லியல் களத்தின் தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் அவைகள் தக்காண பீடபூமி வரை பரந்திருந்த பிந்தைய அரப்பா காலப் பண்பாட்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது. தைமாபாத் தொல்லியல் அகழாய்வில் பிந்தைய அரப்பா பண்பாடு , சவல்தா பண்பாடு தைமாபாத் பண்பாடு, மால்வா பண்பாடு மற்றும் ஜோர்வே பண்பாட்டுக் காலங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொல்லியல் களத்தில் பிந்தைய அரப்பா பண்பாட்டுக் காலத்திய இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் சிற்பம், 45 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

சங்கனக்கல்லு என்பது கற்காலம் (கி.மு. 3000) பழைமையான தொல்பொருள் தளமாகும். இது கிழக்கு கருநாடகாவில் உள்ள பெல்லாரியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிந்துச்சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியில் தென் இந்தியாவில் முதலில் வரும் முக்கிய பகுதியாகும். தென்னிந்தியாவின் ஆரம்பகால குடியிருப்புகளில் ஒன்றாகும்,

இது 1,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. சங்கனகல்லு மற்றும் குப்கலில் பரவிய சிவப்பு – பழுப்பு படிம மண் அடுக்கு உள்ளது. இது கி.மு.5000க்கு முந்தையது. மேற்பரப்பின் அகழ்வாராய்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான மட்பாண்டங்கள், கல் அச்சுகள் மற்றும் பிற கற்கால கருவிகள் வெளிப்பட்டதால் இந்த தளம் புதிய கற்கால தொழிற்சாலை தளமாக கருதப்படுகிறது.

சன்னாரசம்மா மலையில் பெண்டாப்புடி சுப்பாராவ் என்பவரால் 1946ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த இடம் பெருமளவில் தோண்டப்பட்டது. சுப்பாராவ் அவர்களின் கலாச்சாரத்தை 3 கட்டங்களாகப் பிரித்தார்: சங்கனக்கல்லு முதன்முதலில் குடியேறிய கிராமம் – இங்கு செங்கலால் ஆன கீழடியில் கிடைத்த சிவப்பு கருப்பு மட்பாண்டங்கள் கிடைத்தது.

இங்கு கிடைத்த மட்பாண்டங்கள் மிகவும் நன்றாகவும், மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருந்தன. ஒரு சில பானைகளில் துளையிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் சில மண்பாண்டங்களில் உள்ள துளைகள் அப்பாத்திரத்தில் வைக்கும் உணவுப்பொருள் கெட்டுப்போகமல் இருப்பதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரியவந்தது.

சங்கனகல்லுவில் குடியேறிய மக்கள் ஆரம்பகால விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் சிறு தினை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டனர். அவர்கள் ஆடு, மாடுகளை பராமரித்து, சாணத்தை (சாம்பல் மேடுகள்) கொட்டுவதற்கு தனி இடங்களை வைத்திருந்தனர்.


புதன், 23 அக்டோபர், 2024

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

 


ஜனவரி 16-31

இதுவரையில் திராவிட மாயை, திராவிடப் புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் – அதுவே நாம் வெற்றி பெற்றிருக் கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி.

சென்னை பெரியார் திடல், திராவிட இயக்கத்தின் தலைமைப் பீடம். அங்கிருந்துதான் பெரியாரின் கொள்கைப் போர்வாள் கி.வீரமணி அவர்களின் போர் முழக்கம் இன எதிரிகளின் புரட்டு நூலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது. வரலாறு இல்லாத ஆரியக் கும்பல் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதிவைத்து, அதற்கு கடவுள் வண்ணம் பூசி, புராணங்களாக்கி, மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தது. பெரியார் ஏந்திய அறிவாயுதம் அந்த மடமையை மாய்த்தது. அறியாமையை விலக்கி அறிவை விதைத்தது. அதன் பின்னர் புதிய புராணங்களைப் புளுக முடியாத ஆரியம் வரலாற்றுப் புரட்டைச் செய்யத் தொடங்கியது. அதன் ஒரு திட்டமிட்ட புரட்டாக வெளிவந்துள்ள “உடையும் இந்தியா?ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்று நூலின் பொய்யுரைகளைத் தோலுரித்த நிகழ்வில்தான் அப்படிப் பேசினார் ஆசிரியர் கி.வீரமணி.

உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? என்ற அந்த நிகழ்வில் திராவிட இனத்தின் தொன்மையை அறிஞர்களின் மேற்கோளுடன் எடுத்துக் காட்டி அரிய உரையை நிகழ்த்தினார். உடையும் இந்தியா? என்ற இந்த நூலில் பக்கம் 122-ல் சொல்லப்பட்டிருக்கிற செய்தியைப் படிக்கின்றேன்.

ராபர்ட் கால்டுவெல்லின்- பிராமண வெறுப்பே பின்னா ளைய திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பியலின் அடிப் படையாக இருந்தது.

ராபர்ட் கால்டுவெல்லின் வெறுப்பைத் தான் திராவிட இயக்கமாக உருவாக்கியிருக் கிறார்கள் என்று சொல்லு கின்றார்கள். எனக் கூறிய கி.வீரமணி, அப்படியானால், கபிலர் யார்? ராபர்ட்  கால்டுவெல்லுக்கு முந்தியவரா? பிந்தியவரா?

கபிலருடைய பாடலை சாதாரணமாகப் பாடும்பொழுது சொல்வார்கள்,
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்!
… … …
நால்வகை ஜாதியை
இந்நாட்டில் நாட்டினீர்
என்று வரிசையாக பாடல் வரும்.

பற்பல நாட்டிலும் பார்ப்பனர் இல்லையோ என்றுதான் முடியும் எனக் கூறினார்.

திராவிடம் என்ற வார்த்தையைக் கால்டுவெல் தான் பரப்பினார் எனக் கூறும் புரட்டை மறுத்து, மனுதர்மத்தில் இருந்தே திராவிடம் என்ற வார்த்தைக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,
-சுலோகம் 43-ல்

பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.

சுலோகம் 44ல்
பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்
இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்
மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பார்ப்பான் என்ற சொல்லைத் தவிர பிராமணன் என்ற சொல் வரவில்லை.

இது தமிழ் இலக்கியமல்ல. மனுதர்ம சாஸ்திரம். இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனுதர்மத்தில் என்ன சொல்லு கிறது? பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம் சகம், பாரதம்.

இவைகளை எல்லாம் ஆண்டவர்கள் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.
மனுதர்மம் சுலோகம் 45ல்

உலகத்தில் நான்கு வருணத்தா ருக்கும் சங்கர சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும் சிலர் சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.

ஆகினும் அனைவரும் தஸ்யூக்க ளென்று சொல்லப்படுவார்கள்.

கீழ்ஜாதிக்காரன் தப்பித் தவறி சமஸ்கிருதம் படித்திருந்தால்கூட அவர்கள் யார் என்றால், அவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று மனுதர்மம் சொல்வதை எடுத்துக் காட்டி, திராவிடம் என்ற ஒரு நிலப்பிரிவு இருந்ததையும் ஆரியர்கள் உருவாக்கிய நால்வருண ஜாதி முறையையும் அவர்களே ஒப்புக்கொண்டதை  நிறுவினார்.

ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலின் 1079 பக்கத்தில் தேசம் என்ற தலைப்பில்
இந்த நாட்டில் 56 தேசங்கள் இருந்திருக் கிறது என்ற குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அதில் திராவிடம் என்பதும் ஒன்று! என்பதையும் எடுத்துக்காட்டினார்.

இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து கவலைப் படுவது போல பாவனை செய்வோர் மேற்கு வங்கத்தில் முதன்முதலில் சிராஜ் யுத்தவலாவை அழைத்து வந்து வெள்ளைக் காரனுக்குக் காட்டிக் கொடுத்தது உமீன்சந்த் என்ற பார்ப்பனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் அய்ரோப்பியர் ஆதிக்கத் திற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்கள்தான். இவ்வளவு பெரிய தீமைக்கு வித்திட்டவன் யார்? புஷ்ய மித்திர சுங்கன் எப்படி மவுரிய சாம்ராஜ்ஜியத்தையே அழித்தான்? எத்தனை கொலை? எத்தனை கொள்ளை? இப்படி வரலாற்றில் வரிசையாக சொல்லிக் கொண்டு போகலாம். அதுமட்டுமல்ல, மனுதர்மத்தை மட்டும் விளக்கிச் சொன்னால் ஏராளம் சொல்லலாம் என்று கூறியவர் பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு நூலில் திராவிடம் என்றால் திராவிடர்கள் இருந்த இடம் என்.று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

இவற்றை ஆரிய திராவிடப் புரட்டு என்று எழுதுகிறவர்கள் மறைப்பது ஏன்-?

மேலும் அதே தமிழர் வரலாறு பக்கம் 91 இல் உள்ளதாவது:

ரிக் வேதம் X  61.8

சரத்பாதா ந தட்சிணா பராவ்ர்ண் ந தா ங மே பர்சந்யோ ஜக்ர்ப்ரே என்பதில் வரும் தட்சிணா தென்னாட் டையே குறித்ததாக மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது சரியல்ல).

அய்த்தரேய பிராமணத்தில் VII -18 தனது 50 மகன்களையும், விசுவாமித்திரர் (கி.மு.2500) சபிக்கும்பொழுது அவர்கள் வாரிசுகள் (ஆரிய வர்த்த) எல்லைக்கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர, சபா, புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச் சபிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது .

பிற்கால மனுஸ்மிருதியும் (இது மனுஸ்மிருதிக்கு முன்னாலே) (1122,44) இமயமலைக்கும், விந்திய மலைக்கும் நடுவில் உள்ளதும், கருநிறமான மானின் வாழ்விடமும் ஆன பகுதியே ஆரிய வர்த்தம் என்கிறது. இதை எழுதியது யார் பி.டி. சீனிவாச அய்யங்கார். பெரியார் அல்ல என்று கி.வீரமணி எடுத்துரைத்தார்.

தட்சிண பாதா, தக்க்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண, பண்டைக் காலத்தில் தட்சிண என்பது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியா முழுவதை யும் குறித்தது. பிற்கால முகமதியர்களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும் தான். தக்கணம் என்பதை தக்கண பீட பூமியை மட்டும் (தமிழகம் நீங்கலாக) குறிக்கப் பயன்படுத்தினர் தமிழ்த்தென்றல் திரு.வி.க-. சொல்லுகிறார் திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்தில் திராவிடர் களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம் குறிக்கப்பட் டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு அய்ந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த  சபாபதி நாவலர் என்கிற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகா என்னும் நூலிலும், திராவிடம் என்ற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளதையும், இன்று இந்த நாட்டின் தேசிய பாட்டாக வழங்கி வரும் ஜனகனமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உத்கலவங்கா என்று சொல்லியிருக்கின்றாரா இல்லையா?

தேசிய கீதத்திலேயே திராவிடம் இடம்பெற் றிருக்கிறதா இல்லையா? என்று திரு.வி.க கேட்டதையும் எடுத்துரைத்தார்.

ஆகவே திராவிடம் என்பது கற்பனை இல்லை என்று சொல்லுவதற்கு மனு தர்மத்தையே சுட்டிக் காட்டுகிறோம்.. அப்புறம் என்ன கால்டு வெல்?

கால்டுவெல்லிடமிருந்து கரு எடுத்துக் கொண்டார் என்று சொன்னால், மனு யார்? கால்டு வெல்லுக்கு மச்சானா? நாங்கள் மட்டுமல்ல.. வருகிற தலைமுறையினர் கேட்க மாட்டார்களா? நடுநியைளர்கள் சிந்திக்க வேண்டாமா? மனுவுக்கும் கால்டுவெல்லுக்கும் என்ன தொடர்பு?- என்ன ஒற்றுமை?

திராவிடர் என்று நாம் சொல்லுவது இருக்கிறதே அது பண்பாட்டை நமது பழக்க வழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர இந்த காலத்தில் யாரும் ரத்த ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு பார்க்கத் தயாராக இல்லை.

ரத்தப் பரிசோதனை நடத்தி பிரிப்பதில்லை

யாருடைய ரத்தம் யாருக்கு வேண்டு மானாலும் கொடுக் கலாம். எந்த ரத்த குரூப் உள்ளவனோ அவருக்கு அந்த குரூப் ரத்தம் பொருந்தும். அது யாராக இருந்தாலும் சரி. உலகப் பூராவும் அறிவியல் பூர்வமாக ரத்தத்தைப்  பிரித்திருக்கிறார்கள்.

அதனால் ஆரியம்- திராவிடம் என்று நாங்கள் பிரிக்கும் பொழுது ரத்த பரிசோதனை நடத்திப் பிரிப்பதில்லை. ஆரிய மனப்பான்மையும், பார்ப் பனீயத் தன்மையும் எப்படி இருக்கிறது? என்று கி.வீரமணி ஆதாரங்களை அடுக்கினார்.

நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு 34ஆவது தொகுதி அதாவது 1945 குடிஅரசில் திராவிடர் வார்த்தை விளக்கம் என்று பெரிய தலையங் கத்தை தந்தை பெரியார் எழுதியிருக் கின்றார்.

அதிகாரப் பூர்வமாக அதில் பல செய்திகளை தந்தை பெரியார் சொல்லு கின்றார்.

அதிலே ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய் விட்டது. பிரிக்க முடியாதது. ரத்தப் பரீட்சையாலும் வேறு படுத்த முடியாது என்று ஒரு சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். (பெரியார் சொல்லுகிறார்) ஆரிய, திராவிடர் ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய- திராவிட ஆச்சார, அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? ஏன் இன்னமும் தமிழ் ஆண்டு வேண்டும் என்று கேட்டால் ஏன் பார்ப்பனீயம் சங்கடப்படுகிறது?

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன். பிரம்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன் வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன்  என்று எழுதி வைத்து இன்றும் அது மனுதர்மத்தில் இருக்கிறதா இல்லையா? இதை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர், 1940-லிருந்து இது போன்ற கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய  Bunch of Thoughts என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தத்துவார்த்த விளக்க நூலில் இந்தக் கருத்து இருக்கிறது.

Bunch of Thoughts என்ற புத்தகமும் உடையும் இந்தியா? என்ற புத்தகமும் ஒன்றுதான்.  அது பழைய வடிவம்; இது புதிய வடிவம் அவ்வளவுதான்.

இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவன் வெள்ளைக் காரன். இந்த நாட்டை பிரிவுபடுத்திய ஆரியன், ஜாதியிலே பிரித்து வைத்தான். ஆனால் நாங்கள் பிரிவினை கூடாது மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் இன்னமும் பூணூல் போட்டிருக்கிறீர்களே! நீங்கள் பிரிவினைக் காரர்களா? அல்லது நாங்கள் பிரிவினைக் காரர்களா? இப்பொழுது சொல்லட்டும் உடைப்பது நீங்களா? அல்லது நாங்களா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் படிப்பது குருஜி கோல்வால்கர் நூல். The Bunch of Thoughts என்பதன் மொழிபெயர்ப்பு. நம் தாய்நாட்டுப் புதல்வர்கள் என்ற பகுதியில் உள்ள முக்கியமானதைப் படிக்கின்றேன். புனிதமான நமது தாய்நாட்டில் தொன்றுதொட்டு இந்து என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும் நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்துஎன்பது உங்களுடைய பெயரா? உன் எதிரி உன்னை வெறுப்பதற்காக உன்னை அடையாளப்படுத்துவதற்காக அவன் கொடுத்த பெயர்.

வெறுக்கத்தகுந்தது என்று நான் சொல்ல வில்லை. சட்டபூர்வமாக கோட் செய்து நீங்கள் ஆதாரம் கேட்பீர்களேயானால் வழக்கறிஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். மைக்கேல் X வெங்கடேசுவரன் இருவருக்கும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்  நீதிபதி பி.வி.ராஜமன்னார் கொடுத்த தீர்ப்பு இருக்கிறது. அதில், இந்து என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூற முடியாது. எந்த மொழியிலிருந்து இந்து என்ற சொல் பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது?

இது  இந்திய பிறப்பிலிருந்தும் வந்த வார்த்தை அல்ல.என்று கூறப்பட்டது.

தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இந்து என்கிற பெயர் அந்நியன் நமக்கு வைத்த பெயர். இந்த மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது. சொல்லுவது யார்? சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்.
மனுதர்மத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் 19 ஆவது சுலோகம் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்திலும் யார் யார் வாசித்தார்கள். என்னென்ன பெயர் அந்தப் பகுதிக்கு இருந்தது என்பதை மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி அந்த கருத்துகளை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மனுதர்மத்தில் 17 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதை படிக்கின்றேன்.

சரஸ்வதி யென்னும் திருஷத்து
வதி என்னும் தேவ நதிகளுடைய மத்தியப் பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மா வர்த்ததேசமென்று சொல்லப்படும்.

சுலோகம் 18:

அந்தத் தேசத்தில் பெரியோர் கள் எப்போதும் வசிக்கின்றமை யால் பிராமணாதி வருணத்தா ருக்கும் சங்கர சாதிகளுக்கும் சிஷ்டாசாரமானது அநாதியா யவ் விடத்தினின்று முண்டாகிறது.

(சங்கரஜாதி என்றால் கீழ்ஜாதி கல்பில் வந்தவர்கள்)
சுலோகம் 19:
மச்சதேசம் பாஞ்சால தேசம்-
வடமதுரை இதுகள் பிரம்ம
ரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிர்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சங் குறைந்திருக்கின்றன.

சுலோகம் 20:

இந்தத் தேசங்களில் பிறந்த பிராமண னிடத்தினின்றும் சகலரும் தன்தன் தருமங் களையறிந்து கொள்ளக் கடவர்கள்.

சுலோகம் 21:

இ மோர்ப்பர்வதத்திற்கும்
விஞ்சை பர்வதத்திற்கும்-
நடுவாயும் சரஸ்வதி நதி-

மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இட மானது மத்திய தேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 22:

கிழக்கு சமுத்திரந் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப் பிரதேசமானது சாதுக்கள் வசிக்கிற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 24:

கிருஷ்ண சாரமென்னுமானானது எந்த விடத்தில் சுபாவமாய் சஞ்சரிக்கின்றதோ  அந்தவிடந்தான் யாகஞ் செய்தற் குறியது மற்ற விடம் அசுத்தமான மிலேச்ச தேசமென்று சொல்லப்படும்.
இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலைவிட வேறு விர்த்தியை எந்தவிடத் திலடைய மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத்தக்கது.

சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். இப்படியெல்லாம் மனுதர்மம் சொல்லுகிறது.

சூத்திரன் அவன் சம்பாதித்த பொருளாக இருந்தாலும், அதை அடித்தும் நாம் (பார்ப்பனர்கள்) எடுத்துக்கொள்ளலாம். மனுதர்மத்தில் இருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி, ஆரிய திராவிடப் புரட்டு என்று அப்பட்டமாகப் புளுகுவதைத் தோலுரித்தார்.

இந்த நூலில் முக்கியமாக இன்னொரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. திருக்குறளை இந்து மத நூல் எனத் திரித்ததாகும்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனிதநேய சிந்தனையை உலகுக்குத் தந்த தமிழ்மறையான திருக்குறளை வெட்கமில்லாமல் இந்து நூல் என்று திரிபுவாதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆரிய தர்மமான மனுதர்மம் பிறப்பில் பேதம் கற்பிக்கிறது. தமிழ் மறையான திருக்குறள் பிறப்பில் பேதம் இல்லை என்கிறது. இரண்டையும் இந்து மத நூல்கள் என்று சொல்ல எத்தர்களான ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?

இந்து என்ற வார்த்தையே இந்தியாவிலுள்ள எந்த மொழியையும் சேர்ந்ததல்ல. அது ஒரு பாரசீகச்  சொல். உண்மை இப்படியிருக்க தமிழ்இந்து என்று ஒரு புதிய புளுகுப் பிரச்சாரத்தை உடையும் இந்தியா நூலிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொண்டு ஊதிப் பெரிதாகக் காட்டப்படும் இந்த ஆரிய பலூனை உண்மை என்ற திராவிட ஊசி மூலம் உடைத்து நொறுக்க பெரியாரியம் தயாராகி விட்டது. வெளிப்படையாக தமது உயர் ஜாதி மனநிலையை அடியோடு விட்டுவிட்டு மனிதர்களாகத் தம்மை ஆரியம் காட்டிக் கொள்ளும் காலம் வரும் வரை இத்தகைய திரிபுவாதங்களுக்கும், பொய்யுரை களுக்கும், புரட்டுகளுக்கும் பெரியார் திடலிலிருந்து பதிலடி வந்து கொண்டேயிருக்கும். – பெரியாரிடி

குறிப்பு: இந்துத்துவத் திரிபுவாதங்களை முறியடிக்கும் ஆதாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் அடங்கிய விரிவான நூல் தயாராகிக் கொண் டிருக்கிறது, விரைவில் மக்களின் சிந்தனைக்கு வழங்கப்படவுள்ளது.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்களா..? - எதிர்வினை (112)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (112)


 டிசம்பர் 1-15 2022

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்களா..?
நேயன்

ஆரியர்கள் இந்தியாவின் மீது படை
யெடுத்து வந்து, தாசர்களையும், தசியுக்களையும் வெற்றி கொண்டு அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் ரிக் வேதத்திலுள்ள சில செய்யுட் பகுதிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இந்தச் செய்யுள் பத்திகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தச் செய்யுள்களைக் கருத்திற் கொள்ளாமல், வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது ஆரியர்கள் படையெடுத்தார்கள், இங்குள்ள ஆரியரல்லாத சுதேச குலமரபுக் குழுக்களை வெற்றி கொண்டார்கள் என்ற கோட்பாட்டை நிலை நாட்டிட முயல்வது முற்றிலும் பயனற்றதாகும். நான் மேலே குறிப்பிட்ட ரிக் வேதப் பாசுரங்களைக் கீழே தருகிறேன்:
1. ரிக்வேதம், vi: 33.3 – “இந்திரா, எங்களு
டைய இரு பகைவர்களான தாசர்களையும், ஆரியர்களையும் நீ கொன்று விட்டாய்.”
2. ரிக்வேதம், vi: 60.3. – “நன்னெறியையும் நியாயத்தையும் நேர்மையையும் பாதுகாக்கும் ஓ, இந்திரா மற்றும் அக்னி! எங்களுக்குத் தீங்கிழைக்கும் தாசர்களையும் ஆரியர்களையும் அடக்கி ஒடுக்குவீர்களாக.”
3. ரிக் வேதம், vii.81.1. -“சுதாசனின் எதிரிகளான தாசர்களையும் ஆரியர்களையும் இந்திரனும் வருணனும் கொன்று, சுதாசனை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள்!”
4. ரிக் வேதம், X 38.3. -“ஓ, இந்திரா! ஈவுஇரக்கமற்ற கொடியவர்களான ராட்சதர்
களிடமிருந்தும் சிந்து நதி தீரங்களில் வதியும்
ஆரியர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றி-னாய்; இதேபோன்று தாசர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து எங்களைக் காப்பாற்று-வாயாக.
5. ரிக் வேதம், X. 38.3. -“பெரிதும் பூசித்துப்
போற்றுதற்குரிய ஓ இந்திரா! சமயப் பற்றற்ற-வர்களும், எங்களுடைய பகைவர்களுமான தாசர்களையும் ஆரியர்களையும் நாங்கள் அடக்குவதற்கு அருள்பாலிப்பாயாக. உனது துணையுடன் அவர்களைக் கொன்று தீர்ப்போம்.
6. ரிக் வேதம், X. 86.19.-“ஓ, மாமேயு! உன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு எல்லா ஆற்றல்களையும் அருள்வாயாக. உனது உதவியுடன் எங்களுடைய ஆரியப் பகைவர்களையும் தசியு பகைவர்களையும் அழித்தொழிப்போம்.”
இந்தப் பாசுரங்களைப் படித்துவிட்டு, மேலைய கோட்பாட்டைப் பரிசீலித்துப் பார்ப்பவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடையவே செய்வர். இந்தப் பாசுரங்களை இயற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்றால், இப்பாசுரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்திலிருந்து இரண்டு வேறுபட்ட ஆரிய வகுப்பினர் இருந்து வந்திருப்பதும், அவர்கள் வேறுபட்டவர்களாக மட்டுமன்றி, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் பகைமை கொண்டவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதும் தெளிவாகிறது. இரு வகையான ஆரியர்கள் இருந்தனர் என்பது வெறும் ஊகமோ அல்லது கற்பனையோ அல்ல. இது நிதர்சன உண்மையாகும். இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

இத்தகைய முதலாவது சான்று பல்வேறு
வேதங்களின் புனிதத் தன்மையை அங்கீகரிப்-பதில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வரும் பாரபட்சமாகும். உண்மையில் இரண்டு வேதங்கள்தான் இருக்கின்றன என்பது வேதங்களைப் பற்றி ஆராய்ந்து வரும் அனைவருக்கும் தெரியும். அவை: (1) ரிக் வேதம், (2) அதர்வ வேதம். சாம வேதமும் யஜூர் வேதமும் ரிக் வேதத்தின் வேறுபட்ட வடிவங்களே அன்றி வேறல்ல. அதர்வ வேதம் ரிக் வேதத்தைப் போன்றே புனிதமானது என்பதை பிராமணர்கள் நீண்டகாலம் வரை அங்கீகரிக்கவில்லை என்பதை வேத ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிவர். இந்தப் பாரபட்சம் ஏன்? ரிக் வேதம் மட்டும் ஏன் புனிதமானதாகக் கருதப்பட்டது? அதர்வ வேதம் கீழானது என்று ஏன் எண்ணப்பட்டது? இதற்கு நான் அளிக்கக்கூடிய பதில் இதுதான்: இந்த இரண்டு வேதங்களும் இரு வேறுபட்ட ஆரிய இனத்தவர்களுடையவையாக இருந்தன; இந்த இரு பிரிவினரும் ஒன்றாக ஆனபோதுதான் அதர்வ வேதம் ரிக் வேதத்துக்கு இணையாகக் கருதப்படத் தொடங்கியது.
என் கருத்துக்கு ஆதரவான அசைக்கமுடியாத மூன்றாவது சான்றை இந்திய மக்களின் உடலமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு வழங்கியுள்ளது. இத்தகைய ஆய்வு 1901 இல் முதல் முறையாக சர் ஹெர்பர்ட் ரிஸ்லேயால் மேற்கொள்ளப்பட்டது. மண்டை ஓட்டு அமைப்புக் குறியீட்டின் அடிப்படையில் இந்திய மக்கள் பின்கண்ட நான்கு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு அவர் வந்தார்: (1) ஆரியர்கள், (2) திராவிடர்கள், (3) மங்கோலியர்கள், (4) சித்தியர்கள்.

இவர்கள் பெருவாரியாக எங்கு வாழ்கின் றனர் என்பதை நிர்ணயித்துக் கூறுமளவுக்குக்கூட அவர் சென்றார். இந்த ஆய்வு தோராயமானது. அவரது முடிவுகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பதை 1936 ஆம் ஆண்டில் டாக்டர் குஹா சோதித்துப் பார்த்தார். இந்த விஷயம் குறித்த அவரது அறிக்கை மனித இன ஆராய்ச்சித் துறையில் மிகவும் பெருமதிப்பு வாய்ந்த ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.
இந்திய மக்கள் அவர்களது மண்டை ஓடுகள் அளவுகளின்படி எங்கெங்கு பரவியிருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு டாக்டர் குஹா தயாரித்திருந்த தேசப்படம்’ இந்திய மக்களின் இன இயைபு குறித்து ஏராளமான தகவல்களை அளிக்கிறது. இந்திய மக்கள் இரண்டு இன மூலங்களைச் சேர்ந்தவர்கள்; இவர்களில் ஓர் இனத் தினர் நீண்ட தலையை உடையவர்கள்; இவர்கள் இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர்; இன்னொரு இனத்தினர் குறுகிய தலையைக் கொண்டவர்கள்; இவர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது டாக்டர் குஹா கண்டுள்ள முடிவுகளாகும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் தரும் சான்று இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இது குறித்து டாக்டர் குஹா கூறுவதாவது:

“சிந்து நதிப் பள்ளத்தாக்கு தவிர ஏனைய ஆய்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சமிச்சங்கள் மூலம் மிகக் குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன; எனினும் அக்காலத்திய இந்திய இன வரலாறு குறித்த ஒரு பரந்த, தோராயமான படப்பிடிப்பைப் பெறுவது இதன் வாயிலாக சாத்தியமாகி உள்ளது. கி.மு. 4 ஆயிரம் ஆண்டுத் தொடக்கம் முதல் நீண்ட தலையும் குறுகிய எடுப்பான மூக்கும் கொண்ட இனத்தினர் வட மேற்கு இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்று தோன்றுகிறது. அவர்களுடன் கூடவே மிகவும் திடகாத்திரமான மற்றொரு இனத்தினரும் வாழ்ந்ததைப் பார்க்கிறோம். அவர்களும் நீண்ட தலை உடையவர்கள், ஆனால், அவர்களது மண்டை ஓட்டின் கவிகை மோடு தாழ்வானது. அவர்களும் நீண்ட முகமும் குறுகிய நாசியும் கொண்டவர்கள். ஆனால், முந்தியவர்களைப் போல் அவ்வளவு உயரமில்லாதவர்கள்.

அகன்ற தலையுடன் கூடிய மூன்றாவதொரு இனத்தினரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள்
ஆர்மீனியர்களுடன் இன உறவு கொண்டவர்-களாக இருக்கக்கூடும். ஆனால், இவர்கள் பிற்காலத்தில் வந்திருக்கலாம். இவர்களது மண்டை ஓடுகளில் பெரும்பாலானவை கிடைத்த ஹரப்பா அகழ்வாய்வு இடத்தின் காலத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.”
மலைவாழ் இனத்தினர் மற்றும் மத்தியதரைக்-கடல் இனத்தினர் என்ற அடிப்படையில் பார்க்கும்போது இந்திய மக்களை இரண்டு இனமரபைச் சேர்ந்தவர்கள் எனக் கூறலாம்: (1) மத்திய தரைக்கடல் இனத்தினர், அல்லது நீண்ட தலை கொண்ட இனத்தினர்; (2) மலைவாழ் இனத்தினர் அல்லது குறுகிய தலை கொண்ட இனத்தினர்.

வியாழன், 17 அக்டோபர், 2024

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

 

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

2024 அக்டோபர் 1-15 முகப்பு கட்டுரை

இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர நாகரிக வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்களை முன்னிறுத்திய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையேச் சேரும்.

ஜான் மார்ஷல்

“சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பிய நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், வளமான எழுத்தறிவோடும் வாழ்ந்துள்ளனர்” என்ற ஜான் மார்ஷலின் கருத்து, இந்தியத் துணைக்கண்ட வரலாற்று போக்கைப் புரட்டிப்போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த அந்த ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்பதென்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது; சாலப் பொருத்தமானது. அவர் ஆய்வின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நேரத்தில் எடுத்த இம்முடிவு சிறப்பும் வாய்ந்தது.

‘இந்தியத் தொல்லியல் துறை ‘திராவிடக் கருதுகோள்’ (Dravidian Hypothesis) என்ற ஆய்வு நோக்கி நகர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் அறிவிப்புக்குப் பின்னர் நேர்ந்த மிகப் பெரிய மாற்றம் இது. ‘ஆரியர்களுக்கு முற்பட்ட தொல்குடிகள் காலத்தில், ஹிந்து மதம் என்று தற்போது அறியப்படும் கோட்பாடோ, வேறு சமயச் சிந்தனைகளோ தோன்றவில்லை. நன்றியின்பாற்பட்ட வழிபாடே பயன் கருதி செய்யப்பட்டது. அத்தகைய தொல்குடியினரின் தாய்த்தெய்வ வழிபாடு, குறிப்பாக, பூமித்தாய் வழிபாடு மிக வலுவானது; மிக ஆழமாக வேரூன்றியது. இந்தியாவிலும் சரி, வேறு எங்கும் சரி… ஆரியர்களிடம் பெண் வழிபாடு இல்லை. பெண்களை கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்குத் தாய்த்தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தியதாய் சான்றுகள் எதுவும் இல்லை’ என்றும்
ஜான் மார்ஷல் எழுதியுள்ளார்.

1924 டிசம்பரில் சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிடக் கருதுகோளைத் தெளிவாக முன்வைத்தார். 1925 தொடக்கத்தில் இதற்கு மாற்றாக இந்தோ-ஆரியக் கருதுகோள்களும் தோன்றின.

தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லியமானவை என்கிற கருத்து பரவலாக இப்போது நிலவுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் தொன்மையான மரபணுத்தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இம்மக்களுடன் ஈரானிய வேளாண், வேட்டைக்குடியினரின் குருதிக் கலப்பால் ஹரப்பா பண்பாடு உருவானது. இந்தக் ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கெனவே இங்கிருந்த தொல்தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள்தொகை உருவானது.

இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்வெளி) மேய்ச்சல் பண்பாட்டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்தொகையும் கலந்து உருவானதே.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக் கோட்டை, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்துவெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நின்று பேசுகின்றன’’ என்று தொல்லியல் அறிஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள் இப்போது கவனத்தில் கொள்ளத்தக்கவை.

சிந்து சமவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை- பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.09.2024 மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

தமிழினத் தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு! – ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு! அந்த வரிசையில் சிந்துச் சமவெளி பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் 20.9.1924. இதுதான் தமிழ் – தமிழர் பண்பாட்டுப் பெருமையை உலகம் அறிந்த நாளாகும். இதனை உலகுக்குச் சொன்னவர் ஜான் மார்ஷல். இந்திய தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் அவர். அப்படி அறிவிக்கப்பட்ட நூற்றாண்டும் இப்போது கொண்டாடப்படுகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மைகளை, சிறப்புகளை வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் எனப் பிரகடனப்படுத்திய சர்.ஜான் மார்ஷல் அவர்களின் உருவப்படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்

கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். நூற்றாண்டு தொடக்க விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், வரலாற்றுப் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் ஜெகதீசன் தொடக்கவுரை

சர்.ஜான் மார்ஷலுக்கு முன்பு வரலாற்றை கட்டி யமைத்தவர்கள் ஆரியம் கலந்த நிலையினைத் தான் உருவாக்கினர். இத்தகைய போக்கிற்கு வித்திட்டவர் வில்லியம் ஜோன்ஸ். வரலாற்றுத் துறை அறிஞர் ஏ.எல்.பாதம் போன்றவர்கள் சமஸ்கிருத ஆதிக்கப் போக்கிற்கு எதிராக உண்மைக் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பொருZளாதாரப் பேராசிரியராக விளங்கிய கில்பர்ட் ஸ்கேட்டர் இந்தியாவின் தென்பகுதி பற்றி ஆய்வு செய்து திராவிடத்தின் சிறப்பு பற்றி பதிவு செய்துள்ளார். அத்தகைய அறிஞர் பெருமக்களின் ஆய்வுப் பாரம்பரியம் தேடப்பட்டு திராவிட நாகரிகம் பற்றிய உண்மைகள் கருத்தாக்கங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்’’. இவ்வாறு பெ.ஜகதீசன் பேசினார்.

பேரா. கருணானந்தம் உரை

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம் தனது உரையில்,
வேத கால நாகரிகத்தை தூக்கிப் பிடித்திட இல்லாத வழியினை ஓடாத சரஸ்வதி நதியை வேத சரஸ்வதி நாகரிகம் என சிந்துவெளி நாகரிகத்தை திரிபு செய்திட முனைந்து வருகிறார். இதை வரலாற்று விழிப்புடன் தடுத்திட வேண்டும். சர். ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் அல்லாத (Non Aryan), ஆரியருக்கு முந்தைய (Pre Aryan) நாகரிகம் என குறிப்பிட்டார். ரிக் வேதத்தில் எந்த நாகரிகமும் குறிப்பிடப்பவில்லை. எதிரிகளை, புரங்களில் வாழ்பவர்களை குறிப்பிடுகின்றன. புரங்களில் வாழ்ந்தவர்கள் – கோட்டையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என கருதப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவுத் தொழில் செய்திட கட்டப்பட்ட தடுப்பணையை ஆரியர்கள் பூசண பாம்பு என கருதி இடிக்க முற்பட்டனர். கதை கட்டினர்.

கடல் கடந்து செல்லுதல் என்பது ஆரியத்திற்கு புறம்பானது. கடல் கடந்து வணிகம் செய்வது திராவிடம் சார்ந்தது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் முதுமொழி. ‘திராவிட’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் – இந்தியாவிற்கு மட்டும் உரியது அல்ல. கருப்பர் என்பது திராவிடர் அடையாளமே. அன்றைக்கு சிந்து சமவெளி பற்றிய மொழி அறிஞர் ஹென்றி ஹிகர்ஸ் பாதிரியார் அண்மையில் பல்கலைக்கழகத்தில் 1940களில் உரையாற்றிய பொழுது மாணவராக
இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாதிரியாரிடம் புத்தகத்தில் செய்யப்பட வேண்டிய பொழுது ‘நான் ஸ்பெயின் நாட்டு திராவிடன்’ (I am a Dravidian from Spain) என குறிப்பிட்டு கையொப்பம் இட்டாராம்.

தொடர்ந்து திராவிட நாகரிகத்தின் மேன்மை, சிறப்பு, மாற்ற முடியாத அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு க.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உரை

சிந்து வெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சர்.ஜான் மார்ஷல் அவர்களால் அறிவிக்கப்பட்டதன்
நூற்றாண்டு விழா முக்கயமானது. சர்.ஜான் மார்ஷல் அவர்களின் சிந்து வெளி குறித்த அறிக்க இந்திய வரலாற்றில் மிக முதன்மையான அங்கம். அந்த அறிக்கையின்றி இந்திய வரலாறு முழுமை பெறாது. அந்த அறிக்கையின் பதிவின்றி இந்திய வரலாற்றை ஏற்க இயலாது.

வேத காலமே நாகரிகத்தின் தொடக்கம் என்று தப்பான வரலாற்றைப் பரப்பிக் கொண்டிருந்த நிலையில் மார்ஷலின் அறிக்கைதான் உண்மையை உலகிற்குக் காட்டியது. ஆரியர்கள் பேசிவந்த திரிபு வரலாற்றை – மோசடி முயற்சிகளைத் தகர்த்து சரியான வரலாற்றைத் தந்தவர் இவர்.

சிந்து வெளி, ஹரப்பா நாகரிகங்களை ஆரிய நாகரிகமாகக் காட்ட ஆரியர்கள் ரிக் வேத காலத்தை பின்னாள் தள்ளிக் காட்ட எடுத்த முயற்சிகளும், குதிரையைக் கொண்டுவந்து நுழைக்க முயன்றமையும் அவர்களின் மோசடி முயற்சிக்குச் சரியான சான்றுகள். ஆனால், அவை தரவுகள் அற்ற கற்பனைகள் என்பதால், பல்வேறு ஆய்வு முடிவுகள் அவர்களின் கற்பனை வாதங்களை தகர்த்து எறிந்தன.

சிந்துவெளி நகர நாகரிகம் என்பதும், அங்கு வாழ்ந்த தொல்குடியினர் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதும், அங்கு கிடைத்த தடயங்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் என்பதும் ஆய்வுகளுக்குப் பின் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரிக் வேதத்திலே திராவிடச் சொற்கள் காணப்படுவது, தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன்.

தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்படாவிட்டால், கட்டுக்கதைகள் வரலாறாகிவிடும். ஆரியர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் கிளை அமைப்புகளும் கற்பனைக் கட்டுக்கதைகளை வரலாறக ஆக்க முயற்சிக்கின்றன. எனவே, நாம் விழிப்போடு இருந்து அம்முயற்சிகளை முறியடிக்கவேண்டும். உண்மையான வரலாற்றை உலகுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கான தொடக்க விழாவாக இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இது முதல் முயற்சி. இம்முயற்சி தொடர்ந்து பெருகி, நாடு முழுவதும் பரவி மக்களிடையே விழிப்பு உருவாக்கப்பட்டு உண்மை வரலாறு உறுதி செய்யப்படவேண்டும்’’ என்று ஆர். பாலகிருஷ்ணன் பேசினார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா உரை

இந்தியத் தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில்,
சிந்து சமவெளி – மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய் வினை சார்லஸ் மேசன் (Charles Meason) தொடங்கினார். திராவிட மொழிப் பேசியவர்கள் வாழ்ந்த பகுதி இது என்று குறிப்பிடுகிறார்.

அதற்குமேல் அவர் ஆய்வு செய்திடவில்லை. அலெக்ஸாண்டர் கர்னிங் பிரபு (Alexander Curning Prabu) பவுத்த ஸ்தலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து வெளியின் சிறப்பு, முக்கியத்துவம், தனித்துவம் பற்றி வெளிக் கொணர்ந்தவர் சர்.ஜான் மார்ஷல். ஆவார்.மொகஞ்சதாரோ – ஹரப்பா இடங்களுக்குள்ள இடைவெளி 600 மைல்.ஆனால் அந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை, பெரிதாக அன்று பேசப்பட்ட வேதகால நாகரிகக் குறிப்புகள் எதுவும் அங்கில்லை. சுமேரிய – மெசபடோமிய நாகரிகங்கள் இடையின நாகரிகம் என சிந்து நாகரிகங்கள் அகாழய்வு முடிவுகளில் அறியப்பட்டது. வேதகால நாகரிகத்திற்குள் நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள்தான் வளமை, நாகரிக முன்றேற்றம் காண முடியும். சிந்து சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகள் நிலையாக வாழ்ந்தவர்களான தமிழ் நகர நாகரிகத்தினர்.

கீழடி அகழாய்விலும் நமது நாகரிகங்கள் கண்டுடிக்கப்பட்டன. 13 லட்சம் ச.கி. மீட்டரில் ஆய்வுகளில் சிந்து சமவெளி பரவி இருந்தது. தொல்லியல் முடிவுகள், முக்கிய ஆதாரங்களைக் கொண்டு இலக்கியக் குறிப்புகளின் துணையுடன் மேலும் ஆய்வு முடிவுகள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆசிரியரின் தலைமையுரை

வேத கால நாகரிகமான ஆரிய நாகரிகம்தான் சிறந்தது, தொன்மையானது என்று கற்பிதம் செய்யப்பட்ட நிலையில், மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் 1920களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்பிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முந்தைய காலக் கட்ட நாகரிகம் அந்தப் பகுதியில் நிலவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் என்பதை பிரகடனம் செய்த சர். ஜான் மார்ஷல் அதுவரை நிலவி வந்த கருத்துகளை உடைத்தெறிந்தார். அந்தப் புதிய நகர நாகரிகம் ஆரியரல்லாத நாகரிகம் என தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மை மக்களது நாகரிகம், சிறுபான்மை மக்கள் அல்லாதார் பெயரில் அடையாளப்படுவது சரியல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘‘சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே’’ எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்குப் பரவலாகவும் அது அறியப்படுகிறது. திராவிடம் எனும் பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகிறது என்று விமர்சிக்கும் வேத கால வரலாற்றாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திராவிடம்’எனும் நிலப்பரப்பு அன்று நிலவியதாக அசல் மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் ஆசிரியர்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்;
44 ஆவது சுலோகம்:

‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.’’

மனுதர்மம் கூறும் திராவிடம் உள்பட பல நிலப்பரப்புகளில் வாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட நாகரிகம் என சிந்துவெளி நாகரிகம் அறியப்பட அரும்பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம். இந்த நிகழ்வு தொடக்கம்தான். தமிழ்நாடு முழுவதும் தெருத் தெருவாக சர். ஜான் மார்ஷல் பேசப்படுவார். திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை அந்த நாகரிகத்தின் வழிவந்த மக்கள் உணரவேண்டும். இப்படி கூறுவதால், இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம். (It is not a Sectarian Movement; but a cultural Movement)

“திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, “வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம்.

இது ஆண்டு விழாவினுடைய தொடக்கம்.  ஆராய்ச்சி மன்றத்தில், ஆராய்ச்சி அகங்களில்,
ஆய்வுக்கூடங்களில் நீங்கள் இதைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அதைத் தெருத் தெருவாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்களுடைய வேலை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற வேண்டும்; அதன்மூலமாக வரலாற்றுத் தொய்வுகள் இல்லாமல் மாற்ற வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மற்ற ஆய்வறிஞர்களும் எச்சரிப்பது போல வரலாற்றைத் திரித்து திராவிட நாகரிகத்தை மறைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று கூறி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
குதிரை இருந்ததாகப் பொய் கூறுகிறார்கள். குதிரை அங்கு இல்லை என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஓமகுண்டம் இருந்தது என்கின்றனர். அங்கு ஓமகுண்டம் எங்கும் இல்லை. அடுப்பைத்தான் ஓமகுண்டம் என்று திரித்துக் காட்டப் பார்க்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு நாம் விழிப்பும் அறிவும் தெளிவும் பெற்றுள்ளோம்.

சிந்துச் சமவெளி, ஹரப்பா பகுதியில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குத் தோண்டினாலும் தமிழர் (திராவிடர்) நாகரிக தடயங்கள்தான் கிடைக்கின்றன.

தாய்வழிச் சமுதாயம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் கிடைக்கிறது. ஆண் பெண் உறுப்புக்கு நன்றி கூறுவது தமிழர் மரபு. அதுதான் சிந்துவெளியில் கிடைக்கிறது. நகர நாகரிகம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் வெளிப்படுகிறது.
தமிழரின் தொல் எழுத்துக்கள்தான் அகழ்வாய்வில் கிடைக்கின்றன. இது தமிழரின் கூட்டெழுத்து. இதில் ஓ + ம் என இரண்டு எழுத்துக்கள் உள்ளன. இந்த இரண்டு எழுத்தையும் சேர்த்து இப்படி எழுதினர். இந்த எழுத்து சிந்துவெளியிலும் கிடைக்கிறது; கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரிலும் கிடைக்கிறது. ஆக, அய்யத்திற்கு இடமின்றி இந்தியாவின் மக்கள் தமிழர்கள். அவர்கள் கிழக்காசிய நாடு முழுவதும் பரவி வாழ்ந்தனர் என்பது பல்வேறு தடயங்களால் தொடர்ந்து உறுதி செய்யப்படுகின்றன.

மாறாக, ஆரிய நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் முதன்மை ஆவணமான வேதங்களிலும் எந்தவிதச் சான்றுகளும் இல்லை. எதையாவது செய்து, ஆரிய நாகரிகம் என்று நிலைநாட்டத் தொடர்ந்து ஆரியர்கள் முயற்சி செய்தாலும், அவர்கள் தொடர்ந்து தோற்றே வருகிறார்கள். காரணம், மத்திய ஆசியா பகுதியிலிருந்து தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் பிழைக்க வந்தவர், அதை மறைத்து, தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஒரு மோசடியான கருத்தைப் பரப்புகிறார்கள்.

அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம் வரலாற்றை மாற்றி எழுத, தங்களுக்குச் சாதகமாகக் குழு அமைக்கிறார்கள். அண்மையில் அமைக்கப்பட்ட குழுவில் 85% பார்ப்பனர்கள். அந்தக் குழுவின் ஆய்வும், அறிக்கையும் எப்படியிருக்கும்? எல்லாவற்றிலும் மோசடி, பித்தலாட்டம்.

தமிழர்கள் தமிழ் நாட்டோடு ஒதுங்கிப் போனவர்கள் அல்லர். அவர்கள் மொழியால் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்டாலும், இனத்தால் இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். அதனால், தொல் தமிழர்கள் (திராவிடர்கள்) மொழிகடந்து, இன உணர்வோடு, நாம் மண்ணின் மக்கள்; நம் பண்பாடு, நாகரிகம், அறிவியல், தொழில்நுட்பத் திறன் உலக அளவில் ஈடு இணையற்றது; மொழி, எழுத்து, நகர நாகரிகம், கப்பல் செலுத்துதல், அணைகட்டுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றில் உலக அளவில் உலகிலேயே உயர்ந்து நின்றவர்கள்; இம்மண்ணுக்கு உரிய நாம் பெரும்பான்மை மக்கள்; இனச் சிறுபான்மையினரையும் அணைத்து அன்பு செலுத்தி அவர்களின் நலத்தையும் நாடக் கூடியவர்கள். ஆனாலும், இனச் சிறுபான்மையினரான ஆரியவந் தேறிகள் தொடர்ந்து நம்மை, சாஸ்திரங்கள் பேரால் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதைத் தவிர்க்க, தடுக்க, ஆதிக்கம் ஒழிக்க, இழிவு நீங்க நம் உண்மை வரலாறுகளைத் தொடர்ந்து கண்டறிந்து பரப்ப வேண்டும்.

வரலாற்றுத் திரிபை அவர்கள் செய்வதன் நோக்கமே, தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை உயர்ந்தவர்களாகவும் உரிமையுள்ளவர்களாகவும் காட்டவுமே ஆகும்.

எனவே, நாம் விழிப்போடு இருப்பதோடு, இந்தியா முழுமையும் ஆரியர் அல்லாத மக்கள் விழிப்புப் பெற, உண்மை அறிய, தொடர்ந்து உண்மை வரலாற்றைப் பரப்ப வேண்டும்; திரிபுகளை, மோசடிகளை விளக்க வேண்டும்.

மரபணு சோதனை கூறும்
மகத்தான உண்மை

ஆரியர்கள் தொடர்ந்து செய்துவரும் வரலாற்றுத் திரிபுகளையும், தப்பான கருத்துப் பதிவுகளையும்,
பரப்புதல்களையும் முறியடிக்கும் வகையில், பொய்யாக்கும் வகையில் மரபணு சோதனைகள் உண்மைகளை ஓங்கி ஒலித்தன. இந்தியாவில் வாழ்ந்த தொல்மக்கள் தமிழர்களே (திராவிடர்களே) என்பதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளன. ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் அது உறுதி செய்துள்ளது.

ஆய்வுகள் விரிந்து, பரந்து தொடரவேண்டும்! வரலாற்றைத் திரிப்பது, உண்மைகளை மறைப்பது போல ஆய்வுகள் நடைபெறாமல் தடுக்கும் ஆரியர்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி ,முனைப்போடு செயல்படும் அவர்கள், உண்மை வரலாற்றை, உறுதி செய்யப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து
செய்ய தவிர்க்கின்றனர்; தடை செய்து முடக்குகின்றனர்.

எனவே, இச்சூழ்ச்சியை, சதியை முறியடித்து, ஆய்வுகள் விரிந்து, பரந்து நடைபெற மண்ணின் மக்களான ஆரியர் அல்லாத பெரும்பான்மையினர் போராட வேண்டும்; உண்மையைக் காண வேண்டும்; உண்மையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்; உரிமை காக்க வேண்டும்; இழிவு நீக்கி, ஏற்றம் பெறவேண்டும்.

வரலாற்றை அதில் தகுதியும், அனுபவமும், ஆழ்ந்த அறிவும் உடைய, ஒருதலைச் சார்பற்ற, நடுநிலையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்; இதில் அரசின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களையே 90% ஆய்வுக் குழுவில் அமர்த்துவது அப்பட்டமான மோசடி! அவர்கள் செய்யும் ஆய்வு எப்படி சரியானதாக, நேர்மையானதாக, உண்மையானதாக இருக்க முடியும்?

வரலாற்று ஆய்வுக்குழு அமைப்பதில் உச்சநீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு, ஆய்வுகளையும் கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும். வரலாறு என்பது காலக்கண்ணாடி யாகும். அது உள்ளதை உள்ளபடி காட்டக்கூடியதாய் இருக்க வேண்டும்.
எனவே, வரலாற்றை ஆய்வதில், உண்மை காண்பதில் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்; தொடர்ந்து ஆய்வு செய்து உண்மை காண வேண்டும்;

அதை நிலைநாட்ட வேண்டும், பரப்பவேண்டும்.