திங்கள், 16 நவம்பர், 2015

பண்பாட்டின் வரலாறு-லோதல்: சிந்து சமவெளியின் சான்று

பண்பாட்டின் வரலாறு


-ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர் 
1920ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்பு, இந்தியத் துணைக் கண்டத்துத்  தொல்பொருள் ஆய்வுகளின் ஒரு மிகமிக முக்கியமான பகுதி என்று போற்றப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல்,  டொலாவிரா, ராக்கிகர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகள் இக்கலாச்சாரத்தில் பல்வேறுபட்ட ஆர்வம் அளிக்கும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.
1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது, அதுவரை அறியப்பட்டிருந்த ஹரப்பா அகழ்வுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களும் இந்தியப் பகுதிகளில் இல்லாமல் பாகிஸ்தான் பகுதிகளிலேயே அமைந்திருந்தன.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கான அரசுத் துறையும், சில குறிப்பிட்ட பல்கலைக்-கழகங்களும் மற்றும் எண்ணற்ற கல்வியாளர்களும் மேற்கொண்ட பல்வேறுபட்ட அகழாய்வுகளின் காரணமாக,  இந்த மாபெரும் கலாச்சாரம் நிலவியதாகக் காணப்பட்ட இடங்கள் இந்திய நிலப்பகுதி எல்லை வரை விரிவடைந்திருந்தன.
இந்திய நிலப்பகுதியில் சற்றேறக்குறைய இத்தகைய 1000 இடங்கள் இருப்பதாகக் கண்டு அறிவிக்கப்பட்டது. இவற்றில் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இந்தியாவின் கக்கார் _ -ஹர்கா நதிப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் ஹரியானாவில் 350 இடங்களும், குஜராத்தில் 230 இடங்களும், பஞ்சாபில் 147 இடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 133 இடங்களும் ராஜஸ்தானில் 75 இடங்களும் இருந்தன.
குறிப்பு: கக்கார் (Ghaggar) _ ஹக்ரா (Hakra) நதிப் பள்ளத்தாக்கு : கக்கார் நதியானது இமயமலைகளின் அடிவாரத்தில் தோன்றி, இந்தியாவின் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் வழியாக ஓடி, பாகிஸ்தானைச் சேர்ந்த பகல்பூர் மண்டல  பிராந்தியத்தில் நுழைகிறது.
பாகிஸ்தானில் நுழையும் இந்த கக்கார் நதி அதன் பின்னர் ஹக்ரா என்று அழைக்கப்படுகிறது. இந்த கக்கார் நதி இப்போது நீரின்றி வறண்டு போனதாக இருந்தாலும், கடந்த காலத்தில்  குறிப்பாக, ஹரப்பா நாகரிகம் தொடங்கி உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்திருந்த இடங்கள் இந்த நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னொரு காலத்தில் இருந்த சரஸ்வதி நதிதான் இந்த கக்கார் நதி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ரிக் வேதத்தின் சரஸ்வதி நதி அடையாளங்கள் இதனுடன் பெரிதும் பொருந்தவில்லை என்பதும், சிந்துவெளி நாகரிகத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் வேதகாலம் தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெயர்ச்சொல் காரணம் :  இந்த நாகரிகத்தின் பண்புகள் பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ளும் முன்பாக,  இந்த நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என்றோ  சிந்து சமவெளி நாகரிகம் என்றோ அழைக்கப்பட்டது என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
1920_-21ஆம் ஆண்டில் பண்டிட் தயாராம் சஹானி, ஹரப்பா என்ற இடத்தில் மேற்கொண்ட அகழாய்வில் முதன் முதலாக இந்த நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வுகளில் எந்த இடத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அந்த இடத்தின் பெயராலேயே அந்த அகழாய்வுக்குப் பெயரிடும் வழக்கத்தைப் பின்பற்றி, இந்த நாகரிகத்திற்கு ஹரப்பா நாகரிகம் என்று பெயரிடப்பட்டது.
இந்த நாகரிகம் பற்றி மேற்கொள்ளப்பட்ட  அகழ்வுகள், ஆய்வுகளில் இந்த நாகரிகம் சிந்து நதியைச் சுற்றி நிலவி வந்திருந்தது என அடையாளம் காணப்பட்டது. மொகஞ்சதாரோவும் சிந்து நாகரிகமும் என்ற தலைப்பில் தனது மொகஞ்சதாரோ அகழாய்வு அறிக்கையை ஜான் மார்ஷல் என்பவர் வெளியிட்டார்.
இப்போது இந்த நாகரிகம் சிந்து சமவெளியையும் தாண்டி வெகுதூரம் வரை பரவியிருந்தது என்று காணப்பட்டாலும், சிந்து சமவெளி நாகரிகம் என்ற பெயரால் மட்டுமே அகழாய்வு பற்றிய நூல்களும் அறிக்கைகளும் அறியப்பட்டுள்ளன.
ஹரப்பா நாகரிகம் அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இக் கலாச்சாரம் மூன்று முக்கியக் கலாச்சார நிலைகளைக் கொண்டிருப்பதைக் கவனிப்பது அவசியமானது.
1. தொடக்ககால ஹரப்பா நாகரிகம்
2. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம்
3. பிற்கால ஹரப்பா நாகரிகம்
சிந்து மற்றும் பலுசிஸ்தான் வட்டாரத்தில் நிலவியதாக அடையாளம் காணப்பட்ட தொடக்ககால ஹரப்பா நாகரிகம் முக்கியமாக பானைகள் வடிவமைக்கப்பட்ட அக்கால ஒழுங்குமுறையை அடிப்படையாகக் கொண்டது. இக்கலாச்சாரம் நிலவியதாகக் கருதப்படும் பல இடங்கள் இன்றைய ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் உள்ளன.
என்றாலும், மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் மாநிலத்து கலிபங்கான் என்ற பகுதியில் இருக்கிறது. கலிபங்கானில் நிலவிய இந்தத் தொடக்க கால ஹரப்பா நாகரிகம் கி.மு. 3000_-2500 காலத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்ககால ஹரப்பா நாகரிகப் பண்புகளின் சில சிறப்பு அம்சங்கள்:
1. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகத்தின் தர அளவு  4:2:1 என்றிருக்கும் நிலையில், தொடக்ககால ஹரப்பா  குடியிருப்புகள் 3:2:1 (30 ஜ் 20 ஜ் 10 செ.மீ.) என்ற அளவிலான செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
2. அதே அளவிலான மண் செங்கற்களால் வீடுகளும் கட்டப்பட்டிருந்தன; வடிகால்கள் கட்டுவதற்கு சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
3. 1.5 மீட்டர் அகலம் கொண்ட கிழக்கு - மேற்காக அமைந்த சாலைகள்.
4. அங்கு அடுப்புகள் இருந்தன; தானியங்கள் குழிகளில் சேமிக்கப்பட்டன.
5.  செம்பு, இரும்பு, எலும்பிலான கருவிகளையும், சவக்காரக் கட்டிகளையும், கார்நெலியன் ஓடுகளையும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
6.  ஆறு மாறுபட்ட வெவ்வேறு வடிவிலான களிமண் கட்டிடங்கள் தொடக்ககால ஹரப்பா நாகரிகத்தின் சிறப்புப் பண்பாட்டைத் தெரிவிப்பதாக உள்ளன.
முதிர்வடைந்த, பண்பட்ட ஹரப்பா நாகரிகம் (கி.மு.2600--_2050) ஹரப்பா நாகரிகம் அல்லது சிந்து சமவெளி நாகரிகம் என்ற சொல்லாடல்கள் பெரும்பாலும் முதிர்வடைந்த அல்லது பண்பட்ட ஹரப்பா நாகரிகத்தைக் குறிப்பிடுவதற்கே பயன்-படுத்தப்பட்டன.
தொடக்க கால ஹரப்பா நாகரிகத்தை விட இந்த முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம் விரைந்த ஒரு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்டுகிறது. 3 ஆவது தொடக்க கால சுமேரிய நாகரிகம் மற்றும்  பழைய எகிப்திய சாம்ராஜ்யத்தின் சமகாலத்தியது இந்த முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம்.
தொடக்ககால ஹரப்பா நாகரிகத்தின் இறுதிக் காலகட்டத்தில், தீயினால் எரிக்கப்பட்டு அழிந்து போன பல குடியிருப்புகள்  பின்னர் மறுபடியும் உருவாக்கப்பட்டன. இந்தப் புதிய கட்டுமானங்கள் அனைத்தும் முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக கால கட்டுமானங்களைப் போல் ஓர் ஒழுங்கு முறையில் கட்டப்பட்டிருந்தன.
பெரிய நகரங்களும், கூட்டுக் குடியிருப்புகளும் உருவாக்கம் பெற்றன. மொகஞ்சதாரோ நகரத்தைப் போன்ற மிகப் பெரிய நகரங்களான கன்வேரிவாலா மற்றும்  ராகிகர்ஹி   என்ற இரு நகரங்களும் முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் உருவானவை ஆகும்.
காலிபங்கன், கோட் டிஜி, சந்தனவாலா ஜூடேர்ஜோ-தாரோ போன்ற சிறு நகரங்கள் பெருநகரங்களை அடுத்து அவை போலவே சிறிய அளவில் உருவாக்கப்பட்டன என்று தோன்றுகிறது. சிறப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இடங்களும் இருந்துள்ளன. ஒரு துறைமுக, வர்த்தக, உற்பத்தி நகரமாக லோதால் உருவாக்கப்பட்டதை இதற்கு எடுத்துக்-காட்டாகக் கூறலாம்.
ஒரே மாதிரியான உயர்தரம் கொண்ட பானைகள், நகைகள், முத்திரைகள் போன்றவை பொதுவாகக் காணப்படுபவையாக இருந்தன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் ஒரு இடத்துக் கலைப் பொருள்கள் அல்லது கட்டுமானத் திட்டங்கள் மற்ற இடங்களின் பொருள்கள் திட்டங்களில் இருந்து எளிதில் வேறுபடுத்திக் காண இயலாதபடி ஒன்று போலவே அமைந்திருந்தன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகத்தின் சில முக்கியமான பண்பாட்டு அம்சங்கள் மற்றும் லோதல் பற்றிய பதிவுகள் அடுத்த இதழில்...
லோதல்: சிந்து சமவெளியின் சான்று - 2
ஹரப்பா நாகரிகம்
-எஸ்.தீபிகா தொல்லியல்துறை ஆய்வு மாணவர்
முதிர்வடைந்த _ ஹரப்பா நாகரிகப் பண்புகளின் (பண்பாட்டின்) சில சிறப்பு அம்சங்கள்:-_
1. முதிர்வடைந்த ஹரப்பன் நாகரிக நகரங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, பெருநகரம் அல்லது நகரம், துறைமுக நகரம், சிறுநகரம் ஆகும்.
2. பெரும்பாலான நகரங்கள் இரண்டு பகுதிகளாக அமையப் பெற்றுள்ளன. அதில் ஒன்று கோட்டைப் பகுதி, மற்றொன்று மக்கள் வாழும் உள்நகரமாகும்.

3. நகரத்தில் அமைந்துள்ள கோட்டைப் பகுதி பெரும்பாலும் உள்நகரத்தின் உள்ளேயோ அல்லது உள்நகரத்தை விட்டு சிறிது வெளி தூரத்திலோ அமையப் பெற்றிருக்கும். அந்தக் கோட்டைப் பகுதியானது எப்போதும் நகரத்தின் மேற்குப் பகுதியிலேயே காணப்படும்.
4. உள்நகரமானது மிகச் சிறந்த முறையான மனையமைப்பைக் கொண்டது. அதன் தெருக்கள் ஓர் ஒழுங்குமுறையில் அமையப் பெற்றவை. ஹரப்பன் நாகரிகத் தெருக்கள் எப்போதும் வடக்கு _ தெற்காகவும், கிழக்கு _ மேற்காகவும் 1:2:3:4 என்ற அளவில் அமைந்திருக்கும். இவ்வாறு மொத்த உள்நகரமும் சமமான கட்டிடத் தொகுதிகளாக வகைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.
5. ஒவ்வொரு தொகுதியிலும் அமைந்துள்ள வீடுகளின் வாசல்கள் அனைத்தும் ஒரு தெருவை நோக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளன. வீடுகளில் ஒரு முற்றமும், அதனைச் சுற்றி அறைகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஓர் அறையில் தீ மேடை /தீ பீடம் அமையப் பெற்றுள்ளது. பெரும்-பாலான அறைகளின் தரைகள் களிமண் பூசப்பட்டதாகவோ அல்லது மண் செங்கற்களால் அமையப் பெற்றதாகவோ இருக்கின்றன.
6. மூடப்பெற்ற சுகாதார வடிகால்கள் முதிர்வடைந்த ஹரப்பன் நகரங்களில் காணப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் ஊறுதொட்டி அமையப்பெற்றுள்ளதை அகழ்வாராய்ச்சியில் காணமுடிகிறது.
7. அகழாய்வின்போது ஹரப்பா நாகரிக நகரங்களில் ஒரே வகையாகக் காணப்படும் கலைப் பொருள்களில் மிகவும் முக்கியமானது ஹரப்பன் முத்திரைகளாகும். இந்த ஹரப்பன் முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்களால் (Steatile) ஆனவை. சதுர வடிவில் 2 முதல் 3 செ.மீ. பக்கங்களை உடையன.
முத்திரையின் முன்பகுதியில் எப்போதும் ஒரு விலங்கு அல்லது மனித உருவத்துடன் சில ஹரப்பன் நாகரிகத்தின் எழுத்துகள் பொறிக்கப்-பட்டிருக்கும். சில முத்திரைகள் எழுத்துகள் இல்லாமலும் கிடைத்துள்ளன. சதுரம் மட்டும் அல்லாமல் செவ்வகம் அல்லது வட்ட வடிவம் கொண்ட முத்திரைகளும் கண்டறியப்-பட்டுள்ளன.
8. ஹரப்பா நாகரிக எழுத்துகள் முத்திரைகளில் மட்டும் இல்லாமல் மற்ற கலைப் பொருள்களிலும் காணப்படுகின்றன.
9. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் ஒரே முறையான எடை மற்றும் அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்-பாலான எடைகள் கன சதுர வடிவை உடையன. செர்ட் (Chert), சால்சிடோனி (Chalcedony), சுண்ணாம்புக்கல் (limestone) போன்றவற்றால் செய்யப்பட்டவை ஆகும். எடை போடும் தராசுகள் மொகஞ்சதாரோ, லோதல், கலிபாங்கன் போன்ற இடங்களில் கண்டறியப்-பட்ட போதும் அவை அனைத்தும் முழுமையாக அமையப்பெறவில்லை.
10. ஹரப்பன் நாகரிகத்தின் நகரங்கள் மிகச் சிறந்த வணிக நகரங்களாக விளங்கின. அகழாய்வு செய்யப்பெற்ற எண்ணற்ற இடங்கள் இதனைச் சான்றளிக்கின்றன. மெசபடோமி-யாவுடன் கடல் வழியாகவும், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தரை வழியாகவும் வணிகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதற்கு சான்றாக ஹரப்பன் நாகரிகத்தின் பானை ஓடுகள் மற்றும் கலைப் பொருள்கள் அயல்நாடுகளின் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
11. ஹரப்பன் நாகரிகத்தின் பல இடங்களில் கண்டறியப்பட்ட தானியக் கிடங்குகள், விவசாயப் பொருள்கள் உற்பத்தி அதிக அளவில் இருந்திருப்பதை மெய்ப்பிக்கின்றன. இந்தத் தானியக் கிடங்குகள் பொதுவாக நகரத்தின் கோட்டைப் பகுதியிலேயே காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பயிறு வகைகள் விளைவிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அகழாய்வில் உறுதிப்படுத்தப்-பட்டுள்ளன.
12. ஹரப்பா நாகரிகத்தின் அகழாய்வில் முதல் இடுகாடு / கல்லறை (R-37)  ஹரப்பன் நகரத்தில் கோட்டைப் பகுதியில் S-W திசையில் கண்டறியப்பட்டது. அகழாய்வில் காணப்பெற்ற உடல்கள் அனைத்தும் நீண்ட சதுரக் குழியில், தலைப்பகுதி வடக்குத் திசையை நோக்கி புதைக்கப் பெற்றுள்ளன.
உடல்களுடன் ஈமச்சடங்குப் பொருள்களும் குழிகளில் காணப்படுகின்றன. இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர் என்பதை இது மெய்ப்பிக்கிறது. சில ஹரப்பன் புதைத்தலில் இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டற்கான சான்றும், பகுதி பகுதியாகப் புதைக்கப்பட்டதற்கான சான்றும் காணப்-படுகின்றன.
பிற்கால ஹரப்பா நாகரிகம் (2050-1700 B.C.) - வீழ்ச்சி:-
ஹரப்பா நாகரிகம் திடீரென வீழ்ச்சி அடைந்ததற்கான சான்றுகள் இல்லை. பல்வேறு கருத்துகளை அகழாய்வில் இருந்து கண்டறியப்பெற்ற சான்றுகளின் மூலம் ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துள்ளனர்.
1. வெள்ளம், வறட்சி, மழையின்மை, ஆறுகளின் வழி மாற்றம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கக் கூடும் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
2. அயல்நாட்டவரின் படையெடுப்பால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ தெருக்களில் கண்டறியப்பெற்ற எலும்புக் கூடுகளும், பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள பல இடங்களில் பிற்கால ஹரப்பா காலத்தில் எரிக்கப் பெற்றிருப்பதை அகழாய்வில் காண முடிகிறது.
3. கொள்ளை நோய் தீவிரமாகப் பரவிய காரணமும், ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குச் சான்றாக அமையலாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பிற்கால ஹரப்பா நாகரிகத்தின் கடைசிக் காலங்களில் பல நகரங்கள் முழுமையாக கைவிடப்பட்டு மக்கள் வெளியேறினர். மெதுவாக ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சியடைந்து, அழியப்பெற்று, மறைந்துபோனது.
சுமேரியன், எகிப்திய நாகரிகம் போல தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் ஹரப்பன் நாகரிகத்திற்குக் கிடைக்கவில்லை. முழுமையாக அழிந்தும், மறைந்தும் போன ஹரப்பன் நாகரிகம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போதே மீண்டும் கண்டறியப்பட்டது.
(தொடரும்)
லோதல்: சிந்து சமவெளியின் சான்று 3
சிந்துவெளியின் துறைமுகம்
-ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

லோதல்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஹரப்பா நாகரிகத்து துறைமுக நகரமாகும். கேம்பே வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள இந்த நகரம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் சபர்மதி ஆற்றின் அருகே கண்டறியப்பட்டது.
லோதல் ஒரு முக்கியமான வணிக நகரமாகவும், தொழில் மய்யமாகவும் இருந்துள்ளது. மணிகள், பானைகள், கிளிஞ்சல்கள், மற்றும் இதர தாமிரக் கலைப் பொருள்கள் அங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.
காம்பே வளைகுடாவில் அமைந்திருக்கும் லோதலின் புவியியல் அமைப்பு அங்கு துறைமுகத்துக்கும், படகுப் போக்குவரத்துக்கும் மிக உகந்த இடமாக அமையப் பெறவில்லை.
ஆதலால், லோதல் என்ற பெயருக்கு சவங்களின் மலை என்றே பொருள். காம்பே வளைகுடா பகுதியில் குடியிருப்பு அமைந்ததன் காரணமே, விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் கிடைக்குமிடம் அது என்பதுதான்.
தொடக்ககால ஹரப்பா நாகரிக மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்தனர் என்பதை அந்த இடத்தின் அகழாய்வு காட்டுகிறது. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மற்ற ஹரப்பா நாகரிக நகரங்களின் திட்டங்களிலிருந்து லோதல் நகரத் திட்டம் மாறுபட்டதாக இருப்பதாகும். முதல் நிலையில் அது களிமண் கரையால் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறு கிராமமாக இருந்தது.
ஆனால் அதன் மக்கள் குடியிருப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், இரண்டாவது நிலையில் இந்நகரம் உருவாக்கப்படும் போது, உட்புற அரண் மற்றும் வெளிநகரம் உள்ளிட்ட  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கி.மு. 1900இல் இந்தக் குடியிருப்பு முழுமையாக வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது.
வெளிநகரம் _- கோட்டைப் பகுதி: (Agopolis): 125 ஜ் 118 மீட்டர் பரப்புக் கொண்ட உள்அரண், இந்த நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. 3.60 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மேடை மீது அமைந்திருந்த இந்த உள்அரணில் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதனை ஒட்டி அதன் தெற்குப் பக்கத்தில் இருக்கும் கிடங்கில் 9.20 மீட்டர் அகலப் பாதைகள் கொண்ட 12 வளாகப் பகுதிகள் இருக்கின்றன; அவற்றில் இருந்த 65 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் சரக்கு வைக்கப்படும் இடமாக அது இருந்திருக்க வேண்டும்.
உள்நகரம் (Lower Town): வெளிநகரம் வளாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது போன்ற 7 பகுதிகள் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளன. 1.20 முதல் 3.60 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட மேடையின் மீது வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன.
அவற்றுக்கும் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளியல் அறைகளும், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் பீப்பாய்களுக்குக் கழிவு நீரைச் செலுத்தும் சாக்கடைகளும் அனைத்து வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்த சாலைகளில் பிரதான சாலை 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்தது. குறுகிய தெருக்கள் 3.60 மீட்டர் அகலத்தைக் கொண்டிருந்தன. அங்காடி நகரத்தின் மய்யத்தில் அமைந்திருந்தது. தொழிற்சாலைப் பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தன.
கிளிஞ்சல் வெட்டுபவர்கள், தந்தப் பொருள்கள் செதுக்குபவர்கள், உலோகப் பொருள்கள் தயாரிக்கும் கொல்லர்கள் தொழிற்சாலைப் பகுதிகளில் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் முழுவதுமே 13 மீட்டர் அகலம் கொண்ட மண் மற்றும் செங்கற்கள் கொண்ட சுவரால் சூழப்பட்டிருந்தது.
கப்பல் கட்டுமிடம் (Dockyard): உள்அரணுக்குக் கிழக்குப் பக்கத்தில், மிகப் பெரிய கட்டுமானமாக (223 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும்,  8 மீட்டர் ஆழமும் கொண்ட) கப்பல் துறைமுகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத் துறைமுகத்துக்கு உள்ளே நீரைச் செலுத்துவதற்கான கால்வாய்கள் இரண்டு இருந்தன. இவற்றின் மூலம் கப்பல்துறைக்குள் இருக்கும் நீரின் ஆழத்தைக் கட்டுப்படுத்த இயலும்.  இந்தக் கட்டுமானம் மொத்தமும், நான்கு முறை சுடப்பட்ட செங்கற்களால் இரண்டாம் கட்டமைப்பு நிலையில் கட்டப்பட்டதாகும்.
60 டன் எடை கொண்ட 30 கப்பல்களை இந்தத் துறையில் ஒரே நேரத்தில் நிறுத்த இயலும் என்று கூறப்படுகிறது. அந்த அமைப்பு கப்பல் கட்டுமிடம் அல்ல;  தண்ணீர் சேமிக்கும் தொட்டி என்று சில கல்வியாளர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான எண்ணற்ற கிணறுகள் லோதலில் உள்ளன என்பதால் அது நீர்த் தொட்டியாக இருக்க முடியாது. கப்பல் துறையினை அடுத்து மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள 12.8 மீட்டர் ஜ் 243 மீட்டர் அளவு கொண்ட மண்ணாலான திறந்த நடைமேடை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நடைமேடை சரக்குகளை ஏற்றும் மேடைதான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் அந்த இடத்தில் இருந்ததும் அது ஒரு கப்பல் துறைமுகம்தான் என்பதை அடையாளப்படுத்தி மெய்ப்பித்-துள்ளது.
கலைப் பொருட்கள்: குறிப்பாக, மிகச் சிறிய அளவிலான ரத்ன மணிகளுக்குப் புகழ் பெற்றது லோதல். அழகு நிறைந்த, சிறுசிறு  மணிகள் கொண்ட, ஈடு இணையற்ற  தங்க நெக்லஸ்களும் அங்கு செய்யப்பட்டன.
அவற்றில் சில 0.25 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்டவை. முலாம் பூசப்பட்ட தாமிர வயர்களில் கோர்க்கப்பட்டிருந்த சில மணி மாலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
கிளிஞ்சல்கள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட நகைகளும் அகழாய்வின்போது  அடையாளம் காணப்பட்டன. தாமிர கருமாரப் பணியும், பானை தயாரிப்பும் வெளிநகரத்தில் உயர்ந்த ஓரளவில் முன்னேற்றம் அடைந்-திருந்தன.
லோதல் கருமார்கள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  100 சதவிகிதம் சுத்தமான தாமிரத்தைப் பயன்படுத்தினார்கள். தகரத்துடன் அதனைக் கலந்து அம்பு முனைகள், ஈட்டிகள், மீன் தூண்டில்கள், தளவாடங்கள் மற்றும் நகைகள் செய்யப்பட்டன.
பொதுவாக சிந்து சமவெளி நாகரிகத்தில், குறிப்பாக லோதல் நகரத்திலும் ஈடு இணையற்ற மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், எடைகள் மற்றும் அளவுக் கருவிகள் ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டதுதான்.
லோதல் அகழாய்வின்போது எண்ணற்ற எடை மற்றும் அளவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
லோதல் அருங்காட்சியகத்தில் வெண்கலம் மற்றும் தாமிரத்தினால் செய்யப்பட்ட கண்ணாடிகளும்,  கற்கள், படிகங்கள், கிளிஞ்சல்கள், எலும்புகள் போன்றவற்றால் செய்யப்பட்ட பலவகைப்பட்ட கலைப் பொருட்களும் உள்ளன.
பானை தயாரிப்பின் சிறப்பம்சம்: லோதலில் இருந்த மற்றொரு முக்கியமான தொழில் பானை தயாரிப்பதுதான்.  மான்கள், எருதுகள், பசுக்கள், குதிரைகள், உட்கார்ந்திருக்கும் பறவைகள் ஆகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அழகு மிகுந்த மண் ஜாடிகளும்,  சுடுமண் விளையாட்டுப் பொருள்களும், உருவங்களும் இவற்றில் அடங்கும்.
லோதலில் இரண்டு வகையான இரண்டு விதமான கலைப்பாணியில் தயாரிக்கப்பட்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பிடி கொண்ட குழிவான பானையும்,  சிறுகழுத்துக் கொண்ட மண் கூஜாவும்தான் அவை.
பாத்திரங்களில் ஓவியம் தீட்டும்போது,  படுக்கைவாட்டு, குறுக்குவாட்டு வடிவமைப்புகள் தீட்டப்-பட்டிருந்தன. சிவப்பு அல்லது பழுப்பு நிற முரட்டுத்தோல் போன்ற மேற்புறத்தில் கருப்பு வண்ணத்தில்  மயில்கள், மலர்வடிவங்கள்  தனியே வரைந்திணைக்கப்படும்  பூத்தையல் வேலைகள் மிகவும் பிரபலமானவை. இவை லோதல் அருங்காட்சியகத்தில் உள்ளன.
சவஅடக்கம்: லோதலில் அகழாய்வு செய்யப்பட்ட 14 சவக்குழிகளும், அவற்றில் மூன்றைத் தவிர மற்றவை,  நீண்டசதுர வடிவம் கொண்ட தனிநபரின் சவக் குழிகளாகவே இருந்தன.
மற்ற மூன்று மட்டும் Double burial எனப்படும் இரண்டு நபர்களைச் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட சவக்குழிகளாக இருந்தன. இவ்வாறு இரண்டு நபர் சவக்குழிகளில் இருவரும் கட்டித் தழுவிய நிலையில் எலும்புக் கூடுகள் இருந்தன.
என்றாலும் இவர்கள் இரண்டு பேரும் எதிர்பால் ஆட்கள் என்பது இன்னமும் இறுதியாக மெய்ப்பிக்கப்படவில்லை.
- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக