செவ்வாய், 26 நவம்பர், 2019

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை தமிழர் தலைவரிடம் அளித்து ஆதரவு கோரினர்

மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு, மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்த்து கூட்டமைப்பு உருவாக்கம்!

*மும்மொழிக் கொள்கை என்பதன் பெயரால் இந்தியை திணித்திடும் 2019 தேசியக் கல்விக் கொள்கையை கைவிடுக!

*உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியில் வழக்காடுவதற்கு உரிய ஆணை பிறப்பித்திடுக!

தென் மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து தங்களது "குப்பம் பிரகடனத்தின்" கோரிக்கையினை அளித்தனர். (சென்னை பெரியார் திடல் - 15.11.2019)

சென்னை, நவ.16 தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பகுதியினை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள 'திராவிடர் செயற்களம்' அமைப்பின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை - பெரியார் திடலில் சந்தித்து தங்களது அமைப்பின் சார்பாக மத்திய அரசிற்கு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேற்றத்திற்கான மனுவினை அளித்தனர். உரிய வழிகாட்டுதலையும், ஒருங்கிணைப்பையும் திராவிடர் கழகத்தின் தலைவரிடம் வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் 15.11.2019 அன்று சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரைச் சந்தித்து தங்களது அமைப்பு பற்றி எடுத்துரைத்தனர். தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளின் மொழி உரிமையினைப் பாதுகாத்திடவும் இந்தி மொழி மேலாதிக்கத்தினை தடுத்து நிறுத்திடவும், அரசியல், பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகாமல் தென் மாநிலங் களைப் பாதுகாத்திடவுமான நோக்கங்களைக் கொண்டு திரா விடர் செயற்களம்(We are South Indians) 
எனும் அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் நாள் திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் சந்தித்து, தங்களது அமைப்பின் நோக்கங்களைக் கோரிக்கை களாக்கி குப்பம் பிரகடனம்(Kuppam Declaration) என வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல்கட்சித் தலை வர்கள், சமூக அமைப்பினரைச் சந்தித்து தங்களது அமைப்பின் கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்தி மொழித்திணிப்பை வலுவாக எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்து தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். நேற்று (15.11.2019) சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து குப்பம் பிரகடனத்தில் உள்ள கோரிக்கைகளை விளக்கி திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பினை வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகள்

இந்தி மேலாதிக்கத்திற்கு தூண்டுதலாக உள்ள அரசியல் சாசனத்தின் அரசமைப்பு உறுப்புகள் 343, 344, 345, 346 மற்றும் 351 திருத்தப்பட வேண்டும், இந்தி மொழிக்கான சிறப்புரிமையை நீக்கரவு செய்ய வேண்டும்.

வருகின்ற நவம்பர் 18 அன்று தொடங்கவிருக்கின்ற நாடாளு மன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தமிழகத்தின் மக்க ளவை மாநிலங்களவை உறுப்பினர்கள் 5 மாநிலங்களின் உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து அரசியல் சாசன திருத்தங்களை கோரவேண்டும்.

தென்மாநில ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியுரிமையை பறிக்கும் தேசிய கல்விக்கொள்கை - 2019அய் திரும்பப்பெற வேண்டும்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். - இந்திய ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு நடவடிக்கை களுக்கு மாற்றாக மாநில சுயாட்சி முறையை (State Autonomy)வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டு முறையை சமூக மற்றும் கல்வியில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்க்கே நடைமுறைப்படுத்த வேண் டும். சமூகநீதிக்கெதிரான பொருளாதாரத்தில் பின்னடைந்த உயர்வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற வேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்திய ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கே வழங்க வேண்டும்.

டில்லியை சுற்று சுழல் மாசுவிலிருந்து பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசின் திட்டங்கள் தென்மாநில நகரங்களுக்கும் மாற்ற வேண்டும்.

அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மக்களின் தாய்மொழியே வழக்காடு மொழியாக சட்டமியற்ற கோர வேண்டும்.

இந்திய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் தகுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும்.

தொழில்துறை மற்றும் வேளாண்துறையில் பணியாற்றும் அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் அரசமைப்பு உறுதி யளித்த வாழ்க்கை கூலி முறை(Living Wages) நடை முறை யாக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

பொறுப்பாளர்களிடம் தமிழர் தலைவர்

தம்மைச் சந்திக்க வந்த திராவிடர் செயற்கழகத்தின் பொறுப் பாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

உங்களது (திராவிடர் செயற்களம்) கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டி யவை. கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் இந்தி எனும் ஒரு மொழியினை எதிர்த்து அல்ல; இந்தி மொழியை, பிற மொழி பேசும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்துதான். இது ஒரு மொழித் திணிப்பாக மட்டும் கருதப்படக் கூடாது. ஒரு காலாச்சாரத் திணிப்பாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசை எதிர்த்து அமைதி வழியில் போராட வேண்டும். பிற தென் மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் இரு மொழிக்கொள்கை (தாய் மொழி & ஆங்கிலம்) நடை முறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதற்கு தந்தை பெரியார் ஊட்டிய திராவிட இன உணர்வுதான் அடிப்படைக் காரணமாகும். மொழியால் தென் மாநில மக்கள் வேறுபட்டிருக்கலாம். இனத்தால் - திராவிடர் இனத்தால் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் திராவிடர் செயற்களம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர்த்த பிற தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல்கள் வலுப்பட்டு வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்துக்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசுங்கள். கூடிய விரைவில் தமிழகத்திலோ அண்டை மாநிலத்திலோ அல்லது இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அடுத்த கட்டமாக தலைநகர் டில்லியில் ஒரு போராட்ட மாநாடு கூட்டப்பட வேண்டும். திராவிடர் செயற்களத்தின் செயல்பாடுகளுக்கு திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும்.

கல்வித்திட்டம் என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒன்றாக இல்லாத நிலையில் எப்படி ஒரே மாதிரியான கல்விக்கொள்கையினை இந்தியா முழுமைக்கும் ஏற்றுக் கொள்ள முடியும். கல்விக் கொள்கையும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு ஒரே வழி 'கல்வி' மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல் அழுத்தம் பெற வேண்டும். தென் மாநிலங்கள் இதற்கு முன்னோடியாய் வட மாநிலங்களின் உரிமையினையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்;  இது வடக்கு - தெற்கு பிரச்சினை அல்ல; அடக்குமுறைக்கு எதிரான  ஒட்டு மொத்த குரலின் வெளிப்பாடு.திராவிடர் செயற்களத்தின் பணி பாராட்டுதலுக்கு உரியது. எங்களது ஒத்துழைப்பு, ஆதரவு எப்பொழுதும் உண்டு.

இவ்வாறு தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

தமிழர் தலைவரைச் சந்திக்கும் பொழுது திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் நிறுவனர் அபிகவுடா (கருநாடகம்) சிவலிங்கம், செந்தமிழ் முருகன் மற்றும் தோழர்கள் பங்காருபேட்டை ராமமூர்த்தி (ஆந்திரா), டார்ஜான், பிரதாபன் மற்றும் நாகேஷ் உடனிருந்தனர். சந்திப்பின்பொழுது திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் உடன் இருந்தார்.

 - விடுதலை நாளேடு 16 .11.19