ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஆரியர், திராவிடர் விவாதம்

ஆரியர்,  திராவிடர்  ஒரு விவாதம் என்ற தலைப்பில் “தி இந்து” நாளிதழில் கடந்த மூன்று நாட்களாக வந்த கட்டுரைகளைப் படித்தேன். இந்துத்துவ வாதிகளின் வரலாற்றுத் திரிபு வேலைகளை தோலுரித்துக் காட்டி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது என்றே கருதுகிறேன்.


இந்துத்வவாதிகளின் முயற்சியே உண்மையான வரலாற்றைத் திரித்து ஆதாரமற்ற கட்டுக்கதைகளை வரலாறாக ஆக்கி காட்டவேண்டும் என்பது தான். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் இந்நாட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முற்பட்ட நாகரிகம் என இந்திய அய்யோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் நிலை நாட்டியுள்ளனர்.

ஜிலீமீ ஞிமீநீவீஜீலீமீக்ஷீமீபீ வீஸீபீus sநீக்ஷீவீஜீt  என்ற தலைப்பில் என்.எஸ். இராசாராம்,   மருத்துவர் நட்வர்ஜா ஆகிய இருவரும் எழுதிய நூலில் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட பானைத் தகடு ஒன்றில் ரிக்வேதத்தில் காணப்படும் சரசுவதி நதியைப் பற்றி குறிப்பிட்டு சில சின்னங்கள் அதில் உள்ளதாக கூறினர். ரிக்வேதம் தோன்றிய காலத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்தப் பானையோடு. மேலும் முத்திரைகளில் குதிரை முத்திரை இருப்பதாகவும் அந்நூலில் எழுதியிருந்தனர். ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் மய்கேல் விட்செல் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் ஒற்றைக் கொம்புடைய காளை பொறிக்கப்பட்ட உடைந்த முத்திரையை கணினி மூலம் திரிக்கப்பட்டு குதிரை என இராசாராம் மோசடி செய்திருந்ததை அவர்கள் அம்பலப்படுத்தினார்கள். வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் “இந்துத்துவாவும் வரலாறும்” என்ற கட்டுரையில் “இந்துத்துவா தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆரியர்கள் அன்னியப் படையெடுப்பாளர்கள் என்பதை மறைக்க விரும்புகிறார்கள்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரைகள் இதுவரை புறக்காரணிகளால் ஆரியர்கள் அன்னியப் படையெடுப்பாளர்கள் என்று நிரூபணமாயிருந்த நிலையில் அறிவியல் காரணங்களாலும் மரபணு சோதனைகளின் மூலமாகவும் அது மேலும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி மேலும் இந்துத்வவாதிகள் வரலாற்றுத் திரிபு வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பலாமா?

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு)

"தமிழகம்"  ராசீவ் காந்தி நகர், உலகநேரி,   மதுரை 62517

-விடுதலை,8.7.17

ஆரிய படையெடுப்பு உண்மையே... கால்டுவெல்லுக்கு நன்றி
ராபர்ட் கால்டுவெல் - இந்து மதத்தை அழித்து கிறித்துவத்தை பரப்ப வந்தவர்; அவர் தன்னலன் கருதி திராவிடம், ஆரியம் என்று நம்மை பிரித்து நம் ஒற்றுமையை சிதைத்து விட்டார்; திராவிடம் என்று இல்லாத ஒரு புனைவு கதையை கூறி நம்மை ஆங்கில மோகத்துக்கு இழுத்தவர்; அவர் ஒரு புரட்டுக்காரர்; சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் இன்று பார்ப்பனர்களாலும், திராவிடத்தை மறுக்கும் தமிழ் தேசிய வாதிகளாலும் அர்ச்சிக்கப்படுபவர். அவர் மறைந்த பிறகும் அவர் மேல் இன்னும் இப்பாம்புகள் விஷம் கக்கும் அளவிற்கு அவர் அப்படி என்ன தான் சொன்னார்?

ஆரியர்கள், இன்று இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பிற்கு, மேற்காசிய அய்ரோப்பிய கண்டத்தி லிருந்து வந்தவர்கள். அவர்களின் மொழியே சமஸ்கிருதம். இந்நிலப்பரப்பில் அதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னிருந்து வாழ்ந்தவர்கள் திராவிடர். அவர்களின் மொழி தமிழாக தோன்றி, பின்பு கன்னடம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளாக கிளை பரப்பியது என்று கூறினார்.

சரி, பொத்தாம்பொதுவாக போகிற போக்கில் அவர் சொன்ன கூற்றா இவை என்றால், கண்டிப்பாக இல்லை. அவர் மதம் பரப்ப வந்தவர் தான். ஆனால் அப் பணியை செய்ய தமிழ் கற்பதன் முக்கியத்துவத்தை 1838இல் ‘மெட்ராஸ்’ வந்த அவர் புரிந்து கொண்டார். தமிழ் கற்று பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளோடு ஒப்பிட்டு பார்த்த அவர், இம்மொழிகளின் மேலுள்ள பற்று காரணமாக ‘A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages’ என்ற நூலினை 1856இல் படைத்தார். அதில் திராவிட மொழிக் குடும்பத்தை பற்றியும் அதன் தாயாக தமிழ் இருப்பதனைப் பற்றியும் அதில் எடுத்துக்காட்டுகளுடன் ஆதாரப்பூர்வமாக நிறுவினார். அவர் ஆரியம், திராவிடம் என பிரிக்கும் நோக்கத்தில் வடித்த நூல் அல்ல அது என்பதனையும் அவர் தன் பாதிரியார் பணியை செய்ய தேவைப்பட்ட மொழியை கற்று அதன் மீது பற்றுதல் காரணமாக மேன்மேலும் ஆராய்ந்தவர் என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவரின் ஆய்வு, முற்றிலும் வேறு துறையான 'Human Migration’ துறையில் இருந்த மற்றொரு ஆய்விற்கு வலு சேர்ப்பதாக இருந்தது. ஆப்பிரிக்காவில் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்னால் homo erectus  என்று அழைக்கப்படும் உயிரினத்தில், மனிதனுக்கும் குரங்குக்கும் நடுவில் இருந்த ஓர் உயிரினத்தில் இருந்து தோன்றிய தற்போது மனிதன் (homo sapiens) என அழைக்கப்படும் நாம் எப்படி உலகம் முழுக்க பரவினோம் என்பதன் தேடலில் ஈடுபடும் துறை. அத்துறை சார்பில் நடந்த ஆய்வில், இன்று இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பிற்கு சுமார் கிமு 2500 - கிமு 2000இல் ஆரியர்களின் வருகையையும், சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியையும் விளக்கும் வகையில் இருந்த ஒரு சிறிய பகுதி தான் ‘Aryan Invasion Theory’ ஆகும். ஆரியர்கள் இன்றைய இந்தியா விற்கு புதியதாய் வந்த "வந்தேறிகள்" என்ற கூற்றுக்கு மொழியியல் ரீதியாக ஆதாரம் தரும் நூலாக கால்டுவெல்லின் நூல் இருந்தது.

இவ்விரண்டையும் படித்து படித்து, புரிந்து ஏற்றுக்கொண்ட பிறகே திராவி டர்களுக்கான எழுச்சி பல்வேறு வகையில் ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில் திராவிட இயக்கங்களாகவும் வளர்ந்து "திராவிட நாடு” என்ற ஒரு தனி நாடே கோரும் எல்லைக்குச் சென்றது. ஆனால் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்ட இந்த உண்மையை தொடர்ந்து மறுத்துக்கொண்டு வந்த கூட்டத்திற்கு செவியில் அறைவது போல் வந்திருக்கிறது புதிய ஆய்வுகள் - இம்முறை வேறொரு துறையில் இருந்து.

மொழியியல் (Linguistic studies), மனித குலத்தின் பரவல்(migration Studies) என்று இரு துறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பரவலான "உண் மைக்கு" பக்க பலமாக வந்து சேர்ந்திருக்கிறது மரபியல் துறை (Genetic studies). அவர்களின் ஆய்வின் மூலம் ஆனது என்ன...? அனைத்திற்கும் எதிர் வாதம் வைத்து, கேள்விக்குள்ளாக்கி, ஆய்வுக்குட்படுத்தி, திருத்தி, மாற்றி, நிராகரித்து, பகுத்தாய்ந்து, மறுத்து, ஒப்புக் கொண்டு பின் கடைசியாக நிரூபித்துக் காட்டும் "அறிவியல் உலகில்" Aryan Invasion/Aryan Migration பற்றி ஒருமித்த கருத்து எனப்படும் Consensus  ஏற்பட் டுள்ளது. எதையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு பிரிவினர் ஒருசேர ஒரே கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அதன் முக்கியத் துவத்தை நாம் உணரவேண்டும்.

இவ்வளவு காலமாக ஆரியப் படை யெடுப்பை மறுக்க அறிவியல் சான்றுகள் உண்டு என்று கூறிய மாமேதைகள் முன்வைத்த முக்கியமான மூன்று வாதங்கள்.

1. மரபியல் ரீதியாக கடந்த 12500 ஆண்டுகளில் எந்தவித கலப்பும் மாற்றமும் இந்தியர்களில் ஏற்படவில்லை.

2. R1a என்று இந்தியாவில் காணப்படும் 17.5% பேரிடம் உள்ள மரபணு வெளியில் இருந்து உள்ளே வந்தவை அல்ல. மாறாக, இங்கிருந்து அய்ரோப்பாவிற்கும் மேற்காசியாவிற்கும் சென்றது.

3. மூன்றாவது மற்றும் முக்கியமானது, திராவிடர், ஆரியர் என்றழைக்கப்படும் இரு பிரிவினருமே இம்மண்ணில் தொன்று தொட்டு இருப்பவர்கள். இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்கள் என்பவையே அவ்வாதங்கள்.

இம்மூன்று புரட்டுகளையும் இன்று Genetic Science (மரபியல்) தோலுரித்துக் காட்டி இருக்கிறது. எவ்வாறு என்பதனை சற்று எளிய முறையில் விளக்கியுள்ளேன். விரிவான விளக்கங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

1. 12500 ஆண்டுகளாக இந்திய மக்களின் மரபணுவில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை என்பது எதன் அடிப்படையில் என்றால், தாய் வழியில் வரும் மரபணுவில்  (mtDNA or Matrilineal DNA) எந்த விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்ற ஆய்வின் அடிப்படையில் தான். ஆனால் அப்போது, தந்தை வழி வரும் மரபனு (Y-DNA) ஆய்வுகள் செய்ய தொடங்கவே இல்லை. அதற்கு முன்னெரே இந்த நொண்டி சாக்கு சொல்லத் தொடங்கி விட்டனர். இப்போது தந்தை வழி மரபணு வான (Y-DNA) கூறுவது யாதெனில் 17.5% இந்தியாவில் வாழும் மக்களுக்கு ஒரே மூதாதையர் தான் என்பது. R1a என்னும் மூலக்கூறு தான் அது. அதாவது இந்தியா வில் இருக்கும் ஒவ்வொரு ஆறு பேரில் ஒருவர் இந்த மரபணு உடையவர். இந்த மாற்றம் நடந்த காலம் 4000 முதம் 4500 ஆண்டுகளுக்கு முன்னால், அப்படியென் றால் கிமு 2500 த்தில் இருந்து கிமு 2000க்குள்.

2. இந்த 17.5% மக்களிடம் இருக்கும் மரபணு அய்ரோப்பிய மேற்காசிய மக்களிடமிருந்து இங்கு வரவில்லை. மாறாக இங்கிருந்துதான் அப்பகுதிகளுக்கு பரவி யது என்பது மிகவும் அபத்தமானது. மரபணு இங்கிருந்து தான் மற்ற இடங் களுக்குச் சென்றது என்றால் இங்கிருக்கும் ஸி1ணீ மரபணுவில் பல்வேறு வகைகள், உட்பிரிவுகள் நம் மக்களிடத்தில் உள்ள மரபணுவில் இருத்தல் வேண்டும். மாறாக Z93 வகை மட்டுமே இங்குள்ளவரிடத்தில் இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, அய் ரோப்பியரிடத்தில் ஆரியர் வந்த இடத்தில், அதன் சுற்றி உள்ள இடங்களில் தான் அந்த பலதரப்பட்ட மரபணு கூறுகள் (diversified pool of R1a DNA) 
இருக்கிறது.

3. ஒரு தந்தை வழி மரபணு வேறு இன மரபணுவுடன் கலந்தால் பிறக்கும் குழந்தை மூலம் அந்த மூல மரபணுவில் ஒரு உட்பிரிவு ஏற்படும். அக்கூற்றின்படி இதில் சம்மந்தப்பட்ட மரபணுவான R1a வை எடுத்துக்கொள்வோம். அதில் நாம் கவனிக்க வேண்டிய உட்பிரிவுகளில் ஒன்று Z282. மற்றொன்று Z93. இதில் ஐரோப்பிய மேற்காசிய மக்களின் மரபணு Z282 வடிவில் இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான் மற்றும் இமாலய பகுதிகளில் வசிப்போருக்கும் Z93 என்னும் மரபணு வடிவில் உள்ளது. 4000 முதல் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் இது போல் நாடோடியாக நாடு விட்டு நாடு போகும் போது முடிந்த வரை பெண்களை குழந்தைகளை தவிர்த்து ஆண்கள் மட்டுமே செல்வதுண்டு. உணவு, தண்ணீர் என எதுவுமே கிடைக்கும் என உத்திரவாதம் கிடையாது. உயிருக்கு சொல்லவே வேண்டாம் - விலங்குகள், பாம்புகள், தொற்று நோய்கள் என சாவு எதில் வருமென்றே தெரியாத, சராசரி வாழும் வயது 35 ஆக இருந்த காலமது. எனவே ஆண்கள் மட்டுமே கைபர் கணவாய் வழியாக இந்நிலப்பரப்பிற்கு வந்தனர். எனவே தான் தாய் வழி மரபணு சோதனையில் ஆரிய கலப்பை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது கூடுதல் தகவல். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே ஓரிடம் விட்டு ஓரிடம் குடிபெயர்ந்த ஸி1ணீ மரபணு கொண்ட ஆரியர்கள் இந்தியா வந்ததன் மூலம் ஏற்பட்ட மரபணு கலப்பில் Z93 உட்பிரிவும் அய்ரோப்பியாவில் மற்ற இடங்களுக்கு பரவிய மக்கள் மூலமாக Z282 உட்பிரிவும் தோன்றியது. விசயம் இப்படி இருக்க, இல்லை இல்லை நான் இங்கேயே எப்போதும் இருந்தவன் தான் என்பது எதன் அடிப்படையில் என்றால் கண்டிப்பாக அவர்களிடத்தில் இருந்து பதில் வராது.

600, 700 ஆண்டுகளாக இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை இவர்கள் இந்த நாட்டின் மக்களல்ல, பாகிஸ்தான் செல்ல வேண்டும் என சொல்லும் ஆரிய பார்ப்பன கூட்டம் எப்போது அவர்களிடத்திற்கு திரும்பி செல்லப்போகிறது என்று நாம் கேட்கப்போவதில்லை. சாதி கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து சமத்துவமும் சமூக நீதியும் வேண்டும் என்பதே நமது நிலை பாடு. ஆனால் சாதி உணர்வு வேண்டும், மத உணர்வு வேண்டும், மொழி உணர்வு வேண்டும் என்னும் கூட்டம் தான் உணர்வு என்னும் நிலை தாண்டி வெறி பிடித்துப் போய் உள்ளது. சாதி வெறி பிடித்து என் சாதி வைத்ததுதான் சட்டம் என சவால்விட்டு சிரிக்கிறான். என் மதம் மட்டுமே மாசற்றது என மற்ற மதங்களை மிதிக்கிறான். என் மொழியே மேன்மையுடையது என்று மிடுக்கு பேசி மற்ற மொழிகளை மழுங் கடிக்கிறான்.

ராபர்ட் கால்டுவெல்லின் மூலம் திராவிடத்தை அறிந்த தெரிந்துகொண்ட நாம், மார்டிமர் வீலர் மூலம் ஆரியம் படையெடுப்பை நிஜம் என தெரிந்து கொண்ட நாம், இப்போது மார்டின் பி ரிச்சர்ட்சின் ஜெனிடிக்ஸ் மூலம் "திராவி டத்தின்" மீதான ஆரியத்தின் படையெடுப் பையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வரலாற்றை மறந்த நமக்கு 1856லேயே உணர்த்திய ராபர்ட் கால்டுவெல்லுக்கும், அதனை ஆரியத்திற்கு எதிரான எச்சரிக்கையாக மாற்றி ஒரு பேரியக்கமாக மாற்றிய தந்தை பெரியாருக்கும் நாம் நன்றி கூற காரணம் இருக்கிறது. ஆரியத்தை உணர்ந்த தமிழ் நாடு இப்போது பல சிக்கல்களில் தத் தளித்தாலும் கூட ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனித வள மேம்பாடு, சமூக நீதி, மாநில உட்கட்டமைப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என எந்த துறை எடுத்தாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடியாகத்தான் இருக்கிறது. இவ்வனைத்திற்கும் காரணமாக இருந்த திராவிட இயக்கத்தின் பணியை இப்போது இருக்கும் மக்கள், திராவிடர் கழகத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாத மக்கள், அங்கீகரிக்காமல் விட்டாலும் வரலாறு திராவிட இயக்கத்தின் பணியை கண்டிப்பாகப் போற்றும். அன்று நமக்கென்று தனி அடையாளம் உள்ளது என தெரிந்து அடிமைப்பட்டு கிடந்த மக்களை எழுச்சி கொள்ள வைத்து, காட்டுத்தீ போல் திராவிட கொள்கைகள் பரவ ஆரம்பப் புள்ளியாக இருந்த ராபர்ட் கால்டுவெல்லை நாம் தமிழர்களை தான் பாராட்ட வேண்டும், மற்றவர்களை அல்ல என கூறாமல் வந்தேறி என உதாசின படுத்தாமல் நமக்கு அவர் செய்த உதவிக்கு நாம் அவரை நினைவுக்கூரத் தான் வேண்டும்.

ஆதாரம்: 1. Research paper: A genetic chronology for the Indian Sub continent points to heavily sex-biased dispersals. 
http://bmcevolbiol.biomed central.com/articles/10/1186/s12862-017-0936-9

2. ஜூன் 16, 2017இல் ‘தி இந்து’வில் வந்த செய்தி. எழுதியவர் Tony Joseph.

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migrationdebate/article 19090301.ece

- Rajeshkanna Jayaprakash. www.facebook.com/raamsay

யார் இந்த "பார்ப்பான்"?


தான் பிராமணன் எனக்கூறி நம்மை சூத்திரனாக்கி பார்ப்பான். 
சூத்திரன் எனக்கூறி நம்மை கருவறையில் நுழைய விடாது பார்ப்பான்.
ஆனால் "கர் வாப்சி" என அனைவரையும் இந்துவாக்க பார்ப்பான்.
இந்துவாக்கி, நம்மை பிரித்து நான்காக்கிப் பார்ப்பான்.
நான்கில் தன்னைத்தானே மேலென பார்ப்பான்.
நான்கில் மற்றவறை "தாழ்வென பார்ப்பான்.

தமிழை நீச பாஷையாக்க பார்ப்பான். 
செத்த சமஸ்கிருதத்தை தேவ பாஷையாக்க பார்ப்பான்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க பார்ப்பான். 
அதில் நான்கு சாதி படைத்த கிருஷ்ணனை கடவுளாக்கி பார்ப்பான். 
தவறெனச் சொன்னால் உன்னை கொல்லவும் பார்ப்பான்.
நேரடியாக மோத துணிவற்ற பார்ப்பான் 
அதனை குறுக்கு வழியில் செய்யவும் பார்ப்பான்.
உன் சகோதரனை உனக்கு எதிரியாக்கிப் பார்ப்பான்
உன் தோழனை உனக்கு துரோகியாக்கிப் பார்ப்பான்.

எதிலும் தானே மேல் எனக்கூறும் பார்ப்பான் 
திருவள்ளுவருக்கும் பூணூல் போட பார்ப்பான் 
பார்ப்பான் என்றால் சினம் கொண்டு பார்ப்பான் 
நீ யாரென்றால் நான் ஒரு பூணூல் போட்ட பார்ப்பான் 
என ஊடகத்தில் சட்டையை கழட்டப் பார்ப்பான் 
அவனே பார்ப்பான் தமிழா! அவனே பார்ப்பான்.
பயப்படாமல் சொல் தோழா!
பிராமணன் என்றால் தாய்த்தமிழில் பார்ப்பான்... என்று...
- இளம்பிள்ளை (ராமசாமி)

.-விடுதலை ஞா. ம.,8.7.17


புதன், 9 ஆகஸ்ட், 2017

*திராவிடரா? தமிழரா?*.........


‘தமிழர்’ என்பவர்கள் ஏதோ திராவிடர் என்பவர்களுக்குப் பகைவர்கள்போல், சில அரசியல் கடை திறந்திருக்கும் புதிய வியாபாரிகளும், அரை வேக்காடுகளும் பக்குவமில்லாத, வரலாறு தெரியாத இளைஞர்களை திசைதிருப்ப முயலுவது அசல் கேலிக்கூத்து ஆகும்.

“திராவிடர் _ திராவிடம் என்பதும், தமிழ் உணர்வு என்பதும் எதிரானவைகள் அல்ல. மொழியால் தமிழராக உள்ள “சூத்திரர் _ பஞ்சமர் _ கீழ்ஜாதி’’ என்று ஒதுக்கப்பட்ட அனைவரும் என்னைப் பொறுத்தவரையில் திராவிடர் _ ஆரியரல்லாதவர். இது இரத்தப் பரிட்சையால் தேர்வு செய்யப்படுவதில்லை; அவர்களது பண்பாடு, நாகரிகம், மொழி இவைகளைப் பொருத்தும், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகும் பான்மையையும் பொருத்தது!’’ என்றார் தந்தை பெரியார்.

திராவிடர் என்பது சில காவி எழுத்தாளர்கள் இப்போது கற்பனையாகக் கூறுவதுபோல், “வெறும் கால்டுவெல் பாதிரிகளால் மட்டும் சொல்லப்பட்டதோ, இறக்குமதி செய்யப்-பட்டதோ அல்ல.’’
‘அவாளின்’ ஆரிய தர்ம நூலான மனுதர்மத்திலேயே இச்சொல் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு மறுப்புக் கூற முடியாது.

“மொழியால் தமிழர் வழியால் (வரலாற்றால்) திராவிடர் (இனம்)’’ இது எப்படி முரண் ஆகமுடியும்?

எந்த ஒரு வீழ்ந்த இனமும் மீண்டும் எழுவதற்கு முதற்படி, முன்தேவை, அது வரலாற்று ரீதியாகத் தன்னைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளலேயாகும்.

நம் இனத்திற்கு தமிழர் என்கிறபோது _ பார்ப்பனர் உள்ளே புகுந்து நாங்களும் தமிழ் பேசுகிறோம் என்று கூறி ஊடுருவி மேலாதிக்கம் செலுத்தினர். உண்மையான தமிழ்ப் பண்பாட்டை அழித்தனர்.

எனவே, மொழி மட்டுமிங்குப் போதாது; அதனால்தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள், ‘பார்ப்பனர் தமிழரல்லர்’ என்று ஒரு தனி பகுதியே  விரிவாக எழுதியுள்ளார்கள்!

திராவிட இன அடையாளம்தான் நமது தனித்தன்மையை நிலைநிறுத்தும். ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற எதிர்மறைப் பெயரை _ அதுவும் வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பனருக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அல்லாதவர் என்று நம்மை அழைத்துக் கொள்வது இழிவிலும் இழிவு என்று கருதியே, தமிழ் மொழி காக்க ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை 1938இல் துவக்கி _ பண்பாட்டுப் போராக _ நடத்திய தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமும் கொடுத்த வரலாறும் பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய நிலையில், அதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று 1944இல் சேலத்தில் மாற்றியதும், மிகப் பெரிய இன அடையாள எழுச்சிக்கு வித்தூன்றிய வரலாற்றுத் திருப்பம் ஆகும்!

“ஓர் இனத்தின் அடையாளம் வெறும் மொழியை மட்டுமே கொண்டதாக இருந்தால் மட்டுமே அது போதியதாகாது; அதன் முக்கிய அடையாளம் அதன் பண்பாட்டுத் தளமே ஆகும். அதன் நாகரிகத்தையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.’’

அது மட்டுமல்லாது, தமிழர் என்று கூறிக்கொண்டு பிற இனத்தவர் ஊடுருவி, தமிழரின் சொந்த அடையாளத்தை,  பண்பாட்டை, நாகரிகத்தை, கலைகளை, அழித்து ஒழித்து தமது பண்பாட்டைச் சுமத்தி, பிறகு இதுவே நிலைத்ததாக ஒரு புதிய வரலாற்றையும் உருவாக்கிக் கொள்ளும் பேரபாயமும் உண்டு.

எப்போதும் வெளியில் உள்ள கிளைகளும், கிளைகளில் தழைத்த இலைகளையும்விட முக்கியம் வேர்களேயாகும்!

‘திராவிடர்’ என்ற சொல்லைத் தந்தை பெரியார் அவர்கள், நம் மக்களுக்கு ஒரு சரியான  தனித்த _  இழிவுபோக்கும் அடையாளம் தருவதற்குரிய கருவியாகவே _ ஆயுதமாகவே பயன்படுத்தினார்.

அந்த அடையாளம் தரப்பட்ட பின்புதான், நமது பண்பாடு, நாகரிகம், மொழியின் தனித்தன்மை _ இவைகளின் பின்புலம் _ எழுச்சியூட்டும் சிந்துவெளி நாகரிகம் _ திராவிடர் நாகரிகம் தொடங்கி _ நாளது, கீழடி ஆய்வு வரையில் செல்வதற்கும் வெல்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

திருவிடம் _ திராவிடம் _ வெறும் இடம் அல்ல; நிலம் அல்ல; அஃது இனப் பண்பாட்டு அடையாளம். நனிநாகரிக _ தனித்த வரலாறு படைத்து வரும் கருவி.

புரிந்துகொள்வீர் இளைஞர்களே! குழப்பத்திற்கு ஆளாகி, ஆரிய வில்லுக்கு அம்பாகாதீர்!

- கி.வீரமணி
ஆசிரியர்