செவ்வாய், 31 ஜூலை, 2018

நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’




இதை உலகம் மட்டும் செய்யவில்லை; நாமும் தான் செய்தோம்; நாம் எப்படி யவனம் என்கிறோமோ, அதுபோலவே அவர்கள் திராவிட என்கிறார்கள்! தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க மேதை, காலம் 150CE புவியியல் கணித அறிஞரான அவர், Dimirike என்றே தமிழகத்தைக் குறிப்பிடுகிறார், Geographike Hyphegesis  எனும் நூலில்!

அவருக்கும் முன்பே, 425 BCE--இல், Herodotus எனும் வரலாற்று ஆசிரியர், ‘திராவிடம்’ என்றே குறிக்கின்றார்; கீழே ஆவண வரிகளைக் காணுங்கள்;

“Dravidians (III, 100) having a complexion closely resembling the Aethiopians, and as being situated very far from the Persians, toward the south, and never subject to Emperor Darius”

உலகம், தமிழுக்கு வழங்கிய இதே திசைச் சொல்லைச் சமஸ்கிருத மொழியிலும் ‘பயன்படுத்திக்’ கொண்டார்கள். அவ்வளவே! சொல்லப் போனால், இந்த உலகச் சொல்லை வைத்து நம்மை இழிவு செய்தும் உள்ளார்கள், தென்மொழியான தமிழை/திராவிடத்தை காண்க, மஹாபாரதம் - அனுசாசன பர்வம்!

மேகலா, ‘திரமிடா’.. தாஸ் தா க்ஷத்ரிய ஜாதய

விருஷலத்வம் அனுபிராப்தா, பிராமணானாம் அதர்சனாத்

ந பிராமண விரோதேந, சக்யா சாஸ்தும் வசுந்தரா!

(Book 13, Chapter 35, Sloka 17-21)

“திரமிட (திராவிட) நாட்டு அரசர்கள், க்ஷத்ரிய அந்தஸ்து குறைந்து போய், சூத்திரர்கள் ஆகிவிட்டார்கள், பிராமணர்களைப் பகைத்துக் கொண்டதால்! உயர்ந்த அப் பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு, எவனாலும் நாடாள முடியாது!’’ - அனுசாசன பர்வம்; இதுவே நீங்கள் அறிந்திராத மஹாபாரதத்தின் இன்னொரு முகம்

அறிக: திராவிடம் = சமஸ்கிருதச் சொல் அல்லவே அல்ல! தமிழ்த் திசைச்சொல்! கிரேக்கம், உரோமானியம், எகிப்து எனப் பல இனங்களும் தமிழைக் குறித்த சொல்.

ஆழ்வார்களில், முதல்வர் நம்மாழ்வார்! (காலத்தால் அல்ல; கருத்தால்). 4-ஆம் வருணத்தைச் சேர்ந்த சூத்திர இளைஞன்; 32 வயதிலேயே இயற்கை எய்தியவன். அவன்(ர்) எழுதிய திருவாய்மொழி = ‘திராவிட’ வேதம் எனும் தமிழ்க் கவிதை! ‘திருவாய் மொழிக்கு உருகாதார், ஒருவாய் மொழிக்கும் உருகார்’ என்ற சிறப்பு.

அத் தமிழ்த் திருவாய்மொழியை (5th-7th CE கோயில்களில் பரப்பவேண்டி, நாதமுனிகள்/இராமானுசர் (10th-12th CE) போன்றவர்கள் ஓர் ‘உபாயம்’ செய்தனர்; அன்று (இன்றும் தான்) ஆலயங்களில் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே ஏற்றம் என்பதால், அதை நைச்சியமாகத் தளர்த்த வேண்டி, நம்மாழ்வார் கவிதையின் மேல்,Sanskrit  போர்வை போர்த்துவது போல் போர்த்தி, மந்திரம் போலவே மெட்டமைத்து தமிழை ஒலிக்கச் செய்தனர்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்!

அது, தமிழ்மொழி சற்றே கருவறைக்குள் நுழைந்த காலம்! ‘தமிழ் வேதம்’ எனச் சொல்லி, ‘திராவிட வேதம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது நம்மாழ்வார் தமிழுக்கு!

சர்வ அர்த்ததம்; ஸ்ரீ சடகோப (நம்மாழ்வார்) வாங்மயம்,

சகஸ்ர சாகோ உபநிஷத் சம ஆகமம்,

நமாம்யஹம்; திராவிட வேத சாகரம்!

மகாபாரதம், ‘திராவிடம்’ என்ற சொல்லுக்குச் செய்த இழிவை பின்னாளில் இராமானுசர் போன்றோர் துடைத்தார்கள். அதே சமஸ்கிருத மொழியில், “ஹே, திராவிட வேதமே, உன்னை வணங்குகின்றேன்’’ என்று சுலோகம் எழுதப்பட்டது.

நம்மாழ்வார் தெலுங்கிலா எழுதினார்? அல்ல! ‘திராவிட’ வேதம் என்பது தமிழையே குறிக்க வந்த சொல்! பின்பு தான், திராவிட மொழிக் குடும்பமான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடவா.. அனைத்தும் ஆகி வந்தது!

‘திராவிடம்’ என்ற திசைச்சொல், சமஸ்கிருதம் மட்டுமே அல்லாமல்.. பிற வட இந்திய மொழிகளிலும், சற்றே மாறி மாறிப் பயில்கிறது. நமது இந்திய நாட்டின் தேசிய ‘கீதம்’, மனப்பாடமாய்த் தெரியுமா உங்களுக்கு? அதில் வரும் ‘திராவிட’ சொல், மூலமொழியான வங்காளத்தில் அப்படி இல்லை!

நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்); வங்காள மொழியில் ‘திராபிர’ என்றே குறிப்பு!

Jono gono mono odhi nayoko joyo he, Bharato bhagyo bidhata!


Punjab Sindhu Gujarat Maratha, Drabira Utkolo Banga


மூலமொழி வங்காளத்தில் சற்றே மாறினாலும், நாம் இன்று திராவிட உத்கல பங்கா என்றே பாடுகிறோம்! இதுதான் திசைச் சொற்கள் பரவிடும் விதம்!

‘தமிழம்’ என்ற நம்முடைய ஒரே சொல்..

·            •    Damirica/Drabira
             •    Dramida/Dravida

என்று பலப்பல திசை ஒலிப்பு; ஆயினும், அவை யாவும் ‘தமிழ்’ குறித்த ஒலிப்பே!!

தமிழ் மொழியை மட்டுமே குறித்த ‘திராவிடம்’ என்ற திசைச்சொல், எப்போது/எப்படி... தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மற்ற மொழிகளையும் குறிக்கத் துவங்கியது? அதையும் பார்த்து விடுவோமா?

‘ஒரு திராவிட’ (தமிழ்) மொழி, ‘பல திராவிட’ மொழிகளாய் ஆன கதை:

தமிழ் என்ற பெயர் எப்படித் திராவிடம் என்று திரிந்ததோ... தமிழ் என்ற மொழியும் திராவிடம் எனத் திரிந்து, பல மொழிகளாகக் கிளைத்தது!

தெலுங்கு மொழி கிளைத்த போது, அதை ‘ஆந்திர திராவிடம்’ என்று அழைக்க ஆரம்பித்தனர் வடநூலார் (குமரில பட்டர்)! பழைய திசைச்சொல் ‘திராவிடம்’ (தமிழ்). அதன் மேலேயே ஆந்திரம் எனும் மீஜ்tக்ஷீணீ றீணீதீமீறீ ஒட்டினர். ஆந்திரம் = சமஸ்கிருதம் + தெலுங்கு; நன்னய்யாவின் ‘ஆந்திர மகாபாரதம்’ எனும் காப்பியம், இவ்வகையே!

‘தெலுகு’ என்பதே மொழிப் பெயர்! அதன் மேல் ‘ஆந்திரம்’ என்ற சொல்லை ஏற்றினர். ஆந்திரம் = ரிக் வேதம், ஐதரேய பிராமணத்தில் வரும் ஓர் இனக்குழு!

தமிழும் தெலுங்கும் இயல்பிலேயே ஒத்துச் செல்பவை. ஆனால் அத் தெலுங்கோடு, சமஸ்கிருதம் கலக்கக் கலக்க, அது தமிழை விட்டு விலகிச் சென்று ஆந்திரம் ஆகும்! சில சங்கத்தமிழ்ச் சொற்களை, நாமே மறந்து விட்டோம். ஆனால் தெலுங்கில் பேச்சு மொழியில் வைத்துக் காத்து வருகிறார்கள் நகுதல் (சிரித்தல்) பொருட்டு அன்று நட்டல் எனும் திருக்குறளின் நகு  = நவ்வு எனும் ஆதிகாலத் தமிழை இன்றும் பேசி வருகின்றனர் தெலுங்கு மக்கள்!

·                      நகுதல் (நவ்வு)

·                      சால (உரிச்சொல்)

·                      செப்பு (தல்)

·                      வாவி (பாவி)

·                      பலுக்கு(தல்)

·                      அவ்வா (ஔவை) உள்ளி (வெங்காயம்)

·                      வங்காய் (வழுதுணங்காய்/கத்திரிக்காய்)

·                      வெள்ளு (வெளியேறல்)

பல ஆதி தமிழ்ச் சொற்கள், இன்றும் தெலுங்கில் உள! பட்டியல் நீளம்

இப்போது 2 தொகுதிகள் விளங்க ஆரம்பித்தன:

·                      தெலுங்கு அல்லாத பழைய தொகுதி = ‘தமிழ்/திராவிடம்’ என்றும்,

·                      புதிய தெலுங்கை = ‘ஆந்திர திராவிடம்’ என்று குறிக்கலாயினர்

தெலுங்கு, தமிழிலிருந்தே பிரிந்து சென்றது என்பதை, பல தெலுங்கு அன்பர்கள் இன்று ஒப்ப மாட்டார்கள் பேரே இல்லாத ஒரு Proto Dravidian எனும் ஆதிகுடி மொழியிலிருந்தே, தமிழும் தெலுங்கும் தனித்தனியாகக் கிளைத்தன என்பது அவர்களின் கருதுகோள்!

இருக்கட்டும்; பிற மொழிகளின் மேல் வலிந்து திணித்து.. “உன் சொல்லெல்லாம் என் சொல்லே; நீ எனக்கு அடிமை; உன் பண்பாடு நான் கொடுத்ததே!’’ என்றெல்லாம் தமிழ் ஒருநாளும் ஆதிக்கப் புத்தி கொண்டு இறங்காது. தன்னிடமிருந்து கிளைத்த மொழியோ/முற்றிலும் வேறு மொழியோ.. அந்த மொழியை, அதன் இனத்தை மதிக்கும், மனிதமுள்ள தமிழ்!

‘மொழிபெயர் தேயம்’ என்றே சங்க இலக்கியங்கள் காட்டும்; மிக அழகான காரணப் பெயர்! ஒரு மொழி, பெயரும் (நகரும்).. தேயம் (தேசம்) = மொழிப்பெயர் தேயம்.

ஒரு மொழி அதன் மையத்தை விட்டு விலகி, எல்லைகட்கு விரிய விரிய.. மொழியின் இலக்கணத்தோடு அன்றாடப் பயன்பாடும் விரிந்துவிடும். வாழும் சூழலுக்கேற்ப மக்கள்; அச் சூழலுக்கேற்பவே மொழி! அதுவே இயற்கை; நெகிழ்வு!

அந்த நெகிழ்வை மதிக்க வேண்டும்! அதை மதிக்காததால், சில பண்டிதாள் அன்றைய அரசர்களை அது போலவே நடத்துவித்ததால், மொழியே பிளவுபடும் அளவுக்குப் போய் விட்டது பிளந்த மொழிக்குள், சமஸ்கிருதம் செலுத்தப்பட்டு, பிளவு என்பதே நிலையாகிப் போனது!

சேரனின் தமிழில், ங ஞ ண ந ம ன மூக்கொலி மிகுதி! அவர்கள் வாழ்ந்த மலைச்சூழல் & மழைச்சூழல் அப்படி! அதை எள்ளுதல் அறமா? பின்னாளில், சேரர்களோ மாயோன் வழிபாட்டில் பெருக, சோழத் தமிழகமோ சைவத்தின் பிடியில் சிக்க, வேற்றுமை பேசிப்பேசிச் சேரர்களை எள்ள எள்ள, மொழிப் பிளவு!

 

இன ஒற்றுமை மொழி நெகிழ்வு = நம் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்! வட்டார வேற்றுமைகளால் மொழி பெயரும் வட்டார வழக்கு மதிக்கப் பழகுவோம்!

வடக்குத் தமிழ் = வடுகு என்ற பெயரும் சங்கத் தமிழிலேயே காணலாம்! அருவா(ள்) நாடு (இன்றைய வடார்க்காடு)தான் வடக்கெல்லை. அதுதான் இன்றும் சில தெலுங்கு மக்கள் தமிழர்களை ‘அரவாடு’ எனும் காரணம் இகழ்ச்சி போல் தோன்றினாலும் அது இகழ்ச்சி அல்ல! நில வரலாறு!

¨                     அருவா நாடு = அரவாடு, தெலுங்கு எல்லையில்

¨                     கொங்கு நாடு = கொங்கா, கன்னட எல்லையில்

¨                     பாண்டி நாடு = பாண்டி, மலையாள எல்லையில்

எல்லை-_-ன்னாலே, எகத்தாளம் இருக்கத்தான் செய்யும் போல? பக்கத்து வீடே = அன்பும் சண்டையும்! கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடித்தனம் என்றான பின், அவரவர் வாழ்வு! தமிழக உரிமை = நீரும் வளமும் விட்டுக் குடுத்துற முடியாது; போராடணும்! ஆனால் ‘மொழிப்பகை’ ஆக்கி, இன வேர்களையே அழிச்சிறக்கூடாது!

தெலுங்கு கிளைத்த பிறகு, கன்னடமும் கிளைத்தது!

¨                     மனே (மனை)

¨                     காயி (காய்)

¨                     கேளு (கேள்)

¨                     நீனு (நீ)

¨                     நானு (நான்)

¨                     மக்களு  (மக்கள்)

¨                     ஊரு (ஊர்)

¨                     எல்லு (எல்லை)

இப்படி, பலப்பல தமிழ்ச் சொற்கள், இன்றும் கன்னடத்தில் உள!

இறுதியில்.. சேரன் தமிழும், மலையாளம் என்று கிளைத்தது; ஏற்கனவே கிளைத்த கன்னடத்தல் இருந்து, துளுவும் கிளைத்தது; தமிழ் மொழி சுருங்கிப் போனது... இன்று நாம் காணும் தமிழக எல்லைக்குள்!

ஆனால் நிலம் அதே தானே? மொழிகள் தானே புதுசா புதுசாக் கிளைப்பு! எனவே, தமிழுக்கு மட்டுமே வழங்கி வந்த திராவிட திசைச்சொல், கிளைத்த மொழிகளுக்கும் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என வழங்கப்படலானது;

இதுவே ஒரு திராவிடம் (தமிழ்) பல திராவிடம் ஆன கதை! அறிக; தமிழுக்கு மூலம் = திராவிடம் அல்ல! திராவிடத்துக்கு மூலமே = தமிழ்!

திராவிட மொழிகளும், தமிழும் = உடல்/ உயிர் போன்ற உறவு. அந்தப் பிரிந்த மொழிகளுள் மிகுதியாகக் காணப்படும் சமஸ்கிருதம்.... வெறும் மேலாடையே; தோலாடை (உடல்) அல்ல! திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கணம் & எண்ணுப் பெயர்களே, இதற்குச் சான்று காட்டிவிடும்!

(தொகுபடம் #7 : திராவிட மொழிக் குடும்பம் _- எண்ணுப் பெயர்கள் (பக்.164)

மேல் அட்டவணையில் 9ஆம் வரி பாருங்கள், 9 = தொண்டு எனும் ஆதி தமிழ் எண்! பின்புதான் ஒன்பது ஆனது! தொண்டு (ஆதி தமிழ்), தொம்மிதி (தெலுங்கு), தொன்பது, ஒன்பது, ஒம்பத்து என்று தென் மொழிகளில், ஆதி தமிழ்ச் சாயலே கொண்டு இருக்கும்! வடக்கே செல்ல செல்ல, குறுகு/பிராகுயி திராவிட மொழிகளில், நவம்/தசம் என்ற Sanskrit நகரலைக் காண்பீர்கள்! இந்த எண்ணுப் பெயர்கள் = தமிழ்/திராவிட அடித்தளச் சான்று!

திராவிட மொழிகள் = வெறுமனே தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், துளு மட்டுமேயல்ல! இன்னும் பல குடிகளின் மொழிகள்- குடகு, தோடா, குறும்பா, துருவா, செஞ்சு... மற்றும் கொடவா, கோண்டி, கொலாமி, குறுகு, பிராகுயி மொழிகளும் உண்டு!

சிந்து சமவெளி நாகரிகம் = தமிழ் நாகரிகமே! என்ற சான்று காட்டவல்ல, அங்கு இன்றும் நிலவும் திராவிட மொழி எச்சங்களை கிsளீஷீ றிணீக்ஷீஜீஷீறீணீ ஆய்வுகளில் வாசிக்க!

அயலகத் தமிழறிஞர், கால்டுவெல் (caldwell ) ஒப்பிலக்கணம் செய்தபோது, இதையே ‘பயன்படுத்தி’க் கொண்டார். அவராக திராவிடம் என்பதை ‘உருவாக்க’வில்லை! கிளைத்த மொழிகளின் தொகுதி = ‘திராவிட மொழிகள்’ என்று உலகம் வழங்கிய தமிழ்த் திசைச் சொல்லால் பரவலாக எழுதினார்.

கால்டுவெல் கருதுகோள்களில் சிற்சில தகவற்பிழை உண்டு.  ஆனால் அவரின் துணிபு, புதிய திறப்பாய் வெடித்தது, இந்திய மொழியியலுக்கு! எப்போதும் வடக்கிலிருந்தே, இந்திய_-இயல் தொடங்குவது வழக்கம்! அது வரலாறோ, மதமோ, மெய்யியலோ, தத்துவமோ எதுவாயினும்; சமஸ்கிருதமே இந்திய அடிப்படை என்ற Assumption-லேயே அறிஞர்களும் இயங்கி விடுவதால் ஒருவித மாயப் போர்வை!

அந்த Sanskrit போர்வையை விலக்கிப் பார்த்தது -= அறிஞர் கால்டுவெல் அவர்களே! அதனாலேயே, இன்று அவரைச் ‘சில பண்டிதாளு’க்குப் பிடிப்பதில்லை.

கால்டுவெலுக்கும் முன்பே தமிழ்க் காதலர் அறிஞர்,  F.W.Eills  (எல்லீசன்), ‘திராவிட மொழிகள்’ என்ற களத்தில் ஆய்வு தொடங்கியவரே! ஆனால் கால்டுவெல் பரவலாகச் செய்ததால், அவர் பெயரே நின்று போனது!

¨                     எல்லீஸோ/கால்டுவெலோ, உருவாக்கிய சொல் அல்ல திராவிடம்!

¨                     ஏற்கனவே இருந்த திசைச்சொல்லைப் பயன்படுத்திக் கொண்ட சொல்!

பின்னாளில் எழுந்த திராவிட இயக்கமும், இத்திசைச் சொல்லை, ஆரிய எதிர்ப்புச் சொல்லாய்ப் ‘பயன்படுத்திக்’ கொண்டதே தவிர, அவர்கள் உருவாக்கிய சொல் அல்ல, ‘திராவிடம்! பெரியார்/அண்ணாவுக்கும் முன்பே அயோத்திதாச பண்டிதரால், சிறிய அளவில் முன்னெடுக்ககப்பட்டதே. திராவிட அரசியல் களம் (திராவிட மகாஜன சபை) ‘திராவிட’ சபையோடு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழும் நடத்தினார்; இதிலிருந்தே அறியலாம்: திராவிடம் = தமிழ்.

நாம் இங்கே.. திராவிட அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! திராவிட என்ற சொல்மூலம் மட்டும், வரலாற்று! அறிவியல் பார்வையோடு அணுகுவோம். அரசியல் பார்வையோடு அல்ல! அவரவர்க்கு ஆயிரம் அரசியல் பிடித்தங்கள் இருக்கலாம்; ஆனால் தமிழை = தமிழாக மட்டுமே காண்போம். மதம் & தற்பிடித்த அரசியல் கடப்போம்!

ஸ்ரமணம் = தமிழில் “சமணம்” ஆனதால் அது அருகனின் சமயமே அல்ல! என்பது எவ்வளவு மூடத்தனமோ... போலவே, உலக வழக்கில் தமிழ் = ‘திராவிடம்’ ஆனதால், அது தமிழே அல்ல! என்பதும்!

சிந்து சமவெளி நாட்டுக்கு = இந்தியா என்ற பேரே, உலகின் சொல் தானே? இதனால், இன்று இந்தியா என்ற பேரையே ஒழித்து விடுவோம்! என்று யாரேனும் கிளம்புவார்களா? இந்தியா   /indic/Indies/Indo  என்ற பெயரில் உள்ள, எத்துணை எத்துணை உலக வரலாற்று ஆவணங்கள் அழிந்து போகும்?

திராவிடம் = தமிழை, உலகம் குறித்த திசைச்சொல்!

பின்னாளில், திராவிடம் = ஒட்டுமொத்த மொழிக் குடும்பத்துக்கும் ஆகிவந்தது!

நாம், நம் மொழியை = திராவிடம் என்று ஒருநாளும் சொல்லப் போவதில்லை! அதற்காக, உலகத்தின் திசைச் சொல்லையெல்லாம் அழித்தால், தமிழ் மொழியின் உலகத் தொன்மம் யாவும் பாழ்பட்டுப் போய்விடும். ஏற்கனவே, கீழடித் தொன்மங்களை மறைத்து, “தமிழ் அவ்வளவு தொன்மை இல்லை; சமஸ்கிருதம் & தமிழ் = இரண்டும் 2 கண்கள்’’ என்றெலாம் போலிப் பரப்புரை செய்கிறார்கள். இதில், நமக்குக் கைக்கொடுக்க வல்ல கிரேக்கம் முதலான உலகத் ‘திராவி’ ஆவணங்களை இழந்துவிட்டால் சொல்லவும் வேணுமா?

அரசியல் காரணங்கள் வேறு! திராவிடம் என்பதைப் பெயரில் வைத்துள்ள சில கட்சிகள் செய்யும் தவறால், திராவிடமே தவறு செய்ததாக ஆகிவிடாது! அதை, அதே அரசியல் கொண்டு அணுகி, குறை தீர்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, எலியை விரட்ட மனையைக் கொளுத்தல் அறிவுடைமை அன்று!

“திராவிடம் = தெலுங்கு; திராவிடம் = சம்ஸ்கிருதச் சொல்’’ என்றெல்லாம் மொழியியலே அறியாது, சார்பு அரசியலுக்காக, தமிழின் தொன்மம் சிதைப்பது, தமிழ் எனும் பசும் பயிரின் வேரிலேயே, வெந்நீர் ஊற்றி விடும். இப்படி அறிவற்றுச் செய்ய மாட்டோம் எனும் தமிழுறுதி கொள்வோம்!

நம் மொழி = தமிழே!

நம் நிலம் = தமிழ் நாடே!

நம் தேசிய இனம் = தமிழ் இனமே!

தமிழ் = Endonym/ திராவிடம் = ணிஜ்ஷீஸீஹ்னீ; அவ்வளவே!

தமிழோவும் தமிரிசயும் வேறு

த்ரமிளத் ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்

திரிபே அவைகள்! செந்தமிழ்ச்சொல் வேர்தான்

பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு

 

திரிந்தமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்

பிரிந்தவாய்க்காலும் பிரிதோ? தெரிந்த

பழத்தைப் பயம் பளம் என்பார் அவைதாம்

தழைத்த தமிழ்ச்சொற்கள் தாம்

உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்

திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்

ஆசிரியர்வாய்ப் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்

ஆரியச்சொல் ஆமோ அறி

தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்

நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்

பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்

பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு

பாவேந்தர் பாரதிதாசனின், தமிழ் = திராவிடம் கவிதையோடு நிறைவு செய்வோம்!

திராவிடம் = தமிழே! அது ஆரியச் சொல் ஆமோ? அறி!

எத் திசையும்(திசைச் சொல்லலாய்) இரு! பெருமைத் தமிழ் அணங்கே,

உன் சீர் இளமைத் திறம் வியந்து, வாழ்த்துதுமே! உலகத் தமிழ் வாழ்க!!

- உண்மை இதழ், 16-31.7.18