ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும்

திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும்
இந்து என்கிறபொழுதுதான் நாம் பிளவுபடுகிறோம்
சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா கருத்துரை
காரைக்குடி, டிச.19-  திராவிடன் என்று சொல்லும்பொழுது தான் ஹாஜாக்கனியும், ஜெகத் கஸ்பரும், மெய்யப்ப சாமி களும், ஆசிரியர் வீரமணி அவர்களும் எல்லோரும் சமம் என்ற நிலை உறுதிப்படும் - இந்து என்று சொன்னால் நாம் பிளவுபடவேண்டியதுதான் என்றார்  சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா அவர்கள்.
21.11.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற காந்தியத் தொண்டர் மன்றத்தின் சார்பில் ‘யாராயினும் தமிழரே! திராவிடரே!’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா உரையாற்றினார் அவரது உரை வருமாறு:
திராவிடர் இயக்கத்தின் தலைவர், பெரியாரின் வழித்தோன்றல் கொண்ட கொள்கையை தனக்கு மட்டுமல்ல தன்னுடைய குடும்பத்தினரையும் பின்பற்ற வைத்து, தன்னைப் போல தன் மகனையும் வளர்த்து வைத்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களே,
இந்தக் கருத்தரங்கத்திற்கு கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பார் இங்கே உரையாற்றிவிட்டு சென்றார்கள். அதற்குப் பிறகு நம்முடைய சித்தானி முன்னிலை வகித்திருக்கிறார். நம்முடைய காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஹாஜாக்கனி இங்கே வந்து ‘நாம் இனத்தால் திராவிடரே’ என்கிற கருத்தின் அடிப்படையில் சிறப்பான உரையை இங்கே ஆற்றினார்கள்.
பெரியாருடைய பிறப்புதான் தமிழ்நாட்டின் போக்கை மாற்றியமைத்தது
திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களிடம் வரும்பொழுது சொல்லிக் கொண்டு வந்தேன்.
எந்த ஒரு கொள்கையும், பெரியாருடைய பிறப்புதான் தமிழ்நாட்டினுடைய போக்கை மாற்றியமைத்தது. சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு நடைபெற்ற ஒரு காலகட்டத்தில், சுதந்திரம் வேண்டாம் என்று சொல்வதற்கும், வருகின்ற சுதந்திரம் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மட்டுமே அமையுமே தவிர, காங்கிரஸ் கட்சி முழுமையும் பார்ப் பனர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது - ஆகவே, பார்ப்பனர்கள் நாட்டை ஆள்வதைவிட, வெள்ளைக்காரர்கள் ஆள்வதே நல்லது என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்கின்ற மனத்துணிவு பெரியாருக்கு மட்டுமே இருந்தது.
எல்லா பிள்ளைகளையும் சமமாக நடத்து!
ஒரு காலத்தில், விடுதலைப் போராட்டத்தில் கதர் மூட்டை யைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றவர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, தென்னை மரம் இருந்தால் கள்ளுக் கடைகள் வளரும் என்று சொல்லி, தன் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர். பின்பு அதற்கு நேர்மாறாக இட ஒதுக்கீடு பிரச்சினையில் - காங்கிரசோடு வேறுபட்டு - வ.வே.சு.அய்யரோடு அவரது குருகுலப் பிரச்சினையில் வேறுபட்டு - எல்லா பிள்ளைகளும் ஒன்றாகப் படிப்பதற்கு காங்கிரசின் சார்பாக பணம் கொடுத்த செயலாளர் நான் - ஆனால், நீ, பார்ப்பனர் பிள்ளைகளை ஓரிடத்தில் வைத்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வேறொரு இடத்தில் வைத்தும் சாப்பாடு போடுகிறாய் என்றால், அது உன்னுடைய சுதந்திரம் என்று சொன்னால், நாங்கள் காங்கிரசின் சார்பாகக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவேண்டும்; கொடுத்தவன் நான், ஆகவே, ஈ.வே.ராமசாமி கேட்கிறேன், செயலாளர் என்கிற முறையில் - இல்லையானால், எல்லா பிள்ளைகளையும் சமமாக நடத்து என்று சொன்னார்.
இவையெல்லாம் காங்கிரஸ் கட்சியை விட்டு அவர் வெளியே வருவதற்கு மிகப்பெரிய காரணங்களாயின. ஆனால், காங்கிரசை எதிர்த்து வெளியே வந்து சண்டை போட்டவர்கள் எல்லோரும் காலத்தால் காணாமல் போய்விட்டார்கள்.
சுதந்திர தினத்தைக்கூட துக்க தினம் என்று சொல்லக்கூடிய மன ஊக்கம் பெரியாரைத் தவிர, இப்படி ஒரு பிறப்பு ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு வாய்த்ததில்லை.
காலப் பழைமை கொண்ட இயக்கம்
திராவிட இயக்கம்
ஒரு கருத்து தனக்கு சரியென்று பட்டால், அதை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், எத்தனை முட்டை வீச்சுகள், மல வீச்சுகள், எத்தனை கல் வீச்சுகள் இவ்வளவையும் தாண்டி ஒரு இயக்கத்தை நிறுத்தினார், 70, 80 ஆண்டுகாலமாக - காங்கிரஸ் எவ்வளவு பெரிய நீண்ட இயக்கமோ - அதுபோல, காலப் பழைமை கொண்ட இயக்கம் திராவிட இயக்கம். இந்தத் திராவிட இயக்கம் ஊன்றிவிட்ட பிறகு, நான்கு அய்ந்து தலைமுறையாக, 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு திராவிட இயக்கங்கள்தான் இங்கே இருக்கின்றன. அவை செய்கின்ற குற்றங்கள் திராவிட இயக்கத்தினுடைய குற்றங்களாக ஆகிவிட முடியாது. தனி மனிதர்கள் செய்கின்ற குற்றங்கள் வேறு; இயக்கம் என்பது வேறு.
தனி மனிதன் தவறு செய்கின்றவனாக இருப்பானேயா னால், தனி மனிதனை அகற்றவேண்டுமே தவிர, இயக்கத்தை அகற்றிவிட முடியாது.
தமிழர்களின் வாழ்வில் ஒரு சுயமரியாதையைக் கொண்டு வந்த இயக்கம் இது. திராவிட இயக்கத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பாளர்; நான் கடவுள் நம்பிக் கையாளன். ஆனால், அவையெல்லாம் ஒரு பெரிய தடை யில்லை. நம்முடைய மெய்யப்ப சாமிகள் ஒரு ஆதீனத்திற்கே தலைவர். அவரிடம் இந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டேன்.
அவரைத் தலைமை தாங்கவேண்டும் என்று அழைத்த தற்குக் காரணம், காரைக்குடி திருக்குறள் விழா 50 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடத்து வதில் அவர்களுக்குப் பெரிய இடம் உண்டு. வெண்ணிலா படிப்பகம் என்ற ஒரு படிப்பகத்தை வைத்திருந்தார். அங்கே இளைஞர்கள் எல்லாம் மேசைமீது ஏறி நின்று பேசுவார்கள். இவர்கள் வயதில், இவர்கள் செய்வதைப் பார்த்து, நாங்கள் குறள் இசை சொற்பொழிவு மன்றம் ஒன்றை ஆரம்பித்ததற்கு இவர்கள்தான் முன்னோடி. அதற்குப் பிறகு நாங்கள் ஒரு படிப்பகத்தை ஆரம்பித்து நாங்களும் பேசினோம்.
மெய்யப்பசாமி அவர்கள் ஒரு பெரிய கவிஞர். அதுமட்டு மல்ல ஜியாலஜி துறையில் அவர்கள் பேராசிரியராக இருந்தவர். பேராசிரியராக இருந்துவிட்டு, அவர்கள் சாமியாராகும்பொழுது அவர்களுடைய துணைவியார் கோவிலூர் வந்திருந்தார்கள். அவர்கள் இல்லறத்திலே இருந்து துறவியானவர்கள். நம்முடைய ஆதீனங்கள் பெரும்பாலும் அப்படித்தான். அப்படி அவர் சாமியாராகும்பொழுது, குளித்துவிட்டு, காவி உடை அணிந்து கொண்டு வரும்பொழுது, இவருடைய துணைவியார் மெய்யப் பசாமி அவர்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.
ஆனால், அவரது துணைவியாரிடம் எல்லோரும் சொன்னார்கள், நீ இனிமேல் அவரைப் பார்க்கக்கூடாது; அவர் கண்ணிலும் நீ படக்கூடாது; அவர் போகின்ற பாதையில்கூட நீ போகக்கூடாது என்று சொல்லி, அவருடைய துணைவி யாரை ஒரு வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டார்கள். பிறகு, அவர் அழுதுகொண்டே அவருடைய ஊருக்குச் சென்று விட்டார். இதையெல்லாம் நான் பார்த்தேன்; இவர் ஆதீனமாகப் பதவியேற்றுக் கொண்ட அன்று, நான் கோவிலூருக்குச் சென்றிருந்தேன். எனக்கு முன் ஒரு நான்கைந்து ஆண்டு களுக்கு முன்பு படித்தவர்; முன்பெல்லாம் நான் மெய்யப்பன் என்றுதான் அவரை அழைப்பேன். இப்பொழுது அப்படி அழைத்தால் நன்றாக இருக்காது என்பதற்காக ‘சாமி’ என்று அழைக்கின்றேனே தவிர வேறொன்றும் இல்லை.
எத்தனையோ தமிழ் உணர்வுக் கூட்டங்களுக்கு மெய்யப்பசாமி அவர்களை அழைத்து நடத்தியிருக்கின்றோம். விஜயராகவனுக்கு மிகவும் நட்பானவர் நம்முடைய சாமி அவர்கள். இந்தக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவது, ஆசிரியர் வீரமணி அவர்களோடு இந்தக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வது - ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கு நான் அணியமாக இருக்கிறேன் என்று சொல்லி, அவர்கள் இங்கே வந்தார்கள்.
தமிழ் உணர்வு உடையவர்கள் எல்லோரும் கருப்பு வாடை உடையவர்களாகத்தான் இருந்தார்கள்
அதற்குக் காரணம், அவர்களுடைய பழைய திருக்குறள் பற்று, திராவிட இனப் பற்று, தமிழினப் பற்று அதுதான் அடிப்படை. இப்பொழுது காவி உடுத்திக் கொண்டிருந்தாலும், சிறிய வயதில் அவருக்குக் கொஞ்சம் கருப்பு வாடை இருந்தது. அப்பொழுதெல்லாம் தமிழ் உணர்வு உடையவர்கள் எல்லோ ரும் கருப்பு வாடை உடையவர்களாகத்தான் இருந்தார்கள். கருப்பு வாடை இல்லாமல் இருப்பவர்கள், தமிழ் உணர்வு உடையவர்களாக இருக்கமாட்டார்கள். இப்படித்தான் அன் றைய காலகட்டம் இருந்தது. ஆகவே, நம்முடைய மெய் யப்பசாமிகள் தலைமை ஏற்பதும், அய்யா வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றுவதும் வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. பெரியார் அவர்கள் இவ்வளவு பாடுபட்டு, நீதிக்கட்சிக்குத் தலைமையேற்று, திராவிடர் கழகத்தை முன்னிறுத்தி, இன உணர்வைத் தோற்றுவித்து, சூத்திர நிலையிலிருந்து தமிழனை விடுவித்தது. எடுத்துக்கொண்ட கொள்கை - தன்னுடைய வாழ்நாளிலே நிறைவேறுவதைப் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அவர்கள்தான்.
கடவுளையும் சேர்த்து பார்ப்பானோடு ஒழியட்டும் என்று முடிவு கட்டினார் பெரியார்!
பிராமணாள் ஓட்டலை அழித்துவிட்டார்; நம்மை சூத்திரன் என்று சொல்வதற்கு மற்றவன் பயந்துவிட்டான் எல்லாமே முடிந்து, அவர்கள் எல்லாம் ஒதுங்கி இருக்கின்ற நிலைமைக்கு ஆளாகின்ற அளவிற்கு இந்த நாட்டை உருவாக்கினார். ஒரு மனிதனுடைய அந்த சுயமரியாதைக் கொள்கை இந்த நாட்டினுடைய போக்கையே மாற்றி வைத்தது. பெரியாரே, எல்லோரும் கடவுள் மறுப்பாளர் என்பார்கள்! அவர் கடவுள் மறுப்பாளர்தான். அப்படி இருந்தாலும்கூட, நம்மை சூத்திரர் களாக ஆக்குக்கின்ற கொள்கையை நாம் விட்டுவிடலாமே என்பதுதான் அதனுடைய அடிப்படையே தவிர, கடவுள் பார்ப் பானிடம் மாட்டிக் கொண்டு விட்டான். ஆகவே, கடவுளை மீட்பது நல்லது; மீட்க முடியாது என்றவுடன், ஆகவே, கடவுளையும் சேர்த்து பார்ப்பானோடு ஒழிக்கவேண்டும் என்று முடிவு கட்டினார்.
அதுதான் அவருடைய அடிப்படைக் கொள்கை. பெரியார் அவர்களிடம் கேட்டார்கள், கடவுள் திடீரென்று உங்கள் முன் வந்துவிட்டால் என்ன சொல்வீர்கள்? என்று.
‘‘கடவுள் இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகிறேன்’’ என்றார் பெரியார்.
பெரியாரைப்பற்றி
கவிஞர்கண்ணதாசன் எழுதிய பாடல்!
இந்த அளவிற்கு ஒரு ஆற்றலான தலைவர், நாட்டின் போக்கையே மாற்றியவர். கவிஞர் கண்ணதாசன் மிக அழகாக பெரியாரைப்பற்றி ஒரு பாட்டு எழுதினார்,
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!
ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்து அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!
என்று கண்ணதாசன் பாடல் எழுதினார்.
பெரியார் நீண்ட காலம் வாழ்ந்தார். ராஜாஜியும், பெரியாரும் நீண்ட காலம் வாழ்ந்து, நீண்ட காலம் சண்டை போட்டு, கடைசியில் அந்தப் பழைய நட்பு கருதி, ராஜாஜியின் மறைவின்போது கண்ணீர் வடித்தார் பெரியார். மனிதத் தன்மை உள்ளவர் - நட்புள்ளவர் பெரியார் அவர்கள்.
எனக்கு ஒரு கட்டத்தில் தோன்றியது, திராவிடர் கழகம் தான், தோன்றிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட்ட காரணத்தினால், திராவிடர் கழகம் இனிமேல் வாழவேண்டிய தேவையில்லை என்று ஒரு கட்டத்தில் நான் நினைத்தேன். சில காலம் வரையில் நினைத்தேன். ஒரு இயக்கம் ஒரு காரணத் திற்காகத் தோன்றினால், அந்தக் காரணம் நிறைவேறிவிட்டால், பிறகு அந்த இயக்கம் இற்றுப் போய்விடும். அதுதான் வரலாற்றின் தன்மை.
ஜனதா கட்சி என்ற ஒரு கட்சி இல்லை. பழைய காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஜனதா கட்சியாக உரு வாயின. அந்தக் கட்சியினுடைய தோற்றத்திற்கு அடிப்படை காரணம், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தோன்றிய அந்த இயக்கம், ஜனநாயகத்தைக் காத்து முடித்து, 44 ஆவது அரசியல் சட்டத்தைத் திருத்தி, இனிமேல் யாரும் அவசர நிலையைக் கொண்டு வர முடியாது என்கின்ற அளவிற்கு குடியாட்சியைப் பாதுகாத்த பிறகு, அந்தக் கட்சி தானாக கலைந்துவிட்டது. அப்போது நான் ஒரு கட்டுரை எழுதினேன்; அது தோன்றிய நோக்கம் நிறைவேறிவிட்டது; ஆகவே, அது இற்றுப் போய்விட்டது. எந்த நோக்கத்திற்காக ஒரு இயக்கம் தோன்றியதோ, அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு அந்த இயக்கம் இற்றுப் போய்விடும். அதுதான் வரலாற்றின் தன்மை. ஜனதா கட்சி போல, திராவிட இயக்கமும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது என்று நான் கருதினேன்.
வீரமணி மீண்டும் ஒரு பெரியாராக மாறவேண்டிய காலம் வந்திருக்கிறது
பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்துவிட்டது; உன்னைத் தொட மாட்டேன் என்று சொன்னது ஒழிந்துவிட்டது; சூத்திரன் என்று சொல்வது ஒழிந்துவிட்டது; நாம் தமிழன் என்று உணரத் தலைப்பட்டுவிட்டோம்; இப்படி பல்வேறு நிலைகள் ஏற்பட்டு விட்ட காரணத்தினால், அதற்குப் பிறகு திராவிட இயக்கமே - அண்ணா ஆட்சிக்கு வருவதைப் பெரியார் பார்த்துவிட்டார். இவ்வளவும் நடந்த பிறகு, இனிமேல் பழக்கம் காரணமாக, அது இருந்த இருப்பு காரணமாக, தொடர்ந்து  இருந்து கொண் டிருக்கிறது என்றுதான் நான் ஒரு கட்டத்தில் கருதினேன்.
ஆனால், இந்துத்துவத்தின் நெருக்கடி இப்போது சமீப காலமாக ஏற்பட்டிருக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றபோது, நான் சொல்கிறேன், வீரமணி மீண்டும் ஒரு பெரியாராக மாறவேண்டிய காலம் வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன்.
அப்படி ஒரு இயக்கமாக அது இருப்பதற்குக் காரணம், தமிழர்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு போராட்டத்தையே பார்ப்பனர்களோடுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது சிந்துசமவெளி நாகரிகத்தில் தொடங்குகிறது. சிந்து சமவெளி திராவிட நாகரிகம்; வேத கால நாகரிகம் என்பது ஆரியர் நாகரிகம். ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் - நாம் ஹாரப்பா, மொகஞ்சாதாராவில் இருந்தோம் - நம்மை எதிர்த்துப் போராடினார்கள் - நாம் தோற்றுப் போய்விட்டோம். அந்த ஒரு தோல்விதான் ஒருமுறை நிகழ்ந்தது.
அதற்குப் பிறகு அவர்கள் மஞ்சளாக இருந்தார்கள்; வெள்ளையாக இருந்தார்கள்; சிவப்பாக இருந்தார்கள் - அது ஒரு கவர்ச்சியாக இருந்தது. இப்படியெல்லாம் காலம் ஓடி, சிந்துசமவெளி நாகரிகம் - வேத கால நாகரிகம் என்கின்ற மோதல், இப்பொழுது கடைசியாக இந்துத்துவ - திராவிட இயக்க மோதலாக வந்து நெறிபெற்று இருப்பதாக நான் நினைக்கின்றேன்.
இடையில் நடைபெற்ற வரலாற்றை நீங்கள் பார்த்தால், தமிழர்களுடைய வரலாறு என்பதே தமிழ் இனத்தை ஒருமைப்படுத்துவதற்கும், நிலைப்படுத்துவதற்கும் இதற்கு முன்பும் முயற்சிகள் நடந்தன. பக்தி இயக்கம் அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட இயக்கம்தான்.
தமிழர்கள் ஒருமைப்பட்டால்தான், ஒரு பெரிய பேரரசை தமிழன் உருவாக்க முடியும்
ஆறாம் நூற்றாண்டில் தேவாரம் பாடிய அப்பர் போன்ற வர்கள், சைவ இயக்கத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு முயன்ற போது, அது வெறும் சைவ இயக்கம் மறுமலர்ச்சியாக மட்டும் இல்லை என்பதை நாம் நினைத்துக் கொள்ளவேண்டும். அது சைவத்திற்காக ஏற்பட்ட இயக்கம் இல்லை. பவுத்தத்தையும், சமணத்தையும் தோற்கடிப்பதற்காக சைவ இயக்கம் கிளைத்து எழுந்தது என்றாலும்கூட, அந்த இயக்கம் பின்னால் ஒரு தமிழனுக்கு ஒரு பெரிய பேரரசு தோன்றப் போகிறது; அந்தப் பேரரசு சோழப் பேரரசாக, அது வரையிலும் சின்னஞ்சிறிய நாடுகளாக இருந்த தமிழ்நாடு, உடைபட்டுக் கிடந்த தமிழ்நாடு, பாண்டியர்களால், சேரர்களால் பிரித்தாளப்பட்ட தமிழ்நாடு - முதல்முறையாக, ஒரு பெரிய சோழப் பேரரசின்கீழ் வாழ வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஒன்று உண்டானபோது, சோழப் பேரரசு தோன்றுவதற்கு தமிழர்கள் ஒருமைப்படுத் தப்படவேண்டும். தமிழர்கள் ஒருமைப்பட்டால்தான், ஒரு பெரிய பேரரசை தமிழன் உருவாக்க முடியும். அதன் பிறகு, வெளிநாடுகளின்மீது படையெடுத்து, ஒரு கிடாரம், இலங்கை போன்ற நாடுகளையெல்லாம் இணைத்துக் கொள்ள முடியும். இத்தகைய ஒரு காலகட்டம் அன்றைக்கு இருந்தது. அப் பொழுது முதலில் தமிழர்கள் ஒருமைப்படுத்தப்படுவதற்காக சைவ இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. அதை பக்தி இயக்கம் என்று வரலாற்றில் சொல்கிறார்கள். அந்தப் பக்தி இயக்கம் எந்தக் கொள்கையை முன்வைத்ததோ, அதனை விரிவுபடுத்தி, இனத்தின் பெயரால் பெரியார் அதே கொள்கையை முன்வைக்கிறார்.
பக்தி இயக்கத்தில் நம்முடைய அப்பர் சொல்கிறார்,
ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
இது மிகவும் ஆச்சரியமானது.
குயவர்கள், வண்ணார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று எல்லா சமுகத்தினரும் 63 பேர்களும் நாயன்மார்களாக சிவன் கோவிலில் வந்து சம நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஜாதியத்தின் காரணமாக- ஜாதி ஒழிந்தது என்று சொல்ல முடியாது; ஜாதியத்தின் காரணமான பேதங்கள் ஒழிந்து விட்டன. நீ உயர்ந்தவன் - நான் தாழ்ந்தவன் என்கிற எண்ணம் ஒழிந்துவிட்டது. யார் உண்மையான பக்தனாக இருந்தாலும், அவன் நாயனாராக ஆகலாம் என்கிற புதிய நிலைமை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே, சைவம் என்பது தமிழ் இனத்தை ஒருமைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான். அந்த முயற்சியில் அப்பர் போன்றவர்கள் வெற்றி பெற்ற காரணத்தினால், சோழப் பேரரசு போன்று மிகப்பெரிய பேரரசுகள் பின்னாளில் தோன்ற முடிந்தது.
தமிழினம் ஒருமைப்பட்டுவிட்டது; ஆகவே, தமிழனுக்கு ஒரு பேரரசு வந்தது. பிறகு, அந்தத் தமிழினம் சிதைகின்றது; மீண்டும் இத்தகைய அழுக்குகள் எல்லாம் வந்து மண்டு கின்றன. அப்பொழுதும் அவர்கள் எல்லாம், சித்தர்கள் எல்லாம் கடுமையாகப் பாடுகிறார்கள்:
சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?’’
என்று ஒரு சித்தர் கேட்கிறார்.
நம்முடைய பெரியார் எப்படி பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, திராவிட இயக்கமாக ஆக்கினாரோ, அதுபோல, சித்தர்கள் பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மீண்டும் ஒரு பார்ப்பனரான ஞானசம்பந்தம் பக்தி இயக்கத் திற்குள் நுழைந்து, அவரும் தேவாரம் பாடி, லிங்கத்தை அவரும் சேர்ந்து வழிபட்டார்.
இது ஆதிசங்கரருக்கு பெரிய கோபத்தை உண்டாக்கியது. ஏண்டா, ஆண் குறியை வழிபடுகிற கூட்டம் அது. அதில் போய் பார்ப்பனராகிய நீ, வேதம் படித்த நீ, வேதத்தைப் படைத்த நீ, நீ போய் ஒரு ஆளாக இருந்து கொண்டு, அந்த லிங்கத்தை வழிபட்டு, அதைப் பாராட்டி, தேவாரம் பாடிவிட்டு வருகிறாயே என்று பின்னால் மூன்று நூற்றாண்டுகள் கழித்து வந்த, ஆதி சங்கரர், நம்மைப் பார்த்து சிசுன வழிபாட்டினர் என்றார்; சிசுன வழிபாட்டினர் என்றால், ஆண்குறி வழிபாட்டினர். விழுந்தது லிங்கம்; விரிந்தது யோனி என்று திருவள்ளுவர் சொல்வார்.
ஆரியனாகப் பிறந்த ஞானசம்பந்தனை, திராவிடன் என்று பணிக்கிறான். திராவிடன் என்கிற சொல் எங்கே இருக்கிறது என்று கேட்டால், நான் சொல்கிறேன், ஆதிசங்கரர் வார்த் தையில் இருக்கிறது.  திராவிட சிசு என்று சொல்கிறார். ஆரிய னாகப் பிறந்தவன், ஜாதி மாற்றம் பெற்று, திராவிட சிசுவாக மாறி, அவன் சைவ சமயத்தைப் போற்றத் தலைப்பட்டு விட்டான். நம்முடைய சமயம் அதுவல்ல என்று சொன்னார். அது வேதாந்தம். வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரம்ம சூத்திரத்திலிருந்து அத்வைதம் என்கிற புதிய கோட்பாட்டை ஆதிசங்கரர் எடுத்துக் கொடுக்கிறார். அவர் மிகவும் பயந்துவிட்டார். திராவிடர்களுடைய மதத்தால், பார்ப்பனர்கள் ஈர்க்கப்பட்டு, அந்தக் கோவில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள். ஆகவே, நம்முடைய வேத மதம் அழிந்துவிடும். நம்முடைய மேட்டுமை ஒழிந்துவிடும் என்று அஞ்சிய ஆதிசங்கரர், அவர்களுக்குத் தனி மதத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்திய கோட்பாடுதான், வேதாந்தம், அத்வைதம் என்பவை எல்லாம்.
அப்பொழுது நம்முடைய மதம், ஞானசம்பந்தரை உருக்கி விட்டது. உங்களுக்குச் சொல்கிறேன், சிவ லிங்கத்தின்மீது நாம் நீரூற்றி நாம் குடமுழுக்குச் செய்கிறோம். குடநீராட்டு விழாவின்போது, கும்பத்தின்மீது நீரூற்றி குடமுழுக்கு செய்வோம். நம்முடைய பழக்கம் எல்லாவற்றின்மீதும் நீரூற்றி கழுவுவதும், பூவிடுவதும். இது ஆரியர்களின் பழக்கமல்ல; அய்யர்களின் பழக்கமல்ல. நாம் எப்பொழுதும் நீரூற்றி கழுவு கிற பழக்கம் உடையவர்கள் என்கின்ற காரணத்தினால்தான், 60 ஆம் ஆண்டு நம்முடைய சிட்டானி செட்டியார் சாந்தி செய்துகொண்டால், அவருடைய தலையில் எல்லோரும் நீர் ஊற்றுவார்கள். அது திராவிட சமயத்தின் பழக்கம்; அது சைவ சமயத்தின் பழக்கம்.
எல்லாவற்றையும் தீயில் போட்டு பொசுக்கி, துவரம் பருப்பு, அரிசி, நெய், பட்டுத் துணியைப் போட்டுப் பொசுக்கி, அந்தத் தீயின் வழியாக மேலே இருக்கின்ற தேவர்களுக்குக் கொடுப்பது என்பது ஆரியர்களின் பழக்கம்.
யாகம் ஏன் செய்கிறார்கள் என்று விஜயராகவன் கேட்டார்; யாகம் செய்வது என்பது, நம்முடைய மதத்தால் உந்தப்பட்டு விட்ட ஆரியர்கள் வெட்கப்பட்டு, நம்முடைய சிதம்பரம் நடராஜர் கோவில் அவர்கள் தேவியர்களாக உள்ளே புகுந்த பிறகு, நான் சொல்கிறேன் எங்களுடைய சமயம் உன்னை வென்றது; எங்களுடைய சமயம் உன்னை ஈர்த்தது. நீ போய் லிங்கத்திற்கு நீரூற்றி கழுவிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய முறைகள் வேதங்கள் எல்லாமே போய்விட்டன. இதற்கு சமஸ்கிருதத்தை மட்டும் நீ உள்ளே வைத்திருப்பதாலும், கருவறைக்குள் எங்களை விடமாட்டேன் என்று சொல்வதாலும் உன்னுடைய மேட்டுமை நிற்கிறதே தவிர, உள்ளே இருக்கிற சாமி எங்கள் சாமி! அங்கே வழிபடுகின்ற சமய நெறிமுறைகள் எங்களுடைய நெறிமுறைகள்.
இந்த வேலை முழுவதும் நாம் செய்கின்ற வேலை. இதை அய்யர் செய்யக்கூடாது. இதற்காக ஆதிசங்கரர் கோபப் பட்டார். ஆகவே, அவர்களுடைய மதம் என்பது அழிந்து விட்டது. அவர்களுடைய மொழி என்பது அழிந்துவிட்டது. இப்பொழுதும் சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரதி சொல்கிறார்,
உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்!
அது எல்லாம் சரியல்ல.
நான் சொல்கிறேன், குணத்திற்கும், வாழ்கின்ற மனிதனுக் கும் இரண்டும் சமமா? ஆரியத்திற்கு நிகர் எப்படி தமிழ் ஆகும். தமிழ் வாழும் மொழி. உன்னுடைய மொழி செத்த மொழி.
வள்ளலார் கருப்புச் சட்டை போடாத
ஒரு திராவிடர் கழகத்துக்காரர்
ஆனால், பாரதிக்கும் அந்தப் பற்று இருந்தது. தமிழுக்கு நிகராக ஆரியம் இருந்தது என்று சொல்கிறாரா? ஆரியத்திற்கு நிகராக தமிழ் இருக்கிறது என்று அவர் சொல்கிறார்.
இந்து என்கிற சொல்லே பாரதியாருக்குத்தான் முதலில் தெரிந்தது. அதற்கு முன்பு யாருக்கும் தெரியாது. தமிழ் இலக்கி யத்தை எடுத்துப் பாருங்கள்; வள்ளலார்தான் கடைசியாக வந்த மாபெரும் ஞானி. அவர்தான் கருப்புச் சட்டை போடாத ஒரு திராவிடர் கழகத்துக்காரர். பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கத்தில் பெரிய வலிமையோடு இருந்தவர் நம்முடைய வள்ளலார்தான்.
அவருக்கும் இந்து என்ற சொல் தெரியாது. வெள்ளைக் காரர்கள் காலத்தில், இஸ்லாமியர்கள்தான் நம்மை சிந்துநதிக் கரைக்கு அந்தப் புறம் இருக்கின்றவர்கள் என்று அடையாளப் படுத்துவதற்காக சிந்துஸ் - இந்துஸ் என்றெல்லாம் சொன் னார்கள். வெள்ளைக்காரர்கள் அந்தச் சொல்லையே முழு வதுமே அரசாங்க ஏட்டில் ஏற்றிவிட்டான். பிறகு காலப் போக்கில், சிவ மதம் என்றானது; இப்பொழுது சிவ மதம் எல்லாம் போய், எல்லாம் இந்துவாகி, அவியலாக்கி விட்டார்கள்.
சைவனும் கிடையாது; வைணவனும் கிடையாது; நாத்திகனும் கிடையாது; எல்லோரும் இந்து. இந்து அறநிலையத் துறை என்று இருப்பது தவறு. அது இப்பொழுதுதான் எனக்கு உரைக்கின்றது. அது நியாயமாக, திராவிட சமயங்களின் அறநிலையத் துறை என்று இருக்கவேண்டும். நான் சொல்கி றேன், இந்த அரசாங்கம் அதனை மாற்றவேண்டும்; இல்லா விட்டால், இன்னும் உணர்விருப்பவர்கள் அதனை மாற்றவேண்டும்.
இந்து என்பது உன்னைச் சூத்திரனாக்குகின்ற முயற்சி!
இந்து அறநிலையத் துறை? நாங்கள் எப்படா இந்து? எங்களுக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்து என்றால், வேதத்தின் மேலாண்மை; இந்து என்பது ஆரிய மேலாண்மை; இந்து என்பது உன்னைச் சூத்திரனாக்குகின்ற முயற்சி. நாம் திராவிடனாக அடையாளம் காணவேண்டுமே தவிர, தமிழனாக அடையாளம் காணவேண்டுமே தவிர, நாம் இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வது என்பது இழிவானது.
ஆகவே, இதனைச் செய்தவர்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள். அய்யா வீரமணியைப் போல நாத்திகனாக மாறுங்கள்; அல்லது ஆத்திகனாக இருங்கள்; இந்துவாக இருக்காதீர்கள். அதுதான் மிக முக்கியமானது. இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, இந்த இந்துத்துவாவினு டைய நெருக்கடி; அது இப்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆகவே, அதனை எதிர்கொள்வது என்பது எளிதல்ல.
திராவிடன் என்று சொல்லும்பொழுது, தமிழன் என்று சொல்லும்பொழுது நம்முடைய ஹாஜாக்கனியும், நம்முடைய ஜெகத்கஸ்பரும், நம்முடைய மெய்யப்ப சாமிகளும், அய்யா வீரமணி அவர்களும் எல்லோரும் சமம். நாம் இனத்தால் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்பது ஒரு நிலை. ஆனால், இந்து என்று சொல்கிறபோது முஸ்லிம் ஒரு நிலை கொள்கிறார்கள்; மற்றவர்கள் எதிர்நிலை கொள்கிறார்கள். இந்து மதம் என்பது பிரிக்க வந்த மதம். அவர்கள் ஒரு பெரிய அகண்ட இந்து நாட்டை உருவாக்க முயன்றார்கள். வீரசவர்க்கார் ஏற்படுத்திய அந்தக் கொடுமை, இன்றைக்கும் இந்த நாட்டை விட்டுப்போக மறுக்கிறது. ஆகவே, நான் சொல்கிறேன், அது வேரூன்ற முடியாத ஒரே ஒரு இடம் தமிழ்நாடுதான். அதற்குக் காரணம், இந்த மண்ணை பெரியார் அவர்கள் செம்மைப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். அதனால் அவர்கள் நினைப்பது எளிதல்ல.
ஆனால், நாம் உறங்கிவிட்டால், மீண்டும் அவன் வந்து நம்முடைய தலையை மிதித்துவிடுவான். ஆகவே, நம்முடைய வீரமணி அய்யா போன்றவர்கள் மீண்டும் ஒரு பெரியாராக உருவாகவேண்டிய காலம். நடுவில்கூட கொஞ்சம் மிதமாக இருந்திருப்பார்கள். அய்யா சொன்னதை திரும்பச் சொல்லிக் கொண்டிருப்போம் என்று அவர்கள் கொஞ்சம் மிதமாக இருந்திருப்பார்கள். ஏனென்றால், நெருக்கடி வரவில்லையே என்பதினால்.
(தொடரும்)

திராவிட இயக்கத்தின் எழுச்சிக் காலம் இது
திராவிட இனம் உள்ளவரை பெரியார் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா எழுச்சியுரை!
காரைக்குடி, டிச. 20- திராவிடர் இனம் உள்ளவரையிலும் பெரியாரின் பெயரை சொல்லக் கொண்டே இருப்பார்கள் என்றார் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் பழ.கருப்பையா அவர்கள்.
21.11.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற காந்தியத் தொண்டர் மன்றத்தின் சார்பில் ‘யாராயினும் தமிழரே! திராவிடரே!’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா உரையாற்றினார்
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
டிஜிட்டல் பேனர் குப்புறப்படுக்கும்போது, நம்முடைய புகழும் குப்புற விழுகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை
களவாணி வந்து வீட்டை உடைத்துவிடுவான் என்றால் தானே, நாம் கதவை பலமாக வைத்திருப்போம்; தாழ்ப்பாளை பலமாகப் போடுவோம். அத்தகைய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த இந்துத்துவா நெருக்கடிக்கு மாறாக, நாம் தமிழன் என்றும், திராவிடன் என்றும் - என்ன ஜாதியாக வேண்டுமானாலும் இருங்கள்; என்ன மதமாக வேண்டுமானாலும் இருங்கள்; வேற்றுமை பாராட்டாதீர்கள்.
உடனே நாம் செய்யக்கூடியது என்ன வென்றால், வேற்றுமை பாராட்டாமல் இருக்கவேண்டும். நாம் இனமாக இருப்பதற்கு, திராவிடனாக, தமிழனாக - அடை யாளங் காண்பது என்பது நாம் இனத்தோடுதான் இருக்க வேண்டும். அதுதான் அப்பர் காலத்து முயற்சி; தமிழர்கள் பக்தி இயக்க காலத்தில் ஒருமைப்படுத்தப்பட்டார்கள்.
சைவ இயக்கம் அதற்குப் பயன்பட்டது. பெரியார் காலத்தில் மீண்டும் தமிழர்கள் ஒருமைப்படுத்தப்பட்டார்கள். அதற்குப் பெரியாரும், திராவிட இயக்கமும் காரணமானது. ஆகவே, சிந்துசமவெளி நாகரிக காலத்தில் ஆரிய எதிர்ப்பை நாம் மேற்கொண்டோம்.
சிந்து சமவெளி நாகரிகக் காலம் மீண்டும் பக்தி இயக்கக் காலம்; வரலாற்றில் மூன்று காலம்தான் தமிழர்களுக்கு உரிய காலம். மூன்றாவது காலம் பெரியாருடைய திராவிடர் இயக்கக் காலம். இதுதான் வரலாற்று மாற்றங்கள். மற்றவையெல்லாம் வரலாற்றினுடைய மாற்றங்கள் அல்ல. எத்தனையோ பேர் வருவார்கள்; அப்படியே தடவி கொடுத்துவிட்டுப் போவார்கள்; தலைவர்களாக கொஞ்சம் காலம் நிற்பார்கள்.
டிஜிட்டல் பேனர்களை ஒவ்வொரு தந்திக் கம்பத்திற்கும் வைத்தால், புகழ் பெற்றுவிடலாம் என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள். மறுநாள் அந்த டிஜிட்டல் பேனர் குப்புறப்படுக்கும்போது, நம்முடைய புகழும் குப்புற விழுகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
கழிவு நீர் இணைப்பு வேண்டும் என்றால், கவுன்சிலருக்குப் படியளக்கவேண்டும்
அரசியல்வாதிகள் அவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு மெத்தையா தைத்துப் படுக்கப் போகிறீர்கள். உங்கள் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டும் என்றால், கவுன்சிலருக்குப் படியளந்தால்தான் நீங்கள் குடிநீர் இணைப்பு பெற முடியும். கழிவு நீர் இணைப்பு வேண்டும் என்றால், கவுன்சிலருக்குப் படியளக்கவேண்டும். அப்படி இல்லை என்றால், கழிவு நீர் வெளியேற வழி இருக்காது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், அதிகாரிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் கைகோர்த்துக் கொண்டுவிட்டார்கள். பெருந்தீமை அதுதான்.
இந்த ஆட்சியில் இருப்பவர்கள் தலைவர் செய்வதற்கு, மறுப்பதற்கு உள்ள அதிகாரத்தை - வல்லபாய் பட்டேல்  அதிகார வர்க்கத்திற்குக் கொடுத்தார்.
ஆட்சியில் இருப்பவர்கள் திருட்டுப் பயல் என்று அவர் நினைத்தார். அதனால், அதிகார வர்க்கத்தை அய்.ஏ.எஸ். படிக்க வைத்து அவர்களை பணியில் இருந்து விலக்கமுடியாது. ஊர் விட்டு ஊர் மாற்றலாம். கைத்தறி துறையிலிருந்து அவரை அறநிலையத் துறைக்கு மாற்றலாமே தவிர, அந்த அதிகாரியே ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் பாதுகாப்புக் கொடுத்தார்.
கான்ஸ்டிடியூஸ்னல் கேரண்டி ஒரு அதிகாரிக்குக் கொடுத்த காரணம், டேய், நாசமாய் போன பயலுகளா, இந்த ஆட்சியில் இருக்கின்றவர்களின் சொல்வதைக் கேட்காதடா, சட்டப்படி செய்தால் ஆமாம் என்று சொல்; இல்லையென்றால் போடா நாயே என்று சொல். நீ கையெழுத்துப் போடவில்லை என்றால் என்ன நடக்கும்? இந்தக் காண்ட்ராக்டர் எல்லாம் கொள்ளை யடித்து அமைச்சர்களுக்குப் பணம் கொடுக்கிறார்களே, அந்த அரசு அதிகாரி கையெழுத்துப் போடுவதனால்தானே. அந்த அதிகாரி என்ன சொல்லவேண்டும், இல்லீங்க, நீங்க 40% அடிப்பது நியாயம் இல்லீங்க என்று சொல்லவேண்டாமா? காரைக்குடி சாலையைப் பாருங்கள்; குதிரைவண்டி சாலையி லிருந்து முட்தாளம்மன் கோவில் செல்வதற்கு ஒரு சாலை இருக்கிறது; அது சிமெண்ட் சாலை. இந்த சிமெண்ட் சாலை போட்டு மூன்றாவது மாதத்தில் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
மைக்கேல் உடையார் அவர்களால்
1952 ஆம் ஆண்டு போடப்பட்ட சிமெண்ட் சாலை
ரயில்வே நிலையத்திலிருந்து எடத்தெருவிற்கு ஒரு சாலையைப் போட்டார்கள்; மைக்கேல் உடையார் அந்த சாலையைப் போட்டார் - 1952 ஆம் ஆண்டில். நான் சிறிய பிள்ளையாக இருக்கும்போது நான் போய் பார்த்தேன். 52 ஆண்டுகளாக அந்த மைக்கேல் உடையார் போட்ட சாலை இன்றைக்கும் அப்படியே இருக்கிறது அந்த சிமெண்ட் சாலை. நான் கேட்கிறேன், அந்த ரயில்வே சாலைக்கு மைக்கேல் உடையார் சாலை என்று பெயர் வைக்கவேண்டும். சாலை போடும் காண்ட்ராக்டர் என்ன நினைப்பார்கள், நம்முடைய பெயரையும் வைப்பார்களே, நல்லபடியாக சாலையைப் போட்டால் என்று நினைப்பார்களே! அவர்களது பிள்ளை களும் நம் அப்பா பெயரில் இந்த சாலை இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைவார்கள்.
அதேபோன்று, படுமோசமாக யார் சேர்மனாக இருக்கையில், யார் எம்.எல்.ஏ., இருக்கையில், யார் எம்.பி.,யாக இருக்கையில், அந்தக் குதிரை வண்டி ஸ்டேண்டில் இருந்து வருகிற சாலைக்கு அவர்களுடைய பெயரை சூட்டவேண்டும். அப்பொழுது தெரிந்துகொள்ளலாம், ஓ! இந்த சாலையை இவர்கள்தான் போட்டார்களா? என்று தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட இரண்டையும் செய்து பாருங்கள்! தகுதியான வர்களின் பெயர்களில் இவைகள் எல்லாம் அமையவேண்டும். அப்படியென்றால், தகுதி வளரும். நீ தகுதியைப் போடாத தினால்தான், தகுதி வளருவதில்லை.
என்னய்யா, உங்க எம்.எல்.ஏ., 10 கோடி அடித்துவிட்டான்; நீ என்னய்யா வெறுமனே கோவணத்தோடு திரிகிறாயே என்று கேட்டால், கொஞ்ச நாளில் அவன் கருமாதிதான்; ஆகா, என்னடா, இது நான்கு மாதத்தில் ஆட்சி முடிந்துவிடுமே, பிறகு மானப்பட்டறையிலேயா குடியிருப்பது, நாமும் ஏதாவது பார்ப்போமோ என்று நினைக்கிறார்கள்.
நம் மக்களுடைய மனப்பான்மையை, தகுதியைப் போற்றுகின்ற தன்மை இருந்தால், தகுதி வளரும்.
காந்தி ஒழிக என்று சொல்லியே, காந்தியினுடைய வழியை பெரியார் பின்பற்றினார்!
காந்தி தகுதியைப் போற்றுகின்ற தன்மையை உலகத்தில் முதன்முதலாக ஏற்படுத்தினார். ஆயிரம் ஆண்டுகளாக நாசமடைந்து கிடந்த இந்தியாவில் காந்திதான் நெறி சார்ந்த வாய்ப்பை உண்டாக்கினார். அதனால்தான் பெரியார்கூட பாருங்கள், கம்பு எடுத்து உதைக்காமல், கத்தி எடுத்து குத்தாமல், அதே அறவழிப் போராட்டங்களை நடத்தி இந்த சமுதாயத்தை மாற்றி அமைத்தார். காந்தி ஒழிக என்று சொல்லியே, காந்தியினுடைய வழியை பெரியார் பின்பற்றினார். அதுதான் பெரியாரிடம் உள்ள பெரிய சிறப்பு.
காந்தி ஒழிக என்பார்; பிறகு அவர் காந்தி இறந்தவுடன், இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள் என்பார்.
பெரியார் கடைபிடித்த நெறிகள் முழுவதும் காந்திய நெறிகள்தான். பேசும்போது கடுமையாகப் பேசுவார். ஆனால், யாருக்கும் எந்தத் தீங்கும் நிகழ்ந்தது கிடையாது.
நாம் தமிழர்களாக உணர்வதும், திராவிடர்களாக நம் முடைய இனத்தை அடையாளங்காட்டிக் கொள்வதும்தான் மிகவும் முக்கியமானது. இந்த இன உணர்வு கொண்ட கவிஞ ர்கள் இப்பொழுது இல்லை. பாரதிக்கு மாற்றாக பாரதிதாசன் அமைந்தார். பாரதி தேசியத்தைத் தூக்கி நிறுத்தவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்தார்; அதனால் அவர் விடுதலையைப் பற்றி பாடினார். அதற்கு அடுத்த காலகட்டம், பெரியாருடைய காலகட்டம். இந்த சுயமரியாதையையும், இன உணர்வையும் தூக்கி நிறுத்துவதற்காக பாரதிதாசன் பாடினார்.
நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
என்சாண் நாடெலாம் வாழ்ந்தான்
என்று எழுதுகிறார்.
பாரதிதாசன் அவர்கள் தமிழைப் பற்றி எழுதியிருக்கின்ற பாடல்களை நீங்கள் எல்லாம் படித்தீர்கள் என்றால், ஒவ்வொரு மயிர்க்காலும் சிலிர்க்கும்.
கன்னடம் தெலுங்கு மலையாளம் களிதுளுவம்
முன்னடைந்து மூவாது முன்பகைக்கும்
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே
என்றார் பாரதிதாசன்.
இப்பொழுதும் கவிதை எழுதுகிறார்கள்,
“மடத்தில் கற்பு பத்திரம் -
கல்யாணத்தில் செருப்பு பத்திரம்”
இது உண்மைதான். ஆனால், நம்முடைய சாமி அப்படி இல்லை.
இதுபோன்ற நக்கல்கள் மட்டும் கவிதைகளாகாது; இன எழுச்சிப் பாடல்களாகாது.
பாரதிதாசனுக்குப் பிறகு அந்த நிலை முற்றிலுமாகப் போய்விட்டது.
ஒவ்வொரு காலகட்டத்தில் தேவையை நிறைவு செய்கின்ற வகையிலும், ஒரு குறிப்பிட்ட தன்னலமிக்கக் கூட்டத்தின் தேவையை நிறைவு செய்கின்ற வகையிலும் இலக்கியங்கள் பிறந்திருக்கின்றன.
நம்முடைய திராவிட இயக்கக் காலம் என்பது வேறு; பாரதிதாசன் காலம் என்பது. பாரதியின் தேசிய இயக்கக் காலம் என்பது வேறு.
எல்லாக் காலத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள்; கெட்டவர்களும் இருப்பார்கள்
இன்றைக்கு ஒரு கொள்கையும் நாட்டில் கிடையாது. காந்தி எல்லா இளைஞர்களையும் பார்த்து, நீங்கள் எல்லாம் பொதுவாழ்க்கைக்கு வாருங்கள் என்று அழைத்தார். எல்லா யோக்கியனும் காந்தி நம்மை கூப்பிடுகிறார் என்று வந்து விட்டார்கள். எல்லா அயோக்கியனும், நம்மை கூப்பிடவில்லை என்று ஒதுங்கிவிட்டார்கள்.
இப்பொழுது உள்ள தலைவர்கள் இளைஞர்களைப் பொது வாழ்க்கைக்கு வாருங்கள் என்று அழைத்தால், எல்லா அயோக் கியனும் நம்மைத்தான் கூப்பிடுகிறார் என்று உள்ளே வந்து விட்டார்கள். எல்லா யோக்கியனும் நம்மை கூப்பிடவில்லை என்று ஒதுங்கிவிட்டார்கள். எல்லாக் காலத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள்; கெட்டவர்களும் இருப்பார்கள். யாருடைய கை எந்தக்காலத்தில் ஓங்குகிறது என்பதை வைத்துத்தான் ஒரு நாட்டினுடைய மேன்மை இருக்கிறது.
ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் இருந்த மிகச் சிறந்த மனிதர்களை காந்திக்குக் கொடுத்தது
எல்லா காலத்திலும் தூயவர்கள் இருப்பார்கள்; காந்தி இளைஞர்களை அழைத்தபோது, முத்துராமலிங்கத் தேவர் - தேவர் சமுதாயத்தின் சார்பில் வந்தார் - அருமைத் தலைவர் காமராசர் அவர்கள் - நான் அவரிடம்தான் புடம்போட்டு வளர்ந்தவன்; என்னைத் தோளில் ஓங்கி அடித்துச் சொல்வார், நெடுமாறனிடம் சொல்வார், நம்ம கருப்பையா இருக்கானே, அவன் காரைக்குடி முனிசிபாலிட்டியைப்பற்றி தீர்மானம் போடமாட்டான்; கம்போடியாவைப்பற்றி தீர்மானம் போடுகிறான் என்று சொல்லி பாராட்டுவார். காமராசர் - நாடார் சமுதாயத்திலிருந்து வந்தார். ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - ரெட்டியார் சமுதாயத்திலிருந்து வந்தார்; குமாரசாமி ராஜா - ராஜூக்கள் சமுதாயத்திலிருந்து வந்தார். பார்ப்பன சமுதாயத்திலிருந்து பார்ப்பனர் ராஜாஜி வந்தார்.
இப்படி ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் இருந்த மிகச் சிறந்த மனிதர்களை காந்திக்குக் கொடுத்தது.
ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் இருக்கின்ற மோசமான மனிதர்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்திருக்கிறது
இப்பொழுது 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் இருக்கின்ற மோசமான மனிதர்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த சமுகம் என்ன நினைக்கிறது என்றால், எங்கள் சமூகத்தை விட்டுவி டாதீர்கள். நல்லவன் வேண்டும் என்றால் நல்லவனை தருகி றோம்; மோசமானவன் வேண்டும் என்றால், அவனை தருகி றோம். எங்களை வெளியில் தள்ளிவிடாதீர்கள்; எங்கள் சமுதா யத்திற்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்பதுதான் அதனு டைய அடிப்படை.
ஆகவே, இத்தகைய ஒரு காலகட்டத்தில், மீண்டும் நெறிசார்ந்த வாழ்வை தூக்கி நிறுத்தவும், மீண்டும் இனம் சார்ந்த வாழ்வைப் புதுப்பிக்கவுமான ஒரு காலகட்டம் ஏற் பட்டிருக்கிறது.
ஒரு கதையைச் சொல்லி என்னுடைய உரையை முடிக்கிறேன்.
பார்ப்பனனைக் கொலை செய்தால்
பிரம்மகத்தி தோஷம் பிடிக்குமாம்!
ஒரு பார்ப்பனன்; அவன் தாயோடு உறவு வைத்திருந்தான். அவன் தந்தைக்கு இது தெரிந்தது. ஆனால், இதை நாம் பெரிதுபடுத்தவேண்டாம்; அசிங்கமாகப் போய்விடும் என்று அதைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். தாயும் - மகனும் ஒரு மோசமான உறவில் ஈடுபட்டார்கள். தந்தை இருப்பது இடைஞ்சல் என்று அந்தப் பார்ப்பனன் கருது கிறான். ஒரு நாள் தந்தையைக் கொல்வதற்குத் தயாராகி விட்டான். அப்பொழுது தாய் சொல்கிறாள், அடப்பாவி நான் பெற்ற மகனாகிய நீ என்னைக் கெடுப்பதற்கு, நான் உடந்தையாக இருந்த பாவமே என்னை விட்டுப் போகாது! இதில் நீ அப்பனை வேறு கொல்வேன் என்கிறாய்! அந்தப் பாவம் நம்மை விட்டுப் போகாது. நீ அதனை செய்யாதே என்று சொலகிறாள் அந்தத் தாய்.
ஆனால், அந்தப் பார்ப்பனன் தன்னுடைய தந்தையைக் கொன்றுவிட்டான். அப்படி கொலை செய்தவுடன், அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்துக் கொண்டுவிட்டது. பிரம்மகத்தி தோஷம் என்பது, பார்ப்பனனைக் கொலை செய்தால் உங்களுக்கு வருகிற தோஷம்.
தாயைப் புணர்ந்ததற்காக ஒரு தோஷமும் இவனைப் பிடித்துக் கொள்ளவில்லை. தந்தையைக் கொலை செய்ததற்காகவும் தோஷம் பிடித்துக் கொள்ளவில்லை. அவன் பார்ப்பனனாக இருந்த காரணத்தினால், பார்ப்பானைக் கொன்ற கொலைக்கான பாவம், இந்தப் பார்ப்பானை வந்து சேர்ந்தது.
அந்தப் பார்ப்பான் மதுரைக்குச் சென்று சொக்கனிடம் வேண்டிக் கொண்டான். “பிரம்மகத்தி தோஷம்” என்னைப் பிடித்துவிட்டது. என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று சொக்கனிடம் உருகி உருகி பல நாள் வேண்டிய பிறகு, சொக்கன் மனம் இறங்கி, அந்தப் பார்ப்பானை பிரம்மகத்தி தோஷத்திலிருந்து விடுபட ஒரு யோசனை சொல்கிறார், நீ கையிலே பிச்சை எடுத்து ஒரு மாதம் சாப்பிடவேண்டும்; பசுக்களுக்கு அருகம்புல் கொடுக்கவேண்டும்; சிவன் கோவிலில் 108 முறை அங்கப்பிரதட்சணம் செய்யவேண்டும். சிவனடியார்களுக்கு குற்றேவல் செய்யவேண்டும். தீர்த்தத் தொட்டியில் வருகிற தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டு வாயில் உறிஞ்ச வேண்டும். இதனை நீ 48 நாள்கள் செய்தால், பிறகு உனக்கு பிரம்மகத்தி தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று சிவன் அந்தப் பார்ப்பனனிடம் சொல்லி விட்டான்.
உடனே மீனாட்சி பதறிப் போய், என்னங்க நீங்க, அவன் ஒரு அயோக்கியப் பயல், பெற்ற தாயையே உறவு கொண்டவன். இவனைப் போய் நீங்கள் காப்பாற்றுகிறீர்களே, நீங்கள் கடவுளா என்பது எனக்கே யோசனையாக இருக்கிறது என்று கேட்ட போது,
அதற்கு சிவன் சொல்கிறான்,
அடுபழி அஞ்சா நீச
னாயினும், நினைக்கின், அச்சம்   
படுபழி அஞ்சான் செய்த         
பாதகத் தொடக்குண்டு எங்கும்    
விடுவகையின்றி, வேறு         
களைகணும் இன்றி, வீயக்   
கடவனைக் காப்பதன்றோ         
காப்பு என்றான் கருணை மூர்த்தி.
என்று சிவன் சொன்னானாம்.
இலக்கியங்கள் எல்லாம் சிறந்தவை என்று சொல்ல முடியாது
இது எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. பார் ப்பனன் பிழை செய்தால் தண்டனைக்குரியவன் இல்லை. பார்ப்பனன் தாயைப் புணரலாம், தந்தையைக் கொல்லலாம்; தகப்பன் திராவிடனாக இருந்தால் கொல்லலாம்; ஆரியனாக இருந்தால் கொல்லக்கூடாது என்று திருவிளையாடல் புராணத்தில் கதை எழுதினார்கள்.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் மேட்டுமையான இனம், தன்னுடைய தன்னல அக்கறை சக்திகளை நிலைநாட்டிக் கொள்வதற்காக, இதுபோன்ற இலக்கியங்கள் உருவாவதற்குத் துணை போகின்றன. ஆகவே, இலக்கியங்கள் எல்லாம் சிறந்தவை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமும் அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்தத் திருவிளையாடல் புராணக் காலம் என்பது தமிழர்களின் மிக நீசமான நிலையை அது வெளிப்படுத்து கிறது. அதிலிருந்து வேறுபட்ட நிலைமை, பெரியாருடைய திராவிட இயக்க காலகட்டத்தில்தான் வருகிறது என்று சொல்லிவிட்டு,
இதுபோன்ற ஒரு நிலையில், நான் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருங்கள்; எந்த மதமாக வேண்டுமானாலும் இருங்கள்; பேதம் பாராட்டாதீர்கள். இரண்டாவதாக இன அடையாளத்தை மட்டுமே மேற்கொள் ளுங்கள். நான் என்னுடைய ஜாதியில்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், என்னை உருவாக்கியது ஜாதியினுடைய நீர்மைகள் அல்ல. சங்க இலக்கியம், திருக்குறள், நம் எல்லோரையும், எல்லா ஜாதியினரையும் உருவாக்கிய சங்க இலக்கியம், திருக்குறள், சித்தர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு நிலைகளும், பின்னால் வந்த பெரியார் இயக்கம் போன்ற வையும், அண்ணா இயக்கம் போன்றவையும் இவையெல்லாம் சேர்ந்துதான் நம்மை முழுமையாக ஆக்கியிருக்கின்றன.
ஜாதி என்பது ஒரு சிறுகூட்டம்; அது திருமணம் செய்து கொள்வதற்குப் பயன்படுகிறது, விரும்பியவர்களுக்கு. ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்குள் நுழைந்து கொள்கிறார்கள். அதைத் தவிர, ஒரு மனிதனை உருவாக்கக்கூடிய ஆற்றல், ஜாதிக்குக் கிடையாது. மதத்திற்கு  ஓரளவு உண்டு. இருந்தாலும், அது வேற்றுமையையும் சேர்த்து வளர்க்கிறது.
நம்மை உருவாக்கியது நம்முடைய தமிழ்மொழிதான்!
ஆகவே, நான் சொல்கிறேன், நாமெல்லாம் ஹாஜாக்கனி யாக இருந்தாலும், அய்யா வீரமணியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நம்மை உருவாக்கி, இந்த நாகரிகத்திற்கும், இந்தப் பண்பாட்டிற்கும் உருவாக்கியது நம்முடைய தமிழ் மொழி.
அந்த மொழியிலுள்ள அரிய இலக்கியங்கள்; நம்முடைய வள்ளுவனைப்போன்ற பெருந்தகைகள்; இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் நம்மை உருவாக்கியிருக்கிறார்கள்.
தமிழன் நாகரிகம் சிறந்தது என்று சொன்னால், 2000, 3000 ஆண்டு நாகரிகம் சிறந்தது என்று சொன்னால், தமிழ் மொழி அந்த நாகரிகத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு வருகிறது. நாம் மனிதனாக வாழ்வதற்கு நம்முடைய மொழிதான் காரணம். ஆகவே, நம்முடைய முகம் மொழிதான். நம்முடைய இனத்தின் அடையாளம் மொழிதான். மொழி அழியுமானால், இனம் அழிந்துவிடும். நாம் பல்வேறு ஜாதிகளாகவும், மதங்களாகவும் பிளவுபட்டுப் போய்விடுவோம். இவற்றிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள,
திராவிட இனம் உள்ளவரையிலும் பெரியாரின் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்!
ஆதிசங்கரரே திராவிடன் என்று ஞானசம்பந்தரைப் பழித்தார் என்றால், இந்தத் திராவிடன் என்கின்ற சொல், 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கப்பட்டிருக்கிறது. கார்டுவெல் வந்தார், நம்முடைய தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துச் சொன்னார். ஏன் ஆரியத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறாய் என்று  கேட்டார்; விழிப்புப் பிறந்தது; திராவிடர் இயக்கம் பிறந்தது. பெரியார் செய்த மாபெரும் செயல், சுயமரியாதை இயக்கத் தோடு பெரியார் நின்றிருந்தால், 30 ஆண்டுகளுக்கு வாழ்ந் திருப்பார். அந்தக் காலகட்டத்தில் உள்ள தீமையை ஒழித்திருப் பார். ஆனால், சுயமரியாதைக்குமேல் வளர்ச்சி அடைந்து, நம்மை திராவிடர்கள் என்று இனம் கண்டு, திராவிடர் கழகம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, நம்மை இன வழியாக அடையாளங்காண்பதற்குப் பழக்கினாரே, அதுதான் இந்த திராவிட இனம் உள்ளவரையிலும் பெரியாரை வாழ வைக்கப் போகிறது என்பதை நான் சொல்லிக் கொண்டு,
வேற்றுமை பாராமல் வந்திருக்கிறார்கள்!
இந்த விழாவிற்கு படிக்காசு வந்திருக்கிறார்; நம்முடைய பழைய எம்.எல்.ஏ., துரை வந்திருக்கிறார்; முன்னாள் அமைச்சர் தென்னவன் வந்திருக்கிறார்; நம்முடைய மேலான பொறியாளர் நடராசன் வந்திருக்கிறார்; நம்முடைய அசோகன் வந்திருக் கிறார். இவர்கள் எல்லாம் நான் சார்ந்திருக்கின்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. வேற்றுமை பாராமல் வருகிறார்கள் என்று சொல்கிறேன்.
நாங்கள் அழைப்புப் போடும்போது, கட்சிப் பாராட்டி அழைப்புப் போடுவதில்லை. நான் கொஞ்சம் அதிகமாக காலை விட்டால், அந்தக் கட்சி அடையாளம் வந்துவிடும் என்ப தற்காக, விஜயராகவன் அவர்களின் முழுப் பொறுப்பில்தான் இந்த அமைப்பை வைத்திருக்கிறோம்.
அதனால், இதில் கட்சி வேறுபாடு பாராமல், நம் எல்லோரும் தமிழர்கள்தான். இவன் சொத்தை அவன் அள்ளிக்கொள்வதுபோன்று, அவன் சொத்தை இவன் அள்ளிக் கொள்வதுபோன்று, ஒருவருக்கொருவர் பேசுவதில்லை; இவர்கள் பேசினால்,  உடனே கட்சியை விட்டு நீக்குவது - இப்படியெல்லாம் இருந்தால் என்ன செய்வது? திராவிட இனம் சிதைவு பட்டுவிடும். இரு வேறு கட்சிகளின் கருத்தைச் சொல்வதற்காகத்தானே சட்டசபை இருக்கிறதே,
நாம் இந்துத்துவாவை எதிர்கொள்ள,
ஒன்று திரண்டு நிற்கவேண்டும்
ஈழத் தமிழர்களுக்கு சிக்கல் வந்தபோது நாம் எப்படி ஒன்று பட்டு நின்றோமோ, எல்லா தமிழர்களும், எல்லா ஜாதியினரும், எல்லா மதத்தினரும் ஒருமையில் திரண்டு நின்றார்கள். அதுபோன்ற ஒரு உணர்வோடு, நாம் இந்துத்துவாவை எதிர்கொள்ள, ஒன்று திரண்டு நிற்கவேண்டும் என்று சொல்லி,
இந்த மன்றம் தொடங்கி 45 ஆண்டுகளாகிறது; நாங்கள் இந்த மன்றத்தினைத் தொடங்கும்பொழுது எனக்கு 25 வயது. ஆகவே, இந்த மன்றம் நீடித்து வாழவும், இதனுடைய செயல் பாடுகள் சிறக்கவும் நான் இந்த இளைஞர்களை வாழ்த்து கிறேன்.
திராவிட இயக்கத்தின் 
எழுச்சிக் காலம் இது!
இளைஞர்களையே, காணோம் என்று சொன்னார் நம்முடைய சாமி அவர்கள். சிறிய வயது இளைஞர்கள் எல்லாம் இந்த மன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டி, நம்முடைய திராவிட இயக்கத்தின் எழுச்சிக் காலம் இது.
இந்துத்துவத்தை எதிர்கொள்ளவேண்டிய காலம் இது. வீரமணி மீண்டும் ஒரு பெரியாராக உருவாகவேண்டிய காலம் இது என்று சொல்லி,
சாக்காடு எனைத் தொடர்ந்து வந்தால் என்ன
சமுதாயம் எனைத் தூக்கி எறிந்தால் என்ன
ஆக்கமெல்லாம் நான் இழந்து தவித்தால் என்ன
அடுக்கடுக்காய் துயர்கள் எனை வதைத்தால் என்ன
தூக்கி எனை வளர்த்தவரே வெறுத்தால் என்ன
துணைவர்களே பகைவர்களாய்ப் போனால் என்ன
நாடிருக்கும் வரைக்கும் தமிழைப் பாடி
நானிருப்பேன் நானிலத்தில் நல்லதை நாடி
என்று சொல்லி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,19,20.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக