புதன், 31 ஆகஸ்ட், 2016

மொகஞ்சதாரோ ஆரிய நாகரிக நகரமாம்!

பார்ப்பனர்களின் தகிடுத்தத்தம்!
மொகஞ்சதாரோ
ஆரிய நாகரிக நகரமாம்!

மின்சாரம்
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த மொகஞ்சதாரோ  பெயரில் திரைப் படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க திராவிட கலாச்சாரம் என்பதை மறைத்து வேத காலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க ஆரியக் கலாச்சாரம் முழுவதும் திரைப்படத்தில் காண்பித்தி ருக்கின்றனர். இதன் பின்னணியில் பார்ப்பன சக்திகள் இருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு பாஜக முதல் முத லாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்களை முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் மற்றும் மகாராஷ்டி ராவில் சிவசேனா-பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி) வைக்கப்பட்டிருந்த சிந்து சமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதி யில் திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இன்றுவரை அது அப்படியே உள்ளது.
ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில்
தற்போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அது ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில் என்று காண்பிக்கும் வேலை திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விமானம் என்பது வேத காலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி, சில கட்டுகதைகளை வைத்து ஹவாய்ஜாதா என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்ததாகவும், அதை மும்பை கடற்கரையில் வெற்றி கரமாக பறக்கவிட்டதாகவும் காட்டப்பட் டிருந்தது.
தற்போது திராவிட பண்டைய கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழும் மொகஞ்சதாரோ என்னும் அழிந்து போன நாகரிக நகரை ஆரியர்களின் நகரமாகக் காண்பித்துள்ளனர். இந்தத் திரைப்படத் தின் பின்னணியில் மாடு பூட்டிய அலங் கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக்கருவிகள் போன்றவை அன்றைய கால கட்டத்தில் (கி.மு.3000) கிடைத்த புதை பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும் என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் நாங்கள் வேதகால மொகஞ்சதாரோவை மக்களின் கண் களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சம வெளி நாகரிக எச்சங்களை ஆரியக் கலாச் சார நாகரிகம் என்று காண்பிக்கும் பணி களை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களைத் திணிக்க முடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம், ஆங்கிலேயர் காலத் தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச் சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத் திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை விட்டு விட்டு மற்ற பகுதிகள் அனைத்துதையும் தனியார் களுக்கு சுண்ணாம்புப் பாறைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள்.
சிந்து வெளியில் குதிரைகள் எங்கே வந்தன?
இதன்மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக் கப்பட்டு விட்டது. இந்தப் படத்தில் குதிரை கள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராய்ச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும், ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர்  (1858-1931) என்பவர் கூறியிருந்தார்.
ஆனால் அந்தக் கழுதை எலும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால்  ரிக் வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப் பட்டுள்ளது. முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரைதான் மன்னருக்கெல்லாம் மன்னன் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த வாசகங்களை உண்மை யாக்க இந்த தந்திரங்களை திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவ லிங்கங்களை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக் கரையில் (கர்நாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவ லிங்கங்களை காண்பித்து அந்த பகுதி மொகஞ்சதாரோ மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காண்பித்துள்ளார்கள்.
சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்தோ அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரிகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும்போது மிகப்பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் சனாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து திராவிட நாகரிகத்தை அழிக்கும் செயலை மொகஞ்சதாரோ என்ற திரைப்படம் வாயிலாக காவி அமைப்புகள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்தத் திரைப்படத்திற்கு சனாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குநர்  அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதா அக்பர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும் இந்து மதத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்திருந்தார் என்றும் அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் படத்தில் காட்டி இருந்தனர். மேலும் பசுவதை செய் பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தனர்.
வரலாற்றைத் திரிப்பது, உருமாற்றுவது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையே! வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோ கர் ஜோஷி, கணினியைப் பயன்படுத்தி சிந்து சமவெளிபற்றிய கல்வெட்டுகளைத் திரிக்கும் வகையில் காளையை குதிரை யாக்கிக் காட்டினார் என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆரியராவது, திராவிடராவது என்று நம்மிடம் பேசுவார்கள்; அதேநேரத்தில், பார்ப்பனர்கள் தாங்கள் ஆரியர்களே என்ற உள்ளார்ந்த உணர்வோடு செயல்படுவார் கள் என்பதற்கு இந்தத் திரைப்படமும் ஓர் எடுத்துக்காட்டே!

கல்வெட்டு: மொகஞ்சதாரோ - அரப்பா...

மொகஞ்சதாரோ அரப்பா தொல் நகரங்களில் காணப்படும் சித்திர எழுத்துக்களை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980 ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துக்களைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்று உருசியப் பேரறிஞர் குனோரோசோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வால்டர் பேர் செர்வி என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்று மறுவுறுதிப்படுத்தி உள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியற் துறை அமெரிக்கன்(Scientific American) எனும் மாதவிதழில் (மார்ச் 1983) வெளிவந்துள்ளது.
- தமிழ்த் தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,
வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம், இலண்டன்

சிந்துவெளி நாகரிகம்
திராவிட மொழியைச் சார்ந்தது
- அய்ராவதம் மகாதேவன்

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்தது என்று கல் வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல் லியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற முனைவர்கள் எ.சுப்ப ராயலு, செ.ராசு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்ச தாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்து கிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக் கிறது.
இதற்கு இணையான வார்த் தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும் போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க் கும்போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்ததால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழியில் காணப்படு கின்றன என்பது என் கருத்து.
பாண்டியர்களின் மூதாதையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடு பட்டிருக்கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியி ருக்கலாம். இந்திய ஆரியப் பண் பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்துவெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டைவிட காலத் தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிகமாக இருப் பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என்பது எனது முடிவு என்றார் அய் ராவதம் மகாதேவன்.
(தினமணி, 29.1.2015)

20-08-2016 விடுதலை ஞாயிறு மலர் 

வரலாற்றைத் திரிக்கும் "மொகஞ்சதாரோ": வலுக்கும் எதிர்ப்பு


பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கிய இடம் பிடித்த மொஹன்சாதாரோ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார். நாளை (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) வெளிவரும் இந்த திரைப்படத்தில் சிந்து சமவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடப் பண்பாடே என்பதை மறைத்து வேதகாலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க, ஆரியக் கலாச்சாரமாக திரைப்படத்தில் திரித்துக் காண்பித்திருக்கின்றார்.
1996-ஆம் ஆண்டு பாஜக முதல் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்கள் முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது, 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக ஆட்சியும் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம்) வைக்கப்பட்டிருந்த சிந்துசமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதியில் திராவிட நாகரீகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத(unknown civilizations) நாகரீக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது, இன்றுவரை அது அப்படியே உள்ளது.
ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில்
தற்போது சிந்து சமவெளி நாகரீகம் குறித்து, அது ஆரியக்கலாச்சாரத்தின் தொட்டில் என்று திரித்துக் காண்பிக்கும் வேலை, திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விமானம் என்பது வேதகாலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி சில கட்டுகதைகளை வைத்து ஹவாய்ஜாதா என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்தாகவும் அதை மும்பை கடற்கரையில் வெற்றிகரமாக பறக்கவிட்டார் என்றும் காட்டப்பட்டிருந்தது.
தற்போது பண்டைய திராவிடர் பண்பாட்டின் சின்னமாகத் திகழும் மொகன்சதாரோ என்னும் அழிந்து போன திராவிட நாகரீக நகரை ஆரியர்களின் நகரமாக காண்பித்துள்ளனர். "இந்த திரைப்படத்தின் பின்னனியில் மாடு பூட்டிய அலங்கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக் கருவிகள் போன்றவை அன்றைய காலகட்டத்தில்  கி.மு3000) கிடைத்த புதைபொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும்" என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் "நாங்கள் வேதகால மொகஞ்சாதாரோவை மக்களின் கண்களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம்" என்றும் கூறியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக எச்சங்களை ஆரிய கலாச்சாரக நாகரிகம் என்று காண்பிக்கும் பணிகளை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களை திணிக்கமுடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத்திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தையும் தனியாருக்கு சுண்ணாம்புப் பாறைகளைவெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள். இதன் மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.
சிந்துவெளியில் குதிரைகள் எங்கே வந்தன
இந்தப் படத்தில் குதிரைகள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரீகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எழும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும் ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர் Gustaf Kossinna (1858-1931) என்பவர் கூறியிருந்தார். ஆனால் அந்த கழுதை எழும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால், ரிக்வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப்பட்டுள்ளது, முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரையின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாசகத்தை உண்மையாக்க இந்த திணிப்புகளை, திரிபுகளைத் திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவலிங்ககளை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக்கரையில் (கர்னாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவலிங்கங்களாகும். அவற்றைக் காட்டி அந்த பகுதி மொகஞ்சாதாரா மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுளளது. சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரீகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும் போது, மிகப்பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம், சனாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து 'மொகஞ்சதாரோ' என்ற திரைப்படம் வாயிலாக, திராவிட நாகரீகச் சான்றை அழிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள காவி அமைப்புகள் முன்வந்துள்ளன.
முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு சனாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு (Sanatan Trust) பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 'ஜோதா அக்பர்' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும், இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்றும், அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் காட்டி இருந்தார். மேலும் பசுவதை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரலாற்றுப் புரட்டைச் செய்யும் மொகஞ்சதாரோ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 விடுதலை

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

திராவிடர்க்கு உரிய ஒரேதிருநாள்!

- தந்தை பெரியார்
திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து, ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவனவாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி,  சரஸ்வதி பூசை, தீபாவளி, விடுமுறை இல்லாத பண்டிகைகள் _ கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத _ முக்காலத்திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்-காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.
கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம்
என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
(‘விடுதலை’ 30.1.1959)
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக் _ கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன-வென்றால், விவசாயத்தையும் வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘ஹார்வெஸ்ட் பெஸ்டிவல்’ (Harvest Festival) என்று சொல்லப்படுவதின் கருத்தும் இதுதான்.
என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு ‘இந்திரன் பண்டிகை’ என்றும் அதற்குக் காரணம் வெளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மை-யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக்கடவுளாகிய இந்திரனுக்-கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.
இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு-விடவில்லை.
இம்மாதிரியான இந்திர விழாபற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்ததாகவும், இந்து இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல், நடைபெறாமல் போகும்பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடுமாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி மக்களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி, அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப்பிடித்து காப்பாற்றினதாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், ‘எனக்கு ஒருநாள் பண்டிகை; உனக்கு ஒருநாள் பண்டிகையாக, மக்கள் முதல்நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான _ ஆபாச முட்டாள்தனமான கதைகளைக் கட்டிப் பொருத்திவிட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
மற்றும், இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதையையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்றுநாள் பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் புகுத்திவிட்டார்கள்.
நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திரும்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.
மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்-பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்துவருவதால் _ பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து, தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். மானமும் அறிவுமே மனிதற்கழகு.
(அறிக்கை _ ‘விடுதலை’ _ 13.1.1970)
-உண்மை,16-31.1.16

புதன், 10 ஆகஸ்ட், 2016

திராவிடர் என்பது - ஏன்?


- தந்தை பெரியார்


தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டு மென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண் டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்க ளிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லா மல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை  இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித் திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்ற வண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.

நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகியவர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறைகளும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கரவர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக் கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம் மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங் கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுப வத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான்.  எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவே ஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச் சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம்.

திராவிடம் - திராவிடர் என்பது

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி, ஙி, சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன்?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால்,

ஏற்பட்ட கெடுதி

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரண மாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரண மாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித் தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்துவிலகஆசைப்பட்டதால்தான்அக் கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இது வரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக் குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக்கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய் தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன்மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ்ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது.

திராவிடர் என்பதின் கருத்து

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன்.

நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும்.

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது...

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள்.
ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.
நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார் களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்த முமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை  அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.
உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா?

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவுவேண்டும். ஜாக் கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றது களுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும்.  சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை  இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும்.

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள்.

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.

அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில்
பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945
-விடுதலை,7.8.16