- திராவிடர் திருநாள் முதல் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பாமரன், இமையம், இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி சிறப்பு செய்தார்கள். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ப.க. பொதுச் செயலாளர் வீ. குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 17.1.2014).திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவினை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பலத்த கரவொலிக்கிடையே பறை இசை அடித்து தொடங்கி வைத்தார். (சென்னை பெரியார் திடல் - 17.1.2014)சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் தமிழர் திருநாள்பொங்கல் விழாவையொட்டி பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்தும் மூன்று நாள்கள் நடக்கும் சடுகுடு (கபாடி) போட்டி 2014
தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்சென்னை, ஜன. 18- தமிழர் திருநாள் பொங்கல் விழாவை யொட்டி பெரியார் விர விளையாட்டுக்கழகம் நடத்தும் மூன்று நாள்கள் நடக்கும் சடுகுடு (கபாடி) போட்டி சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நேற்று (17.1.2014) மாலை தொடங்கியது.தொடக்க விழாவிற்கு முன்னதாக இப்போட்டியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி, வீரர்கள் - வீராங்கனைகளை அறிமுகப்படுத்தி வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்தி பாராட்டி உற்சாகப்படுத்தி சடுகுடு போட்டியை தொடங்கி வைத்தார்.இப்போட்டி தொடக்க விழா விற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக தென்மண்டல பிரச்சார குழு செயலாளர் தே.எடிசன் ராஜா, பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் ப.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக சென்னை மாவட்ட கபாடி கழகச் செயலாளர் கோல்டு ராஜேந்திரன், தாம்பரம் மாவட்ட தி.க தலைவர் முத்தையன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விளையாட்டு போட்டிகளை பெரியார் வீரவிளையாட்டு கழக செயலாளர் இராமகிருஷ்ணன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணி களும் பங்கேற்று சிறப்பிக்கின்றன.முதல் போட்டியில் ஆண்கள் பிரிவில்: திராவிடர் அணியும், விக் ராந்த் அணியும், மிகவும் பரபரப்பாக விளையாடின. இந்தப் போட்டியில் திராவிடர் அணி வீரர்கள் (31-13) 18 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.முதல் போட்டி பெண்கள் பிரிவில்: திருவள்ளுவர் அணியும், பாரதி கலை கல்லூரி அணியும் மிகவும் பரப்பரப்புடன் விளையா டினர். திருவள்ளுவர் அணி (43 - 40) 3 புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றனர்.பெண்கள் பிரிவில் இரண்டாவது ஆட்டம் எத்திராஜ் காலேஜ் அணி துக்ஷஹளு அணியை (51-37) 14 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாவது ஆட்டம் பி.ஜி.பிரதர்ஸ் அணியும் அந்தோனி அம்மன் சிலை அணியும் விளையாடி பி.ஜி.பிரதர்ஸ் அணி (24-21) என்ற கணக்கில் 3 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.ஆண்கள் பிரிவில் மூன்றாவது ஆட்டம்: சென்னை மாவட்ட அணியும், அறிவுச் சுடர் அணியும் விளையாடி (16-1) என்ற கணக்கில் 15 புள்ளிகள் பெற்று சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்றது.ஆண்கள் பிரிவில் நான்காவது ஆட்டம்: தந்தை பெரியார் மதுரை அணி, டாக்டர் அம்பேத்கர் செலக்ட் அணியும் விளையாடின. இதில் (22-6) என்ற கணக்கில் 16 புள்ளிகள் பெற்று தந்தை பெரியார் அணி வெற்றி பெற்றது.தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா - திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா - சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாதமிழர் தலைவர் தலைமையில் பெரியார் திடலில் வெகுசிறப்பாக கொண்டாட்டம்சென்னை, ஜன.18- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா, சென்னை பெரியார் திடலில் நேற்று (17.1.2014) மாலை பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம் மற்றும் திராவிடர் இயக்க தளபதி தமிழர்களின் செல்வம், காலம் சென்ற சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, இதழாளர், எழுத்தாளர்களுக்கு பெரியார் விருது வழங்கும் விழா ஆகியவை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டுதை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதை போற்றும் வகையில் திராவிடர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழாவையும் திராவிடர் திருநாளை பண்பாட்டுத் திருவிழாவாகவும், தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழாவை ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாள்களுக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடத்தி வருகிறது.சமர் கலைக்குழு பறை இசை - கரகாட்டம்இவ்விழாக்களின் முதல்நாள் கொண்டாட்டமாக நேற்று (17.1.2014) மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் பண் பாட்டைப் போற்றும் வகையில், அலங்காநல்லூர் வேலுவின் சமர் கலைக்குழு வழங்கிய பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம் என பெரியார் திடலே அதிரும் வகையில் பெரும் திரளாக கூடியிருந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இக்கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பின்னர் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தவர்களை, பகுத் தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் வரவேற்று, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கை குறிப்பை வாசித்தார்.இதையடுத்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் தொண்டுகளை எடுத்துரைத் தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இவ்விழாவில் தலைமை உரையாற்றுகையில்:-தந்தை பெரியார் அவர்கள் செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை மாநாட்டிற்கு சவுந்திர பாண்டியனார் மற்றும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் இம்மாநாட்டிற்கு தலைவராக இருந்த பெருமைக்கு உரியவர்கள், தமிழர் நலன், மொழி நலன், சமூகநீதி கொள்கை என பெரியார் வழியில் செயல் பட்டவர், தமிழர்களின் செல்வம் ஏ.டி.பன்னீர்செல்வம் என பெரியாரால் புகழப்பட்டவர் என அவரின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.இதழாளர் - எழுத்தாளர்களுக்குபெரியார் விருது வழங்கி சிறப்பிப்புஇதையடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இதழாளர் மற்றும் எழுத்தாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பெரியார் உலகில் அமைய இருக்கும் பெரியார் சிலை மாதிரியாக கொண்ட நினைவுப்பரிசையும், பெரியார் விருதையும் வழங்கிப் பாராட்டி, சிறப்பித்தார்.முதலாவதாக எழுத்தாளர் பாமரன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அவரைப்பபற்றிய அறிமுகவுரையை தென்சென்னை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் சண்முகப்பிரியன் வாசித்தார்.எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு, பெரியார் விருது வழங்கப்பட்டது. அவரைப்பற்றி அறிமுக வுரையை ஆவடி நகர திராவிடர் மகளிர் பாசறை தோழியர் தேவி வாசித்தார். இதழாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் அவர்களுக்கு, பெரியார் விருது வழங்கப் பட்டது. அவரைப்பற்றிய அறிமுகவுரையை வட சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வம் எடுத்துரைத்தார்.பெரியார் விருது பெற்ற இதழாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன், எழுத்தாளர்கள் இமையம், மற்றும் பாமரன் ஆகியோர் ஏற்புரையாற்றுகையில், தந்தை பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதால் தான் இத்துறை களில் நாங்கள் தடம்பதிக்க முடிந்தது எனவும், அதற்காக திராவிடர் கழகத்திற்கு, தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.இவ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது பெற்றவர்களைப் பாராட்டியும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்புரை நிகழ்த்தினார்.இவ்விழாவிற்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, ஏ.பி.ஜெ.மனோ ரஞ்சிதம், எம்.பி.பாலு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் ம.ஆ.கந்தசாமி, செயலாளர் பா.தென்னரசு, இரா.தமிழ்ச்செல்வன், வடசென்னை மாவட்ட செயலாளர் எண்ணூர் மோகன், கரைமாநகர் சுரேஷ், தெற்கு நத்தம்பெரியார் நேசன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
விழா நிகழ்வுகளை திராவிட மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை சிறப்பாக தொகுத்து வழங்கினார். மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.பெரியார் உலகத்திற்கு
மீனா அரசு நன்கொடைஇவ்விழாவில் பங்கேற்ற அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மீனா அரசு குடும்பத்தினர் மேடையில் தமிழர் தலைவரிடம் சிறுகானூரில் அமைய இருக்கும் பெரியார் உலகத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினர். அவர்களை தமிழர் தலைவர் பாராட்டி சிறப்பித்தார். பெரியார் விருது வழங்கும் நிகழ்வு முடிந்ததும், அலங்காநல்லூர் வேலுவின் சமர் கலைக்குழுவின் பறைஇசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.முன்னதாக இக்கலைக்குழுவினர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை போர்த்தி, வாழ்த்தி, பாராட்டி சிறப்பித்தார்.இவ்விழாவில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் தெ.வீரமர்த்தினி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் சத்திய நாராயணன், வட மாவட்டங்களின் கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், டி.கே.நடராஜன், பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ப.சுப்பிர மணியம், பேராசிரியர் மங்கள முருகேசன், கயல் தினகரன், பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் தி.சு.திருவள்ளுவன், உமா செல்வராஜ், இராமேசுவரம் சிகாமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், கொகையூர் கோபால், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா மற்றும், பசும்பொன், மீனாட்சி, புரசை அன்புச்செல்வன், தங்கமணி குணசீலன், சி.வெற்றிச்செல்வி, வி.சி.வில்வம், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் புதுவை நடராசன், திரு வொற்றியூர் கணேசன், சுமதி, போக்குவரத்து கழக தோழர்கள் நாகரத்தினம், இராமலிங்கம், ராசு, சென்னை மண்டல கழக செயலாளர் பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், கனகா, மோகனப்பிரியா, மரகதமணி, மற்றும் திரளான கழகத் தோழர்கள், தோழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - இதழாளர் ஏ.எஸ் பன்னீர் செல்வன்தமிழ் ஆங்கில பத்திரிகைகளை வாசிப்பவர்களுக்கு, சுவாசிப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானபெயர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் சொல்லாட்சி செய்துவரும் தமிழர்பார்ப்பன பத்திரிகைகளில் ஊடுருவிய திராவிட இயக்க சிந்தனையாளர்.இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு திராவிட இயக்கமே காரணம் என்பதை உலகிற்கு தன் எழுத்துவன்மையால் பறைசாற்றிய உணர்வாளர்.
இவருடைய எழுத்துப்பயணம் திசைகள் என்ற தமிழ் பத்திரிகையின் மூலம் துவங்கியது.
அதே காலகட்டங்களில் ஆங்கில பத்திரிகைக்ளுக்கும் எழுதத் துவங்கினார். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்திய வரலாற்றில் மிகவும் கொடுமையான மனித ஆற்றலால் நடந்த விபத்தான போபால் விஷவாயுக் கசிவு குறித்து பல்வேறு பரபரப்பான கட்டுரைகளை எழுதியவர்.இதேகால கட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஃப்ரண்டுலைன் போன்ற பத்திரிக்கைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதி இலங்கைத்தீவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துணர்த்தியவர்.
1987இல் இந்தியா இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் முதல் ஆண்டு கொண்டாட்டம் 88இல் நடந்த போது43 நாட்கள் ஈழப்போர் பகுதிகளில் தங்கி இருந்தார். பின்னர் ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் போஸ்ட் இதழில் யுத்த பூமியில் 43 நாட்கள் என்னும் தலைப்பில் தொடராக ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளை தமிழகத்தின் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்த்தவர். 1988 நவம்பரில் பிசினஸ் இந்தியா ஏட்டில் செய்தியாளராக முழுநேரப்பணியில் இணைந்தார். . 1995ஆம் ஆண்டு அவுட் லுக் இதழில் இணைந்து பொருளாதாரம், அரசியல் மற்றும் அயலகத்துறை தொடர்பான செய்திப்பிரிவு தலைவராகவும் பதவி வகித்தார். தன்னுடைய பதவிக் காலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட சமுக பொருளாதார, அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அணு ஆற்றல் தொடர்பான நன்மை தீமைகளை ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். 1998இல் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு அணுக்குண்டு பரிசோதனை செய்த போது அது குறித்து பன்னாட்டு ஊடக நிறுவனங்களில் விளக்கமாக எழுதி உலகை, தன் எழுத்தின் பக்கம் ஈர்த்தவர்.2001 முதல் தமிழகத்தின் முன்னனி ஊடக நிறுவன மாக சன் குழுமத்தின் தலைமை பொறுப்பாசிரியராக பணியாற்றினார். நிர்வாக ஆசிரியராக 2004 வரை பணியாற்றினார். இவர் பணியாற்றிய காலங்களில் ஆசிரியர் குழுவில் புதிய உத்திகளை கையாண்டு செய்தியாசிரியர்கள், செய்தி சேகரிப்பவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு இடையே எழும் பல்வேறு சிக்கல் களை திறம்படக் கையாண்டு புதிய உத்திகளை வகுத்து கொடுத்தார். சன் குழுமத்தின் பல்வேறு மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி களில் உள்ள செய்திகளை ஒருமுகப்படுத்தி அனைத்து செய்திகளுக்கும் ஒரே மாதிரியாக விரைவாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் புதிய முறையை சன் குழு மத்தில் அறிமுகபடுத்தினார். 2004-ஆம் ஆண்டு முதல் பனோஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவிற்கு தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் 5 நாடுகளில் உள்ள பனோஸ் நிறுவனத்தின் செயல் பாடுகள் வருகிறது. சர்வதேச ஊடக செயல்பாடுகள் அமைப்பு என்ற குழுமத்தின் ஆலோசனை உறுப் பினராகவும், மற்றும் சர்வதேச ஊடக மையத்தின் பல்வேறு அமைப்புகளின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். எழுத்துறையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் தன்னுடைய கருத்தாக்கத்தை வெளிப்படுத்த விநாயகர் சதூர்த்தி தொடர்பான வன்முறைகள் பற்றிய பிரச்சினை இல்லாத இடம் எங்கே என்ற ஆங்கில குறும்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். ஆசியன் இதழியல் கல்லூரியில், ஊடகத்துறை பேராசிரியராகவும், ஊடகத்துறை பேராசிரியர் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார். பன்னீர் செல்வன் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஊடக வியல் தொடர்பான முதுகலைப் பட்டம் வென்றவர். அமெ ரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு அயல்நாடுகளில் ஊடகத்துறை கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராக இருந்துள்ளார்.நக்கீரன் இதழிலும் புகழ்பெற்ற சுற்றும் முற்றும் கட்டு ரைத் தொடரை எழுதியுள்ளார். அவை நூல்களாகவும், வெளிவந்துள்ளன. இவ்வளவு பெருமைமிக்க ஊடகவிய லாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.எழுத்தாளர் பாமரன்பாமரன் என்னும் புனைப்பெயர் கொண்ட எழிற்கோ, கோவையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். அவர் பிறந்த பகுதிக்கே உரித்தான கேலியும் கிண்டலும் சேர்ந்த வகையில் சமுதாய அவலங்களைப் பொதுக்கடிதங்கள் (Open Letters) மூலமாக விமர்சிப்பதில் பெயரெடுத்தவர்.அவர் எழுதிய சில புத்தகங்கள்: அன்புத் தோழிக்கு - 1988; புத்தர் சிரித்தார் - 1990; வாலி + வைரமுத்து = ஆபாசம் - 1996; பகிரங்க கடிதங்கள் - 1997 (குமுதம் சிறப்பு தொடராக வெளிவந்தது); தெருவோரக் குறிப்புகள் - 2001 (குமுதம் வார இதழ் மற்றும் தீராநதி மாத இதழ்களில் தொடராக வெளி வந்தது)சாட்டிலைட் சனியன்களுக்கு - 2003 (நக்கீரன், தினமணி, ஆனந்த விகடன் இதழ்களில் வந்த கட்டுரை களின் தொகுப்பு); ஆரிய உதடுகள் உன்னது - 2006 (புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்தது); அகிம்சா மூர்த்தி அமெரிக்கா - 2005; தற்போது ஒரு நாளிதழில் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதழ்களில் கட்டுரைகள்: பல பொதுமக்கள் நாளிதழ்களில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும், பொதுக்கடிதங்கள் மற்றும் விவாதங்களும் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் சில: குமுதம், நக்கீரன், புதிய சனநாயகம், மற்றும் பல சிற்றிதழ்கள், தற்போது பல இணைய தளங்களிலும் எழுதி வருகிறார்.செயல்பாடுகள்: 1983இல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர்; 2006இல் உருவான கோவை நாய்வால் திரைப்பட இயக்க முன்னோடி; - 1987 - 1991 வரையான செயல்பாடுகள் (ஹஅநேளவல ஐவேநசயேவடியேட); ஈழ நண்பர் கழகம் - 1985 - 1990 வரையான செயல்பாடு கள்; வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர்; கோவை குண்டு வெடிப்பு குறித்து ஆராய போடப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்
பேட்டிகள்: சன் தொலைக்காட்சி - வணக்கம் தமிழகம்; விஜய் தொலைக்காட்சி - நையாண்டி தர்பார் மற்றும் நீயா நானா?; ராஜ் தொலைக்காட்சி - டேக் இட் ஈஸி ஊர்வசி; மக்கள் தொலைக்காட்சி - சரக்கு பாதி கிறுக்கு மீதி; தீபம் தொலைக்காட்சி - சிறப்பு பேட்டி.எழுத்தாளர் இமையம்தொழில்: நாவலாசிரியர், கட்டுரையாசிரியர்; நாடு: இந்தியாவின் கொடி இந்தியர்; குறிப்பிடத்தக்க படைப்பு(கள்): கோவேறு கழுதைகள்; இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் ஆசிரியரே.நூல்கள்: தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார்.இதுவரை எழுதிய புதினங்கள்: 1. கோவேறு கழுதைகள் (நாவல்) - 1994; 2. ஆறுமுகம் (நாவல்) - 1999; 3. செடல் (நாவல்)-2006; 4. மண்பாரம் (சிறுகதைத் தொகுப்பு) -2002; 5. வீடியோ மாரியம்மன் (சிறுகதைத் தொகுப்பு) - 2008; 6. கொலைச்சேவல்; 7. பெத்தவன் -நெடுங்கதை.இதுவரை மொழிப் பெயர்க்கப்பட்ட நூல்கள்: 1. கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் பெற்றுள்ளது. (2.) ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத் தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006இல் வெளியிடப் பெற்றுள்ளதுஇதுவரை பெற்றுள்ள பரிசுகள்: 1. அக்னி அஷ்ர விருது - 1994; 2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது - 1994; 3. அமுதன் அடிகள் இலக்கிய விருது - 1998; 4. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1999; 5. Best millinium face of India விருது-2000; 6. தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது -2010; 7. இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கையை 2002இல் வழங்கியது.தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவினையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அலங்காநல்லூர் வேலுவின் சமர் கலைக்குழுவினர் பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சில ஆட்டம் நடைபெற்றது. கலைக்குழுவினர் தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக, இசை நாற்காலி போட்டி நடைபெற்றது. இதில் மகிழ்வுடன் பலர் பங்கேற்றனர் (சென்னை, 17.1.2014)தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா - திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா
திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தை தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம் பெரியார் விருது வழங்கி தமிழர் தலைவர் எழுச்சியுரை
சென்னை, ஜன.19- திராவிடர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாச கர் வட்டம், பகுத்தறி வாளர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தி வரும் தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திரா விடர் திருநாளை பண் பாட்டுத் திருவிழாவாக வும், தமிழ்ப்புத் தாண்டு - பொங்கல் விழாவாகவும் மிகுந்த சிறப்புடன் நடத்தி வருகின்றன.
இவ்விழாவின் இரண் டாம் நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை விருந்து என பெரியார் திடலே களை கட்டியது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலை மற்றும் இசைக் கலைஞர்களை பாராட்டியும், பெரியார் விருது வழங்கி சிறப் பித்து பேசுகையில்:- திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதா யத்தை தகர்த்த இயக்கம் தான் திராவிடர் இயக் கம் என பெருமிதம் கொண்டார்.
நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள்
திராவிடர் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு -பொங்கல் விழா பண் பாட்டுத் திருவிழாவாக சென்னை பெரியார் திடலில் நேற்று (18.1.2014) இரண்டாம் நாள் நிகழ் வாக மாலை 4 மணியள வில் பெரும் திரளாக கூடியிருந்த மக்களி டையே, து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கும் பெரியமேளம் கலைக் குழுவின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத் திக் காட்டப்பட்டன.
பெரியார் திடலில் செயற்கைக் கடல் - மீனவர் குடில்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறு வர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள், பொது மக்கள் கழகத் தோழர் கள் தோழியர்கள் இக் கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பார்த்து ரசித்து பாராட்டினர்.
மூன்று நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா விற்காக பெரியார் திடல் முழுவதும் திராவிடர் திருநாளையொட்டி, 5 வகை நிலங்களில் ஒன் றான நெய்தல் நிலத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வளாகத்தின் நுழை வாயில் முதல் பகுதியில், கடல் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை கடல் ஒன்றும், அதன் அருகில் மீனவர் குடில் ஒன்றும் கட்டப் பட்டிருந்தது.
மீனவர் குடில் அருகே, கடல் சார் உணவுகளான பல்வேறு வகை மீன்கள் பொறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் பொங்கல் விழாவை காண வந்த மக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலைக் குறிக்கும் தமிழ் பெயர்களான, அரவல், அரி, உவர், உவரி, கயம், சுழி, தாழி, திரை உள்பட 65 பெயர்கள் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தமிழர்களின் சிறப்புகள்
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களின் பண்டைய துறை முகங்கள், தமிழர்கள் கப்பல் கட்டப் பயன்படுத்திய அளவைகள் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருந் தன.
நிழல் திருநாவுக்கரசு, டிரம்ஸ் சிவமணி, பிரியா பாபு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கினார்.
கடலில் பயணம் செய்யும் மரக்கலம் செய்வதில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஆதாரமாக இன்னும் தமிழிலே வழங்கப்படும் கப்பல் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் மற்றும் தமோய் இன மக்கள் பயன்படுத்தும் கட்டு மரங்களின் அடித்தளங்களில் இன்றும் அம்மா, அக்கா வக்கா என்று தமிழ் சொற்கள் உள்ளதுடன், நியூசிலாந்தில் அவர்கள் வசிக்கும் பகுதியின் பெயரும், வான்கரை என தமிழில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், லெப்டினன்ட் வாக்கர் என்னும் ஆங்கிலேய மாலுமி ஒருவர், கி.பி.1811இல் நமது கப்பல்களைக் கண்டு, ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும். ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அரிய தகவலும் வைக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழா
தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாவை திரா விடர் பெருங்குடி மக்கள் கொண்டாடும் வகையில் இம்மூன்று நாள் விழாவையொட்டி, பெரியார் திடலில் உணவுத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
இதில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, சிறீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, கீழக்கரை கலகலா, விருதுநகர் வீச்சு புரோட்டா போன்ற உணவுப் பொருள்களும், மதுரை, நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தேவசகாயம் அவர்களை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வரும் வணிக நிறுவனமான தமிழக எண்ணெய் பலகாரங்களான மிக்சர், ஓமப்பொடி, சீவல், முறுக்கு வகைகள், அதிரசம் போன்ற பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிச் சாப்பிட்டனர்.
ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சி
பெரியார் திடலில் மாலை து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கிய பெரிய மேளம் கலைக்குழு வின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சியும், பிளாக்பேர்ல் குழுவினரின் இசை விருந்தும் காண்போர் மெய் சிலிர்க்கும் வகையில் நடைபெற்றது.
பெரியார் விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்
இதைத் தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி அறிமுக உரையாற்றினார்.
வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றினார். வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பெ.செல்வராசு, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், சென்னை கழக மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி, ப.உதயகுமார், புழல் ஆனந்தன், செ.ர.பார்த்த சாரதி, செ.கனகா, க.வனிதா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து பெரியார் விருது பெறும் பெருமக்களான தோழர் மாற்றுப் பாலினத்தை சேர்ந்த பிரியா பாபு அவர்களின் தன்விவரக் குறிப்பை தோழியர் மரகதமணி வாசித்தார். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்களின் தன் விவரக்குறிப்பை தோழர் இசையின்பன் வாசித் தார். இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்களின், தன் விவரக்குறிப்பை மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வாசித்தார். பெரியார் விருது பெறும் இம்மூவரின் சாதனை களைப் பாராட்டி அரங்கில் கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
இதையடுத்து இம்மூன்று சாதனையாளர் களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, பெரியார் விருது (சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகில் வைக்கப்படும் பெரியார் சிலையின் மாதிரி) வழங்கி அவர்களின் சாதனையை பட்டியலிட்டு எடுத்துக் கூறி வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக பெரியார் விருது பெற்ற பெருமக்க ளான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இத ழாளர் நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் ஏற்புரை யாற்றினர்.
குறிப்பாக பிரியாபாபு பேசுகையில்: - தந்தை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திரு நாளில், பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். திருநங்கைகளை மாற்றுப் பாலின இனத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட வேண்டும் என்று பிரியா பாபு கூறினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
இவ்விழாவில் பெரியார் விருது வழங்கி சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுகையில்:- பெரியார் விருது பெற்ற இம்மூவரும் அற்புதமான புதையலாக நம்மினம் பெருமிதம் பெறக்கூடிய ஆற்றலாளர்களாக இருக்கிறார்கள். திருநங்கை பிரியாபாபு அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கலாம், ஆனால் பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக பிரியாபாபுவை நாங்கள் பார்க்கிறோம். திருநங் கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த இந்த சமுதாயத்தை மாற்றி தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.
அதே போன்று நாம் எல்லாம் நாவால் பேசு கிறோம். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்கள் விரல்களால் பேசுகிறார். அவரின் சாதனைகளை நாமும், அவரின் தாயாரும் பார்த்து மகிழ்கிறோம். புதை பொருள்களை வெளியே கொண்டு வரும் பணியை மிகவும் போற்றத்தக்க வகையில் செய்து வருபவர் இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்கள். எனவே அவரைப் பாராட்டி சிறப்பிப்பது மிகவும் மகிழ்ச்சியானது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும் தொண்டுமாகும்.
அந்த வகையில் சாதனையாளர்களான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இதழாளர் நிழல் திருநாவுக்கரசு ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அளித்தால் உலக அளவில் புகழ் பெறுவார்கள். எனவே இந்த விருது அவர்கள் கையில் வழங்கப் பட்ட வாளாக இருக்கும் என தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய து.பாப்பம்பாடி எம்.முனுசாமி அவர்களின் பெரிய மேளம் கலைக்குழுவினருக்கும், ட்ரம்ஸ் மைக்கேல் குழுவினருக்கும், பிளாக் பேர்ல் குழுவி னருக்கும் தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மற்றும் கழகத் தோழர்கள் - தோழியர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொருள்களின்மீது வட்டு எறியும் போட்டியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் பங்கேற்றனர்
சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா அரங்கில் நடைபெற்ற பெரியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் (18.1.2014)
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் நடைபெறும் சடுகுடுபோட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டியை ஆர்வமுடன் காணும் பொதுமக்கள் (சென்னை, 18.1.2014).
பெரியார் விருது வழங்கும் விழாவில், மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த சேலம் சிறீதேவி கிராமியப் பாடலைப் பாட, டிரம்ஸ் சிவமணி அவர்கள் இசைக் கருவிகளின்றி பாடலுக்கேற்ப இசையமைத்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
து.பாப்பம்பாடி எம்.முனுசாமி கலைக் குழுவினருக்குப் பாராட்டு
ட்ரம்ஸ் மைக்கேல், பிளாக்பேர்ல் குழுவினருக்குப் பாராட்டு
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்தும் மாபெரும் சடுகுடு போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகளை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஓஷான் எம்.இ.சாகுல்ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர் (18.1.2014).
பல்இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி
இளையோர் முதல் முதியோர் வரை உள்ளம் மகிழ உற்சாகத்துடன் ரசிக்கும் ஓர் இசை தோல்கருவி இசை தென்னிந்திய பாரம்பரியமே தோல்கருவியில் இருந்து தோன்றியது தான்.
பெரியார் திடலில் பறையோசை ஒளிக்கும் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்பவர்களின் செவிகளை அந்த இசை கவர்ந்திழுக்கும், அந்த தோல்கருவியில் எத்தனை வகை இசைக்கருவிகள் உள்ளதோ அத்தனையும் இவரின் விரல்களில் நர்த்தன மாடி மயக்கும் இசையைக் கொண்டுவரும், பாரம்பரிய இசையில் எழும் எந்த ஓசையும் இவரின் கைவண்ணத்தில் எழும்போது உலகையே கவர்ந்திழுக்கும்.
சென்னை கடற்கரையில் நடந்த விழா ஒன்றில் இவரது இசையை கேட்பதற்காக காலை முதல் பெரும் கூட்டம் காத்திருந்ததும், அந்த இசை ரசிகர்களின் விருப்பத்திற் கேற்ப வீட்டு பயன்பாட்டுப்பொருளில் கூட இசையை கொண்டு வந்தவர்.
சென்னையின் வீதிகளில் ஆரம்ப காலத்தில் தன் இசை மழையால் நனைத்த சிவமணி அவர்களின் இசை இன்று சர்வதேச எல்லையை கடந்து அதிர்வலைகளை உலகெங்கிலும் பரப்பிக் கொண்டு வருகிறது, திராவிடர்களின் இசைக்கருவியான தோல்கருவி இசையின் பரிணாமம் தான் இன்று உலகெங்கிலும் பல்வேறு வகையில் உருவத்தில், ஓசையில் மாற்றம் கண்டு இசைக்கிறது.
ஆகையால் தான் சிவமணி அவர்களின் கரம் ஆப்பிரிக்க டிரம்ஸ் என்றாலும் சரி, தென் அமெரிக்க கரீபியன் மத்தள இசை என்றாலும் சரி, சீனர்களின் ஒரு முக மத்தளமும், மெற்குலகின் ஜாஸ் டிரம்ஸ் என்றாலும் சரி இவரது கையில் சிக்கினால் எவர்க்கும் ஈடு கொடுக்காமல் தேக்கி வைத்திருக்கும் இசையைக்கூட வலிய வெளிக்கொண்டு வந்துவிடும். மேற்குலகின் இசையே இவரது கையில் சிக்கி இசைரகசியம் அவிழ்கிறதென்றால், இடையில் வந்த கர்நாடக இசை எம்மாத்திரம்.
என்ன ராகம்! என்ன தாளம்! என்று தன்னுடைய இசையிலேயே கர்நாடக இசையை விரல்களுக்குள் அடக்கிவிடுவார்.
இந்திய அளவில் புகழ்பெற்ற தபேலா மாஸ்டர் ஜாகிர் உசேன் மாத்திரமல்ல உலக அளவில் புகழ்பெற்ற தோல் கருவி இசைக்கலைஞர்கள் அனைவருமே தன்னுடைய இசைச் சங்கமத்தில் சிவமணி என்னும் இசை நதியுடன் சேர்ந்த பிறகுதான் ஆர்ப்பரித்து ஓடும் இசைப் பெரு நதியாக மாறுவார்கள், ஏ.ஆர்.ரகுமானின் புகழ் சேர்த்த வந்தே மாதரம் ஆல்பம் வெற்றியடைந்தற்கு இவரும் முக்கிய காரணம் இது இயக்குநர் பரத்பாலாவின் வார்த்தை,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் உலக இசைப் பயணத்தில் சிவமணி இணையாமல் இருந்தால் அங்கு பயணம் இருக்கும் ஆனால் இசை இருக்காது, இது தமிழக நடிகர் பார்த்திபன் அமீரகத்தில் நடைபெற்ற வந்தேமாதரம் என்னும் இசை நிகழ்ச்சியில் கூறியது. ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்தில் சிவமணியின் இசைப் பங்களிப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது, இது இந்தி நடிகர் அனில்கபூர் கூறியது.
சிவா என்று அன்போடு அவரது அன்னையால் அழைக்கப்படும் சிவமணி அவர்கள் கைக்கு எந்தப்பொருள் கிடைத்தாலும் அதனை இசைக் கருவியாக்கி ஓர் இசை ஆல்பத்தையே உருவாக்கி விடுவார். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய தோல்கருவி இசைவல்லுநர்களின் வரிசையில் முதலிடம் இவருக்கு என்றும் உண்டு. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதை கே.வி.மஹாதேவன் அவர்களின் இசைக் குழுவில் சிவமணியின் தந்தை பணியாற்றினார்.
தன்னுடைய தந்தையின் கரங்களில் விளையாடும் டிரம்ஸ் ஸ்டிக்கை தன்னுடைய விரலில் எடுத்தபோது இவருக்கு வயது ஏழு அன்று பிடித்த கரங்கள் தன்னுடைய 12ஆவது வயதில் மேடையேற்றம் கண்டது, முதல் மேடையேற்றமே பிரபலங்களை கவர்ந்தது. 13-ஆவது வயதில் எஸ்.பி பாலசுப்பிரமணியனின் குழுவில் இடம் பெற்றார்.
அதன் பிற்கு எல்லாமே இவருக்கு ஏறுமுகம் தான், மேல்நாட்டு இசைக்கலைஞர்களான நியோல் கிராண்ட், மற்றும் பில்லிகொபன் போன் றோருடன் இணைந்து மும்பை ரங்பவனின் இவரது இசை நிகழ்ச்சி சர்வதேசத்தையும் ஈர்த்தது.
தமிழகத்தில் புகழ்பெற்ற வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்திய நாதன், டி.வி.கோபாலகிருஷ்ணன், தவில் இசைக் கலைஞர் வலையப்பட்டி சுப்பிரமணியம், பழனிவேல் மற்றும் எல்.சங்கர் போன்றவர்களுடன் இணைந்து இவரது இசைப் பய ணத்தைத் தொடர்ந்தார்.
இசைஞானி இளையராஜா இசையில் இவரது இசைப்பயணம் நமக்குச்சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை, தற்போது இரண்டு திரைபடங்களுக்கு இசை அமைத்துக்கொண்டு இருக்கிறார். பாரனும் ரசித்த திராவிட பாரம்பரிய இசையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற மண்ணின் மைந்தரான சிவமணி அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
நிழல் திருநாவுக்கரசு
புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்களைத் தமிழ்த் திரைப்பட உலகிற்குத் தந்த தஞ்சைத் தரணியே திரைத்துறை சாராத ஆனால் மிகுந்த திரை ரசனையும், அது தொடர்பான தொண்டுகளைக் கணிசமான அளவிற்கு வழங்கிய திரைத்துறை நேசிப்புக் கலைஞன் நிழல் திருநாவுக்கரசையும் நமக்கு அளித்துள்ளது.
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற அளவில் நின்றுவிடாமல் மக்களுக்கான வாழ்வியலைச் சொல்லித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
16.10.1962இல் பிறந்த இவருக்கு தொடக்கத்தி லிருந்தே திரைப்படத்தின்மீது ஆர்வம் ஆர்ப்பரிக்க துவங்கியது.
சிறு வயதில் படச் சுரு துண்டுகளை அட்டைப் பெட்டியைச் சீரமைத்து பொருத்தி, முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாக சூரிய ஒளியை பீய்த்து இருட்டறை யில் வெள்ளைத் துணியைத் திரையாகக் கட்டி குவி அடி மூலம் படம் காட்டியவர். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டும் எனச் சுட்டிக்காட்டியவர்.
கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
அரங்கேற்றம், தினப்புரட்சி, போர்வாள், இன் டாட்காம் முதலிய இதழ்களில் உதவி ஆசிரியராகவும் மற்றும் மித்ரா பதிப்பகத்திலும் பணியாற்றினார்.
தாமரைசெல்வி, ரிஷபம், நிழல் முதலிய பதிப்பகங்கள் மூலம் 118 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இசைத் துறையில் மறைக்கப்பட்ட வரலாறாய் தொலைந்துபோன இசைத் தொண்டர்களைப் பற்றி சோழநாடன் என்ற பெயரில் நாதசுர சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளை வரலாறு, தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்ப சாமிகள் வரலாறு, வீணை அதன் பேர் தனம், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு முதலியவற்றை வெளியிட்டுள்ளார்.
இதில் கொடுமுடி கோகிலம் கே.பி சுந்தரம்பாள் வரலாறு தமிழக அரசு விருது பெற்றது. தமிழில் இல்லாத பல துறைப் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்துள்ளார்.
மூன்றாம் உலக இலக்கிய வரிசை என்று தொடங்கி 15 உலக இலக்கியங்களை வெளியிட்டார். இன்றுள்ளவர் களைப் போல காசு மட்டுமே குறியாக இல்லாமல் செயல்பட்டார் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லமுடியும்.
இவரது சொல்லப்படாத சினிமா புத்தகம், குறும்பட - ஆவணப் படங்களைப் பற்றி, இந்திய அளவில் முதன்முதலில் தமிழில் இவரால் வெளியிடப்பட்டது.
திரைத்துறை சார்ந்து, சினிமா சட்டகமும், சாளரமும், சொல்லப்படாத சினிமா, தமிழ் சினிமாவின் பரிணா மங்கள், நவீன கன்னட சினிமா, ஈரானிய சினிமா, பெர்க்மன் மாயவிளக்கு, பேட்டில் ஷிப் பொட்டம்கின் போன்ற 20 நூற்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
நவீன சினிமாவுக்காக நிழல் என்ற இதழை 14ஆண்டுகளாக நடத்திவருகிறார். பல்வேறு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு நிழல் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. இதில் திரைப்பட வரலாறு, தொழில் நுட்பக் கட்டுரைகள், விமர்சனம், பயிற்சி, திரைக்கதைகள், பழைய நடிகர்கள் பற்றிய கட்டுரைகள், நேர்முகங்கள், கலந்துரையாடல்கள், உலக திரைப்பட விழாக்கள் பற்றிய செய்திகள் வெளியிடபடுகின்றன.
நிழல் பதிப்பகத்தின் மூலம்...
சொல்லப்படாத சினிமா (குறும்பட, ஆவணப்பட வரலாறு), மக்களுக்கான சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், மாயவிளக்கு (பெர்க்மன் வாழ்க்கை வரலாறு), போர்க்கப்பல் பொடம்கின் (திரை விமர்சனம்) போன்றவற்றை வெளியிட்டவர்.
நிழல் நிறுவனம் தமிழகத்தில் பல கிராமங்களில், கிராமப்புற திரைப்படச் சங்கங்களைத் தோற்றுவித்து உள்ளது.
புத்தகம், தொலைக்காட்சி, இணையம் மற்றும் பத்திரிகை மூலம் குறும்படங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்.
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தி, சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்பட தொழில் நுட்பத்தைக் கற்றுத் தந்தவர்.
நடிப்பு, திரைக்கதை, மேக்கப், கேமரா, எடிட்டிங் முதலியவற்றைக் கற்பித்து, 4500க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். இப்பட்டறை கல்லூரி சென்று கற்க முடியாத, பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பட்டு வருகிறது. வெளிநாட்டு, வெளிமாநிலக்காரர்களும் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
பலர் இன்று திரைப்படத் துறையிலும் / குறும்படத் துறையிலும் பணி ஆற்றி வருகின்றனர். இந்தப் பட்டறை குறும்படம் மற்றும் ஆவணபடத் துறை பற்றிய புரிதலை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கொண்டு சென்றுள்ளது. தமிழக இளைஞர்கள் தயாரித்த குறும்படங்களை உலக அளவில் எடுத்து சென்று பரிசுகளும், விருதுகளும் பெற நிழலே முதன் முதலில் வழி வகுத்தது.
திரைப்படத் துறையைப் பற்றிய ஆவணக் காப்பகம் ஒன்றை நிழல் நிறுவி உள்ளார். இதில் உலக திரைப்படங்கள் / குறும்படங்கள் / ஆவணப்படங்கள் / திரைப்பட புத்தகங்கள் / இதழ்கள் / நிழற்படங்கள் / இசைத் தட்டுகள் / பாட்டுப் புத்தகங்கள் முதலியவற்றை நிழல் விரும்பி சேகரித்து வருகிறார்.
விருதுகள்
செம்மொழி மாநாட்டில் பதிப்பாளர் விருது.
திருப்பூர் தமிழ் சங்கம் (1995) சிறந்த பதிப்பாளர் விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பாக சதத்ஹசன் மண்டோ கதையை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக சிறப்பு பதிப்பாளர் விருது.
கலகம், சிந்தனையாளன் மற்றும் மாற்றத்திற்கான ஊடக படைப்பாளிகள் தமிழ் அமைப்பினரால் சிறப்பிக்கப் பட்டுள்ளார்.
பிரியாபாபு
வலி, மனவலி இதனை அனுபவிப்பவருக்குத்தான் வேதனைதெரியும் எனக்கு ஏன் இந்த கொடுமை! என்று மூலையில் ஒடுங்காமல் மூன்றாம் பாலினம் நாங்கள். முன்னுக்கு வருவதில் ஆணுக்கும் பெண்ணிற்கும் சளைத்தவர்கள் இல்லை, சாதனைப் படைப்பதற்கு சான்றாக இதோ நானே இருக்கிறேன், என மன வலியை மனவலிமையால் வென்று விருதுபெற மேடையில் வீற்றிருக்கும். பிரியா பாபு படித்தது பன்னிரெண்டு பட்டயப்படிப்பாக குளிர்சாதன தொழில்நுட்பக் கல்வி. வேலை பார்க்கலாம். தான் மேலும் வளரலாம், என்றில்லாமல் என் பாலினத்தைச் சேர்ந்த அனைவரும் மேன்மை பெறவேண்டும் என தொண்டறம் செய்ய புறப்பட்ட இவர்......
1998இல் மும்பையில் முக்தாம்பர் சேவை மய்யத்தில் பணிபுரியும் போது சிவப்பு விளக்குப்பகுதியில் சமூக விரோதிகளால் சிக்கிக்கொண்ட 50-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க பேருதவியாக இருந்தவர். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஆதிவாசிப்பெண்களின் நலனுக்காக போராடியவர். தாய் சமூகநலப்பணிக் குழுவில் 1999 முதல் 2000 வரை பணிபுரிந்தவர். இவரின் பணிக்காலத்தின் போது திருநங் கைகளுக்கான தினம் முதல் முதலாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது. எயிட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய் பற்றிய விழிப்புணர்வை திருநங்கைகளின் மத்தியில் ஏற்படுத்தியவர்
தமிழ் நாடு திருநங்கைகள் புனர்வாழ்வு அமைப்பிலும் தென் இந்திய திருநங்கைகளின் உரிமைகள் அமைப்பிலும் பணியாற்றி அவர்களின் நல்வாழ்விற்காகவும் அவர்களு டைய உரிமைகளுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக் காகவும் பெரிதும் பங்காற்றிவருகிறார்.
6 மார்ச் 2004 ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த தலித் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் ராகினி அவர்களுடன் மற்றும் இவரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருநங்கைகளுக்காக ஓட்டுரிமை குறித்து அரசை நிர்ப்பந்திக்க வழக்கு ஒன்றை தொடுத்தவர். கலைத்துறையில் சுடர் அமைப்பில் இணைந்து திருநங்கைகள் பற்றிய குறும்படங்களை இயக்கியவர்.
மற்றும் கண்ணாடிக் கலைக்குழு என்ற கலைக்குழுவினருடன் இணைந்து இதயத்தின் குரல் (மனசினால் லயிப்பு) மற்றும் நினைவுகள் (உயிர்த்த நினைவுகள்) போன்ற மேடை நாடகங்களை பள்ளி, கல்லூரி மற்றும் வீதிகளில் என 75 தடவைகளுக்கு மேலாக நடத்தியவர்.
இந்நாடகங்களின் மூலமாக திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியவர். தன்னுடைய உறுதியான போராட்டத்தின் மூலமாக காஞ்சீபுரத்தில் திருநங்கைகளுக்கென மாவட்ட ஆட்சியரின் நிதி ஒதுக்கீடு மூலம் 15 இலவச வீட்டுமனை களில் வீடுகளை கட்டித்தந்தவர்.
2007ஆம் ஆண்டு யூத் இந்தியா என்ற ஆங்கிலப் பத்திரிகையில் அர்த்தநாரீஸ் வரம் என்ற பெயரில் திருநங்கைகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சமூக களத்தில் பொது இடங்களில் திருநங்கைகள் நடத்தப்படும் முறைகள் குறித்தும் பல கட்டுரைகள் எழுதியவர்.
தமிழ் நாடு திருநங்கைகள் நலவாழ்வு மய்யத்தின் உறுப்பினராக 2008-2011 வரை பணியாற்றினார். அப்போது திருநங்கைகளுக்கான அரசு உதவித்திட்டங் கள் திருநங்கைகளுக்கு போய்ச்சேர பல்வேறு வகையில் உதவியாக இருந்தார்.
காவல் துறையின் நல்லிணக்க குழுவின் மூலம் காவல் துறையினர் வழக்குரைஞர் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவுடன் இணைந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் திருநங்கைளுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர்.
வானவில் அமைப்பில் ஆலோச கராக இருந்து வருகிறார். வானவில் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். இந்த அமைப்பின் குடும்பம் மற்றும் எதிரொலிக்கும் கர வொலிகள் போன்ற மேடை நாடகங்கள் நடத்தியுள்ளார். திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிபட்டறை ஒன்றையும் நடத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் ஆவணங்கள்
மருத்துவர் திரு வெங்கடேசன் சக்ரபாணி அவர்க ளோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள திருநங்கைகளுக்கான புனர்வாழ்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கான மருத்துவ உதவி, பாலியல் நோய்களுக்கான ஆலோசனை, மற்றும் அவர்களின் புனர்வாழ்விற்காக பல்வேறு ஆய்வுகள் நடத்தி அவற்றைச் செயல்படுத்தி வருகிறார். நாட்டுப்புற இசைப்பாடல்களின் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தேசிய நாட்டுப்புற கலைக்குழுவினருடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
இவரின் படைப்புகள்
திருநங்கை சமூக வரைவியல் என்ற தன்னுடைய முதல் நூலை 2007 எழுதியுள்ளார். மூன்றாம் பாலின் முகம் என்னும் நாவலை 2008இல் எழுதிவெளியிட்டார். 2009இல் திருநங்கைகளும் அவர்களின் சமூக உரிமைகளும் என்ற நூலை எழுதினார்.
2010இல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளின் வாழ்வு பற்றிய நூலை எழுதினார். 2012இல் தமிழகத்தில் திருநங்கைகளின் சமூக வரலாறு என்ற நூலை எழுதினார்.
இவர் பெற்ற விருதுகள்
விருது 2008-ஆம் ஆண்டு அரிமா சங்கத்தின் திருநங்கைகளில் சிறந்த சமூக சேவகர் என்ற விருதை பெற்றவர். 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த எழுத்தாளருக்கான சு.சமுத்திரம் நினைவு விருதைப் பெற்றவர்.
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் வாழ்நாள் சிறப்பு எழுத்தாளர் விருதைப் பெற்றவர். 2011இல் ஏப்ரல் திருநங்கைகளின் வாழ்க்கை வழிகாட்டி என்ற நூலின் மூலம் திருநங்கைகளுக்கான அரசு சலுகை மற்றும் உதவித்திட்டங்களை விவரமாக அறிந்து கொள்ளும் வகையில் எழுதினார்.
2012 - திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் விருதைப்பெற்றவர். ஆனந்தவிகடன் வார இதழ் தேர்வு செய்த தமிழ் நாட்டில் சிறந்த 10 பேர் பட்டியலில் இவரும் ஒருவர்.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடந்த தந்தைபெரியார் முத்தமிழ் மன்ற விழாவில், பேராசிரியர் அ. மார்க்ஸ், நடிகர் எம்.எஸ். பாஸ்கர், எழுத்தாளர் தமிழ்மகன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி பாராட்டி சிறப்பித்தார். பட்டிமன்றத்தில் பங்கேற்ற கவிஞர் நந்தலாலா குழுவினரும் உள்ளனர். (சென்னை - 19.1.2014)
பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சடுகுடு (கபாடி) போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சென்னை குயின்ஸ் அணியினருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் அய்சரிகணேசன் அவர்களும் பரிசுகளை வழங்கினர். உடன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் மண்டல பிரச்சாரக் குழுச் செயலாளர் தே. எடிசன்ராஜா, பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய முன்னாள் கபாடி வீரர் ராஜரத்தினம், கோல்டு ராஜேந்திரன். (சென்னை - 19.1.2014)
பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சடுகுடு (கபாடி) போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சென்னை ஜெய்பவானி அணியினருக்கு வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் அய்சரிகணேசன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் மண்டல பிரச்சாரக் குழுச் செயலாளர் தே. எடிசன்ராஜா, பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய முன்னாள் கபாடி வீரர் ராஜரத்தினம், கோல்டு ராஜேந்திரன். (சென்னை - 19.1.2014)
தமிழர் திருநாள் பொங்கலையொட்டி பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்திய
மாநில அளவிலான சடுகுடு (கபாடி) போட்டி
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழர் தலைவர் பரிசு வழங்கினார்
மாநில அளவிலான சடுகுடு (கபாடி) போட்டி
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழர் தலைவர் பரிசு வழங்கினார்
இறுதிப் போட்டியில் தமிழர் தலைவர் வீரர்களைப் பாராட்டி உரையாற்றினார்.
சென்னை, ஜன. 20- பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் சென்னை எழும்பூர் மேயர் இராதா கிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான சடுகுடு (கபாடி) போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் உடல் நலனைக் காக்கும் வகையில் அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சி கொடுக்கும் வகையிலும் தமிழர்களின் தேசிய விளையாட்டான கபாடி (சடுகுடு) போட்டியை நடத்த பெரியார் வீர விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கழகத்தின் புரவலராக தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களும், ஒருங்கிணைப் பாளராக வீ.அன்புராஜ், தலைவராக பேராசிரியர் ப.சுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக கே.கே.சி.எழிலரசன், தே.எடிசன் ராசா, செயலாள ராக நா.இராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப் பேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங் களில் சடுகுடு (கபாடி) போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.
2014ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டியை தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கலையொட்டி சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் டாக்டர் சிவந்தி திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற அணிகள்:
பெண்கள் பிரிவு - ஏ
1. சென்னை சிட்டி போலீஸ்
2. சென்னை குயின்ஸ்
3. திருவள்ளூர் மாவட்டம்
4. பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்
5. ஜே.பி.ஏ.எஸ்.
6. எத்திராஜ் கல்லூரி
7. சென்னை பிரண்ட்ஸ்
8. ராஜீவ் காந்தி ஸ்போர்ட்ஸ்
ஆண்கள் பிரிவு
1. அய்.சி.எஃப்
2. சாய் சென்னை
3. சென்னை சிட்டி போலீஸ்-ஏ
4. சென்னை சிட்டி போலீஸ் -பி
5. சென்னை மாவட்டம்
6. திருவள்ளூர் மாவட்டம்
7. காஞ்சிபுரம் மாவட்டம்
8. மதுரை மாவட்டம்
9. பி.ஜி. பிரதர்ஸ்
10. அசோக் பிரதர்ஸ்
11. ஜெய்பவானி
12. விக்ரந்த் கபடி குழு
13. அந்தோணி அம்மாள் செலக்ட்
14. திராவிடன் கபடி குழு
15. அம்பேத்கர் கபடி கழகம்
16. அறிவுச்சுடர் கபடி கழகம்
பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழர் தலைவர் வழங்கி சிறப்பித்தார்
இப்போட்டியின் கடைசி நாளான நேற்று (19.1.2014) பெண்கள் பிரிவில் நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை குயின்ஸ் அணி 24-12 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை மாநகரக் காவல்துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த அணிக்கு முதல் பரிசுத் தொகையை பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் அதன் புரவலர் கி.வீரமணி அவர்கள் ரூ.50,000 தொகை மற்றும் சான்றிதழ், பெரியார் சிலை கொண்ட நினைவுப் பரிசை வழங்கி பாராட்டிச் சிறப்பித்தார்.
அதேபோன்று இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாநகரக் காவல்துறை அணியினருக்கு ரூ.30,000 தொகை, சான்றிதழ், மற்றும் பெரியார் சிலை கொண்ட நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
மூன்றாம் இடத்தை பிடித்த இரண்டு அணி களான எத்திராஜ் கல்லூரி, ஜே.பி. ஏ.எஸ். அணி களுக்கு தலா ரூ.10,000 வீதம் இரண்டு அணிகளாக வழங்கியும், சான்றிதழ் வழங்கியும் சிறப்பித்தார்.
மகளிர் கபாடி போட்டியில் பெஸ்ட் ரைடர் ஆக விளையாடிய சென்னை குயின்ஸ் அணியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற வீராங்கணைக்கு பெரி யார் சிலை நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். அதேபோன்று பெஸ்ட் கேட்ச்சராக தேர்ந்தெடுக் கப்பட்ட வீராங்கனை உமா மகேஸ்வரிக்கு பெரியார் சிலை கொண்ட நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றவர்களுக்குப் பரிசு
கடைசி நாளான நேற்று (19.1.2014) ஆண்கள் பிரிவில் நடந்த விறு விறுப்பான இறுதி ஆட்டத்தில் சென்னை ஜெய்பவானி அணி சென்னை மாநகர காவல் துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெய்பவானி அணிக்கு ரூ.50,000 தொகை, சான்றிதழ், பெரியார் சிலை நினைவுப் பரிசை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் அய்சரி கணேஷ் மற்றும் பெரியார் வீரவிளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
இரண்டாம் இடம்பிடித்த சென்னை மாவட்ட கபாடி கழக அணிக்கு 30,000 தொகை மற்றும் சான்றிதழ், பெரியார் சிலை கொண்ட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் பிடித்த இரண்டு அணிகளான சாய் சென்னை, சென்னை மாநகர காவல்துறை அணி ஆகியவைகளுக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
ஆண்கள் பிரிவில் பெஸ்ட் ரைடராக தேர்ந் தெடுக்கப்பட்ட ஜெய் பவானி அணி வீரர் வினோத் குமாருக்கு பெரியார் சிலை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பெஸ்ட் கேட்ச்சராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு பெரியார் சிலை நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தொகுப்பாளர் மோகனவேலனுக்கு சிறப்பு
கபாடி அறிவிப்பாளர் மோகனவேலன் அவர்களுக்கு சிறப்பு...
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்திய இப்போட்டியை மூன்று நாள்களில் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பான தொகுப்புரை ஆற்றிய பகுத்தறிவாளர் மோகனவேலனுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து பெரியார் சிலை நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
மாநில அளவிலான இந்த கபாடி போட்டி நடுவர்களாக செயல்பட்ட மணி, இரா.கந்தசாமி, மேத்யூராஜ், டி.மோகன், எம்.ரமேஷ்பாபு, ஜெனார்த் தனன், எம்.பழனி, மணி, ஜி.எம்.பிரசாத், மாதவன், டி.மணி மற்றும் மாவட்ட கபாடிக் கழக நிர்வாகி கள் ஜெகதலன், மணிசேகரன், சம்பந்தம், மார்க்கர், பாபு, பிரகாஷ், கார்த்தி ஆகியோருக்கும் மற்றும் கபாடி போட்டியில் காயம் அடைந்தவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளித்த பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், மருத்துவ பணியாளர் ஜி.தயாளன், செவிலியர் மேரி ஆகியோ ருக்கும் பெரியார் வீர விளையாட்டுக் கழக ஒருங் கிணைப்பாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணி வித்து சிறப்பித்தார்.
இந்திய கபாடி அணி முன்னாள் வீரர் டைகர் ராஜரத்தினம் அவர்களுக்கு சிறப்பு...
இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்னாள் சர்வதேச வீரர் ராஜரத்தினம், சென்னை மாவட்ட கபாடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந் திரன், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தை யன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிறைவாக பெரியார் வீரவிளையாட்டுக் கழ கத்தின் துணைத் தலைவர் தே.எடிசன் ராஜா நன்றி கூறினார். இப்போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் அவர்களும், பெரியார் வீர விளைட்டுக் கழகத்தின் செயலாளர் உரத்தநாடு தோழர் செயல்வீரர் நா.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்து சென்னை மாநகர மக்கள் பாராட்டி சிறப்பிக்கும் அளவிற்கு செயலாற்றினார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ்
தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.
ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.
ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.
அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.
அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:
1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)
4. பெரியார் யார்?
5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து
9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக் காட்சியில் நகைச்சுவைத்தொடராக வந்த சின்னபாப்பா பெரியபாப்பா என்ற தொடரில் காதின் மீது கைவைத்த படியே அச்சு அசலாக பாப்பார பாஷையில் பேசி அல்லல் படும் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு தலைப்பெற்ற எம்.எஸ் பாஸ்கர் என்று அழைக்கப்படும் மு.சோ.பாஸ்கர்.
தன்னிகரற்ற கலைஞர்களைத்தந்த தஞ்சை மாவட்டமே இவரையும் திரை உலகிற்கு தந்துள்ளது. முத்துப்பேட்டை சோமு என்பவரின் மகனாகிய மு.சோ. பாஸ்கர் அவர்களின் நடிப்பாற்றலைக்கண்ட சினிமாத் திரை சின்னத்திரையிடமிருந்து சுவீகரித்துக் கொண்டது.
பச்சையப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல நடிகர்களுக்கு பின்னணி பேசியவர்.
தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் களுக்கும் தமிழில் பின்னணி பேசியுள்ளார். பின்னணி பேசியதில் சிறப்பாக, குறிப்பாக கர்மவீரர் காமராஜ் படத்தில் காமராஜராக நடித்தவருக்கு பின்னணி பேசிய தைக் குறிப்பிடலாம். பெரியார் திரைப்படத்தின் தொடக்க காட்சிலும், பெரியார் பற்றி கருத்துருவை சிறப்பாக தனது குரலில் வழங்கியுள்ளார்.
என்னதான் நடிப்பைக் கற்றுக்கொடுத்தாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை. அதிலும் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களும் நகைச்சுவைப் பாத்திரங் களை ஏற்று நடிப்பவர்களும், அந்த நடிப்பிலிருந்து வேறுபட்ட நடிப்பை வழங்குவதென்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது.
ஒரு சிலர் மட்டுமே அதில் மேன்மை பெற்றவர்கள். அந்த ஒருசிலரில் மிக முக்கியமானவர் இன்று விருது பெற வீற்றிருக்கும் பாஸ்கர். இவருடைய நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், தர்மபுரி, சிவகாசி, திருப்பாச்சி மாசிலாமணி, அழகியதீயே, சாது மிரண்டால், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைச் சொல்லலாம்.
எங்கள் அண்ணா படத்தையும், குரு என் ஆளு படத்தையும் பார்த்தவர்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பைப் பார்த்து இன்றும் கூட மனதில் நினைத்தால் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். இவருடைய குணசித்திர நடிப்புக்கான படங்களாக மொழி, பயணம், அஞ்சாதே, சூது கவ்வும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
அதிலும் குறிப்பாக 2007-இல் வெளிவந்த மொழி என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த விருதைப்பெற்ற இவரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை அறிந்தவர்.
இவ்வளவு பெருமைகள் பெற்ற திராவிட இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான மு.சோ.பாஸ்கர் அவர் களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
எழுத்தாளர் தமிழ்மகன்
தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் தமிழ்மகன் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், இன்றைய திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு மனைவி திலகவதி, மகன் மாக்சிம், மகள் அஞ்சலி ஆகியோர் உள்ளனர்.
தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரிய ராகப் பணியாற்றிவருகிறார். வளவன், தேனீ ஆகியவை பிற புனை பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார்.
திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங் களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் எட்டாயிரம் தலைமுறை எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
எழுத்துலக அறிமுகம் 1984-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்த போது, டி.வி.எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது வார இதழும் இணைந்து புதினப் போட்டி நடத்துவதாக அறிவித்தன. இறுதி ஆண்டு தேர்வை ஓரம் கட்டிவிட்டு வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற புதினம் எழுதினார்.
அதில் தேர்வு பெற்று முதல் பரிசாக டி.வி.எஸ். 50. வாகனத்தைப் பெற்றார். அக்கதையை முதற் பரிசுக்குத் தேர்வு செய்தவர் சின்னக்குத்தூசி ஆவார். புதினம் அந்த இதழில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களோடு தொடர்கதையாக வெளியானது.
1990-களில் கடவுள் 2, ஆல்பா என்ற விஞ்ஞான தொடர்கதைகளை உண்மை இதழில் எழுதினார்.
நடிகர் சத்யராஜின் வாக்குமூலம் தொடரும் இவர் தொகுத்து எழுதியதுதான். இப்போது ஆனந்த விகடன் வார இதழில் ஆபரேஷன் நோவா என்ற விஞ்ஞானத் தொடர்கதை எழுதி வருகிறார்.
எழுதிய நூல்கள் கவிதை நூல்கள்
பூமிக்குப் புரிய வைப்போம்; ஆறறிவு மரங்கள்; இந்த இரண்டு நூல்களும் அவர் கல்லூரியில் படித்தபோது வெளியானவை.
சிறுகதை நூல்கள்
எட்டாயிரம் தலைமுறை; மீன்மலர்; சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
புதினங்கள்
வெள்ளை நிறத்தில் ஒரு காதல்; சொல்லித் தந்த பூமி; ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம் 2; மிஸ் மாயா; மானுடப் பண்ணை; வெட்டுப் புலி (இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் திராவிட மனச் சூழலை விவரிக்கும் நாவல்) (2009); ஆண்பால் பெண்பால் (2011); வனசாட்சி (2012)
கட்டுரை நூல்கள்
விமானங்களை விழுங்கும் மர்மக்கடல்
வாழ்க்கைத் தொடர் கட்டுரைகள்
வாக்குமூலம் (தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் பற்றியது); சங்கர் முதல் ஷங்கர் வரை (தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் பற்றியது)
திரையுலகத் தொடர் கட்டுரைகள்
தில்லானா தில்லானா (நடிகை மீனா கட்டுரைத் தொடர்); செல்லுலாய்ட் சித்திரங்கள் (நேரில் சந்தித்த திரைப்படக் கலைஞர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்); மொழி பெயர்க்கப்பட்டவை: இவரது சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
`உள்ளக்கடத்தில்', `ரசிகர் மன்றம்' ஆகிய திரைப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
எழுதிய இதழ்கள்
அச்சு இதழ்கள்
கணையாழி, அன்னம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, தாய், ராணி, குங்குமம், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், உயிர்மை 3 , உயிரெழுத்து, வார்த்தை, யுகமாயினி மற்றும் புதிய புத்தகம் பேசுது
இணைய இதழ்கள்
ஆறாம் திணை, சென்னை ஆன்லைன், திண்ணை. காம், கீற்று.காம், உயிரோசை, தமிழ் ஸ்டூடியோ.காம், தமிழ் சினிமா.காம்
பணியாற்றிய பத்திரிகைகள்
பணியாற்றிய பத்திரிகைகள்
போலீஸ் செய்தி புலனாய்வு இதழில் பொறுப்பாசிரியர் பணி; தமிழன் நாளிதழில் இலவச இணைப்பு இதழ் பொறுப்பு; வண்ணத்திரை செய்தியாளர்; தினமணி நாளிதழ் சினிமாச் செய்தியாளர்; குமுதம் வார இதழ் சினிமாச் செய்தியாளர்; குங்குமம் வண்ணத்திரை பொறுப்பாசிரியர்; தினமணியில் முதன்மை உதவி ஆசிரியர்; ஆனந்தவிகடன் குழும இதழில் உதவிப் பொறுப்பாசிரியர்
விருதுகள்
வெள்ளை நிறத்தில் ஒரு காதல் (இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு); மானுடப் பண்ணை (தமிழக அரசின் சிறந்த நாவல் விருது); மொத்தத்தில் சுமாரான வாரம் (தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வு); கிளாமிடான் 9 (சிறுகதை) (அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைக்கதை விருது, இருபதாயிரம் ரூபாய் பரிசு); எட்டாயிரம் தலைமுறை (2008-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை நூல் விருது); 2010ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக் காக); 2010ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக்காக); வனசாட்சி நாவலுக்கான மலைச் சொல் விருது 2013; ஆண்பால் பெண்பால் (ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, ஆனந்த விகடன் விருது (2012) பெற்றது.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற தமிழ்மகன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 20-ஆம் ஆண்டு விழா திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
எழுத்தாளர், கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கிப் பாராட்டினார்
எழுத்தாளர், கலைஞர்களுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கிப் பாராட்டினார்
பொங்கல் திருநாளையொட்டி களை கட்டிய உணவுத் திருவிழா (பெரியார் திடல்)
சென்னை, ஜன. 20- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 20-ஆம் ஆண்டு விழாவின் மூன்று நாள் நிறைவு விழாவில் நேற்று (19.1.2014) பேராசிரியர் அ.மார்க்ஸ், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், எழுத்தாளர் தமிழ்மகன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழாவாக, தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா மிகவும் எழுச்சியுடன் நடை பெற்றது.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இவ்விழாக்களை நடத்தின.
பறை இசை - வீரவிளையாட்டுகள்
வீரவிளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
மூன்றாம் நாளான நேற்று (19.1.2014) மாலை சென்னை பெரியார் திடலில் மாலை 4 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருத்தணி கவியரசு குழுவினரின் பறை இசை மற்றும் கறம்பக்குடி முத்துவின் வீரவிளையாட்டுகள் நடை பெற்றன.
மூன்றாம் நாள் விழாவில் உறி அடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக பங்கேற்றனர் (19.1.2014).
பெரியார் திடலே நிரம்பி வழியும் அளவிற்கு தமிழ்க்குடி மக்கள் பெரும் திரளாக வந்திருந்து பறை இசை நிகழ்ச்சியையும், வீரவிளையாட்டுக் களையும் கண்டு களித்து மகிழ்ந்தனர்.
பட்டிமன்றம்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் ஊடகங்களால் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுகிறது என்ற தலைப்பில் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி ஆகியோரும், கைவிடப்படுகிறது என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன், கல்பாக்கம் ரேவதி ஆகியோரும் பங்கேற்றனர். இப்பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்தார்.
இதையடுத்து நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தொடக்கவுரையை மஞ்சை வசந்தன் ஆற்றினார்.
ஊடகங்களால் தமிழ்ப்பண்பாடு காப்பாற்றப் படுகிறதா? கைவிடப்படுகிறதா? என்ற பொருளின் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டி மன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்து மிகச்சிறப்பாக நடத்தினார்.
ஊடகங்களால் தமிழ்ப்பண்பாடு காப்பாற்றப்படு கிறது என்ற அணியில் இடம் பெற்ற புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து உரையாற்றி னர். ஊடகங்களால் தமிழ்ப் பண்பாடு கைவிடப்படு கிறது என்ற தலைப்பில் தேவகோட்டை மகாராஜன், கல்பாக்கம் ரேவதி ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்துவைத்து சிறப்பாக உரையாற்றினர். இப்பட்டி மன்ற நிகழ்வை நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் நிறைந்து இருந்த பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து கைதட்டி மகிழ்ந்தனர்.
பெரியார் விருது அளித்து சிறப்பிப்பு
இதையடுத்து பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலாவதாக எழுத்தாளர் தமிழ் மகன் அவர்களுக்கும், திரைக்கலைஞர் எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும், பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பெரியார் விருது (பெரியார் உலகத்தில் நிறுவப்பட வுள்ள சிலை மாதிரி) மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக பெரியார் விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் சாதனைக் குறிப்பை தோழர் செல்வி வாசித்தார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர் களின் சாதனைக் குறிப்பை நடிகை கனகா வாசித் தார். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் சாதனைக் குறிப்பை தோழி பாக்கியலட்சுமி வாசித்தார்.
பெரியார் விருது பெற்ற பெருமக்கள் ஏற்புரை யாற்றுகையில் தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்த கருத்துகளால் ஈர்க்கப்பட்டதால் அதன் அடிப்படையில் நாங்கள் எங்கள் துறையில் முன் னேற்றம் காண முடிந்தது. இனமானத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
தமிழர் தலைவரின் சிறப்புரை
பெரியார் விருது பெற்ற பெருமக்களைப் பாராட்டி, சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர்:-
கலைத்துறைக்கும் திராவிடர் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள், கலைவா ணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை கலந்த சீர்திருத்த கருத்துக்களை எந்த காலத்திலும் அழிக்க முடியாது.
அவரிடம், இவ்வளவு சீர்திருத்த கருத்துக்களை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் அந்த காலத்திலேயே பச்சை அட்டை குடி அரசு இதழ் படிக்கும்போது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் கிடைத்தன என்று பெருமையாக சொல்வார்.
அதே போன்று பெரியாரின் சீர்திருத்த கருத்து களை திரைப்படங்களில் துணிச்சலாக பேசக் கூடியவராக திகழ்ந்தவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள். அவரின் பேரால் இந்த மன்றமே அமைந் திருக்கிறது.
இப்படிப்பட்ட பெருமக்கள்தான் சுயமரியாதை இயக்கத்தில் இருந்துக் கொண்டே நாடகம் மற்றும் கலைத்துறையில் சீர்திருத்தக் கருத்துகளை பரப் பினர். அதற்கு காரணம் திராவிடர் இயக்கம்தான்.
இங்கே பெரியார் விருது பெற்று இருக்கும் எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் படைப் பாற்றல் புத்துலகத்திற்கு சென்றுக் கொண்டிருக் கிறது. இன்னும் அவரின் எழுத்தாற்றல் இமயத்திற்கு செல்ல வேண்டும், அவருக்கு அதற்கான பாதுகாப் பிற்குதான் ஒரு அடையாளமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அ.மார்க்ஸ் எப்போதுமே பட் டென்று தனது கருத்தை சொல்பவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கருத்தை எழுதிச் சொல்வதில் தமிழ்நாட்டில் இவர் முதன்மையானவர்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சுயமரியாதை இயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சுயமரியாதைகாரர் முத்து பேட்டை ஆர்.எம்.சோமு தேவர்தான் இவருடைய தந்தை. இவர் பெரியாரின் சீடர் தந்தை பெரியாரி டமும், அன்னை மணியம்மையார் மற்றும் என்னிட மும் உரிமை எடுத்துக்கொண்டு நட்பு பாராட்டு வார். அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சுயமரியாதை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமை.
எனவே நம்மவர்களை நாம் இங்கே அழைத்து பெரியார் விருது கொடுத்து பாராட்டுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது பெற்ற பெருமக்களை பாராட்டி சிறப்புரையாற் றினார்.
பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு
முன்னதாக பட்டிமன்றத்தில் பங்கேற்ற கவிஞர் நந்தலாலா, தேவகோட்டை மகா ராஜன், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், லால்குடி ஜோதி, கல் பாக்கம் ரேவதி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
இம்மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத்தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொன்னேரி வி.பன்னீர் செல்வம், தி.வெ.சு.திருவள்ளுவன், பா.முத்தையன், அனகை ஆறுமுகம், கு.தங்கமணி, உமா செல்வராஜ், உடுமலை வடிவேல், தாம்பரம் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரட்டீஸ் தொகுத்து வழங்கினார். பகுத்தறிவாளர் கழக தோழர் கொடுங்கையூர் கோவி.கோபால் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் திருத்தணி கவியரசு குழுவினருக் கும், கறம்பக்குடி முத்துவின் வீரவிளையாட்டு குழுவினருக்கும் நிகழ்ச்சியின் நிறைவில் மேற்கத்திய நடன இசை நிகழ்ச்சியை நடத்தி காட்டிய பெரியார் திடல் தோழர்கள் சரத்குழுவினருக்கும் தமிழர் தலை வர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
திராவிடர் திருநாள் பொங்கல் விழா மூன்றாம் நாளில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் தமிழர் தலைவர் மற்றும் பார்வையாளர்கள் (சென்னை, 19.1.2014)
இம்மூன்றாம் நிறைவு நாள் நிகழ்வில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன் மற்றும் கழக முன்னணி தோழர் - தோழியர்கள் பொது மக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
-விடுதலை,18,19,20.1.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக