புதன், 24 மே, 2017

திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது

திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனை வருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.  - -
- தந்தை பெரியார்


-விடுதலை,19.5.17


செவ்வாய், 9 மே, 2017

திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு குறைகிறதா..?


மஞ்சை வசந்தன்

திராவிடம் என்பதற்குப் பதில் தமிழ்த் தேசியம் என்ற சொல் மாறினால் எல்லாம் மாறி தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் உயர்வு வந்துவிடுமா? சீர்கேடுகள் எல்லாம் களையப் பெறுமா?

திராவிடம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன?

தமிழர் என்பதற்கு வரையறை என்ன?

திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழர்கள் மேம்பட்டார்களா? சீரழிந்தார்களா?

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு இழக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் வளர்ந்து வருகின்றனவா? வளரமுடியுமா?

தமிழர் என்பதில் பார்ப்பனர் அடக்கம் என்று கொண்டு, தமிழர் மொழியை கலாச்சாரத்தை வளர்த்து உயர்த்த முடியுமா?

பார்ப்பனர் அவர்களது ஆதிக்க அம்புகளை எய்து உள்ளிருந்தே நம்மை வீழ்த்தத்தானே செய்வர்?
இச்சிக்கல்களுக்குத் தீர்வு எவை? என்பனவற்றை நாம் ஆழமாக அலசி அறிய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

திராவிடக் கட்சிகளின் மீது திட்டமிட்ட வெறுப்பு விதைப்பு

திராவிடக் கட்சிகளே தொடர்ந்து தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றனவே, அதை மாற்ற, திராவிடக் கட்சிகளின் மீது சுயநலத்திற்காக வெறுப்பை விதைத்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு. அதற்கு உதவி செய்தவர் பெங்களூர் குணா.

இப்போது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றவர்கள் எல்லாம், தங்கள் கொள்கையைச் சொல்வதற்கு மாறாய் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்தான் தமிழ்நாடு கெட்டுப்போனது. எனவே, அவற்றை ஒழித்து அந்த இடத்தில் எங்களை அமர்த்துங்கள் என்று மக்கள் முன் கோரிக்கை வைக்கின்றனர். இதில் தமிழ்த் தேசியவாதிகள், பி.ஜே.பி.யினர், கம்யூனிஸ்டுகள் எல்லாம் அடக்கம்.

ஆக, திராவிட எதிர்ப்பின் அடித்தளமே சுயநல அரசியல் ஆகும். ஆட்சிக்கு வந்தவர்களின் ஊழல், கொள்ளை, சமரசங்கள் தமிழகத்தின் கேட்டிற்குக் காரணம் என்றால், அதில் பொருள் உண்டு. ஆனால், திராவிடக் கட்சிகளின் கொள்கை எப்படிக் காரணமாகும்.

மேற்கண்ட ஊழல், கொள்ளை, சமரசங்கள் எல்லாம் இந்த அரசியல் அமைப்பில் எவர் வந்தாலும் நடக்கும் என்பதே அனுபவம்! ஊழல், கொள்ளை, சமரசம் செய்துகொள்ளுதல் என்ற அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் எந்த அரசியல் கட்சி மிஞ்சும்? ஆட்சிக்கு வருமுன் தூய்மை காப்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இவற்றை அரங்கேற்றுவதுதானே அனுபவத்தில் நாம் காண்பது? ஊழல் ஒழிப்புப் பற்றிப் பேசுகின்ற புதிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் பல லட்சம் வாங்கியதைப் பார்த்தோமே! தொடக்கமே இப்படியென்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?

இவற்றை ஒழிப்பதற்கு மக்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் எதிர்த்துப் போராடிச் சீர்செய்ய வேண்டும். அதை விடுத்து திராவிடம் என்பதற்குப் பதில் தமிழ்த்தேசியம் என்று பெயர் வந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுமா?

பெயர் மாறினாலும் ஆளுகின்றவர் ஆசை மாறிவிடுமா? அவர்களின் சுயநலம் மாறிவிடுமா? ஜாதி உணர்வு மாறிவிடுமா? ஜாதி வேட்பாளர்களை நிறுத்தும் யுக்தி மாறிவிடுமா?

அரசியல் நடத்த கோடிகளில் பணம் வேண்டும் என்னும்போது ஊழல், கொள்ளை, சுரண்டல் அதுவாகவே வந்து சேர்ந்துவிடுமே!

அரசியல் கட்சித் தொண்டன் முழுநேர அரசியல்வாதியாக ஆகும்போது, அவன் அதை வைத்தே பிழைக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது, அங்கு ஊழல் ஊற்றுக் கண் திறக்கப்பட்டு விடுகிறதே!

இன்றைக்கு ஊழலை ஒழிப்போம், தமிழ்நாட்டை வளப்படுத்துவோம் என்பவர்கள் குடும்பம் 50 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது. இப்போது எப்படி இத்தனை ஆயிரம் கோடி சொத்து வந்தது என்று அவர்கள் கணக்குக் காட்டத் தயாரா?

ஊழலை ஒழிப்பேன், குடும்ப அரசியலைத் தடுப்பேன் என்கிறவர்களிடமே இந்த இரண்டும் உள்ளனவே! இவர்கள் எப்படி ஒழிப்பார்கள்?

மக்கள் தற்போது எழுச்சி பெற்றிருப்பதால் ஊழல், கொள்ளை, சுரண்டல் பெரிதும் குறையும். எனவே, இவற்றிற்காக பலமான கட்டமைப்பு கொண்ட திராவிடக் கட்சிகளை அகற்றுதல், தமிழர்க்கே கேடாய் முடியும். உதிரிக்கட்சிகள் சிதறிப் போனால், மதவாத பி.ஜே.பி. காலூன்றும். எனவே, உணர்ச்சிவசப் படாமல், தொலைநோக்கோடு முடிவெடுக்க வேண்டும்.

திராவிடர் என்ற சொல் தந்தை பெரியார் நுழைத்ததா?

மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம், 43, 44ஆம் சுலோகத்தில் திராவிடம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள். திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி.17ஆம் நூற்றாண்டில் குமரிலபட்டர் திராவிட பாஷைகள் பற்றிக் கூறியுள்ளார்.

கி.பி.17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர் என்ற பாடலில்

‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

டாக்டர் ஹட்சன் என்பவர் திராவிடன் என்ற சொல்லைப் பயன்படுத்தியதாய் கியர்சன் குறிப்பிடுகிறார் (Linguistic Survey of India Vol.I)

1856இல் கால்டுவெல் திராவிடர் என்ற சொல்லைக் கையாண்டார்.

பெரியாருக்கு முன் நீதிக்கட்சியினரே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
திராவிடர் பற்றி பாவாணர் கருத்து:

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் _தமிழம் _ த்ரமிள _ திரமிட _ திரவிட _ த்ராவிட _ திராவிடம்’’ என்று கூறி தமிழே திராவிடம் என்றானது என்கிறார். அதாவது தமிழும் திராவிடமும் வேறு வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே என்கிறார்.

- ( ஒப்பியன் மொழி நூல், பகுதி - 1, பக்கம் - 15, தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 14)

ஆக, திராவிடம் என்ற சொல் தமிழுக்கோ, தமிழர்க்கோ எதிரானது அல்ல. அது ஓர் இனக் குறியீடு. ஆரியப் பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்கும் ஓர் அடையாளச் சொல். தமிழன் என்ற போர்வையில் ஆரியப் பார்ப்பனர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் கவசம், பாதுகாப்பு அரண் அவ்வளவே!

தமிழர் என்பதற்கு மாறாய் திராவிடர் என்பது ஏன்?

1.    பெரியார் திராவிடர்களுக்காய் குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிமிர்ந்து நின்றார்களா! வீழ்ந்து கிடந்தார்களா? ஆரியத்திற்கு அடிமையாய் மூடநம்பிக்கைச் சகதியில் ஜாதிச் சச்சரவில், தன்மானமிழந்து, தன்னிலை அறியாது சூத்திரர்களாய் வீழ்ந்து கிடந்தனர். திராவிடக் கொள்கை வருமுன்னே வீழ்ந்து கிடந்தவன், திராவிடத்தால் வீழ்ந்தான் என்பது அசல் பொய் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? பித்தலாட்டம் என்பதா?

2.    திராவிடத்தைக் கையில் எடுத்து பெரியார் போராடிய போது திராவிடப் பகுதியின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்வு செய்து, அதற்குத் திராவிடத்தைக் கையில் எடுத்தது சரியா? தமிழைக் கையில் எடுத்திருக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

3.    பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே இல்லையே. அங்கு சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழியாரையும் உள்ளடக்கித் தானே இருந்தது. அதற்கேற்ற அணுகுமுறையைத் தானே கொள்ள முடியும்?

4.    மொழியடிப்படையில் பிரிக்கும்போது, வேற்று இனத்தானும் வருவானே (வருகிறானே). ஆரியப் பார்ப்பான் நான் தமிழன் என்று வரும்போது நீ எப்படி மறுப்பாய்!

5.    மொழியடிப்படையில் பார்த்தால் ஒரே இனத்தவரே எதிர் எதிர் நின்று எதிரிகளாவரே.

6.    இன்றைக்குள்ள நதி நீர்ச் சிக்கலை அன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து திராவிடத்தை விமர்ச்சிப்பது சரியா?

7.    தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் என்றால், அயல்நாடுகளில் சென்று தங்கி, தலைமுறைத் தலைமுறையாய் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாரிசுகள் தமிழே தெரியாது அந்நாட்டு மொழியையே பேசுகின்றனர். தமிழ் தெரியாததால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? தமிழகத்திற்கு வந்த மார்வாடிகள் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார்கள்; அதனால் அவர்கள் தமிழர்களா?

வீழ்ந்தது ஆரியத்தாலா? திராவிடத்தாலா?
வீழ்ந்தது ஆரியத்தால்:

தமிழ்மொழி சிதைந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி, மராட்டி என்று மாறியது ஆரிய சமஸ்கிருத கலப்பால் அல்லவா?

மொழிச்சிதைவு, இனச்சிதைவு யாரால்?

மொழி சிதைந்ததால் மொழிவழி தமிழினம் சிதைந்து விட்டதே.
கலாச்சாரச் சிதைவு யாரால்? ஒற்றுமைச் சிதைவு யாரால்?

ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற, பிறப் பொக்கும் என்ற சமதர்ம சிந்தனை கொண்ட தமிழர் கலாச்சாரம், வாழ்வியல் மாறி, சீர்கெட்டு, ஜாதி, மத, மூடநம்பிக்கை, மான இழப்பு வந்தது எல்லாம் ஆரியர்களால் அல்லவா?

கல்வி பறிபோனது யாரால்?

தாங்கள் மட்டுமே படிக்க வேண்டும், பார்ப்பனர் அல்லாதார் (தமிழர்கள் _ சூத்திரர்கள், படிக்கக் கூடாது என்று பல நூற்றாண்டுக் காலம் தடுத்துக் கெடுத்தவர்கள் யார்?

பகுத்தறிவு பறிபோனது யாரால்? இழிவு வந்தது யாரால்? ஆதிக்கம் வந்தது யாரால்?

ஆரியப் பார்ப்பனர்களால் அல்லவா!

தமிழ், கோயிலுக்குள் ஒலிக்கக் கூடாது என்று ஆரிய பார்ப்பனர்கள் தடுக்கிறார்களா?  தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தடுக்கிறார்களா?

தமிழர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று தடுப்பது யார்? ஆரியப் பார்ப்பனர்கள்தானே! தமிழை நீசப் பாஷை என்றது யார்? ஆரியப் பார்ப்பனர்கள்தானே!

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லி தமிழர்களை மருத்துவம் படிக்காமல் தடுத்தவர்கள் யார்? ஆரியர்கள் தானே!

திராவிடத்தால்தான் எழுந்தோம்:
மானமீட்சி

மானமே உயிர் என வாழ்ந்த தமிழர் ஆரியத்தின் ஊடுருவலால், ஆதிக்கத்தால் அடிமையாகி, சாத்திர, கோத்திர மூடநம்பிக்கை களால் சூத்திரனாகி, இழிநிலையில் உழன்றான்.

தமிழர்களின் தன்மான இழப்பிற்கு எவை யெல்லாம் காரணமோ அவற்றையெல்லாம் சாடினார். யார் எல்லாம் காரணமோ அவர்களையெல்லாம் எதிர்த்தார்.

தந்தை பெரியார் என்னும் தன்மானச் சூரியன் தந்த சூட்டினால் சொரணை பெற்ற தமிழர்கள் மெல்ல மெல்ல விழித்தனர். தான் யார்? என்ற தன் உணர்வே அப்போதுதான் தமிழனுக்கு வந்தது.

இந்த மண்ணின் உரிமையாளர் நாம். வந்தேறிகளான ஆரியர்கள் நம்மைக் கேவலப்படுத்துவதா? அடிமைப்படுத்துவதா? ஆதிக்கம் செலுத்துவதா? என்ற சிந்தனைகள் பிறந்தன. தந்தை பெரியாரின் கருத்துக்களை அசைபோடத் தொடங்கினர். அதன் விளைவாய் ஆரியத்தை வசைபாடத் தொடங்கினர். ஆரிய எதிர்ப்பு நெருப்பு பற்றிப் பரவத் தொடங்கியது. மானச்சூட்டின் விளைவாய் வந்த நெருப்பல்லவா அது. ஆறு வயது ஆரியச் சிறுவன் அறுபது வயது தமிழ் முதியவரை, வாடா, போடா என்ற நிலையைத் தகர்த்த இயக்கம் திராவிடம் அல்லவா? உளச்சான்று உள்ள எவர் இதை மறுப்பர்!

உரிமை பெறல்

கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செய்த ஆரியக் கோட்டையை இடஒதுக்கீடு என்னும் எரிபொருள் கொண்டு தகர்த்தது அல்லவா திராவிடம்? தகர்த்தவர் அல்லவா தந்தை பெரியார்! இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்! இடஒதுக்கீடு பெற்று தமிழர்கள் எல்லாத் துறையிலும் நுழைவாசல் திறந்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!

உயர்பதவிகள் முழுக்க ஆரியப் பார்ப்பனர்களுக்கே என்ற ஆதிக்கத்தைத் தகர்த்து, தமிழர்கள் அப்பதவிகளில் தலைநிமிர்ந்து அமர வழி செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!

தாசில்தாராகத் தாழ்த்தப்பட்டவர் முன்செல்ல, கோப்புகளைச் சுமந்து ஆரியப் பார்ப்பனர்கள் பின்செல்லத் தலைகீழ்ப் புரட்சியை ஏற்படுத்தியப் புரட்சி இயக்கமல்லவா திராவிடர் இயக்கம்!

கல்வி

சூத்திரன் கற்கக்கூடாது என்ற சாத்திரத்தை மாற்றிச் சரித்திரம் படைத்த இயக்கம் எது?

குலக்கல்வித் திட்டத்தைக் குழியில் புதைத்து அம்பட்டன் பிள்ளையை ஆட்சியராக்கிய இயக்கம் எது?

மருத்துவமா? சட்டமா? பொறியியலா? கலையா? இசையா? ஆட்சியா? வங்கியா? வானொலியா? எல்லா இடத்திலும் ஆரியப் பார்ப்பனர் என்ற ஆதிக்கத்தை அகற்றி, தமிழர்களை அங்கெல்லாம் அமர்த்தியதோடு அவர்களைச் சாதிக்க செய்த இயக்கம் எது?

இன்று எல்லா துறைகளிலும் முதலிடம் பெற்று பரிசு பெறுபவர்கள் யார்? கல்வியே வராது என்று சொல்லப்பட்ட சூத்திரன்தானே? இந்த மாற்றத்தை நிகழ்த்தியது திராவிடம் அல்லவா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வா, சூத்திரத் தமிழன்தான் முதலிடம் பெறுகிறார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வா சூத்திரத் தமிழன்தான் முதலிடம். இந்திய ஆட்சிப் பணியா? சூத்திரத் தமிழர்கள்தான் அதிகம் தேர்வு பெறுகிறார்கள்.

பொறியியல், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அறிவியல், ஆட்சி என்று அனைத்திலும் முத்திரை பதிப்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?

அப்துல்கலாமும், அண்ணாதுரையும் ஆரியப் பார்ப்பனர்களைப் பின்தள்ளி முன்னே நின்றது எந்த இயக்கத்தால்? திராவிடம் தந்த விழிப்பாலும் உரிமையாலும் அல்லவா?

கலை

கே.பி. சுந்தரம்பாளும், சிவாஜிகணேசனும், பாரதிராஜாவும், இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் ஆரியத்தை அடியில் தள்ளி, பிடியைத் தங்களுக்குள் கொண்டு வந்தது திராவிடம் தந்த விழிப்பால், ஊக்கத்தால், வாய்ப்பால், உரிமையால் அல்லவா?

பிராணாநாதாவும், சகியும் வசனமாகி, புராணமும், இதிகாசங்களும் திரைப்படங்க ளாகிய நிலையை மாற்றி, வேலைக்காரியும், பராசக்தியும், மனோகராவும், இரத்தக் கண்ணீரும் வந்து, அனல் தெறிக்கும் தமிழ் வசனம் பேசிய மாட்சியும், சமூக அவலங்களை உணர்த்திய காட்சியும் திராவிடம் தந்த புரட்சியல்லவா?

தெலுங்குக் கீர்த்தனையும், கர்னாடகச் சங்கீதமும் பாடப்பட்ட மேடைகளில் தமிழிசையை வழிந்தோடச் செய்தது திராவிடம் அல்லவா?

மேடைத் தமிழ்

மேடையில் நற்றமிழ் சொற்களை, அடுக்கு மொழியில் மிடுக்காகப் பேசுவது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உணர்வைத் தூண்டி எழுச்சியை உருவாக்குவது என்ற செயல்கள் திராவிடம் தந்த கொடையல்லவா?

மேடை நாடகங்கள்

மன்மத நாடகமும், பக்த பிரகலாதாவும், சூரசம்காரமும் நடிக்கப்பட்ட மேடைகளில், சமூக விழிப்பூட்டும் நாடகங்கள் நடத்தப் பட்டது திராவிடம் ஏற்படுத்திய புரட்சி யல்லவா? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றோரால் சமூகச் சீர்திருத்த நாடகங்கள் மூலை முடுக்கெல்லாம் நடத்தப்பட்டு, தன்மானமும் பகுத்தறிவும், தமிழ் உணர்வும் ஊட்டப்பட்டது திராவிடத்தால் அல்லவா?

புரட்சி இயக்கங்கள்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார், கவிஞர் சுரதா போன்றோரால் இனஉணர்வும், மொழி உணர்வும், விழிப்புணர்வும், தன்மானச் சூடும், உரமும், திறமும், ஊக்கமும் கொடுக்கப்பட்டது திராவிடத்தின் எழுச்சியால் அல்லவா?

மானமுள்ள மணமுறை

ஆரியர் மந்திரம் சொல்லி, அக்கினி வளர்க்கப்பட்டு, மானம் இழந்து, மதியிழந்து, நடத்தப்பட்ட தமிழர் வீட்டுத் திருமணங்களை, மானமும், அறிவும் உள்ளதாய், தமிழ் மரபுக்கு உகந்ததாய் மாற்றிய சாதனை திராவிடத்தின் வெற்றியல்லவா? அருந்ததி பார்க்காமல், அம்மி மிதிக்காமல், ஆரியப் பார்ப்பனர் மந்திரம், அக்கினி இல்லாமல் செய்யும் திருமணம் செல்லாது என்றிருந்த நிலையை மாற்றி, மனம் ஒத்து மாலை மாற்றிக் கொண்டாலே திருமணம் செல்லும் என்று சட்டப்படி தகுதி கொடுத்தது திராவிட அரசு அல்லவா?

தமிழர் விழாக்கள்

தமிழர்களை இழிவு செய்யும் ஆரியர் விழாக்களை அடையாளங் காட்டி, தமிழர்க்குரிய பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடச் செய்து தமிழர் பண்பாட்டை மீட்ட இயக்கம் திராவிடம் அல்லவா?

தமிழ் வளர்த்தல்

ஆரியம் அழித்தொழிக்க நினைத்த தமிழை, வீரியத்துடன் மீட்டு, ஏட்டிலும், நாட்டிலும் உயர்த்தி நிறுத்தியது திராவிடம் அல்லவா?

ஸ்ரீயும், ஸ்ரீமதியும், மகாராஜ ராஜஸ்ரீயும், கனமும், மகா கனமும் பேசிய தமிழ் ஏடும் நாடும், திரு, திருமதி, பெருந்தகை, மாண்புமிகு, மானமிகு என்று பேசச் செய்தது திராவிடம் அல்லவா?
நாராயணசாமியும், சுப்பிரமணியுமாய் திரிந்த தமிழனை செழியன், பாண்டியன், தமிழ்வளவன், தமிழரசி, செல்வி, செல்வன் என மாற்றியது திராவிடம் அல்லவா?

தமிழ்ப் படித்தவர்களை இரண்டாம் தரமாக நடத்திய நிலையை மாற்றி, அவர்களுக்கும் சமநிலை, உயர்நிலை தந்தது திராவிடம் அல்லவா?

தமிழ்வழிக் கல்வி அளித்து, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தந்தது திராவிடம் அல்லவா?
நீதிமன்றங்களிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தமிழைப் பயன்படுத்தியது திராவிடம் அல்லவா?

திருக்குறளை தெருதோறும் பரவச் செய்தது திராவிடமும், பெரியாரும் அல்லவா? தொல்காப்பிய வாழ்வைத் துலங்கச் செய்தது திராவிடம் அல்லவா?

தமிழ்நாடும், தமிழ் மாநாடும் :

தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி, நடைமுறையில் அப்படியே அழைக்கச் செய்த சாதனையைப் புரிந்தது திராவிடம்.

தமிழுக்காக மாநாடுகள் நடத்தி, தமிழ் அறிஞர்களைப் பங்கு பெறச் செய்து எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது திராவிடம். கல்லூரிகளில் தமிழை இடம் பெறச் செய்தது திராவிடம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கியது திராவிடம். தமிழ் வளர்ச்சித் துறையைத் தந்தது திராவிடம், தமிழ் அகராதிகளை, அகர முதலிகளை வெளியிட்டது திராவிடம். தமிழை, செம்மொழி என அறிவிக்கச் செய்தது திராவிடம். அதற்கான நிதியைப் பெற்றதும் திராவிடம். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி, அவர்களின் குடும்பங்களின் இன்னலைப் போக்கியது திராவிடம்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு :

இந்தியை வலியப் புகுத்த முயன்ற அரசின் செயலை எதிர்த்து, வென்று, தமிழுக்குப் பாதுகாப்பையும், சிறப்பையும், தந்தது திராவிடம். அதற்காக இன்னுயிரை இழந்ததும் திராவிடம்.

தொழிலாளர் நலன் :

தொழிற்சங்கங்களை வலுவாகக் கட்டமைத்துத் தொழிலாளர் நலனையும், பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்தது திராவிடம்.

பெண்ணுரிமை :

இந்தியாவிலே தமிழகப் பெண்கள்தான் உரிமையும், விழிப்பும், பாதுகாப்பும், கல்வியும், சொத்தும் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் பெரியாரும் திராவிடமும்தானே! விதவை மணம், ஜாதி மறுப்பு மணம், சொத்துரிமை, வேலை வாய்ப்பு போன்ற புரட்சிச் சிந்தனைகள் செயலில் வந்தது திராவிடத்தால்தான்!

தேவதாசி முறையை ஒழித்து, தமிழ்ப் பெண்களை மீட்டது; கூட்டங்களில் ஆண்களோடு பெண்களை அமரச் செய்தது திராவிடம். மகளிர் காவல் நிலையங்கள் அமைத்து பெண்களைக் காவலர்களாகப் பணிக்கமர்த்தியது திராவிடம். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இன்று நிமிர்ந்து நிற்பது திராவிடம் தந்த திடம் அல்லவா!

ஜாதி ஒழிப்பு :

இந்தியா முழுமையும் இன்றளவும் ஜாதிக் கொடுமைகள் தலைதூக்கி நிற்கின்ற நிலையிலும் தமிழகத்தில் ஜாதி வெறுப்பு ஒழிந்து, ஒரே இடத்தில் எல்லோரும் சேர்ந்து வாழும் நிலையை உருவாக்கியது திராவிடம். அதன் உச்சமாகச் சமத்துவபுரங்கள், சமபந்தி உணவு. தாழ்த்தப்பட்ட மக்கள் முழுப் பாதுகாப்போடும், சம உரிமையுடனும் வேறுபாடின்றி வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு காணப்படுவதற்கு முழுக்க முழுக்கக் காரணம் திராவிட கட்சிகளும், பெரியாரும் அல்லவா?

தமிழர் ஆண்டு :

உலகுக்கே ஆண்டுக்கணக்கைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், இந்த உண்மை மறைக்கப்பட்டு, நம்மீது புராணக் கதை சுமத்தப்பட்டு, 60 சமஸ்கிருத ஆண்டுகளைத் தமிழாண்டுகள் என்று சொல்லி நம்மைக் கேவலப்படுத்தியதை மாற்றி தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஆணையிட்டது திராவிடம். ஆனால் அதைத் தகர்த்தது ஆரியம். ஆரிய திராவிடப் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளம்!

ஆரியர் ஆதிக்கம் அகற்றல் :

உணவு விடுதி என்றால் அதில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தனியிடம், தண்ணீர்ப் பானை தனி என்ற நிலை நீடித்தது. இதைக் கடுமையாக எதிர்த்துத் திராவிட இயக்கம் போராடியதன் விளைவாய் இந்த வேறுபாடு அகற்றப்பட்டது. அதேபோல் உயர்பதவியில் ஆரியப் பார்ப்பனர்களே அமர்ந்த நிலை தகர்க்கப்பட்டுத் தமிழர்களும் செல்லும் நிலை திராவிடத்தால் உருவாக்கப்பட்டது. அல்லவா?

‘தமிழ்நாடு’ உருவாக பெரியார் ஆற்றிய பணிகள்:

1938இல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய ஒரு தமிழர் தலைவரைப் பார்த்து, தரமிழந்து, அறியாமையின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியத்தைக் கெடுக்கவே பெரியார் திராவிடத்தை எடுத்தார் என்று அபாண்டமாக, பொய்யாக, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை குணா கூறுகிறார் என்றால் அவர் ஒரு ஆரிய கைக்கூலியா? என்பதைத் தமிழர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார் முழங்கிய தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமே தமிழ்த் தேசியத்திற்கான முதல் முழக்கம் என்பதை வரலாற்று அறிவுடைய அனைவரும் அறிவர், ஏற்பர். அதனால்தான் தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று நன்றியுள்ள அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

1.    தனது ஏடுகளில் நாள்தோறும் எழுதினார்.

2.    ஆற்றலுள்ள ஆர்வம் உள்ள அறிஞர்களை விட்டு எழுதச் செய்தார்.

3.    ஊர்தோறும் மேடைதோறும், நாள்தோறும் பேசினார்.

4.    தன் தோழர்களை, தமிழர் நாட்டு வளர்ச்சிக்குப் பேசச் செய்தார்.

5.    கவிஞர்கள் மூலமாகத் தமிழர், தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பரவச் செய்தார்.

6.    நாடகங்கள் மூலம் உணர்வு ஊட்டினார், வளர்த்தார்.

7.    திரைப்படங்கள் மூலமாகவும் தமிழர் உணர்வு பரவத் தூண்டினார், உதவினார், ஆதரித்தார்.

8.    தமிழ்நாடு உருவாக, அதற்குத் தடையாக இருந்த ஜாதி, மதம், மூடநம்பிக்கை, ஆரியப்

பார்ப்பனர் ஆதிக்கம் இவற்றை எதிர்த்து முடிந்த அளவு ஒழித்தார்.

9.    தமிழரிடையே சமத்துவத்தை வளர்த்தார்.

10.    தமிழரிடையே ஒற்றுமை வளர ஜாதி மறுப்பு (கலப்பு) மணங்களை நடத்தினார்.

11.    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அடிப்படையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தமிழ் காலத்திற்கு ஏற்ப கருத்துக்களை உள்வாங்கி வளம்பெற வேண்டும். உலக மாற்றத்தின் தேவைக்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மாற்றமும், ஏற்றமும் பெற்று வளர வேண்டும் என்று பேசினார், அதற்கான செயல்களிலும் இறங்கினார்.

12.    தமிழ்நாடு உருவாவதற்கு அரசியல் அணுகுமுறைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் ஆதரவையும், அரசியல் பிரச்சாரங்களையும் செய்தார்.

தமிழ் தேசியத்தின் கொள்கை என்ன?

தமிழர் நலன், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் உயர்வு, தமிழர் மீட்சி, தமிழர் மரபுகள், கலை, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்படல், தமிழர் மருத்துவம் வேளாண்மை மீட்டெடுத்தல், தமிழர் கல்வி வளர்ச்சி, தமிழர் வேலைவாய்ப்புக்கு வழிசெய்தல், நதி நீர்ச்சிக்கலில் தமிழர் உரிமை காப்பாற்றுதல், தடுப்பணைகளைத் தடுத்தல் போன்றவை தானே!

திராவிடக் கட்சிகளின் கொள்கைகளும் அதுதானே!

இவை அனைத்தையும் தானே திராவிடக் கட்சிகள் சொல்கின்றன, செய்கின்றன! இவற்றிற்காகத்தானே போராடுகின்றன?

“தமிழர்”, “திராவிடர்” என்ற சொல் பயன்பாட்டைத் தவிர வேறு என்ன வேறுபாடு.

திராவிடம் என்ற பெயரில் கட்சிகள் இருந்தாலும் செய்தது எல்லாம் தமிழர்க்காக, தமிழ் மொழிக்காகத் தானே?

பெயர் மாற்றத்தால் மட்டும் பெரிய மாற்றம் வந்து விடுமா?

தமிழர் என்ற பெயரில் பார்ப்பனரை சேர்ப்பது ஆபத்தல்லவா?

திராவிடக் கட்சிகளிலே ஊடுருவியவர்கள் பார்ப்பனர்கள். அப்படி இருக்க பார்ப்பனர்களை தமிழர்கள் என்று சேர்க்கத்துடிக்கும் தமிழ் தேசிய கட்சியுள் அவர்கள் எளிதாக ஊடுருவி அழித்தொழித்து விடுவார்களே! அதைத் தடுக்க “திராவிடம்’’ என்பதுதானே இனப் பாதுகாப்பாகும்!

தமிழர்களுக்கு எதிரானவர்களைச் சேர்த்து தமிழர் நலன் காப்பதெப்படி?

நாம் தமிழ் வளர வேண்டும், தமிழ் கருவறையுள் ஒலிக்க வேண்டும், தமிழ்ப் புத்தாண்டு ‘தை’ முதல்நாள் என்போம், பார்ப்பனர்கள் இவற்றை எதிர்க்கக் கூடியவர்கள்; சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்வாய்க் கருதுபவர்கள்!

தமிழர் இசையை அழித்து, கர்நாடக இசையை தூக்கிப் பிடிப்பவர்கள். மத ஒழிப்பு தமிழர் கொள்கை. மதவெறி மதமோதலை வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள்-. கருவறையுள் தமிழன் செல்வதை தடுப்பவர்கள் பார்ப்பனர்கள். இப்படி தமிழர்க்கு எதிரானவர்களை தமிழர் என்று சேர்த்து தமழையும் தமிழரையும் காப்பது எப்படி?

தமிழ்த்தேசியவாதிகளின் முன்னோடிகள் யார்?

ஆரியப் பார்ப்பன ராஜாஜியும் அவரது அணுக்கத் தொண்டர் ம.பொ.சி.யும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோடிகள்.

“கம்யூனிஸ்டுகளைவிட திராவிடர் கழகத்தார்கள் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம் சாதாரண மக்களைப் பற்றிக் கொள்கின்றது. இனி தமிழ்நாடு சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கைக் கட்டி வைத்துவிட வேண்டும். இனி அவர்கள் செய்கை வரலாற்றில் இடம் பெற வேண்டுமேயல்லாமல் நாட்டில் காணும்படி விடக்கூடாது’’ இது இராஜாஜி சபதம்.

இந்த இராஜாஜியின் அணுக்கத்தொண்டர் ம.பொ.சி. இராஜாஜியின் செயல் திட்டங்களை, விருப்பங்களை செயல்படுத்த அயராது பாடுபட்டவர்; ஆரியத்தின் அடிவருடி.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பதால், அவர்கள் (தமிழர்கள்) தேவ மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது நிறையோ, நெறியோ ஆகாது’’ என்று தமிழர்களை ஆரியத்திற்கு அடிமையாக்க உழைத்தவர்; சமஸ்கிருதத்தை தேவமொழியாக ஏற்கச் சொன்னவர் ம.பொ.சி.!

“மார்வாடிகளின் கடைக்கு முன்னால் மறியல் செய்தால், திராவிட வியாபாரிகள் கடைகள் முன் நாம் மறியல் செய்வோம்’’ என்று மார்வாடிகளுக்காக மார்தட்டியவர் ம.பொ.சி.! இப்படிப்பட்ட ம.பொ.சி.யைத்தான் கும்பிட்டுப் போற்றுகிறார்கள் குணா போன்றோரும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளும்.

தமிழ்த் தேசிய கட்சிகளால் திராவிடக் கட்சிகள் செல்வாக்கு குறைகிறதா?

தமிழ்த் தேசிய கட்சிகள் எழுச்சி பெறுவதாயும், திராவிடக் கட்சிகள் செல்வாக்கிழப்பதாயும் ஆரிய பார்ப்பனர்கள் ஊடகங்களின் வழி ஓயாது முழங்கி, திராவிடக் கட்சிகளை ஒழிக்க முயல்கின்றனர். தமிழ்த் தேசியவாதிகளும் முயற்சி செய்கின்றனர்.

இதற்குக் கடந்தத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பதிலையும், பாடத்தையும் தந்துள்ளார்கள்.
இனித் தேர்தல் வந்தாலும் திராவிடக் கட்சிகள்தான் வெல்லும்.

மக்கள் திராவிடக் கட்சிகளை எதிர்க்கவில்லை. ஊழல், கொள்ளை, சுயநலம், குடும்ப ஆதிக்கம், ஆடம்பர வேடிக்கைகள், கல்விச் சுரண்டல், சாராயக் கடைகள் போன்றவற்றைத்தான் வெறுக்கின்றார்கள், எதிர்க்கிறார்கள். இவற்றைத் தவிர்த்தால் திராவிடக் கட்சிகளை என்றும் மக்கள் வரவேற்று ஆதரிப்பர்! பார்ப்பனர் சூழ்ச்சியினையும் முறியடிப்பர்!

திராவிடக் கட்சிகள் திருத்தப்பட வேண்டியவையே தவிர ஒழிக்கப்பட வேண்டியவை அல்ல என்பதைத் தமிழர்கள் சிந்தையில் கொள்ள வேண்டும்.

தமிழர்க்கான வலுவான அமைப்பைச் சிதைத்து ஆரியப் பார்ப்பன ஆதிக்கப் பாசறையான பி.ஜே.பி.யை வளரவிடாது, திராவிடக் கட்சிகளின் குறைகளைக் களைந்து பாதுகாப்பதே தமிழர்க்கும், தமிழுக்கும், தமிழகத்திற்கும் நலம் பயக்கும்! 

 -உண்மை இதழ்,16-31.3.17