ஞாயிறு, 12 மார்ச், 2023

‘திராவிடர்’ வார்த்தை விளக்கம்

 

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப் பட்டேன். 

 திராவிடர் கழகம் ஏன்? 

 உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் ‘திராவிடர்’ என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. 

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். 

திராவிடம் - திராவிடர் என்பது 

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ஙி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. 

இதுகூட ஏன்? 

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்பட வேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்து வருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்ப தாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப் படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், 

ஏற்பட்ட கெடுதி 

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை.  இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். 

சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங் களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரி மையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடு கிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக்கொண்டவனே யாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடி யாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிராமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடு பட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத் திற்கும் ஒத்த உண்மையாகும் இது. 

திராவிடர் என்பதின் கருத்து 

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன்.  நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். 

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். 

கலந்துவிட்டது என்பது... 

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். 

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். 

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப் போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். 

உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? 

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். 

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாச வேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். 

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். 

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

மொகஞ்சதாரோ தொலைக்கப்பட்டதா? தொலைந்துபோனதா? திராவிட கலாச்சாரத்தின் நுழைவாயில்

 

(1995-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான மும்பை பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் திராவிட இனக்குழு என்பது ஆங்கிலத்தில் 'திராவிடன் சிவிலைசேசன்'  (Dravidan Civilization)  என்று இருந்தது. 1995ஆம் ஆண்டு முதல் முதலாக அங்கு சிவசேனா ஆட்சி அமைந்தது, முதலமைச்சராக மனோகர் ஜோஷி பதவியில் அமர்ந்தார்.  அப்போது அவர்கள் செய்த முதல் வேலை திராவிட சிவிலைசேசன் என்று இருந்த கல்வெட்டை அகற்றி அங்கு 'அன்னோன் சிவிலைசேசன்'  (Unknown Civilization)  (அடையாளம் தெரியாத இனக்குழு) என்று மாற்றினார்கள்.  ஹிந்துத்துவவாதிகள் திராவிடம் என்ற பெயரைக் கேட்டாலே காந்தாரம் முதல் குமரிவரை வெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு)

தெற்கு பாகிஸ்தானின் தூசி நிறைந்த தற்போதைய சிந்து சமவெளிப்பகுதிகள், உலகின் மிகவும் பழைமைவாய்ந்த நகரங்களின் எஞ்சியவையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி பெரும்பாலான மக்கள் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. 

இந்தியாவில் ஹரப்பாவை அறிந்ததை போன்று மொகஞ்சதாரோவைப் பற்றி நிறைய அறிந்திருக்கவில்லை. மொகஞ்சாதோரோ மூன்று கட்டங்களாக எழுந்து அழிந்துள்ளது. 

 ஒன்று 4000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட நாகரீகம், 2500 ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த நாகரீகம், அதன் பிறகு கிறிஸ்துபிறப்பிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு - அதன் பிறகு சில ஆண்டுகளில் அழிந்துபோன கிரேக்க இந்திய நாகரீகத்தை கொண்ட மக்கள் குழு  சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பிறகு வந்த இரண்டு நாகரீகங்களும் திராவிட நாகரீகத்தை பாதுகாத்தன. 

ஆங்கிலேயர்கள் 1807 ஆம் ஆண்டு அங்கு சென்ற போது பழங்கால பவுத்த ஸ்தூபம் காலத்தால் பழுதடைந்த தெருக்களில் உயர்ந்து நிற்கிறது. அத்துடன் பெரிய சமூக குளம், முழுமையான விரிவான படிகளுக்கு கீழே இருந்தது. அங்கு சில ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளின் கூடாரங்களைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

தெற்கு பாகிஸ்தானின் லார்கானா எனும் தூசி நிறைந்த நகருக்கு வெளியே ஒரு மணி நேரப்பயணத்தில் மொகெஞ்சதாரோ பகுதிஉள்ளது.

இன்றைக்கு அந்த நகரின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் முந்தைய கால நகரங்களில் ஒன்றாக இது இருந்தது என்பது மட்டுமின்றி, செழிப்பான பெருநகரில் இடம் பெறக் கூடிய உயர்ந்த நவீன கட்டமைப்புகளை கொண்டிருந்தது.

மொகஞ்சதாரோ என்றால், வட்டார மொழியில் (மொகன்+சதாரோ) இறந்த மனிதர்களின் குன்று அல்லது மேடு என்று பொருளாகும். உலோகக் காலத்தின் போது வடகிழக்கு ஆப்கானிஸ்தான் முதல் வடமேற்கு இந்தியா வரையிலான ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஒரு காலத்தில் செழுமையாக இருந்த சிந்து சமவெளி (ஹரப்பா என்றும் அறியப்படுகிறது) நாகரீகத்தின் பெரிய நகரமாக இருந்தது. ஏறக்குறைய 40,000 குடிமக்கள் இங்கு வசித்ததாக நம்பப்படுகிறது. 

இது ஒரு நகர மய்யமாக மெசபடோமியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் சமூக, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. 

ஆனால், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் செழித்தோங்கி வளர்ச்சி பெற்ற பண்டையகால இதர நகரங்களான எகிப்து, மெசபடோமியா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மொஹஞ்சதாரோ குறித்து சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கி.மு.1700 ஆம் ஆண்டில் இந்த நகரம் கைவிடப்பட்டது. ஏன் இங்கு குடியிருந்த மக்கள் வெளியேறினர் அல்லது அவர்களை யார் வெளியேற்றினார்கள் என்பது இன்றுவரை புரியாத ஒன்றாக உள்ளது. 

இந்தப் பகுதியில் சில செங்கற் கட்டடங்கள் இருந்ததாக கேள்விப்பட்டு 1911ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தப் பண்டைய நகரத்துக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்தனர். எனினும், இந்த செங்கற்கள் எந்தவிதத் தொன்மையும் கொண்டவை அல்ல என்று அன்றைய இந்திய தொல்லியல் துறை நிராகரித்தது. இந்த இடம் தொடர்ந்து  பல ஆண்டுகளாகவே அமைதியான இடமாக இருந்து வருகிறது. பின்னர் இந்திய தொல்லியல் துறை அதிகாரியான ஆர்.டி. பானர்ஜி என்பவர், பவுத்தர்கள் வழக்கமாக தியானம் செய்யும் திட்டு போன்ற கட்டமைப்பை, புதைக்கப்பட்ட ஸ்தூபியை பார்த்ததாக கூறினாராம். 

அவரது இந்த ஆரம்ப கட்ட ஆய்வைத் தொடர்ந்து, மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் தொல்லியலாளர் சர் ஜான் மார்ஷெல் போன்றோர்  அதிக எண்ணிக்கையிலான அகழாய்வு பணிகள் மேற்கொள்வதை நோக்கி இது இட்டுச் சென்றது. இறுதியில் மொஹஞ்சதாரோ, 1980ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்று என பெயரிடப்பட்டது. 

எஞ்சியிருந்தவற்றில் கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக  இதற்கு முன்பு வரலாற்றில் காணப்படாத நகரமயமாக்கலின் ஒரு நிலையாக அந்த நகரம் இருந்தது தெரியவந்தது. சிந்துச் சமவெளியின் மொகஞ்சதாரோவை  சிறப்பாக பாதுகாக்கபட்ட சிதைவு என யுனேஸ்கோ பாராட்டுகிறது.

சமகால நகரங்களுக்கு அப்பால் இந்த நகரம் மிகவும் வியப்பான அம்சங்களுடன் கூடிய ஒரு சுகாதார கட்டமைப்பை ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம். மெசபடோமியா, எகிப்து நகரங்களில் கழிவு நீர் மற்றும் தனிநபர் கழிப்பறைகள் பணக்காரர்களின்  ஆடம்பரமாகக் காணப்பட்டன.  மொஹஞ்சதாரோவில் மறைக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் மூடப்பட்ட வடிகால்கள் எல்லா இடங்களிலும் இருந்தன.அகழாய்வு பணிகள் தொடங்கியது முதல், 700 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 கீழடியில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருக்கும் உறைகிணறுகள் மற்றும் இதர குடியிருப்பு கட்டுமானங்களும் இதர தொழிற்கூடங்களும் மொகஞ்சாதரோவில் அன்று கிடைத்தவைகளும் ஒரே மாதிரியானவை என்பது கூடுதலான தகவல். 

"12 மீட்டர் மற்றும் 7 மீட்டர் நீள அகலங்களைக் கொண்ட பொது உபயோகத்துக்கான பெரிய குளியல் மற்றும் தனிநபர் குளிப்பதற்கான அறையும் இருந்தன.  நம்ப முடியாத அளவுக்கு பல தனி வீடுகளில் கழிப்பறைகள் காணப்பட்டன. நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட அதிநவீன, சுகாதார கட்டமைப்பு மூலம் கழிவுகள் மறைவாக அகற்றப்பட்டன.இன்றைக்கு நாம் வாழ விரும்பும் ஒரு நகரத்தில் உள்ளது எல்லாவற்றையும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே அமைத்து வாழ்ந்துள்ளனர்” என்கிறார்  புரூக்ளின் பிராட் மய்யத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் இணைப் பேராசிரியர் உஸ்மா இசட் ரிஸ்வி. இவர்  வீடு மற்றும் கழிவுகளின் வீடு. (ஜிலீமீ ஙிஷீபீஹ், ணீஸீபீ tலீமீ ஞிஷீனீமீstவீநீணீtவீஷீஸீ ஷீயீ கீணீstமீ) என்ற தலைப்பில் மொஹஞ்சதாரோ குறித்த கட்டுரையை 2011ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

தவிர மொஹஞ்சதாரோவில் வசித்த குடிமக்கள் தங்களின் சுற்றுச்சூழலை அறிந்திருந்தனர். இந்த நகரம் சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் இருந்ததால், ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வடிகால் முறைகளை, வெள்ளத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தளங்களை திறமையாக உருவாக்கினர். கீழடியிலும் அகரத்திலும் வைகை ஆற்றில் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள சில கட்டுமானங்களை அமைத்திருந்தனர்.

மேலும் அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை விரிவாக்கம் பெறும் வகையிலான கடல்வழி கட்டமைப்பின் முக்கிய பங்கெடுப்பாளர்களாக திகழ்ந்தனர். பல நூற்றாண்டுகளாக அவர்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மட்பாண்டங்கள், நகைகள், சிலைகள் மற்றும் வேறு பொருட்களையும் தயாரித்தனர். அவை மெசபடோமியா, எகிப்து மற்றும் கிரேக்கம் வரை எல்லா இடங்களுக்கும் அனுப்பப்பட்டன

இன்று மொகஞ்சாதரோவிற்கு பாகிஸ்தானின் இதர பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள்  அரிதாகவே சுற்றிப்பாக்க வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அரிதாகவே வருகின்றனர்.

பழங்கால கட்டடம் போன்ற தெருக்கள் கிணறுகள் அதன் உயரமான சுவர்கள், மூடப்பட்ட வடிகாலையும் கொண்டிருந்தன.இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டவை 

மொஹஞ்சதாரோவாசிகள் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் வெளியேற்றல் கட்டமைப்புகளை அதி நவீன அம்சங்களை கொண்டதாக மட்டுமின்றி, அதில் திறன் பெற்ற கலைஞர்களாகவும் தொடக்க கால இதர நாகரீகங்களை சேர்ந்த குடிமக்களுக்கு மாறாக, அமைத்திருந்தனர். பல கருவிகளை கட்டுமானத்திற்கு உபயோகித்தனர் என்று தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“அனைத்து செங்கற்களும்  ஒரே வடிவத்தில் இல்லாவிட்டாலும் கூட 4;2;1 என்ற விகிதத்தில் இருந்தன” என்பது முக்கியமாகும். தங்கள் நகரம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வு இருந்திருக்கிறது.

 இந்த செங்கற்கள் சூரிய ஒளியில் காயவைத்தும் மற்றும் முடிவாக சூளை தீயில் வேக வைத்தும் உருவாக்கப்பட்டன.  குடியிருப்புகள் பொழுதுபோக்குத் தலங்கள் மற்றும் ஆடம்பரமான கட்டடங்கள் கட்டப்பட்டபோது, மொஹஞ்சதாரோ நகரம் தொழில்முறையிலான அமைப்பு ஆகும் - அங்கு உள்ள வீடுகள் மற்றும் இதர பகுதிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டாதாக இருந்தது. 

இதன் மூலம் அங்கு வழிபாட்டுக் கட்டடக்கலை (கோவில்கள், இதர பலிபீடங்கள் அங்கு அமைக்கப்படவில்லை காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதிக்கரை நாகரீக நகரங்களில் கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் தனித்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அடையாளமிடப்பட்டது. எடுத்துக்காட்டாக எகிப்து கோவில்கள், மாயா வழிபாட்டுத் தலங்கள், மொசபடோமிய கடவுளர்களின் பூஜைக்கான இடங்கள் போன்றவைகள் ஹரப்பாவிலும் மொகஞ்சாதரோவிலும் கிடைக்கவில்லை. கீழடியிலும் இன்றுவரை கிடைக்கவில்லை.

12 குறுகிய தெருக்கள் 90 டிகிரி கோணத்தில் சரியான திட்டமிடப்பட்ட அமைப்பில் பரந்து விரிந்திருந்தன. குளியல் அறைகள் உள்ளிட்ட, உள்ளூர் வீடுகளின் கதவு வழிகள், எந்த ஒரு வீடுகளிலும் அல்லது கட்டடங்களிலும் இன்றைக்கு காண்பதைப் போல அல்லாமல் நடைமுறைக்கேற்ற நிலைக்கதவுகளைக் கொண்டிருந்தன.

மொஹஞ்சதாரோ அருங்காட்சியகத்தில், காளை மற்றும் ஆடுகளின் அம்சத்தைக் கொண்ட  நூற்றுக்கணக்கான  முத்திரைகள்,  தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள், நகைகள், கருவிகள், பொம்மைகள் மற்றும் மட்பாண்ட துண்டுகள் இருந்தன -  நன்கு பாதுகாக்கப்பட்டன.

கலைப்பொருட்களுக்கு இடையே நகைகள் அணிந்த சிக்கலான சிகை அலங்காரம் கொண்ட இளம் பெண் சிற்பம் உள்ளது. கீழடியிலும் இதே போன்று ஒரு சிற்பம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

“உடல் அலங்காரம் மற்றும் உடல் பராமரிப்பு என்று வரும்போது “அங்கு வசித்த குடிமக்கள் தங்களைத் தாங்களே எப்படி கவனித்துக் கொண்டனர் என உள்ளார்ந்த விஷயங்களை இது அளிக்கிறது. வடிவவியல் மீதான புரிதல் அங்கே இருந்தது தெளிவாகிறது. அழகுபடுத்துதல் பற்றிய புரிதல் அங்கே இருந்தது என்பதும் தெளிவாகிறது” என்றார்.

எனினும், குடிமக்களின் வாழ்க்கை மற்றும் காலங்களைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு முக்கிய விவரம் தொடர்ந்து அறியப்படாமல் உள்ளது.

பண்டைய எழுத்துகள் பெரும்பாலும் நாகரீகங்களின் ரகசியங்களை சொல்லும் நிலையில்,  மொஹஞ்சதாரோ நிகழ்வில் அவ்வாறு சொல்லப்படவில்லை. சிந்து சமவெளி எழுத்துகள் என்று அறியப்படுவதை அதன் குடிமக்கள் உபயோகித்தனர். “இது படம் அடிப்படையிலான மொழியானதாக இருக்கிறது. இது 400க்கும் மேற்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது. இது இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை,”  மொகஞ்சதாரோவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னொரு தீர்க்கப்படாத புதிராகவே இருக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில்  தீவிர மழை வெள்ளப் பேரழிவுக்குப் பின்னர் இந்த நகரம்  பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற தொல்லியலாளர்கள் உண்மையில் அச்சப்படுவதை விடவும் குறைவாகவே இந்தப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மொகஞ்சதாரோ சேதம் அடைந்திருக்கிறது.

 இதற்கு காரணம் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த வடிநீர்க்கால்வாய்களின் எச்சங்கள் மூலம் வெள்ள நீர் விரைவாக அப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளது, அதாவது பாகிஸ்தானின் இன்றைய நாகரீக நகரங்கள் கூட கடுமையாக பாதிப்படைந்த போது மொகஞ்சதாரோ சேதமின்றி இருந்தது.  மொஹஞ்சதாரோ பண்டைய நாகரீகத்தின் ஒரு பொக்கிஷம். மதுரை - காராச்சி தொடர்பு என்பது சுதந்திரத்திற்கு முன்புவரையிலும் பெரும் உறவாக இருந்தது. 

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அதன் பிறகான பாகிஸ்தான் - இந்திய உறவு முரண்களுக்கு இடையே திராவிட நாகரீகம் திருவிழாவில் பிரிந்துபோன இரட்டை சகோதரிகளாக தவிக்கிறது.