செவ்வாய், 23 ஜூலை, 2019

வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர்களே!

மக்களவையில் திரிணமுல் காங். உறுப்பினர் பேச்சு


தமிழர் தலைவர் பாராட்டு கடிதத்தை கழக வெளியுறவு செயலாளர் நேரில் வழங்கினார்
புதுடில்லி, ஜூலை 19 மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேசியபோது வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர் களே என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்...


மேற்கு வங்கம் என்ற மாநிலப் பெயரை, வங்கா மாநிலம் என மாற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரசு உறுப்பினர் சுகேந்து சேகர் ரே அவர்கள்,  27.6.2019 அன்று  நாடாளுமன்ற மாநி லங்களவையில் பேசுகையில், வரலாற்று ரீதியாக வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் திராவிடர்களே; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து குடியேறி உள்ளார்கள். நாட்டின் தேசிய கீதத்திலும், ரவீந்திரநாத் தாகூர், திராவிட, உத்கல, வங்கா என்று எழுதி யுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் படித்ததும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ரே அவர் களுக்கு, வரலாற்றுச் செய்தியினை நினைவு கூர்ந்து மாநிலங்களவையில் பதிவு செய்ததைப் பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். வாழ்த்துக் கடிதம் 12.7.2019 அன்று, திரு.ரே அவர்களிடம் புதுடில்லியில் அவரது இல்லத்தில் நேரடியாகத் தரப்பட்டது. அத்துடன் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் என்ற ஆங்கில நூலும் தரப்பட்டது.

வாழ்த்துக் கடிதத்தையும் நூலையும் பெற்றுக் கொண்ட திரு. சுகேந்து சேகர் ரே அவர்கள் தனது நன்றியையும் மரியாதையையும் ஆசிரியர் அவர்களுக் குத் தெரிவிக்கச் சொன்னதுடன், சென் னைக்கு விரைவில் வருவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 19 .7 .19

வெள்ளி, 19 ஜூலை, 2019

திராவிடரும் - ஆரியரும் (2)

சென்றவாரத் தொடர்ச்சி

08.05.1948 -குடிஅரசிலிருந்து..

யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற் காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணி நேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசு களுக்கு அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத் துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.

சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடு கிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?


திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலி யார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப் பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத் திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.

இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர் களுக்காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந்திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத் திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண் டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட் டோம் என்று கூறிக் கொள்ள முடியும்? இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.

யார் கவலைப்பட்டார்கள்?


இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக்கொண்டதுண்டா? எத் தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன் மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ் திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர் களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத் தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப் பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால் தானே அவ்வளவும் செய்யப்பட்டது.

கீதையை எறிந்து கைகழுவி


திருக்குறளைக் கையிலெடு!


பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்பட வில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கபட வில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணாசிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உண ருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ண னையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?

ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று?


ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண் டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரை யாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி!                           தொடரும்..

 
- விடுதலை நாளேடு,19.7.19

வெள்ளி, 12 ஜூலை, 2019

திராவிடரும் - ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... -

திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகா ணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம். அதாவது ஆரியரல்லாத, தற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம். திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டு மென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோ, அல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள்; ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம், வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காக, என்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.

சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே


சூத்திரர் என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர். சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும், சாஸ்திரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள். இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர். கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப் படுத்தியிருக்கின்றனர். ஆகவே, இது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்ல, பார்ப்பனர் கற்பித்ததுதான்.

திராவிடர் என்பது கற்பனையல்ல


திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்டதல்ல. ஆரியர் என்ற பெயரும் அப்படித்தான்  என்று, மக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப, அமைந்திருந்த அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட னரோ, அன்று இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட பெயர்தான் திராவிடர், ஆரியர் எனப்படும் பெயர்கள், இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும், நீக்ரோக்கள் என்பதும். உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடுமுரடான மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்தனர். நல்ல குளிர்ப் பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர். அதற்கடுத்தாற்போல் சற்று குட்டை யாகவும் சப்பை மூக்குடனும் சீனா, ஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர். இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.

பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி


பிறப்பு வேறுபாடல்ல


ஆகவே, அன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார் களேயொழிய, ஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோ, மற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன், காதிலிருந்து வந்தவன், மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லை. இதை நான் பேர் ஊர் தெரியாத எவனோ, மாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாஸ்திரங்களைப் பார்த்தோ, வேதங்களைப் பார்த்தோ கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சி நிபுணர் களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டதும், அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட் டதும், உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகமாக இருந்து வருவதும், அசல் ஆரியப் பார்ப்பனர்களால் எழுதப்பட்டிருப்பதுமான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.

பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை


என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம் என்று யாராவது இன்று ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பாரானால், அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமா? எவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம். அவன் மைலாப் பூர் பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட் டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம். அதிலிருந்து பார்ப்பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான். அதுக்கேன் போப்போறீங்க. அவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும் என்றே கூறியிருப்பான். அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.

யார் என்ன கூறியிருந்தாலும் சரியே. நான் கேட்கிறேன், பண்டிதர்கள், பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.

இந்தியா, இந்து இன்று வந்த பெயர்கள்


இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல் வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக் கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின் படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திரா விடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும், சூத்திரர் என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இரா மாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட் களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.

யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்


நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட் சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள் கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங்களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.    - தொடரும்

-  தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு 12. 7 .19

செவ்வாய், 9 ஜூலை, 2019

உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

தி இந்து நாளிதழ் கட்டுரை ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . . .
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று  இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . .

இந்தியாவில் மட்டும்
16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
ஆரிய வருகையின் போது இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்...
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் பூர்வகுடியான  தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்.
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது  சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்.
.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள் .
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள். அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??
.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .
.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு,
மேலும்

இப்போது தான் நமக்கு புரிகிறது . . மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் என்று. . ...

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன
.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்
.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் தமிழர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும்
இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம் என்று.....

அவசியம் அதிகம் ஷேர் செய்யுங்கள்.
#Chinniah_Kasi

How genetics is settling the Aryan migration

https://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

சனி, 6 ஜூலை, 2019

திராவிடமா! தமிழா!

#மணியரசம்_டோஸ்_நெ_8

"தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டுவதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம்? என்ன வரலாற்று அறிவு?
திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் காட்டினார்கள்.
சங்க இலக்கியம்,  காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.
                                      - மணியரசன்

எந்த இலக்கியத்திலும் பயன்படுத்தப் படாத தங்களுக்கு தொடர்பே இல்லாத "திராவிடர்" என்றச் சொல்லை அக்காலத்தில் தமிழர்கள் எதற்காக இழிவாக கருதவேண்டும்? ஆக இழிவாகவோ,பெருமையாகவோ எப்படியிருந்தாலும் "திராவிடர்" என்றச் சொல்  தமிழர்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. பெரியாரால் திட்டமிட்டு திணிக்கப்பட்டதல்ல!
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அய்யா மணியரசன்.
ஆனால் "அக்காலத்தில்" என்று  சொல்பவர் எக்காலத்தில் என்று குறிப்பிட்டால்தானே யாரால்,எதற்காக, எப்போது "திராவிடர்" என்றச் சொல் எப்படி இழிவாக்கப்பட்டது என்பது தெரியும்?

பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழினத்திற்கு இன்று ஈராயிரமாண்டு சங்க இலக்கியம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது.
இருக்கின்ற தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்லது அவர்களது அடிவருடிகள். இதைப் பற்றிக் கொண்டுதான் தனது ஜாதிக்கும், தனது கடவுளுக்கும், தனது வழிபாட்டு முறைக்கும், தனது நெறிக்கும் சங்க இலக்கிய சான்று தேடுகிற பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம். வேறு வழியில்லை நமக்கு!

சங்க இலக்கியத்தில் திராவிடர் இல்லை என்பதற்கும் அதே இலக்கியத்தில் என் ஜாதி இருக்கிறது, என் கடவுள் இருக்கிறது என்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு? இரண்டுமே தற்கால தமிழர் நிலையை, தமிழர் அரசியலை, தமிழர் வாழ்வியலை பற்றி எந்தவிதக் கவலையுமற்ற பழம்பெருமை தற்புகழ்ச்சிதானே?

அதற்கு முன்பாக நமக்கிருந்த இலக்கியங்கள் எங்கே போயின?
இப்போதிருக்கும் இலக்கியங்கள் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிற்கு உள்ளானவைதானே?
திராவிடர் என்கிற உணர்ச்சியை கைவிட்டதால்தானே இந்த பண்பாட்டு படையெடுப்பு நிகழ்ந்தது!
திராவிடர் என்பது கிடக்கட்டும்.வரலாற்று வழிப்பட்ட தமிழர்,தமிழ்நாடு என்பதை தமிழ் இலக்கியங்களில்  பூதக் கண்ணாடி வைத்து தேடியல்லவா எடுக்க வேண்டும்?

தமக்கான அடையாளங்கள் தம்மிடத்தில் தொகுக்கப்பட்ட வரலாறாக இல்லாத நிலையில் நாடோடிக் கதைகளில், வாய்மொழிப் பாடல்களில், தலைமுறை கடந்து வழங்கப்படும் செவிவழிச் செய்திகளில் இருந்து வரலாற்றை தேடியெடுப்பது உலகெங்கும் உள்ள நடைமுறைதான்.இந்த மண்ணிற்குள் நுழைந்த பார்ப்பனர்கள் இங்கு ஏற்கனவே இருந்தவர்களை எவ்வாறு சூழ்ச்சியாக வென்றோம் என்பதை தமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல நாடோடிக் கதைகளாக தொகுத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் வேதங்கள், இராமாயணம், பாரதம், மற்ற புராணங்கள். இதை ஏற்றுக் கொண்டு வழிமொழிந்தவைதானே நமது இலக்கியங்கள்?

வடமொழி இலக்கியங்களில் சங்க இலக்கிய குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் இராமாயணச் செய்திகள் உள்ளன.பாரதம் பாடிய பெருந்தேவனார் இருக்கிறார்.அப்படியானால் எது முன்னது? எது பின்னது? என்ற கேள்விகளுக்கு ஊகமான காலக் கணக்குகளை வைத்து பதில் தேடவேண்டிய நிலையில்தானே நாம் இருக்கிறோம்?
சங்க இலக்கியத்திற்கு முன்பான நூல்கள் கிடைக்கவில்லை என்பதனால் அதுவே முடிந்த முடிவாகி விடுமா?

பார்ப்பன பண்பாட்டு தாக்குதலில் சிக்கி தாக்குண்ட நிலையில்தான் இப்போதிருக்கும் நம் இலக்கியங்கள் இருக்கின்றன. அதற்கு எதிரான குரல் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் மெலிதாக ஒலிக்கிறது. ஆனால் நாம் தீரத்துடன் எதிர்த்து நின்ற வரலாற்றை எதிரிகள்தான் வைத்திருக்கிறார்கள் திராவிடர் என்ற பெயரில்!
பார்ப்பனர்களுக்கு பணிந்து நின்று பாதம் தாங்கிகளாக இருந்த மன்னர்களின் வரலாறுதான்
நம்மிடத்தில் இருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து நின்று உயிர் விட்ட இராவணன்,இரணியன்,தாடகையை பற்றி அவர்கள்தானே தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

பார்ப்பனர்கள் தங்களை மொழியின் பெயரால் " சமஸ்கிருதர்" என்று அடையாளப்படுத்திக் கொண்டால் நாமும் தமிழர் என்று மொழியின் பெயரால் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கே தமிழர், தெலுங்கர், வங்காளி,மலையாளி,மராட்டியர்,
கன்னடர் என பல மொழி அடையாளம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் பிராமணர்கள் மட்டும் ஒற்றை அடையாளத்துடன் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் பிராமணர்கள், ஆந்திராவில் தெலுங்கு பிராமணர்கள், வங்காளத்தில் வங்காள பிராமணர்கள்,
கர்நாடகாவில் கன்னட பிராமணர்கள்.
இப்படி அந்தந்த மாநில மொழியை தங்கள் பிராமண பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
(தமிழ்பிராமணர் என்ற வரையறையை பல தமிழ் தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.)
             
அப்படியானால் பிராமணர் என்றச் சொல்லுக்கு எதிர்ச் சொல் என்ன? பிராமணர் அல்லாதார்  என்பதா? அல்லது சூத்திரர் என்பதா? அரக்கர் என்பதா?
வேதம் படிக்கிற உரிமை பெற்றவன், பிறரை வேதம் படிக்க கூடாது என்பதை சட்டமாகவே வைத்திருந்தவன் தன்னை "வேதியன்" என்று அழைத்துக் கொள்கிறான். அப்படியானால் வேதத்தை எதிர்த்தவனுக்கு, வேதம் படிக்க தடை செய்யப்பட்டவனுக்கு என்ன பெயர்? "வேதியன் அல்லாதவர்"
"அசுரர்" என்பதுதானா?

தொன்னூறு விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் திரளுக்கு பத்து விழுக்காடு கூட இல்லாத மக்களை குறிப்பிட்டு "அவர்கள் அல்லாதார்" என்று குறிப்பிடுவதா அடையாளம்? இந்தியா முழுவதும் எந்த மொழியிலும் அதற்கு எதிர்ச் சொல் இல்லையா?திராவிடர் என்றச் சொல்லை அதிதீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர், பிராமணர், வேதியர்,பூதேவர் என்றச் சொற்கள் குறித்து என்றைக்காவது ஆய்வு செய்ததுண்டா?

மற்ற மக்களெல்லாம் தங்கள் மொழியின் பெயரால்,ஜாதியின் பெயரால் அடையாளப்படுத்தப் படும்போது இந்தியா முழுவதும் பிரமாணர் அடையாளம் மட்டும் எப்படி செல்லுபடியாகிறது?
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிராமணர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை எப்படி கிடைக்கிறது?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்டபரம்பரை ஜாதிகளில் எவருக்காவது இந்தியா முழுவதும் சத்ரியருக்கு உண்டான ஒரே மாதிரியான மரியாதை நடைமுறையில் கிடைக்குமா? இதுவரை கிடைத்திருக்கிறதா?

தமிழ்தேசியம் பேசுவோரில் சிலர் இதுவெல்லாம் வடநாட்டில் நிகழ்ந்தவை.
தமிழர்கள்  பிராமணத் தலைமையை ஏற்கவில்லை.எனவே எங்களுக்கு இது பொருந்தாது, திராவிடர் என்பது தேவையில்லை என்று தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்ளலாம்! ஆனால் உலகம் இருண்டு விடாதே?

பிராமணத் தலைமையை ஏற்றுக் கொண்டதால்தான் ஆண்ட மன்னர்கள் அனைவரும் மனுதர்மத்தின் படி ஆண்டார்கள். தங்களை திருமாலின் வம்சமாகவும், தங்கள் ராணிகளை மகாலட்சுமி அம்சமாகவும் கல்வெட்டு அடித்து பெருமைப் பட்டார்கள்.
தங்களை சத்திரிய வம்சம் என்றும், வைசிய குலம் என்றும் நிறுவிக்கொள்வதில் அரசாட்சி காலத்திலிருந்து இன்றுவரை நம்மவர்கள் பெருமிதத்துடன் போட்டி போடுகின்றனர்.
பிராமணர்கள், சத்ரியர்கள்,வைசியர்கள் என்ற மூன்று வர்ணமும் பல நூறு ஆண்டுகளாக இந்த தமிழ் மண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் "சூத்திரர்" என்பதை மட்டும் ஈ.வெ.ரா தமிழர்கள் மேல் திணித்துவிட்டார் என்பது திடீர் தமிழ்தேசியர்களின்ஆகச் சிறந்த  நகைச்சுவை கண்டுபிடிப்பாகும்.

1871 வரை சென்னை மாகான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிராமணர், சத்ரியர்,வைசியர்,சூத்திரர் என்று வருணப் பாகுபாடு செய்யப்பட்டதையும்,
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வரை அரசு ஆவணங்களில் "சூத்திரர் "  "சற்சூத்திரர்" என்று குறிப்பிடப்பட்டதையும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டவர்கள் நாம். எவராவது மறுத்தார்களா?
இதை மாற்றியது திராவிடர் இயக்கத்தின் அளப்பரிய பணியல்லவா?

1901ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் வேளாளர்களை "சற்சூத்திரர்" வருண பட்டியலில் அரசு சேர்த்ததை கண்டித்து கிளர்ச்சி நடந்தது.
வேளாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? சூத்திரர் என்ற இழிவை நீக்கிடுக என்பதல்ல,வேளாளரை வைசிய வருணத்தில் சேர்த்திடுக என்பதுதான்! இந்த போராட்டத்திற்கு அன்றைக்கிருந்த தமிழறிஞர்கள் பலர் தலைமையேற்றனர்.
வேளாளர்கள் வைசியரே என்று மெய்ப்பிக்க தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்த தம் புலமையைக் கொண்டு பல கண்டன நூல்களையும் அந்த அறிஞர் பெருமக்கள் எழுதிக்குவித்தனர். அப்படி வெளிவந்த "வருண சிந்தாமணி" என்ற நூலுக்கு பாயிரம் பாடியவர் தேசியக்கவி சுப்ரமண்யபாரதி!

தமிழர் என்று சொல்லும்போது
இந்த நிலையில்தான் நால் வருணத்தை ஏற்றுக் கொண்டு இருந்தோம்.
இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நிமிர்ந்து நிற்கிறோம் திராவிடராக!

வில்லியம் ஜோன்ஸ் ஆரியக் கலாச்சாரமே உயர்ந்தது என்று வேதங்களை உயர்த்திபிடித்தபோது
கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதை ஓங்கி ஒலித்தார்!
ஆரியர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் குரல் ஒலித்த அதே காலகட்டத்தில் "நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருக்கும் திராவிடன்" என்று முழங்கினார் பாதிரியார் ஈராஸ்!

ஆரியர்க்கு எதிரான கலகக் குரலாக வரலாறு நெடுக "திராவிடர்"என்பது ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது!
இந்தச் சொல் உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம்.
நீங்கள் வசைமாரி பொழியலாம், அல்லது கண்டும் காணாமல் கடந்து போகலாம்.
திராவிடர் என்பது குறித்து வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதிக் குவிக்கலாம். ஆனால் திராவிடர் என்ற குரலை எவராலும் அடக்கவோ-தடுக்கவோ முடியாது!
                                          #தொடரும்...
   பதிவு     Viduthalaiarasu Viduthalaiarasu