சிந்து _ மெகார்கர் நாகரிக மக்கள் மொழி _ பிராகூயி.
இது பாகிஸ்தான் பலுசிஸ்தானில் வழங்கிய _ வழங்கிவரும் முந்து தமிழின் வடக்குக் கிளைமொழி.
சில நாள்களுக்கு முன்பு என்னுடைய கல்லூரிக் காலத்தில் (1968 _ 71) நான் படித்து எழுதி வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகளின் கோப்பு ஒன்றை வீட்டுப் பரணிலிருந்த பெட்டியிலிருந்து கண்டெடுக்க நேர்ந்தது. அத்தொகுப்பில் பல்வேறு அரிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கண்டு எனக்கே மலைப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், அதனை ஒட்டியும் நம் அறிஞர்கள் எத்தனை உயர்வான, நுணுக்கமான செய்திகளை எடுத்து எழுதி இருக்கிறார்கள்!
அதில் ஒன்றுதான் சர் டெனிஸ் பிரே (Sir Denys Bray) எழுதிய The Brahui Language என்ற பிராகூயி மொழியை அறிமுகம் செய்யும் நூல். உங்களுக்குப் பயன்படும், தேடுவதற்கு வசதியாயிருக்கும் என்பதால் நூல் விவரம் கூறுகிறேன்.
The Brahui Language
Part II The Bragui problem
Part III Etymological Vocabulary
by
Sir Denys Bray
Delhi. Manager of Publications,
1934, Price Rs. 7.14.
இங்கு அவர் காட்டியுள்ள பிராகூயி மொழிச் சொற்களை மட்டும் பதிவிடுகிறேன். பொதுவாக அம்மொழியை மொழியியலார் வடதிராவிடக் கிளை மொழியென வகைப்-படுத்தியுள்ளனர்.
ஆனால், உண்மையில் மலையாளம், கன்னடம் போன்ற தமிழ் வழங்கும் பகுதியிலுள்ள மொழிகளைவிட இந்த வடதிராவிடக் கிளைமொழி எனப்படும் பிராகூயி தமிழுடன் மிக நெருக்கமான மொழிப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இதற்குக் காரணம் அப்பகுதிக்கு ஆரியர் வந்தாலும் _ பிராகூயி மொழியில் அவர்தம் மொழியின் தாக்கம் குறைவு. சிந்து வெளிக்கு வந்த ஆரியர் பலுசிஸ்தான் போன்ற மலைப்பகுதிகளில் அதிக கவனம் கொள்ள-வில்லை. அத்துடன் இந்த பிராகூயி மக்களின் முன்னோர் சிந்துவெளிக்கு ஆரியர் வந்ததும், தாங்கள் வாழ்ந்த அரப்பா மொகஞ்சதாரோ, குஜராத்து முதலிய சிந்து நாகரிகப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கே மலைப் பகுதிகளை நோக்கியும் சென்று-விட்டனர். பிறகும் அவர்கள், துவாரகை போன்ற இடங்கள் அழிவுற்றபோது அவர்கள் தமிழகம் வந்தது போல, அங்கிருந்து பாதுகாப்பான மலைப் பகுதியான பலுசிஸ்தானை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அதே நிலைதான் ஆரியர் கங்கைச் சமவெளிக்கு வந்ததும் மக்கள் விந்திய மலைப் பகுதிகளை நோக்கித் திரண்ட போதும். இன்றைய கோண்டுகளும், கூயி மக்களும் நாகரிக மக்களாக இருந்து மலை மக்கள் ஆனது இவ்வாறுதான்.
பிராகூயி மக்கள் இன்னும் மரபு முறையாகவும், வாய்மொழி மரபிலும் இப்புலப்பெயர்ச்சிக்கான சான்றுகளைக் கொண்டுள்ளனர். ஆயினும், இவர்களே கி.மு.3500 _ கி.மு.3300 அளவில் பலுசிஸ்தானின் போலன் கணவாய்ப் பகுதி போலன் ஆற்றின் கச்சி சமவெளியிலுள்ள மெகார்கர் பகுதியில் இருந்து அண்மையில் 250 கி.மீ. தொலைவில் இருந்த சிந்து நதியின் சமவெளியை நோக்கிப் பெயர்ந்து சென்று அங்கு கி.மு.2800 அளவுக்குப் பிறகு முதிர் சிந்து நாகரிகத்தினை அப்பகுதியில் வளர்த்தெடுத்தனர். இன்றைய சிந்து வெளிப்பகுதியில் தமிழின மொழிகள் எவையும் வழங்கவில்லை என்றாலும் ஆரிய இடையூறு இல்லாத இடமான பலுசிஸ்தானில் இன்றளவும் தமிழின மொழியான பிராகூயி மொழி வழங்கி வருகிறது. ஆனால், பிராகூயி மக்கள் உருது _ பலுச்சி மொழியால் தாக்குண்டு இருக்கிறார்கள். ஆயினும், தங்கள் தமிழின மொழி இயல்பைக் காத்துக் கொண்டே வருகிறார்கள்.
இதற்குமேல், இதனை இங்கு விளக்கப் போவதில்லை. காரணம் நமது நோக்கம் அவர்களது வரலாற்றை ஆராய்வது அல்ல. மாறாக, பிராகூயி மொழியின் அடிப்படைச் சொற்களை சர்.பிரே அவர்களது வழியில் எடுத்துக்காட்டித் தமிழ்ச் சொற்களோடு ஒப்பிடுவதே. இனி, உங்கள் ஆய்வுக்கு இதனை விடுகிறேன்.
ஆங்கிலம் - தமிழ் - பொருள்
1. abba = papa, etc மீtநீ அப்பா
2. ada = address to a man அடா
3. a:y. = mother, sister ஆயி
4. alava = certainly not அல்லவே
5. amba:r = Granary அம்பாரம்
6. amma = Mother அம்மா
7. anda = This same அந்த
8. anna = still இன்னும்
9. anno = today அன்று
10. ari. = mad, Rabit அறி / அரி
11. ba = mouth வா / வாய்
12. badali = substitute பதிலி
13. bil = bow வில்
14. dir = water நீர்
15. ira. = two இரு
16. irat = tow / double இரட்டுதல்
17. iratti = tow together இரட்டித்த
18. kal = water hold கலிங்க
19. kallar = saline soil களர்
20. katta:r = knife கட்டாரி
21. kot = fort கோட்டை
22. ku:cha = plain , low land கச்சா
23. kudi = hut, small house குடிசை
24. ku:k = cry, shout கூக்குரல்
25. kuda:m = nest கூடு, குடம்பை
26. kha:kho = crow காக்கை
27. khal = stone கல்
28. kha:li = empty காலி
29. khan = eye கண்
30. khe:l = tribe, family கேள்
31. malh = son மகன்
32. ma:m:a = maternal uncle மாமா
33. mana = sense, மனம்
34. mar = the tree மரம்
35. ma:r = son, lad மாறன்
36. mu:si = three மூன்று
37. musko = ancestor முன்னோர்
38. mutkun = old முதுவன்
39. mut = fist முட்டி
40. nang = wife நங்கை
41. ni = thou நீ
42. ni:l = blue நீலம்
43. num = you நும்
44. pa:l = omen பால்வரை
45. palh = milk பால்
46. pa:tti = woman head band பட்டி
47. patti = female பட்டி, பெண்
48. pattu = coarse woollen cloth பட்டு
49. pillota = poor small child பிள்ளை
50. potau = bald plain பொட்டல்
51. pu. = worm புழு
52. pula:v = meat with rice புலவுணா
53. pu:ll = flower பூவு
54. pulli = nose ornament புள்ளி
55. sum = arrow அம்பு
56. su:ti = usurer சூதன்
57. sha:li = unhusked rice சாலி நெல்
58. tania = alone தனியே
59. telh = scorpion தேள்
60. ten = self, myself தன்
61. tugh = sleep தூக்கம்
62. tughi = sleepy தூங்கி
63. tunga:n = sound asleep தூங்கான் (தூங்ஙான் = மலையாளம்)
64. um = also ஆம்
65. ura = house உறை, உறையுள்
66. va:ta:n = prosperous வாடாதவன்
67. vad = cut வெட்டு
68. alata alla = certainly not இல்லடா இல்லை
69. bei = grazing மேய்
70. alli = needle work அல்லு
71. a:shiki = love ஆசை.
72. muru = hares முயல்
பிராகூயி சொற்கள் அனைத்துமே முழுமையாகத் தமிழுடன் இணைத்து பொருள் காணத் தக்கனவாகவே உள்ளன எனலாம். இம்மொழியே தொல்பழங்காலத்தில் வழங்கி, பலுசிஸ்தானில் போலன் ஆற்றங்கரையில் உருவான மெகார்கர் நாகரிக மொழியாகவும், பின்னர் சிந்து ஆற்றங்கரையில் சிந்துவெளி நாகரிக மக்களின் மொழியாகவும் இந்த பிராகூயி மொழியே இருந்தது என்று கருத வேண்டியுள்ளது. ஆனால், அம்மொழியைக் குறித்த சில ஆய்வாளர்களின் தவறான கருத்துகளை முறியடித்து இன்று அதனை அறிஞர்கள் வடதிராவிட மொழியென நிறுவியுள்ளனர்.
இம்மொழி பேசிய வேடர்களே கி.மு.10,000 அளவில் தோன்றிய ஹாலோசின் இதவெப்ப காலத்தில் ஆற்றுச் சமவெளிகளுக்கு வந்து ஒரே இடத்தில் நிலைத்த வாழ்வைத் தொடங்கி புதிய கற்காலத்தில் சிறந்த வேளாண் நாகரிகம் பெற்று உயர்ந்து நின்றனர். இவர்களே, இந்தியத் துணைக் கண்ட முதல் உழவர்கள். இவர்களே பின்பு கி.மு.5000 அளவில் பலுசிஸ்தானில் செம்பு உலோகம் கண்டுபிடித்து செம்புக்கற் கால chalcolithic நாகரிகர்களாக மாறி வளர்ச்சியுற்று சிந்துவெளி நாகரிகத்தினையும் தோற்றுவித்தனர்.
இக்கால நிலைகளை ஒப்பிட்டால் தமிழ்மொழி பேசிய பிராகூயி மக்கள் ஏறத்தாழ 10,000 ஆண்டுகள் ஒரே பகுதியில் வாழ்ந்து நனி நாகரிகர்களாக விளங்கினர். அப்பகுதிக்கு வந்த எத்தனையோ மொழிகள், இனங்களின் தாக்குதல்களை எதிர் கொண்டும் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் காத்து வாழ்ந்து வருகின்றனர். தென்னிந்தியத் தமிழ் மக்கள் அதிகமான அந்நிய மொழித் தாக்குதல்கள் இருப்பினும் தாக்குப் பிடித்துத் தங்கள் மொழித் தூய்மையைக் காத்துக் கொண்டனர். ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தின் நுழை வாயிலான போலன் கணவாய் அருகில் வாழ்ந்தும் பிராகூயி மக்கள் தங்களது மொழியைக் காத்து வாழ்வது வியப்புக்கு உரியதாகும்.
தங்கள் மொழியை இவ்வாறு உயிர்ப்புடன் பேணி வருவதனால்தான் பிராகூயி மொழி தனது தமிழ் இயல்பை முற்றும் தற்காத்து தகைசான்று வாழ்வதைக் காண முடிகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் உயர் நாகரிகங்களான மெகார்கர், சிந்து நாகரிகங்களை உருவாக்கிய இத்தமிழ் பேசிய மக்கள் இந்திய நாகரிகத்தின் அடிப்படையை உருவாக்கியவர்-களாவர்.
* * *
ஆங்கில எழுத்துகளில் குறில் நெடில் இன்மையால், நெடிலைக் குறிக்க முன்னர் தமிழ் மொழியியல் நூல்களில் குறியிடுவது : போல. என்ற அடையாளமிட்டுள்னேன். சர். பிரே தன்னூலில் உரிய ஒலிக்குறியீடுகள் இட்டுள்ளார். அவர் 1934இல் எழுதிய நூலின் சில குறிப்புகள் மட்டுமே என்னிடமுள்ளது. தென்னிந்திய, மத்திய இந்திய திராவிட மொழிகள் மட்டுமே தமிழ் கற்றோரிடம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பிராகூயி மொழியை நன்கு அறிமுகம் செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.
- உண்மை இதழ், 16-30 நவம்பர் 2021