திங்கள், 17 மார்ச், 2025

கேரளத்தில் ஒலித்த திராவிட குரல்

 

விடுதலை நாளேடு
இந்தியா

கொச்சி, மார்ச் 10- கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆழுவாவில் 19.2.2025 அன்று திராவிட மக்கள் சங்கம் – Dravidan People Federation ( DPF) அமைப்பின் சார்பில் ‘திராவிடம் பேசுவோம்’ என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
திராவிட மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர், வயநாடு நவுஷாத் தலைமை ஏற்றார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ‘திராவிட தத்துவம்’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஊடவியலாளர் இந்திரகுமார் தேரடி திராவிட இயக்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகநீதி
திராவிடம் என்பது மொழி வழி குடும்பமாக கால்டுவெல் எவ்வாறு வகைப்படுத்தினார்? ஆரிய பார்ப்பனியம் திராவிடம் என்பதை நில அடிப்படையில் எந்த எந்த புராணங்களில் குறித்துள்ளது என்பதையும், இன ரீதியாக மேல் நாட்டு அறிஞர்கள் திராவிட இன மக்கள் என்பதை எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்பதையும் ஆதரபூர்வமாக விளக்கினார். மேலும் திராவிடம் என்கிற வரையறை ஏன் தற்போது வரை தேவைப்படுகிறது. எதனால் திராவிட வரையறைக்குள் நின்று பெரியாரும் அண்ணாவும் சமூக அரசியல் தளங்களில் வேலை செய்தார்கள்.
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் தொடக்கம் நீதிக்கட்சிதான். நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கான அடித்தளம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடர்ந்து சமூக நீதி தளத்தில் இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மனுதர்மம் கீழ்நிலை மக்களை படிக்கக் கூடாது என்றதும், பெண்களை ஒதுக்கி வைத்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படாத மக்களின் உரிமையை திராவிடர் இயக்கம் எவ்வாறு போராடி பெற்றுத்தந்தது.

கலைஞர் அரசின் மக்கள் நல திட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பட்டியலிட்டு இன்றைய திராவிட மாடல் அரசின் காலை உணவு திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், சமூகநீதி கண்கணிப்பு குழு, பெண் ஒதுவார் நியமனம், மகளிர் மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமத்துவ சமூக நீதிக்கான திட்டங்கள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. மேலும் இந்தியாவில் இல்லாத அளவுக்கு கல்வி, உயர்கல்வி, விளையாட்டு துறை, மருத்துவ துறை, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டங்கள், சிறும்பான்மையினர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவற்றை அடங்கிய சமத்துவ ஆட்சியை கொடுக்க முடிகிறதென்றால் அதற்கு நிலையான தத்துவம் திராவிடம் தான். திராவிடம் என்பது தற்போது அரசியல் காப்பு ஆயுதமாக பயன்பட்டு வருகிறது என்றும், ஹிந்தி சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி கோருதல், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, ஆரிய பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு, கூட்டாச்சி தத்துவம் காக்க, இன்று அரணாக இருப்பது திராவிட தத்துவம் என்பதை மறுக்க முடியாது.

திராவிட இன மக்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு அதிகம் என்றும், ஆரிய ஆதிக்கத்தை விரட்டிட திராவிட மக்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது காலத்தின் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மக்கள் சங்கத்தின் கொடி கருப்பு ஒரு பகுதியும், சிகப்பு ஒரு பகுதியும் சிகப்பில் நீதிக் கட்சியின் தராசு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆசிப், வழக்குரைஞர் நீனா ஜோஸ், தோழர்கள் ஆத்தூர் சதீஷ், அரக்கல் அமீர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

திங்கள், 3 மார்ச், 2025

‘திராவிடர்’ – வார்த்தை விளக்கம்


விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டி யிருக்கிறது.

உணர்ச்சி தோன்ற வேண்டும்
ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது.

படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர்களா கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவை களில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர் களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக் கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதி களுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கரவர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.

இருக்க வேண்டியது இல்லை
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள் உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதி னாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங் களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படி யாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல் லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண் பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய் யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் என்ற பெயர் ஏன்?
திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதா யிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக் குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென் றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் – திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர் களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திரா விடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் அரிச்சுவடி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத் தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு – பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத் தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசி யல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகி யவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என் பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

இழிநிலை
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் – திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாத தினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்க வில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

அறியாமையில் சிக்குண்டு
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில் லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானா லும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் – ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது… ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

ஆரிய – திராவிட கலப்பினம்
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறைய னாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரிய ருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.

மாறுதல் வேண்டும்
இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய் விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் – பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக் காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்ட வைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945


செவ்வாய், 31 டிசம்பர், 2024

திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

 


 திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

2024 நவம்பர் 1-15 முகப்பு கட்டுரை

திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்று மோசடிப் பிரச்சாரம் செய்யும் போக்கு ம.பொ.சி. காலத்திலேயே தொடங்கிவிட்டது. திராவிடத்தை எதிர்ப்பவர் இருவகை. ஒன்று, ஆரியத்திற்கு சேவகம் செய்யும் தமிழர்கள். அவர்கள் உண்மை நன்கு தெரிந்தும் ஆரியத்தை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் விசுவாசியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றவர்கள். இரண்டு, திராவிடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்று அறியாது, ஆரிய அடிவருடிகள் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிச் செயல்படுகிறவர்கள்.

முதலில் தமிழர், திராவிடர் என்ற இரண்டின் வரலாற்று உண்மையை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிழைப்பிற்காக நுழைந்து பரவி வாழத் தலைப்படுவதற்கு முன்னமேயே, கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தமிழர்கள். உலகில் மற்ற மக்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்பே நகர நாகரிக வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
ஆரியர்கள் வருவதற்குமுன் இம்மண்ணில் முழுக்க முழுக்க தமிழர்களே வாழ்ந்தனர். ஆரியர்கள் இம்மண்ணில் நுழைந்தபோது அவர்களுக்கென்று எழுத்து வடிவிலான மொழி இல்லை.

எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞரும், ‘ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்து முறை இருந்ததில்லை’ என்று ‘A Short history of the World’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கி.மு.முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டு களிலும் நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாமலிருந்த சமற்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத எழுத்துகளால் எழுதப்பட்டும், கி.பி. 350க்குப் பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்தும் வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான் இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3 பாரதீய வித்யாபவன் வெளியீடு _ சார்ஜ் எல்.ஆர்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழி மரபுகளின் ஒப்பாய்வு நூல்.)

சமற்கிருத மொழியின் தோற்றம், அமைப்புப் பற்றி ஆராய்ந்த கால்வின் கெபார்ட் (Calvin Kephart) ‘‘இந்தியாவின் பழைய மொழி எதற்கும் சமஸ்கிருதம் தாய் அல்லவென்றும், அது பழைய இந்திய மொழிக் கூறுகளின் கலப்பால் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த மொழி என்றும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.

மத்திய தேசத்தினர் பேசி வந்த மொழி சூரசேனி. இச்சூரசேனியே பின்னர் மத்திய தேசத் திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமற்கிருதம் என்று பெயர் பெற்றது.
இந்திரமால் பகவான்ஜி என்னும் சமண அறிஞர் பழைய பிராகிருத மொழிகள் பழங்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் அவற்றின் போலி உருவங்களே சமற்கிருத மொழி என்றும் கூறுகிறார்.

ஆதலின், பிராகிருத மொழியிலிருந்துதான் சமற்கிருதம் தோன்றியது. சமற்கிருதத் திலிருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை.

பிராகிருதம், பாலிமொழி என்பவை தொன்மைத் தமிழே !

கி.பி.10இலிருந்து கி.பி.15க்குள் வழங்கிய பேச்சு மொழிகளாயிருந்த சில பிராகிருத மொழிகளிலிருந்து அபப்பிராம்ச மொழிகள் தோன்றின. சூரசேனியிலிருந்து மேற்கு இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தியும்; மகாராட்டிரி யிலிருந்து மராத்தியும்; மாகத்தியிலிருந்து வங்காளி, பீகாரி, அசாமி, ஒரியாவும்; அர்த்தமாகதியிலிருந்து கிழக்கு இந்தியும்; பைசாசியிலிருந்து இந்தியும் தோன்றின.

ஆனால், கி.மு. பத்தாவது நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் எழுத்தும், நெடுங்கணக்கும் பெற்றிருந்ததாக எஸ்.கே.சாட்டர்சி போன்ற அறிஞர்கள் கூறுவர்.
பிராகிருதியில் தமிழ் போல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ உயிரெழுத்துகள் உள்ளன.
தமிழ் எ, ஒ போன்ற குறில்கள் பிராகிருதியில் உண்டு. சொல் உச்சரிப்பு முறையில் பிராகிருதம் முழுவதும் தமிழோடு ஒத்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்:

தமிழ் பிராகிருதம்
அச்சன் அஜ்ஜ
அத்தன் அத்த
அத்தை அத்தா
அப்பன் அப்ப
இதோ இதோ
செட்டி சேட்டி

எனவே, இவை இரண்டு மொழிகளும் தொன்மைத் தமிழே.

பாவாணர், வடமொழி அய்ந்து நிலைகளில் உருவானது என்கிறார். அதன் முதன்நிலை தெலுங்கு அல்லது தென் திராவிடம். இரண்டாம் நிலை பிராகிருதம் அல்லது வட திராவிடம். மூன்றாம் நிலை கீழையாரியம். வேத ஆரியரின் முன்னோர் வடகோகித்தானத் திலிருந்த போது (தற்கால ஈரான்) பேசிய மொழியே கீழையாரியம். இம்மொழி கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. நான்காம் நிலை வேதமொழி. வேத ஆரியர் வடநாட்டில் சிறுபான்மையினராய் இருந்ததால் வடநாட்டுத் திராவிடருடன் கலந்து தங்கள் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். வேதங்கள் ஆரியர் இந்தியாவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே இயற்றப்பட்டதால் வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிராவிடச் சொற்கள் கலந்தது. வேதமொழியின் சொற்றொடரமைப்பு தமிழ் முறையைத் தழுவியது.

தேவ நேயப் பாவாணர்

தமிழின் தொன்மை வடிவமான சூரசேனி என்னும் பிராகிருத மொழி, கலப்பு குறைந்து காணப்பட்டதால் ஆரியர் அதைச் செம்மைப்படுத்திச் சமற்கிருதம் (செம்மை செய்யப்பட்டது) என்கிற பெயரைக் கொடுத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துகளை எல்லாம் நூல்கள் வடிவில் அம்மொழியில் எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும், அம்மொழியிலேயே எழுத ஆரம்பித்ததால் சமற்கிருத நூல்கள் நாளடைவில் பெருகி அவற்றிற்குச் சிறப்புகள் பல உண்டாயின.

அய்ந்தாம் நிலை சமற்கிருதம். வேதமொழியும் ஆயிரக்கணக்கான தென்சொற்களும் கலந்ததே சமற்கிருதம்.

ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப்பின்பற்றிக் கிரந்த எழுத்தையும், தேவநாகரி
யையும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அமைத்துக் கொண்டனர்.

வரலாற்று ஆசிரியர்களான எச்.வி. சீனிவாசமூர்த்தி, ஆர்.இராமகிருஷ்ணன் போன்றோர் சாதவாகனருடைய கல்வெட்டுகள் பிராகிருதியிலும், பிராமி எழுத்துகளிலும் இருந்தனவென்றும், சமற்கிருத மொழி கல்வெட்டுகளில் புகுந்தது கி.பி.நான்காவது அல்லது அய்ந்தாவது நூற்றாண்டுகளில்தான் என்றும் கூறுவர்.

டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார். (Dravidian India – Prof. Sesha Aiyangar).

ஸ்டென்கொனோவ், பர்ரோ போன்றவர்களும் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுவர்.

எமினோ, சட்டர்ஜி, முயல் ப்லோக் போன்றவர்கள் சமற்கிருதம் திராவிட முறையைத் தழுவி வினையெச்சங்கள், வினையாலணையும் பெயர்களைப் பயன்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் வார்த்தைகளை சமஸ்கிருத வார்த்தைகளாக்கல்

ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்துகளை மாற்றிப்போட்டு சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்கினர்.

சுரம் என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ஜுரமாக்கினர்.

சுரம் என்பது ‘சுர்’ என்ற தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. சுர் என்றால் சுடுதல்.

சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.

‘சலம்’ என்பது நீர் சலசல வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர்.

சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருத மயமாக்கினர்.

பன்கயம் என்ற தூய தமிழ்ச் சொல்லை பங்கஜம் ஆக்கினர்.

பன்கயம் என்பது பல இதழ்களை உடையது என்பது பொருள். தாமரை பல இதழ்களை உடையதால் அது பன்கயம் எனப்பட்டது. அதில் எழுதுவதை மாற்றி பங்கஜம் என்ற சமஸ்கிருத சொல்லாக்கினர்.

குருதி ஆயம் என்ற தமிழ் வார்த்தையை ஹிருதயம் என்று சமஸ்கிருதமாக்கினர். குருதி ஆயம் என்றால் குருதி சேரும் இடம். இதயத்தில் குருதி சேர்வதால் அதற்கு குருதி ஆயம் என்று தமிழில் அழைக்கப்பட்டது. அதை ஹிருதயம் என்று மாற்றி சமஸ்கிருதம் ஆக்கினர்.

இப்படி தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் இவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது என்பதை ஆய்வில் கொள்ள வேண்டும்.

இடவல மாற்றம் (Mirror Method)

கண்ணாடியில் இடதுவலமாகத் தெரியும். அதேபோல் தமிழ் எழுத்துகளை இடவலமாகத திருப்பிப் போட்டு சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்று தூய தமிழ் சொல்லை இடவலமாற்ற முறையில் ராஜ் என்று சமஸ்கிருதமாக்கினர்.

அரசு என்பதில் முதல் இரு எழுத்துகளை இடவலமாக மாற்றினால் ரஅசு என்று ஆகும். முதல் எழுத்தை நெடில் ஆக்கி ராசு என்று ஆக்கி பின் சு _ ஜீ என்று மாற்றி ராஜீ _ ராஜ் என்று ஆக்கினர்.

அரசன் என்ற தூய தமிழ்ச் சொல்லை இதே முறையில் ராஜன் என்று ஆக்கினர்.
அரசன் _ என்பதை இடவலமாக மாற்றி ராஅசன் என்றாக்கி ‘ச’ எழுதுவதை ஜ வாக்கி ராஜன் என்றாக்கினர். இவ்வாறே அறமன் என்பதை ராமன் என்றும் அறவாணன் என்பதை ராவணன் என்றும் ஆக்கினர்.

சிலர், வேதங்கள் 2500 ஆண்டு பழமையானவை. அவை சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதம் 2500 ஆண்டுகள் பழைய மொழி என்கின்றனர். ஆனால் இது அறியாமை.

வேதமொழி சமஸ்கிருதம் அல்ல!

ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் எழுத்தும் இல்லை; எழுத்து வடிவான இலக்கியமும் இல்லை.

தமிழே வேத மொழிக்கு முந்தையது என்பதை மலையாளத்தில் சட்டம்பி அடிகள் 1901ஆம் ஆண்டில் ‘ஆதிபால’ என்னும் நூலில் நிலைநிறுத்தி இருக்கிறார். பாணினி நூற்பாக்களைத் தொல்காப்பிய நூற்பாக்களோடு மேற்கோள்காட்டி தமிழே முந்தையது என்றார்.

ஈரானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து 20 சதவிகித சொற்களும், தமிழில் இருந்து 60 சதவிகித சொற்களும் வேத மொழியில் கலந்தன. எனவே, வேதமொழி சமஸ்கிருதம் அல்ல.

வேத மொழி சந்தஸ் என்கிறார் சங்கராச்சாரி. சந்தம் என்பதன் திரிபே சந்தஸ். ஆக, அதுவும் தமிழிலிருந்து வந்ததே!

உலக மொழிகளிலேயே 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துச் சான்றுடைய மொழி தமிழ் என நிறுவப்பட்டுள்ளது.

ஆரியர்கள் சமஸ்கிருதத்தை உருவாக்கிய பின், தமிழோடு சமஸ்கிருதம் பெருமளவில் கலந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயிற்று.

அதன்பின் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வந்தபின் உருதுமொழி, தமிழ், சமஸ்கிருதம் மூன்றும் கலந்து ஹிந்தி, குஜராத்தி, பீகாரி போன்ற மொழிகள் உருவாயின.

திராவிடம் என்ற சொல்
எப்படி வந்தது?

திராவிடம் என்பது ஒரு நாளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சொல் அல்ல. அது எப்படி உருவானது என்பதை கீழே படித்தறியுங்கள்.

1. மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.

2. ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.
தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி. இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமற்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சமற்கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

3. த்ரமிள என்ற சொல் வட இந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி. 597-608இல் செதுக்கப்பட்டவை. இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.

4. த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.

5. த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய்
மொழியின் சமற்கிருத மொழிபெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும் போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

திராவிட என்ற சொல் தமிழை மட்டும் குறிப்பதற்கான சான்றுகளாவன :

கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்த மகாயான நூலாகிய லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற பல மொழிகளில் அய்ந்தாவதாகத் த்ராவிடி என்று தமிழ் குறிக்கப்பட்டுள்ளது.

கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிகிரர் தம் நூலில் த்ரவிட என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கிறார்.

கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டரின் தந்திர வர்த்திகாவில் திராவிடாந்திர பாஷா அல்லது திராவிட பாஷா என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. இவை முறையே தமிழ், தெலுங்கையும் அல்லது தமிழ் மற்ற திராவிட மொழிகளையும் குறிக்கின்றன. பின்னாளில் இடப்பெயராகவும் ஆனது.

சமண ஆகம நூலாகிய சுருதாவதாரம் என்னும் சமஸ்கிருத நூலின் ஆசிரியராகிய பூதபலி குறித்து தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ரவிட தேஸான்
என்ற குறிப்பு வருகிறது. இங்கு த்ரவிட என்ற சொல் தமிழ் என்ற பொருள் தருகிறது.
ஒரு சிவனடியாரைப் பற்றிக் (திருஞான சம்பந்தரை) குறிப்பிடுகையில் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் திராவிட சிசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் தமிழ் என்ற பொருளில் திராவிட பாஷா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
தமிழ் ஆழ்வார்களின் பாடல்கள் திராவிட வேதம் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட நந்திவர்மன் தமிழ் மன்னர்களைத் திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

திராவிடம் என்பது
இடத்தையும் குறித்தது.

கி.பி.14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்கா தேவியால் இயற்றப்பட்ட மதுர விசயம் என்ற சமஸ்கிருத நூல் தமிழகத்தைத் திராவிட தேசம் என்றும், தமிழ் மன்னர்களைத் திரமிள அரசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் இரு முறை சில சத்திரிய இனத்தினர் விரிசாலர் (சூத்திரர்) ஆக ஆக்கப்பட்டனர் என்று வருகிறது. சூத்திர இனத்தவராகப் புன்ராகர், ஓட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பகால்வர், சீனர், கிராடர், தாதர், கார் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தென்னிந்திய இனத்தைக் குறிப்பிடத் திராவிட என்ற சொல் வருவதால் இது தமிழரை மட்டும் குறிக்காமல் திராவிட இனம் முழுவதையும் குறிக்கிறது.
மனு ஸ்ம்ரிதியிலும் இந்த இரண்டு இனங்கள் குறிக்கப்படுகின்றன. இங்கும் திராவிட என்ற சொல் பொதுவாகத் தென்னிந்தியரைக் குறிக்கிறது.
பாகவதம் என்ற நூலில் சத்திய விரதன் திராவிடபதி என்று அழைக்கப்படுகிறான். இங்குத் திராவிட என்ற சொல் தென்னிந்திய முழுவதையும் குறிக்கிறது.
கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லீலா திலகம் என்ற மலையாள இலக்கண நூலில் திராவிட என்ற சொல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கைக் குறிக்கிறது.
மேலே கூறப்பட்ட சான்றுகளிலிருந்து திராவிட(ம்) என்ற சொல் பழங்காலத்தில் தமிழை மட்டும் குறித்தது என்றும், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றிய பிறகு தென்னிந்திய முக்கிய நான்கு மொழிகளையும் குறிக்க ஆரம்பித்தது என்றும் தெரிய வருகிறது. தற்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழிலிருந்து பிரிந்த தொடர்புடைய மொழிகள் அனைத்தையும் குறிக்கிறது.
மேலும், ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருத சொல் என்பது தப்பான கருத்து. அவ்வாறு கூறுவது அறியாமை. யார் அவ்வாறு கூறினாலும் அது தப்பு!
ஆக, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயாகும். திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒன்றுதான் எனும்போது தமிழர் என்று அழைப்பது தானே சிறப்பு! ஏன் திராவிடர் என்று அழைக்க வேண்டும்? என்ற கேள்வி சரியானது, நேர்மையானது. எனவே, அதன் காரணத்தை நாம் நுட்பமாகப் பார்க்கவேண்டும்.

திராவிடர் என்று கூறுவது ஏன்?

தமிழர் என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தமிழர் என்பது வரலாற்றுப் பிழையாகும். அப்படி அழைப்பது சரியும் அன்று. காரணம், இன்றைக்கு மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராட்டி, ஹிந்தி போன்ற மொழிகள் பேசக்கூடியவர்கள், ஆரியர்கள் வருகைக்கு முன் தமிழ் பேசிய தமிழர்கள். கடைசியில் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழோடு சமஸ்கிருதம் சேர்ந்து உருவான மொழி மலையாளம். 400 ஆண்டுகளுக்கு முன் கேரளா மக்கள் தமிழ் பேசிய தமிழர்கள், சேர நாட்டினர். இன்றைக்கு தமிழ் திரிந்து மலையாளம் ஆனதால் அவர்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகிவிடுவார்களா?

தற்போது மலையாளம் பேசினாலும் கேரள மக்கள் தொல் தமிழர்கள்தானே! ஆனால், அவர்களுடைய மொழி மலையாளமாய் திரிந்ததால் அவர்களை இப்போது தமிழர்கள் என்று அழைக்க இயலாது. எனவே, அவர்களும் தமிழ் இனத்தவரே என்பதை உறுதி செய்ய, அவர்களைத் திராவிடர் என்று அழைக்கிறோம்.
திரிந்தவர்களை திரிபு சொல்லால் அழைக்கிறோம்

தமிழ் என்பதன் திரிபே திராவிடம்; தமிழரின் திரிபே மலையாளி, தெலுங்கர், கன்னடர், மராட்டியர், வங்காளிகள் போன்றோர். எனவே, அவர்கள் தமிழரிலிருந்து திரிந்த இனத்தவர் என்பதால் அவர்களைக் குறிக்க தமிழிலிருந்து திரிந்த திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

மொழி மாறினாலும்
இனம் மாறாது

மொழியால் இன்றைக்கு அவர்கள் மாறி நின்றாலும், இனத்தால் அவர்கள் தமிழர்கள். மொழி மாறியதால் அவர்கள் இனம் மாறாது. அவர்கள் தமிழரின் மரபினர். ஆரியர்கள்தான் இனத்தால் மாறுபட்டவர்கள்; வேறுபட்டவர்கள். அவர்கள் தமிழ் பேசினாலும் இனத்தால் அவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் ஆரியர்கள்.
தமிழர் யார் என்பதற்கு என்ன அளவுகோல்?

சில அரை வேக்காடுகள், “நாங்கள் தமிழர்கள். திராவிடர் என்பதற்கு என்ன வரையறை?” என்கின்றனர். இந்திய மண்ணின் தொல்குடி மரபினர் அனைவரும் திராவிடர் என்று கூறிவிட முடியும்; வரையறுக்க முடியும். ஆனால் தமிழர் என்தற்கு என்ன வரையறை?

ஒருவர் சொல்கிறார் 1956க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்பவர்களின் வாரிசுகள் தமிழர்கள் என்கிறார்?
இன்னொருவர் தமிழ் பேசுகிறவர்கள் தமிழர்கள் என்கிறார்.
இந்தக் கிறுக்கர்கள்தான் கலைஞரை தமிழர் இல்லை என்கின்றனர். பாரதியாரை தமிழர் என்கின்றனர். சிந்தித்துப் பாருங்கள்.

தமிழரா? திராவிடரா?

தெற்காசியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் ஆதிகாலத்தில் தமிழ்தான் பேசினர். ஆனால், சமஸ்கிருதம், உருது போன்ற மொழிகள் கலந்து பலமொழிகளாய் தமிழ் திரிந்து போக, தமிழினத்தவர் மொழி அடிப்படையில் மொழியின் பெயரால் அழைக்கப்பட்டனர். தற்போதைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைத் தவிர மற்ற தமிழ் மரபினரின் மொழி தமிழ் இல்லாமல் மாற, தமிழ்நாட்டில் மட்டும் மொழி திரிபு (சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம் நிகழமையால்) ஏற்படாமல், தமிழ் திரியாமல் நின்றது. ஓரளவு சமஸ்கிருத கலப்போடு தப்பியது. அதனால், தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்க்கு மட்டும் தமிழ்மொழியானது.

மொழியடிப்படையில் மட்டுமே இனம் பிரித்தால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் மட்டுமே தமிழர் என்றாகும். மற்ற மாநிலங்களில் வாழும் தமிழினத்தவர் தமிழினம் இல்லையென்றாகிவிடும். எனவே, அவர்களும் தொல் தமிழ் இனத்தவர்களே என்பதைக் குறிக்கவே தமிழர் மரபினர் அனைவரும் திராவிடர் என்ற இனச் சொல்லால் அழைக்கிறோம்.

போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் வாதப்படி, 400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேசிய, சேர நாட்டு மக்கள் மொழி திரிந்து மலையாளம் பேசுவதால், தமிழர்கள் இல்லையென்றாகும். அது சரியா? இளங்கோ அடிகள் தமிழர் இல்லையா? அவர் வழி வந்த சேரர்கள் தமிழர் இல்லையா? அவர்கள் மலையாளம் பேசுவதால் தமிழர் என்று அழைக்க முடியாத நிலையில்தான், இனப்பெயரான திராவிடர் என்று அழைக்கிறோம். எனவே திராவிடர் என்பது தமிழ்நாட்டு தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொல் தமிழர்க்கும் உரிய பொதுவான இனக் குறியீட்டுச் சொல் என்பதே உண்மை!

திராவிடம் இனமா? இடமா?

திராவிடர் வாழும் பகுதி என்பதைக் குறிப்பது திராவிடம். திராவிடர் என்பது இனப்பெயர், திராவிடம் என்பது அவர்கள் வாழும் இடம் பகுதி.

திராவிட் என்று ஆரிய பார்ப்பனர் அழைக்கப்படுவது ஏன்?

ஆரியர்களின் ஊடுருவல் பெரும்பாலும் வடமாநிலங்களில் அதிகம் நிகழ, தமிழர்கள் தென்னிந்தியப் பகுதியில் ஒதுங்கினர். எனவே தமிழர் பகுதி திராவிடம் எனப்பட்டது. அப்பகுதியில் வாழும் ஆரிய பார்ப்பனர்களை வடஇந்தியாவில் வாழ்வோர், திராவிட் என்று அழைத்தனர். மாறாக திராவிட் என்பது ஆரியர்க்குரிய இனச் சொல் அல்ல. அது ஆரியர் வாழும் இடச்சொல்.

திராவிடம் என்பது
தமிழர்க்கு எதிரானதா?

திராவிடர் என்பது பெரியாரால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது அல்ல. அது வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாறு கொண்டது. பெரியாருக்கு முன் அயோத்திதாச பண்டிதர் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இனஉணர்வு கொள்ளச் செய்ததோடு, ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராய்ப் போராடியுள்ளார். பெரியார் தமிழர் கழகம் என்று பெயர் வைக்க முயன்றாலும், அதில் பார்ப்பனர் நுழைவர் என்பதால், இனக் குறியீடாக திராவிடர் என்ற சொல்லைத் தேர்வு செய்தார்.

ஆனால், நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்ட போராடியபோது தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சொன்னார். இங்குதான் இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை, உயரிய நோக்கை உண்மை நோக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தி தாச பண்டிதர்

தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதால்தான் இந்த தமிழினம் ஒடுக்கப்பட்டது, தாழ்ந்து போனது என்று ஒரு தப்பான குற்றச்சாட்டைச் சிலர் வைக்கின்றனர்.
தமிழர் என்பது இனப்பெயரானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை மட்டுமே குறித்து, கிழக்காசியப் பகுதி முழுவதும் வாழ்ந்த தமிழினம் சுருக்கப்பட்டுவிடும். மொழியால் திரிந்து வாழ்ந்தாலும் இனத்தால் தொல் தமிழினம் என்பதைக் குறிக்க ‘திராவிடர்’ என்று அழைத்தால் இனம் பரந்து விரியும்.
எனவே மொழியால் தமிழர்; இனத்தால் திராவிடர் என்பதே சரியானது; உண்மையானது; பாதுகாப்பானது, உரிமை தருவது, உயர்வு தருவது.

திராவிடமா? ஆரியமா?
என்பதே சரியானது

இந்தியாவைப் பொறுத்தவரை தொல் தமிழர்கள் இன்றைக்கு பல்வேறு மொழி பேசும் மக்களாய் பிரிந்து நிற்பதால், மொழி அடிப்படையில் அவர்களை அணுகாது, பண்பாட்டு, கோட்பாட்டு அடிப்படையில் அணுகவேண்டும். அப்படி அணுகினால், திராவிடமா? ஆரியமா? என்று நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும், சமத்துவம் என்பது திராவிடம். ஏற்றத்தாழ்வு, உரிமை மறுப்பு, பிறவி பேதம், ஆதிக்கம், ஒற்றைக் கலாச்சாரம் என்பது ஆரியம் இதில் எது நிலை பெறவேண்டும், ஆளவேண்டும் என்ற அணுகுமுறையே சரியானது. அதுவே 95% மக்களின் உரிமைக்கும், உயர்விற்கும், அதிகாரத்திற்கும் உதவும். எனவே திராவிடம் என்பது தமிழர்க்கு எதிரானது அல்ல. அது தமிழர்க்கு உயர்வளிப்பது; சிறப்பளிப்பது.

வெள்ளி, 29 நவம்பர், 2024

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை

 ஞாயிறு மலர்

அடையாளம் காணப்பட்ட சிந்து சமவெளி-பாணன்


விடுதலை நாள 
ஞாயிறு மலர்

திராவிட நாகரிகத்தின் 100ஆம் ஆண்டு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை  கிராமங்களில் சிந்துவெளி திராவிட நாகரீகம்

நாம் இதுவரை பண்பட்ட நாகரீக நகரங்களாக இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா, மொகஞ்சதாரா. ராஹிகரி மற்றும் தொலவீர என்பவற்றைத்தான் பார்த்திருக்கிறோம்.

மொசபடோமியாவில் (இன்றைய ஈராக்) அகழாய்வு செய்து ஜெர்மன் கொண்டு சென்ற சில (பண்ட்லிப்பி) களிமண் எழுத்துகளில் இருந்து எடுத்த தகவலின் படி சிந்துச்சமவெளி திராவிட நாகரீகத்தின் நகரங்களில் ஒரு லட்சம் முதல் லட்சத்து எண்பதாயிரம் பேர் வரை வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.

இந்த மக்களுக்கான உணவுத்தேவை வயலில் இருந்து வந்திருக்கவேண்டும், வெறும் உணவுத்தேவை என்பது மட்டுமல்ல, இன்றும் நகரங்களில் கிடைக்காத பல பொருட்கள் தூரக் கிராமங்களில் இருந்துதான், வருகிறது.

மெசபடோமியா குறித்த பதிவுகளில் சிந்து திராவிட நாகரீகப் பகுதிகளில் இருந்து மயிற்தோகை, யானைத்தந்தம், மசாலாப் பொருட்கள், பட்டு நூல்கள், பருத்தி ஆடைகள், அரிசி, பார்லி, கம்பு, கேள்வரகு, பால் பொருட்கள் ஆடு, மாடு, எரிப்பதற்கு மரக்கட்டைகள் என 80 விழுக்காடு பொருட்களுக்கு நகர மக்கள் கிராமங்களை நம்பித்தான் இருந்தனர்.

அப்படி என்றால் நாகரிக நகரங்களை மட்டுமே பேசும் நாம், சிந்துவெளி திராவிடச் சமூக மக்களின் கிராமங்கள் குறித்து கவனம்

செலுத்தவில்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பே!

இன்றுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா அன்று ஹிந்துகுஷ் மலைக்கு கீழான இந்தியத் தீபகற்பம் மட்டுமே.
சிந்துவெளிக்கு தெற்கே தார் பாலைவனம், அதனைக் கடந்தால் தக்காண பீடபூமி – அதற்கு கீழே தமிழ்பேசும் பகுதி – இதன் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 5000 ஆண்டுகளாக அரபிக்கடல் மார்க்கமாக வணிகம் நடந்து வந்துள்ளது.

இந்தக் கடலும் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக அமைந்தது.
கிறிஸ்துவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரகாம் மண்ணை ஆண்ட ராஜா சுலைமான் அரசவையில் கீழைத்தேய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களின் பட்டியல் பண்டைய நூல்களில் இருந்தும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதநூல்களில் இருந்தும் கிடைக்கிறது.

மொழி பெயர்ப்பு

நிலம் மற்றும் கடல் மார்க்கமாக வர்த்தகம் செய்வதற்கான மூலோபாய இடத்தின் காரணமாக பாலஸ்தீனம் ஒரு முக்கியமான மய்யமாக இருந்தது. இது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் தரைவழியாக இணைக்கிறது. எகிப்துடன் சேர்ந்து, அட்லாண்டிக் – மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடல் – இந்தியப் பெருங்கடல் நீர்வழிகளில் துறைமுகங்களைக் கொண்ட ஒரே பகுதி இதுவாகும்.
தகவல் களஞ்சியமான பிரிட்டானிக்காவில் இருந்து https://www.britannica.com/biography/Solomon.

சுலைமான் பாலஸ்தீனத்தின் வணிக விதியை நிறைவேற்றி அதனை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது பேரரசின் இயல்பு முக்கியமாக வணிகமாக இருந்தது. மேலும் அது அவருக்கும் நட்பு ஆட்சியாளர்களுக்கும் நிலம் மற்றும் கடல் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்க உதவியது. சாலமன் ஆட்சியில் குறிப்பாகக் கொண்டாடப்பட்ட ஒரு அத்தியாயம் அவர் வருகை – ஷெபாவின் ராணி, அதன் செல்வந்த தெற்கு அரேபிய இராச்சியம் செங்கடல் பாதையில் இந்தியப் பெருங்கடலுக்குள் இருந்தது. சாலமனுக்கு அவரது வர்த்தக வலையமைப்பைப் பராமரிக்க அவரது தயாரிப்புகள் மற்றும் அவரது வர்த்தக வழிகள் தேவைப்பட்டன, மேலும் அவரது பாலஸ்தீனிய துறைமுகங்கள் வழியாக மத்தியதரைக் கடலில் தனது பொருட்களை சந்தைப்படுத்த சாலமனின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

அதாவது சிந்து வெளி திராவிட நாகரீகத்தின் தொடர்ச்சி தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்த பிறகான ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தீபகற்பத்தில் தெற்கில் இருந்து(இன்றைய தமிழ்நாடு கேரளா, கருநாடகா மேற்குப் பகுதி) பொருட்கள் தொடர்ந்து சென்றது மேலே கூறிய பதிவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,000 ஆண்டுகளுக்கு முன்பு

சிந்துவெளி திராவிட நாகரீகம் திடீரென்று உருவாகி இருக்காது. 4000 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நகரங்கள் உருவாகிறது என்றால் அதற்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளாக கிராமங்கள் உருவாகி இருக்கவேண்டும்.

ஞாயிறு மலர்

இதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே மகாரட்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆரவல்லி மலைத்தொடரில் நடந்துள்ளது. ஆனால், கீழடி போல் மிகவும் நுட்பமாக நடக்கவில்லை.

கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம்.
காதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் ‘கோட்டா திம்பா’ என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்துவந்தனர்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள அய்.அய்.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப் பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிறு மலர்

நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.
நில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், அது வளம் மிக்க மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.

“சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலா விரா ஒரு பன்னாட்டு வர்த்தக நகராகவும் இருந்துள்ளது.”

“தோலா விரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது.”

ஞாயிறு மலர்

“பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர்.”

“தோலா விரா நகரின் இரு பக்கங்களிலிலும் மான்சர் மற்றும் மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.”

“நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசை திரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர் தேவைகளை சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்.”

கட்ச் பகுதியில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின், இன்றைய குஜராத்தில் அமைந்துள்ள, கிராமங்கள் இருந்த பகுதிகள் ஆகும். இக்கிராமங்கள் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அரியானாவில் உள்ள “ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழைமையானது என்பதை உணர்த்துகிறது.”

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், டில்லியிலிருந்து வடமேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.

105 எக்டேர் பரப்பளவு கொண்ட இராக்கிகடி பகுதி நீர்வளமும் நிலவளமும் அதிகம் உள்ள பகுதி ஒருபுறம் சட்லஜ் மறுபக்கம் யமுனா, கிளைநதியான காகர் ஹக்ரா போன்றவை ஓடியதால் நிலத்தடி நீர் எப்போதும் குறையாமல் இன்றும் உள்ளது. அதே போல் மூன்று நதிகளின் வண்டல்களும் இப்பகுதியில் படிந்து மண்ணை வளமாக்கி உள்ளது.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய இராக்கிகடி தொல்லியல் களம் கி.மு. 6420 – 6230 மற்றும் கி.மு. 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கி.மு. 2600 – 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் அரசால் வெளியிடப்படுகிறது.

மே, 2012இல் இராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகாளவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.

இத்தொல்லியல் களத்திற்கு அருகே காளிபங்கான் குணால், பாலு மற்றும் பிரானா போன்ற சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளன.

சிந்துசமவெளி திராவிட நாகரீகத்தின்

மத்திய இந்திய கிராமங்கள் தைமாபாத் (Daimabad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில், சிறீராம்பூர் வருவாய் வட்டத்தில், கோதாவரி ஆற்றின் துணை ஆறானா பிரவரா ஆறு பாயும் தொல்லியல் களமும், கிராமமும் ஆகும்.

இத்தொல்லியல் களத்தை முதலில் 1958-இல் பி.ஆர்.போபார்திகர் கண்டுபிடித்தார். பின்னர் 1958-1959 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தைமாபாத் தொல்லியல் களத்தை மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. இறுதியாக 1975-1976 மற்றும் 1978-1979 ஆண்டுகளிலும் தைமாபாத் தொல்லியல் களத்தை எஸ்.ஏ.சாலி தலைமையில் ஆய்வு செய்தனர்.

தைமாபாத் தொல்லியல் களத்தின் தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் அவைகள் தக்காண பீடபூமி வரை பரந்திருந்த பிந்தைய அரப்பா காலப் பண்பாட்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது. தைமாபாத் தொல்லியல் அகழாய்வில் பிந்தைய அரப்பா பண்பாடு , சவல்தா பண்பாடு தைமாபாத் பண்பாடு, மால்வா பண்பாடு மற்றும் ஜோர்வே பண்பாட்டுக் காலங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொல்லியல் களத்தில் பிந்தைய அரப்பா பண்பாட்டுக் காலத்திய இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் சிற்பம், 45 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

சங்கனக்கல்லு என்பது கற்காலம் (கி.மு. 3000) பழைமையான தொல்பொருள் தளமாகும். இது கிழக்கு கருநாடகாவில் உள்ள பெல்லாரியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிந்துச்சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியில் தென் இந்தியாவில் முதலில் வரும் முக்கிய பகுதியாகும். தென்னிந்தியாவின் ஆரம்பகால குடியிருப்புகளில் ஒன்றாகும்,

இது 1,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. சங்கனகல்லு மற்றும் குப்கலில் பரவிய சிவப்பு – பழுப்பு படிம மண் அடுக்கு உள்ளது. இது கி.மு.5000க்கு முந்தையது. மேற்பரப்பின் அகழ்வாராய்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான மட்பாண்டங்கள், கல் அச்சுகள் மற்றும் பிற கற்கால கருவிகள் வெளிப்பட்டதால் இந்த தளம் புதிய கற்கால தொழிற்சாலை தளமாக கருதப்படுகிறது.

சன்னாரசம்மா மலையில் பெண்டாப்புடி சுப்பாராவ் என்பவரால் 1946ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த இடம் பெருமளவில் தோண்டப்பட்டது. சுப்பாராவ் அவர்களின் கலாச்சாரத்தை 3 கட்டங்களாகப் பிரித்தார்: சங்கனக்கல்லு முதன்முதலில் குடியேறிய கிராமம் – இங்கு செங்கலால் ஆன கீழடியில் கிடைத்த சிவப்பு கருப்பு மட்பாண்டங்கள் கிடைத்தது.

இங்கு கிடைத்த மட்பாண்டங்கள் மிகவும் நன்றாகவும், மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருந்தன. ஒரு சில பானைகளில் துளையிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் சில மண்பாண்டங்களில் உள்ள துளைகள் அப்பாத்திரத்தில் வைக்கும் உணவுப்பொருள் கெட்டுப்போகமல் இருப்பதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரியவந்தது.

சங்கனகல்லுவில் குடியேறிய மக்கள் ஆரம்பகால விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் சிறு தினை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டனர். அவர்கள் ஆடு, மாடுகளை பராமரித்து, சாணத்தை (சாம்பல் மேடுகள்) கொட்டுவதற்கு தனி இடங்களை வைத்திருந்தனர்.