
கொச்சி, மார்ச் 10- கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆழுவாவில் 19.2.2025 அன்று திராவிட மக்கள் சங்கம் – Dravidan People Federation ( DPF) அமைப்பின் சார்பில் ‘திராவிடம் பேசுவோம்’ என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
திராவிட மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர், வயநாடு நவுஷாத் தலைமை ஏற்றார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ‘திராவிட தத்துவம்’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஊடவியலாளர் இந்திரகுமார் தேரடி திராவிட இயக்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூகநீதி
திராவிடம் என்பது மொழி வழி குடும்பமாக கால்டுவெல் எவ்வாறு வகைப்படுத்தினார்? ஆரிய பார்ப்பனியம் திராவிடம் என்பதை நில அடிப்படையில் எந்த எந்த புராணங்களில் குறித்துள்ளது என்பதையும், இன ரீதியாக மேல் நாட்டு அறிஞர்கள் திராவிட இன மக்கள் என்பதை எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்பதையும் ஆதரபூர்வமாக விளக்கினார். மேலும் திராவிடம் என்கிற வரையறை ஏன் தற்போது வரை தேவைப்படுகிறது. எதனால் திராவிட வரையறைக்குள் நின்று பெரியாரும் அண்ணாவும் சமூக அரசியல் தளங்களில் வேலை செய்தார்கள்.
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் தொடக்கம் நீதிக்கட்சிதான். நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கான அடித்தளம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடர்ந்து சமூக நீதி தளத்தில் இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மனுதர்மம் கீழ்நிலை மக்களை படிக்கக் கூடாது என்றதும், பெண்களை ஒதுக்கி வைத்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படாத மக்களின் உரிமையை திராவிடர் இயக்கம் எவ்வாறு போராடி பெற்றுத்தந்தது.
கலைஞர் அரசின் மக்கள் நல திட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பட்டியலிட்டு இன்றைய திராவிட மாடல் அரசின் காலை உணவு திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், சமூகநீதி கண்கணிப்பு குழு, பெண் ஒதுவார் நியமனம், மகளிர் மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமத்துவ சமூக நீதிக்கான திட்டங்கள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. மேலும் இந்தியாவில் இல்லாத அளவுக்கு கல்வி, உயர்கல்வி, விளையாட்டு துறை, மருத்துவ துறை, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டங்கள், சிறும்பான்மையினர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவற்றை அடங்கிய சமத்துவ ஆட்சியை கொடுக்க முடிகிறதென்றால் அதற்கு நிலையான தத்துவம் திராவிடம் தான். திராவிடம் என்பது தற்போது அரசியல் காப்பு ஆயுதமாக பயன்பட்டு வருகிறது என்றும், ஹிந்தி சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி கோருதல், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, ஆரிய பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு, கூட்டாச்சி தத்துவம் காக்க, இன்று அரணாக இருப்பது திராவிட தத்துவம் என்பதை மறுக்க முடியாது.
திராவிட இன மக்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு அதிகம் என்றும், ஆரிய ஆதிக்கத்தை விரட்டிட திராவிட மக்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது காலத்தின் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மக்கள் சங்கத்தின் கொடி கருப்பு ஒரு பகுதியும், சிகப்பு ஒரு பகுதியும் சிகப்பில் நீதிக் கட்சியின் தராசு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆசிப், வழக்குரைஞர் நீனா ஜோஸ், தோழர்கள் ஆத்தூர் சதீஷ், அரக்கல் அமீர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக