வெள்ளி, 16 ஜூன், 2017

தமிழரைத் திராவிடர் என்பது பிழையன்று

- மா.பால்ராசேந்திரம்

வந்தேறிகள் - ஆரியர், பார்ப்பனர், பிராமணராய் இருந்தனர். பெரும்பான்மை மக்கள் தம்மைப் பிராமணரல் லாதார், பார்ப்பனரல்லாதார் என்று ஏன் சுட்டிச் சொல்லிக் கொள்ள வேண்டும்? நம் நாடு இதுவென்றால் நமக்கென்று இங்கோர் அடையாளம் இருந்துதானே ஆக வேண்டும்? அந்த அடையாளத்தைக் காணமுயன்ற வேளையில் அய்யா பெரியாருக்குக் கிடைத்த வரலாற்று அடையாளம் தான் ‘திராவிடர்’ என்ற இனக் குறியாகும்.

“திராவிடம் என்றன் திருநா டென்று
சரேலென எழுக தடந்தோள் ஆர்த்தே!
மீட்பாய் திராவிட நாட்டை!”

என்று புரட்சிக்கவிஞர், “திராவிடர் நாட்டில் ஆரியம் புரிந்திடும் இழிசெயல்களனைத்தையும் அழித்தொழித்திடத் தடந்தோள் தூக்கி எழுந்திடு தோழனே!” என இளைஞர் பட்டாளத்தை உசுப்பி விடுகிறார் பாரீர்!

“தமிழரும், திராவிடரும் ஒன்றேயாவர். திரு + இடம் = திருவிடம் ஆகும். அதுவே வடமொழிசார்ந்த உச்சரிப்பால் ‘திராவிடம்’ ஆயிற்று என்றார்கள். வடவர் ‘சிறீ’ என்பத னைத் தமிழர் ‘திரு’ என்பர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். சான்றாக, ஆரூர் டி திரு + ஆரூர் = திருவாரூர்; அய்யாறு டி திரு + அய்யாறு = திருவையாறு; மலை டி திரு + மலை = திருமலை எனப்பல இடங்களைக் குறிப்பிடலாம். ஒன்றின் மேன்மை, சிறப்பு, பெருமை, உயர்வு கருதி தமிழர் பயன்படுத்திய சொல்லே ‘திரு’ ஆகும். இதனை ‘சிறீ’ என்று போட்டுச் சொல்வது சரியாகுமா? அரங்கம் டி திரு + அரங்கம் = திருவரங்கம். இதனை சிறீவரங்கம், சிறீரெங்கம் என்று எவ்வாறு கொள்ள முடியும்” என்கிறார் 1942 சனவரி 11 அன்று திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் உரையாற்றிய அய்யா பெரியார் அவர்கள்.

“திராவிடம் என்பது தமிழ்நாடே. திராவிட நாடு கொஞ் சம் அதிகப்பரப்புக் கொண்ட பகுதியாகும். 2500 ஆண்டு களுக்கு முன்பு வரை ‘இந்தியா’ என்ற கோட்டுப் படத்தைப் போட்டு அதன்கீழ் ‘திராவிடம்’ என்றே பெயர்  குறிப்பிட்டி ருந்தனர்” என்பதனையும் அய்யா அவர்கள் படத்தைக் காட்டி விளக்கியுள்ளார்கள். “தெக்கணமும் அதில் சிறந்தத் ‘திராவிட நல்’ திருநாடு” என்கிறார் மனோன்மணீயம் பெ.சுந்தரம்பிள்ளை. திராவிட என்றால் தமிழ்நாடு என்று பொருள் என்கிறது ஜெம்டிக்ஷனரி. ‘திராவிடம்’ தென்னிந்தி யாவிலுள்ள பழைமையான ஒரு மாகாணம் என்பது சேம் பர்ஸ் டிக்ஷனரியின் கூற்றாகும். ‘திராவிடம்’, ஆரியல்லாத மக்களைக் கொண்ட மாகாணம், தமிழன் ஆரியருக்கு முன்பிருந்த மக்கள் என்கிறது டிக்ஷனரி ஆப் இங்கிலீஸ் லாங்க்வேஜ். இராபர்ட் கால்டுவெல், “திராவிடர்களின் பல்துறைகளிலும் ஆரியம் மூக்கை நுழைத்திருக்கிறது. தன் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்க முயன்றுள்ளது” என்கிறார் பரிதிமாற்கலைஞர். அண்ணல் அம்பேத்கர் அவர்களோ, “தென்னாட்டு நாகர்கள் சமஸ்கிருதத்தை ஏற்காததால் ‘திராவிடர்’ என்ற தகுதியுடன் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறார். “திராவிடர்களின் மொழிகள் ஆரிய சமஸ்கிருதத்தின் குழந்தைகள் அல்ல. அவை மிகப்பெரிய இலக்கியங்களை உடையது” என்பது உலக சரித்திரம் என்ற நூலில் நேருவின் கருத்தாகும்.

திராவிடர் கருப்பு நிறத்தவர். நீண்ட மயிர், நேரிய மூக்கு உடையோர். இன்றும் இவர்கள் தென்னிந்தியா, எகிப்து, பாபிலோனில் வாழ்கின்றனர். ‘திராவிடம்’ என்பது தமிழுக்கு ஆரியரிட்ட ஒரு பெயர், ஒரு தேசம் என்கிறது அபிதான சிந்தாமணி. ‘திராவிடன்’, ஆரியரல்லாதாராகி தமிழ், கன்ன டம், தெலுங்கு, மலையாளம் பேசும் தென்னிந்திய மக்கள் என்பது சேம்பர்ஸ் டிக்ஷனரியின் கருத்து. தமிழன் திராவி டன் என்பதால் எக்குற்றமோ, குறையோயில்லையென இதன்வழித் தெரியப்படுகிறதல்லவா?

அவ்வாறாயின் பாரதநாடு எது? திராவிடரின் எதிரிகளாம் ஆரியர்கள் வைத்த பெயரே பாரதநாடு. புரட்சிக்கவிஞர் கூறுவது போல்,

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறனும் செறிந்த நாடு.

நம் திராவிடர் நாடு. இத்திராவிடர் நாட்டிற்குள் முதலில் நுழைந்தோர் ஆரியரே என்பது திண்ணம் என்கிறார் அய்யா பெரியார். வரலாறு எழுதியோர் வடமேற்கில் ஆப் கானிஸ்தான் வழியாகவும், வடகிழக்கில் பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்தும் ஆரியர் நுழைந்தனர் என்கின்றனர். ஆரியரல்லாதாரால், நுழைந்தோர், சிந்தியர் என்று அழைக்கப்பட்டனர். சிந்தியர் என்பது திரிந்தே இந்தியர் என்ற வழக்காயிற்று என்பர். இதன் வழிப்பார்க்கையில் திராவிடர், இந்தியரல்லர் என்பது உறுதியாகின்றது.

இந்த வந்தேறி ஆரியரே, பழங்குடிகளான திராவிடரை விரட்டி அடித்தனர். தெற்கு நோக்கிய நிலப்பரப்பிற்கு ஓடி வந்து தங்கினர் திராவிடர்கள். விரட்டப்பட்டத் திராவிடரின் இருப்பிடங்களில் வந்தேறிகள் தங்கிவிட்டனர். வடக்கே ஆங்காங்கேத் தங்கி விட்டத் திராவிடரை ஆரியர் தம் கட் டுக்குள் வைத்துக் கொண்டனர். திராவிடரின் தாக்குதலிலி ருந்து தம்மைக் காத்துக் கொள்ள வடநாட்டை ஆண்ட மொகலாயரிடம் குலாம்களாக ஆகிக்கொண்டார்கள் ஆரியர்கள் என்கிறார் அய்யா பெரியார்.

அந்த ஆரியர் - திராவிடர் போரைக் கருவாகக் கொண்டுதான் புராணங்களும், இதிகாசங்களும் எழுதிக் குவிக்கப்பட்டன. இமயமலையிலிருந்த ஆரியன் சிவன், தன் மகன் சுப்ரமணியனை இலங்கைக்கு நெடுந்தொலை விலுள்ள குட்டித் தீவினை ஆண்ட சூரன், அவன் தம்பி தாரகன் என்பவரோடு சண்டை செய்ய ஏவினான். வேல் முதலிய ஆயுதங்கள் கொண்டு வெற்றி கொண்டான் என்கிறது. கந்தபுராணம், இராமன் என்னும் வடவாரியன், இலங்கை வேந்தன் இராவணனை வெற்றி கொண்டான் என்கிறது இராமாயணம்.

பல்லாண்டு கால ஆரியர் - திராவிடர் போரில் செத்து மடிந்தோர் போக மீதியானவர்கள்தாம் தாங்கள், திராவிடர், தமிழர் என்றும்; தங்கள் நாடு திராவிடம் என்றும் சொல்லி, இருந்து வருகின்றனர். இதனைத் தெரியாது, அறியாது எதிரிகளையே குரு என்றும் அவரையே தலைவராகவும், கடவுளாகவும் கருதி வருகிறோம் என்று அய்யா பெரியார் குறைபட்டுக் கொள்கிறார்.

தேரினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்!

பார்ப்பனர் பற்றிய தெளிவு இல்லாத் தமிழர் தாம் அவர் களால் அடைந்து வரும் கொடுமைகளைக் கண்ட பின்பா வது அவர்களை ஒதுக்கிவிட வேண்டுமல்லவா? இதுதானே குறள்நெறி! அதுதானே தமிழர் நெறி! அந்நெறியில் ஏற்பட்ட தள்ளாட்டத்தால்தான் இன்றும் தமிழன் சூத்திரன். கோவிலுக்குள், உணவகங்களுக்குள், தெருவுக்குள் நுழை யக்கூடாத தீண்டத்தகாதவன். எதிரிகளுக்கே கோவில்கட்டி மகிழ்ந்தவன். ஆரியரை ஆதரித்த, அவரைப் புகழ்ந்த, பெருமைப்படுத்திய, அவரின் ஒழுக்கக்கேடான வாழ் வினை உயர்ந்த பண்பாடெனப் பாடித் தொலைத்த நாயன் மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கோவில்கட்டியவன். இருக்கலாமா அக்கோவில்கள்? தமிழ்க் கடவுள்களே அவை என்கிறோமே! அவை அந்தத் தகுதியில் இருக்கிறதா? கோவில் கட்டிய தமிழனை மிதிப்பதும், குத்துவதும், வெட்டுவதுமான வடிவில்தானே அக்கடவுள்களைச் செதுக்கி வைத்துள்ளான். கோவில் கட்டச் செலவோ தமிழன் பணத்தில், கோவில் நுழைவோ தமிழனுக்குக் கிடையாது என்ற நிலைதானே!

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்

பண்பினால், செயலினால் நல்லவர், கெட்டவர், உயர்ந் தோர், தாழ்ந்தோரெனக் கொள்ள வேண்டுமேயொழிய பிறப்பினால் அன்று என்பதே குறள்நெறி. அப்படி எண்ணுகின்ற தமிழன் எத்தனைபேர்? சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழன் பிறப்பினால் பெருமை தர ஒப்புக்கொள்ள மாட்டான். மற்றையோர் அப்படியா?

இந்த அநியாயத்தில் ஜாதிக்கொடுமைகள் வேறு, தமிழனை இன்னும் அதிகமாகப் பிய்த்து எடுக்கிறது. ஆரியனே, நன்றாயிருந்த திராவிட நாட்டை நாலு ஜாதியாக் கினான். பார்மதித்த திராவிடத்தில் பஞ்சமனென்று ஒரு பேர் வகுத்தான் என்பார் புரட்சிக் கவிஞர். தமிழரென்போரே ஒருவர் வீட்டில் மற்றொருவர் உண்ண மாட்டார்; உண வருந்தும் தகுதியில்லாதவர்; உணவே தரக்கூடாதவர் என்றெல்லாம் இருந்துவரும் கொடுமைகள் வேறு. பழந்தமிழர்களோ பள்ளராய், பறையராய், சக்கிலியராய், சண்டாளராய் இருந்து வதிந்து வாழ்ந்திடும் நிலை வேறு. இந்நிலை மாற வேண்டும். திராவிடர் நாம். ஆரியர் வேறு என்று உணர வேண்டும். நாம் திராவிடர் என்றால் ஆரிய ருக்கு இனிக்கிறது. நம்மை வெறுக்கிறான் ஆரியன். தமிழர்க்குக் கசப்பதேன்? திராவிடர் என்பதால் தமிழர்க்கு நட்டமில்லை. ஆரியர், தம்மைத் தமிழர் என்பதால் நட்டம் தமிழர்க்கே! இந்தியர் என்ற ஒதுக்கீட்டில் பார்ப்பனரே அனைத்துப் பணிகளையும் பெறுகின்றனர் என்றார் ஆங்கிலேயர் அலெக்ஸாண்டர் கார்ட்யூ. அதே சூழல்தன் தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்திடும் ஆரியர் தமிழரின் ஒதுக்கீட்டை விழுங்கி வருகின்றனர் முழுக்க முழுக்க என்று தெரிந்த பின்னரும் சிந்திக்க வேண்டாமா?

திராவிடர் என்பது தமிழர்க்குப் பாதுகாப்புக் கவசம். வரலாற்றை சுயபுத்தியோடு அறிந்து கொள்பவர்க்குத் தெரியும். இரவல் புத்தியோடு குறுக்குசால் ஓட்டுபவர்க்கு எப்படிச் சொன்னாலும் புரிவதென்பது ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி வைப்பது போலாகும்.

“வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள் 
வாழ்க நனிவாழ்க! மற்றோர்கள் வீழ்ந்திடுக!
யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே!”

என்னும் புரட்சிக் கவிஞரின் மொழிபோல் திராவிடர் இயக்கம் தமிழர்க்கு வழங்கிய பலன்கள் என்பது இன்றைய தமிழர் வாழ்வின் உயர்வெல்லாம் அதனின் கொடையென் றால் மறுக்க முடியாது.

இளைஞர்களே! நீங்கள் குலம் கெடுக்கும் கோடாரிக் காம்புகளாய் இராதீர்! இனத்தை மேனிலைப்படுத்தும் இயக்கத்தை அடையாளம் காண்பீர்! அது, தன்னேரில்லாத் தனிப்பெரும் தலைவர் பெரியார் கண்ட திராவிடர் கழகம் என்பதை உணர்வீர்! இனநலன் காத்திடும் போரில் களம் பல வகுத்திடும் தமிழர் தலைவர் கி.வீரமணியின் செயல்வீரர் களாய் உங்களைத் தந்திடுவீர்!

-விடுதலை ஞா.ம.,10.6.17

4 கருத்துகள்:

  1. திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களைக் குறிக்கும் சொல், ஆரியர் என்பது வாழ்வின் நோக்கத்தை அறிந்த மக்களைக் குறிக்கும் சொல்

    மருத்துவக் கல்வியைப் பயின்றவர்கள் உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்களை மருத்துவர்கள் என்று அழைப்பதைப் போலவே, ஆரியர் என்னும் பெயர் உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தகுதிகளின் அடிப்படையில் அழைக்கப்படும் பெயராகும்.

    ஆன்மீகக் கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குபவர்களை ஆரியர்கள் என்று குறிப்பிடலாம்.

    திராவிடன் வங்காளியாகவோ காஷ்மீரியாகவோ மாற முடியாது, ஆனால் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம்;

    அதுபோல, திராவிடன், வங்காளி, காஷ்மீரி என யார் வேண்டுமானாலும் ஆரியராகலாம்.

    பதிலளிநீக்கு
  2. திராவிட என்பது தமிழ் வார்த்தை அல்ல. இதன் சமஸ்க்ருத மூல வார்த்தை “திரவ” ஆகும், நீர் போன்ற என்ற பொருள் படும். இதில் முக்கியமாக, சங்க இலக்கியங்களில் திராவிடன், திராவிட என்ற சொல் எங்கும் கூறப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் செளந்தர்ய லஹரி 75ஆவது கவியில் திருஞான சம்பந்தரைக் குறித்து இவ்வார்த்தையைப் பிரயோகிக்கிறார்

    மேலும் இலக்கியங்கள் திராவிட என்ற சொல்லையே கி.பி 9ஆம் நுற்றாண்டில் அதுவும் மொழியாய்வில் பயன்படுத்தியிருக்கின்றனர். சேந்தன் திவாகரம் (திவாகர முனிவர்) திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்று குறிக்க பயன்படுத்தியிருக்கிறார்.

    இத்திருநாடு அதன் சொந்தக் குடிமக்களாம் வேதக் குடும்பங்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பொன்னாடு என்பதும் நன்கு தெரிகிறது.
    மொழி, தோல் நிறம், அந்தந்த இடங்களின் கலாச்சார வேறுபாடு இவற்றைக் கொண்டு இந்தப் பிரிவினை விளையாட்டு 150 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி நடந்ததோ அதே போல இன்றும் நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு
  3. திராவிட அடையாளம்

    காஞ்சி வாழ் பிராம்மணர்கள் வேதத்தைப் பரப்பினதற்குப் பெயர் போனவர்கள். வேதம் கற்பதற்கு, பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து காஞ்சிக்கு மக்கள் வந்தனர். பரசுராமர் காலம் தொட்டே மீட்கப் பட்ட திராவிடத்தில் குடியேறின

    ஸரஸ்வத பிராம்மணர்களை, ஆதொண்டை தன் நாட்டில் குடி வைத்திருக்கிறான். அவர்களது திராவிட நாட்டுத் தொடர்பால், காஞ்சியும் அதனைச் சார்ந்த இடங்களும் திராவிட நாடு என்று பெயர் பெற்றிருக்கிறது.

    காஞ்சிக்குத் திராவிட அடையாளம் கொடுத்தவர்கள், பிராம்மணர்களே. சாணக்கியர் காஞ்சி நகரைச் சேர்ந்த திராவிடப் பிராம்மணரே. ஆனால் காஞ்சி நகரம், மஹாபாரதக் காலத்தில் திராவிடம் என்று அழைக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    ஆதி சங்கரருக்குப் பிறகே இந்த திராவிட அடையாளம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. த்ரமிடாசார்யர் என்னும் வைணவ ஆசாரியர், திராவிட தேசத் தொடர்பால் அந்தப் பெயரைக் கொண்டிருந்தார்.

    இவர்கள் அனைவருமே பிராம்மணர்கள் என்பதால், தமிழ்நாட்டு திராவிடவாதிகளின் திராவிடக்கருத்து அடி பட்டுப் போகிறது.

    ..
    ’திராவிட கௌடகர்’ என்னும் பெயரால் ஒரு முனிவர் இருந்தார். கௌடர், திராவிடர் இருவருக்கும், பொதுவான முன்னோர்கள் இருந்தார்கள் என்பதை இந்தப் பெயர் வலியுறுத்துகிறது.

    இதை மேற்கொண்டு ஆராய்ந்தால், இந்தப் பெயர்கள், குறிப்பிட்ட சம்பிரதாயத்தைப் பின் பற்றி உண்டாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

    கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடபதாசாரியார் (ஸரஸ்வதி பிராம்மணர்) என்னும் அத்வைத குருவைப் பின்பற்றிய பிராம்மணார்கள் கௌடர்கள் எனப்பட்டார்கள். இவர்கள் பஞ்சாயதன முறையைப் பின்பற்றியவர்கள்.

    இவர்கள் அனைவரும் ஸரஸ்வதி பிராம்மணர்கள். அதாவது ஸரஸ்வதி நதிக் கரையில் மனுவின் காலம் தொட்டு வசித்தவர்கள்.

    ஆதி சங்கரரைப் பின்பற்றியவர்கள் பஞ்ச திராவிடர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    ஆதி சங்கரர் தன்னை ‘திராவிட சிசு’ என்று அழைத்துக் கொண்டார் (சௌந்தர்ய லஹிரி -75) என்பதே இதற்கு சாட்சி.

    அவரைப் பின்பற்றிய பிராம்மணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. திராவிட – கௌடப் பகுதிகளை தமிழ் நிகண்டுகளும் சொல்கின்றன. தமிழ் நாட்டைச் சுற்றி 18 நாடுகள் இருப்பதாக திவாகர நிகண்டு கூறுகிறது. அவற்றுள் திராவிடம் ஒன்று. அதாவது திராவிடம் என்பதைத் தமிழ் நாடு என்று சொல்லவில்லை. அது தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்த நாடு.

    அந்த 18 நாடுகள் வருமாறு:-

    1.அங்கம்,2.வங்கம்,3.கலிங்கம்,4.கௌசிகம்,5.சிந்து,6.சோனகம்,7.திராவிடம்,8.சிங்களம்,9.மகதம்,10.கோசலம்,11.மராடம்,12.கொங்கணம்,13.துளுவம்,14.சாவகம்,15.சீனம்,16.காம்போஜம்,17.பருணம்,18.பர்ப்பரம்.

    இது குறித்து இன்னொரு செய்யுளும் இருக்கிறது. அதன்படி தமிழ் நாட்டைச் சுற்றி 17 நாடுகள் இருந்தன எனப்படுகிறது. அவை

    1.சிங்களம்,2.சோனகம்,3.சாவகம்,4.சீனம்,5.துளு,6.குடகு,7.கொங்கணம்,8.கன்னடம்,9.கொல்லம்,10.தெலுங்கம்,11.அங்கம்,12.மகதம்,13.கடாரம்,14.கௌடம்,15.கருங்குசலம்,16.கலிங்கம்,17.வங்கம்

    இந்த இரண்டில் திராவிடம் ஒன்றிலும், கௌடம் மற்றொன்றிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்கந்த புராணமும் பாரத தேசத்தில் இருந்த நாடுகள் என்று ஒரு பட்டியல் கொடுக்கிறது. (மஹேஸ்வர காண்டம்). அதில் கௌட தேசம் இருக்கிறது. திராவிட தேசம் இல்லை.

    பதிலளிநீக்கு