செவ்வாய், 10 மார்ச், 2020

திராவிடன் சிந்திக்க வேண்டாமா?

மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறவியில் உறுதியோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும் அரசியல் குருவாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதை விட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடென்ன என்று கேட்கிறேன்.

இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது. அப்படியிருக்க திராவிட நாட்டை பரதநாடு என்ற சொல்லவோ, பரதகண்டம் என்று சொல்லவோ, பாரத தேசம் என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட்கிறேன்.

அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார் களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியா தையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.

பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப் போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர் களே ஆண்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல் லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடியாது. திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமானால் ஆரிய நாடுகளிலும் இருந் திருக்கிறது. ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம் பெரும் மன்னர்களின் சமுதாயங்களான திராவிடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதியாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்க ளது கலை, மானம் ஆகியவைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத்திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிராணாவதைக் கூப் பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித் துவிட்டால்தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக்கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும். இப்படிப்பட்ட நிலையில் அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம் என்று மடையனும் மானமற்றவனும்தான் சொல்லுவான்.

இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர்களையும் ஒத்திட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டுகிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ் வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

திராவிடன் - சூத்திரன். திராவிடப் பெண் சூத்திரச்சி. ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத் தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள். மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது. ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி. ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண் டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலிசு காவலர்கள், தோட்டி தலையாரிகள்.  ஆரியர்கள் 100க்கு 90 உத்தியோகங் களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜீகள் முதலிய பெரும் பெரும் பதவிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அவன் பிள்ளை அய்.சி.எஸ். ஆகிறான். திராவிடன் ஜமீன்தார னாய் இருந்தாலும் அவன் மகன் தெருவில் காவாலியாய், காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய் மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண் ணும் அணிந்துகொண்டு, பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்து கொண்டு நின்று கும்பிட்டு, அவன் கால்தூசி யைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல், பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக் கொள்ளும் மானமற்ற திராவிட னைக் கேட்கின்றேன். இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.

- "குடிஅரசு", 10.1.1948

 விடுதலை நாளேடு 6.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக