செவ்வாய், 12 மே, 2020

திராவிடம் என்பதற்கு ஆதாரம்

திராவிடம் என்பதற்கு ஆதாரம் - 1

திராவிட நாட்டுக்கு ஆரியர்கள் குடியேறி, திராவிடர்களை அடக்கிக் கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. 

ஆரியர்கள் திராவிடர் நாட்டுக்கு வருவதற்கும் முன் திராவிட நாடு கலைகளிலும், நாகரிகத்திலும் தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும், நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும், இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திராசிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

மேற்கு திபெத்தையும், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது. இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படி தங்கள் பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
என சர்  என்றி ஜான்ஸ்பட்டளர் என்கின்ற பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளர், இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.    

ஆரியர்கள் மது வருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள்.
இது ராகேஸ் என்னும் பேராசிரியர், வேதகால இந்தியா என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

வட இந்தியாவில் இருந்த திராவிட கலை, நாகரிகம் முதலியவைகள் யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் செய்ய முடியவில்லை, இது பண்டைத் தமிழரின் வரலாறு என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது. 

ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிகொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி திராவிடர்களுக்கு தஸ்யூ என்றும், ஆரிய எதிரி என்றும் பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், ராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள். இது சர் வில்லியம் வில்ஸன் ஹெனர், டாக்டர் கே.சி.எஸ்.அய். சி.அய்.ஈ. எழுதின இந்திய மக்களின் சரித்திரம் 41-ஆவது பக்கத்தில் இருக்கிறது. 

பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாகச் சகல விஷயங்களையும் உட்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடிக் கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே எழுதிக் கொள்ளப்பட்டவைகளாகும்.
இது பிரபல சரித்திராசிரியரான என்றி பெரிட்ஜ் என்பவரால் 1865-ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு -தந்தை பெரியார்)
திராவிடம் என்பதற்கு ஆதாரம் - 2

பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்) பற்றியேயாகும்.
இது ராலின்சன் சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும்  புத்தகத்தில் 153-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். இது ரிக் வேதம் 10-ஆம் அதிகாரம் சுலோகம் 22-8-இல் இருக்கிறது.

இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909-ஆம் வருஷ வால்யூம் 1 - பக்கம் 405-இல் இருக்கிறது.

தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இது ரோமேஸ் சந்திர டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். எழுதிய புராதன இந்தியா என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் என்னும் புத்தகத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது. 

ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றிபெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும். இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது. 

ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும். இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய பண்டைய இந்தியாவின் நாகரிகம் என்ற புத்தகத்தின் 139-141-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் என்ற புத்தகத்தில் ராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் இருக்கிறது.

ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.
தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்) கொடுத்த பெயராகும். இது 1922-ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில் இருக்கிறது 


(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு -தந்தை பெரியார்)
திராவிடம் என்பதற்கு ஆதாரம் - 3

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும். இது டாக்டர் ராதா குமுத்முகர்ஜீ எம்.ஏ., பி.எச்.டி. எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால், ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும். இது ராதா குமுத்முகர்ஜீ எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.
இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலிஷ் அகராதியின் பக்கம் 67-டி-யில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன. இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.

தமிழர்கள் ஆரியர்களை வடவர் வடநாட்டவர் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய தென் இந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3-ஆது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள். இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்து பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள். இது ஷோஷி சந்தர்டட் எழுதிய இந்தியா அன்றும், இன்றும் என்னும் புத்தகத்தில் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது. இது ஸி.தாஸ், எம்.ஏ.,பி,எல், எழுதிய ரிக் வேதகாலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

திராவிடம் என்பதற்கு ஆதாரம் - 4

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள். இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ. அண்டு எம்.எல். ராமசாமி அய்ங்கார் எம்.ஏ. ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில், இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள். இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தில் 105-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவைகளில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதன குடிகள்.
இது “New Age Encyclopedia,  (நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா Vol. II 1925)  பக்கம் 237-இல் இருக்கிறது.

ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல். இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் பத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது. இது இ.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம் என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

பாரதத்தில் இடும்பி என்று ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால், ராட்சசி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கின்ற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பானின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும். இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும் என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கம்.

ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும். இது பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

இந்திய அய்ரோப்பியர்களால் அதாவது ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது. இது பால்மாசின் அவர்செல் எழுதிய  புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக