வெள்ளி, 11 டிசம்பர், 2020

சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை பண்பாடு,பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள் என்று தாக்கும் போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்திய பண்பாட்டின் தொடக்கமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாடு,பன்றி போன்றவற்றின் இறைச்சியை உண்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்கும் அக்‌ஷ்யேதா சூரிய நாராயணன் என்பவர் தனது Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் ஆய்வானது ஹரப்பா மற்றும் அன்றைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து கிடைத்த பொருள்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.


 
இவரது ஆய்வில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கால்நடைகளில் 50% இருந்து 60% வரை மாடுகளாகவே இருந்துள்ளது. வெறும் 10% மட்டுமே ஆடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். சிந்து சமவெளிகளில் கிடைத்துள்ள பண்டைய எலும்புகளில் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷ்யேதா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்கள் அதிகம் மாட்டிறைச்சியை உண்டு இருக்கிறார்கள் என்றும் அதன் பின்பு ஆட்டிறைச்சியை அதிகம் உண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பன்றி, கோழி, முயல், இதர பறவைகளின் இறைச்சியையும் அவர்கள் உண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறார். இதுவரை சிந்து சமவெளி மக்கள் உண்ட பயிர்கள், தானியங்கள் பற்றிய ஆய்வுகளே அதிகம் நடந்திருக்கும் நிலையில் தற்போது அவர்கள் உண்ட அசைவ உணவுகள் பற்றிய இவரின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


 
இதற்கு முன்பு நடந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் கத்திரிக்காய், மஞ்சள், பூண்டு, இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த ஆய்வில் சிந்து சமவெளி மக்கள் ஆடு, செம்மறி ஆடு மற்றும் சீஸ் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை தயாரித்து வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இந்த ஆய்வை நடத்திய அக்‌ஷ்யேதா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு தற்போது பிரான்ஸ் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக