திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லெ!
ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்னும் சொல்லால் தங்களை அழைத்து, ஆரியப் பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்னும் சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.
தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரியப் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பைச் சிதைத்து விடுகின்றனர்.
தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரியப் பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இனக் கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?
ம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரியப் பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடிய அவர்கள்தான் திராவிடத்தை எதிர்க்கின்றனர்.
“பெரியார் ஈ.வெ.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் - பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும்’’ என்றார் ம.பொ.சி. (‘தமிழன் குரல்’ அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)
ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.
திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரியப் பார்ப்பனர்களை அறவே விலக்கி, தமிழர்களைக் கட்டமைக்க, அணியமாக்கிக் காட்ட வழி சொன்னால், அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் தயாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி. வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்னும் சொல்லை நீக்கி, திராவிடர் என்னும் சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.
“என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர, தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும்.’’ (‘விடுதலை’ 21.5.1959) என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை என்று வெளிப்படையாக தன் நிலைப்பாட்டை பெரியார் விளக்கிய பின்னரும் அவர் கன்னடப் பற்றில்தான் தமிழர்களுக்கு எதிர்ப்பாய் திராவிடம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார் என்பது அயோக்கியத்தனமாகும்.
1892இல் அயோத்திதாசரும், 1894இல் இரட்டைமலை சீனுவாசன் அவர்களும் திராவிடர் என்ற சொல்லாட்சியை பெரியாருக்கு முன்னமே பயன்படுத்தியுள்ளனர். எனவே, பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லாட்சியை நுழைத்தார் என்பது தப்பான செய்தி.
1913இல் நடேசனார் திராவிடர் மாணவர் சங்கம் அமைத்தார். 1940இல் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் நீதிக்கட்சியிலிருந்து விலகியபோது திராவிட நாடு வரைவுத் திட்டத்தை பெரியார் தயார் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஆக, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களும் திராவிடத்தை ஏற்றார் என்பதே உண்மை.
திராவிடர், திராவிடம் என்னும் சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் என்கின்றனர் - தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், இது தப்பான கருத்து.
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபே என்று ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணர் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
தமிழ் தமிழ தமில த்ரமிள த்திரவிட திராவிட என்று காலங்காலமாய் திரிந்து உருவானது. எனவே, திராவிடம் என்பது வடசொல் அல்ல. தூய தமிழ்ச் சொல் என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். அயல்நாட்டு கால்டுவெல் கூறியதை எடுத்துக்கொண்டு இது சமஸ்கிருதச் சொல் என்பது தப்பான கருத்தாகும்.
தமிழ் என்பது ஒவ்வொரு காலத்திலும் எப்படித் திரிந்து திராவிடம் ஆனது என்பதற்கு வரலாற்றுச் சான்று உள்ளது.
மகாவம்சம் என்னும் பாலி இலக்கியத்தில் வரும் தமிள(Damila) எனும் சொல் தமிழைக் குறிக்கிறது.
ஸ்வேதாம்பர சைனர் எனும் பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்னும் சொல் காணப்படுகிறது.
‘த்ரமிள’ எனும் சொல் வட இந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி.597-608இல் செதுக்கப்பட்டவை. இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.
‘த்ராவிள’ எனும் சொல் சைனக் கணங்கள் என்னும் நூலிலும் காணப்படுகிறது.
கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிபிடகா எனும் புத்த வாய்மொழி இலக்கிய மூலம் இந்தியாவில் அந்தக் காலத்தில் மூன்று முக்கிய மொழிகள் இருந்ததாகவும் அவை மாகதி, அந்தகா, தமிள ஆகியவை ஆகும் என்று அறிகிறோம். இங்கு ‘அந்தகா’ ஆந்திரத்தையும், ‘தமிள’ தமிழையும் குறிக்கின்றன.
திரிபிடகா இலக்கியத்துக்கு கி.பி.5ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய தம்ம பாலாவும் அந்தக் காலத்தில் மாகதி, அந்தகா, தமிள ஆகிய மூன்றும்தாம் முக்கிய மொழிகளாக இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
தமிழ் ஆழ்வார்களின் பாடல்களில் திராவிட வேதம் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட நந்திவர்மன் தமிழ் மன்னர்களைத் திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
ஸ்டென் கொனோவ் எனும் மொழியியல் வல்லுநர் தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிட என்னும் சொல் தோன்றியதாகக் கருதுகிறார். ஏ.எல்.பாஷம் என்பவர் தமிழ் என்னும் சொல் தமிழ், தமிழ, தமில, த்ரமிள, த்ரமிட, த்ரவிட என்று மாறியதாகக் கூறியுள்ளார். அதேபோல் ‘திராவிட்’ என்று பார்ப்பனர்கள் தங்களை அழைத்துக் கொள்வதை வைத்து இது சமஸ்கிருதச் சொல் என்பதும் தப்பு.
திராவிடர்கள் வாழ்ந்த தென்னிந்தியப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்கள் என்பதைக் குறிக்கவே அவர்கள் தங்களை திராவிட் என்று அழைத்துக் கொண்டனர். இந்தியா முழுக்க பார்ப்பனர்கள் பரவி வாழ்ந்த நிலையில் தெற்கே தமிழர்கள் மிகையாக வாழும் திராவிடப் பகுதியில் வாழும் பார்ப்பனர் என்று தங்களை வேறுபடுத்திக் காட்டவே ‘திரவிட்’ என்று அழைத்துக் கொண்டனர். இங்கு திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கிறது; இனத்தைக் குறிப்பதல்ல.
திருஞானசம்பந்தர், திராவிட சிசு என்று அழைக்கப்பட்டதும், மணிதிராவிட் என்று ஒரு பார்ப்பனர் அழைக்கப்பட்டதும் திராவிடர் வாழும் பகுதியில் வாழ்பவர்கள் என்று குறிக்கவே ஆகும் என்பதை ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும். மேம்புல் மேய்கின்றவர்களுக்கு இவை விளங்காது. தேவநேயப் பாவாணரை ஏற்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவரின் அரிய ஆய்வுகளை ஆழமாக அறிய வேண்டும். அவர்களின் ஆரிய எதிர்ப்பையும், திராவிட இன ஒற்றுமையையும் பின்பற்ற வேண்டும். இல்லையெனின் அவர்கள் வேடதாரிகள் என்பது வெளிப்படும்!
(தொடரும்...)
¨ பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (விடுதலை, 14.2.1961)
¨ தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் அந்த ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பதுமான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாகக் கணவன், மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை. கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத் தண்டனையும் கிடையாது. (‘விடுதலை’, 15.4.1961)
- உண்மை இதழ் 1- 15. 3 .21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக