செவ்வாய், 7 நவம்பர், 2023

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? கவிஞர் கலி.பூங்குன்றன்

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

5

ஆரியராவது - திராவிடராவது - எல்லாம் வெள் ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று பார்ப்பனர்கள் சொல்லி வந்தார்கள்.

"நாங்கள் ஆரியர்கள் - பிராமணோத்தமர்கள்!" என்று பூணூலை முறுக்கிக் காட்டிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.

திராவிடர் இயக்கம் தோன்றிய பிறகு - தந்தை பெரியார் என்ற மகத்தான சமூகப் புரட்சித் தலைவரின் சகாப்தம் தோன்றிய நிலையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தால் ஆரியம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. தம் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி களை வெட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

அந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்ட நெருக்கடியில் ஆரியம் பம்முகிறது.

ஆரியராவது - திராவிடராவது என்று “கோரஸ்" பாட ஆரம்பித்து விட்டனர். இந்தப் பஜனைக் கூட்டத் தில், ஆர்.எஸ்.எஸில் பயிற்சிப் பெற்ற ஆளுநர் இரவி யும் சேர்ந்து கொண்டு விட்டார்.

ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் கிடையாது என்று பேச ஆரம்பித்துவிட்டார் - ஆம், அவரைப் பேச வைக்கும் நிலையை - தாக்கத்தை உண்டு பண்ணியது திராவிடம் இயக்கம்.

ஏதோ, ஆரியர், திராவிடர் என்பதை திராவிட இயக்கம் உருவாக்கியது போல உளற ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? வரலாறு என்ன பேசுகிறது?

உலகில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருப்பது போலவே இந்தியத் துணைக் கண்டத்திலும் பல இனங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமான இனங்கள் ஆரியர்-திராவிடர் என்ப தாகும்.

திராவிட எனும் சொல்லைப் பரவலாக்கியவர் கால்டுவெல், மனுதர்ம சாத்திரத்திலே (கி.மு. முதல் நூற்றாண்டு) ஜாதி விலக்கம் செய்யப்பட்டவர்களை பற்றிச் சொல்ல வரும்போது 'திராவிட' என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது (மனுதர்ம சாஸ்திரம், 43,44) கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் 'திராவிட பாஷா' என்று தமிழ் முதலாய மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். (ச.அகத்தியலிங்கம் “திராவிட மொழிகள்", பக்கம் 22)

திராவிடர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள் (டி.ஆர். சேசையங்காரின் "திராவிட இந்தியா” மொழிபெயர்ப்பு முனைவர் க.ப.அறவாணன் பக்கம் 43) என்றும், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும், அப்படிக் குடியேறியவர்களாகிய ஆரியர்களுக்கும், பூர்வீகக் குடிகளான திராவிடர்களுக்கும் இடையே பகை உணர்வுகள் இருந்தன என்றும் ஆரியர்களின் வேதநூல்களிலும் இராமாயணம் முதலியவற்றிலும் இது பிரதிபலிக்கின்றது என்பதற்கு எண்ணிடலங்கா ஆதாரங்கள் உள்ளன. 

6

அவற்றில் சில மட்டும் இங்கே:

* "தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது".

ரோமேஷ் சந்திரதத் C.I.E.I.C.S,

"புராதன இந்தியா" (52-ஆம் பக்கம்.)

* "திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்தில் அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ., "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்'' நூல் (பக்கம் 22)

 "ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.

பி. சிதம்பரம் பிள்ளை, "திராவிடரும் ஆரியரும்" 

(24-ஆம் பக்கம்)

* ''ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப் பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்."

ரோமேஷ் சந்திரதத் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரிகம்" 139-141ஆம் பக்கங்கள்).

* "தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''.

"சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' 'ராமாயணம்' (587-589ஆம்  பக்கங்கள்)

* "ஆரியன் என்கின்ற சொல் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல்".

* "ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்) கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகை மையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காண லாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்".

டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., "இந்து நாகரிகம்" (69ஆம் பக்கம்.)

* "ராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன்- ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' என்று அதேநூலில் (பக். 141) கூறுகிறார்.

* "தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை."

சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியில் (பக்கம் 67இல்) குறிப்பிட்டுள்ளார்.

* ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரிய ரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தது.

இது பண்டர்காரின் கட்டுரைகள், (வால்யூம் 3, பக்கம் 10) கூறும் செய்தி.

* "தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்” என்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி., தனது "தென் இந்தியாவும் இந்திய கலையும்'' எனும் நூலில் (3ஆம் பக்கம்.)

*"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்” என ஷோஷி சந்தர்தத் "இந்தியா அன்றும் இன்றும்" எனும் நூலில் குறிப்பிடுகிறார் (15ஆம் பக்கம்)

'ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

7

'ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழு தினார்கள்" என சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ, ஆகிய வரலாற்றாசிரி யர்கள் "இந்திய வரலாறு முதல் பகுதி" என்னும் நூலில் "இந்து இந்தியா” என்னும் தலைப்பில் (16, 17ஆம் பக்கங்கள்) எழுதியுள்ளனர்.

'ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்" என்கிறார் எச்.ஜி. வெல்ஸ்.

எச்.ஜி. வெல்சின் "உலகத்தின் சிறிய வரலாறு' என்னும் நூல் (105ஆம் பக்கம்)

* "சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்".

*  “விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத் தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப் பட்டது”.

(ஈ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் வரலாறு” 32ஆம் பக்கம்.)

* "பாரத - ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப் தெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியே யாகும்” என்கிறார் ஜி.எச்.ராபின்சன் "இந்தியா” 155ஆம் பக்கம்).

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை” என்று தமிழ்ப் பேராசிரியர் கே. என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு” (4ஆம் பக்கம்) நூலில் ஆரியர்களால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கூறுகிறார்.

8

“பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்" என்று கடுமையாகவே, நாகேந்திரநாத்கோஷின் "இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்" (194ஆம் பக்கம்.) எனும் நூலில் காண்கிறோம்.

இவ்வளவு கருத்துகளையும் தந்தை பெரியார் அவர்கள், “ஆரியர் - திராவிடர்” எனும் நூலில் இவ்விதம் தொகுத்துக் கூறியுள்ளார். ஆரியர்களின் பூர்விகம் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

* ஆரியர்கள் காஸ்பியன் கடலுக்குப் பக்கத்தி லுள்ள வடமேற்குப் பிரதேசங்களிலிருந்து இந்தியாவில் புகுந்ததாகப் பெரும்பாலான பண்டிதர்கள் கூறு கிறார்கள். இதை பால கங்காதர திலகர் வடதுருவப் பிரதேசமான ஆர்க்டிக் மகா சமுத்திரத்தை அடுத்த ஒரு நாட்டிலிருந்து ஆரியர்கள் அய்ரோப்பா முழுவதும் பரவி கடைசியில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். 

9

ஆரியர்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவுக்கு வந்து பூர்வகுடிகளைக் கொடுமைப் படுத்தி அடிமைகொண்டுவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை. சுதந்திரமிழந்த ஆதி இந்தியர்கள் ஆரியர் களுக்கு அடிமைகளாக இருந்திட விரும்பவில்லை. எனவே அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் குடி புகுந்து வாழத் தொடங்கினர். அவ்வாறு சென்றவர் களுக்கு ஆரியர்கள் ராட்சஸர் என்று பெயர் சூட்டினர் என்பதே வரலாறு கூறும் உண்மை.

குடிபுகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளைவிட அழகிய வெள்ளை நிறமுடையவர்களாயிருந்தார்கள். எனவே வெள்ளை நிறமுடைய ஆரியர், மாநிறமான கறுப்பர்களான ஆதி இந்தியர்களைவிட உயர்ந்த வர்கள் என எண்ணம் ஏற்பட்டது.

அன்று முதற்கொண்டே வர்ண பேதக்கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக்கொடுமையினால் இந்தியாவைப் போல் துயரப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்றே சொல்லலாம்.

ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்த போதே அவர்களுக்குக் “கறுப்பர்கள்” என்ற இழிபெயரைச் சூட்டினர். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரனாகப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கண்டித்துக் கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி, மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான் (ரிக் வேதம், முதல் மண்டலம், 30 ஆவது மந்திரம், 8ஆவது ஸ்லோகம்) என ரிக்வேதம் கூறுகிறது.

ஆரியர்களுக்கும், ஆதி இந்தியர்களுக்கும் நடை பெற்ற போரைப் பற்றியும், ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும், வேதங்களில் பல குறிப்பு கள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப் புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதை அறிய ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை நாளை காண்போம்.

(தொடரும்)

9

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா? (2)

நேற்றைய (28.10.2023) தொடர்ச்சி....

எடுத்துக்காட்டு; ஒன்று

ஓ உலகம் போற்றும் இந்திரனே! ஸீஷ் ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது படை களையும் உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய். (ரிக்வேதம் மண்டலம் 1 மந்திரம் 53, ஸ்லோகம் 9, அதர்வணவேதம் காண்டம் XX  மந்திரம் 21, ஸ்லோகம் 9)

- - - - -

எடுத்துக்காட்டு: இரண்டு

ஓ இந்திரனே! பிப்ரூ, மிருஷய அசுர அரசர்களை ஆரிய மன்னனான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப் பதுபோல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக்வேதம் மண்டலம் IV மந்திரம் 16, ஸ்லோகம் 13)

- - - - -

8

எடுத்துக்காட்டு: மூன்று

ஆரிய அரசன் தாவிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ இந்திரனே எமனுலகு அனுப்பினாய்!

இப்படி ஏராளம் உண்டு. (ரிக்வேதம் மண்டலம் IV  மந்திரம் 3 ஸ்லோகம் 21)

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரி கமே என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அய்ராவதம் மகாதேவன் முதல் பலரும் அறுதியிட்டுள்ளனர். (தினமணி, 2.5.2006)

இந்நிலையில் இந்தியாவின் பண்டைய நாகரிக மானது - முதல் நாகரிகமானது சிந்துவெளி நாகரிகம் ஆகும்.

அந்த நாகரிகத்தை ஆரியர்கள் எப்படியெல்லாம் சிதைத்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. 

சிந்துசமவெளி திராவிடர்கள் அணைக்கட்டுகளைக் கட்டி விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்தனர். 

அணையைக் காவல் காத்த விருத்திரன் என்ப வனை இந்திரன் என்னும் ஆரியத் தலைவன் கொன்று அணையை  திறந்துவிட்டான் என்கிறது ரிக்வேதம். 

(பி.இராமநாதன், எம்.ஏ, பி.எல், எழுதிய "சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் சிதைத்தது எவ்வாறு?" செந்தமிழ்ச்செல்வி 1986 மார்ச்) எனத் தனிக் கட்டு ரையே தீட்டியுள்ளார்.

தந்தை பெரியார் 1972இல் (9.2.1972) ‘விடுதலை'யில் எழுதிய தலையங்கம் ஒன்றில் ஆரியர்களின் நிலை குறித்துத் தெற்றென விளக்கும் கருத்து ஆராய்ச்சி அறிஞர்களாலேயே மறுக்க இயலாததாக உள்ளது. 

இந்தியாவில் ஆரியர்கள் நுழைந்த காலம் காட்டு மிராண்டிக் காலம் என்றபோதிலும் திராவிடர்களைவிட ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்துள்ளனர் என்பது அவர்களுடைய கற்பனைக் கருத்துகள், புனைந்த கதைகள், பின்னர் அவர்களைத் தழுவிவந்த நூல்களின் அடிப்படையில் இருந்துள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

அதேவேளையில் திராவிடர் நிலையை அறிய பவுத்த ஆட்சி, பவுத்தக் கருத்துகள் சான்றாக விளங்கு கின்றன எனக் கூறுகிறார்.

இராம-இராவணப் போரைத் தந்தை பெரியார் ஆரியர் - திராவிடர் போர் எனக் காட்டுகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக இராவணன் பார்ப் பனர்கள் செய்த வேள்வியை, உயிர்க் கொலையைக் கொலைச் செயல்களைத் தடுத்தமையால்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டியிருப்பதை எடுத்துக்காட்டு கிறார்.

ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதனைப் பொருத்தமாக தந்தை பெரியார் எடுத்துக் கூறுகிறார்.

10

"அவர்கள் வாழ்ந்த தன்மை அக்காலங்களில் காட்டுமிராண்டித் தன்மையதாய் இருந்தது என்பதற்கு அவர்கள் எழுதிய உலக சிருஷ்டி முறைகள். அவர்கள் குறிப்பிடும் காலங்கள், அக்காலத் தேவர்கள், கடவுளர்கள், அவர்களது யாக முறைகள், புணர்ச்சி முறைகள், நீதி முறைகள் முதலியவைகளும் மற்றும் அவர்கள் கற்பித்துக்கொண்ட தேவர்கள், கடவுளர்கள், ரிஷிகள் முதலியவர்களின் பிறப்பு முறை, செய்கை முறை, ஆயுள் முறை, வாழ்க்கை முறை, நீதிமுறை, புணர்ச்சி முறை முதலியவைகளில் எது - இன்றைக்கு அவர்களாலேயே ஒப்புக்கொள்ளத் தக்கதாய் மனிதத் தன்மையுடையதாய் நடப்புக்கு ஏற்றதாய் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.

11

இறுதியாகப் பெரியார் தம் பாணியிலேயே "மனிதப் பிறப்பு எப்படியோ நாசமாய்ப் போனாலும் இவர்கள் கூறும் கடவுள்கள் - கந்தன், கணபதி முதலியவர்கள் பிறப்பும் அவதாரக் கதைகளும், பகுத்தறிவுள்ள மனிதன் என்பவனால் சிந்திக்கத் தக்கவையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்" என்கிறார்.

டி.ஆர். சேஷையங்கார் என்பார் எழுதிய “DRAVIDIAN INDIA"  எனும் ஆங்கில நூலை தமிழில் முனைவர் க. ப. அறவாணன் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் ஆரியர்-திராவிடர் குறித்த பல அரிய செய்திகளை அளிக்கிறது. அதில் திராவிடக் கட்டடக் கலையைப் பாராட்டுகிறார். ஆரியருக்குக் கட்டடம் கட்டும் திறன் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இந் தியப் பண்பாட்டில் திராவிட செல்வாக்குத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. சுமேரியரும் திராவிடரும் வெற்றிக்கு வகை செய்யும் குதிரைகள் போன்ற வேகமான விலங்குகளைப் பெற்றிருக்க வில்லை. பண்பாட்டில் நாகரிகத்தில் செல்வத்தில் ஆரியரைவிடப் பல மடங்கு உயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர் என்கிறார். 

ஆரிய - திராவிட நாகரிகக் கலப்பிற்கான காரண மாகத் திராவிடர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டு கிறார். இந்தியப் பூர்வீகக் குடிகள் ஆரிய நாகரிகத்திற்கே அடிப்படைப் பொருள்களை வழங்கினர் எனும் கென்னடி என்ற ஆரியர் கருத்தையும் சேஷயங்கார் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இத்தகு கருத்துகளின் அடிப்படையில் திராவிடர்- தமிழர் குறித்த தந்தை பெரியாரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

திராவிடரும் தமிழரும் ஒன்றே!

திராவிடர் -தமிழர் என்று சொல்லப்பட்டாலும் வார்த்தை வேறுபாடுகளே தவிர இன வேறு பாடல்ல. திராவிடத்திலிருந்து தமிழ் வந்தது என்றும், தமிழி லிருந்து திராவிடம் வந்தது என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுவதுண்டு.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை திரு இடம் என்பது தான் திராவிடம் என்று ஆயிற்று என்று கூறுகிறார்.

(17.11.1942 இல் திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழம் என்பது-த்ரமிள (ம்) த்ரவிட (ம்)- த்ராவிட (ம்) என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும் என்கிறார் திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவணார் (ஒப்பியல் மொழி நூல் 2000 ஆண்டு பதிப்பு - பக்கம் 28)

இன்றைய பார்ப்பனர்கள் வேறு- ஆரியர்கள் வேறு என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் நடைமுறை உண்மைக்கு மாறான கருத்து இது.

மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். (ஆதாரம் ‘வேளாளர் நாகரிகம்' நூலில் கட்டுரையின் தலைப்பு "ஆரியப் பார்ப்பனர் தமிழையும் சிவத்தையும் இகழ்தல்")

"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டங்கள்" என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனி நூலே எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் ஆச்சாரியாருக்கும் பதில் கூறும் விதமாக பொருத்தமான விளக்கம் தருகிறார்.

பார்ப்பனர்களை நான் ஆரியர் என்று குறிப்பிட்டு வருவதில் ஒரு பெரிய ஓட்டையைக் கண்டு பிடித்து விட்டதாகக் கருதிக் கொண்டு நமக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) முட்டாள் பட்டத்தையோ, பைத்தியகாரப் பட்டத்தையோ கட்டி வந்தாலும், ஆச்சாரியார் இந்த ஓட்டையை வேண்டுமென்றே கற்பித்து மக்களை மயக்கப் பேசுகிறார் என்றேதான் கருகிறேன். 

ஏனெனில், பார்ப்பனர் ஆரிய இனத்தின் கலப்பு என்று ஆச்சாரியார் கூறுவதை நாம் ஒப்புக்கொண் டாலும், திராவிடர்களும் ஓர் அளவுக்காவது அதுபோல் இருக்கலாம் என்றாலும் நாம் ஆரியர்- திராவிடர் (அல்லது தமிழர்) என்பதன் கருத்தும் உண்மையும் என்ன என்பதை பலமுறை வெளியாக்கி இருக்கிறோம்.

அதாவது, பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர் கள்  ஆவார்கள். அதுவும் தங்களை தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களை தாழ்த்திக் கொள்ளுகிறவர்கள். இதனாலேயே இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால் நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல் லர், வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண் களுக்கும் அய்ரோப்பிய ஆண்களுக்கும் பிறந்தவர் கள், அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாய் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை அதாவது பழக்க வழக்கம் மனப் பான்மை ஆகியவற்றைக் கையாண்டு தங்களை சட் டைக்காரர்-இந்தோ-அய்ரோப்பியன் என சொல்லிக் கொண்டு வெள்ளையன் காலத்தில் உயர் வாழ்வு, உயர்ந்த சலுகைப் பெற்று, துரை என்னும் பெயரால் தொப்பி போட்டுக்கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியார், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக்கொண்டு, ஆரிய சின்னமாகிய பூணூலை தரித்துக்கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு, ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மை யைக் கொண்டு தனிச் சலுகை, தனி உரிமை முதலியவைகளை அனுபவித்துக்கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். (“ராஜாஜியின் பேயாட்டம்” எனும் தலைப்பில் பெரியார்- விடுதலை 21.6.1956)

இதே கருத்தை அண்ணா அவர்களும் இவ்வாறு கூறுகிறார்.

தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர். தமிழர் என்றால், தமிழ் மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, வழி, விழி மூன்றிலும் தமிழர்! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர, மொழியிலே மட்டுமல்ல!

(-அறிஞர் அண்ணா விடுதலைப் போர் பக்கம்-30) 

ஆரியராவது, திராவிடராவது என்று தங்களுக்கு நெருக்கடி வரும் பொழுது தட்டிக்கழிப்பார்கள். இது வெள்ளைக்காரன்கட்டி விட்ட கைச்சரக்கு என்று கேலி கூடப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அவர் கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் முக்கியமானவரான கோல்வால்கர் -  BUNCH OF THOUTHTS  எனும் தமது நூலில் என்ன கூறுகிறார்?

"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள், இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதி களை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவைகள் நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக்கொண்டு வந்தது நாம்தான்! அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்த னர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதை யும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில்-நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்ற வர்கள் எல்லாம் மிலேச்சர்கள்.

(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to maknkind. Then the rest of humanity was just bipeds and no distinctive name was given to us. Sometimes in trying to distinguish our people from others, we ere called the enlightened- the Aryas-and the rest the melacher.

- (From Bunch of Thoughts)

இன்றைய நிலை

டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து “திரவிடியன் என்சைக்ளோபீடியா' என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள 'திரவிடியன்' என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து 'திராவிடம்' என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து 'திராவிடம்' என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான DLA News' இல் காணப்படுகிறது.

ஒரு ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடியவர். ஒரு  வரலாற்றுப் பெயரை மறைக்க விரும்புவதை இங்குக் கவனிக்க வேண்டும்.

"திராவிடியன் என் சைக்ளோ பீடியா" எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் அதே நேரத்தில் ஆரியர்கள்தான் அறி வாளிகள், மற்றவர்கள் மிலேச்சர்கள் என்று அவர் சாந்திருக்கும் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதியுள்ளது குறித்து அவர்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி நீச்சல்தான்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை திராவிடர்கள் என்றோ தமிழர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு அந்த உணர்வு என்பது கிடையாது.

எடுத்துக்காட்டாக தமிழ் செம்மொழியாக அங்கீ கரிக்கப்பட்ட நிலையயில்,

அது பற்றி 'தினமலர்' வாரமலர் (13.6.2009) என்ன எழுதிற்று? தமிழ்மொழியை செம்மொழி ஆக்கினால் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கப் போகிறது பாருங்கள் என்று ஏகடியம் செய்தது கவனிக்கத்தகுந்ததாகும்.

"பெங்களுரூ திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமா, இல்லையா - அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?'

(தினமலர் 18.8.2009 பக்.10) என்று கிண்டல் செய்வதையும் கவனிக்க வேண்டும்)

யதார்த்தமான இந்த நிலையின் அடிப்படையில் தான் இந்த நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றியது. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது ஒரு ஆதிக்கத்தை எதிர்த்தே பெரும்பாலான மக்களுக்காக உரிமைகளை, சுயமரியாதையை, சமத்துவத்தை நிலைநாட்டவே யாகும். அது ஒரு காலத்திலும் தனிப்பட்ட பார்ப்பன பகைமையாக இருந்ததில்லை.

தேர்தலில்கூட வெளிப்படையாக பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையில் களம் அமைவதை நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 

இங்கு நடைபெறுவது வெறும் அரசியல் போராட் டமல்ல. ஆரியர்-திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு ('விடுதலை' 22.5.1967)

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட் டின் நிலை என்று சி.ராஜகோபாலச்சாரியார் (18.9.1953 அன்று சென்னை திருவொற்றியூரில் உரையாற்ற வில்லையா?

இந்தியத் தேசிய கீதத்திலும் 'திராவிட' இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் வாழ்த்திலும் 'ஆரியம்' இடம்பெற்று இருக்கிறது. வரலாறு வரலாறு தானே - மறைக்க முடியுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக