புதன், 25 செப்டம்பர், 2024

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா-தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம்!

 


விடுதலை நாளேடு

திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை மக்கள் உணரவேண்டும்!

இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல – ஒரு பண்பாட்டு இயக்கம்!
சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு
தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்!

சென்னை, செப்.25 தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம்! திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை மக்கள் உணரவேண்டும்! இப்படிக் கூறுவதால்,இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை – பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.9.2024) மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

சர் ஜான் மார்ஷல் படத்திறப்பு
சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மைகளை, சிறப்புகளை வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் என பிரகடனப்படுத்திய சர். ஜான் மார்ஷல் அவர்களின் உருவப்படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். நூற்றாண்டு தொடக்க விழா வில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், வரலாற்றுப் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்
நூற்றாண்டு நிகழ்வில், சிந்துவெளி ஆய்வாளரும், ஒடிசா மாநில மேனாள் மதியுரைஞருமான முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ்.) தமது உரையினை வழங்கினார்.
அடுத்து இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரையாற்றினார். மூன்றாவதாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான அ.கருணானந்தன் உரையாற்றினார்.
நிகழ்ச்சி நிறைவில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி நடத்துதலை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

ஆசிரியரி்ன் தலைமையுரை
வேத கால நாகரிகமான ஆரிய நாகரிகம்தான் சிறந்தது, தொன்மையானது என்று கற்பிதம் செய்யப்பட்ட நிலையில், மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் 1920–களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்பிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முந்தைய காலக் கட்ட நாகரிகம் அந்தப் பகுதியில் நிலவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் என்பதை பிரகடனம் செய்த சர். ஜான் மார்ஷல் அதுவரை நிலவி வந்த கருத்துகளை உடைத்தெறிந்தார். அந்தப் புதிய நகர நாகரிகம் ஆரியரல்லாத நாகரிகம் என தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மை மக்களது நாகரிகம், சிறுபான்மை மக்கள் அல்லாதார் பெயரில் அடையாளப்படுவது சரியல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘‘சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே’’ எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்குப் பரவலாகவும் அது அறியப்படுகிறது. திராவிடம் எனும் பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகிறது என்று விமர்சிக்கும் வேத கால வரலாற்றாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திராவிடம்’எனும் நிலப்பரப்பு அன்று நிலவியதாக அசல் மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் ஆசிரியர்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்; 44 ஆவது சுலோகம்:
‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.’’
மனுதர்மம் கூறும் திராவிடம் உள்பட பல நிலப்பரப்புகளில் வாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட நாகரிகம் என சிந்துவெளி நாகரிகம் அறியப்பட அரும்பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம். இந்த நிகழ்வு தொடக்கம்தான். தமிழ்நாடு முழுவதும் தெருத் தெருவாக சர். ஜான் மார்ஷல் பேசப்படுவார். திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை அந்த நாகரிகத்தின் வழிவந்த மக்கள் உணரவேண்டும். இப்படி கூறுவதால், இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம். (It is not a Sectarian Movement; but a cultural Movement) – இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தொடக்கவுரை பேராசிரியர் பெ.ஜெகதீசன்
பேராசிரியர் பெ.ஜெகதீசன் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டதாவது: சர். ஜான் மார்ஷலுக்கு முன்பு வரலாற்றை கட்டியமைத்தவர்கள் ஆரியம் கலந்த நிலையினைத் தான் உருவாக்கினர். இத்தகைய போக்கிற்கு வித்திட்டவர் வில்லியம் ஜோன்ஸ்
வரலாற்று துறை அறிஞர் ஏ.எல்.பாதம் போன்றவர்கள் சமஸ்கிருத ஆதிக்க போக்கிற்கு எதிராக உண்மைக் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பொருளாதாரப் பேராசிரியராக விளங்கிய கில்பர்ட் ஸ்கேட்டர் இந்தியாவின் தென்பகுதி பற்றி ஆய்வு செய்தி திராவிடத்தின் சிறப்பு பற்றி பதிவு செய்துள்ளார். அத்தகைய அறிஞர் பெருமக்களின் ஆய்வுப் பாரம்பரியம் தேடப்பட்டு திராவிட நாகரிகம் பற்றிய உண்மைகள் கருத்தாக்கங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பெ.ஜகதீசன் பேசினார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அகழாய்வு களின் நோக்கம், தொன்மையான பொருள்கள் கிடைக்கும் அதை இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று கலைக்கூடத்தில் வைப்பதாகத்தான் இருந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வும் அதே நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக கர்சன் பிரபு பொறுப்பேற்கிறார். அகழாய்வில் அக்கறை கொண்டு சிந்துவெளி அகழாய்விற்கு பொறுப்பாளராக வின்ஸ்டன் ஸ்மித் எனும் நிர்வாக அதிகாரியை இங்கிலாந்து அரசாங்கம் பணித்திட, தொல்லியல் அனுபவம் மிக்கவர்கள் அந்த பணியினைச் சரியாக செய்திட முடியும் எனக் கருதி 26 வயது நிரம்பிய, திருமணமாகி 26ஆவது நாளில் சிந்து சமவெளி அகழாய்வுப் பணிக்கு 1920 ஆண்டில் கர்சன் பிரபு நியமிக்கின்றார்.

எந்தவித முன் தீர்மானம் இன்றி, இந்தியாவைப் பற்றி முன் கருத்து எதுவுமின்றி ஆய்வினை மேற்கொண்டதால் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்புகளை சர். ஜான் மார்ஷல் கொண்டு வர முடிந்தது.
சிந்து வெளி நாகரிகம் உழவுத் தொழில் நாகரிகம் – உபரி உற்பத்தி நிச்சயம் கிடைக்கும். அதனால் வணிகம் செய்து வளமை அடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதற்கான தடயங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ் சங்க இலக்கியக் குறிப்புகளும் – தடயங்கள், ஊர் பெயர்கள் சிந்து சமவெளியில் கிடைக்கின்றன. சிந்து சமவெளியில் பசு என்பது கிடையாது. எருமைதான் இருந்தது. குதிரையைக் கொண்டு எருதினை மாற்றிடும் முயற்சிகள் நடைபெற்றன – வெற்றியடைய முடியவில்லை. அந்த கால ஆரிய குறிப்புகளில் இவை எதுவும் கிடையாது. வேத காலத்திற்கு ஆதாரமான சமஸ்கிருத மொழி என்பது கி.மு. 1500இல்தான் வந்தது என ஆரிய நாகரிக போற்றுநர் மேக்ஸ் முல்லர் கூறுகிறார்.
நகரங்களைக் குறிப்பிட்டு பெயர்களை விளித்திடும் ‘தொண்டி அன்னல்’ என்ற குறிப்பும் திராவிட நாகரிகம் நகர நாகரிகம்தான் என்பதை உறுதி செய்திடும்.
இவ்வாறு ஆர்.பாலகிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொல்லியல் அறிஞர்
கி.அமர்நாத் ராமகிருஷ்ணா
இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டதாவது:
சிந்து சமவெளி – மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய் வினை சார்லஸ் மேசன் (Charles Meason) தொடங்கிய நிலையில் அந்த அகழாய்வு குறித்து வித்தியமானது என்று கூறுகிறார்.
அதற்குமேல் அவர் ஆய்வு செய்திடவில்லை. அலெக்ஸாண்டர் கர்னிங் பிரபு (Alexander Curning Prabu) பவுத்த ஸ்தலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து வெளியின் சிறப்பு, முக்கியத்துவம், தனித்துவம் பற்றி வெளிக் கொணர்ந்தவர் சர். ஜான் மார்ஷல். மொகஞ்சதாரோ – ஹரப்பா இடங்களுக்குள்ள இடைவெளி 600 மைல்.ஆனால் அந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை, பெரிதாக அன்று பேசப்பட்ட வேதகால நாகரிகக் குறிப்புகள் எதுவும் அங்கில்லை. சுமேரிய – மெசபடோமிய நாகரிகங்கள் இடையின நாகரிகம் என சிந்து நாகரிகங்கள் அகாழய்வு முடிவுகளில் அறியப்பட்டது. வேதகால நாகரிகத்திற்குள் நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள்தான் வளமை, நாகரிக முன்றேற்றம் காண முடியும். சிந்து சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகள் நிலையாக வாழ்ந்தவர்களான தமிழ் நகர நாகரிகத்தினர்.
கீழடி அகழாய்விலும் நமது நாகரிகங்கள் கண்டுடிக்கப் பட்டன. 13 லட்சம் ச.கி. மீட்டரில் ஆய்வுகளில் சிந்து சமவெளி பரவி இருந்தது. தொல்லியல் முடிவுகள், முக்கிய ஆதாரங்களைக் கொண்டு இலக்கியக் குறிப்புகளின் துணையுடன் மேலும் ஆய்வு முடிவுகள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

பேராசிரியர் அ.கருணானந்தம்
திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
வேத கால நாகரிகத்தை தூக்கிப் பிடித்திட இல்லாத வழியினை ஓடாத சரஸ்வதி நதியை வேத சரஸ்வதி நாகரிகம் என சிந்துவெளி நாகரிகத்தை திரிபு செய்திட முனைந்து வருகிறார். இதை வரலாற்று விழிப்புடன் தடுத்திட வேண்டும். சர். ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் அல்லாத (Non Aryan), ஆரியருக்கு முந்தைய (Pre Aryan) நாகரிகம் என குறிப்பிட்டார். ரிக் வேதத்தில் எந்த நாகரிகமும் குறிப்பிடப்பவில்லை. எதிரிகளை, புரங்களில் வாழ்பவர்களை குறிப்பிடுகின்றன. புரங்களில் வாழ்ந்தவர்கள் – கோட்டையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என கருதப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவுத் தொழில் செய்திட கட்டப்பட்ட தடுப்பணையை ஆரியர்கள் பூசண பாம்பு என கருதி இடிக்க முற்பட்டனர். கதை கட்டினர்.

கடல் கடந்து செல்லுதல் என்பது ஆரியத்திற்கு புறம்பானது. கடல் கடந்து வணிகம் செய்வது திராவிடம் சார்ந்தது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் முதுமொழி. ‘திராவிட’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் – இந்தியாவிற்கு மட்டும் உரியது அல்ல. கருப்பர் என்பது திராவிடர் அடையாளமே. அன்றைக்கு சிந்து சமவெளி பற்றிய மொழி அறிஞர் ஹென்றி ஹிகர்ஸ் பாதிரியார் அண்மையில் பல்கலைக்கழகத்தில் 1940களில் உரையாற்றிய பொழுது மாணவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாதிரியாரிடம் புத்தகத்தில் செய்யப்பட வேண்டிய பொழுது ‘நான் ஸ்பெயின் நாட்டு திராவிடன்’ (I am a Dravidian from Spain) என குறிப்பிட்டு கையொப்பம் இட்டாராம்.
தொடர்ந்து திராவிட நாகரிகத்தின் மேன்மை, சிறப்பு, மாற்ற முடியாத அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு க.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ‘கல்லூரி பேரிசிரியர்கள் – குறிப்பாக வரலாற்றுப் பேராசிரியர்கள், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தமிழ்நாடு மூதறிஞர் குழு உறுப்பினர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள், பொதுநல உணர்வாளர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். இரண்டரை மணி நேர நிகழ்ச்சியில் கலையாமல் கருத்தினைக் கேட்டுக் மகிழ்ந்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், கி.அமர்நாத் இராமகிருஷ்ணா ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, தந்தைபெரியார் 146ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார். முனைவர் பெ.ஜெகதீசனுக்கு கழகத்துணைத் தலைவர் பொன்னாடை அணிவித்து, விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார். பேராசிரியர் அ.கருணானந்தனுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பொன்னாடை அணிவித்து விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார்.
சிந்துவெளி ஆய்வாளர், ஒடிசா மாநில மேனாள் மதியுரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்., இந்திய தொல்லியல் துறை இயக்குநர் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை ஆற்றினார்கள். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரை ஆற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் நூலில் குறிப்பிட்டவாறு, சிறப்புரையாளர்களுக்கு வழிவிட்டு, ரத்தினச்சுருக்கமாக, அனைவரையும் வரவேற்புரையாற்றினார்.
விழா முடிவில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றியுரையாற்றினார். திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழாவில் திராவிடர் கழகம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியதென்றல், திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சான்றோர்கள் என பலரும் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ரோஜா முத்தையா ஆய்வு நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், ஊடகவியலாளர்கள் கோவி.லெனின், மணா, பேராசிரியர்கள் தேவதாஸ், நம்.சீனிவாசன், மாரப்பன், ரஷீத்கான், தமிழ்நாடு காவல்துறை மேனாள் டிஜிபீ ராமநாதன் அய்பிஎஸ்-, பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கால்நடை பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் பெரு.மதியழகன், வேண்மாள் நன்னன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், கழகப் பொறுப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சி.அமர்சிங், ஆர்.டி.வீரபத்திரன், தஞ்சை மு.அய்யனார், எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன், ஆடிட்டர் சண்முகம், வே.பாண்டு, திமுக மருத்துவர் சாய் லட்சுமிகாந்த், மருத்துவர் யாழினி, பழ.செல்வக்குமார் உள்பட ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக