திங்கள், 20 ஜூலை, 2015

ஹரப்பா கால எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

அரியானா: ஹரப்பா கால எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
ஹிசார், ஏப்.17_ அரியானா மாநிலத்தில், ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த 4 மனித எலும்புக் கூடுகள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து அந்த மாநில தொல்பொருள் ஆராய்ச்சித் துறை திட்ட இணை இயக்குநர் நீலேஷ் யாதவ் கூறியதாவது:
ஹிசார் மாவட்டத்தில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ராக்கி கரி கிராமத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை, அரியானா தொல்லியல் துறையுடன், தென் கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகமும், புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
அப்போது 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, 4 மனித எலும்புக் கூடுகளை அவர்கள் சமீபத்தில் கண்டெடுத்தனர்.
அவை இறந்த 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோரின் எலும்புக் கூடுகளாகும்.
50 வயதைச் சேர்ந்த ஆண்களின் எலும்புக் கூடுகளின் உயரம் 5 அடி 6 அங்குலமாகும். 30 வயதைச் சேர்ந்த பெண்ணின் எலும்புக் கூட்டின் உயரம் 5 அடி 4 அங்குலமாகும்.
மற்ற விவரங்கள் மரபணுப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே தெரிய வரும் என்பதால் அந்த எலும்புக் கூடுகள் பரிசோதனைக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
அகழ்வாராய்ச்சிப் பணியின் போது, மனித எலும்புக் கூடுகள் கிடைப்பது இதுவே முதல் முறை என்றார் நீலேஷ் யாதவ்.
இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் இடத்திலிருந்து வளையல்கள், சிறிய சக்கரங்கள், பொம்மைகள், தானியங்களுடன் கூடிய பானைகள் ஆகியன ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 17.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக