ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம்-நடைப் பயணம்!

சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம்-நடைப் பயணம்!

தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பு....

சென்னை, ஆக.22- திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் நம்ம சென்னை இது - ஒரு வரலாற்றுக் கொண் டாட்டம் என்கிற தலைப்பில் திராவிட உலாவின்மூலம் சென்னையில் தொண்டாற்றிய அரும்பெரும் திராவிடர் தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வாக தியாகராயர் நகரில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.டி.அரிகிருஷ்ணன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், கோவி.லெனின், கோ.கருணாநிதி,  வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பெரியார் களம் இறைவி,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத்தலைவர் தமிழ்ச் செல்வன், பேராசிரியர் இசையமுது, பிழைபொறுத்தான், தேனருவி, ப.இராமு, ராஜூ, சைதை மு.ந.மதியழகன், பரணீ தரன், இளஞ்சேரன், மயிலை குமார், திராவிடப் புரட்சி,சுரேஷ், வெற்றி, கலைமணி, மகேஷ்,  ஊடகத்துறை உடுமலை, ந.கதிரவன், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

நம்ம சென்னை, இது ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் நிகழ்வு சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் அண்ணா சிலை அருகிலிருந்து தொடக்கப்பட்டது. உஸ்மான் சாலை என்று பெயரிடப்பட்டுள்ள தலைவர் உஸ்மான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சென்னை மாநிலத் தற்காலிகஆளுநராக முதல் இந்தியராக நியமிக்கப் பட்டவர் உஸ்மான். உள்துறை அமைச்சராக பணியாற்றியவர்.  அவர் ஆற்றிய பணிகள் குறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விரிவாக எடுத்துரைத்தார்.

உஸ்மான் சாலையில் தொடங்கிய நடைப்பயணம் பனகல் பூங்கா நோக்கி சென்றது. பனகல் பூங்காவை நடைப்பயணக் குழு அடைந்தது. பனகல் பூங்காவில் பனகல் அரசரின் சிலை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ராமராய நிங்கார் என்கிற பெயருடையவரான பனகல் அரசர் காளஹஸ்தியில் ஜமீன்தார் குடும்பத்திலிருந்து சென்னைக்கு வந்து சென்னையில் பள்ளிக்கல்வி, கல்லூரியிலும் கல்வி பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடத்தில் பட்டம் பயின்றார்.

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் இருந்த சென்னை மாநிலத்தின் (ப்ரீமியராக) இரண்டாவது தலைமை அமைச்சராக இருந்தார். முதல் தலைமை அமைச்சராக இருந்தவர் சுப்பராயலு ரெட்டியார். இந்தியா முழுமைக்குமாக மகாராட்டிர மாநிலத்தில் சாகு மகராஜ் அமைத்திருந்த பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பில் இணைந்திருந்தார். அந்த பார்ப்பனர் அல்லாத அமைப்பின் மாநாட்டுத் தலைவராகவும் இருந்தார்.

நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். பனகல் அரசர் இந்திய மருத்துவத்துவக்கல்விக்கு அடிப்படை யாகத் திகழ்ந்தார். இந்து அறநிலையத் துறையை உருவாக் கியவர். திருவரங்கம் சென்ற பனகல் அரசருக்கு வரவேற்பை பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் கூறியபோது, அவரும் சமஸ் கிருதத்திலேயே பதில் கூறியுள்ளார். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீக்கியவரும் இவரே!

நடைப் பயணக்குழுவினர் பனகல் பூங்காவிலிருந்து சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கம் சென்றது. தந்தை பெரியார் காங்கிரசிலிருந்தபோது குடியரசு இதழைத் தொடங்கினார். அப்போது முதல் இதழிலேயே சர்.பிட்டி.தியாகராயர் மறைந்தாரே! என்கிற தலைப்பில் நீண்ட தலையங்கத்தை எழுதினார். சென்னையில் முதன்முதலாக பள்ளிக் குழந்தை களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சர் (ப்ரீமியர்) பதவி ஏற்கச் சொன்ன போது மறுத்தவர். சென்னை மாநக ராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றவர். 40 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி உறுப்பின ராகவும், அதன்பிறகு மேயராகவும் இருந்துள்ளார்.

மாநகராட் சியிலேயே இவருக்கும், டிஎம் நாயருக்கும் அடிக்கடி மோதல் நடக்கும். காரணம் இவர் ஆன்மிகவாதியாக இருந்ததுதான். அப்படி மயிலாப்பூர் கற்பாகாம்பாள் கோயில் விழாவுக்கு அந்தக் காலத்திலேயே ரூபாய் பத்தாயிரம் வழங்கி, அந்த விழாவுக்குச் சென்றபோது, அவரை உட்காரக்கூட சொல்ல வில்லை. ஆனால், பார்ப்பனர் என்பதால் இவருக்குக்கீழ் பணிபுரியக்கூடிய ஒரு சிப்பந்தி பார்ப்பனர் மேலே உட்கார வைத்திருந்தார்கள். அப்போதுதான் பார்ப்பனர்களைப் புரிந்துகொண்டு காரை நேரே டாக்டர் நாயர் வீட்டுக்கு விடச்சொன்னவர். அப்போது, இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். தியாகராயர் எழுதிய உயிலின்மூலம் அவரு டைய  சொத்துக்கள் முழுமையாக கல்விப் பணிக்கு பயன்படுத் தப்பட்டது.

அதுதான் பள்ளியாக இருந்து தற்போது வட சென்னையில் இருக்கக்கூடிய தியாகராயர் கல்லூரி என்று விரிவாகக் குறிப்பிட்டார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் செயலாளர் முனைவர் பேராசிரியர் மங்களமுருகேசன் சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்திலிருந்து சவுந்திர பாண்டியனார் அங்காடிக்கு நடைப் பயணக்குழு சென்றது. சவுந்திர பாண்டியனார் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர். தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவர் சவுந்திரபாண்டியன் ஆவார்.

தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவில்

சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தந்தை பெரியார் இருவரும் துணைத் தலைவர்களாக இருந்துள்ளனர். பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்டக் கழகத் தலைவராக இருந்தபோது ஆணை பிறப்பித்தவர். மதுரை திருமங்கலத்தில் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சிக் கோயிலில் நாடார்கள் நுழையக்கூடாது என்று இருந்ததை எதிர்த்தவர். விருதுநகர் மூன்றாம்  சுயமரியாதை மாநாடு நடைபெறக் காரணமாக இருந்தவர் சவுந்திரபாண்டியனார் ஆவார்.

சவுந்திரபாண்டியனார் அங்காடிப் பகுதியிலிருந்து  டாக்டர் நடேசன் பூங்காவை நடைப் பயணக்குழு அடைந்தது. அப்போதெல்லாம், உணவகங்களில் தொழு நோயாளிகளுக் கும், நாய்களுக்கும், பஞ்சமர்களுக்கும் அனுமதி இல்லை என்று போர்டு இருக்கும். அப்படி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. எடுப்பு சாப்பாடு வாங்கிச் செல்லவேண்டும். அப்படிப்பட்ட காலத்தில்   திராவிடன் விடுதி என்கிற பெயரில் படிக்கும் பார்ப் பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்குவதற்கு இலவசமாகவே விடுதியை அமைத்துக் கொடுத்தவர். நீதிக்கட்சித் தொடங்கிய வர்களில் ஒருவர் நடேசனார் ஆவார்.

நடைப்பயணக் குழு நடேசன் பூங்காவை அடுத்து செ.தெ. நாயகம் பள்ளியை அடைந்தது. தொடக்கத்தில் இந்தப் பள்ளி தியாகராயர் நகர் பள்ளி என்றே தொடங்கப்பட்டு தற்போது அவர் குடும்பத்தினரால், அவர் பெயரில் இன்றும் கல்விச் சேவை தொடருகிறது. பெரியார் மணியம்மையார் திருமணப் பதிவு தியாகராயர் நகரில் உள்ள சி.டி.நாயகம் இல்லத்தில்தான் நடந்தது.

1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி செ.தெ.நாயகம் ஆவார். அந்த பள்ளியில் பயின்று நீதிபதியாகி தற்போது ஓய்வு பெற்று, நடைப்பயணக் குழுவில் இடம்பெற்றவர் தேனாம்பேட்டை தே.அரிகிருஷ்ணன் தம்முடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சென்னையில் 1930இல் முறையாக நகரமைப்பு லேஅவுட் போட்டு அமைக்கப்பட்டது தியாகராயர் நகர்தான் என்று குறிப்பிட்டார். நடைப்பயணக் குழுவில் பங்கேற்ற சைதை மு.ந.மதியழகன் இந்தப் பள்ளியில் கல்வி பயின்றதை நினைவு கூர்ந்தார்.

குழுவினர் அடுத்து தணிகாசலம் சாலையை அடைந்தனர். சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு பணிவாய்ப்பும் வழங்கப்படக் கூடாது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவர் தணிகாசலம். அதனை வழிமொழிந்தவர் நடேசனார்.

சென்னையில் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) சாலை உள்ளது. விழி எழு வீறுகொள் என்றவர். சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் மாற்றிய்கொள்ளும். பார்ப்பான் தன் புத்தியை மாற்றிக்கொள்ள மாட்டான். எட்டி உதைத்தால் காலுக்கு முத்தமிடுவான் (If you kick; He will lick)  கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்பதை அப்படிக் கூறியுள்ளார். தணிகாசலம் சாலை என்று பெயரைக்கூட சூட்டக்கூடாது என்று சத்தியமூர்த்தி பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார்.

நடைப் பயணக்குழு தியாகராயர் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை அடைந்தது. தொடர்ந்து தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய (19.12.1973)  முத்துரங்கன் சாலையில் காவல்துறையினரின் குடியிருப்புக்கு அருகில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட அந்த கடைசிக் கூட்டம் நடந்த கூட்டத் திடலுக்குச் சென்றனர். அடைந்தனர்.

அந்தத் திடலில் தந்தை பெரியார் பேசிய பேச்சு மரண சாசனம் என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தந்தைபெரியார் இறுதியாக உரையாற்றிய அந்த திடல் மைதானத்தில் குழுவினர் தந்தை பெரியார் பணியை அவர் போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் இடம் தராமல்,  பணிமுடிப்போம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர்.

திராவிடர் தலைவர்கள் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்களை பொதுமக்களும் கேட்டுப் பயன்பெறும்படியாக கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் மங்களமுருகேசன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

நம்ம சென்னை ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் சென்னை உருவாகி 375 ஆண்டுகள் ஆவதையொட்டி சென்னையில் திராவிடர் சமுதாயத்துக்குத் தொண்டாற்றிய செம்மல்களின் நினைவைப் போற்றும்விதமாக நடைப்பயணம் களைப்பேதுமின்றி அதிகாலைப்பொழுதை மிகுந்த பயனுள்ளதாகத் தொடங்கி வைத்தது.

இதேபோன்று வடசென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளிலும் நடைப்பயணம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இது வெறும் நடைப்பயணம் அல்ல. பகுத்தறிவு இனமான நடைப்பயணம் பார்த்தவர்கள் உணர்ச்சிப்பெருக்கில் கூறுகிறார்கள்.

-விடுதலை,22.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக