செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கீழடி தொல்லியல் ஆய்வுகள் மீண்டும் தொடர்வது வரவேற்கத்தக்கதே!

தலைசிறந்த திராவிடர்களின் நகர்ப்புற நாகரிகத்தை

பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வுகள் மீண்டும் தொடர்வது வரவேற்கத்தக்கதே!

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற்காக

வள்ளுவர் கோட்டத்தை அரசியல் நோக்கோடு சீரழிக்கக் கூடாது!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் காரணமாக, கீழடியில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டது என்பதற்காக அரசியல் நோக்கத்தோடு சரிவரப் பராமரிக்காமல் சீரழிப்பது சரியானதல்ல. மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் கொந்தளிப்பை அரசு உணர்ந்து கொண்டு, சீரமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வு என்பது மிகப் பெரிய வரலாற்று உண்மைகளை உலகுக்கு - வருங்காலத்தில் தெரிவிக்கப் போகும் மிகப் பெரிய ஆய்வாகும்.

சிவகங்கை மாவட்டம் என்றாலும் இந்தப் பகுதி மதுரை திருபுவனத்துக்கு அருகில் உள்ளதொரு பகுதியாகும்.

மிகப் பெரிய திராவிடர் நாகரிகம்

முற்காலத்தில் மதுரை ஒரு பெரிய தலைநகரமாகவே இருந்தது என்பதற்குச் சான்றாவணங்கள் ஆழ்ந்து பரிசீலித்த பிறகு கிடைக்கக் கூடிய அளவிற்கு உள்ளன. வடக்கே சிந்துவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பகுதிகளில் தோண்டி எடுத்ததில் - மிக அழகிய நகர்ப்புற நாகரிகம் பழைமை வாய்ந்த சின்னங்களாக பாதாளச் சாக்கடை உட்பட அமைக்கப்பட்ட அவ்வளவு சிறந்த நகரங்கள் அத்தனை ஆண்டு காலம் முன்பே அமைந்த ஒன்று என்பதற்கு  அந்தப் பகுதிகள் சான்றுகளாக உள்ளன என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்!

மற்ற பகுதிகளில் கிராமப்புற நாகரிகங்கள்தான் என்று நிலவிய ஒரு கருத்தினை பொய்யாக்கிடக் கூடிய வகையில், கீழடி அகழ்வாய்வு - இதனை ஒரு புதையுண்ட தலை சிறந்த திராவிடர் நாகரிகம் என்பதைப் புலப்படுத்தும் வகையில் உள்ளது என்பது இதனை முழுமையாக ஆய்ந்த பின்னர் கிடைக்கும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது!

எதிர்ப்புக்குக் கிடைத்த பலன்!

அதனை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து ஏகோபித்து எழுந்த குரல் - எதிர்ப்பு  - கண்டனம் - காரணமாக, இப்போது அனுமதி வழங்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது! (12.1.2017 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது).

ஆர்.எஸ்.எஸ். பாம்பு அடிக்கடி தலையை நீட்டிப் பார்த்து "அடி விழுந்தவுடன் உள்ளே தலையை இழுத்துக் கொள்கிறது"

கீழடி அகழ்வாய்வு சம்பந்த நிகழ்வுகளிலும் இதுதான் இன்றைய நடைமுறை

இதனை தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி தன் பங்குக்கு நிதி ஒதுக்கீடு  செய்து இந்த ஆய்வுகளை விரைந்து மேற்கொள்ள மிகப் பெரிய அளவில் உதவிட வேண்டும்.

தலைநகரில் உள்ள வள்ளுவர் கோட்டத்தைச் சீரழிக்கலாமா?

அதுபோலவே வள்ளுவர் கோட்டம் மிக அருமையான ஒரு பொது அரங்கம்!

தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செய்தார் என்ற ஒரே காரணத்தால் அதனைப் பராமரிக்க முன் வராமல், அ.தி.மு.க. ஆட்சி அலட்சியம் காட்டுவது, நாட்டு மக்களிடையேயும், பொதுவான தமிழ் ஆர்வலர்களிடையேயும் மிகவும் மனக் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது என்பதை தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியினர் உணர வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் - இதே போல ஓர வஞ்சனைப் பார்வையோடு அலட்சியப்படுத்தப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை கண்டித்து இறுதியில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது!

இவை அன்றைய ஜெயலலிதா அரசிற்கு ஏற்பட்ட களங்கம்; இன்று வந்துள்ள ஆட்சி அதைத் துடைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் ஒரு அரசு (அது ஒரே கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றமாக இருந்தாலும்கூட) தொடர் அரசுதான்!

இக்கட்சி அக்கட்சி எனப் பாராது எக்கட்சியாயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு என்பதே மக்களாட்சியின் மாண்பாகும்!

உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜெயலலிதா தலைமையில் இருந்த அரசு எதிர்த்தபோது, ஓங்கி தலையில் குட்டியது போல மேற்சொன்ன உண்மையை ஜன நாயகத்தில் "ஆட்சிகளின் தொடர்ச்சி" என்பதை வலியுறுத்தியதை மறந்து விட வேண்டாம்!

உடனே செயத்தக்க செய்க! செய்க!!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21-2-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக