சனி, 15 ஏப்ரல், 2017

திராவிடர் யார்? சி.பா.ஆதித்தனார் கூறுவது சரியா?


===============================================
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், திராவிடர் யார் என்ற கேள்விக்கு திராவிடர்கள் என்போர் தெலுங்கர். தமிழர்கள் அல்லர் என்கிறார்.
1875 ஆண்டிற்கு முன் திராவிடர் என்பது தெலுங்கர்களை மட்டுமே குறிக்கிறது.

அந்த ஆண்டில் கால்டுவெல்தான் தமிழர்களையும் குறிப்பதாக அச்சொல்லை மாற்றினார்.
திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை என்ற தவறான கருத்துகளைக் கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனார் ஓர் இன, மொழி ஆய்வாளர் அல்ல. அவர் ஒரு வழக்கறிஞர். ஒரு பத்திரிகையாளர்.
நாம் தமிழர் கட்சி நடத்தியபோது அவர் கூறிய அபத்தக் கருத்துக்கள் இவை. அந்த நாம் தமிழர் ஆதித்தனார் பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்து பதவி வகித்தார் என்பதிலிருந்தே அவரது கொள்கை உறுதி தெரியுமே!

திராவிடத்தை எதிர்த்த மா.பொ.சி. பின்னாளில் திராவிடக் கட்சியில் பதவி வகித்தார். எனவே, இப்படிப்பட்டவர்களின் பினாத்தல்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்றாலும், உண்மையை அறிய ஆதித்தனார் கருத்துக்கு மறுப்பாக உண்மைத் தகவல்களை இங்குத் தெரிவித்துள்ளேன்.

கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள்
திராவிடர்கள்...

திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.
1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு.
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை,தென்மொழிகளைக் குறிக்கப்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).
கியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)  என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

சமற்கிருதம் தொடர்பாக நூல் எழுதியவர்களும், திராவிட என்ற சொல்லை இனம், மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே, (Caldwell coined the) சொல்வதைவிட, அவரே கூறுவதுபோல, “The word I have chosen is Dravidan from Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், திராவிட என்ற சொல்லை  வரையறுத்த பொருளில் பயன்படுத்தி, உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதுதான் உண்மையேயன்றி கால்டுவெல்தான் திராவிடர் என்ற சொல்லை தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தினார் என்பது தப்பான செய்தி.

திராவிடத்தை எதிர்ப்போர் யார்?
திராவிடத்தை எதிர்ப்போர் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் ஆரியர்களை அணைத்து தமிழர்களோடு சேர்க்கத் துடிப்பவர்கள்.

மேலும், திராவிடக் கட்சிகளை வீழ்த்திவிட்டு, தங்கள் பதவிக்கு வரத் துடிப்பவர்கள்.
இவர்களின் பேச்சில் மயங்கி உண்மையறியாது இளைஞர் திசைமாறினால், அது ஆரியர்கள் ஆதிக்கத்திற்கும் மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடிக்கவுமே உதவும்.
தமிழர்களே எச்சரிக்கை!

பதிவு Manjai Vasanthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக