ஹிந்துத்துவா என்ற போர்வையில் பார்ப்பனர்கள் தங்கள் ‘சித்து வேலை’களில் இறங்கியுள்ளனர். என்றைக்கும் அவர்கள் நேர்முகமாக வருவதில்லையே!
ஆனாலும், அவர்களின் வியூகங்களையெல்லாம் திராவிடர் கழகம் தவிடுப் பொடி ஆக்கியே வருகிறது.
ஆண்டாள் பிரச்சினையும் அப்படித்தான்; ஆண்டாள்பற்றி ஆய்வுரை நிகழ்த்திட கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை ஏற்பாடு செய்தவர் ‘தினமணி’ ஆசிரியர் திருவாளர் வைத்திய நாதய்யர்வாள்தான்.
அவர்தம் ஆய்வுக் கட்டுரையை ‘தினமணி’யில் முழுபக்க மும் வெளியிட்டவரும் சாட்சாத் அவர்தான். ஆண்டாளைத் தேவதாசி என்று வைரமுத்து அவர்கள் பேசியதும், எழுதியதும் இந்தத் ‘தினமணி’ ஆசிரியருக்குத் தெரியாதா?
நன்கு தெரிந்திருந்துதான் ‘தினமணி’யில் அதனை வெளியிடவும் செய்தார். தமிழ்நாட்டில் எந்தத் துரும்புக் கிடைத்தாலும், அதனைத் தூணாக்கி, தங்கள் அரசியலுக்குக் கடைக்கால் ஊன்றலாம் என்று மோப்பம் பிடித்துக் கிடக்கும் பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டம் (பெயர் பலவாக இருந்தாலும் பார்ப்பனர்கள்தான்) ‘அய்யோ’ என்ன அக்கிரமம் பாருங்கள் - அன்னை ஆண்டாளை அவமதித்து விட்டார்களே - இதனைச் சும்மா விடலாமா? இந்து மதம் என்றால் என்ன இளக்காரமா?’ என்று ஊழிக்கூத்து ஆடித் தீர்த்துவருகிறார்கள்.
இதுதான்சரியானசந்தர்ப்பம்என்றுபெரியாரும்,திரா விடர்கழகமும்,திராவிடக்கட்சிகளும்ஹிந்துமதத்தை இழிவுபடுத்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டிருக் கிறார்கள். இதனைச் சும்மா விடக்கூடாது - வைரமுத்து பகிரங்க மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்று அடித் தொண்டையால் கத்தினார்கள்.
சமூக வலைத்தளங்கள் வழியாக திராவிடர் இயக்கத் தலைவர்களையும், திராவிடர் கழகத்தையும், தி.மு.க.வையும் ஆபாசமாக வசை பாடித் தீர்க்கும் வேலையில் திமிர்த் தண்டமாக நடந்து வருகின்றனர்.
அக்ரகாரத்து அம்மாமிகள் உள்பட வீதிக்கு வந்து கவிப் பேரரசு உருவப் படத்தை செருப்பால் அடித்தார்கள்; தீயிட்டும் கொளுத்தினர்.
பார்ப்பனர்களின் இந்தச் செயல் இப்பொழுது எதிர் விளைவை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் எல்லாம் கொதி நிலைக்கு ஆளாகிவிட்டனர்; எழுத்தாளர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஓர் எழுத்தாளருக்கு தன் கருத்தினை வெளியிடக்கூட உரிமை கிடையாதா? என்ற கேள்விக் கணைகள் வெடித்துக் கிளம்பிவிட்டன.
கவிப்பேரரசுவின் படைப்புக்குக் காரணமான ‘தினமணி’ வைத்தியநாதய்யர் - தம் இனத்துக்கே உரித்தான நயவஞ்சகத் துடன் சிறீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் சன்னதிமுன் மன்னிப்புக் கோரியுள்ளார். நியாயமாக அவர் என்ன செய்திருக்கவேண்டும்?
‘‘என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு சங்கடங்கள்; என்னை மன்னித்துவிடுங்கள்!’’ என்று கவிப்பேரரசு வைர முத்து அவர்களிடம் நேரில் சென்று அல்லவா ‘தினமணி’ ஆசிரியர் மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டும்.
ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபார தத்தில்’ (26.1.2018) எழுதப்பட்ட கட்டுரை, ‘தினமணி’ ஆசிரியரைத் துரோகி என்று தூற்றுகிறது. இதன் பொருள் என்ன? பார்ப்பன இனத்தில் பிறந்திருந்தும் ஆண்டாள் அவமதிக்கப்பட்டதற்குக் காரணமாக ஒரு பார்ப்பனரே இருந்துவிட்ட காரணத்தால்தான், ‘துரோகி’ என்ற சுடு சொல் வெடித்துக் கிளம்புகிறது.
இதன் மய்யப் புள்ளியைப் பார்த்தால் பச்சையாக ஆரியர் - திராவிடர் போராட்டம் - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமாக தீப்பிடித்து எங்கும் அனல் வீச ஆரம்பித்து விட்டது.
சிறீரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில் (22.1.2018) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் அவர்களும் பங்கேற்று எழுச்சி யுரை ஆற்றியுள்ளனர். ஏரளமான பொதுமக்கள் திரண்ட அப்பொதுக்கூட்டம் இந்தப் பிரச்சினையில் எந்த அளவுக்கு இனவுணர்ச்சி எரிமலையைத் தட்டி எழுப்பியிருக்கிறது என்ப தற்கான அடையாளமாக ஆகிவிட்டது.
பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி இருப்ப தில்லை. ஒன்று செய்யப் போய் ஒன்பதை வாங்கிச் சுமக்கும் புத்தி அவர்களுடையது.
பொருத்தமாக சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறும் காலகட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் அலை அலையாக பெரியார் நூல்களைத் தேடித் தேடி வாங்கிச் சென்ற காட்சியைப் பார்க்க முடிந்தது.
ஆர்.எஸ்.எஸ். அரங்கங்களிலும், ஆன்மிக நூல் விற் பனையகங்களிலும் ஈ ஓட்டிக்கொண்டிருந்த பரிதாபக் காட்சி யைக் காண சுவையாகவே இருந்தது. இந்த இலட்சணத்தில் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் இவ்வார ‘துக்ளக்‘கில் எழுதுகிறார்.
‘‘அன்று போல இன்று இல்லை தமிழ்நாடு; கருப்புச் சட்டைக்கு அர்த்தம் இன்று நாத்திகம் இல்லை - ஆத்திகம். இப்பொழுது பெரியார் சின்னம் அல்ல- அய்யப்பன் சின்னம்‘’ என்று தன் முதுகைத் தானே தட்டிக்கொண்டு, பூணூலையும் ஒருமுறை உருவி விட்டுக்கொண்டுள்ளார்.
இது உண்மையல்ல என்பதற்கு அடையாளம்தான் புத்தகக் கண்காட்சியில் பகுத்தறிவு நூல்களைப் பெரும் அளவுக்கு மக்கள் வாங்கிச் சென்றதும், ‘விஜயபாரதங்களும்‘ ஆன்மிக நூல்களும் விற்பனையாகாமல் தூங்கி வழிந்ததும் - கடைவிரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக்கொண்டோம் என்ற பரிதாப நிலையாகும்.
ஆம்! இது பெரியார் மண்தான்; குருமூர்த்திகள் வேறு மாதிரியாகக் கணக்குப் போட்டு தங்களை ஏமாற்றிக்கொண்டால் நமக்கு ‘‘நல்லது’’தானே!
- விடுதலை நாளேடு, தலையங்கம், 24.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக