சனி, 6 ஜூலை, 2019

திராவிடமா! தமிழா!

#மணியரசம்_டோஸ்_நெ_8

"தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டுவதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம்? என்ன வரலாற்று அறிவு?
திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் காட்டினார்கள்.
சங்க இலக்கியம்,  காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.
                                      - மணியரசன்

எந்த இலக்கியத்திலும் பயன்படுத்தப் படாத தங்களுக்கு தொடர்பே இல்லாத "திராவிடர்" என்றச் சொல்லை அக்காலத்தில் தமிழர்கள் எதற்காக இழிவாக கருதவேண்டும்? ஆக இழிவாகவோ,பெருமையாகவோ எப்படியிருந்தாலும் "திராவிடர்" என்றச் சொல்  தமிழர்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. பெரியாரால் திட்டமிட்டு திணிக்கப்பட்டதல்ல!
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அய்யா மணியரசன்.
ஆனால் "அக்காலத்தில்" என்று  சொல்பவர் எக்காலத்தில் என்று குறிப்பிட்டால்தானே யாரால்,எதற்காக, எப்போது "திராவிடர்" என்றச் சொல் எப்படி இழிவாக்கப்பட்டது என்பது தெரியும்?

பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழினத்திற்கு இன்று ஈராயிரமாண்டு சங்க இலக்கியம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது.
இருக்கின்ற தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்லது அவர்களது அடிவருடிகள். இதைப் பற்றிக் கொண்டுதான் தனது ஜாதிக்கும், தனது கடவுளுக்கும், தனது வழிபாட்டு முறைக்கும், தனது நெறிக்கும் சங்க இலக்கிய சான்று தேடுகிற பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம். வேறு வழியில்லை நமக்கு!

சங்க இலக்கியத்தில் திராவிடர் இல்லை என்பதற்கும் அதே இலக்கியத்தில் என் ஜாதி இருக்கிறது, என் கடவுள் இருக்கிறது என்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு? இரண்டுமே தற்கால தமிழர் நிலையை, தமிழர் அரசியலை, தமிழர் வாழ்வியலை பற்றி எந்தவிதக் கவலையுமற்ற பழம்பெருமை தற்புகழ்ச்சிதானே?

அதற்கு முன்பாக நமக்கிருந்த இலக்கியங்கள் எங்கே போயின?
இப்போதிருக்கும் இலக்கியங்கள் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிற்கு உள்ளானவைதானே?
திராவிடர் என்கிற உணர்ச்சியை கைவிட்டதால்தானே இந்த பண்பாட்டு படையெடுப்பு நிகழ்ந்தது!
திராவிடர் என்பது கிடக்கட்டும்.வரலாற்று வழிப்பட்ட தமிழர்,தமிழ்நாடு என்பதை தமிழ் இலக்கியங்களில்  பூதக் கண்ணாடி வைத்து தேடியல்லவா எடுக்க வேண்டும்?

தமக்கான அடையாளங்கள் தம்மிடத்தில் தொகுக்கப்பட்ட வரலாறாக இல்லாத நிலையில் நாடோடிக் கதைகளில், வாய்மொழிப் பாடல்களில், தலைமுறை கடந்து வழங்கப்படும் செவிவழிச் செய்திகளில் இருந்து வரலாற்றை தேடியெடுப்பது உலகெங்கும் உள்ள நடைமுறைதான்.இந்த மண்ணிற்குள் நுழைந்த பார்ப்பனர்கள் இங்கு ஏற்கனவே இருந்தவர்களை எவ்வாறு சூழ்ச்சியாக வென்றோம் என்பதை தமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல நாடோடிக் கதைகளாக தொகுத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் வேதங்கள், இராமாயணம், பாரதம், மற்ற புராணங்கள். இதை ஏற்றுக் கொண்டு வழிமொழிந்தவைதானே நமது இலக்கியங்கள்?

வடமொழி இலக்கியங்களில் சங்க இலக்கிய குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் இராமாயணச் செய்திகள் உள்ளன.பாரதம் பாடிய பெருந்தேவனார் இருக்கிறார்.அப்படியானால் எது முன்னது? எது பின்னது? என்ற கேள்விகளுக்கு ஊகமான காலக் கணக்குகளை வைத்து பதில் தேடவேண்டிய நிலையில்தானே நாம் இருக்கிறோம்?
சங்க இலக்கியத்திற்கு முன்பான நூல்கள் கிடைக்கவில்லை என்பதனால் அதுவே முடிந்த முடிவாகி விடுமா?

பார்ப்பன பண்பாட்டு தாக்குதலில் சிக்கி தாக்குண்ட நிலையில்தான் இப்போதிருக்கும் நம் இலக்கியங்கள் இருக்கின்றன. அதற்கு எதிரான குரல் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் மெலிதாக ஒலிக்கிறது. ஆனால் நாம் தீரத்துடன் எதிர்த்து நின்ற வரலாற்றை எதிரிகள்தான் வைத்திருக்கிறார்கள் திராவிடர் என்ற பெயரில்!
பார்ப்பனர்களுக்கு பணிந்து நின்று பாதம் தாங்கிகளாக இருந்த மன்னர்களின் வரலாறுதான்
நம்மிடத்தில் இருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து நின்று உயிர் விட்ட இராவணன்,இரணியன்,தாடகையை பற்றி அவர்கள்தானே தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

பார்ப்பனர்கள் தங்களை மொழியின் பெயரால் " சமஸ்கிருதர்" என்று அடையாளப்படுத்திக் கொண்டால் நாமும் தமிழர் என்று மொழியின் பெயரால் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கே தமிழர், தெலுங்கர், வங்காளி,மலையாளி,மராட்டியர்,
கன்னடர் என பல மொழி அடையாளம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் பிராமணர்கள் மட்டும் ஒற்றை அடையாளத்துடன் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் பிராமணர்கள், ஆந்திராவில் தெலுங்கு பிராமணர்கள், வங்காளத்தில் வங்காள பிராமணர்கள்,
கர்நாடகாவில் கன்னட பிராமணர்கள்.
இப்படி அந்தந்த மாநில மொழியை தங்கள் பிராமண பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
(தமிழ்பிராமணர் என்ற வரையறையை பல தமிழ் தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.)
             
அப்படியானால் பிராமணர் என்றச் சொல்லுக்கு எதிர்ச் சொல் என்ன? பிராமணர் அல்லாதார்  என்பதா? அல்லது சூத்திரர் என்பதா? அரக்கர் என்பதா?
வேதம் படிக்கிற உரிமை பெற்றவன், பிறரை வேதம் படிக்க கூடாது என்பதை சட்டமாகவே வைத்திருந்தவன் தன்னை "வேதியன்" என்று அழைத்துக் கொள்கிறான். அப்படியானால் வேதத்தை எதிர்த்தவனுக்கு, வேதம் படிக்க தடை செய்யப்பட்டவனுக்கு என்ன பெயர்? "வேதியன் அல்லாதவர்"
"அசுரர்" என்பதுதானா?

தொன்னூறு விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் திரளுக்கு பத்து விழுக்காடு கூட இல்லாத மக்களை குறிப்பிட்டு "அவர்கள் அல்லாதார்" என்று குறிப்பிடுவதா அடையாளம்? இந்தியா முழுவதும் எந்த மொழியிலும் அதற்கு எதிர்ச் சொல் இல்லையா?திராவிடர் என்றச் சொல்லை அதிதீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர், பிராமணர், வேதியர்,பூதேவர் என்றச் சொற்கள் குறித்து என்றைக்காவது ஆய்வு செய்ததுண்டா?

மற்ற மக்களெல்லாம் தங்கள் மொழியின் பெயரால்,ஜாதியின் பெயரால் அடையாளப்படுத்தப் படும்போது இந்தியா முழுவதும் பிரமாணர் அடையாளம் மட்டும் எப்படி செல்லுபடியாகிறது?
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிராமணர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை எப்படி கிடைக்கிறது?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்டபரம்பரை ஜாதிகளில் எவருக்காவது இந்தியா முழுவதும் சத்ரியருக்கு உண்டான ஒரே மாதிரியான மரியாதை நடைமுறையில் கிடைக்குமா? இதுவரை கிடைத்திருக்கிறதா?

தமிழ்தேசியம் பேசுவோரில் சிலர் இதுவெல்லாம் வடநாட்டில் நிகழ்ந்தவை.
தமிழர்கள்  பிராமணத் தலைமையை ஏற்கவில்லை.எனவே எங்களுக்கு இது பொருந்தாது, திராவிடர் என்பது தேவையில்லை என்று தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்ளலாம்! ஆனால் உலகம் இருண்டு விடாதே?

பிராமணத் தலைமையை ஏற்றுக் கொண்டதால்தான் ஆண்ட மன்னர்கள் அனைவரும் மனுதர்மத்தின் படி ஆண்டார்கள். தங்களை திருமாலின் வம்சமாகவும், தங்கள் ராணிகளை மகாலட்சுமி அம்சமாகவும் கல்வெட்டு அடித்து பெருமைப் பட்டார்கள்.
தங்களை சத்திரிய வம்சம் என்றும், வைசிய குலம் என்றும் நிறுவிக்கொள்வதில் அரசாட்சி காலத்திலிருந்து இன்றுவரை நம்மவர்கள் பெருமிதத்துடன் போட்டி போடுகின்றனர்.
பிராமணர்கள், சத்ரியர்கள்,வைசியர்கள் என்ற மூன்று வர்ணமும் பல நூறு ஆண்டுகளாக இந்த தமிழ் மண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் "சூத்திரர்" என்பதை மட்டும் ஈ.வெ.ரா தமிழர்கள் மேல் திணித்துவிட்டார் என்பது திடீர் தமிழ்தேசியர்களின்ஆகச் சிறந்த  நகைச்சுவை கண்டுபிடிப்பாகும்.

1871 வரை சென்னை மாகான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிராமணர், சத்ரியர்,வைசியர்,சூத்திரர் என்று வருணப் பாகுபாடு செய்யப்பட்டதையும்,
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வரை அரசு ஆவணங்களில் "சூத்திரர் "  "சற்சூத்திரர்" என்று குறிப்பிடப்பட்டதையும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டவர்கள் நாம். எவராவது மறுத்தார்களா?
இதை மாற்றியது திராவிடர் இயக்கத்தின் அளப்பரிய பணியல்லவா?

1901ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் வேளாளர்களை "சற்சூத்திரர்" வருண பட்டியலில் அரசு சேர்த்ததை கண்டித்து கிளர்ச்சி நடந்தது.
வேளாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? சூத்திரர் என்ற இழிவை நீக்கிடுக என்பதல்ல,வேளாளரை வைசிய வருணத்தில் சேர்த்திடுக என்பதுதான்! இந்த போராட்டத்திற்கு அன்றைக்கிருந்த தமிழறிஞர்கள் பலர் தலைமையேற்றனர்.
வேளாளர்கள் வைசியரே என்று மெய்ப்பிக்க தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்த தம் புலமையைக் கொண்டு பல கண்டன நூல்களையும் அந்த அறிஞர் பெருமக்கள் எழுதிக்குவித்தனர். அப்படி வெளிவந்த "வருண சிந்தாமணி" என்ற நூலுக்கு பாயிரம் பாடியவர் தேசியக்கவி சுப்ரமண்யபாரதி!

தமிழர் என்று சொல்லும்போது
இந்த நிலையில்தான் நால் வருணத்தை ஏற்றுக் கொண்டு இருந்தோம்.
இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நிமிர்ந்து நிற்கிறோம் திராவிடராக!

வில்லியம் ஜோன்ஸ் ஆரியக் கலாச்சாரமே உயர்ந்தது என்று வேதங்களை உயர்த்திபிடித்தபோது
கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதை ஓங்கி ஒலித்தார்!
ஆரியர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் குரல் ஒலித்த அதே காலகட்டத்தில் "நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருக்கும் திராவிடன்" என்று முழங்கினார் பாதிரியார் ஈராஸ்!

ஆரியர்க்கு எதிரான கலகக் குரலாக வரலாறு நெடுக "திராவிடர்"என்பது ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது!
இந்தச் சொல் உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம்.
நீங்கள் வசைமாரி பொழியலாம், அல்லது கண்டும் காணாமல் கடந்து போகலாம்.
திராவிடர் என்பது குறித்து வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதிக் குவிக்கலாம். ஆனால் திராவிடர் என்ற குரலை எவராலும் அடக்கவோ-தடுக்கவோ முடியாது!
                                          #தொடரும்...
   பதிவு     Viduthalaiarasu Viduthalaiarasu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக