திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திராவிடமே! தமிழ்நாடே! - 2

08.03.1947 குடிஅரசிலிருந்து....


சென்ற வாரத் தொடர்ச்சி

ஏற்கனவே ஆரியன் ஆதிக்கமே பல்லாற் றானும் இருந்துவந்தது என் றாலும் அது வெள்ளையன் முத்திரையின் கீழ் நடந்து வந்ததாகும். இனி ஆரியன் ஆதிக்கம் வெளிப்படையாகவே ஆரியன் முத்திரையின் கீழ் நடந்து வரப்போகிறது. இன்று ஆரியர்களது ஏகபோக ஆட்சிக்கு உள்ள ஒரு சிறு தடை யெல்லாம் முஸ்லிம்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய இருவர்களிடமும் ஒரு ஒப்பந்தம் (ஒற்றுமை) ஏற்படவேண்டும் என்கின்ற ஒரு சாக்குதானே தவிர திராவிடன் (தமிழன்) நிலையைத் தன்மையைப் பற்றிய சங்கதி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.

அரசியல் நிர்ணயசபை  என்பது பயனற்ற,  பித்தலாட்ட, ஒரு கூட்டத்தாரின்  நலனுக்கு  மாத்திரம் ஏற்பட்ட ஒரு மாயாஜால  மந்திரசபை  என்றாலும்  அந்தப்படி சொல்ல முஸ்லிம்கள் தான் உரிமையுள்ளவர்களாய் இருக்கிறார்களே தவிர திராவிடர்கள் அதைப்பற்றி நினைக்கவும் அருகதை அற்றவர்களாக ஆகிக்கொண் டார்கள்.  ஏன் என்றால் திராவிடர்கள்  சிலர் அரசியல் நிர்ணயசபையில் இருக்கிறார்கள், அவர்கள் திராவிட சமுதாயப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

அவர்கள் சொல்லாவிட்டாலும் ஆரியர்கள்  அவர்களைத் திராவிடர்களின் பிரதிநிதிகள்  என்றே பிரிட்டிஷாரிடம் கணக்குக்  (லிஸ்ட்டு) கொடுத்து  இருக்கிறார்கள்.   ஆனால்  இந்தத் திராவிடர்கள்  அரசியல் நிர்ணய சபையில் ஆரியர் - திராவிடர் என்கின்ற  பேச்சே  பேசக் கூடாது என்கின்ற  ஒப்பந்தத்தின் மீது ஆரியர் களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர் களாவார்கள்.

எனவே, இப்போதைய  அரசியல் மாறுதலில் திராவிடர்கள்  அல்லது தமிழர்கள் திராவிட நாடு  அல்லது தமிழ்நாடு என்பதைப் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு  என்ன செய்ய வேண்டும்?  அரசியல் நிர்ணய  சபையில் இல்லாவிட்டாலும் ஒரு தனி சபையாகத் திராவிடர் அல்லது  தமிழர் கூடி ஒரு முகப்பட்ட அபிப்பிராயத்தை - கருத்தை - தேவையை  வலியுறுத்தி அதை வைத்து ஒரு பொதுக்கிளர்ச்சி அல்லது சிலர் லண்டன் சென்று  வலியுறுத்தி விட்டு வது கிளர்ச்சி செய்வது  என்கின்றதான  ஒரு தீவிரப்பணியில்  அவசரமாய் ஈடுபட வேண்டியது இன்று மிகமிக அவசியமான காரியம் என்று கருதுகிறோம். திராவிடமே!  தமிழ்நாடே!  என்ன சொல்லுகிறாய்?  திரா விடத்தின் வரலாற்றுச் சுவடி யையும், புதை பொருளையும் பற்றிப் பிரசங்க மாரி பொழிவதும், கம்யூனிசம், சோஷலிசம், தேசியம்  என்று  மக்களைத் தொல்லைப்படுத்தி நாச வேலை செய்வதும் முதலிய  பணியோடு  உன் வாழ்வு,  தொண்டு, கடமை  முடிந்ததா?  மற்ற  சமுதாயத்தைப் பார்!  பார்! பார்!

- விடுதலை நாளேடு, 10.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக