சனி, 3 ஆகஸ்ட், 2019

திராவிடமே! தமிழ்நாடே!


08.03.1947 குடிஅரசிலிருந்து....


நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக் கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை. இந்தத் திராவிட நாட்டில் 10இல் ஒரு பங்குகூட இல்லாத முஸ்லிம்களின் நிலை எவ்வளவு உயர்ந்துவிட்டது. அவர்கள் எவரு டைய தயவும் வேண்டாத உயர்நிலை அடைந்து விட்டார்கள். அதுபோலவே திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரி யுமா? இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷார் விலகிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தத் தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் விஷயம் ஒரு நிபந்தனை ஆக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் வேலையும் நடந்து வருகிறது. அவர்கள் இனிமேல் தீண்டப்படாத மக்களும்  அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் அல்ல என்கின்ற நிலைமையை அடைந்துவிட்டார்கள். அவர் களுக்கு இனி உத்தியோகங்கள் ஓடி ஓடி வரும்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணையும்.

இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். இவர்கள் தவிர கிறிஸ்தவர் களைப் பார்! அவர்கள் திராவிடத்தில் 40இல் ஒரு பங்கு (இருக்கலாம்) உள்ளவர்கள் அவர் களுக்கு என்ன குறை என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க் கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிடநாட்டுக்குப் பிழைக்கவந்த யாதும் ஊரே என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார். அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன் மையில் இருக்கிறது.

இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கரைகண்டாய், தமிழின் மூலத் தையும் தொன்மை நிலையையும் தோண்டி எடுத்தாய்; தமிழ்த் தெய்வமாகிய முருகனாகவே ஆகித் தமிழில் இணையற்ற வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து தமிழனின் உயர்தன் மையைக் கண்டு பிடித்தாய்; இயற்கையோடு இயைந்தாய்; எண்ணில்லாத புத்தகம் பதிப்பித்தாய்; எங்கும் தமிழ்மயம், எங்கும் தமிழ் முழக்கம் என்கிறாய். ஆனால் இந்த(உன்)நாட்டில் உன் நிலை என்ன? உன் பங்கு என்ன? உன் உரிமை என்ன? என்பதைச் சிந்தித்துப்பார். சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், வாழ்வில், சட்டத்தில், சாஸ்திரத்தில், கடவுள் சன்னி தானத்தில், உன் நிலை என்ன என்பதை யோசித்துப்பார். இவற்றில் நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன? நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக்கொண்டு விலகித் தனியாய் நிற் கிறாய். ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின் றானே ஒழிய, வாழவேண்டுமே ஒழிய தனித்தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ்கின் றானா? எண்ணு கின்றானா? திராவிடத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்மகனே! நீயே எண் ணிப்பார். இப்போது தெரிகிறதா, திராவிடன் ஏன் கீழ் நிலையில் இருக்கிறான் என்பதற்கு உள்ள காரணம்? வெள்ளையன் ஆதிக்கம் பொழுது சாய்ந்துவிட்டது. ஆரியன் ஆதிக்கம் பொழுது புலர்ந்துவிட்டது.

தொடரும்

 - விடுதலை நாளேடு, 3.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக