பேரா. நம்.சீனிவாசன்
இராபர்ட் கால்டுவெல் மறைந்து உருண் டோடிய ஆண்டுகள் 128. இதே ஆகஸ்ட் மாதம் தான் அவர் இவ் பூவுலகை விடுத்து விடை பெற்றார். கால்டுவெல் வாழ்ந்த காலம் 77 ஆண்டுகள். அயர்லாந்தில் பிறந்தார் ; ஸ்காட்லாந்தில் வளர்ந்தார்; இந்தியாவில் வாழ்ந்தார் ; தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தார்.
இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப் பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப் பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை தம் ஆய்வின் மூலம் நிலை நிறுத்துகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.
சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மாயை உலகை வலம் வந்தது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - கலை - பண்பாடு - வாழ்வியல் என்பதைத் தாண்டி தென் திசை நோக்கி அவர்கள் பார்வை திரும்பவே இல்லை. கால்டுவெல் இலண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். சமயம் பரப்ப சென்னை வந்தார். கடற்பயணம் இடர் பயணமாய் அமைந்தது. சூறாவளி சுழன்றது. பிரெஞ்சுக் கப்பலுடன் மோதி சிதைந்தது. மதம் பரப்ப வந்த முப்பது பேரில் கடலில் மூழ்கி மாண்டவர்கள் 24 பேர். உயிர் பிழைத்தவர்கள் அறுவர். அதில் கால்டுவெல் ஒருவர்.
08.01.1838 இல் சென்னை வந்தடைந்தார். ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 18 மொழிகளைக் கற்றறிந்த பன்மொழி வித்தகர். துரூ என்பவரிடம் தமிழ் கற்றார். உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன் முதலியோர்களும் கால்டு வெல்லுக்கு தமிழ் போதித்தனர். பிரவுன் என்பவரிடம் சமஸ்கிருதம் கற்று தேர்ந்தார்
தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர் வாழ்வியல் இவற்றை முழுமையாய் உணர்ந்து , கொள்ள வடகோடி சென்னையிலிருந்து தென்கோடி குமரிமுனை வரை நடந்து கடந்தார். பட்ட சிரமங்கள் பட்டியலில் அடங் காது; சத்திரத்தில் தங்கவும் அனுமதி மறுக்கப் பட்டது.
தமிழனின் மூலமுகவரி அறிந்து சொன்ன மூதறிஞன் தங்கிட மாட்டுக்கொட்டகையில் இடம் கொடுத்தான் இருளில் உழன்ற தமிழன். இளமையில் பைன் மரங்களுக்கிடையே தவழ்ந்த கால்டுவெல், தமிழ் தழைக்க 50 ஆண்டுகள் பனை மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தார்.
இடையன் குடிதான் அவர் வாழ்ந்த ஊர்; கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி; வெப்பம் அனலாய் தகிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நாளும் கசக்கும்.
அந்த கிராமத்திலே தங்கியிருந்து, பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, கல்வி கற்பித்து, மதிய உணவு வழங்கி, மருத்துவ வசதி ஏற்படுத்தி, சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்து நாகரீக உலகிற்கு நாட்டு மக் களை கைப்பிடித்து அழைத்துச் சென்ற பெரும்பணிகளுக்கு மத்தியில் 15 ஆண்டுகள் மூளையைக் கசக்கி, காலத்தால் அழியாத இலக்கண நூலைப் படைத்தார்.
திராவிடம் எனும் ஆதிச்சொல்
திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டு வெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்.
மணோன்மணியம் சுந்தரம் பிள்ளை,
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்கின்றார். ரவீந்திரநாத் தாகூர்,
திராவிட உத்கல வங்கா என்கின்றார்.
தாயுமானவர்,
திராவிடத்திலே என்கின்றார்.
லீலா திலகம் எனும் 14ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மலையாள இலக்கியம், திராவிடம் என்கிறது.
குமரிலபட்டர் 8-ஆம் நூற்றாண்டில் ஆந்திர திராவிட பாஷா என்கின்றார்.
பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை திராவிட மன்னன் என்றே அழைக்கப்படுகின்றான். மனுதர்ம சாஸ்திரம், திராவிடர் என்பதை இழி இனத்தவராகக் குறிக்கின்றது.
திராவிடம் எனும் சொல்லை இலக்கியங் களும், இலக்கணங்களும், புராணங்களும் தம்தம் வசதிக்கேற்ப பொருள் சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச்சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.
எல்லிஸ் எனும் அறிஞர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அது தனி மொழிக் குடும்பம் என்றார். அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு கால்டுவெல் தமிழாராய்ச்சி பணி நிகழ்த்தினார். கடும் உழைப்பின் பயனாய் ஆவணத் தரவுகளோடு ஒரு நூல் முகிழ்த்தது. அப்புத்தகம் தான் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியது. 1856 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நூல் தான் A Comparative Grammar of the Dravidian or South Indian Family Tamil Languages. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் திராவிட கருத்தியலை இமயத்திலே ஏற்றிவைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இதுவரை 23 பதிப்புகள் வெளிவந்திருக்கின்றது. கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திராவிடர்களை உலகம் அறிய இந்நூல் உதவியது. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். தமிழில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட்ட 28 மொழிகள் பிறந்ததாக வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பேசும் மக்கள் திராவிடர்கள் என வரலாற்று ஆவணங்களைச் கொண்டு நிறுவியவர் கால்டுவெல்.
தமிழை வளர்க்க வந்தவர்கள் மதத்தைப் பரப்பினார்கள்; மதத்தைப் பரப்ப வந்த கால்டுவெல் தமிழை வளர்த்தார்.
கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வரலாற்றில் திருப்பு முனை. நூல் உரைக்கும் உண்மைகள்:
1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டாலும் தமிழ் தானாக இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. தமிழ் மரபு என்பது வேத - பார்ப்பன - இந்து மரபின் தொடர்ச்சி அல்ல. 4. பார்ப்பன எதிர்ப்பு மரபாக உள்ளது.
கால்டுவெல்லின் ஆய்வு வெறும் மொழியாராய்ச்சியாக நின்றுவிடவில்லை. தமிழினத்தின் பல்வேறு வாழ்வியலைக் குறித்த ஆய்வாக உள்ளது.
திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகள் என்றும் திருந்தா மொழிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.
திருந்திய மொழிகள் ஆறு : தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு திருந்தா மொழிகள் ஆறு: துதம், கோதம், கோண்ட், கூ, ஒரியன், ராஜ்மகால் சமஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே நிறுவுகிறார்.
ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
கொற்கை துறைமுகம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். கடல் உள் வாங்கியிருப்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
சிங்கள இலக்கிய நூலான மகா வம்சம் என்ற நூலின் துணை கொண்டு தமிழ் - ஈழ உறவுகளை ஆய்வு செய்துள்ளார்.
திராவிடர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ; உண்மையானவர்கள் ; நேர்மையானவர்கள்; விசு வாசமானவர்கள் என்பது அவர் கண்டறிந்து உலகிற்கு உடரைத்த உண்மைகளாகும்.
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்காகக் குரல் கொடுத்தது 1887 இல். ஆனால் கால்டுவெல் செம்மொழிக்காக எழுப்பிய முதல் குரல் ஒலித்தது 1856 இல்.
கால்டுவெல் மனிதநேயம் மிக்கவர், தமிழோடு அவர் உறவு முடிந்து விட வில்லை . தமிழ் மக்கள் மீதான அன்பு பெருக் கெடுத்தது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாசம் பொழிந்தார். திராவிடத்தின் அடையாளமாய்த் திகழும் கால்டு வெல்லுக்கு அவர் தம் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத் துவோம்.
- விடுதலை ஞாயிறு மலர், 31. 8 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக