“திராவிடர்’’ என்பது ஆரிய பார்ப்பனர்க்குரிய சொல்லா? – மஞ்சை வசந்தன்
தமிழ்த் தேசியம் பேசும் ஆரிய பார்ப்பன கைக்கூலி பேர்வழிகள் சிலர், திராவிடர் என்பதை பார்ப்பனர்க்குரிய சொல்லாகக் கூறுகின்றனர். அதற்குச் சான்றாக ‘திராவிட்’ என்ற பெயர் பார்ப்பனர்க்கு இருப்பதாகக் காட்டுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் திராவிட்டை அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கருத்துச் சரியென்கின்றனர்.
ஆனால், இவ்வாறு கூறுவது அறியாமையின் அடையாளம். ஆரிய பார்ப்பனர்கள் அயல்நாட்டிலிருந்து வந்து, இந்தியாவிற்குள் நுழைந்து மெல்ல மெல்ல பரவினர். அப்படி வந்தவர்கள் பெண்-களுடன் வரவில்லை. இங்-குள்ள மண்ணின் மக்களின் பெண்களோடு சேர்ந்தே தங்கள் வாரிசுகளைப் பெற்-றனர். அதன்படி இந்தியாவில் இருக்கும் எந்த ஆரிய பார்ப்பனரும் தூய ஆரிய இனத்தவர் அல்ல; அத்தனை பேரும் கலப்பில் பிறந்தவர்களே!
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்ததும் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர். இந்திய மண்ணின் மக்களான தமிழர்கள் பிச்சை கேட்ட ஆரியர்களைப் பார்த்து “நீங்கள் யார்?’’ என்று கேட்டபோது, “பரதேசி’’ என்று பதில் கூறினர். பரதேசி என்றால் பிற நாட்டான் என்று பொருள். அந்த பரதேசி என்றே சொல்லே பிற்காலத்தில் பிச்சையெடுக்கின்றவர்களுக்கு உரிய சொல்லாக மாறிவிட்டது.
வாயில் காக்க கூர்க்க இனத்தவரை அழைத்து வந்து பணியமர்த்தினர். பிற்காலத்தில் ‘கூர்க்கா’ என்ற சொல் வாயில் காக்கின்றவர்களுக்கு உரிய பொதுச்சொல்லாக மாறியது போலவே, ஆரியர்க்குரிய பரதேசி என்ற சொல் பிச்சைக்காரர்களுக்குரிய பொதுச்சொல்லாக மாறியது.
இப்படி பிச்சையெடுத்து வாழ்ந்தவர்கள், அதே பிச்சையை கவுரவமாக எடுக்க சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கி, நம் மக்களிடம் பொருட்களைப் பெற்று வாழ்க்கை நடத்தினர். வட இந்தியாவில் நுழைந்தவர்கள் மெல்ல மெல்ல தெற்கு நோக்கிப் பரவி இறுதியில் தென்னிந்தியப் பகுதியிலும் பரவினர். முதலில் ஆந்திரப் பகுதியிலும், பின்னர் கன்னடப்பகுதியிலும், இறுதியாக கேரளப் பகுதியிலும் அதிகம் பரவினர். தமிழகத்தில் மட்டும் அதிகம் பரவ இயலவில்லை. ஓரளவிற்குப் பரவியதும் சோழர் பகுதியில்தான். பாண்டியர் பகுதியில் அதிகம்
பரவ பாண்டியர்கள் அனுமதிக்கவில்லை. சோழர்கள் ஆரியர்களை அணைத்து ஆதரித்தபோது பாண்டியர்கள் ஆரியர்களை எதிர்த்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியனே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
பிற்காலத்தில் ஆரியர்கள் இந்தியா முழுக்க பரவி வாழ்ந்தபோது திராவிடப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்களை வடஇந்தியாவில் வாழ்ந்த பார்ப்பனர்கள் திராவிட் என்று அழைத்தனர். இங்கு ‘திராவிட்’ என்பது இனத்தைக் குறிப்பதல்ல; ஆரியர் வாழ்ந்த இடத்தைக் குறிப்பது.
வடஇந்தியப் பகுதியை-கவுட தேசம் என்றும் தென்னிந்தியப் பகுதியை திராவிட தேசம் என்றும் ஆரியர்கள் அழைத்தனர். அதனடிப்படையில் திராவிடப் பகுதியில் வாழ்ந்த ஆரியர் என்பதனைக் குறிக்க ‘திராவிட் என்றனர். திராவிட மக்கள் மிகுதியாய் வாழும் பகுதியென்பதால் அது திராவிட தேசம் எனப்பட்டது.
இதை காஞ்சி மடத்து பெரிய சங்கராச்சாரியே ஒப்புக்கொண்டு கூறுகிறார்.
“நமது நாடு 56 தேசங்களைக் கொண்டது என்று சொல்லுவார்கள். நர்மதைக்கு வடக்கே இருப்பதை கௌட தேசம் என்றும், நர்மதைக்குத் தெற்கே இருப்பதைத் திராவிட தேசம் என்றும் கூறுவர்’’ என்கிறார்.
(காஞ்சி மே.6, 1954)
இச்செய்தி ‘திராவிட நாடு’ 16.05.1954 இதழில் 9ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 44ஆவது சுலோகத்தில், திராவிடம் என்பது இடப்பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பௌண்டம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தாதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய்விட்டார்கள்’’ என்கிறது மனுசாஸ்திரம்.
ஆக, சங்கராச்சாரியின் கருத்துப்படியும், மனுதர்ம சாஸ்திரபடியும் திராவிடம் என்பது இடம்; திராவிடப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர் என்பதன் அடையாளமாய் திராவிட என்று பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை. மாறாக, போலித்தமிழ்த் தேசியவாதிகள் திரித்துக்கூறுவதுபோல திராவிட என்பது ஆரிய பார்ப்பனரைக் குறிக்கும் சொல் அல்ல.
இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் தமிழர்களே வாழ்ந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட அனைத்துப் பகுதியிலும் தமிழே பேசப்பட்டது. பின்னால் ஆரியர் மொழி, இஸ்லாமியர் மொழியும் கலந்து ஹிந்து, வங்காளி, பீகாரி, குஜராத்தி, மராட்டி போன்ற மொழிகள் வடஇந்தியாவில் உருவாக, தென்னிந்திய பகுதியில் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாக, தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் தனித்து நிலைத்தது.
உண்மை நிலை இப்படியிருக்க, தமிழ்நாட்டில் உள்ளவர்களை மட்டுமே ஓரினமாகக் காட்டுவது தப்பான கருத்து. தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும் அவர்களும் தமிழினத்தவரே. ஆனால் அவர்கள் தற்போது மொழியால் மாறுபட்டிருப்பதால், தமிழர் என்ற அழைக்க முடியாத நிலையில் பொது இனப்பெயரால் திராவிடர்கள் என்று அழைக்கிறோம். தற்போது திராவிடம் என்பது ஆரிய கலாச்சாரத்திற்கு எதிரான பண்பாட்டின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. எனவே, திராவிடம் என்பது ஆரியத்திற்கு உரியது அல்ல. ஆரியத்திற்கு எதிரானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக