அறிஞர் அண்ணா
”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்து-விட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் _ பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் _ திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் _ திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.
நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர்.
16.-9.1926இல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியை. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள்.
இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் _ ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர்.
இந்நாட்டில் ஆரியர் _ திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான்.
ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டு-மென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்-கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்கு-மானால் ஆரியர் _ திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.
“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் _ திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்-கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் _ திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக