செவ்வாய், 16 ஜூன், 2026

தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’ ஆய்வாளர் ராஜசேகர் பாண்டுரங்கன்

தற்கால அரசியல் சூழலில் ‘திராவிடம்’ என்ற சொல் கால்டுவெல் அல்லது 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலேயே (1705–1742) வாழ்ந்த தாயுமானவர் சாமிகள், இச்சொல்லைத் தமிழைக் குறிக்கும் சொல்லாகத் தனது பாடல்களில் கையாண்டுள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், ‘திருமறைக்காடு’ எனப் போற்றப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் மரபில் பிறந்தார். இவருடைய தந்தையார் கேடிலியப்ப பிள்ளை மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவர். இவர் தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வருவதற்கு (1838) ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தாயுமானவர் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இச்சொல் இறக்குமதி செய்யப்பட்டது அல்ல, மாறாகத் தமிழுக்கு நிகராகப் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்த ஒன்று என்பது உறுதியாகிறது.

தாயுமானவர் பாடல் விளக்கம்

தாயுமானவர் தனது ‘சித்தர்கணம்’ எனும் பகுதியில் பாடியுள்ள பாடல்:

“…வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன் ;

வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ?…”

இந்தப் பாடல், வெறும் ஏட்டுச் சுரைக்காயான கல்விச் செருக்கையும், விவாதம் செய்து பிறரை மிரட்டும் போலிப் புலமையையும் விமர்சிக்கும் ஆழமான தத்துவப் பாடலாகும்.

இதன் நேரடிப் பொருளையும், உட்பொருளையும் கீழே விரிவாகக் காண்போம்:

“வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்”

சமஸ்கிருத (வடமொழி) இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்ற ஒருவன் என்னிடம் வாதிட வந்தால், அவனிடம் “நீ கூறும் அத்தனை பெருமைகளும் ‘திராவிடம்’ எனப்படும் எங்களின் தமிழ் மொழியிலிருந்தே வந்தது” என்று தர்க்கம் செய்வேன். (இங்குத் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தாயுமானவர் தமிழுக்கு நிகராகப் பயன்படுத்துகிறார்).

“வல்லதமிழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்”

ஒருவேளை, தலைசிறந்த தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் விவாதிக்க வந்தால், அவரிடம் என் மேதாவித்தனத்தைக் காட்ட வடமொழிச் சொற்களையும் வாக்கியங்களையும் (வசனங்கள்) இடையில் கலந்து பேசி அவரைத் திணறடிப்பேன்.

“வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ?”

உண்மையான அறிவால் யாரையும் நேர்மையாக வெல்லாமல், இப்படிச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் வார்த்தை ஜாலங்களால் எதிராளியைக் குழப்பியும் மிரட்டியும் (மருட்டிவிட) தப்பிக்கும் இந்த வித்தையானது, எனக்கு முக்தியை (இறைவனை அடைதல் / வீடுபேறு) பெற்றுத் தருமா? தராது.

இறைவனை அடைவதற்கு மொழிச் செருக்கோ, விவாதத் திறமையோ, அல்லது அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போ எந்த வகையிலும் உதவாது. உண்மையான ஞானம் என்பது அடக்கத்திலும், தர்க்கங்களைக் கடந்த அமைதியிலுமே உள்ளது என்பதைத் தாயுமானவர் தன் மீதே வைத்து சுயவிமர்சனமாகப் பதிவு செய்துள்ளார்.

திராவிடம் என்பது கால்டுவெல்லோ, அயோத்திதாசரோ அல்லது பெரியாரோ கண்டுபிடித்த சொல் அல்ல. அது பக்தி இலக்கியக் காலத்திலேயே தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தாயுமானவர் இச்சொல்லைச் சமஸ்கிருதத்திற்கு இணையான தமிழ் மொழியைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இங்குத் திராவிடம் என்பது நேரடியாகத் தமிழையே குறிக்கிறது.

இங்குத் தான் திராவிடம் என்ற சொல் “வடமொழிக்கு எதிராக” முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழே திராவிடம்.

- விடுதலை நாளேடு,11.05.26

வெள்ளி, 12 ஜூன், 2026

திருநெல்வேலி – தமிழ் தலைவர்கள் மாநாடு (நவம்பர் 30, டிசம்பர் 1, 1917)

 

 -முனைவர் க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்.


1916இல் நீதிக்கட்சி தொடங்கப் பட்ட பின், பார்ப்பனரல்லாதார் மாநாடு ஆண்டுதோறும் சென்னை மாகாணம் எங்கும் நடத்தப்பட்டது. 1917இல் திருநெல்வேலி, ராமநாத புரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களின் மாநாடு, திருநெல்வேலி கோமதிவிலாஸ் திரையரங்கில் 1917 நவம்பர் 30 அன்று எழுச்சியோடு கூடியது.

இம்மாநாட்டையொட்டி திருநெல்வேலி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு அழகுற அமைந்திருந்தது. காணுமிடம் எல்லாம் மாநாட்டு விளம்பரங்கள், மாநாட்டிற்கு அழைக்கும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் என அமைந்திருந்தது.

“‘ஜாதி’ எனும் தீயசக்தி ஒழிக!”, “பார்ப்பனரல்லாத மக்களே! உங்களது நலன்களையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” போன்ற கருத்தாழமிக்க – படிப்போரை உணர்ச்சி பொங்கச் செய்யும் வாசகங்கள் கொண்ட வளைவுகள் தேரடித் தெருக்களிலும், சாலை இணைப்புகளிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டிற்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெலாப்ரோல் ஜமீன்தார், ராவ்பகதூர் பி.தியாகராய செட்டி, செல்லப்பள்ளி குமாரராஜா, திரு.டி.எத்திராஜ முதலியார், ஓ.கந்தசாமி செட்டி மற்றும் பி.பி.துரைசாமி முதலியார் போன்ற எண்ணற்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள் வந்தனர். பார்ப்பனரல்லாத மக்கள் மாபெரும் வரவேற்பினை அவர்களுக்கு அளித்தார்கள்.

வருகை தந்த தலைவர்கள் அனைவரும் எட்டையபுரம் ராஜா அரண்மனையில் தங்க வைக்கப்பட்டனர். கடும் மழைக்கிடையே மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டு மேடையில் ராவ்பகதூர் பி.தியாகராய செட்டி அவர்களுடன் பல தலைவர்கள், ஜமீன்தார்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டின் வரவேற்புரையை சிங்கம்பட்டி ஜமீன்தார் ஆற்றினார். அவரது வரவேற்புரையிலிருந்து முக்கியமான செய்திகள் பின்வருமாறு:

“இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் சமூகங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையினைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அண்மையில் எத்தனை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாலும் சரி, ஜாதி வாரியான பிரதிநிதித்துவம் என்பன போன்ற பாதுகாப்புகள் அளிக்கப்படுவதே நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.

சட்டமன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதை நிறைவேற்றுவதே நமது கடமையும் ஆகும்.

நல்வாய்ப்பு பெற்று நல்ல வசதியுடன் இருக்கும் நமது சமூக உறுப்பினர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் தகுதி பெற்ற மற்ற சமூகத்தினர்கள் கல்விக்கும் தேவையான நிதியுதவியை அளிக்க வேண்டும்.

அதற்காக, “திராவிடர் மறுமலர்ச்சி நிதி” ஒன்றை உடனடியாகத் துவங்க வேண்டும். அந்த நிதியினை கிராமத்திலுள்ள மக்களுக்கு வழங்கி கல்வியில் பார்ப்பனரல்லாதார் முன்னேற வழி காண வேண்டும்.”

மேற்கண்டவாறு நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் தொடக்கக் கல்வி வளர்ச்சி குறித்த தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும்.

பார்ப்பனரல்லாதார் மாநாடு சிறப்போடு நடைபெற தனது செல்வம், உழைப்பு முதலியவற்றை வழங்கிய பெருமைக்குரியவர் சிங்கம்பட்டி ஜமீனாவார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய நீதிக்கட்சியில் அங்கம் பெற்ற ஜமீன்தார்கள் மற்றும் பல செல்வந்தர்கள் சமூக மாற்றத்திற்கு பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.

விடுதலை ஞாயிறு மலர், 11.4.26