ஞாயிறு, 1 மார்ச், 2015

திராவிடர் வார்த்தை விளக்கம்



- தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டி யிருக்கிறது.
ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது.
உங்கள் படிப்பின் தன்மை
முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர்களா கிறார்கள்.
உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவை களில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர் களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக் கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதி களுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கரவர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.
படிப்பால் ஏற்படும் பயன்
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள் உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதி னாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங் களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படி யாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல் லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண் பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய் யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.
திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதா யிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக் குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென் றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.
இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர் களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திரா விடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத் தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத் தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசி யல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகி யவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என் பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாத தினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்க வில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில் லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானா லும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான
குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு
களும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறைய னாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரிய ருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதார ணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக் கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக் காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்ட வைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். (09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

-விடுதலை,ஞாயிறு, 01 மார்ச் 2015                

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே: அய்ராவதம் மகாதேவன்


தஞ்சாவூர், ஜன.29_ சிந்துவெளி நாகரிகம் திரா விட மொழியைச் சார்ந் தது என்று கல்வெட்டு ஆய்வாளரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான அய்ராவதம் மகாதேவன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் கடல் சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார் பில் புதன்கிழமை நடை பெற்ற முனைவர்கள் எ. சுப்பராயலு, செ.ராசு அறக் கட்டளைச் சொற் பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து.
பாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது என் பது எனது முடிவு என் றார் அய்ராவதம் மகாதேவன்.
துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித் தார். பதிவாளர் சே. கணேஷ்ராம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தின் இந்தியவியல் துறைத் தலைவர் எ. சுப்பராயலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுவடிப்புலத் தலைவர் சு. ராசவேலு வரவேற்றார். முனைவர் ந. அதியமான் நன்றி கூறி னார்.
விடுதலை,29.1.15,பக்-1

சனி, 31 ஜனவரி, 2015

5000 ஆண்டு கால நாகரிகம்




- கிரீஷ் சஹானே
(கட்டுரையின் அய்ந்தாம் பகுதி)
5. 5000 ஆண்டு கால நாகரிகம்
பகவத் கீதையின் 5151 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் நமது அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.
இவ் வாறு ஆண்டுக் கணக்கை குறிப்பிடு வதே கட்டுப்பாடோ, வரையறையோ அற்ற வியப்பளிக்கும் இந்துத்துவ வரலாறு என்பதைச் சார்ந் தது. ஆனால், இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடைய எது ஒன்றினைப் பற்றி குறிப்பிடும்போதும் இந்த 5000 ஆண்டுக் கணக்கு பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. வேதங்கள் குறைந் தது 5000 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டவை; ஆயுர்வேதம். அதுவும் 5000 ஆண்டு களுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. யோகா, அதுவும் 5000 ஆண்டுகள் பழமையானது. இந்திய கலை, கணிதம், ஜோதிடம், இலக்கணம் எந்த ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை யெல்லாம் 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தவையே.
உண்மையைக் கூறுவதானால், இந்தியாவில் உள்ள எதுவுமே 5000 ஆண்டு கால பழமை வாய்ந்தது அல்ல. இந்தியாவில் பழமையானது என்று கூறப்படும் ஹரப்பா நாகரிகத் தின் காலமே, அங்கிருந்த தாழிகள், கட்டடங்கள், முத்திரைகள் ஆகிய வற்றைக் கொண்டு கி.மு. 2500 காலத் தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. நமது இலக்கியங்களில் பழமையானது என்று கூறப்படுவது 3500 ஆண்டு களுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.  கி.மு. 500 க்கு முந்தையது என்று குறிப் பிடப்பட இயன்ற கலைகள் மிகமிகக் குறைவானவையே. இந்தி யாவின் முக்கியமான கணித சாதனை களே இடைக்காலத்தில் நிகழ்த்தப் பட்ட வைதாம்.
தற்கால யோகாவில் பின்பற்றப் படும் ஆசனங்களில் பெரும்பாலானவை விவரிக்கப்பட் டுள்ள வரலாறு ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் சற்று மேலா னதுதான்.  கலியுகத்தினாலோ, முஸ்லிம் களின் படையெடுப்பாலோ, ஆங்கிலேய ஆதிக்கத்தினராலோ கெட்டுப் போவ தற்கு முன்பு  இந்தியா இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று நம்புபவர்களின் கைகளில் இந்த போலியான 5000 ஆண்டு பழமை என்ற விளையாட்டு சிக்கிக் கொண்டு சீரழிகிறது.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

விடுதலை,6.1.15பக்-2

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கற்கால (தமிழர்கள்)மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதம்

பழனி, 

திண்டுக்கல் அருகே, 4,500 ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தொல்லியல்துறை ஆய்வு

திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பழனி தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை டி.கூடலூருக்கு அருகே மண்மேடான பகுதியில் உடைந்த நிலையில் வித்தியாசமான கல் ஒன்றை அவர்கள் கண்டனர்.

அதை எடுத்து பார்த்தபோது, அது கல்லால் செய்யப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த ஆயுதத்தை பத்திரமாக மீட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது குவார்ட்ஸ் எனப்படும் ஒருவகை கல்லில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த கல்லால் ஆன ஆயுதம் 8 செ.மீட்டர் நீளமும், 13 செ.மீட்டர் குறுக்கு சுற்றளவும், 216 கிராம் எடையும் இருந்தது.

4,500 ஆண்டுகள் பழமையானது

இதையடுத்து அந்த ஆயுதம் உருவாக்கப்பட்ட காலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் உருவாக்கியதும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

அந்த ஆயுதத்தில் ஆங்காங்கே தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள், சிந்துசமவெளி நாகரீகத்தின் போது வழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களை போல இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பழமையான தமிழர் நாகரீகமும், சிந்துசமவெளி நாகரீகமும் ஒன்றானவையே என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 -தினத்தந்தி,23.1.2015,பக்-9

வியாழன், 11 டிசம்பர், 2014

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் யார்?


மா.அழகிரிசாமி,
மாநில துணைத்தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்
இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே என அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரபணு மாதிரிகளை இதற்காகச் சேகரித்து ஆய்வுகள் நடத்தி, உலகம் முழுவதும் இந்த ஆய்வுக்காகச் சென்று , பல நாடுகளில் ஆய்வு மய்யங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக மரபணு மாதிரிகள் சேகரித்து அந்த ஆய்வின் முடிவாக இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே; ஆரியர்கள் பின்னர் தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கு மரபியல் ரீதியான தெளிவான ஆதா ரங்கள் உள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார். இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்பதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் சிந்துவெளியில் கிடைத்த போதிலும் அதனை ஏற்க மறுக்கும் பார்ப்பனர்கள் ,இப்போது அறிவிக்கப்பட்ட மரபியல் சான்றுகளை மறுக்க இயலாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது .இன்று உலகில் காணப்படும் அனைத்து மக்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் வழித் தோன்றல்களே என ஸ்பென்சர் வெல்ஸ் கண்டறிந்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் மனித இனம் எவ் வாறு சென்றது என்பதை கண்டறிந்து விளக்கி உள்ளார்.
உலகம் முழுவதும் ஸ்பென்சர் வெல்ஸ் ஏற்படுத்திய ஆய்வு மய்யங் களில் ஒன்று மதுரையில் அமைந்த தாகும். உலகம் முழுவதும் அமைந்த மய்யங்களுக்குத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களை முதன்மை ஆய்வாளர் களாக ஸ்பென்சர் வெல்ஸ் நியமித்தார் .இந்திய மையத்திற்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் அறிவியல் அறிஞர் ராமசாமி பிச்சப்பன் இருந்தார். தனது ஆய்வின் காரணமாக ஸ்பென்சர் வெல்ஸ் புது டெல்லி, மதுரை, மும்பை வந்துள்ளார். செய்தியா ளர்களை அவர் சந்தித்த போது, இந்தி யாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள் தான் என்றும், ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார் .
இதனை ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”)  என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார் .இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது யூ-_டியூப் (youtube)  காணொலிப் பதிவிலும் இதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவசியம் காண வேண்டிய ஒன்று .
இப்படத்தில் இவரே தோன்றி உலகின் நிறைய இடங்களுக்குச் சென்று விளக் குவதை காண முடிகிறது. இது குறுந் தகடாகவும் வெளியிடப் பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ் “Deep Ancestry Inside The Genographic Projectஎன்ற இன்னொரு புத்தகத்தையும் இது தொடர்பாக எழுதி உள்ளார் .
அவர் செய்தியாளர்களிடம் பேசிய தன் சுருக்கத் தொகுப்பு :
கேள்வி: மனிதனின் பயணம் எப்படி இருந்தது?
பதில் : இந்த ஆய்வு படமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் 10 ஆண்டு களுக்கு முன்னரே இருந்தது .உலகின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்து, பழகிக் கொள்ள வேண்டி இருந்தது மய்ய ஆசியா ,ஆஸ்திரேலியா அலாஸ்கா போன்ற இடங்களில் பயணிக்க வேண்டும்.நாம்(மனிதர்கள்) எங்கே தோன்றினோம்? உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எப்படி வந் தோம்? இதுவே முக்கியக் கேள்விகளாக எழுந்தன. எனது முக்கிய கண்டு பிடிப்புகளில் ஓன்று கஜகஸ்தானில் கண்டறியப்பட்டது .இங்கே வாழும் நியாசோவ்  என்பவர். மய்ய ஆசியா மனிதரின் வழித்தோன்றல் ஆவார். இந்த மய்ய ஆசியா மனிதர்தாம் அய்ரோப்பாவுக்கும், இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் சென்று பரவி யிருக்கின்றார்கள்.
இவர்களின் வழி தோன்றல்கள் இந்தோ  யூரோப்பிய மொழிகளைப் பேசினார்கள் .
கேள்வி : மனிதப் பயணம் என்ற கண்டுபிடிப்பினால் பழைய பரிணாம கொள்கையில் ஏதேனும் தவறு காணப்பட்டதா ?
பதில் : ஆம். பல இட மனிதத் தோற்றம் என்ற கொள்கை (multi region origin theory) உலகின் பல இடங்களிலும் மனிதன் தோன்றியிருக்க கூடும் என்ற கொள்கை தவறு என உறுதியாகிவிட்டது. மனித இனம் ஒரே பகுதியில்தான் தோன்றியது (single origin theory)
என்ற கொள்கை உண்மை என நிறுவப்பட்டுள்ளது .
கேள்வி : உங்களது ஆய்வில் 60,000 ஆண்டுகளில் மனிதனின் அறிவார்ந்த கூறுகளிலும், உடற்கூறுகளிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என தெரிகிறது?
பதில் : மிகவும் வேகமான மாற்றம் நடந்துள்ளது. விலங்காண்டிகளாக வேட்டையாடி உணவு சேகரித்த, வேட்டைச் சமுதாயம் ஓவியம் வரையும் திறனையும், இசையில் திறனையும் பெற் றது. பின்னர் மொழிகள் தோன்றின.
கேள்வி : சிலர் ஆரியர்கள்தாம் இந்தியாவின் முதல் முதலானவர்கள் என்று சொல்கிறார்களே ,இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்தியாவிற்கு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு மரபியல் சான்றுகள் உள்ளன கேள்வி: ஆனால் சிலர் ஆரியர்கள் தான் இந்தியாவின் முதல் குடிகள் என்று கோருகிறார்களே ? நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரியர்கள் பிறகுதான் வந்தார்கள் .
கேள்வி: எத்தனை பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது?
பதில்: உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங் களில் different populations  ஏறத்தாழ 20,000மக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.
கேள்வி: மக்களில் பல இனங்கள் (races) உள்ளனவா? அதுபற்றி?
பதில் : இல்லை நாம் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள்.இனப் பாகுபாடு (Racism) என்பது சமுதா யத்தை பிளவுபடுத்துவது. அறிவியல் படி தவறானது. நாம் அனைவரும் ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முன்னோர்களின் வழித்தோன்றல்கள்தான்.
இவ்வாறு தனது நூலில் ஆதாரத் துடன் விவரமாக எழுதி உள்ளார் .
நமது மூதாதையர் ஆப்பிரிக்காவி லிருந்து தான் வந்தார்கள்.இவ்வுண்மை மனிதனிடம் காணப்படும் Y குரோமோ சோம் மரபணுக்கள் மூலம் ஸ்பென்சர் வெல்ஸ் அவர்களின் ஆய்வினால் கண் டறியப் பட்டுள்ளது. ஆண்களிடம் மட் டுமே Y குரோமோசோம் காணப்படும். தந்தையின்  Y குரோமோசோம் மகனுக்கு மட்டும் செல்லும். இதே போல் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் மாற்றமின்றியே செல்லும். மிகவும் அரிதாக இந்த மரபணுவில் மாற்றங்கள் நடக்கும். இந்த Y குரோ மோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தை மரபு காட்டி (genetic marker)  என்கிறார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இந்த மரபு காட்டிகளை  (genetic markers) ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் இம்மனிதர் கடந்து வந்த பாதையினை நாம்  அடையாளம் காணலாம்.
ஆரியர்களின் தோற்றம்:
5000 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் தோன்றிய மரபு காட்டி  எம்_17  (genetic marker M 17) கூர்கன் மக்கள்  (Kurgan people) மூலம் யுரேசியா, ஸ்டெப்பி பகுதியில் முழுதும் பரவியது .தற்போது மிக அதிக அளவில் 40 விழுக்காட்டுக்கு மேலும் செக் குடியரசு முதல் சைபீரியாவில் உள்ள அட்லாய் மலைப்பகுதி வரை மற்றும் தெற்கு மய்ய ஆசியா முழுவதும் காணப் படுகிறது. இந்த  மூதாதையர் வழிR1A1  (HAP LOGROUP  R1A1)  வழித் தோன் றல்கள் இந்தோ - யூரோப்பிய மொழி களைப் பேசியவர்கள். இந்த ஸ்டெப்பி பகுதியில் தான் குதிரைகள் பழக்கப்படுத் தப்பட்டன (domesticated).
ரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போருக்குக் குதிரைப்படைகளும் ரதங் களில் போர் புரியும் ஆற்றலும் தோன் றின. இம்மக்கள் இந்தோ-யூரோப்பிய மொழிகளுக்கு (Indo europian) உரியவர்கள். (The Journey of Man : A Genetic  Odessey - - நூல். பக்கம் 167).
ஆரிய பார்ப்பனர்களிடம் காணப் படும் மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1
மரபுகாட்டி M17  (GENETIC MARKER M 17) ஆகும். இந்த ஸ்டெப்பி பகுதியில் இருந்து இப்பிரிவினர் மய்ய ஆசியாவை அடைந்தார்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் அய்ரோப்பாவை அடைந்தார்கள். இன்னொரு பிரிவினர் இந்தோ ஈரானிய கிளையாகி, கி.மு. 1800 ஆண்டுகளில் ஈரானுக்குள் சென்றனர். ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் இந்தியாவிற்குள் வந்தனர்.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வுடன் அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?
இந்தியாவில் நுழைந்தவுடன் ஆரி யர்கள் சிந்துவெளிப் பகுதியில் திராவி டர்கள் தங்களைவிட நாகரிகத்திலும், அறிவிலும், சிறப்புற்று விளங்கி அமைதியுடன் வாழ்வதைக் கண்டனர். உள்நாட்டு வாணிபத்திலும், கடல் வாணிபத்திலும், வானவியல், கணிதவியல் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பதை அறிந்தனர். ஆயுர்வேத மருத்துவம், யோகா அறிந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்தான். வேளாண்மை யில் விற்பன்னர்களாக தமிழர்கள் இருப்பதை கண்டனர். மொகஞ்ச தாரோவில் இரண்டு, மூன்று அடுக்கு மாடி வீடுகளுடன், கோட் டைகளுடன் காணப் பட்ட நாகரிகம் இது ஒன்று தான். நீண்ட தெருக்கள், வரிசை யில் அமைந்த வீடுகள். வீடுகளில் நான்கு அல்லது அய்ந்து அறைகள். அங்கு காணப்பட்ட மாட்டு வண்டி களிமண் பொம்மைகள் அதே வடி வில் இன்றும் மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மக் களிடம் புழக்கத்தில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. இம்மக்கள் குஜராத் லோதல் துறைமுகம் முதல் தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரகூய் என்ற திராவிட மொழி பேசும் பகுதி வரையிலும் மற்றும் மேகர்கார் பகுதி வரை காணப்பட்டனர். பாகிஸ் தானிலும் பிரகூய் என்ற திராவிட மொழி தற்போதும் பேசப்படுகிறது. சிந்துவெளி தமிழர் நாகரிகம் கி மு 3300 என இதுவரை கருதப்பட்டு வந்தது. மெகர்கார் பகுதியில் அண்மையில் நடந்த அகழாய்வு மூலம் தற்போது சிந்துவெளி நாகரிகம் 7000 ஆண்டு களுக்கு முற்பட்டது எனத் தெரியவந் துள்ளது. இதனை இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை அறிஞரு மான அகமது அசன் தனி  என்பார் தெரிவித்துள்ளார். சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் இருந்த அதே காலத் தில் தமிழகத்திலும் அந்த நாகரிகம் சிறப்பாகவே இருந்தது.
சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத் தின் பல இடங்களிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளது .
சிந்துவெளி மக்கள் தமிழ் எழுத்துக் களையும், முத்திரைகளையும் கையாண் டனர். இக்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டது. றி.ஸி. சர்க்கார் என்ற ஆய்வாளரும், ஆரியர்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார் .
ஆரியர்கள் செய்தது என்ன?
திராவிடர்கள், ஆரியர்களாகிய தங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; யாகங்களை ஏற்க வில்லை; மொழியினை ஏற்கவில்லை; கடவுள்களை ஏற்கவில்லை; தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்றவுடன் தமிழர்கள் மேல் வெறுப்புற்று அவர் களை தாசர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், கருப்பு நிறத்தை உடையவர்கள் என்றும் இழிவாக உரைத்தார்கள். திராவிடர்கள் தந்திரங்கள் தெரிந்த வர்கள் என்றார்கள். திராவிடர்களின் அறிவாற்றலை தந்திரங்கள் என்று உரைத்தார்கள்.
உட்டோ பல்கலை கழக ஆய்வு
உட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மைக்கேல் பாம்செட்  என்ற அறிஞர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை நிறுவு கின்றன .
அனலாபா பாசு  மற்றும் 11 அறி ஞர்கள் கொண்ட குழு (Ethnic India : A Genomic View ,with special reference to peopling  and structure  - research report)  ஆய்வு அறிக்கையின்படி ஆரியர் கள் இந்தியாவிற்கு வருமுன் திராவிட பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த கருத்தைத்தான் இந்திய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பாரும் தெரிவிக்கின்றார். இந்தியா வின் சிந்துவெளிப் பகுதிக்கு வந்த ஆரி யர்கள் கங்கைவெளி பகுதியில் பரவ ஆரம்பித்தனர். அவர்களின் ஆதிக் கத்தை தவிர்க்க திராவிடர்கள் தென் இந்தியா நோக்கி நகர்ந்தனர்.
திராவிடர்களின் தொன்மை, தமிழின் தொன்மை
திராவிடர்களின் மூதாதையர் வழி L  (HAPLOGROUP –L)  மரபுக் காட்டி  M 20 (Genetic Marker  M20) ஆகும். திராவிடர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள் ளார்கள். மூதாதையர் வழி L  (HAPLOGROUP- L)   என்பது  இந்திய வழி (INDIAN CLAN) என்று அழைக் கப்படுகிறது. திராவிடர்களின் மரபு காட்டி M 20  இன்றைய தென்னிந்தி யாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிக மாகவே காணப்படுவதாக டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் குறிப்பிடுகிறார்.
(ஸ்பென்சர் வெல்சின் புத்தகம் “Deep Ancestry Inside The Genographic Project”பக்கம் 217)
தமிழ் சமஸ்கிருதத்தைவிட தொன் மையானது. தென் இந்திய மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் 6000 ஆண்டுகள் தொன்மையானது. இதனை அமெரிக்க அறிஞர் ரோர் ஜோன்ஸ்  என்பார் தெரிவித்துள்ளார். தொன் மையான தமிழின் வடிவமாக தற்போது பிரகூய் மொழி பாகிஸ்தானின் பலு சிஸ்தான் பகுதியிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஈரான், ஈராக், கத்தார் பகுதியில் 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முடிவுக்குவந்த பின்னரும், ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த பின்னரும், சிந்துவெளியில் இருந்த திராவிட மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பலுசிஸ்தான் நோக்கிச் சென்றனர். இந்த வட திராவிட மொழி யாகிய பிரகூய் மொழி, சிந்து வெளியில் திராவிட மொழிகள் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.
-விடுதலை ஞாயிறு மலர்,6.12.14