புதன், 5 பிப்ரவரி, 2020

திராவிடம் சமஸ்கிருத சொல்லா!

கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா?

- மஞ்சை வசந்தன்
----------------------------------------------
“தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் “திராவிட என்பதாகும்” என்கிறார் கால்டுவெல்.

கால்டுவெல் இருண்டுகிடந்த மொழி வரலாற்றில் சிறு ஒளியேற்றியவர் என்பதை நாம் ஏற்கலாமே ஒழிய கால்டுவெடுல்லின் அனுமானங்கள் (யூகங்கள்) ஏற்கத்தக்கன அல்ல.

சிலர் கண்ணை மூடிக்கொண்டு கால்டுவெல்லை கரைத்துக் குடித்தவர்கள்போல், எதற்கெடுத்தாலும் கால்டுவெல் என்று காட்டுகின்றனர். ஆனால், அது தவறு.

தமிழ் என்பது உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழி. உலக மொழிகள் ஆங்கிலம், கிரேக்கம், சமஸ்கிருதம் உட்பட எல்லாம் தமிழிலிருந்து வந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், ஆய்வு முடிவுகளும் உள்ளன. அந்தந்த மொழியினரே அதை ஏற்கின்றனர்.

அப்படிப்பட்ட மூலத் தொன்மொழியைக் குறிக்கும் “தமிழ்” என்ற சொல்லே சமஸ்கிதத்திலிருந்து வந்தது என்கிறார் கால்டுவெல்.

“தமிழ்”, “திராவிட” என்ற இரு சொற்களும் முற்றிலும் வேறுபடுவனவாகத் தோன்றினாலும், பிறப்பியல் முறையால் அவை ஒரு தன்மைய என்ற முடிவையையே நான் கொள்கிறேன். அவை இரண்டையும் ஒன்றெனவே கொண்டால், தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல்லைத் தோற்றுவிப்பதைக் காட்டிலும், ‘தமிழ்’ என்ற சொல்லை திராவிட என்ற சொல்லிலிருந்து தோற்றுவிப்பதே எளிதாம் என்பது புலனாம்’’ என்கிறார் கால்டுவெல்.

ஒரு தலைசிறந்த ஆய்வாளர் என்று போற்றப்படுபவர், ஒரு மொழி சார்ந்த முதன்மையான ஆய்வில், அதுவும் அம்மொழியின் பெயர் சார்ந்த ஆய்வில் யூகங்களின் அடிப்படையில் கருத்துக் கூறியிருப்பது ஏற்புடைத்தன்று.

இவரின் முடிவுப்படிப் பார்த்தால் தமிழ் மொழியின் பெயரே (தமிழ் என்பதே) சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றாகிறது. தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை உடையது. சமஸ்கிருதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. அதுவும் தமிழிடம் பிச்சை பெற்று உருவாக்கப்பட்து. அப்படிப்பட்ட, பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொழியின் சொல்லிலிருந்து தமிழ் என்ற சொல் வந்தது என்பது நகைப்பிற்குரியது.

“தமிழ்” திராவிடம் என்று திரிந்ததா? திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததா? என்பதே கால்டுவெல் ஆய்வது.

அப்படி ஆய்வு செய்பவர் இன்னின்ன காரணங்களால் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று நிறுவ வேண்டும். அதற்கு கால வரிசைப்படியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும். ஆனால், அப்படி ஏதும் காட்டாமல், “தமிழ் என்ற சொல்லை திராவிடம் என்ற சொல்லிலிருந்து தோற்றவிப்பதே எளிதாம் என்பது புலனாம்” என்று கால்டுவெல் கூறுவது ஆய்வுக்கும் அழகல்ல; ஆய்வாளருக்கும் அழகல்ல.

இது  ‘எளிது’, ‘கடினம்’ என்ற அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஆய்வா?

ஆய்வு என்பது அரிதின் முயன்று, ஆதாரங்களைத் திரட்டி, அய்யம் திரிபு அற அறிவிக்கப்பட வேண்டிய பொறுப்பு அல்லவா? கால்டுவெல் வார்த்தைகளே அவர் ஆய்வின் நுனிப்புல் மேய்வைக் காட்டுகிறது!

அது மட்டுமல்ல, கால்டுவெல் ஆய்வு தலைகீழ் ஆய்வு.

திராவிட என்பது தமிழிலிருந்து திரிந்தது என்பதே நேரானது. இதை மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் அணுஅணுவாய் நுணுகி ஆய்வு செய்து தெளிவுபடுத்தியுள்ளார்; தெரியப்படுத்தியுள்ளார்.

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனின்றும் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும், பழங்காலத்தில் திராவிடம் என்பதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்ற சொல்லே.”

“தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம் என்று திரிந்தது என்கிறார்.

அது மட்டுமல்ல, சமஸ்கிருத மொழியில் ‘திராவிட’ என்பதற்கு வேர்ச் சொல்லே இல்லை! இதை ஆய்வாளர்கள் ஆழமாய் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ‘தமிழ்’ என்பது காலகாலமாக எப்படி திரிந்து திராவிடம் ஆனது என்பதற்கான காலச் சான்றுகள் வலுவாக உள்ளன.

1.            மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.

2.            ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.

தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமஸ்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சம1கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

3.            த்ரமிள என்ற சொல் வடஇந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி.597-608இல் செதுக்கப்பட்டவை.

இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.

த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.

5.            த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய் மொழியின் சமற்கிருத மொழி பெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும்போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தடயங்களை வைத்து நேர் நோக்கினால், தமிழ் திராவிடமாகத் திரிந்த பரிணாமம் புரியும். ஆனால், கால்டுவெல் தலைகீழாய் நோக்கி முடிவு கூறியது தவறு - பிழை ஆகும்.

“தமிழ்” - “திராவிட” சொல்லாய்வில் மட்டுமல்ல, பல சொற்களின் ஆய்விலும் தவறான முடிவை கால்டுவெல் வெளியிட்டுள்ளார்.

சோழர், பாண்டியர், கேரளர், ஆந்திரர், கலிங்கர் போன்ற தென்னிந்திய பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத சொற்களே என்கிறார்.

இவர் முடிவுப்படி எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பெப்றறவை என்கிறார். இவையும் தலைகீழ் முடிவுகளே!

கால்டுவெல்லின் முடிவுகளை பல மொழியில் ஆய்வாளர்கள் ஏற்காது மறுத்துள்ளனர். கால்டுவெல்லின் பிழையான ஆய்வு முடிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, மொழியியலாளர் மராத்தி மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியதாகவும், சில கன்னட, தெலுங்குச் சொற்களைத் தவிர்த்து இம்மொழி வேறு எந்தத் தென்னிந்திய மொழிகளுடனும் தொடர்பற்றது என்றும் எண்ணி இருந்தனர். இதற்குக் காரணம் கால்டுவெல் என்ற அறிஞர் சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகளுள் மராத்தியும் ஒன்று என்று கூறியதே. அதனால்தான் பெரும்பாலான மராத்திய மொழிற் சொற்கள் சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று நம்பினர். சில அடிப்படைச் சொற்கள் சமற்கிருத உச்சரிப்பை ஒத்திருப்பதால் அவை சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று எண்ணினர். ஆனால், சொற்றொடர் அடிப்படையில் பார்க்கும்போது வேறு விதமாக இருக்கிறது.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான இடப் பெயர்களைத் தமிழ் மூலம்தான் விளக்க முடியும். காரணம், வரலாற்றுக் காலத்துக்கு முன் மகாராட்டிரத்தில் வசித்த மக்கள் தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசி இருக்க வேண்டும். நாட்டுப்புறப் பண்பாடு, கிராமக் கடவுளர்கள் வழிபாட்டு முறைகளில் காணப்படும் சொற்கள் முழுமையாகத் தமிழுடன் தொடர்புடையனவாக உள்ளன. பெரும்பாலான இச்சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இதிலிருந்து மராத்தியில் காணப்படும் சொற்களின் பழமை நன்கு புலப்படுகிறது.

மராத்திய மொழியில் காணப்படும் கன்னட, தெலுங்குச் சொற்கள் தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் பொதுச் சொற்களே. இருப்பினும் அவைகள் உச்சரிப்பிலும், தொடரியலிலும் கன்னடம், தெலுங்கை விடத் தமிழ் வேர்ச் சொற்களோடு அதிகம் ஒத்திருக்கின்றன.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான கிராம மக்களின் நடைமுறைச் சொற்களும், சமற்கிருத இலக்கியச் சொற்களை விடத் தமிழ் நாட்டுப்புறச் சொற்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. படிக்காத இம்மக்களின் மொழிநடை தமிழ் மூலத்தைக் காட்டும் குறிப்புகள் என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

பழங்கால மராத்தி மொழி தொல்காப்பியத் தமிழ் இடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளை இலக்கணம் தொடரியல் மூலமாக விளக்க முடியும். இவைகள்  உண்மையில் மராத்தியியலில் உள்ள, சமற்கிருத மொழியால் விளக்க முடியாத இருட்டுகளைப் போக்கும் ஒளி என்றால் மிகையாகாது.

பல சமற்கிருத மொழிச் சொற்களின் பொருளையும் மூலத்தையும் உணர்த்தும் மொழியாக மராத்தி மொழியைக் கொள்ளலாம். மராத்திய மொழியைச் சமற்கிருதம் - தமிழ் ஆகியவற்றை இணைக்கும் மொழியாகவும் கொள்ளலாம். சமற்கிருதம், மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பெரும்பாலான சொற்கள் பொதுவானவை. இச்சொற்கள் இடையே, உச்சரிப்பு, தொடரியல்களில் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக விளக்க முடியாது.

விஸ்வநாத கைரேவுக்கு முன்னர்த் தேவநேயப் பாவாணர் என்ற தமிழறிஞர் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழிலிருந்து முதலில் திரிந்த மொழி தெலுங்கே என்றும், அது திரிந்துதான் பிற வடநாட்டு மொழிகளானதாகக் கூறுகிறார். ஒரு காலத்தில் கொடுந்தமிழாக இருந்த மொழிகள் ஒரு பிரிவு தமிழர் விந்தியமலைக்கு அப்பால் குடியேறியபோது திரவிடம் என்னும் கிளைமொழிகளாகத் திரிந்து விட்டதாகவும், அவ்வாறு திரிந்த மொழிகளே சூரசேனி, மாகதி, மகாராட்டிரம் போன்ற பிராகிருத மொழிகள் என்கிறார். அவை மேலும் திரிந்து இக்கால இந்தி, வங்காளி, மராத்தி, குசராத்தியாகி விட்டதாகக் கூறுகிறார். இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதுடன் தொடரமைப்பிலும் இவை தமிழையே முற்றிலும் ஒத்திருக்கின்றன என்கிறார். அதனால்தான் மராத்தியும், குசராத்தியும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளாய்க் கொள்ளப்பட்டு, பஞ்ச திரவிடத்தின் இரு கூறுகளாய்க் குறிக்கப்பட்டதென்கிறார்.

அவர் வட திரவிடத்திலும், ஆரியத்திலும் மூவிடப் பெயர்களில், தன்மைப் பெயரடி மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே என்கிறார்.

சில தெலுங்குச் சொற்களின் முதலிலுள்ள உயிர்மெய் இடை ரகரம் செருகப்படும் என்கிறார்.

எ.கா.:

தமிழ்               தெலுங்கு

பொழுது          ப்ரொத்து

மண்டு              ம்ரண்டு

இவ்வழக்கே வடசொல் திரிபுகளுக்கு வழிவகுத்ததாகக் கூறுகிறார்.

எ.கா.

தமிழ்           வடமொழி

தமிழ்              த்ரமிள

படி                        ப்ரதி

பதிகம்              ப்ரதீக

மதங்கம்        ம்ருதங்க

மெது             ம்ருது

 

தமிழ்ப் பண்டிதர்களின் தவறுகள்:

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடிச் சுட்டிக்காட்டியதுபோல, தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் ஆழமான, நுட்பமான, வரலாற்று அடிப்படையிலான ஆய்வுகளைச் செய்யாது, நுனிப்புல் மேய்கின்றவர்களாக இருப்பது வேதனைக்குரியது.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு’’

என்ற வள்ளுவரின் வழிகாட்டுதல்படி ஆய்வுகளையும், முடிவுகளை ஏற்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது வரலாற்றுப் பிழையாகும்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்டிதர்களில் பலர் ஜுரம், ஜலம், பங்கஜம், ஹிருதயம், ஹிமயம் போன்ற பல சொற்களை சமஸ்கிருதச் சொற்கள் என்று கூறி, அவற்றைத் தமிழ்ப்படுத்துகிறோம் என்று, ‘சுரம்’, ‘சலம்’, ‘பங்கயம்’, ‘இதயம்’, ‘இமயம்’ என்று எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறான முடிவு.

இவை போன்ற சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல. அவை தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதச் சொற்களாக மாற்றிக் கொண்ட சொற்கள்.

“சுரம்’’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை, ‘ஜு’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டு ஜுரம்  என்று ஆக்கிக் கொண்டனர். ‘சலம்’ என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘பன்கயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘குருதி ஆயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைச் சேர்த்துத் திரித்தும், ‘இமயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும் சமஸ்கிருதச் சொல்லை ஆக்கிக் கொண்டனர். இதை அறியாது, அதை மீண்டும் தமிழ்ப் படுத்துகிறேன் என்பது அறியாமையின் அடையாளமாகும்.

ஒரு சொல் எந்த மொழிக்கு உரியது என்பதை உறுதி செய்ய வேர்ச் சொல் ஆய்வு கட்டாயம். இவைபோன்ற சொற்களுக்கு தமிழில்தான் வேர்ச்சொல் உண்டே ஒழிய சமஸ்கிருதத்தில் இல்லை.

எடுத்துக்காட்டாக:- ‘சுரம்’ என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் ‘சுர்’ என்பது. ‘சுர்’ என்பது சூட்டைக் குறிப்பது. நெருப்புப் பட்டால் ‘சுர்’ என்று சுட்டுவிட்டது என்பர் என்பதை இங்கு இணைத்து நோக்கித் தெளிய வேண்டும். ‘சலம்’ என்ற தூய தமிழ்ச் சொல், நீர் ‘சல சல’ வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர். சமஸ்கிருதத்தில் இதற்கான வேர்ச்சொல் இல்லை. இப்படியே மற்றைய சொற்களும்.

‘அரசன்’ என்ற தூய தமிழ்ச் சொல்லையே ராஜன் என்று இடவலமாக்கி நெடிலாக்கல் முறையில் சமஸ்கிருத சொல்லாக மாற்றினர்.

அதாவது, அரசன் என்பதில் முதல் இரண்டு எழுத்தை இடவலமாக மாற்றினால் ர+அ=ர. இதை நெடிலாக்கினால் ‘ரா’. ‘ரா’ என்பதுடன் ‘சன்’ என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்தால் ராசன். அதில் ‘ச’ வை வட எழுத்து ‘ஜ’வாக மாற்றி ராஜன் என்று ஆக்கினர். இதை அறியாது ராஜன் என்பதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று ‘ராசன்’ என்று எழுதுவது அறியாமை! தமிழில் அரசன் என்று எழுதுவதே சரி. இராசன் என்று எழுதுவது தப்பு.

எனவே, உலக மொழிக்கெல்லாம் மூலமொழியான தமிழின் தொன்மையும், வளமையும், அது அளித்த கொடையம் அறியாது, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கருதுவது ஆழ்ந்த ஆய்வறிவின்பாற்பட்டதல்ல என்பதை அறிய வேண்டும்.

எனவே, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயன்றி, திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததல்ல!

=====

திங்கள், 20 ஜனவரி, 2020

திராவிடத்தின் பேரால் ஆட்சி உரிமை

வருடம் : கி.பி.1862
இடம் : ராமநாதபுரம் சமஸ்தானம்..
ஆண்ட மன்னர் : கிழவன் சேதுபதி ...

            இன்றைய இந்தியா எனும் நிலபரப்பு மொத்தமும்  ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு கீழ்சென்ற பிறகு, பிரிட்டிஷ் மகாராணி ஒரு சட்டத்தை இங்கிலாந்தில் நிறைவேற்றுகிறார்.அது என்னவென்றால் தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்ப்பட்டு இருக்கும் இந்திய நிலப்பரப்பில் ஆளும் மன்னரோ,பாளையக்காரர்களோ,ஜமீன்களுக்கோ ஆண் வாரிசு இல்லையெனில் ஆளும் மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்தபின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தம் என சட்டமும் இயற்றினார்கள்.

      இப்போது மேலே சொன்ன ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண்பிள்ளையை தன் உறவினர்களின் சம்மதத்தோடு தத்தெடுக்கிறார்.முத்துராமரலிங்கத்தை தத்தெடுத்து வளர்த்த பின் சிறிது காலத்தில் ராணி இறந்துவிட ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்..

 அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராமநாதபுரம், சிவகங்கை என எல்லாம் ஒன்றிணைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியரான ஆங்கிலேயர் மன்னர் இறந்த தகவலை லண்டனில் உள்ள மகாராணிக்கு தெரிவித்து,உடனடியாக  அவர் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் ராணி சார்பில் தாங்கள் முத்துராமலிங்கத்தை தத்தெடுத்தது சரியே என வாதாடினார்கள் சமஸ்தானத்தார்.  சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தத்தெடுத்த முத்துராமலிங்கம் மன்னர் பதவியேற்றது சரியே என தீர்ப்பு வருகிறது...

அன்று பிரிட்டிஷ் அரசின் வெள்ளைய அதிகாரியான ஆட்சியருக்கு சட்ட ஆலோசனை தரும் சாஸ்திரம் கற்ற பார்ப்பனர்கள் இங்கு தான் தங்களின் விஷம விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் அந்த வழக்கு சமஸ்தானத்திற்கு எதிராக லண்டனில் உள்ள பிரிவிவ்யூ கவுன்சிலுக்கு வழக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாஸ்திர வேதவிற்பன்னர்கள் ஆட்சியருக்கு சொல்லி கொடுக்கிறார்கள், அன்றைய நாளின் ஹிந்து சட்டப்படி,பல ஸ்மிருதிகளின் படியும் ஒரு ஹிந்து விதவைபெண் தத்தெடுக்கவேண்டுமானால் ஆளும் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்கவேண்டும் என ஹிந்து சட்டத்தின் மூலமான ஸ்மிருதிகள் சொல்கின்றன,எனவே முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது என கொள்ளையடிப்பதற்காக வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை தந்தனர்.

இந்த வழக்கு நடந்த 1867-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சிலில் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின்( ARYAN SCHOOL OF LAW) கீழ் வராது.எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (DRAVIDIAN SCHOOL OF LAW) கீழ் வரும் என ஆணித்தரமாக வாதாடி தீர்ப்பு முத்துராமலிங்கத்திற்கு சாதகமாக அந்த வழக்கை வென்றது மிகமுக்கியமான திராவிட இயக்கத்தின் முன்னோடியான சட்ட வரலாறு..்.

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (MOORES JOURNAL) எனும் லண்டன் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கு இடம்பெற்றது.நம் இந்திய ஒன்றியத்தின் சட்ட புத்தகத்தில் "ஹிந்து குடும்ப சட்டத்திலும்" இடம்பெற்றிருக்கிறது.

அந்த திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் வழியே தான் பிற்காலத்தில் திராவிட இயக்க முன்னோடிகளும்,பெரியாரும் திராவிடர் கழக அமைப்பை நிறுவி தமிழர்களின் நலன்களுக்காக தங்களின் பெரும் உழைப்பை செலுத்தினார்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் அறியாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என அறியாமையால் அலறும்,திராவிடம் என்ற சொல்லே கிடையாது என உளரும் கும்பலுக்குமான பதில் இதுதான்...

👍👍👍
-  கட்செவி வழியாக

புதன், 18 டிசம்பர், 2019

இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார்?

வகுப்புப் பிரிவினை வந்தது எப்படி?- மனுதர்மத்தின் சரிதையும் அதன் கொடுமையும் - ஓர் தமிழறிஞரின் ஆராய்ச்சி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

ஆரியர் வருகையால் தமிழர் சீர் குலைந்து ஆரிய ஆதிக்கத்திற்கு அடிமையாயினரென்றும் அதனை நீக்கவே தமிழ்நாடு தமிழருக்கேயென்னும் கிளர்ச்சி தோற்றுவிக்கப் பட்டிருக்கிறதென்றும் நாம் இன்று கூறுவதை கூட சுயநல மென்றும் வகுப்பு வாதமென்றும் கூறும் தேசீயவாதிகளென் போர்களின் மயக்கம் தெளிவதற்காக சுமார் 10 ஆண்டுகட்கு முன் ஆதிதிராவிடர் முற்கால தற்கால நிலைமை என்ற தலைப்புடன் திருநெல்வேலி ஜில்லா மேலப்பாளையம் தோழர் மா. பெ.க.அழகர்சாமி அவர்களால் பண்டைத் தமிழர் நிலையினையும், ஆரியர் சூழ்ச்சிகளையும் விளக்கி கோலார் தங்கவயல் தமிழன் பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையில் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்.

இந்தியாவின் பூர்வீகக் குடிகள்

இற்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் தற்கால இந்தியாவென்று அழைக்கப்படும் இத்தேசம் பெருங்காடு களடர்ந்த ஓர் பூபாகமாயிருந்தது. இப்பெருங்கானகத்துக்கு ஆதாரமாகிய மலைகளிலும், குகைகளிலும் "கோலர்" என்னும் ஓர் சிறு வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மனிதர்கள் கண்ணுக்குத் தென்படாமலே வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிறிதும் நாகரீகமில்லாதவர்கள். இவர்கள் மனிதர்க ளோடு நெருங்கிப் பழகுங்கால், இலை, தழை முதலியவை களைக் கொடிகளில் கோர்வையாகக் கட்டி இடையில் (இடுப்பில்) ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள். மற்ற காலங்களில் சுயேச்சையாகத் திரிவார்கள். இவர்கள் கரிய நிறத்தவர்கள்... காய், கனி, கந்தமூலாதிகளைப் உண்பார்கள். தேனருந்துவார்கள். மலையில் கிடைக்கும் மிருகங்களின் தந்தம், எலும்பு, பலவர்ணக்கற்கள் முதலியவற்றை அழகு பெற வரிசையாகக் கோர்த்து ஆபரணமாக காதுகளிலும், கைகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசுவது "கா', "கூ"ஜெ'னுஞ் சப்தத்தோடு கூடிய ஓர் பாஷை யாகும். இவ்வகுப்பைச் சேர்ந்த குடிகளை இக்காலத்திலும் குடகு நாட்டையடுத்துள்ள பெரிய மலைகளிலுள்ள குகை களில் காணலாம். சிற்சில இடங்களில் கோலர்களை திராவிடர் அடக்கியாண்டு வந்திருக்கின்றனர்.

மற்றொரு வகுப்பார்

இந்நாட்டின் பெருங்காடுகளின் சிற்சில இடங்களிலும், கிழக்கு சமுத்திரக்கரையையடுத்துள்ள சமபூமிகளிலும், கங்கை நதியின் மருங்கிலுள்ள தாழ்ந்த சமவெளிகளிலும் மற்றோர் வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மிகுந்த உழைப்பாளிகள், நாகரீகமுடையவர்கள். பஞ்சால் நெய்யப் பட்ட வஸ்திரங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார் கள். மாநிறம் போன்றவர்கள். நிலங்களை உழுது சமைத்து பயிரிட்டுதானியங்களை உண்பார்கள். பசுவின் பாலருந்து வார்கள். முத்து, பவழம், முதலியவற்றை அணியாகக் கோர்த்து ஆபரணமாக கழுத்தில் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசும் பாஷை தமிழ், இவ்விரண்டு வகுப்பாரே இந்நாட்டின் பூர்வீகக்குடிகள்.

ஆரியர்வருகை

இன்னவர்களின் வாழ்க்கை இவ்வாறிருக்க, மத்திய ஆசியாவினின்றும் இன்னொரு சாரார் வடமேற்குக் கண வாய்களின் வழியாய் இந்நாட்டில் வந்து குடியேறினார்கள். இவ்வகுப்பார் குளிர்ச்சியான பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்களான படியால் திடகாத்திரமாயிருந்தார்கள். ஆட்டு உரோமங்களால் நெய்யப்பட்ட கம்பளங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள், புது நிறத்தவர்கள், ஆடு, மாடுகளை மந்தை மந்தையாக வளர்த்து வந்தனர். குளிர்ச்சியைப் போக்கி உஷ் ணத்தைத் தருவதான மாமிசத்தை சமைத்து உண்பார்கள் "சோமபானம்" என்று சொல்லப்படும் ஓர் வகைச் செடியிலிருந்து இறக்கப்படும் மது (லாகிரியைத் தரும் வஸ்து)வை அருந்துவார்கள். வட நாடுகளில் கிடைக்கும் உருத்ராட்சத்தைக் கோர்த்து சிகை யிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள். மீசையுடை யவர்கள். ஆயுதந்தாங்கியவர்கள். தெய்வப்பற்றுள்ளவர்கள். தங்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டும் வந்தனர். இவர்கள் நிலையான குடிகளல்ல! அடிக்கடி தங்கள் வாசஸ்தானத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்கள் வாசஸ் தானத்தை மாற்றிக் கொள்ள சாதகமான குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாஷை சமஸ்கிருதம். இவர்கள் வட திசையிலிருந்து வந்து குடியேறினவராதலால் தங்களை வட நாட்டார்" அல்லது "ஆரியர் என்றும், தங்கள் பாஷையை வடமொழி" அல்லது "ஆரியம் ! என்றும், இந்நாட்டு பூர்வீக குடிகளை தென்றேயத்தவர் அல்லது திராவிடார்' என்றும் அவர்கள் பாஷையைத் தென்மொழி அல்லது "திராவிடம்", என்றும் வழங்கிவந்தனர்.

தேவகாலம் -- ஆரிய மதம்

ஆரியர்கள் இந்நாட்டில் வந்து பூர்வீக குடிகளைக் கண் ணுற்றதும் தாங்களும் அவர்களைப் போலவே நிலையான வாசஸ்தானத்தை ஏற்படுத்த ஆவல் கொண்டு கங்கை நதியின் கரையையடுத்துள்ளவர்களோடு சண்டையிட்ட னர். இவர்கள் ஆயுதப் பயிற்சியுள்ளவரானதாலும், பூர்வீக குடிகளிடம் சண்டைக்கு வேண்டிய ஆயுதங்களில்லாமை யாலும் இலகுவில் வெற்றி பெற்றனர். ஆரியர்கள் எழுதும் வன்மையுடையவர்களாதலின் இந்த சண்டையை "தேவா சுர யுத்தம்" என்று வர்ணித்து ஸ்கந்த புராணத்தை வரைந்து உள்ளார்கள். இவர்கள் கங்கை நதியையடுத்துள்ள தாழ்ந்த சமவெளிகளில் பாஞ்சாலம், அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம், அயோத்தி, கண்டகி, கோசலம், மிதுலை, கோசி முதலிய பெயரோடு பல பட்டணங்களை நிருமாணித்தனர். ஆண்டு கள் ஓராயிரம் கடந்தன. இவர்கள் ஜனத்தொகை அதிகமாகி யது. தலைமை வகிப்பதற்குப் பிராமணர்கள் என்றழைக் கப்படுவோர் இக்காலத்தில் பெருமுயற்சி செய்து வருகிறது போலவே அக்காலத்திலும் தலைமை வகிப்பதற்காக ஆரியர்களிடையில் பிளவுகளேற்பட்டு சச்சரவுகள் நடந்தது. முடிவில் பெருஞ்சண்டையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியையே "வியாசர்" என்னும் காரணப் பெயர் பூண்ட ஓர் ஆரியர் கட்டுரையாக வரைந்து "பாரதம்" என வழங்கினார். இன்னும் இந்த வியாசர் என்பாரால் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் எழுதப்பட்ட காலமுமிதுவேயாகும்.

ஆரிய-திராவிட கலப்பும்

நான்கு ஜாதிப் பிரிவினையும்

ஆரியர்கள் ஜனத்தொகை அதிகமாய்விட்டபடியால் அவர்கள் உணவுக்கு வேண்டிய மாமிசம் கிடைக்கவில்லை. அவர்கள் பின்னும் தெற்கே சென்று பூர்வீக குடிகளிடையில் பலவித பாட்டுகள் பாடியும், அதற்கேற்ப நடித்தும், சம்பிர தாயமாகப் பேசியும் அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள். இதுவே 'நாடகம்' எனப்படுவது. 'ஆரியர்கள் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பதே போல் பூர்வீக குடிகள் உவந்த ளிக்கும் உணவுப்பொருள்களையேற்றும் உண்டும் காலங் கடத்தி வந்தனர். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்பதே போல் ஆரியர்கள் தங்கள் மாமிச உணவை அனாவசியம் - அனாச்சாரமெனத் தள்ளி, தானிய உணவை பிரியமாய் உண்ணவாரம்பித்தனர். பூர்வீக குடிகள் உணவுப் பொருள்கள் கொடுக்க மறுத்த விடத்து அவர் களிடும் பயிர்களை அறுத்தும், தானியங்களை கொள்ளையிட்டும் வந்தனர் ஆரியர்கள். ஆரியர்கள் உபத்திரவங்களைப் பொறுக்க முடியாத பூர்வீக குடிகள் தங்களைத் தாங்களே காப்பாற்றவேண்டி, ஆயுதங்களைத் தயாரித்தனர்.

வகுப்புப் பிரிவினை

இவ்வாறு பூர்வீக குடிகள் (பூர்வீக திராவிடர்கள்) தங்களுடைய பலத்தை அபிவிருத்தி செய்து கொண்டதும், பார்த்தார்கள் ஆரியர்கள், தங்களுடைய திருட்டுத்தனம் நடவாதெனக் கண்டனர். ஆகவே ஒரு சில பூர்வீக குடி களோடு சமாதானம் செய்து கொண்டனர். அத்துடனிருக்காது திராவிடர்கள், ஆரியர் தெய்வங்களை வணங்கும்படியாக வும் செய்து வந்தனர். கலப்பு மணமும் செய்து கொண்டனர். ஆரிய-திராவிடர்கள் (கலப்பு ஜாதியார்) பெருங்குழுவினராய் விட்டமையாலும், சுயநலங்கருதிய ஆரியர்கள் அவர்க ளைக் கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள் ளும் பொருட்டும் அவர்களைப் பிரம்ம, க்ஷத்திரிய , வைசிய, சூத்திர எனும் நான்கு பிரிவினராகப் பிரித்து தாங்கள் முதல ணியினின்று வாழ்க்கை நலம் பெற்றனர்.

பூர்வீக திராவிடர்களும் பவுத்த மதமும்

ஆரியர்கள் - வஞ்சக சூழ்ச்சிக்கு இடங்கொடாத பூர்வீக திராவிட மக்கள், கலப்புற்ற ஆரிய-திராவிடர்களை நீக்கி தனியாக வாழ்ந்தனர். தென் பாகத்திலுள்ள பூர்வீக திராவிடர் களையும், மத்திய பாகத்திலுள்ள ஆரிய - திராவிடர்களையும் பூர்வீக திராவிட அரசர்களே ஆண்டு வந்தனர். வருடங்கள் ஓராயிரம் சென்றன. (கி.மு. 1000-0) மலையாளம், கொச்சி முதலிய நாடுகளை ஆட்சி செய்து வரும் மன்னர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரங்களையே (நட்சத்திரங்களின் பெயர்களையே) தங்கள் பெயராக ஏற்றுக்கொள்ளுவது போல பூர்வீக திராவிட (தமிழ்) அரசர்களிடையில் அவர்கள் பிறந்த வருஷத்தின் பெயரையும் அவர்கள் பெயராக வழங்கி வந்தனர் ஒரு சிலர். இஃதிவ்வாறாக மத்திய பாகத் திலுள்ள ஆரிய-திராவிடர்களை - அரசாண்டு வந்த சாக்கி யர் மரபிலுதித்த மன்னன் சுத்தோதனர் என்பாருக்கு (கி.மு. 550) சித்தார்த்தி வருடம் ஓர் ஆண்மகவு பிறந்தது. இக் குழந்தைக்கு சித்தார்த்தர் என நாமகரணஞ் சூட்டினர். இவர் வாலிப வயசையடைந்ததும் ஆரிய திராவிடர்களால் செய்யப்படும் பலி, மிருகவதை முதலியவற்றைக் கண்டு அவற்றை தடுப்பதற்கான வழிகளைச் சிந்தித்தார். முடிவில் பூர்வீக திராவிடர்களின் கொள்கையை ஆதாரமாகக் கொண்டே சில அரிய உபதேசங்களை ஜனங்களிடையில் போதித்தார். இவரை எல்லாரும் பின்பற்றினார்கள். இவர் வெகு காலம் ஜீவந்தராய் வாழ்ந்தபடியால் இவரை பெரிய கிழவனென்று பொருள்படும் பவுத்தர் (புத்தர்) என்று அழைத்தனர். இவர் உபதேசத்தை ஏற்றுக் கொண்டவர்களை பௌத்த சமயிகள் (புத்த மதத்தினர்) என்றும் வழங்கி வந்தனர். புத்த மதம் தலை சிறந்து நின்றது. இன்னாளில் தென்னாட்டில் இராவணன், மகாபலி, நந்தன் முதலிய பூர்வீக திராவிட மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களை வஞ்சகமாக ஆரியர்கள் கொன்று அன்னவர்கள் நாடுகளை யும் ஆரியர்கள் கைப்பற்றின கதைகளை விரிக்கிற்பெருகு மென விஞ்சி விடுத்தனம். இவ்வாறு ஆன நிகழ்ச்சிகள் புராணங்களாகவும் பிற்காலத்தில் சங்கராச்சாரி என்பவரால் மகாவிஷ்ணுவின் பத்து அவதார திருவிளையாடல்களாகவும் கற்பனா சக்தியுடன் எழுதப்பட்டன.

- தொடரும்

- விடுதலை: 18.1.1940

- விடுதலை நாளேடு 18 12 19

18.12.2019 அன்றைய தொடர்ச்சி

வினாயக புராணம் கூறுவது

மேலே சொல்லப்பட்ட ஸ்கந்த புராணம், வேதம், பாரதம், இராமாயணம், பாரதம் முதலியகட்டுரைகளால் பூர்வீக திராவிடர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பார்க்கிலும் அதிகமான தீமையைத் தரும் நூல் வேறொன்றுளது. . அதனைப் பற்றி சிறிது கூறுவோம். ஆரியர்களே எல்லாரிலும் மேம்பட்டவர்கள்; அவர்களே கடவுளை வணங்கத் தகுதியுள்ளவர்கள்; ஏனையோர் ஆரியர்களையே வணங்க வேண்டும் என வியாசர் என்பவரால் எழுதப்பட்ட நூற்கள் அனந்தமாயினும் அவற்றுள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பற்றுடையவையாவிருப்பதையுணர்ந்த ஆக்கியோர் இறுதியாக எழுதப்பட்ட வினாயக புராணத்தில் கூறியிருப்ப தை நம் வாசகர்கள் நன்கறியுமாறு இங்கு குறிப்பிடுகிறோம். அவையாவன, "நம்மால் எழுதப்பட்ட நூற்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்ட கொள்கையுடையவையாயிருப்பது எனது குற்றமன்று. அவைகள் அவ்வக்காலங்களில் கால வேறுபாட்டுக்கும் ஜனங்களுடைய மனமகிழ்ச்சிக்கும் தக்கவாறு எழுதப்பட்டவைகளாகும். ஆதலால் நூற்களை வாசிக்கும் வாசகர்களே உண்மையை ஆராய்ச்சி செய்து நடந்து கொள்ளல் வேண்டும்.

மனுதர்ம வரலாறு

ஆதலால் பிற்காலங்களில் நூலாராய்ச்சி வல்லுநர் ஒருக்கால் இக்குற்றங்களைக் கண்டு ஆரியர்களால் எழுதப்பட்ட நூற்களனைத்தும் வெறுங்கட்டுரைகளெனத் தள்ளிவிடுவாராயின் அக்கால ஆரியர்களின் சந்ததிகளுக்கு அத்துணை மேம்பாட் டுக்கு வழியில்லையென்றும் ஆரி யர்கள் சூழ்ச்சியை பெருங்கூட்டத்தினரான கலப்புற்ற ஆரிய திராவிடர்களும் கலப்பற்ற பூர்வீகக் குடிகளும் அறிந்து கொண்டால் ஆரியர் சந்ததிகளுக்கு துன்பமுண் டாகுமென்றுங்கருதிய ஆரியர்கள் தங்கள் சந்ததிகளை சுகமாக வைக்கவேண்டி எக்காலத்திலும், யாவராலும் தள்ளற்பாலதல்லாத ஓர் நூலை இயற்றவேண்டுமென வெண்ணினர். அவ்வெண்ணத்துக்கு, "கூத்துக்கு ஏற்ற கோமாளி" என்பதே போல், அக்காலத்தில் ஆரியர்களுக்கு தலைவராயிருந்து பாலனம் பண்ணி வந்த ஏழாவது மனு வைசுதன் என்பவருமிசைந்தார். இவர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு பல ஆரிய சிற்றரசர்களையும் ஆண்டு வந்தார். அரசர்களில் முதன்மை பெற்றவர்களுக்கு 'மனு' வென்ற பட்டம் அக்காலத்து வழங்கி வந்தமையால் இவரும் வைசுத மனுவென்னும் பெயரோடு ஆட்சி புரிந்து வந்தார். பிராமணர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் பூஜை இவரையே குறிக்குமாதலால் இவருக்கு சிரார்த்தமனு வென்னும் காரணப்பெயர் வழங்கலானது. இவர், சுயநலங்கருதிய ஆரியர்கள் பலரை அங்கத்தினராகக் கொண்ட ஓர் ஆலோசனை சபையை ஸ்தாபித்து ஓர் நூலை எழுதினார்.

அதில் கூறப்பட்டவை

இந்நூலில், பிராமணர் எனப்படுவோரை எல்லாரும் வணங்க வேண்டும்; அவர்களுக்கு திருப்தியான உணவளிக்க வேண்டும்; பின்னர் அவர்கள் கருதியவற்றால் சந்தோஷிப்பிக்க வேண்டும்; அவர்களுக்கு எள்ளத்தனை துன்பமியற்றியவர்களும் அவர்களிஷ்டப்படி நடவாதவர் களும் கடுந்தண்டனையடைய வேண்டும்; பிராமணர்க ளுக்கு மற்றவர்களால் துன்பமேற்பட்டவிடத்து அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசர்களுடைய தயவு இன்றியமை யாததுவாதலால் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ஆயுதப்பயிற்சி பெற்றவர்களை சத்திரியர்கள் எனக்கூறி பின்னுள்ள இரு வகுப்பினரும் சத்திரியர்களை வணங்க வேண்டும்; அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று எழுதி வைத்தனர்.

பிரித்தாளும் தந்திரம்

இந்நூலில் பூர்வீக திராவிடர்களை இம்சிப்பதற்காகவும் அவர்களினின்றும் ஆரியர்-திராவிடர்களை விரோதப்படுத் தவும் பிரித்தாளுந் தந்திரம் கையாளப்பட்டது. ஆரிய-திராவிடர்களை (தாங்களுமுட்பட) நான்கு வர்ணமாக வகுத்து வர்ணாசிரமப்படி சட்டம் அல்லது நீதி ஏற்படுத்திய இந்நூலில் பூர்வீக திராவிடர்களை "நீசர்" என்றும், "தீண்டப் படாதவர்கள்" என்றும் ஏளனமாக எழுதியதுமின்றி மனித வர்க்கத்தினின்றும் விலக்கி விட்டார்கள்.

சகோதரர்களே! வாசகர்களே!! பார்த்தீர்களா ஆரியன் தந்திரத்தை இக்காலத்தும் பாண்டித்யமடைந்த விற்பனர் களால் வேதம், இதிகாசம், புராணம் யாவும் பொய்மையுடைத் தெனக் கண்டறியப்பட்ட இக்காலத்தும், காருண்ய ஆங்கில அரசாங்கத்தாரால், "இந்துக்களால் எழுதப்பட்டவைகள்" வீண் கட்டுரைகள் எனத் தள்ளிவிடப்பட்ட இக்காலத்தும் ஆரிய சூழ்ச்சியால் எழுதப்பட்ட மனு நீதியை அறவே தள்ளிவிட முடியாமல் அந்த சட்டத்தின் பெரும்பாலும் இன் னும் அமுலிலிருந்து வருகிறது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்றவாறு மனு நீதி இயற்றப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவும் பழங்கதைகளில் ஒன்றாய்விட்டது. இதன் ஆயுளுங்கிட்டிவிட்டது. இரவும் அந்த நீதி நூல் ஒரு தலைச் சார்பாக எழுதப்பட்டதென்பது வெள்ளிடை மலையெனத் தெள்ளிதில் விளங்குகிறது. ஆத லின் இக்காலத்தில், நவீன நாகரீகத்திலீடுபட்டு வருமிக்காலத் தில் பழங்கதையான மனு நீதியைக் கையாளுவது நியாய மானதன்று என உணர்ந்து தக்கன செய்யத் தமிழர்முன் வருவாராக.

- விடுதலை: 18.1.1940

 -  விடுதலை நாளேடு, 20.12.19

செவ்வாய், 26 நவம்பர், 2019

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை தமிழர் தலைவரிடம் அளித்து ஆதரவு கோரினர்

மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு, மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்த்து கூட்டமைப்பு உருவாக்கம்!

*மும்மொழிக் கொள்கை என்பதன் பெயரால் இந்தியை திணித்திடும் 2019 தேசியக் கல்விக் கொள்கையை கைவிடுக!

*உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியில் வழக்காடுவதற்கு உரிய ஆணை பிறப்பித்திடுக!

தென் மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து தங்களது "குப்பம் பிரகடனத்தின்" கோரிக்கையினை அளித்தனர். (சென்னை பெரியார் திடல் - 15.11.2019)

சென்னை, நவ.16 தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பகுதியினை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள 'திராவிடர் செயற்களம்' அமைப்பின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை - பெரியார் திடலில் சந்தித்து தங்களது அமைப்பின் சார்பாக மத்திய அரசிற்கு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேற்றத்திற்கான மனுவினை அளித்தனர். உரிய வழிகாட்டுதலையும், ஒருங்கிணைப்பையும் திராவிடர் கழகத்தின் தலைவரிடம் வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் 15.11.2019 அன்று சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரைச் சந்தித்து தங்களது அமைப்பு பற்றி எடுத்துரைத்தனர். தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளின் மொழி உரிமையினைப் பாதுகாத்திடவும் இந்தி மொழி மேலாதிக்கத்தினை தடுத்து நிறுத்திடவும், அரசியல், பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகாமல் தென் மாநிலங் களைப் பாதுகாத்திடவுமான நோக்கங்களைக் கொண்டு திரா விடர் செயற்களம்(We are South Indians) 
எனும் அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் நாள் திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் சந்தித்து, தங்களது அமைப்பின் நோக்கங்களைக் கோரிக்கை களாக்கி குப்பம் பிரகடனம்(Kuppam Declaration) என வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல்கட்சித் தலை வர்கள், சமூக அமைப்பினரைச் சந்தித்து தங்களது அமைப்பின் கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்தி மொழித்திணிப்பை வலுவாக எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்து தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். நேற்று (15.11.2019) சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து குப்பம் பிரகடனத்தில் உள்ள கோரிக்கைகளை விளக்கி திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பினை வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகள்

இந்தி மேலாதிக்கத்திற்கு தூண்டுதலாக உள்ள அரசியல் சாசனத்தின் அரசமைப்பு உறுப்புகள் 343, 344, 345, 346 மற்றும் 351 திருத்தப்பட வேண்டும், இந்தி மொழிக்கான சிறப்புரிமையை நீக்கரவு செய்ய வேண்டும்.

வருகின்ற நவம்பர் 18 அன்று தொடங்கவிருக்கின்ற நாடாளு மன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தமிழகத்தின் மக்க ளவை மாநிலங்களவை உறுப்பினர்கள் 5 மாநிலங்களின் உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து அரசியல் சாசன திருத்தங்களை கோரவேண்டும்.

தென்மாநில ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியுரிமையை பறிக்கும் தேசிய கல்விக்கொள்கை - 2019அய் திரும்பப்பெற வேண்டும்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். - இந்திய ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு நடவடிக்கை களுக்கு மாற்றாக மாநில சுயாட்சி முறையை (State Autonomy)வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டு முறையை சமூக மற்றும் கல்வியில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்க்கே நடைமுறைப்படுத்த வேண் டும். சமூகநீதிக்கெதிரான பொருளாதாரத்தில் பின்னடைந்த உயர்வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற வேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்திய ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கே வழங்க வேண்டும்.

டில்லியை சுற்று சுழல் மாசுவிலிருந்து பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசின் திட்டங்கள் தென்மாநில நகரங்களுக்கும் மாற்ற வேண்டும்.

அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மக்களின் தாய்மொழியே வழக்காடு மொழியாக சட்டமியற்ற கோர வேண்டும்.

இந்திய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் தகுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும்.

தொழில்துறை மற்றும் வேளாண்துறையில் பணியாற்றும் அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் அரசமைப்பு உறுதி யளித்த வாழ்க்கை கூலி முறை(Living Wages) நடை முறை யாக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

பொறுப்பாளர்களிடம் தமிழர் தலைவர்

தம்மைச் சந்திக்க வந்த திராவிடர் செயற்கழகத்தின் பொறுப் பாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

உங்களது (திராவிடர் செயற்களம்) கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டி யவை. கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் இந்தி எனும் ஒரு மொழியினை எதிர்த்து அல்ல; இந்தி மொழியை, பிற மொழி பேசும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்துதான். இது ஒரு மொழித் திணிப்பாக மட்டும் கருதப்படக் கூடாது. ஒரு காலாச்சாரத் திணிப்பாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசை எதிர்த்து அமைதி வழியில் போராட வேண்டும். பிற தென் மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் இரு மொழிக்கொள்கை (தாய் மொழி & ஆங்கிலம்) நடை முறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதற்கு தந்தை பெரியார் ஊட்டிய திராவிட இன உணர்வுதான் அடிப்படைக் காரணமாகும். மொழியால் தென் மாநில மக்கள் வேறுபட்டிருக்கலாம். இனத்தால் - திராவிடர் இனத்தால் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் திராவிடர் செயற்களம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர்த்த பிற தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல்கள் வலுப்பட்டு வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்துக்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசுங்கள். கூடிய விரைவில் தமிழகத்திலோ அண்டை மாநிலத்திலோ அல்லது இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அடுத்த கட்டமாக தலைநகர் டில்லியில் ஒரு போராட்ட மாநாடு கூட்டப்பட வேண்டும். திராவிடர் செயற்களத்தின் செயல்பாடுகளுக்கு திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும்.

கல்வித்திட்டம் என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒன்றாக இல்லாத நிலையில் எப்படி ஒரே மாதிரியான கல்விக்கொள்கையினை இந்தியா முழுமைக்கும் ஏற்றுக் கொள்ள முடியும். கல்விக் கொள்கையும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு ஒரே வழி 'கல்வி' மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல் அழுத்தம் பெற வேண்டும். தென் மாநிலங்கள் இதற்கு முன்னோடியாய் வட மாநிலங்களின் உரிமையினையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்;  இது வடக்கு - தெற்கு பிரச்சினை அல்ல; அடக்குமுறைக்கு எதிரான  ஒட்டு மொத்த குரலின் வெளிப்பாடு.திராவிடர் செயற்களத்தின் பணி பாராட்டுதலுக்கு உரியது. எங்களது ஒத்துழைப்பு, ஆதரவு எப்பொழுதும் உண்டு.

இவ்வாறு தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

தமிழர் தலைவரைச் சந்திக்கும் பொழுது திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் நிறுவனர் அபிகவுடா (கருநாடகம்) சிவலிங்கம், செந்தமிழ் முருகன் மற்றும் தோழர்கள் பங்காருபேட்டை ராமமூர்த்தி (ஆந்திரா), டார்ஜான், பிரதாபன் மற்றும் நாகேஷ் உடனிருந்தனர். சந்திப்பின்பொழுது திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் உடன் இருந்தார்.

 - விடுதலை நாளேடு 16 .11.19