சனி, 21 மார்ச், 2015

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு


மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.
அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.
இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.
பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.
மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

-விடுதலை,ஞாயிறு மலர்,21.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக