திங்கள், 9 செப்டம்பர், 2019

சிந்துவெளிமக்களுக்கு தனித்துவமான மரபணு- அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் அல்ல

ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தின




புனே, செப்.9 சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் நாடோடிக் குழுக்கள் அல்ல; அவர்கள் தொடர்ந்து இந்திய தீபகற்பப் பகுதியில் முன்பிருந்தே வாழ்ந்த தனித்துவம் மிக்க மனித இனத்தவர்கள் என்று ஹரப்பா பகுதியில் கண்டெ டுக்கப்பட்ட சிந்துவெளி மனிதர்களின் எலும்புக்கூட்டின் மரபணுவை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்தது. சிந்துவெளி நாகரீகம் குறித்து இதற்கு முன்பு வந்த பல்வேறு ஆய்வுகள் மிகவும் குழப்பமானதாகவும் தெளி வற்றதாகவும் இருந்தன. இதளனை அடுத்து பலர் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பண்டைய மத்திய ஆசிய புல்வெளிப்பகுதிகளில் இருந்து ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தவர்களே சிந்துவெளியில் நிரந் தரமாக தங்கலாயினர். இவர்கள் பிற்காலத்தில் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினர் என்று கூறியிருந்தனர். இந்திய அரசும், பல்வேறு வரலாற்றாய்வுகளும் இதை ஆமோதிக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிட் டுள்ளது.

புனேவில் உள்ள டெக்கன் வரலாற்று ஆய்வியல் கல்லூரியின் அகழாய்வியல் துறைத்தலைவர் வசந்த் சிண்டே, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ரியெச் மற்றும்  அகழாய்வியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் நீரஜ் ராய் தலைமையிலான குழுவும் சிந்து வெளி நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறது.  இவர்களின் ஆய்வுகள் ஆரியர் என்ற இனப்பிரிவினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்  அல்ல,  அவர்கள் மத்திய ஆசியாவின் புல்வெளிப் பகுதி களில் இருந்து வந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தினர். அதை இந்திய அரசு வெளியிடாமலேயே வைத்திருக்கிறது. ஹரப்பா நாகரிகத்தின் ராகிகரி திட்டம் என்ற பெயரில் நடந்துவரும் தொடர் ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு வருவதன் தொடராக தற்போது மரபணு தொடர்பாக ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களின் மரபணுக்கள் சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களின் மர பணுக்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும், சிந்துவெளி மக்கள் இந்திய தீபகற்பத்தில் வாழ்ந்த தனித்துவம் மிக்கவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் ராகிகரி என்ற பகுதியில் அகழ் வாய்வு நடந்த போது கிடைத்த சிந்துவெளி நாகரிக மனிதரின் எலும்புகளின் மரபணுவை ஆய்விற்கு அனுப்பினர்.

ராகிகரி பகுதிவாழ் மக்களின் எலும்புக்கூடுகளில் இருந்த மரபணுக்கள் மத்திய ஆசிய புல்வெளிகளில் இருந்து வந்தவர்களிடமிருந்து வேறுபட்டுள்ளது.   சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் மரபணு மத்திய ஆசிய புல்வெளிப்பகுதிகளில்(ஸ்டெப்பி) இருந்துவந்தவர் களுடன் அல்லது பண்டைய ஈரானிய மேய்ச்சல் நில மக்களின் மரபணுவுடன் முற்றிலும் ஒத்துப் போகவில்லை. இது தனித்துவம் மிக்கதாக உள்ளது, இந்த தனித்துவம் மிக்க மக்கள் தான் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கி யுள்ளனர்.  மத்திய ஆசியா மற்றும்  மெசபெடோமியா, எகிப்து, பாரசீக வளைகுடா போன்ற பகுதிகளின் பண்டைய கால மனிதர்களின் எலும்புகளில் கிடைத்த மரபணுக்களில் சிந்துவெளியில் கிடைத்த தனித்துவமான மரபணுக்கள் கிடைத்துள்ளது, இதிலிருந்து சிந்து வெளிமக்கள் உலகெங்கிலும் சென்று வாணிகம் செய்துவந்தனர் என்பது உறுதியாகிறது.

விவசாயத்தின் தோற்றம்


அய்ரோப்பாவில், பண்டைய- டி.என்.ஏ ஆய்வுகள், நவீன துருக்கியில், அனடோலியாவின் வம்சாவளியைக் கொண்ட மக்கள் வருகை மூலம் மக்கள் பரவலைக் பரவுவதாகக் காட்டுகின்றன. புதிய ஆய்வு ஈரான் மற்றும் கிழக்கு துருக்கியில் (தெற்கு மத்திய ஆசியா) இதேபோன்ற இடப்பெயர்வைக் காட்டுகிறது, அங்கு அனடோலியன் மக்களின் கால்நடை வளர்ப்பும், விவசாயமும் ஒரே நேரத் தில் நடந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் தெற்காசியா (இந்திய தீபகற்பத்தின்) மக்கள் இனம் தனித்தன்மை வாய்ந்தவை. இவர்களது மரபணுவில் அனடோலியன் தொடர்பான வம்சாவளியை ஆராய்ச்சி யாளர்கள்  கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டு மல்லாமல், சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பண்டைய மத்திய ஆசிய மக்களிடமிருந்து  தனித்தன்மையுடைய மரபணுவைப் பெற்றிருக்கின்றனர். சிந்துவெளியில் உள்ள மக்கள் குழு, உலக மக்கள் இடப்பெயர்விற்கு முந்தைய காலகட்டத்தில்  கிட்டத் தட்ட 9,000 ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்தவர்கள் என்றும்  சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறை கலாச் சாரம் போன்றவை மத்திய ஆசிய புல்வெளிகளில் இருந்து வந்தவர்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், பிற்காலத்தில் சிந்துவெளிமக்களின் சில குழுவினர் ஆசியாவில் இருந்து வந்தவர்களின்  கலாச் சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் மரபணு ஆசிய மைனர் பகுதியில் இருந்து வந்தவர்கள் அல்லது அவர்களது மூதாதையர்களான அனடோலியன் இனத்திலிருந்து வந்தவர்களின் மரபணுக்களுடன் முற் றிலும் வேறுபட்டு நிற்கிறது, என்று தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இது குறித்து வசந்த் ஷிண்டே கூறும் போது, சிந்துவெளிமக்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிறு சிறு குழுக்களாக நகர்ந் துள்ளனர் என்பதும், அவர்களின் மரபணுக்கள் சிந்து வெளிமக்களிடமிருந்து தனித்தன்மை வாய்ந்தவை என்பதும் மரபணுக்களின் ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ஆய்வாளர் டேவிட் ரிச் கூறும் போது மத்திய ஆசியப்பகுதியில் இருந்து பெரிய அளவில் எப்போது மக்கள் இடப்பெயர்வு நடந்தது? என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.

-  விடுதலை நாளேடு, 9.9.19

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்

சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்
---------------------------------------------------------------
https://theprint.in/india/aryan-invasion-theory-gets-a-setback-from-dna-study-of-2500-bc-rakhigarhi-skeletons/287454/

இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள்.

சிந்துச் சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக இரு கட்டுரைகள் உலகின் மிகச் சிறந்த ஆய்விதழ்களில் வெளியாகியிருக்கின்றன. முதலாவது கட்டுரை ‘The Genomic Formation of South and Central Asia’ என்ற தலைப்பில் Science இதழிலும் இரண்டாவது கட்டுரை Cell இதழிலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரை, ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூட்டை மரபணு ரீதியாக ஆய்வுசெய்து முடிவுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.

முடிவுகள் இதுதான். அதாவது, ஹரப்பா நாகரத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாயிகளின் மரபணு இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்டெப்பி புல்வெளி மரபணுவைக் கொண்டவர்கள், ஹரப்பா நாகரீகம் மறைந்த பிறகே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன்தான் இந்தோ - ஐரோப்பிய மொழியும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

இரானிய விவசாயிகளின் மரபணுவும் இல்லை என்பதற்கு அர்த்தம், விவசாயம் உலகில் எங்கும் தோன்றும் முன்பே மேற்காசியாவிலிருந்து மனிதர்கள் இந்தியாவுக்கு வந்து, ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே ராக்கிகடியில் கிடைத்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஹரப்பா நாகரிகத்தில் வசித்தவர்கள் ஆரம்பகால இந்தியர்களும் மேற்காசியாவிருந்து வந்தவர்களும்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசிய ஸ்டெப்பி புல்வெளிவாசிகள் இந்தியாவில் இல்லை.

இதற்கடுத்த மற்றொரு விஷயமும் முக்கியமானது. அதாவது "Our findings also shed light on the origin of the second-largest language group in South Asia, Dravidian...The strong correlation between ASI ancestry and present-day Dravidian languages suggests that the ASI, which we have shown formed as groups with ancestry typical of the Indus Periphery Cline moved south & east...after the decline of the IVC to mix with groups with more AASI ancestry, most likely spoke an early Dravidian language." என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதைச் சுருக்கமாக தமிழில் சொன்னால், "எங்களது கண்டுபிடிப்பு இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.  அதாவது, தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றியது இது. ஆதிகால தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள பரஸ்பர ஒற்றுமையை வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் புலனாகிறது.அதாவது, ஆதிகால தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம்  (IVC)  மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்தியர்களுடன்  (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும் "

சுருக்கமாகச் சொன்னால்,, 1. சிந்துச் சமவெளி காலத்திற்குப் பிறகே ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளிலிருந்து கங்கைச் சமவெளிக்கு ஆட்கள் வந்தனர்.

2. சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர்.

இது தொடர்பாக மேலும் படிக்க, மிகவும் புகழ்பெற்ற Early Indians புத்தகத்தை எழுதிய டோனி ஜோசப்பின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும். இணைப்பு கமென்ட் பகுதியில் உள்ளது.

ஆய்வு முடிகளுக்கான இணைப்புகளும் உள்ளன.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தி பிரிண்ட் இணைய இதழும் தி எகனாமிக் டைம்ஸ் இதழும் இதனைத் தவறாக ரிப்போர்ட் செய்திருப்பதுதான். அதாவது, ராக்கிகடி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் டிஎன்ஏ இல்லை என்பதை வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக எழுதியிருக்கிறார்கள்.

https://theprint.in/india/aryan-invasion-theory-gets-a-setback-from-dna-study-of-2500-bc-rakhigarhi-skeletons/287454/

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rakhigarhi-dna-study-questions-aryan-invasion-theory-claims-author/articleshow/71001985.cms?from=mdr

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கால்டுவெல்: திராவிட அடையாளம்

பேரா. நம்.சீனிவாசன்




இராபர்ட் கால்டுவெல் மறைந்து உருண் டோடிய ஆண்டுகள் 128. இதே ஆகஸ்ட் மாதம் தான் அவர் இவ் பூவுலகை விடுத்து விடை பெற்றார். கால்டுவெல் வாழ்ந்த காலம் 77 ஆண்டுகள். அயர்லாந்தில் பிறந்தார் ; ஸ்காட்லாந்தில் வளர்ந்தார்; இந்தியாவில் வாழ்ந்தார் ; தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தார்.

இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப் பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப் பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை தம் ஆய்வின் மூலம் நிலை நிறுத்துகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.

சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மாயை உலகை வலம் வந்தது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - கலை - பண்பாடு - வாழ்வியல் என்பதைத் தாண்டி தென் திசை நோக்கி அவர்கள் பார்வை திரும்பவே இல்லை. கால்டுவெல் இலண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். சமயம் பரப்ப சென்னை வந்தார். கடற்பயணம் இடர் பயணமாய் அமைந்தது. சூறாவளி சுழன்றது. பிரெஞ்சுக் கப்பலுடன் மோதி சிதைந்தது. மதம் பரப்ப வந்த முப்பது பேரில் கடலில் மூழ்கி மாண்டவர்கள் 24 பேர். உயிர் பிழைத்தவர்கள் அறுவர். அதில் கால்டுவெல் ஒருவர்.

08.01.1838 இல் சென்னை வந்தடைந்தார். ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 18 மொழிகளைக் கற்றறிந்த பன்மொழி வித்தகர். துரூ என்பவரிடம் தமிழ் கற்றார். உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன் முதலியோர்களும் கால்டு வெல்லுக்கு தமிழ் போதித்தனர். பிரவுன் என்பவரிடம் சமஸ்கிருதம் கற்று தேர்ந்தார்

தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர் வாழ்வியல் இவற்றை முழுமையாய் உணர்ந்து , கொள்ள வடகோடி சென்னையிலிருந்து தென்கோடி குமரிமுனை வரை நடந்து கடந்தார். பட்ட சிரமங்கள் பட்டியலில் அடங் காது; சத்திரத்தில் தங்கவும் அனுமதி மறுக்கப் பட்டது.

தமிழனின் மூலமுகவரி அறிந்து சொன்ன மூதறிஞன் தங்கிட மாட்டுக்கொட்டகையில் இடம் கொடுத்தான் இருளில் உழன்ற தமிழன். இளமையில் பைன் மரங்களுக்கிடையே தவழ்ந்த கால்டுவெல், தமிழ் தழைக்க 50 ஆண்டுகள் பனை மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தார்.

இடையன் குடிதான் அவர் வாழ்ந்த ஊர்; கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி; வெப்பம் அனலாய் தகிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நாளும் கசக்கும்.

அந்த கிராமத்திலே தங்கியிருந்து, பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, கல்வி கற்பித்து, மதிய உணவு வழங்கி, மருத்துவ வசதி ஏற்படுத்தி, சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்து நாகரீக உலகிற்கு நாட்டு மக் களை கைப்பிடித்து அழைத்துச் சென்ற பெரும்பணிகளுக்கு மத்தியில் 15 ஆண்டுகள் மூளையைக் கசக்கி, காலத்தால் அழியாத இலக்கண நூலைப் படைத்தார்.

திராவிடம் எனும் ஆதிச்சொல்


திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டு வெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்.

மணோன்மணியம் சுந்தரம் பிள்ளை,

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்கின்றார். ரவீந்திரநாத் தாகூர்,

திராவிட உத்கல வங்கா என்கின்றார்.

தாயுமானவர்,

திராவிடத்திலே என்கின்றார்.

லீலா திலகம் எனும் 14ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த மலையாள இலக்கியம், திராவிடம் என்கிறது.

குமரிலபட்டர் 8-ஆம் நூற்றாண்டில் ஆந்திர திராவிட பாஷா என்கின்றார்.

பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை திராவிட மன்னன் என்றே அழைக்கப்படுகின்றான். மனுதர்ம சாஸ்திரம், திராவிடர் என்பதை இழி இனத்தவராகக் குறிக்கின்றது.

திராவிடம் எனும் சொல்லை இலக்கியங் களும், இலக்கணங்களும், புராணங்களும் தம்தம் வசதிக்கேற்ப பொருள் சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச்சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.

எல்லிஸ் எனும் அறிஞர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அது தனி மொழிக் குடும்பம் என்றார். அதனை  அடிப்படையாக வைத்துக் கொண்டு கால்டுவெல் தமிழாராய்ச்சி பணி நிகழ்த்தினார். கடும் உழைப்பின் பயனாய் ஆவணத் தரவுகளோடு ஒரு நூல் முகிழ்த்தது. அப்புத்தகம் தான் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியது. 1856 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நூல் தான் A Comparative Grammar of the Dravidian or South Indian Family Tamil Languages. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் திராவிட கருத்தியலை இமயத்திலே ஏற்றிவைத்தது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இதுவரை 23 பதிப்புகள் வெளிவந்திருக்கின்றது. கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திராவிடர்களை உலகம் அறிய இந்நூல் உதவியது. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். தமிழில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட்ட 28 மொழிகள் பிறந்ததாக வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பேசும் மக்கள் திராவிடர்கள் என வரலாற்று ஆவணங்களைச் கொண்டு நிறுவியவர் கால்டுவெல்.

தமிழை வளர்க்க வந்தவர்கள் மதத்தைப் பரப்பினார்கள்; மதத்தைப் பரப்ப வந்த கால்டுவெல் தமிழை வளர்த்தார்.

கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வரலாற்றில் திருப்பு முனை. நூல் உரைக்கும் உண்மைகள்:

1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்துவிட்டாலும் தமிழ் தானாக இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. தமிழ் மரபு என்பது வேத - பார்ப்பன - இந்து மரபின் தொடர்ச்சி அல்ல. 4. பார்ப்பன எதிர்ப்பு மரபாக உள்ளது.

கால்டுவெல்லின் ஆய்வு வெறும் மொழியாராய்ச்சியாக நின்றுவிடவில்லை. தமிழினத்தின் பல்வேறு வாழ்வியலைக் குறித்த ஆய்வாக உள்ளது.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகள் என்றும் திருந்தா மொழிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

திருந்திய மொழிகள் ஆறு : தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு திருந்தா மொழிகள் ஆறு: துதம், கோதம், கோண்ட், கூ, ஒரியன், ராஜ்மகால் சமஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே நிறுவுகிறார்.

ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

கொற்கை துறைமுகம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். கடல் உள் வாங்கியிருப்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சிங்கள இலக்கிய நூலான மகா வம்சம் என்ற நூலின் துணை கொண்டு தமிழ் - ஈழ உறவுகளை ஆய்வு செய்துள்ளார்.

திராவிடர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ; உண்மையானவர்கள் ; நேர்மையானவர்கள்; விசு வாசமானவர்கள் என்பது அவர் கண்டறிந்து உலகிற்கு உடரைத்த உண்மைகளாகும்.

பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்காகக் குரல் கொடுத்தது 1887 இல். ஆனால் கால்டுவெல் செம்மொழிக்காக எழுப்பிய முதல் குரல் ஒலித்தது 1856 இல்.

கால்டுவெல் மனிதநேயம் மிக்கவர், தமிழோடு அவர் உறவு முடிந்து விட வில்லை . தமிழ் மக்கள் மீதான அன்பு பெருக் கெடுத்தது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாசம் பொழிந்தார். திராவிடத்தின் அடையாளமாய்த் திகழும் கால்டு வெல்லுக்கு அவர் தம் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத் துவோம்.

- விடுதலை ஞாயிறு மலர், 31. 8 .19

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

03.05.1947 - குடிஅரசிலிருந்து... -


திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங் கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக் காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்த வர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய் நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கை களை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத் தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக் களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக் குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட் டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங் களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை யாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)

- விடுதலை நாளேடு, 16. 8 .19

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திராவிடர்கள்

தந்தை பெரியார்


திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும்.  விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத (ஆரிய) தர்மப்படி 4ஆம் வர்ணஸ்தர்களாகவும் அல்லது 5ஆம் அவர்ணஸ்தர்களாகவும் ஆக்கப் பட்டிருக்கும் சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எல்லாருடைய விடுதலைக்கும் முன்னேற் றத் திற்கும் உழைக்கும் கழகமாகும்.

திராவிடர்களைத்தான் சூத்திரர்கள் என்பதாக இந்து மதத்தின் பேரால் ஆரியர்கள் அழைத்து வருகிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்து வருகின்றன.  உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பின்கீழ் ஜாதி தர்மத்தை அனு சரிக்காதவர்கள், அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர் என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத சண்டாள ஜாதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் செம்படவன் என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது.  மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப்பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்" என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும்.  மற்றும் "மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்" என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது.  இது 10ஆம் அத்தியாயம் 45ஆம் ஸ்லோகம்.  தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.

இதில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது.  அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது.  (அத்தி யாயம் 10 - ஸ்லோகம் 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல், கீழான, இழிவான, தீண்டப்படாத திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.

மற்றும், "இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச் சமீபமான இடம் ஆகிய இடங்களில் இழி தொழிலைச் செய்யும் மக்கள் என்று யாவருக்கும் தெரியும்படியாக வாசம் செய்ய வேண்டியது" என்று 50ஆம் ஸ்லோகத் தில் கூறப்படுகிறது.  இப்படிப்பட்ட திராவிடர்களான மக்கள் "நாயும் கழுதைகளும்தான் வளர்க்க வேண்டியது "மாடு முதலியன வைத்துக் கொண்டு ஜீவிக்கக் கூடாது" என்று 51ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

52- முதல் 57ஆம் ஸ்லோகம் வரையில் என்ன கூறப்படுகிறது தெரியுமா? திராவிடத் தோழர்களே!  கவனியுங்கள்.  "இவர்கள் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும்.  உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும்.  உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.  இரும்பு, பித்தளை ஆகியவகைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும். இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக்கொண்டே திரிய வேண்டும். நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது. இவர்களோடு பேசக்கூடாது. இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது. ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக்கூடாது" என்றும் இப்படிப்பட்ட ஈன ஜாதியார்கள் நல்ல வேடம் தரித்திருந்த போதிலும் அவர்களை ஈனர்கள் என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு விமோசனம், அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப்படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலைமுறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான். இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் "சூத்திரன் பிராமண னுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆக மாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மை யாகும், தத்துவமாகும்."  (அத்தியாயம் 10.  ஸ்லோகம் 713)

பிராமண தர்மம்

பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக் கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு  மார்க்க மில்லை என்கின்ற காலத்தில்  அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)

ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பையையும் மண் வெட்டியையும் கொண்டு  பூமியை வெட்ட வேண்டிய தாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலிய வைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)

சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக  வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)

அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் - அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற் கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க  வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும், அவை எப்படி யாவது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திரா விடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழக திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு. ஆந்திரநாடு, கேரள நாடு, கருநாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ் திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?

'குடிஅரசு' - கட்டுரை - 20.09.1947

 - விடுதலை, நாளேடு, 11.8.19