திங்கள், 16 மே, 2016

அரப்பன் நாகரிகம் யாருடையது?

-முனைவர் நடன காசிநாதன்
உலக அளவில் மிகப் பழைமையான நாகரிகம் என்று மெசபொடோமிய நாகரிகத்தையும் (இன்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முந்தையது) இதற்கடுத்த நிலையில் எகிப்திய நாகரிகத்தையும் (5000 ஆண்டுகளுக்கு முந்தையது), தொடக்க எலமைட் நாகரிகத்தை அதற் கடுத்த நிலையிலும் (5000 ஆண்டுகள் பழைமையுடையது) தொல்லியலா ளர்கள் கணித்துள்ளனர்.
மேற்கூறிய வற்றுக்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கிய நாகரிகம் தான் அரப்பன் (ஹரப்பன்) நாகரிகம் என்று கூறிவந்தனர்.
ஆனால் இந்தியத் திருநாட்டை யடுத்து வடமேற்குப் பகுதியில் அமைந் துள்ள பலுசிஸ்தான் நாட்டு மெஹர் கரில் அகழாய்வு மேற்கொண்டதில் அங்கு அரப்பன் நாகரிகத்தின் தொடக்க நிலை இன்றைக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஆதலால் உலகி லுள்ள அனைத்து நாகரிகங்களிலும் அரப்பன் நாகரிகம்தான் பழமையான நாகரிகம் என்றாகி விட்டது.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள அரப்பன் நாகரிக இடங்களைக் கணக் கில் கொண்டு பார்த்தால், அரப்பன் நாகரிகம் பரவியுள்ள இடமானது பரப் பளவில் எகிப்திய நாகரிகமும், மெச பொடோமிய நாகரிகமும் பரவியுள்ள இடங்களைக் காட்டிலும் இரு மடங்கு உள்ளதாகவும், உலகிலுள்ள பிற நாகரிக இடங்களின் பரப்பை ஒப்பிடுகையில் அரப்பன் நாகரிகப் பரப்பளவு அதிக மானது என்றும் கருதப்பெறுகிறது.
ஆனாலும், அரப்பன் நாகரிகம் உள்நாட்டிலே தோன்றிய நாகரிகம்தான் என்றும், இது ஆரியரல்லாதாரின் நாகரிகம் என்றும் பிற சான்றுகளைக் கொண்டு அறிய முடிகிறது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தமிழர்தம் நாகரிகம்தான் என்பதும் சில தடயங்களால் உறுதிப்படுகிறது.
முதலில் இந்நாகரிகம் ஆரியருடை யது அல்ல என்பதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன.
1) இது நகர நாகரிகம் ஆரியருடையது போன்று கிராமிய, நாடோடி நாகரிக மல்ல.
2) அரப்பன் நாகரிகக் களிமண் தகடுகளில் பலவித விலங்குகளின் உரு வங்கள் காணப்பெறுகின்றன. ஆனால் குதிரை உருவம் காணப்பெறவில்லை.
3) குறுக்குக் கால்களையுடைய சக் கரங்கள் பொருத்தப் பெற்று இரதங்கள் காணப்படவில்லை. ஆரிய நாகரிகத் துக்குக் குதிரையும், குறுக்குக் கால்களை யுடைய சக்கரம் பொருத்தப்பெற்ற இரதங்களும்தாம் முக்கிய அடை யாளங்கள்.
4) ஆரியரின் முக்கிய வழிபாட்டு முறையான தீக்குண்டம் (ஹோமகுண் டம்) வழிபாடு காணப்பெறவில்லை.
அரப்பன் நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் தான் என்பதற்கான கார ணங்கள் பின்வருமாறு:-
1) எருமைக் கொம்புகள் போன்ற தலையணியுடன் காணப்பெறும் ஆண் உருவம் (இவ்வுருவம் பிற்கால மூஇலைச் சூல வழிப்பாட்டுக்கு முன்னோடியாக லாம்).
2) பெண் தெய்வங்கள் பல வடிவங்களில் காணப்பெற்றுத் தாய் வழிபாட்டு முக்கியத்துவம் தெரிவது.
3) தமிழர்கள் இன்றும் வழிபட்டு வரும் அரச மரம் மற்றும் பாம்பு வழிபாடு.
4) முக்கால் வட்ட கட்டடப் பகுதி (பனாவலி, அரியானா), (தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் கட்டப் பெற்றுள்ள பெரும்பாலான கோயில்கள் முக்கால் வட்ட வடிவிலேயே உள்ளன).
5) இலிங்க வழிபாடு.
6) சுடுமண் உருவங்கள் (குறிப்பாகப் பெண் உருவங்கள்) (,இவையும் தாய் வழிபாட்டின் சிறப்பையே உணர்த்து வனவாகக் கருதப்பெறுகின்றன).
7) மதகுருக்கள் சிற்பங்கள் காணப் படுபவை.
8) நீரில் மூழ்கி வழிபடுதல் (தமிழ் நாட்டில் கோவில்களின் முன்புள்ள குளங்களில் மூழ்கி வழிபட்டு வருதல்)
9) நகர அமைப்புகளில் இரு பகுதிகள் காணப்படுபவை (பூம்புகார், மருங்கூர்ப்பட்டினம் போன்ற நகரங்கள் போன்று).
10) சிற்ப அமைப்புகளில் திராவிடர் கலைப்பணி காணப்பெறுதல்.
11) தமிழ்நாட்டுக் கணித முறை அரப்பன் நாகரிகத்தில் காணப்பெறுதல்.
12) கோவில் இறைவன் முன்பாக அரசர் உருவங்கள் அமைந்திருப்பது. (மாமல்லை குடைவரைக் கோவில்களி லும், பிற கட்டுமானக் கோயில்களிலும் உண்ணாழிக்கு முன்பாக அரசர்கள் உருவங்கள் இறைவனை வணங்கும் நிலையில் காணப்படுகின்றன.
மேலே கூறியவற்றுக்கு மேலும் அரண் சேர்ப்பது போன்று, தமிழ் நாட்டில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள் விளங்குகின்றன.
1) அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ள புதிய கற்காலக் கருவி (நாகை மாவட் டம், செம்பியன் கண்டியூர்),
2) விழுப்புரம் மாவட்டம், கீழ் வாலை, இரத்தப் பாறையில் தீட்டப் பட்டுள்ள அரப்பன் நாகரிக உருவ எழுத்துகள்.
3) கோவை மாவட்டம், சூலூரில் கண்டறியப்பட்டு தற்போது பிரித் தானிய அருங்காட்சியகத்தில் (British Museum) காட்சிக்கு வைக்கப்பெற் றுள்ள சுடுமண் தட்டில் காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள்.
4) கரூரில் கிடைக்கப்பெற்ற மோதி ரத்தில் காணப்பெறும் அரப்பன் உருவ எழுத்துகள்.
5) தமிழ்நாட்டில் வெளிப்படுத்தப் பட்டுள்ள பெருங்கற்காலப் பானை யோடுகள் மீது காணப்பெறும் கீறல் உருவங்கள் (இவற்றில் 89 விழுக்காடு அரப்பன் உருவ எழுத்துகள் போன்றே உள்ளன),
6) இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பானையோட்டில் காணப்பெறும் உருவ எழுத்து மற்றும் தாயக் கட்டையில் காணப் பெறும் அரப்பன் நாகரிக எண் உருவங்கள்.
7) இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள ஆனைக்கோட்டையில் கிடைத்த செப்பு முத்திரை மீதுள்ள உருவ எழுத்துகள் மற்றும் கேரள மாநிலம் எடக்கலில் காணப்பெறும் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டோடு காணப்பெறும் அரப்பன் நாகரிக உருவ எழுத்து.
8) தமிழகத் தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுகளோடு காணப்பெறும் உருவ எழுத்துகள் ஆகியவையாகும்.
இவ்வனைத்துக்கும் மேலாகத் திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்ச நல்லூரில் சென்ற ஒரு நூறு ஆண்டுக் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகள், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் வரை அரப்பன் நாகரிகம் பரவியிருந்திருக்கும் என்ற உண்மையைப் புலப்படுத்தும் வகையில் பல சான்றுகளை வெளிப் படுத்தியிருக்கிறது. அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:
1) இதுவும் ஒரு ஆற்றோர நாகரிகம்.
2) இதுவும் நகர நாகரிகம், தொழில் மலிந்த நகரம்.
3) பெருங்கற்காலத்தைச் சாராத புதிய வகைப் பானையோடுகள். இவை கி.மு, 2000-த்தின் இறுதிக்காலத்தைச் சார்ந்தவை.
4) மண் குவளைகளின் தோள் பகுதி யில் துளையுடையவை (Spouted vessels).
5) வெண்கலப் பொருள்கள் (தாய்த்தெய்வம் மற்றும் விலங்குகளின் உருவங்கள்),
6) அரப்பன் நாகரிகத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருள்களிலும் (டைமா பாத்), ஆதிச்சநல்லூர் வெண்கலப் பொருள்களிலும் ஒரே அளவுள்ள ஆர் செனிக் (Arsenic) கலவை.
7) பானையோடுகளில் அரப்பன் உருவக் குறியீடுகள்.
8) துர்க்கை என்று கருதப்பெறும் தாய்த் தெய்வ மண் ஓட்டுருவம்.
9) ஆதிச்சநல்லூர் நாகரிகம் காலம் சுமார் கி.மு. 1500 - 500 (optically stimulated Luminiscence date conducted at Manipur) மேலே கூறப்பெற்றுள்ள அனைத்து வகைக்காரணங்களைக் கொண்டும் பார்க்கையில் தமிழகத் துக்கும், அரப்பன் நாகரிகத்துக்கும், குறிப்பாக ஆதிச்சநல்லூர் நாகரிகத் துக்கும் நெருங்கிய தொடர்பு இருந் திருக்கும் என்பது உறுதியாகிறது. ஆதலால் அனைத்து வகைச் சான்று களாலும் (அரப்பன் நாகாக உருவ எழுத்து அமைப்பு உட்பட) அரப்பன் நாகரிகம் தமிழரின் நாகரிகமே என்பது குன்றின் மேலிட்ட விளக்காகிறது.
-விடுதலை ஞா.ம.,10.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக