செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஆரிய - திராவிடப் போராட்டம்

பேராசிரியர் ப.காளிமுத்து




ஆரிய-திராவிடப் போராட்டம் என்பது நெடிய வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டதாகும். சிந்து சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்த காலத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருகிறது. கைபர்-போலன் கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்கள், இன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இந்த மண்ணின் மய்ந்தர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆடு - மாடு மேய்த்தல், வேள்வி செய்தல், வேள்வியில் மாடுகளை வெட்டிப் பலியிடுதல், பலியிடப்பட்ட மாட்டிறைச்சியைக் கூறுபோட்டு உண்ணல், சாராயம் (சோமபானம், சுராபானம்) காய்ச்சுதல், செம்மறியாட்டுக் கறியுடன் சாராயத்தைக் குடித்துக் களியாட்டம் போடுதல், மாற்றாரின் செல்வத்தைக் கொள்ளையிடுதல், நீர்த்தேக்கங்கள், அணைகள், ஏரி, குளங்கள் ஆகியவற்றை அழித்தல் ஆகிய இவையும், இவைபோன்ற பிறவும் ஆரியரின் முகாமையான தொழில்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ரிக் வேத ஆரியர்கள் உணவுக்காகப் பசு மாடுகளைக் கணக்கின்றிக் கொன்றார்கள். அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதை ரிக் வேதம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. குதிரைகளும் எருதுகளும் கன்று ஈனாப் பசுக்களும் ஆட்டுக் கிடாய்களும் பலியிடப்பட்டன. இவற்றின் இறைச்சியை ஆரியர்கள் சுவைத்துச் சுவைத்து உண்டனர் என்று ரிக் வேதம் (ஙீ.91:14) கூறுகிறது. ஆரியர்களின் கடவுளான இந்திரன் இத்தகைய விலங்குகளின் இறைச்சியை உண்டதோடு ஆரியர் காய்ச்சிய சாராயத்தையும் (சோமபானம், சுராபானம்) விரும்பிக் குடித்ததாக வேதப் புத்தகங்கள் கூறுகின்றன.

ரிக் வேதத்தின் ஒன்பதாவது இயல், சாராயம் (சோம பானம், சுரா பானம்) காய்ச்சும் முறைகளைக் பற்றியும் இவற்றை எந்த அளவில் எவற்றோடு கலந்து குடிப்பது என்பதைப் பற்றியும் 1108 பாடல்களில் விரிவாகப் பாடுகின்றது. சுரா பானத்தைக் குடித்துக் கூத்தடித்த ஆரியர்கள் தங்களைச் ‘சுரர்’ என்றும் அதனை மறுத்த இந்த மண்ணின்  மய்ந்தர்களான திராவிடர்களை ‘அசுரர்கள்’ என்றும் அழைத்தனர்.

குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ - அரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும் பரவிக் கிடந்த திராவிடப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களைத் திராவிடர்கள் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்கள் இவர்களை ‘மிலேச்சர்கள்’ என்றும், ‘தாசர்கள்’ என்றும், ‘அரக்கர்கள்’ என்றும், ‘குரங்குகள்’ என்றும், ‘அசுரர்கள்’ என்றும் பெயரிட்டழைத்தனர். ஆரியர்களின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வேதங்களிலும் திராவிடர்களைக் குறிப்பதற்கு ஆரியர்கள் மேற்குறித்த இழிவான சொற்களையே பயன்படுத்தியுள்ளனர்.

‘இந்திரன், அக்கினி, சூரியன், சோமன், ருத்திரன்’ முதலான தேவர்களைப் போற்றிப் பாடும் பாடல்களாகவே வேதங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாசர்கள் அல்லது திராவிடர்களை அழித்து, ஒழித்து ஆரியர்களாகிய தங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து கொடுத்துத் துணையிருக்குமாறு ஒவ்வொரு கடவுளையும் வேண்டும் பாடல்களாகவே வேதப் பாடல்கள் விளங்குகின்றன.

“அக்கினியே, தானம் அளிக்காத எங்கள் பகைவர்களாகிய அரக்கர்களைத் (திராவிடர்களை) தூள் தூளாக்கு’ (ரிக்-441)

‘இந்திரனே, தெய்வ நம்பிக்கையில்லாத - கடவுளற்ற - சடங்குகள் செய்யாத தாசர் (திராவிடர்) இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பல் ஆக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு’ (ரிக் - 4617)

மேல் எடுத்துக் காட்டியவற்றால் வேத காலத்துத் திராவிடர்களுக்குத் தெய்வமோ, மதமோ, சடங்குகளோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. மேலும், திராவிட மக்கள் வேள்வி செய்யாதவர்கள்; வேள்வியை வெறுத்தவர்கள் என்பதையும் வேதப் பாடல்களின் மூலம் நாம் அறிய முடிகின்றது.

‘இந்திரனே! வேள்வி செய்யாத தாசர்களை (திராவிடர்களை) கண்காணாத இடத்திற்கு அடித்து விரட்டுவாயாக; அவர்கள் செல்வத்தை இழப்பார்களாக!’ (ரிக் - 7594)

‘இந்திரனே! எங்கள் எதிரிகளாகிய தாசர்களை தாசிகளை, நாத்திகர்களை அழித்துத் தரை மட்டமாக்கு; ஆரியர்களாகிய எங்களுக்குத் தாசர்களை, கருப்பன்களை அடிமைகளாக்கு.’ (ரிக் -)

திராவிடர்களை, ‘நாத்திகர்கள்’, அடிமைகள், கருப்பர்கள் என்ற சொல்லாட்சிகளால் ரிக் வேதம் குறிப்பிடுவதை இங்கே நாம் பார்க்கிறோம்.

வேத காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம்; சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை வரலாற்றாசிரியர்கள் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் கட்டிய கோட்டைகள், மாட மாளிகைகள், வளமான நகரங்கள், நீர்த் தேக்கங்கள், ஆற்று நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைப்பு முறைகள் வரலாற்றாசிரியர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. இறை நம்பிக்கையில்லாத - சடங்குகள் செய்யாத ஓர் உயர்ந்த நாகரிகம் செழித்து வளர்ந்திருந்தது. சிவகங்கைக்கு அருகில் கீழடியில் அண்மையில் நடத்தப் பெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பெற்ற அய்யாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருள்களில் ‘மதச் சின்னங்கள்’ ஒன்றைக் கூடக் காண முடியவில்லை. ஆரியப் பார்ப்பனர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கீழடி நாகரிகம் ‘திராவிட நாகரிகம்’ என்பதை அவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அதனால் கீழடி அகழாய்வுப் பணிகள் மூடப்பட்டுவிட்டன. திராவிட நாகரிகம், நாத்திக நாகரிகமாக - அறிவுசான்ற நாகரிகமாகப் படிநிலை வளர்ச்சி பெற்றிருந்தமையைச் சிந்துவெளி - கீழடி அகழாய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

இவ்வாறு படிநிலை வளர்ச்சி பெற்ற - அறிவுசான்ற ஒரு நாகரிகத்தை அழிக்கும் வேலைகளில் ஆரியர்கள் தொன்றுதொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அவர்களுடைய வேதங்களே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

“தாசர்களுடைய (திராவிடரின்) கோட்டையை உடைத்துத் தகர்த்து நொறுக்கு; இந்திரனே! அவர்களுடைய நகரங்களை எரித்துத் தரையோடு தரைமட்டமாக்கு; நீர்த்தேக்கங்களை உடைத்தெறி; எங்களுக்கு நிறைந்த செல்வங்களைக் கொடு; குதிரைகளை, பசு மந்தைகளைக் கொடு; நல்ல மேய்ச்சல் நிலங்களை எங்களுக்கு வழங்கு; திராவிடர் நிலங்களை எங்களுக்கு வழங்கு; திராவிடர் இனத்தைப் பூண்டோடு ஒழித்துக் கட்டு” என்னும் கருத்துகளே வேதப் பாடல்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

அரக்கர்கள், அசுரர்கள் என்று தங்கள் எதிரிகளாகிய திராவிடர்களை அழைத்த ஆரியர்கள் அவர்களோடு நேருக்கு நேர் நின்று போரிட்டதில்லை. ஆரியர்கள் வஞ்சக வடிவினர்; “ஆரியர்கள் போர் செய்து திராவிடர்களை வென்று விடவில்லை; வெல்லவும் முடியாது. ஆனால், ஆரியப் பண்பாட்டை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர்” (தந்தை பெரியார், ‘விடுதலை’ 23.3.1950) என்கிறார் தந்தை பெரியார். ஆரியர் விரித்த சூழ்ச்சி வலையில் - ‘மோகினி’ வடிவைக் கண்டு அதில் திராவிடர் சிலர் வீழ்த்தனர்.

தங்களைப் ‘பூதேவர்கள்’ (நிலக் கடவுளர்கள்) என்று அழைத்துக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள், தங்கள் எதிரிகளாகிய திராவிடத் தொல்குடி மக்களை எவ்வளவு இழிவாக நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்தினார்கள். திராவிடரைச் ‘சூத்திரர்’ என்று சொல்லி அவர்களைத் ‘தங்கள் வைப்பாட்டி மக்கள்’ என்றும், ‘தங்களின் அடிமைகள்’ என்றும், ‘போரில் புறமுதுகிட்டு ஓடியவர்கள்’ என்றும் பலவாறாக இழிமொழிகளால் பழித்துரைத்தனர். தங்களின் சொற்களுக்குப் பணியாதவர்களை, எதிர்த்து நின்றவர்களை ‘அரக்கர்கள்’ என்றும், ‘அசுரர்கள்’ என்றும், ‘குரங்குகள்’ என்றும் தங்கள் நூல்களில் எழுதி வைத்தனர்.

ஆரியக் குடியிருப்புகள் அமைந்திருந்த கங்கைச் சமவெளியில் எருமை, செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், யானைகள், பசு மாடுகள் முதலானவற்றின் எலும்புகள் நிறையக் கிடைத்துள்ளன. இவற்றில், வெட்டப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. தொல்லியல் துறையின் ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய விலங்குகளின் இறைச்சிகளையெல்லாம் விரும்பி உண்ட ஆரியர்கள், இராவணனை ‘அரக்கன்’ என்றும், இவனோடு சேர்ந்தவர்கள் ‘மனிதர்களைக் கொன்று உண்டவர்கள்’ என்றும் தங்கள் புராணங்களில் எழுதி வைத்துள்ளனர்.

‘நரகாசுரன்’ தன்னைக் கொலை செய்த நாளை மகிழ்ச்சியாடு வெடி வைத்துக் கொண்டாடுமாறு கூறியதாகக் கதை அளந்தனர் ஆரியப் பார்ப்பனர். எந்த மடையனாவது இவ்வாறு கூறுவானா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இராமாயணக் கதையே ஆரிய-திராவிடப் போராட்டத்தைக் குறிக்கும் கதை என்று நேரு பண்டிதரே குறிப்பிட்டிருப்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் ஆரியப் பார்ப்பனரின் சூழ்ச்சிகளை முறியடிக்கத் திராவிடர்களாகிய நாம் ‘அசுரன் விழா’, ‘இராவணன் விழா’ கொண்டாட வேண்டும்.

கங்கையாற்றைக் கடக்கும்போது கங்கையிடம் சீதை சொல்கிறாள்: ‘என் கணவரோடு பாதுகாப்பாக நல்லபடியாக நான் திரும்பி வந்துவிட்டால் இறைச்சி உணவோடு ஆயிரக்கணக்கான மதுக் கலயங்களை உனக்குப் படைக்கிறேன்’ என்று உறுதிமொழி கூறுகிறாள். மேலும் யமுனை ஆற்றைக் கடக்கும்போது சீதை அதனை வணங்கி, ‘என் கணவர் என் விருப்பங்களை நிறைவேற்றிவிட்டால் ஆயிரம் பசு மாடுகளையும், மதுக் கலயங்களையும் உனக்குப் படையலிடுகிறேன்’ என்கிறாள். ‘நாய்க் கறி’ ஒன்று மட்டும் இராமாயணத்தில் விலக்குப் பெற்றுள்ளது. இறைச்சியை விரும்பி உண்ணும் ஆரிய மரபினை இராமாயணம் தூக்கிப் பிடிக்கிறது. இவ்வாறு ஆரியர்களின் - இந்துத்துவக் கோட்பாடுகளைப் பேசும் கதைகளை ஒழிப்பதே நமது தலையாய கடமையாகும். நம்மை இழிவுபடுத்தும் பார்ப்பனர் நூல்களை அடையாளம் கண்டு அவற்றை அழிப்பதென, நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக