செவ்வாய், 17 ஏப்ரல், 2018

பண்டித நேருவும் அசுரர்களும்

வழக்குரைஞர் சு.குமாரதேவன்




பண்டித நேரு அரசியல் தலைவர் மட்டுமல்ல அவர் ஓர் வரலாற்றாய்வாளரும் கூட. சிறைச்சாலையின் கொடுமைகளை அனுபவித்தவர். அவ்வாறு சிறைக் கொடுமைகளை அனுபவித்தபோதும் சரி பின்பு பிரதமரானபோதும் சரி அவர் வரலாற்றின் நெடிய பக்கங்களை அனைவரும் அறியுமாறு செய்தவர் என்றால் அது மிகையில்லை.

சிறைக் கொட்டடியில் அவர் இருந்தபோது தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களில் புதிய புதிய செய்திகளை எழுதியிருப்பார். அந்தச் செய்திகள் இந்திராவுக்கு மட்டும் சொன்னதல்ல அது அனைவருக்கும் சொன்னதாகும். Discovery of India(கண்டுணர்ந்த இந்தியா) என்ற புத்தகத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி எழுதியிருப்பார். நேரு மிக முக்கியமாக 4ஆவது அத்தியாயத்தில் “கண்டுணர்ந்த இந்தியா” என்ற தலைப்பில் எழுதியதன் சுருக்கம் என்னவென்பதை பாரக்கலாம்.

நேரு சொல்கிறார் இந்து என்ற வார்த்தை எந்த தொன்மையான இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படவில்லை. இந்து என்ற சொல் ஒரு மதத்தை பின்பற்றுபவர்களைக் குறிப்பிடவில்லை. ஆனால் அது ஒரு இன மக்களை குறிப்பிடுகிறது என்று கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தந்திர முறைகள் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிந்து சொல்கிறார். இந்து என்ற சொல் புராதானமான பாரசீகத்தில் வழங்கி வந்ததாக சொல்லும் நேரு, சிந்து நதியின் இன்னொரு புறத்தில் வாழ்ந்து வந்தவர்களைப்பற்றி குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிந்து என்ற சொல்லின் திரிவுதான் இந்து மற்றும் இந்துஸ்தான் ஆகிய சொற்கள் தோன்றி இருக்கின்றன என்கிறார். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இட்சிங் I-itsingh) என்றவர் மத்திய ஆசியாவை சேரந்தவர்கள் இந்தியாவை இந்து என்று அழைத்தார்கள் என்று சொல்கிறார் என்றும் நேரு கூறியுள்ளார்.

இந்து என்று சொல்வது இந்து என்ற மதத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமல்லாமல் சிந்துநதிக்கு கீழ் பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் அதாவது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் அனைவரையும் சேர்ந்த சொல் என்று நேரு மேலும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்பது வேதகாலங்களிலும் அதற்கு பின்பும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருந்த ஒன்று என்றும் பிற்காலத்தில்தான் தடைசெய்யப்பட்டது என்பதையும் மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு (Special Guest) மாட்டிறைச்சி மற்றும் கன்றிறைச்சி முதலியவை வழங்கப்பட்டுள்ளது என்பதை தன் ஆராய்ச்சியின் விளைவாக நேரு கூறியுள்ளார். கண்டுணர்ந்த இந்தியா என்ற பகுதியில் மிக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாக நேரு காவியங்கள்-சரித்திரம்-பாரம்பரியம்-பரிந்துரை என்ற பகுதியில் சொல்லியுள்ள செய்திகள் நம் திராவிட இயக்கத்தில் சொல்லப்படும் செய்திகளை அப்படியே சொல்லுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இராமாயணமும் மகாபாரதமும் ஆரியர்களின் தொடக்ககால வாழ்வினையும் அவர்களது போராட்டங்களையும் வெற்றிகளையும் விவரிக்கின்றன. ஆனால் அதில் காணப்படும் சம்பவங்கள் பிற்காலங்களில்தான் இயற்றப்பட்டன என்றும் இந்த புராணக்கதைகள் உலகில் பல்வேறு இடங்களில் பேசப்படும் கேட்கப்படும் சொல்லப்படும் கதைகளான அய்ரோப்பிய வனதேவதை கதைகள் கிரேக்க புராண கதைகள் ஆகியவை போலவே இவைகளும் உள்ளது என்றும் நேரு கூறியுள்ளார். பகவத்கீதை பற்றி நேருவுக்கே உரித்தான குழப்பும் பாணியில் சில கருத்துக்களை சொல்லியிருப்பது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது. அதே சமயத்தில் இராமாயணம் என்பது ஆரியர்கள் திராவிடர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட போரின் விளைவு என்றும் தென்னக பகுதியில் இருந்த மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்களை குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் மாற்றி இருப்பது பற்றி இன்னும் விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என்று நேரு கூறியுள்ளார்.

உலக வரலாறு என்கின்ற இரண்டு புத்தகங்களிலும் கண்டுணர்ந்த இந்தியா மற்றும் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களிலும் ஆரிய திராவிட போராட்டம் நிகழ்ந்துள்ளது என்றும் ஆரியர்கள் படையெடுப்பின் காரணமாக தென்னக மக்களை அழிக்க வேண்டும் அவர்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை அசுரர்களாக சித்தரித்துள்ளனர் என்பதும் நேருவின் நூல்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

எப்படி இந்து என்கின்ற சொல் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு சொந்தமில்லையோ அது போலவே பக்தன் என்கின்ற சொல்லும் இன்றைக்கு இருக்கும் பக்தர்களுக்கு பொருத்தமில்லாத ஒரு சொல்லாகும். “பராமர்த்தனே யேர் இரத்தக    விரக்தோ அபர மாத்மநீ...”

என்ற வரிகளில் பக்தர்கள் என்றால் அவர்கள் கடவுளை தவிர வேறு யார் மீதோ, எந்த பொருள் மீதோ  ஆசை வைப்பவர்கள் பக்தர் கிடையாது. மேலும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாமல் வாரிசு ஆசை இல்லாமல் மனித வாழ்வில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன் பக்தன் என்று ஒரு சுலோகம் சொல்கிறது.

அப்படி பார்த்தால் பக்த கோடிகள் என்பவர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்கள் என்று சொல்வதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆக இந்து மதம் என்னும் மதத்திற்கு பெயர் இரவல் பெயர். அதில் வரும் பக்தர் என்பவருக்கு சரியான விளக்கத்தை பாரத்தால் யாருமே பக்தர்கள் இல்லை. அதேபோல் அசுரர்கள் என்று சொன்னால் அவர்கள் முழுக்க முழுக்க ஆரிய கூட்டத்திற்கு அவர்களின் ஆர்ய வர்த்தமான பரவலுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம். எனவே நேரு சொல்வது நம் திராவிடர் இயக்கத்தின் கோட்பாடுகளை அப்படியே வழிமொழிவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக