அய்யா பேசுகிறார்
திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டி ருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும்.
எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி, ஙி, சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.
- தந்தை பெரியார் (குடிஅரசு 14.7.1945)
அம்பேத்கர் பேசுகிறார்...
தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, ப: 95
- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக