ஞாயிறு, 15 நவம்பர், 2015

திராவிடக் கருத்தியல் திசைமாறிப் போய் விட்டதா?



“காவ்யா தமிழ்’’ சித்திரை (ஏப்ரல் _ ஜூன் 2015) காலாண்டிதழில் தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கட்டுரை வெளி வந்துள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் திராவிடக் கருத்தியல் பற்றிய கட்டுரை அது. 42ஆம் அகவையிலேயே இயற்கை எய்தியவர் சுந்தரம் பிள்ளை.
நீண்ட ஆயுளோடு நிலைத்து வாழ்ந்திருந்தால் அவரது “திராவிடக் கனவு நனவாகி’’ யிருக்கக் கூடும். தற்பொழுது திராவிட அரசியல்தான் நடைபெறுவதால் அவரது திராவிடக் கனவு பொய்த்து விட்டது; திராவிடக் கருத்தியல் திசை மாறிப் போய் விட்டது’’ என்று கட்டு ரையாளர் கூறுகிறார். அதனை மீள் ஆய்வு செய்ய வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. ஆனால் திராவிட இயக்க ஈடுபாட்டில் இதழாசிரியரைக் குறைத்து மதிப்பிட முடியாது.
அவரே திண்ணை என்னும் அதே பகுதியில், “100 ஆண்டுகள் ஆன பிறகும் திராவிட இயக்கத்துக்கான தேவையும் தீர்வும் இருக்கத்தான் செய்கிறது. திராவிட இயக்கத்தின் இதயத்துடிப்புகளான பிராமணீய, இந்துத்துவ, சாதீய, மூடநம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிரான அரசியலுக்கான அவசியம் தொடர் கிறது’’ என்று பதிவு செய்திருப்பது, இதழாசிரியரின் இதயத்தை வெளிப் படுத்துவதாக அமைகிறது. அதன் மூலம் அவர் நம் நெஞ்சில் நிமிர்ந்து நிற்கிறார்.
அவர் நடத்தும் “காவ்யா தமிழ்’’ இதழில் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான இக்கட்டுரை எப்படி இடம் பெற்றது என்பதுதான் தெரியவில்லை. “காலந்தோறும் திராவிடர்’’  என்னும் சொல்லாட்சி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை வரலாற்று ரீதியாக விளக்கியுள்ள இக்கட்டுரையாளர் “திராவிடம்’’ என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் கையாண்ட கால்டுவெல், அதனை இனபேதம் பாராட்டுவதற்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டுகிறார்.
“திராவிட இனம்’’ என்ற கருத்தாக்கமே கால்டுவெல்லின் “கற்பனையில் உதித்த மாயை’’ என்கிறார். அந்த மாயையில் சிக்கியதால்தான் சுந்தரம் பிள்ளை “திராவிட நல் திருநாடு’’ என்று தமிழ்த் தெய்வ வணக்கத்தில் பாடியிருப்பதாகக் கருதுகிறார். சுவாமி விவேகானந்தரிடம் தன்னை “திராவிடர்’’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர் தான் மனோன் மணீயம் சுந்தரம்பிள்ளை ஆவார். அந்த அளவுக்குத் திராவிடக் கருத்தியலோடு அவர் ஒன்றிப் போய் விடுகிறார்.
அவர் சீடரான வெ.ப. சுப்பிரமணிய முதலியார், இராமாயணத்தில் வரும் அரக்கர்களைத் திராவிடர்களென அடையாளம் காட்டினார். தமிழறிஞர்கள் கனக சபைப் பிள்ளை, எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, சிவராச பிள்ளை, வேதாசலம் பிள்ளை (என்ற) மறைமலையடிகள் ஆகியோரையெல் லாம் “வேளாளர்’’ என்னும் கண் கொண்டு பார்க்கிறார்.
இக்கட்டுரையா ளர், இவர்களெல்லாம் மனுநீதியையும் பிராமணர்களையும் எதிர்த்துக் கொண்டு தமது சாதியின் மேம்பாட் டிற்காகச் செய்ய வேண்டிய அனைத் தையும் செய்ததாகக் கூறுகிறார். “பிராமணரல்லாதாரின் நலன்’’ என்ற போர்வையில் வேளாளர் நலனோங்க அறிவுத் துறையில் ஈடுபட்டவர் களாக அவர்களைப் படம் பிடித்துக் காட்டு கிறார். அதற்கு அறிஞர் கைலாச பதி அவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.
அதன் மூலம் வேளாளர் சிலரால் உரு வாக்கப்பட்டதே திரா விடக் கருத்தியல் என்ற தவறான முடிவுக்கு வரு கிறார். இத்திராவிடக் கருத் தியல் தமிழ்ச் சமூகத்தின் 25 விழுக்காட்டினரான இடைத்தட்டு, மேல்தட்டு வேளாளர்களால் மட்டுமே ஆதரிக்கப்பட்டதென்றும், கீழ்த்தட்டு மக்களோடு இதற்கு யாதொரு ஒட்டோ உறவோ இல்லையென்றும் கருதுகிறார்.
வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் பிராமணர் வேளாளர் நலன்கள் மோதிக் கொண்டனவாம். அது வரை நில உடைமையாளர்களான வேளாளர் களிடமிருந்து அதிகாரம், உத்தியோகங் களைப் பெற்றுக் கொள்வதில் முந்திக் கொண்ட பிராமணர்களிடம் சென்ற தாம். அதைச் சகித்துக் கொள்ள முடி யாமல்தான் வேளாளர்கள் பிராமணர் களோடு மோதத் தொடங்கினார்களாம்.
அதன் அமைப்பு ரீதியான வெளிப் பாட்டு வடிவம் தான் பிராமணர் அல்லாதார் இயக்கமும் தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் (1916) என்று கட்டுரையாளர் கருதுகிறார். வேளாளர் தலைமையில் உயர் சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப் பாக அதனை நம் கண்முன் நிறுத்திக் காட்ட முனைகிறார். அதில் எள் முனை அளவாவது உண்மை உண்டா என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்.
1916ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20-ஆம் நாள் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் (வி.பி.ஹால்) ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பிராமணர் அல்லாதாரின் உரிமை களைக் காப்பதற்கு ஓர் அரசியல்  கட்சி யொன்றை அமைப்பதென்று முடி வெடுக்கப் பட்டது. அக்கட்சியினை இணைந்து நிறுவியவர்கள் (Joint Sponsors) டாக்டர் டி.எம். நாயரும் பிட்டி தியாகராயச் செட்டியாரும் ஆவர்.
அவர்கள் இருவருமே வேளாளர்கள் அல்லர். அவர்கள் தொடங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) ஆகும். அதுதான் பிற்காலத்தில் “நீதிக்கட்சி’’ (Justice Party) என்று அழைக்கப்பட்டது. அதுதான் வரலாற்றில் நின்று நிலைத்துவிட்ட திராவிட இயக்கத்தின் தலைமகனாகும்.
அதே நாளில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளரான பிட்டி. தியாகராயச் செட்டியாரின் கையெழுத்துடன் “பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’’ (Non Brahmin Manifesto) என்னும் பிரகடனம் வெளியிடப் பட்டது.
பிராமணரல்லாதாருக்குச் சமுதாய - பொருளாதார நீதி, சம அந்தஸ்து, சம வாய்ப்புகள் ஆகியனவற்றைக் கிடைக் கச் செய்வதுதான் பிராமணரல்லாதார் இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும். கட்சியின் குறிக்கோள் “அனைவருக்கும் நீதி சம வாய்ப்புகள்’’ என்பவைதாம் (The Motto of the party was Justice and equal Opportunities for all) என்கிறார், கோபாலமேனன் என்னும் மாமேதை.
“1916ஆம் ஆண்டு தென் னக வரலாற்றில் ஒரு புது யுகம் பிறந்த ஆண்டாகும்’’ என்று திராவிட இயக்க வரலாறு என்னும் நூலில் அரசியல்ஞானி முர சொலிமாறன் குறிப்பிடுகிறார் (பக்கம் 17) திராவிட இயக்கத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் எஸ். சரஸ்வதி அவர்கள், “1916ஆம் ஆண்டு இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
அப்போதுதான் பிராமணரது ஆதிக் கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அப்போதுதான் அவர்களது சரிவும் ஆரம்பமாகியது’’ (‘The year 1916 is a turning point in the history; the domination of the Brahmin was challenged and his decline began) என்று கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.
“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’’ என்னும் அரசியல் கட்சி, வேளாளர்கள் தலைமையில் மேல்தட்டு மக்களுக்காகத் தொடங்கப்பட்டதன்று என்னும் உண்மை இப்போது புரிகிறதன்றோ?
மனோன்மணீயம் சுந்தரம்பிள் ளையை ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தவர் என்ற கருத்தையும் கட்டுரை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் தமக்கு உதவி புரிந்த ஆங்கில அறிஞர் டாக்டர் ஹார்விதுரை அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் தாம் குடியிருந்த வீட்டுத் தோட்டத்திற்கு “ஹார்விபுரம்’’ என்று பெயரிட்டுள்ளார்.
மனோன் மணீயம் நாடகத்தை அதே ஹார்வி துரையவர்களுக்கே “சமர்ப்பணம்’’ செய்துள்ளார். சொந்த நாட்டு அறிஞர் களை விடுத்து அந்நியர் ஒருவரைத் தூக்கிப் பிடிப்பதிலும் சுந்தரம்பிள் ளைக்கு ஓர் உள்நோக்கம் இருந்திருப் பதாகக் கட்டுரையாளர் கருதுகிறார். மேலும், “அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’’ என்ற தர்மாவேசத்துடன் கேட்ட பாரதியின் குரல் இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் கூறுகிறார்.
அதே நேரம் “வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத் தாய் நல்வரவு கூறுதல்’’ என்ற பாரதியாரின் வரவேற்புக் கவி தையை ஒப்பு நோக்கத் தவறிவிடுகிறார். வேல்ஸ் இளவரசரைப் புகழ்ந்து பாடும்போதே, அவர்தம் துணைவி யாரையும் “நின் மனமெனும் இனிய, மென்மலர் வாழ் மேரி நல்லன்னம்’’ என்று வாழ்த்திப் பாடுகிறார். பாரதி, “தேசியம் வளர்த்த தமிழ்’’ என்னும் நூல் எழுதிய திரு கா. திரவியம் அவர்கள் இப்பாடல், பாரதியாரின் தூய இசைப்பெருக்கிலே ஒரு கணம் தோன்றி மறைந்த “சுருதிபேதம்’’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
சுந்தரம் பிள்ளையாவது பெயர் வைப்பதோடும் நாடகத்தைச் சமர்ப் பணம் செய்வதோடும் நிறுத்திக் கொண்டார். பாரதியாரோ வேல்ஸ் இளவரசரை வரவேற்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட நன்மைகளையும் பட்டிய லிட்டுக் கவிபாடியிருக்கிறார். நாம் அதைக் குறையாகக் கூறவில்லை. அது போல சுந்தரம் பிள்ளையின் செயலிலும் குறை காணத் தேவையில்லை என்றுதான் கூறுகிறோம்.
இங்ஙனம், சுந்தரம்பிள்ளையின் திராவிடக் கருத்தியல் பற்றி நீண்டதோர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். கட்டுரையாளர். அவர் தில்லிப் பல் கலைக் கழக உறுப்புக் கல்லூரியொன் றில் தமிழ் இணைப் பேராசிரியர்: ஆய்வில் ஆழங்கால் பட்டவர். 56 தேசங்களில் திராவிட தேசமும் ஒன்று! என்றவர்;
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசங்களை “பஞ்ச திராவிட தேசங்கள்’’ என்று முன்னோர்கள் அழைத்தனர் என்பதை கால்டு வெல்லின் திராவிடக் கருத்தியலை ஏற்று அயோத்திதாசர் (1845--_1914) “திராவிட ஜனசபை’’ என்ற அமைப் பைத் தொடங்கி நடத்தினார் என்ப தையும் நினைவூட்டியவர். ஆதிசங் கரரின் சௌந்தர்ய லஹரியில் (10) “திராவிட சிசுஹீ!
இடம் பெற்றிருப் பதைச் சுட்டிக் காட்டியவர் -_ அத் தகைய ஆற்றல் பெற்ற அவர் மனோன் மணீயம் சுந்தரம்பிள்ளையின் திராவிடக் கருத்தியல் ஆய்வில் சற்று அடிசறுக்கி விட்டாரே என்பதில்தான் நமக்கு வருத்தம். அவர் கூறியுள்ளது போல வேளாளர்கள் தலைமையில் உருவான தன்று. திராவிடக் கருத்தியல். தாழ்த் தப்பட்ட - _ ஒடுக்கப்பட்ட _ ஓரங் கட் டப்பட்ட தமிழ்ச் சமுதாய மக்களைத் தட்டி எழுப்பி, தலைநிமிர வைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது.
வேளாளர்களுக்கும் பிராமணர் களுக்கும் ஏற்பட்ட மோதலால் உருவானதன்று திராவிட இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் மூலம் ஒரு தெளிவு பிறந்தாலே, திராவிடக் கருத்தியல் திசைமாறிப் போய் விட்டது என்று சொல்லும் துணிவு வராது; திராவிடக் கருத்தியல் என்றைக்கும் திசைமாறிப் போய் விடாது என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
- மு.பி.பா
நன்றி: ‘தமிழாலயம்’ செப்டம்பர் - அக்டோபர், 2015
விடுதலை ஞா.ம.,5.9.15

சரஸ்வதி நதி உண்டா?


சரஸ்வதி ஆறு பண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்ட  ஆறுகளில் ஒன்றாகும்.  பிற்கால வேத நூல்களான தாண் டய மற்றும் ஜைமினிய பிராமாணாஸ் போன்றவையும், அதே போல மகா பாரதமும் சரஸ்வதி ஆறு பாலை வனத்தில் வறண்டு விட்டதாகக் குறிப் பிடுகின்றன. பெண் கடவுளான சரஸ் வதி ஆற்றை இந்த மூலாதாரமாகக் கொண்டே ஆளுருவாக்கம் செய்யப் பட்டார்.  வேதங்களில் நீராதாரத்திற்கான ஒரு பொருளாக ஆறு குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த ஆற்றை சரஸ்வதி என்று கற்பனையாக குறிப்பிடுவார்கள், சரஸ்வதி என்றால் நீர்நிறைந்த பூஞ் சோலை என்று பெயர். சமஸ்கிருதத்தில் குட்டை, குளம் எனும் பொருளிலும்,  உள்ள பெண் பால் சொல்லாகும்.
வேதங்களில் சரஸ்வதி ஆறு குறித்து பல இடங்களில் உள்ளது, ஆனால் எந்த ஒரு இடத் திலும் சரஸ்வதி எங்கிருந்து தோன்று கிறது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் பார்ப்பனர்கள் கூறும் சரஸ்வதி நதியின் தோன்றும் இடமாகக் கருதப் படும் அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் எந்த ஒரு மலையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மகாபாரதத்தில் சரஸ்வதி ஆறு வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. குருசேத்திரப் போர் பற்றி உள்ள கதைப் பகுதியில் வறண்டுபோன சரஸ்வதியின் எல்லையிலிருந்து என்று ஆரம்பிக் கிறது. அதே நேரத்தில் ரிக் வேதத்தில் காணப்படும் சரஸ்வதி ஆற்றின் குறிப்புகள் அனைத்தும் ஈரானில் உள்ள ஹெல்மாண்ட் ஆற்றைப் பற்றியதாகும். இராஜஸ்தான் மாநிலத்தில் ஆர வல்லி மலைத்தொடரில் தோன்றி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் ஆற்றின் பெயர் சரஸ்வதியாகும். சித்பூர் மற்றும் பதான் வழியாகப் பாய்ந்து கட்சு வளைகுடாவில் இறுதியாகக் கலக்கிறது. வங்கதேசத்தில் ஓடும் ஹூக்லி ஆற்றின் கிளை ஆறு ஒன்று 1900ஆம் ஆண்டு கணக்கில் வறண்டு விட்டது. இதையும் சரஸ்வதி ஆறு என்று வங்கப் பார்ப்பனர்கள் கூறுவார்கள்.
சமீபத்தில் டில்லியில் நடந்த வேத ஆய்வு மய்யக் கருத்தரங்கம் ஒன்றில் லலித்கலா அகடமி, சில வேத ஆய்வுக கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அதில் வேதங்களில் எங்கும் கங்கையைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. அதே நேரத்தில் சரஸ்வதி ஆறு குறித்து பல்வேறு இடங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குறிப்புகள் உள்ளன என்று கூறியிருந்தது.
புவியியல் ஆய்வாளர்களின் கருத்துப் படி ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை உயர்ந்த போது ஏற்பட்ட பருவ மாற்றம் காரணமாக பல்வேறு ஆறுகள் தோன்றின. சுமார் 2000 சிறு ஆறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கங்கை ஆறாக மாற 10 லட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டன என்று கூறுகிறார்கள்(பிபிசி புவியியல் ஆய்வு ஆவணப்படம்).   மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே ஓடிக்கொண்டு இருக்கும் கங்கையைப் பற்றி வேதத்தில் எந்தக் குறிப்புமே இல்லை.
-விடுதலை,17.10.15

ராட்சதர்கள் யார்?


இந்து மதப் பண்டிகைகள் பெரும்பாலும் அசுரனைக் கொன்றதாக - அரக்கனைக் கொன்றதாகக் கூறி, அவற்றின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு எடுத்ததாகக் கூறப்படும் அவதாரங்களும் அசுரர்களைக் கொன்றதாகவே இருக்கின்றன.
தீபாவளி கதையை எடுத்துக் கொண்டாலும், நரகாசுரனைக் (அசுரனை) கொன்றதாகத்தான் கூறப்படுகிறது. அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யூக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்றுப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதவர் களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
(ரோமேஷ் சந்திர டட் எழுதிய 'புராதன இந்தியா' எனும் நூல் பக்கம் 52)
ராமாயணக் கதை என்பது, ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்
(சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும்' எனும் நூல் பக்கம் 24)
தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும் , அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டி ருக்கிறார்கள்
('விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் 'ராமாயணம் ' எனும் தலைப்பில் 587-589 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது')
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய ருக்கும் ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகை மைக்குக் காரணமாகும்"
(டாக்டர் ராதாகுமுத முகர்ஜி எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய 'இந்து நாகரிகம்' எனும் நூல் பக்-69)
குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்கள் வாயிலடித்து, வயிற்றிலடித்து சுற்றுபுறத்துக்கு ஊறு விளைவிக்கும் ஊசி வெடிகளை வெடிக்கத்தான் வேண்டுமா?
உருண்டை வடிவிலான பூமியை பாயாகச் சுருட்ட முடி யாது என்பது பள்ளிக்கூட குழந்தைக்குக் கூட பழங்காலத் திலேயே இன்றையப் போரட்டம்தெரியுமே! பாயாகச் சுருட்டி னான்; அதைக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்தான் என்றால் எப்படி நம்புவது? கடலும் பூமிக்குள் தானே இருக் கிறது. அறிவியல் வளராத காலத்து மூடக் கதைகளை இன்றும் பின்பற்றலாமா? இதற்கு பணம் , உணவுப் பொருள், சுற்றுச்சூழல், அறிவு இத்தனையும் வீணாக்குவதா? சிந்திப்பீர்!
இராமயணமும், மகாபாரதமும் இந்தோ ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும், உள் நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும்
(ஜவகர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆப் இந்தியா 'நூல் பக்கம் 76-77)
இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவி யதைக் குறிப்பதாகும்
(ஜவகர்லால் நேரு அதே நூல் பக்கம் -82)
-விடுதலை,19.10.13

சனி, 14 நவம்பர், 2015

சென்னை மாகாணம் முதல் சட்டசபை - சாதனைகள்

- மா.பால்ராசேந்திரம்
ஒரு காலத்தில் உன்னதமான நிலையில் வாழ்ந்து, உலகிலே உயரிய இடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக் காலத்தில் எத்தரின் பிடியில் சிக்கிய தால் சீரழிந்து போன நாடு திராவிட நாடு என்பார் அண்ணா. அந்நாட்டின் பெருமையை, திராவிடரின் உரிமையை நிலைநாட்டிடக் கிடைத்த அரிய வாய்ப்பாக, 1919-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி இந்தியச் சட்ட சபைக்கும், மாகாணச் சட்டசபைக்கும் 1920 நவம்பரில் அறிவிக்கப்பட்டது தான் பொதுத்தேர்தல்.
சென்னை மாகாணச் சபைக்கான மொத்த இடங்கள் 127. பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவோர் 65 பேர். அதில் 28 இடங்கள் பார்ப்பனரல்லா தார்க்கு என ஒதுக்கி 14 இடங்களே தந்தனர். மீதியைப் பொது இடங்கள் என்றனர். முஸ்லிம் 13 பேர், கிறித்தவர் 5 பேர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், பல்கலைக்கழகம் தலா ஒருவர், ஜமீன்தார் 6 பேர், அய்ரோப்பிய வர்த் தகர் 4 பேர், இந்திய வர்த்தகர் 2 பேர் எனத் தனித்தொகுதி மூலம் 33 பேர் தேர்வு செய்யப்படுவர். மீதி 29 பேர் கவர்னரால் நியமிக்கப்படுவார்.
இந்நாடு பொதுமக்கள் சிறையே
எவரும் நிகரென்ற பொதுவுரிமைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
புரட்சிக்கவிஞரின் கூற்றுக்கேற்பப் பெரும்பான்மை மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. சொத்து உள்ளவர், வரி செலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோர் மட்டுமே வாக்களிக்க உரிமை படைத்தோராய் அறிவிக்கப்பட் டது. அமையவிருக்கும் புதிய சட்ட சபையே பெண்கள் வாக்குரிமை பற்றி முடிவு செய்யும். சட்டசபைக் காலம் 3 ஆண்டுகள். கவர்னர், இக்காலத்திற்குள் சபையைக் கலைக்கலாம்; 5 ஆண்டு காலமாக நீடிக்கவும் செய்யலாம். சபைத் தலைவரை முதல் நான்காண்டுகள் அவரே நியமிப்பார். துணைத் தலைவர், உறுப்பினர்களால் தேர்வு செய்யப் படுவார். சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்க, தீர்மானம் கொண்டு வர, ஒத்தி வைப்புத் தீர்மானம் முன்மொழிய, மசோதா கொண்டுவர உரிமைகள் தரப்பட்டன. வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள் விற்கும்
சந்தையா நம்நாடு?
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ!
புரட்சிக் கவிஞரின் புரட்சி வரி களுக்கேற்பத் தமிழர் சமுதாயத்திற்கு இடப்பட்ட ஆரியசனாதன விலங் கினைத் தகர்த்தெறிய நீதிக்கட்சித் தேர்தல் களத்தில் இறங்கியது. காங்கிரசு, தேர்தலைப் புறக்கணித்தது. எனினும், பார்ப்பனரின் வெற்றிக்குப் பாடுபட்டது. அண்ணல் காந்தியோ அரசியல் சீர் திருத்தத்தையே ஏற்க மறுத்து ஒத் துழையாமை இயக்கத்தை அறிவித்தார்.
பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி ஆளவேண்டும்
ஆரியத்தை அடையாளங் கண்டு புதுவைக்குயில் பாடிய வரிகள். திரா விடர் அடிமைத்தளைத் தெறித்திடுமோ! பார்ப்பனர் நிலை இறங்கிடுமோவென அஞ்சிய ஹோம்ரூல் கட்சி வேட்பாளர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் சென்னைத் தேர்தல் கூட்டத்தில் துப்பாக்கியைக் காட்டிச் சுட்டு விடுவேன் என மிரட் டினார். தேர்தல் கள முதல் வன்முறை யாளரும் அவரே. அணில் தள்ளியா தென்னை சாயும்? எதிர்ப்பைப் புறந்தள்ளி நடந்து முடிந்த தேர்தலில் நீதிக்கட்சியில் சர்.பிட்டி.தணிகாசலச் செட்டியார் 4996 வாக்குகளும், ஓ.தணிகாசலச் செட்டியார் 4127 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். பார்ப்பனர் ஹோம்ரூல் இயக்கத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும், டாக்டர் யூ.இராமராவும் முறையே 4933, 4408 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றனர். சர்.சி.பி.ரா. உறுப்பினர் பதவியை விடுத்து அட்வகேட் ஜெனரலாகக் கவர்னரால் முடி சூட்டிக் கொண்டார். தேர்தல் செலவை நாட்டில் முதன் முதல் வீணடித்த பெருமைக்குரியவ ரானார். தோற்றுப்போன நீதிக் கட்சியின் தோற்றுநர் சிகரம் டாக்டர் சி.நடேசனார் இடைத்தேர்தலில் வென்று 1921 மார்ச் 5 இல் சபை உறுப்பினரானார்.
நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இடங் களை வென்றது. நியமன உறுப்பினர் 18 பேர் ஆதரவாளராக வந்தனர். 81 பேரைக் கொண்ட கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயரைக் கவர்னர் லார்டு வெலிங்டன் ஆட்சி அமைக்க அழைத்தார். அவரோ, பொன்னு வைக்கிற இடத்தில் பூவை வைத்தாற் போலப் பெருந்தன்மையோடு தென் னார்க்காடு மாவட்டச் சட்டசபைத் தொகுதியில் வென்ற கடலூர் வழக் கறிஞர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரைத் தலைமையேற்கச் செய்து முதல் அமைச்சர் ஆக்கினார். பி.ராமராய நிங்கார் (பனகல் அரசர்), வழக்கறிஞர் சர்.கே.வி.ரெட்டிநாயுடு இருவரும் அமைச்சர்களாயினர். கவர்னரால் சர்.பி.ராஜகோபாலச்சாரி சட்டசபைத் தலைவராகவும், சர்.கே.சீனிவாச அய்யங்கார் நிர்வாகக்குழு அய்வரில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டனர். சபைத்துணைத் தலைவராகத் திவான்பகதூர் கேசவப்பிள்ளை தேர் வானார். சட்டசபைச் செயலாளர்களாக சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், சர்.ஏ.ராமசாமி முதலியாரும், பாரிஸ்டர்.தங்கவேலுப் பிள்ளையும் பொறுப்பேற்றார்கள். நோய்வாய்ப்பட்ட முதல் அமைச்சர் 1921 திசம்பரில் காலமானார். பனாகல் அரசர் முதல் அமைச்சர் ஆனார். சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும், ஒரிசா பெர்காம்பூர்க்காரர் ஏ.பி.பாத்ரோவும் அமைச்சர்களாயினர். தமிழர் நாடாம் சென்னை, பிறமொழி பேசுவோரின் தலைமையிடமாகியது. சட்டசபையில் தமிழர் இல்லை; தெலுங்கர்களே என்ற மனக்குறை நீதிக்கட்சியினரிடம் இருந்தது.
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி!
என எண்ணும்படிக் குறைவிளக்கித் திராவிடர் சமுதாய இன்னல் களைந்தனர் நம் தலைவர்கள்.
அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமென முதல் அமைச்சர் 1921 ஆகஸ்டு 16இல் முதல் ஆணை பிறப் பித்தார். அதிகாரிகளோ ஆணையைக் கிடப்பில் போட்டனர்.
கல்வி, கண்ணென்ப வாழும் உயிர்க்கு அல்லவா!
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
ஏழுமையும் ஏமாப்பு உடைத்து
தலைமுறைகளை வாழ வைத்திடும் கல்வியை நல்கிடும் அரசுக் கல்லூரிகள் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தன. அதனால் தமிழ் மாணவர் சேர்க்கை ஒடுக்கப்பட்டது. கல்லூரிதோறும் தேர்வுக் குழுக்களை அமைத்துத் தமிழர் மாணவர்களைச் சேர்ப்பிக்கச் செய்த பெருமை கல்வியமைச்சர் ஏ.பி.பாத் ரோவையே சாரும். அதற்கு முன்பு இன்டர்மீடியட் வகுப்பில் பார்ப்பனர் மாணவர் 1260 பேரும், பார்ப்பனரல் லாதார் மாணவர் 640 பேரும், பி.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 469 பேரும், அல்லாதார் 133 பேரும், எம்.ஏ.வகுப்பில் பார்ப்பனர் 157 பேரும், அல்லாதார் 20 பேரும், ஆசிரியர் பயிற்சி (எல்.டி) வகுப்பில் பார்ப்பனர் 1-4 பேரும், அல் லாதார் 11 பேரும் சேர்க்கப்பட்டார் களென்றால் பார்ப்பனரின் இழி குணத்தைக் காணமுடியுமே!
கொடியோர் பஞ்சமர் என்று
கூடப் பிறந்தோர்க்கிவர்
கடும்பேர் வைத்திட்டாரடி
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பஞ்சமர், பள்ளர், பறையர் என்னும் இழிபெயரால் அழைக்கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என அழைத்திட டாக்டர் சி.நடேசனார் கொடுத்திட்ட விண்ணப்பத்தின் கீழ் 1922 மார்ச் 25 அன்று முறையான அரசு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
தங்களால் தான் உலகம் இருக்கிறது. தங்களால் தான் மக்கள் வாழ முடி கிறது. மனித சமுதாயக்கூட்டு வாழ்க் கைக்குத் தாங்களே அஸ்திவாரமான வர்கள் என்பதை உணர வேண்டும் எனத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல நீதிக்கட்சியினர் ஆணைகள் பிறப்பித்துத் தங்கள் ஆட்சியால் திராவிடத் தமிழர்களைப் பெருமைக்குள்ளாக்கினர்.
15.01.1024 ஆணை எண் 116 / சட்டம் மற்றும் பொதுத்துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர்க்குப் பணி உயர்வு, உயர்பதவி நியமனங்கள் செய் யப்பட்டன. வீட்டு மனைகள், குடியி ருப்புகள், பள்ளிகள் ஏற்பாடு செய்யப் பட்டன. பள்ளிகளில் தடை ஏற்படின் புதிய ஏற்பாடும் செய்யப்பட்டன.
கோவை மாவட்ட வலையர், குறவர் குற்றப்பரம்பரையிலிருந்து மீட்க 25 நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
மீனவர் நலன் காக்கவும், கள்ளர் சமூக முன்னேற்றம் காணவும் லேபர் கமிசன் அமைக்கப்பட்டன.
மருத்துவப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவிநிதி அளிக்கப் பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலை நாட்ட ஆண்டுதோறும் அறிக்கை கேட்டுப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கட்டணம் நீக்கப்பட்டது.
கல்லூரி, உயர்நிலைப்பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்க்கு அரைச் சம்பளம் கட்டினால் போதுமெனச் சலுகை வழங்கப்பட்டது. எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல், குறள்படி, சமூக அமைப்பை எப்படி மாற்றியமைக்கின் றோமோ, எப்படி உடைத்தெறிகின் றோமோ அதைப்பொறுத்தே அரசிய லும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும் எனும் அய்யாவின் கருத்திற்கிணங்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது. மயிரைக் கட்டி மலையை இழுத்தது போல் நீதிக்கட்சியின் முதல் சட்டசபை நமக் காக வழங்கிய சமூக நீதிச்சாதனைகளுக் காகப் பாராட்டுவோம் என்றும்.
-விடுதலை ஞா.ம.27.9.14

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

- பழ. கருப்பையா
சட்டப்பேரவை உறுப்பினர்
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
"தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
"எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
"தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
"சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!
நன்றி: தினமணி 23.9.2015
-விடுதலை,24.9.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

வேதங்களில்கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும், குறிப்பும்கூட இல்லை

ரிக்வேதம் முதல் நவீன யுகம் வரை என்ற கலாச்சாரக் கண்காட்சி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சிக்காக சமஸ்கிருத நூலாய்வுக் கழகமான லலித் கலா அகாடமி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
வாஸ்து, ஜோதிடம், ஆயுர் வேதம் மற்றும் அக்கால வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கள் குறித்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், கங்கையைப் பற்றியதுதான். வேத அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டி ருப்பதாவது:
ரிக்வேதத்தில் ஒன்பது கண்டங்கள் மற்றும் பல்வேறு வேத நூல் குறிப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்தோம்; எங்கள் ஆய்வில் சிறிய அளவில்கூடத் தவறு நேர்ந்திட வாய்ப்பில்லை. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் அமைப்பு களையும் ஆய்வு செய்தோம். ஆனால், எந்த இடத்திலும் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும், குறிப்பும்கூட இல்லை; இது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லலித் கலா அகாடமியின் ஆய்வுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலை நாடுகளில் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கட்டுரைகள் என்றும், எந்த ஒரு நிகழ்வையும் அறிவியல் தளத்தில் இருந்தும் இதை நாம் பார்க்க வேண்டும் என்றும் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு இந்துத்துவாவாதிகளை ஒரு கலக்குக் கலக்கும் என்பதில் அய்யமில்லை. இதனை வேறு யாராவது கூறியிருந்தால், அதற்கு உள்நோக்கம் கற்பித்து விடுவார்கள். சொல்லுவதோ சமஸ்கிருத நூலாய்வுக் கழகமாகும்.
கங்கை என்றால் சாதாரணமா? சிவன் தலையில் (?) குடியிருக்கும் கங்காதேவியாயிற்றே - பாவங்களைப் போக்கும் தெய்வ சக்தி கொண்டது என்று நம்புபவர் களாயிற்றே! கங்கையைச் சுத்திகரிப்பதற்காக மத்திய பிஜேபி அரசு கொட்டியழப் போகும் தொகை ரூ.7000 கோடி.
புராணங்களை வரலாறாக மாற்ற நினைக்கும் புளுகுகளை பிஜேபி வட்டாரத்தையே சேர்ந்த ஆய்வுப் புலமே அம்பலப்படுத்தி விட்டது.
இரண்டாவதாக அதே சமஸ்கிருத நூலாய்வு கழகமான லலித் கலா அகாடமி சொல்லும் கருத்தும் கருத்தூன்றத் தக்கதாகும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் ஆரியர்கள், 3000 ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். சிறிது சிறிதாக இந்தியத் தீபகற்பத்துக்குள் நுழைந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் இந்தியத் தீபகற்கம் முழுவதும் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்கள்;  ஆரி யர்களின் வருகையால் திராவிடர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டனர் என்றும் கூறப் பட்டுள்ளது.
ஆரியராவது, திராவிடராவது - இவை எல்லாம் வெள்ளைக்காரன் கட்டி விட்ட கதை, அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பிதற்றும் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகளுக்கு - அவர்கள் வட்டாரத்திலிருந்தே பதிலடி கிடைத்து விட்டதா இல்லையா?
ஆரியர்கள் இந்தியத் தீபகற்பத்தில் நுழைந்த காலந்தொட்டே ஆரியர் - திராவிடர்  போராட்டம் சண்டை என்பது தொடங்கப்பட்டு விட்டது.
அந்தச் சண்டைகளைத் தான் வேதங்கள் வேறு வார்த்தைகளில் கூறுகின்றன.
திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார் எழுதிய பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்) ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதி னார்கள்!
(சி.எஸ்.சினிவாசாச்சாரி எம்.எஸ். ராமசாமி அய் யங்கார் ஆகியோர் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம்)
இந்த ஆதாரங்களை நாம் எடுத்துச் சொன்னபோது ஆரியர் - திராவிடர் கட்டுக் கதை என்று கதைத்தவர்கள் - இப்பொழுது அவர்கள் வட்டாரத்து ஆய்வே ஆரியத் திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார்களே - முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்?
இன்றுகூட பார்ப்பனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் தங்களை வேறுபடுத்தித்தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்;  ஆனால் அதனை ஒப்புக் கொண்டால், அவர்கள் வேறு இனத்தவர் என்ற உண்மை அம்பலப்பட்டு விடுமே - அது அவர்களுக்கு கேடாக முடியுமே- அந்தத் தந்திரத்தால்தான் இப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாக நடந்து கொண்டிருக் கிறார்கள் அல்லது நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உண்மையை எவ்வளவுக் காலம்தான் திரை போட்டு மறைக்க முடியும்?
-விடுதலை,25.9.15