ஞாயிறு, 15 நவம்பர், 2015

திராவிடக் கருத்தியல் திசைமாறிப் போய் விட்டதா?



“காவ்யா தமிழ்’’ சித்திரை (ஏப்ரல் _ ஜூன் 2015) காலாண்டிதழில் தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கட்டுரை வெளி வந்துள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் திராவிடக் கருத்தியல் பற்றிய கட்டுரை அது. 42ஆம் அகவையிலேயே இயற்கை எய்தியவர் சுந்தரம் பிள்ளை.
நீண்ட ஆயுளோடு நிலைத்து வாழ்ந்திருந்தால் அவரது “திராவிடக் கனவு நனவாகி’’ யிருக்கக் கூடும். தற்பொழுது திராவிட அரசியல்தான் நடைபெறுவதால் அவரது திராவிடக் கனவு பொய்த்து விட்டது; திராவிடக் கருத்தியல் திசை மாறிப் போய் விட்டது’’ என்று கட்டு ரையாளர் கூறுகிறார். அதனை மீள் ஆய்வு செய்ய வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. ஆனால் திராவிட இயக்க ஈடுபாட்டில் இதழாசிரியரைக் குறைத்து மதிப்பிட முடியாது.
அவரே திண்ணை என்னும் அதே பகுதியில், “100 ஆண்டுகள் ஆன பிறகும் திராவிட இயக்கத்துக்கான தேவையும் தீர்வும் இருக்கத்தான் செய்கிறது. திராவிட இயக்கத்தின் இதயத்துடிப்புகளான பிராமணீய, இந்துத்துவ, சாதீய, மூடநம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிரான அரசியலுக்கான அவசியம் தொடர் கிறது’’ என்று பதிவு செய்திருப்பது, இதழாசிரியரின் இதயத்தை வெளிப் படுத்துவதாக அமைகிறது. அதன் மூலம் அவர் நம் நெஞ்சில் நிமிர்ந்து நிற்கிறார்.
அவர் நடத்தும் “காவ்யா தமிழ்’’ இதழில் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான இக்கட்டுரை எப்படி இடம் பெற்றது என்பதுதான் தெரியவில்லை. “காலந்தோறும் திராவிடர்’’  என்னும் சொல்லாட்சி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை வரலாற்று ரீதியாக விளக்கியுள்ள இக்கட்டுரையாளர் “திராவிடம்’’ என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் கையாண்ட கால்டுவெல், அதனை இனபேதம் பாராட்டுவதற்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டுகிறார்.
“திராவிட இனம்’’ என்ற கருத்தாக்கமே கால்டுவெல்லின் “கற்பனையில் உதித்த மாயை’’ என்கிறார். அந்த மாயையில் சிக்கியதால்தான் சுந்தரம் பிள்ளை “திராவிட நல் திருநாடு’’ என்று தமிழ்த் தெய்வ வணக்கத்தில் பாடியிருப்பதாகக் கருதுகிறார். சுவாமி விவேகானந்தரிடம் தன்னை “திராவிடர்’’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர் தான் மனோன் மணீயம் சுந்தரம்பிள்ளை ஆவார். அந்த அளவுக்குத் திராவிடக் கருத்தியலோடு அவர் ஒன்றிப் போய் விடுகிறார்.
அவர் சீடரான வெ.ப. சுப்பிரமணிய முதலியார், இராமாயணத்தில் வரும் அரக்கர்களைத் திராவிடர்களென அடையாளம் காட்டினார். தமிழறிஞர்கள் கனக சபைப் பிள்ளை, எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, சிவராச பிள்ளை, வேதாசலம் பிள்ளை (என்ற) மறைமலையடிகள் ஆகியோரையெல் லாம் “வேளாளர்’’ என்னும் கண் கொண்டு பார்க்கிறார்.
இக்கட்டுரையா ளர், இவர்களெல்லாம் மனுநீதியையும் பிராமணர்களையும் எதிர்த்துக் கொண்டு தமது சாதியின் மேம்பாட் டிற்காகச் செய்ய வேண்டிய அனைத் தையும் செய்ததாகக் கூறுகிறார். “பிராமணரல்லாதாரின் நலன்’’ என்ற போர்வையில் வேளாளர் நலனோங்க அறிவுத் துறையில் ஈடுபட்டவர் களாக அவர்களைப் படம் பிடித்துக் காட்டு கிறார். அதற்கு அறிஞர் கைலாச பதி அவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.
அதன் மூலம் வேளாளர் சிலரால் உரு வாக்கப்பட்டதே திரா விடக் கருத்தியல் என்ற தவறான முடிவுக்கு வரு கிறார். இத்திராவிடக் கருத் தியல் தமிழ்ச் சமூகத்தின் 25 விழுக்காட்டினரான இடைத்தட்டு, மேல்தட்டு வேளாளர்களால் மட்டுமே ஆதரிக்கப்பட்டதென்றும், கீழ்த்தட்டு மக்களோடு இதற்கு யாதொரு ஒட்டோ உறவோ இல்லையென்றும் கருதுகிறார்.
வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் பிராமணர் வேளாளர் நலன்கள் மோதிக் கொண்டனவாம். அது வரை நில உடைமையாளர்களான வேளாளர் களிடமிருந்து அதிகாரம், உத்தியோகங் களைப் பெற்றுக் கொள்வதில் முந்திக் கொண்ட பிராமணர்களிடம் சென்ற தாம். அதைச் சகித்துக் கொள்ள முடி யாமல்தான் வேளாளர்கள் பிராமணர் களோடு மோதத் தொடங்கினார்களாம்.
அதன் அமைப்பு ரீதியான வெளிப் பாட்டு வடிவம் தான் பிராமணர் அல்லாதார் இயக்கமும் தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் (1916) என்று கட்டுரையாளர் கருதுகிறார். வேளாளர் தலைமையில் உயர் சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப் பாக அதனை நம் கண்முன் நிறுத்திக் காட்ட முனைகிறார். அதில் எள் முனை அளவாவது உண்மை உண்டா என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்.
1916ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20-ஆம் நாள் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் (வி.பி.ஹால்) ஒரு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பிராமணர் அல்லாதாரின் உரிமை களைக் காப்பதற்கு ஓர் அரசியல்  கட்சி யொன்றை அமைப்பதென்று முடி வெடுக்கப் பட்டது. அக்கட்சியினை இணைந்து நிறுவியவர்கள் (Joint Sponsors) டாக்டர் டி.எம். நாயரும் பிட்டி தியாகராயச் செட்டியாரும் ஆவர்.
அவர்கள் இருவருமே வேளாளர்கள் அல்லர். அவர்கள் தொடங்கிய அரசியல் கட்சிதான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) ஆகும். அதுதான் பிற்காலத்தில் “நீதிக்கட்சி’’ (Justice Party) என்று அழைக்கப்பட்டது. அதுதான் வரலாற்றில் நின்று நிலைத்துவிட்ட திராவிட இயக்கத்தின் தலைமகனாகும்.
அதே நாளில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளரான பிட்டி. தியாகராயச் செட்டியாரின் கையெழுத்துடன் “பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’’ (Non Brahmin Manifesto) என்னும் பிரகடனம் வெளியிடப் பட்டது.
பிராமணரல்லாதாருக்குச் சமுதாய - பொருளாதார நீதி, சம அந்தஸ்து, சம வாய்ப்புகள் ஆகியனவற்றைக் கிடைக் கச் செய்வதுதான் பிராமணரல்லாதார் இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும். கட்சியின் குறிக்கோள் “அனைவருக்கும் நீதி சம வாய்ப்புகள்’’ என்பவைதாம் (The Motto of the party was Justice and equal Opportunities for all) என்கிறார், கோபாலமேனன் என்னும் மாமேதை.
“1916ஆம் ஆண்டு தென் னக வரலாற்றில் ஒரு புது யுகம் பிறந்த ஆண்டாகும்’’ என்று திராவிட இயக்க வரலாறு என்னும் நூலில் அரசியல்ஞானி முர சொலிமாறன் குறிப்பிடுகிறார் (பக்கம் 17) திராவிட இயக்கத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் எஸ். சரஸ்வதி அவர்கள், “1916ஆம் ஆண்டு இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
அப்போதுதான் பிராமணரது ஆதிக் கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அப்போதுதான் அவர்களது சரிவும் ஆரம்பமாகியது’’ (‘The year 1916 is a turning point in the history; the domination of the Brahmin was challenged and his decline began) என்று கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.
“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’’ என்னும் அரசியல் கட்சி, வேளாளர்கள் தலைமையில் மேல்தட்டு மக்களுக்காகத் தொடங்கப்பட்டதன்று என்னும் உண்மை இப்போது புரிகிறதன்றோ?
மனோன்மணீயம் சுந்தரம்பிள் ளையை ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தவர் என்ற கருத்தையும் கட்டுரை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் தமக்கு உதவி புரிந்த ஆங்கில அறிஞர் டாக்டர் ஹார்விதுரை அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் தாம் குடியிருந்த வீட்டுத் தோட்டத்திற்கு “ஹார்விபுரம்’’ என்று பெயரிட்டுள்ளார்.
மனோன் மணீயம் நாடகத்தை அதே ஹார்வி துரையவர்களுக்கே “சமர்ப்பணம்’’ செய்துள்ளார். சொந்த நாட்டு அறிஞர் களை விடுத்து அந்நியர் ஒருவரைத் தூக்கிப் பிடிப்பதிலும் சுந்தரம்பிள் ளைக்கு ஓர் உள்நோக்கம் இருந்திருப் பதாகக் கட்டுரையாளர் கருதுகிறார். மேலும், “அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’’ என்ற தர்மாவேசத்துடன் கேட்ட பாரதியின் குரல் இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் கூறுகிறார்.
அதே நேரம் “வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத் தாய் நல்வரவு கூறுதல்’’ என்ற பாரதியாரின் வரவேற்புக் கவி தையை ஒப்பு நோக்கத் தவறிவிடுகிறார். வேல்ஸ் இளவரசரைப் புகழ்ந்து பாடும்போதே, அவர்தம் துணைவி யாரையும் “நின் மனமெனும் இனிய, மென்மலர் வாழ் மேரி நல்லன்னம்’’ என்று வாழ்த்திப் பாடுகிறார். பாரதி, “தேசியம் வளர்த்த தமிழ்’’ என்னும் நூல் எழுதிய திரு கா. திரவியம் அவர்கள் இப்பாடல், பாரதியாரின் தூய இசைப்பெருக்கிலே ஒரு கணம் தோன்றி மறைந்த “சுருதிபேதம்’’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
சுந்தரம் பிள்ளையாவது பெயர் வைப்பதோடும் நாடகத்தைச் சமர்ப் பணம் செய்வதோடும் நிறுத்திக் கொண்டார். பாரதியாரோ வேல்ஸ் இளவரசரை வரவேற்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட நன்மைகளையும் பட்டிய லிட்டுக் கவிபாடியிருக்கிறார். நாம் அதைக் குறையாகக் கூறவில்லை. அது போல சுந்தரம் பிள்ளையின் செயலிலும் குறை காணத் தேவையில்லை என்றுதான் கூறுகிறோம்.
இங்ஙனம், சுந்தரம்பிள்ளையின் திராவிடக் கருத்தியல் பற்றி நீண்டதோர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். கட்டுரையாளர். அவர் தில்லிப் பல் கலைக் கழக உறுப்புக் கல்லூரியொன் றில் தமிழ் இணைப் பேராசிரியர்: ஆய்வில் ஆழங்கால் பட்டவர். 56 தேசங்களில் திராவிட தேசமும் ஒன்று! என்றவர்;
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசங்களை “பஞ்ச திராவிட தேசங்கள்’’ என்று முன்னோர்கள் அழைத்தனர் என்பதை கால்டு வெல்லின் திராவிடக் கருத்தியலை ஏற்று அயோத்திதாசர் (1845--_1914) “திராவிட ஜனசபை’’ என்ற அமைப் பைத் தொடங்கி நடத்தினார் என்ப தையும் நினைவூட்டியவர். ஆதிசங் கரரின் சௌந்தர்ய லஹரியில் (10) “திராவிட சிசுஹீ!
இடம் பெற்றிருப் பதைச் சுட்டிக் காட்டியவர் -_ அத் தகைய ஆற்றல் பெற்ற அவர் மனோன் மணீயம் சுந்தரம்பிள்ளையின் திராவிடக் கருத்தியல் ஆய்வில் சற்று அடிசறுக்கி விட்டாரே என்பதில்தான் நமக்கு வருத்தம். அவர் கூறியுள்ளது போல வேளாளர்கள் தலைமையில் உருவான தன்று. திராவிடக் கருத்தியல். தாழ்த் தப்பட்ட - _ ஒடுக்கப்பட்ட _ ஓரங் கட் டப்பட்ட தமிழ்ச் சமுதாய மக்களைத் தட்டி எழுப்பி, தலைநிமிர வைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது.
வேளாளர்களுக்கும் பிராமணர் களுக்கும் ஏற்பட்ட மோதலால் உருவானதன்று திராவிட இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் மூலம் ஒரு தெளிவு பிறந்தாலே, திராவிடக் கருத்தியல் திசைமாறிப் போய் விட்டது என்று சொல்லும் துணிவு வராது; திராவிடக் கருத்தியல் என்றைக்கும் திசைமாறிப் போய் விடாது என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
- மு.பி.பா
நன்றி: ‘தமிழாலயம்’ செப்டம்பர் - அக்டோபர், 2015
விடுதலை ஞா.ம.,5.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக