சனி, 15 ஏப்ரல், 2017

திராவிடர் யார்? சி.பா.ஆதித்தனார் கூறுவது சரியா?


===============================================
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், திராவிடர் யார் என்ற கேள்விக்கு திராவிடர்கள் என்போர் தெலுங்கர். தமிழர்கள் அல்லர் என்கிறார்.
1875 ஆண்டிற்கு முன் திராவிடர் என்பது தெலுங்கர்களை மட்டுமே குறிக்கிறது.

அந்த ஆண்டில் கால்டுவெல்தான் தமிழர்களையும் குறிப்பதாக அச்சொல்லை மாற்றினார்.
திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை என்ற தவறான கருத்துகளைக் கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனார் ஓர் இன, மொழி ஆய்வாளர் அல்ல. அவர் ஒரு வழக்கறிஞர். ஒரு பத்திரிகையாளர்.
நாம் தமிழர் கட்சி நடத்தியபோது அவர் கூறிய அபத்தக் கருத்துக்கள் இவை. அந்த நாம் தமிழர் ஆதித்தனார் பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்து பதவி வகித்தார் என்பதிலிருந்தே அவரது கொள்கை உறுதி தெரியுமே!

திராவிடத்தை எதிர்த்த மா.பொ.சி. பின்னாளில் திராவிடக் கட்சியில் பதவி வகித்தார். எனவே, இப்படிப்பட்டவர்களின் பினாத்தல்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்றாலும், உண்மையை அறிய ஆதித்தனார் கருத்துக்கு மறுப்பாக உண்மைத் தகவல்களை இங்குத் தெரிவித்துள்ளேன்.

கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள்
திராவிடர்கள்...

திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.
1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு.
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை,தென்மொழிகளைக் குறிக்கப்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).
கியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)  என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

சமற்கிருதம் தொடர்பாக நூல் எழுதியவர்களும், திராவிட என்ற சொல்லை இனம், மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே, (Caldwell coined the) சொல்வதைவிட, அவரே கூறுவதுபோல, “The word I have chosen is Dravidan from Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், திராவிட என்ற சொல்லை  வரையறுத்த பொருளில் பயன்படுத்தி, உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதுதான் உண்மையேயன்றி கால்டுவெல்தான் திராவிடர் என்ற சொல்லை தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தினார் என்பது தப்பான செய்தி.

திராவிடத்தை எதிர்ப்போர் யார்?
திராவிடத்தை எதிர்ப்போர் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் ஆரியர்களை அணைத்து தமிழர்களோடு சேர்க்கத் துடிப்பவர்கள்.

மேலும், திராவிடக் கட்சிகளை வீழ்த்திவிட்டு, தங்கள் பதவிக்கு வரத் துடிப்பவர்கள்.
இவர்களின் பேச்சில் மயங்கி உண்மையறியாது இளைஞர் திசைமாறினால், அது ஆரியர்கள் ஆதிக்கத்திற்கும் மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடிக்கவுமே உதவும்.
தமிழர்களே எச்சரிக்கை!

பதிவு Manjai Vasanthan

திங்கள், 13 மார்ச், 2017

ஆரியர்களின் வருகை


ஆரியர்களுடன் இரத்த உறவு கொண்ட அண்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானியர் சவை ஹ என உச்சரித்து அதனால் “சப்த சிந்து” பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த தமது சகோதரர்களின் நாட்டை அவர்கள் "ஹப்த ஹிந்து" என்று அழைத்து வந்தனர். அதன் சுருக்கமே ஹிந்த் என்பது அக்காலத்தில் மேற்கத்தய நாடுகளில் சிறந்து விளங்கிய கிரீஸ் நாட்டினன் 'ஹ' வை ‘அ’ என்று உச்சரித்து வந்தனர். அதனால் ஹந்து இந்து இந்த்' ஆகிவிட்டது. இன்று எங்கும் நமது நாடு இதே பெயரில்தான் வழங்கப்படுகிறது. ரிக் வேதத்தில் சப்த சிந்து என்று பல இடங்களிலும் காணப் படுகிறது. அது சில இடங்களில் ஏழு நதிகள் பாயும் பிரதேசம் என்ற அர்த்தத்திலும் வருகிறது. அந்தச் சமயத்தில் இனக்குழுக்களின் பெயரிலேயே நாடுகளின் பெயரும், ஜனபதங்களின், ராஜ்ஜியங்களின் பெயரும் அமைந்து வந்தன. இதனால் அக்காலத்தவர்கள் நாட்டையும், ராஜ்ஜியத்தையும் பன்மையிலேயே குறிப்பிட்டனர்.

ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர். இதை ஒப்புக் கொள்ளாவிட்டால் சில பிரச்சனைகள் தோன்றிவிடும். ஆரியர்கள் மொழியும், மேற்கு நாடுகளில் வாழும் மக்களின் பல்வேறு மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவையாக உள்ளன.

வெளியே இருந்து வந்தனன் என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் மேற்கு நாடுகளில் மக்கள் இந்தியா விலிருந்து சென்றவர்கள் என்று கருத வேண்டிவரும்.

இதனால் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம். ஆரியர் குறித்தும், இந்தோ-அய்ரோப்பிய மொழிகள் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலேயே, இப்படிப்பட்ட கருத்து தோன்றுகிறது. இதனாலேயே நம் நாட்டு வரலாற்றாசிரியர்கள் சிலர் கலியுகம் மகாபாரதக்காலம் எனக் கணக்கிட்டு சரித்திரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் கொண்டு செல்ல முயலுகின்றனர். உண்மையில் ஆசியா மைனரில் ஹித்திதரும், கிரீஸில் கிரேக்கர்களும் ஈரானில் ஈரானியரும் பிரவேசித்த காலத்தை ஆராய்ந்தால் இந்தியாவில் ஆரியர் கி.மு. 1500-க்கு முன் நுழைந்திருக்க மாட்டார்கள் என்பது புரியும்.

'ரிக் வேதத்தை இயற்றிய மிகப்புகழ்பெற்ற ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்தரரும் வெகு காலத்திற்கு பிறகு குறைந்தது 300 ஆண்டுகளுக்கு பிறகு இருந்தவர்கள்தாம் (வளரும்)

- ராகுல சாங்கிருத்தியாயன்

-விடுதலை ஞா.ம.11.3.17

செவ்வாய், 7 மார்ச், 2017

Meera Bala Murugan.. ஈழதமிழர்களின் ஒரே பிரதிநிதியாக சர்வதேசமும் அங்கிகரித்த விடுதலைப் புலிகளே அவர்கள் கியூபாவில் நடந்த புரட்சிகர இயக்கங்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மிகத்தெளிவாக தாங்கள் திராவிடர்கள் என்று கூறி பதிவு செய்துள்ளனர்.. உங்கள் பார்வைக்காக அறிக்கை..

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கீழடி தொல்லியல் ஆய்வுகள் மீண்டும் தொடர்வது வரவேற்கத்தக்கதே!

தலைசிறந்த திராவிடர்களின் நகர்ப்புற நாகரிகத்தை

பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வுகள் மீண்டும் தொடர்வது வரவேற்கத்தக்கதே!

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற்காக

வள்ளுவர் கோட்டத்தை அரசியல் நோக்கோடு சீரழிக்கக் கூடாது!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் காரணமாக, கீழடியில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டது என்பதற்காக அரசியல் நோக்கத்தோடு சரிவரப் பராமரிக்காமல் சீரழிப்பது சரியானதல்ல. மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் கொந்தளிப்பை அரசு உணர்ந்து கொண்டு, சீரமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வு என்பது மிகப் பெரிய வரலாற்று உண்மைகளை உலகுக்கு - வருங்காலத்தில் தெரிவிக்கப் போகும் மிகப் பெரிய ஆய்வாகும்.

சிவகங்கை மாவட்டம் என்றாலும் இந்தப் பகுதி மதுரை திருபுவனத்துக்கு அருகில் உள்ளதொரு பகுதியாகும்.

மிகப் பெரிய திராவிடர் நாகரிகம்

முற்காலத்தில் மதுரை ஒரு பெரிய தலைநகரமாகவே இருந்தது என்பதற்குச் சான்றாவணங்கள் ஆழ்ந்து பரிசீலித்த பிறகு கிடைக்கக் கூடிய அளவிற்கு உள்ளன. வடக்கே சிந்துவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பகுதிகளில் தோண்டி எடுத்ததில் - மிக அழகிய நகர்ப்புற நாகரிகம் பழைமை வாய்ந்த சின்னங்களாக பாதாளச் சாக்கடை உட்பட அமைக்கப்பட்ட அவ்வளவு சிறந்த நகரங்கள் அத்தனை ஆண்டு காலம் முன்பே அமைந்த ஒன்று என்பதற்கு  அந்தப் பகுதிகள் சான்றுகளாக உள்ளன என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்!

மற்ற பகுதிகளில் கிராமப்புற நாகரிகங்கள்தான் என்று நிலவிய ஒரு கருத்தினை பொய்யாக்கிடக் கூடிய வகையில், கீழடி அகழ்வாய்வு - இதனை ஒரு புதையுண்ட தலை சிறந்த திராவிடர் நாகரிகம் என்பதைப் புலப்படுத்தும் வகையில் உள்ளது என்பது இதனை முழுமையாக ஆய்ந்த பின்னர் கிடைக்கும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது!

எதிர்ப்புக்குக் கிடைத்த பலன்!

அதனை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து ஏகோபித்து எழுந்த குரல் - எதிர்ப்பு  - கண்டனம் - காரணமாக, இப்போது அனுமதி வழங்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது! (12.1.2017 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது).

ஆர்.எஸ்.எஸ். பாம்பு அடிக்கடி தலையை நீட்டிப் பார்த்து "அடி விழுந்தவுடன் உள்ளே தலையை இழுத்துக் கொள்கிறது"

கீழடி அகழ்வாய்வு சம்பந்த நிகழ்வுகளிலும் இதுதான் இன்றைய நடைமுறை

இதனை தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி தன் பங்குக்கு நிதி ஒதுக்கீடு  செய்து இந்த ஆய்வுகளை விரைந்து மேற்கொள்ள மிகப் பெரிய அளவில் உதவிட வேண்டும்.

தலைநகரில் உள்ள வள்ளுவர் கோட்டத்தைச் சீரழிக்கலாமா?

அதுபோலவே வள்ளுவர் கோட்டம் மிக அருமையான ஒரு பொது அரங்கம்!

தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செய்தார் என்ற ஒரே காரணத்தால் அதனைப் பராமரிக்க முன் வராமல், அ.தி.மு.க. ஆட்சி அலட்சியம் காட்டுவது, நாட்டு மக்களிடையேயும், பொதுவான தமிழ் ஆர்வலர்களிடையேயும் மிகவும் மனக் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது என்பதை தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியினர் உணர வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் - இதே போல ஓர வஞ்சனைப் பார்வையோடு அலட்சியப்படுத்தப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை கண்டித்து இறுதியில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது!

இவை அன்றைய ஜெயலலிதா அரசிற்கு ஏற்பட்ட களங்கம்; இன்று வந்துள்ள ஆட்சி அதைத் துடைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் ஒரு அரசு (அது ஒரே கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றமாக இருந்தாலும்கூட) தொடர் அரசுதான்!

இக்கட்சி அக்கட்சி எனப் பாராது எக்கட்சியாயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு என்பதே மக்களாட்சியின் மாண்பாகும்!

உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜெயலலிதா தலைமையில் இருந்த அரசு எதிர்த்தபோது, ஓங்கி தலையில் குட்டியது போல மேற்சொன்ன உண்மையை ஜன நாயகத்தில் "ஆட்சிகளின் தொடர்ச்சி" என்பதை வலியுறுத்தியதை மறந்து விட வேண்டாம்!

உடனே செயத்தக்க செய்க! செய்க!!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21-2-2017

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு திராவிடர் நாகரிகமே! சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி




தமிழக மக்களின் வாழ்வோடு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பொங்கல் விழாவோடு பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து நடக்கும் தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை வரவேற்கிறேன். 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இந்திய நாகரிகச் சின்னமான ஹரப்பாவில் கிடைத்த அடையாளங்களில் எருதுடன் கூடிய மனிதர்களைக் காண முடிகிறது.

அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே.

பழைமைவாய்ந்த மரபுரீதியானவிளையாட்டுக்களை,பிராணி களை வதை செய்யக்கூடாது என்று சொல்லி தடை செய்வது நியாயமா? இப் போராட்டங்களில் மதம், ஜாதி கடந்து லட்சக் கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டிருப்பது வரவேற்க வேண்டிய அம்சமாகும். தமிழக இளைஞர்களின் உணர்வுகளை மோடி புரிந்து கொள்வாரா?
-விடுதலை,22.1.17

வெள்ளி, 6 ஜனவரி, 2017

திராவிடன் என்றால் என்ன?


தந்தை பெரியார் பொன்மொழி


திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமோ? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி என்று நீ சிந்திப்பதில்லை. நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது?

தந்தை பெரியார் பொன்மொழி

இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?


என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

-விடுதலை,28.6.14

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம்-நடைப் பயணம்!

சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம்-நடைப் பயணம்!

தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பு....

சென்னை, ஆக.22- திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் நம்ம சென்னை இது - ஒரு வரலாற்றுக் கொண் டாட்டம் என்கிற தலைப்பில் திராவிட உலாவின்மூலம் சென்னையில் தொண்டாற்றிய அரும்பெரும் திராவிடர் தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வாக தியாகராயர் நகரில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.டி.அரிகிருஷ்ணன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், கோவி.லெனின், கோ.கருணாநிதி,  வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பெரியார் களம் இறைவி,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகத்தலைவர் தமிழ்ச் செல்வன், பேராசிரியர் இசையமுது, பிழைபொறுத்தான், தேனருவி, ப.இராமு, ராஜூ, சைதை மு.ந.மதியழகன், பரணீ தரன், இளஞ்சேரன், மயிலை குமார், திராவிடப் புரட்சி,சுரேஷ், வெற்றி, கலைமணி, மகேஷ்,  ஊடகத்துறை உடுமலை, ந.கதிரவன், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

நம்ம சென்னை, இது ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் நிகழ்வு சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் அண்ணா சிலை அருகிலிருந்து தொடக்கப்பட்டது. உஸ்மான் சாலை என்று பெயரிடப்பட்டுள்ள தலைவர் உஸ்மான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சென்னை மாநிலத் தற்காலிகஆளுநராக முதல் இந்தியராக நியமிக்கப் பட்டவர் உஸ்மான். உள்துறை அமைச்சராக பணியாற்றியவர்.  அவர் ஆற்றிய பணிகள் குறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விரிவாக எடுத்துரைத்தார்.

உஸ்மான் சாலையில் தொடங்கிய நடைப்பயணம் பனகல் பூங்கா நோக்கி சென்றது. பனகல் பூங்காவை நடைப்பயணக் குழு அடைந்தது. பனகல் பூங்காவில் பனகல் அரசரின் சிலை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ராமராய நிங்கார் என்கிற பெயருடையவரான பனகல் அரசர் காளஹஸ்தியில் ஜமீன்தார் குடும்பத்திலிருந்து சென்னைக்கு வந்து சென்னையில் பள்ளிக்கல்வி, கல்லூரியிலும் கல்வி பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடத்தில் பட்டம் பயின்றார்.

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் இருந்த சென்னை மாநிலத்தின் (ப்ரீமியராக) இரண்டாவது தலைமை அமைச்சராக இருந்தார். முதல் தலைமை அமைச்சராக இருந்தவர் சுப்பராயலு ரெட்டியார். இந்தியா முழுமைக்குமாக மகாராட்டிர மாநிலத்தில் சாகு மகராஜ் அமைத்திருந்த பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பில் இணைந்திருந்தார். அந்த பார்ப்பனர் அல்லாத அமைப்பின் மாநாட்டுத் தலைவராகவும் இருந்தார்.

நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். பனகல் அரசர் இந்திய மருத்துவத்துவக்கல்விக்கு அடிப்படை யாகத் திகழ்ந்தார். இந்து அறநிலையத் துறையை உருவாக் கியவர். திருவரங்கம் சென்ற பனகல் அரசருக்கு வரவேற்பை பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் கூறியபோது, அவரும் சமஸ் கிருதத்திலேயே பதில் கூறியுள்ளார். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீக்கியவரும் இவரே!

நடைப் பயணக்குழுவினர் பனகல் பூங்காவிலிருந்து சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கம் சென்றது. தந்தை பெரியார் காங்கிரசிலிருந்தபோது குடியரசு இதழைத் தொடங்கினார். அப்போது முதல் இதழிலேயே சர்.பிட்டி.தியாகராயர் மறைந்தாரே! என்கிற தலைப்பில் நீண்ட தலையங்கத்தை எழுதினார். சென்னையில் முதன்முதலாக பள்ளிக் குழந்தை களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சர் (ப்ரீமியர்) பதவி ஏற்கச் சொன்ன போது மறுத்தவர். சென்னை மாநக ராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றவர். 40 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி உறுப்பின ராகவும், அதன்பிறகு மேயராகவும் இருந்துள்ளார்.

மாநகராட் சியிலேயே இவருக்கும், டிஎம் நாயருக்கும் அடிக்கடி மோதல் நடக்கும். காரணம் இவர் ஆன்மிகவாதியாக இருந்ததுதான். அப்படி மயிலாப்பூர் கற்பாகாம்பாள் கோயில் விழாவுக்கு அந்தக் காலத்திலேயே ரூபாய் பத்தாயிரம் வழங்கி, அந்த விழாவுக்குச் சென்றபோது, அவரை உட்காரக்கூட சொல்ல வில்லை. ஆனால், பார்ப்பனர் என்பதால் இவருக்குக்கீழ் பணிபுரியக்கூடிய ஒரு சிப்பந்தி பார்ப்பனர் மேலே உட்கார வைத்திருந்தார்கள். அப்போதுதான் பார்ப்பனர்களைப் புரிந்துகொண்டு காரை நேரே டாக்டர் நாயர் வீட்டுக்கு விடச்சொன்னவர். அப்போது, இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். தியாகராயர் எழுதிய உயிலின்மூலம் அவரு டைய  சொத்துக்கள் முழுமையாக கல்விப் பணிக்கு பயன்படுத் தப்பட்டது.

அதுதான் பள்ளியாக இருந்து தற்போது வட சென்னையில் இருக்கக்கூடிய தியாகராயர் கல்லூரி என்று விரிவாகக் குறிப்பிட்டார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் செயலாளர் முனைவர் பேராசிரியர் மங்களமுருகேசன் சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்திலிருந்து சவுந்திர பாண்டியனார் அங்காடிக்கு நடைப் பயணக்குழு சென்றது. சவுந்திர பாண்டியனார் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர். தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவர் சவுந்திரபாண்டியன் ஆவார்.

தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவில்

சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தந்தை பெரியார் இருவரும் துணைத் தலைவர்களாக இருந்துள்ளனர். பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்டக் கழகத் தலைவராக இருந்தபோது ஆணை பிறப்பித்தவர். மதுரை திருமங்கலத்தில் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சிக் கோயிலில் நாடார்கள் நுழையக்கூடாது என்று இருந்ததை எதிர்த்தவர். விருதுநகர் மூன்றாம்  சுயமரியாதை மாநாடு நடைபெறக் காரணமாக இருந்தவர் சவுந்திரபாண்டியனார் ஆவார்.

சவுந்திரபாண்டியனார் அங்காடிப் பகுதியிலிருந்து  டாக்டர் நடேசன் பூங்காவை நடைப் பயணக்குழு அடைந்தது. அப்போதெல்லாம், உணவகங்களில் தொழு நோயாளிகளுக் கும், நாய்களுக்கும், பஞ்சமர்களுக்கும் அனுமதி இல்லை என்று போர்டு இருக்கும். அப்படி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. எடுப்பு சாப்பாடு வாங்கிச் செல்லவேண்டும். அப்படிப்பட்ட காலத்தில்   திராவிடன் விடுதி என்கிற பெயரில் படிக்கும் பார்ப் பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்குவதற்கு இலவசமாகவே விடுதியை அமைத்துக் கொடுத்தவர். நீதிக்கட்சித் தொடங்கிய வர்களில் ஒருவர் நடேசனார் ஆவார்.

நடைப்பயணக் குழு நடேசன் பூங்காவை அடுத்து செ.தெ. நாயகம் பள்ளியை அடைந்தது. தொடக்கத்தில் இந்தப் பள்ளி தியாகராயர் நகர் பள்ளி என்றே தொடங்கப்பட்டு தற்போது அவர் குடும்பத்தினரால், அவர் பெயரில் இன்றும் கல்விச் சேவை தொடருகிறது. பெரியார் மணியம்மையார் திருமணப் பதிவு தியாகராயர் நகரில் உள்ள சி.டி.நாயகம் இல்லத்தில்தான் நடந்தது.

1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி செ.தெ.நாயகம் ஆவார். அந்த பள்ளியில் பயின்று நீதிபதியாகி தற்போது ஓய்வு பெற்று, நடைப்பயணக் குழுவில் இடம்பெற்றவர் தேனாம்பேட்டை தே.அரிகிருஷ்ணன் தம்முடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சென்னையில் 1930இல் முறையாக நகரமைப்பு லேஅவுட் போட்டு அமைக்கப்பட்டது தியாகராயர் நகர்தான் என்று குறிப்பிட்டார். நடைப்பயணக் குழுவில் பங்கேற்ற சைதை மு.ந.மதியழகன் இந்தப் பள்ளியில் கல்வி பயின்றதை நினைவு கூர்ந்தார்.

குழுவினர் அடுத்து தணிகாசலம் சாலையை அடைந்தனர். சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு பணிவாய்ப்பும் வழங்கப்படக் கூடாது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவர் தணிகாசலம். அதனை வழிமொழிந்தவர் நடேசனார்.

சென்னையில் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) சாலை உள்ளது. விழி எழு வீறுகொள் என்றவர். சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் மாற்றிய்கொள்ளும். பார்ப்பான் தன் புத்தியை மாற்றிக்கொள்ள மாட்டான். எட்டி உதைத்தால் காலுக்கு முத்தமிடுவான் (If you kick; He will lick)  கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்பதை அப்படிக் கூறியுள்ளார். தணிகாசலம் சாலை என்று பெயரைக்கூட சூட்டக்கூடாது என்று சத்தியமூர்த்தி பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார்.

நடைப் பயணக்குழு தியாகராயர் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை அடைந்தது. தொடர்ந்து தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய (19.12.1973)  முத்துரங்கன் சாலையில் காவல்துறையினரின் குடியிருப்புக்கு அருகில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட அந்த கடைசிக் கூட்டம் நடந்த கூட்டத் திடலுக்குச் சென்றனர். அடைந்தனர்.

அந்தத் திடலில் தந்தை பெரியார் பேசிய பேச்சு மரண சாசனம் என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தந்தைபெரியார் இறுதியாக உரையாற்றிய அந்த திடல் மைதானத்தில் குழுவினர் தந்தை பெரியார் பணியை அவர் போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் இடம் தராமல்,  பணிமுடிப்போம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர்.

திராவிடர் தலைவர்கள் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்களை பொதுமக்களும் கேட்டுப் பயன்பெறும்படியாக கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் மங்களமுருகேசன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

நம்ம சென்னை ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் சென்னை உருவாகி 375 ஆண்டுகள் ஆவதையொட்டி சென்னையில் திராவிடர் சமுதாயத்துக்குத் தொண்டாற்றிய செம்மல்களின் நினைவைப் போற்றும்விதமாக நடைப்பயணம் களைப்பேதுமின்றி அதிகாலைப்பொழுதை மிகுந்த பயனுள்ளதாகத் தொடங்கி வைத்தது.

இதேபோன்று வடசென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளிலும் நடைப்பயணம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இது வெறும் நடைப்பயணம் அல்ல. பகுத்தறிவு இனமான நடைப்பயணம் பார்த்தவர்கள் உணர்ச்சிப்பெருக்கில் கூறுகிறார்கள்.

-விடுதலை,22.8.14