திங்கள், 16 நவம்பர், 2015

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும்


மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 4

- அறிவழகன் கைவல்யம்
இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்ப வகைகளில் காணப்படுகிற  மொழிகளையும், மொழியினங்களையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளும் போதுதான்  மனித இனக்குழு வரலாறு குறித்த தெளிவான ஒரு புரிதலுக்கு நம்மால் வர இயலும். சுருக்கமாக இந்த மொழிக் குடும்பங்களின் கிளைகளைப் பற்றி அறிவதற்கு முன்னதாக ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் தெரிந்துகொள்ள  வேண்டியிருக்கிறது.
போலி ஆரியக் கோட்பாட்டின்  கொடியை உயர்த்திப் பிடிக்கும் இந்தியப் பார்ப்பனர்களில் பலர், சுப்பிரமணிய சாமியில் தொடங்கி  தருண் விஜய் வரைக்கும் சமஸ்கிருதம் உலகின் தொன்மையான முதல் மொழி என்கிற தோற்றத்தை உருவாக்குவதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களின் வேரை ஆய்வு செய்த மொழியியல் அறிஞர்களே நம்பிவிடுமளவுக்குத் தங்களது வழக்கமான சித்து வேலைகளை அவர்கள் தொடக்கத்தில் நிகழ்த்தினார்கள்.
அவர்களின் கற்பனைக் கதைகளின்படி இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவையும், பாரசீகத்தையும் தாக்கி வெற்றி கொண்டார்கள் என்றும், அந்த வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டின் மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று வெற்றி முழக்கம் இட்டு தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள் என்றும் கதைகட்டி விட்டார்கள். உயரமான, உடல் வாகையும், நீல வண்ண விழிகளையும், பழுப்பு கொண்ட அய்ரோப்பிய உயிரியல் பேரினத்தையும் அவர்கள் ஆரியர்கள் என்று கதை  கட்டினார்கள். இவர்களின் கற்பனைக் கதைப்படிப் பார்த்தால் இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் எல்லா மனித இனங்களும் ஒரே மாதிரியான உயிரியல் கூறுகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மாறாக, இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் பல்வேறு மனிதர்களின் உடல் அமைப்பு,  தோலின் நிறம், விழி நிறம் எல்லாம் பல்வேறு  வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அதாவது, தாங்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று உரிமை கோரி ஆரிய இடப்பெயர்வு நிகழவில்லை என்று வாதிடும் அதே ஆரியக் கோட்பாட்டின் இந்திய நாயகர்களான பார்ப்பனர்கள் இங்கே தங்கள் மொழியும், இருப்பும் உயர்வானதென்று நிறுவ ஒரு போலியான படையெடுப்பையும், வரலாற்றையும் உருவாக்குகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, குர்து இன மக்களிலும் வேறு சில அய்ரோப்பிய இனக்குழுக்களின் கிளைகளிலும் அடர்த்தியான கருமை நிற முடியும், பழுப்பு அல்லது வெளிர் நிற விழிகளும் மிக அரிதாகவே அவர்களிடத்தில் காணப்படுகிறது. கற்பனையாகச் சொல்லப்படும் ஆரியக் கதாபாத்திரங்களின் உடலியல் கூறுகள் இந்த இந்தோ அய்ரோப்பிய மொழிக்குடும்ப மனிதர்களிடம் காணப்படவில்லை. மேலும், உயரமான வெண்ணிற அல்லது பழுப்பு நிற முடியும், வெளுத்த விழிகளும் கொண்ட எஸ்தோனியர்கள், பின்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளைச் சேர்ந்த உடற்கூறுகளில் ஆரியக் கதாபாத்திரங்களை ஒட்டிய மனித இனக்குழுக்களின் கிளைகள் ஆரிய மொழிகள் என்று சொல்லக் கூடிய இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ஒரு மொழி பேசும் மக்கள் இன ரீதியில் ஒரே உயிரியல் மனித இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு மனித இனக்குழுக்களின் கிளைகள் சேர்ந்து ஒரு மொழி பேசும் மக்களாக  அறியப்படுகிறார்கள்.
நீக்ரோக்கள் வட அமெரிக்காவில் ஆங்கிலமும், தென் அமெரிக்காவில் ஸ்பானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த ஜெர்மனியின் மனித இனம் வெவ்வேறு மாறுபட்ட ஆறு உயிரியல் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகிறது. ஆகவே மொழிக்கும், உயிரியல் இனக்குழு அடையாளங்களுக்கும் எந்த அறிவியல் அடிப்படையிலான தொடர்பும் இல்லை என்பதை நாம் உறுதியாக உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
மொழி சமூக வளர்ச்சி, பண்பாட்டுக் கூறுகள், நிலவியல் கூறுகள் இவற்றைச் சார்ந்து வளர்கிறது. அதே காரணிகளால் அழிந்தும் விடுகிறது. உயிரியல் குழுக்கள் மனித மொழிக் குடும்பங்களோடு எந்த விதமான தொடர்பும் இல்லாதவை என்று தொடர்ந்து நிறுவப்பட்டு வந்திருக்கிறது. உலகின் எல்லா இனக்குழுக் கிளைகளின் மனிதர்களும் பத்து மிகப்பெரிய மொழிக்குடும்ப மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் பேசுவதன் அடிப்படையில், அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பின்வருமாறு:
1) இந்தோ - அய்ரோப்பிய மொழிக்குடும்பம் (Indo - European Language Family) அய்ரோப்பிய நாடுகள், தென்மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகள், வடக்கு ஆசிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஒசெனியா நாடுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளடக்கிய நிலப்பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ 46 விழுக்காடு மக்கள் இந்த மொழிக்குடும்ப மொழிகளைப் பேசுகிறார்கள்.
2) சைனோ - திபெத்திய மொழிக்குடும்பம் (Sino - Tibetan Language Family)
கிழக்கு ஆசிய நாடுகளில் ஏறத்தாழ 21 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
3) நைஜீரிய - காங்கோ மொழிக்குடும்பம் (Niger - Congo Language Family)
சகாரா  பாலைவனத்தின் தென்பகுதியில் இருக்கும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் 6.4 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
4) ஆப்பிரிக்க - ஆசிய மொழிக்குடும்பம் (Afroasiatic Language Family)வட ஆப்ரிக்கா, மத்திய ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஏறத்தாழ 6 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
5) ஆஸ்திரேலியா - ஆசிய மொழிக்குடும்பம் (Austroasian Language Family)
சில ஒசெனியா நாடுகள், மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் வாழும் 5.9 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
6)  திராவிட மொழிக்குடும்பம் (Dravidian Language Family)
தெற்காசியாவின் 3.7 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
7)   அட்லாண்டிய மொழிக்குடும்பம் -(Atlantic Language Family)
துருக்கிய, மங்கோலிய மற்றும் துன்குசிக் மொழிக்குடும்பங்களின் கலவையாக வரையறுக்கப்படாத சில  குழப்பங்களைக் கொண்ட 2.3 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம், மத்திய ஆசிய நாடுகள், வடக்கு ஆசியா, அனோடோலியா மற்றும் சைபீரிய நாடுகளில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது.
8) ஜப்பானிய மொழிக்குடும்பம் (Japonic Language Family)
ஜப்பானிய நிலப்பகுதியில் வாழும் 2.1  விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
9) ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக்குடும்பம் (Austroasiatic Language Family)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏறத்தாழ 1.6 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
10) தாய் - கடாய் மொழிக்குடும்பம் (Thai - Kadai Language Family)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 1.3 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம். இவை தவிர்த்து அதிக மொழிக் கிளைகளைக் கொண்டவை, அட்டவணையில் இடம்  பெறுபவை, வழக்கொழிந்தவை, புதிய  பரிணாம வளர்ச்சி கொண்டவை என்று ஏறத்தாழ 6500 மொழிகள் உலகில்  அடையாளம் காணப்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 2000 மொழிகள்  ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படுகின்றன.  இங்கு ஒரு மிக முக்கியமான பொருள் குறித்து நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
- (தொடரும்)
மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 5
மொழிகளுக்களுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டா?
ஒவ்வொரு மொழியும் அதற்கான அடிப் படைத் தேவைகளோடு பிறக்கிறது, வாழ்கிறது, அழிகிறது. உலகின் 6500 மொழிகளில் எந்த மொழியையும் சிறந்தது அல்லது மனித உயிரியல் அல்லது உளவியல் பாங்குகளோடு ஒத்திசைவு கொண்டது என்று சொல்ல இயலாது. மொழி மனிதனின்  நிலவியல், சூழலியல் மற்றும் பண் பாட்டியலின் அடிப்படையில் உருவாகி தன்னியக்கமாக வளரும் ஒரு கருவி.
மனித உணர்வுகள் அல்லது மனித உயிரிய லின் இருத்தல் ஒரு பொதுவான கோட்பாடு. தனது இருப்பையும், சமூகப் பாதுகாப்பையும் நோக்கிப் பயணம் செய்த ஆதி மனிதனின் உணர்வுக் குவியலின் வடிவமே மொழி. இதில் ஒருவனது மேலானது அல்லது இன்னொரு வனது தாழ்வானது என்று சொல்வது அறிவியல் வழியாகவும், தார்மீக அடிப்படையிலும் சரியான தாக இயலாது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மொழி யும் சக மனிதனின் அகம் மற்றும் புறத் தேவை களை நிறைவேற்றும் ஒரு தொடர்பு ஊடகமாக வளர்க்கப்பட்டு வரி வடிவங்களை அடைந்து மனித இனக் குழு வரலாற்றைப் போலவே பல்வேறு சூழலியல் தடைகளைக் கடந்து வந்திருக்கிறது.
மேற்சொன்ன மொழி அடிப்படை அறிவியலை மய்யமாக வைத்து நாம் நம்முடைய நிகழ்கால அரசியலில் மொழியின் பங்கு மற்றும் தாக்கம் குறித்து அறிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. தொன்மையையும், வரி வடிவங் களையும் வைத்து ஒரு மொழியைச் சிறப்பான தென்றும், மற்றொன்றைக் கீழானதென்றும் கற்பிதம் செய்வது இந்திய அரசியலில் தீண் டாமையைப் போல சகிக்க இயலாதது என்கிற உண்மையையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் மேற்கொண்டு பயணிக்க வேண்டும். எந்த மனிதனுக்கும் அவனுடைய தாய்மொழி சிறப் பானதாகவும், உயர்வானதாகவும் தோற்ற மளிக்கிறது. அது ஒருபோதும் கேலிக்குரிய பொருள் அல்ல.
அய்ரோப்பியப் பேரினத்தின் உயிரியல் கிளைகளைச் சேர்ந்த பல்வேறு சமூகங்கள் தெற்காசியாவின் நிலவியலில் கிளைத்துப் பரவி இருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் ஏறத்தாழ 14 மொழிக் கிளைகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.
1) இந்தோ_ஆரிய மொழி பேசும் மக்கள்
2) ஈரானிய மொழி பேசும் மக்கள்
3) தார்தியர்கள்
4) திராவிடர்கள்
5) ஆஸ்ட்ரோ ஆசிய மக்கள்
6) திபெத்_பர்மிய மக்கள்
7) துருக்கிய_மங்கோலியக் கிளை மக்கள்
8) ஆஸ்த்ரோனேசிய மக்கள்
9) செமிட்டிக் மக்கள்
10) தாய் மக்கள்
11) அய்ரோப்பியர்கள் அல்லது அய்ரோப்பிய ஆசியக் கிளைப்பிரிவு மக்கள்
12) ஆப்ரோ_ஆசிய மக்கள்
13) அந்தமான்-_நிக்கோபார் மக்கள்
14)அட்டவணையில் வராத தனித்த குழுக்கள்
இந்த மொழி அடிப்படையிலான குழுக்களில் எந்த மொழிகளும், நிலவியலும் அடங்குகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் இன்னொரு மிக முக்கியமான செய்தியை அறிந்து கொள்ள வேண்டும். 1856ஆம் ஆண்டு கால்டுவெல் திராவிடம் என்கிற பதத்தை சமஸ் கிருத மொழியில் இருந்து பெற்றுப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் நீடிக்கும் ஆரிய - திராவிட எதிர்நிலை அரசியல் உயிரியல் இன ரீதியானது அல்ல. மாறாக, உயிரியல் இனங்களுக்குள் உயர்ந்தவை, தாழ்ந்தவை உண்டு என்கிற கோட்பாட்டு வழி யிலானது, பண்பாட்டு வழியிலானது, மொழி வழியிலானது, நிலவியல் மற்றும் சூழலியல் வழியிலானது என்பதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்றும், இந்திய மொழி களின் தாய், தேவ மொழி என்று நமது பக்கத்து வீட்டு சூரி அய்யரில் இருந்து பிரெஞ்சு அய்யங் கார் சடகோபன் வரைக்கும் தொடர் பரப்புரை செய்து வருவதையும், இன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் பல்வேறு கிளைக்குழுக்கள் சமஸ்கிருத மொழியின் வணிக மேலாளர்களாக மாறி வருவதையும் நாம் குற்றம் சொல்லப் போவதில்லை.
அது அவர்களின் மொழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது உயர்வான தென்று அவர்கள் சொல்வதற்கான அடிப்படை உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், நாம் அவர்களை எந்தப் புள்ளியில் எதிர்க்கிறோம் அல்லது முரண் கொள்கிறோம் என்பது முக்கியம். பல்வேறு மொழிக்குடும்ப மொழிகளை அவற்றின் அடிப்படை உரிமை களில் இருந்து தடுக்க  முயற்சி செய்வது, வழி பாட்டு உரிமைகளில் தலையிடுவது, கட்டாய மொழியாக அரசியல் வழியாகத் திணிக்க முயற்சிப்பது, பொதுவான நிலவியல் சார்ந்த மொழி என்று ஒரு மொழியை முன்னிறுத்துவது போன்ற தளங்களில்தான் நாம் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தி போன்ற மொழிகளோடு மாறு படுகிறோம். மேற்சொன்ன காரணங்களுக் காகவே நமது மொழியின் சிறப்புகள் குறித்தும், அது உலகிற்கு வழங்கி இருக்கும் சொற்கொடை  மற்றும் இலக்கியச் செழுமை குறித்தும் நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய அழுத்தத் துக்கு ஆளாகிறோம்.
இந்தோ - ஆரிய  மொழிக்கிளைக் குடும்பம்
இந்தோ - ஆரிய  மொழிக்கிளைக் குடும்பத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் வசிக்கும்  அசாமியர்கள், அவாதியர்கள், வங்கதேச மக்கள், பீகாரிகள், மைதிலியர்கள், மாகுரிகள், பூமிகர், திவேஹியர்கள், குஜராத்திகள், சௌராஷ்டிர மக்கள், ஹிந்த்கோவன் மக்கள், கொங்கணியர்கள், மராத்தியர்கள், முஹாஜிர்கள், இஸ்லா மியர்கள், ஒரிய மக்கள், பஹாரிகள், டோக்ராக்கள், கர்வாளியர்கள், நேபாளியர்கள்  கூர்க்காக்கள், பாஹுன் மக்கள், சேத்ரி மக்கள், தமாய் மக்கள், கமியர்கள், சார்க்கிக்கள், காஸ் மக்கள், குமானி யர்கள், பஞ்சாபியர்கள், கஹாத்ரியர்கள், அரோரா மக்கள், குஜ்ஜர் மக்கள், ஜாட் மக்கள், கம்போஜ் மக்கள், பஞ்சாபி ராஜபுத்திரர்கள், ராஜஸ்தானியர்கள், மார்வாடிகள், மீனாக்கள், அஹிரிக்கள், செரைக்கிகள், சிங்களர்கள், சிந்திக்கள், தாருக்கள் என்று பல சமூக மக்கள் உள்ளடங்குவார்கள். திராவிட மொழிக் கிளைக் குடும்பம் திராவிட மொழிக் கிளைக் குடும்பத்தில் படகர்கள், பியரிக்கள், பில் மக்கள், போண்டாக்கள், ப்ரஹுய் மக்கள், டோங்க்ரியா கொந்தர்கள், கோந்தி மக்கள், இருளர்கள், கன்னடர்கள், கோண்டு மக்கள், கொடவர்கள், குருக்குகள், மலையாளிகள், கொச்சின் யூதர்கள், வட கேரளத்தின் மாப்பிள்ளை இஸ்லாமியர்கள், பெர்சியா அல்லது அரபு நாட்டு வணிகர்களாக வந்து திராவிட மொழிக்குடும்பக் கிளை மொழி யான மலையாளம் பேசுபவர்கள், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவர்கள், சிரியன் மலபார் நஸ்ராநிக்கள், மல்ட்டோ மக்கள், பூர்வகுடித் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கையில் இருக்கும் இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், தெலுங்கு மக்கள், தோடர்கள் மற்றும் துளுவர்கள் என்று பல சமூக மக்கள் உள்ளடங்குவார்கள்.
- அறிவழகன் கைவல்யம்

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!-6


மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் கருவி, மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக அந்த மக்களின் வரலாற்றைத் தன்னியல்பாக எழுதும் ஒரு கருவியாகவே மொழி வளர்கிறது, ஆரியப் புனைவுகளை முன்னிறுத்தும் பல்வேறு தரப்பு மனிதர்கள் இன்றும் ஊடகங்களில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சமஸ்கிருதம் தேவ மொழி என்றும், எல்லா உலக மொழிகளுக்கும் தாய் என்றும் ஒரு கடைந்தெடுத்த பொய்யை உளறிக் கொண்டே இருப்பார்கள்.
இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த ருஷ்ய அறிஞர் நிகிதா குரோவ் இதற்கான விடையை நமக்குச் சொல்கிறார். சமஸ்கிருதத்தின் அறியப்பட்ட முதல் நூலான ரிக் வேதத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட திராவிட மொழிச் சொற்கள் இடம் பெறுகின்றன. வெவ்வேறு காலத்தில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த பல அறிஞர்கள் இவரது மேற்கோள்களை வழிமொழிகிறார்கள்.
உலகின் முதன் மொழி என்று பார்ப்பனர்-களால் தொடர்ந்து சொல்லப்படுகிற சமஸ்கிருதம் திராவிட மொழிக் குடும்பத்தின் சொற்களை வைத்தே தனது வேதப் பாடல்களைத் தொடங்கியது என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் நமது மொழியின் தொன்மையையும், சிறப்பையும் நினைவூட்ட மறந்து விடாதீர்கள். ஏனெனில், மொழியின் இருப்பே ஒரு மனிதக் குழுவின் ஏற்றமாகவும், வீழ்ச்சியாகவும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. மொழி நிலத்தோடு நம்மைப் பிணைப்பது மட்டுமல்லாமல், அரசியல் அதிகாரமாகவும் பொருளாதாரக் காரணியாகவும் நிலைகொள்கிறது.
இந்திய வரலாற்றின் பக்கங்களில் வருணமும், அதன் கொடூரமான தாக்கமும் இன்று வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பிறப்பால் உயர்ந்தவர் என்றும், ஏனைய மனிதக் குழுக்களை அவர்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்வதற்கு எப்படி மிக முக்கியமான காரணியாக இருக்கிறதோ அதற்குக் குறையாத காரணியாக மொழியின் கூறுகளை, மொழியின் வரலாற்றை நாம் அறியாமல் போனதும், கற்பிக்காமல் போனதும் ஆகும். இனக்குழு வரலாற்றிலும், உயிரியல் கோட்பாட்டிலும் உயர் ஜாதி என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிற ஒரு மனிதனின் குழந்தைக்கும்,  உங்கள் குழந்தைக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை என்று ஆய்வுகளும், அறிவியலும் சொல்லும்போது நீங்கள் ஏன் அந்த ஆரியப் புனைவை இன்னமும் பின்பற்றுகிறீர்கள், நம்புகிறீர்கள். உங்கள் உடலும், உங்கள் உணர்வுகளும் மேன்மையானவை, வேறெந்த மனிதருக்கும் நிகரானவை என்கிற அடிப்படை உண்மையை உணரும் கணத்தில்  இருந்துதான் உங்கள் வரலாறு தொடக்கம் கொள்கிறது.
மதமும், மத நூல்களும் இந்திய சமூகத்தின் வருணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஆரியப் புரட்டர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அவற்றுக்கு எதிரான அறிவுப் புரட்சியை நமது குழந்தைகளுக்கு நாம் இன்னமும் கற்றுத் தரவில்லை.
இன்றுவரை இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரம், பொருளாதார நிலை, சமூக வாழியல் நிலை என்று எல்லாப் பக்கமும் ஆரியக் கோட்பாட்டின் மய்யக் கருத்தான, அறிவியலுக்கு எதிரான, பிறப்பால் உயர்நிலைத் தகுதியைப் பெறுகிற வருணக் கோட்பாட்டின் வழி வந்தவர்களே கோலோச்சிக் கொண்டு  இருக்கிறார்கள். கடவுளுக்கு அருகில் இருக்கிற மனிதனாகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு, ஏனைய அனைத்தையும் தனக்கு அடிபணிகிற குழுக்களாக வைத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிற கோட்பாட்டையே ஆரியம் என்கிறோம்.
அண்ணல் அம்பேத்கர், "அடிமைகளாக எமது மக்கள் இருப்பதுகூட அவமானமில்லை.  ஆனால், தாங்கள் அடிமைகள் என்பதையே அறியாமல், தமக்குக் கிடைத்த பெருமை என்கிற மனமயக்கத்தில் உழல்கிறார்களே" என்று கூறுவார். அவரது சொற்கள் மத மயக்கத்தில் வீழ்ந்து வருணக் கோட்பாட்டின் படிநிலை-களில் தன்னைப் பொருத்திக் கொள்கிற எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.
இந்திய சமூகம் முழுவதும் அப்படியான ஒரு மன மயக்கத்தில்தான் உழன்று கொண்டிருக்-கிறது. இனக்குழு வரலாற்றையும், உயிரியல் வரலாற்றையும் நாம் தொடர்ந்து மீட்டுருவாக்கம் செய்வதன் காரணம் இந்திய சமூகத்தில் மனித உயிரியல் என்கிற காரணியைப் பின்னுக்குத் தள்ளி பிறப்பால் ஒரு குழு உயர்ந்தது என்கிற பொய்யை எல்லா இடங்களிலும் பரவச் செய்திருப்பதுதான். பழங்குடி இந்தியர்களின் கலாச்சாரமும், பண்பாடும், உழைப்பும், பொருளாதாரமும் சுரண்டப்பட்டு உயர் ஜாதி என்கிற அரணைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஒய்யாரமாக இந்த வருண ஜாதி அமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் மனிதக் குழுக்களின் கோட்பாடே நம்மைப் பொருத்தவரை ஆரியக் கோட்பாடு. பிறப்பால் நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற இந்த உளவியல் நோய் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட கொடுநோய்.
ஆரியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து வரலாற்றில் இரட்டை வேடம் போடுவதை நம்மால் பார்க்க முடியும். எப்போதெல்லாம் அவர்களின் இருப்புக் குறித்த வரலாறு கேள்விக்கு உள்ளாக்கப்-படுகிறதோ அப்போதெல்லாம் ஆரியக் குடியேற்றம் பொய் என்றும், அது நிகழவே இல்லை என்றும் வாதிடுவார்கள். எப்போ-தெல்லாம் வெற்றி கிடைக்கிறதோ அப்போ-தெல்லாம் ஆரியக் குடியேற்றம் மட்டுமல்லாமல், அவர்களின் வருகையும், இலக்கியமும், பண்பாடும்தான் இங்கே எல்லாவற்றையும் கட்டமைத்தது என்று உறுதியாகச் சொல்வார்கள்.
பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கதைகளை நெடுங்காலமாக  இந்த மண்ணில் கட்டவிழ்த்து அதன் மூலமாகவே உழைப்பையும், பொருளையும் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாது, பல கோடிக் குழந்தைகளின் பிறப்பைக் கேலி செய்தும், அவர்களின் உளவியலைச் சிதைத்தும் சமூகக் கட்டமைப்பை அறிவியலுக்கு எதிரான மூடத்தனங்களால் நிரப்பிய கோட்பாடே ஆரியம் என்கிற நாசிசக் கோட்பாடு. பிறப்பால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்கிற கோட்பாடு அறிவின் மீதும் மனித உடல் மற்றும் உயிரின் சமநிலை மீதும் நம்பிக்கை அற்ற பிற்போக்குக் கோட்பாடு, அத்தகைய கோட்பாட்டின் எல்லா முடிச்சுகளும் இந்திய சமூகத்தின் வேர்களில் மதம் மற்றும் ஏனைய சமூகப் பழக்கங்களின் வழியாகப் பிணைக்கப்-பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலான அடிமைத்தனத்தின் வேர்களை அறுத்து விடுதலை பெற்ற மானுட சமூகத்தின் தலைமுறையாக நமது குழந்தைகளை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. கடமை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும்கூட.
உயிரியல் அடிப்படையில், மனித உளவியல் அடிப்படையில் மனித இனக்குழுக்கள் எல்லாம் சமநீதியும், உரிமையும் பெற்றவை என்கிற எளிய உண்மையை நமது குழந்தைகளுக்குத் தீவிரமாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலமிது. உளவியல் வழியாக காலம் காலமாக அவர்களின் மரபு நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், முறையான உளவியல் வழிகாட்டுதலும் இல்லாமல் அவர்களை விடுதலையை நோக்கிச் செலுத்துவது இயலாத ஒன்று.
இறுதியாக அறிவியலுக்கு எதிரான, மானுட சமநீதிக்கு எதிரான ஆரியம் போன்ற பிறவி உயர்வுக் கோட்பாடுகளை உடைக்க நாம் எந்தத் தளங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் ஆய்வு செய்வோம்.
- அறிவழகன் கைவல்யம்
(தொடரும்)

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 7


அறிவியல் மனித இனக்குழுக்களைக் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் என்ன சொல்கிறது என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. 1950ஆம் ஆண்டு யுனெஸ்கோ (Unesco) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாரம், மானுட வரலாற்றில் இனக்குழுக்கள் என்பது ஒரு கற்பனைக் கதை,  உண்மையில்லை" என்று உரக்கச் சொன்னது. இந்த அறிக்கை ஒன்றும் பிள்ளையாருக்கு யானை மூக்கு வெட்டித் தைக்கப்பட்டதால் நாமே "பிளாஸ்டிக் சர்ஜரி" யின் முன்னோடிகள் மாதிரியான மோடி மஸ்தான்களின் அறிக்கை அல்ல, மாறாக உலகளாவிய அளவில் மானுடவியல் குறித்துப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வரும் உயிரியல் வல்லுநர்கள், உளவியல் விஞ்ஞானிகள், உடலியல் விஞ்ஞானிகள், மூலக்கூறு ஆய்வாளர்கள் என்று பரந்த ஆய்வுக் களத்தில் செயல்பட்ட குழுவின் முடிவான அறிக்கை.

அய். நா. மன்றம் எதற்காக இது மாதிரியான ஓர் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டது, என்று ஒரு கேள்வி நமக்கு முன்னால் வருகிற போது வரலாற்றின் கொடு நிழல் உங்கள் மனக்கண்ணில் படிய வேண்டியிருக்கும். புதிய நிலப்பகுதிகளைத் தேடித் திரிந்த பிரித்தானியர்களும் ஏனைய அய்ரோப்பியர்களும் அமெரிக்காவைக் கண்டடைந்த பிறகு அங்கிருக்கும் பூர்வகுடி சிவப்பிந்தியர்களை, கூட்டம் கூட்டமாக விலங்குகளை வேட்டையாடியதைப் போல அழித்தார்கள். நாசிசக் கொள்கையின் பெயரில் ஹிட்லரும் அவனது தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடினார்கள். ஆப்ரிக்கப் பெருங்குடி மக்களைக்  கடந்த நூற்றாண்டு வரைக்கும் மனிதனாக ஏற்றுக்  கொள்ளக்கூட மறுத்தார்கள்.
இப்போதும், இனங்களின் பெயரால், ஜாதியின் பெயரால் பிறவியில் உயர்ந்தவன் என்கிற கோட்பாட்டை நம்புகிற அறிவியலுக்கு எதிரான நவீன பார்ப்பனர்கள், ஏனைய உழைக்கும் மக்களை ஏளனமாகப் பார்ப்பதும், கெக்கெலிப்பதும் தொடர்ந்து எங்காவது ஒரு தளத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
வரலாற்றின் நெடுகிலும் எந்த நிலப்பரப்பும் எந்த இனக்குழுவுக்கும் சொந்தமானதல்ல என்கிற எளிய மனித வரலாற்று உண்மையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புவியெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்தலுக்கான இடப்பெயர்வு ஒரு தொடர் மனித இயக்கம், இனக்குழுக்களும், ஏனைய குழு நிலைப்பாடுகளும் தொடர்ந்து நிகழ்கிற பழக்கங்களிலும், அடையாளங்களிலும் தங்களை உள்ளீடு செய்து அடைகிற தற்காலிக மகிழ்ச்சிக்குப் பெயர்தான் தேசியங்கள்.
உடல் மற்றும் மன ரீதியிலான பாதுகாப்பு உணர்வே உடைமைகளைத் தேடி அடையும் நிலையை மனிதன் என்கிற சமூக விலங்கிற்கு வழங்கி இருக்கிறது. எனது மண், எனது ஊர், எனது வீடு என்கிற எல்லாச் சொல்லாடல்களும் ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை மனிதனுக்கு வழங்குகிறது. ஒரு எல்லை வரையில் இந்தப் பாதுகாப்பு உணர்வு தேவையாகவும், உரிமையாகவும் இருந்து தனது கிளைகளை விரிக்கிறது.
பிறிதொரு கட்டத்தில் அதுவே ஏனைய மனிதக் குழுக்களை அச்சுறுத்தும் காரணியாக மாறத் தொடங்குகிறது.
இன மோதல்களாகவும், குழுச் சண்டை-களாகவும் தொடர்ந்து இந்த மோதல் காலம் காலமாய் நீடித்து வருகிறது. நாகரிகத்தை நோக்கிய அடுத்த நகர்வில் மனிதன் கண்டடைய வேண்டிய மிக முக்கியமான தீர்வு இந்த இன மோதல்களுக்கான ஒரு முடிவே என்பதை முதிர்ந்த அறிவுள்ள எந்த இனக்குழுவின் மனிதனும் ஒப்புக் கொள்வான். மனித இனம் தனது மூதாதைகளிடம் இருந்து விலகி தங்கள் குடும்பங்களை உருவாக்கத் தொடங்கி ஏறத்தாழ 1,50,000 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏறத்தாழ ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராக "ஹோமோ எரக்டஸ்" என்கிற குரங்குகளின் சற்றுப் பிந்தைய இனம் ஆப்ரிக்கக் காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து அய்ரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற நிலப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கியதாக ஒரு சாராரும், ஆசியாவிலிருந்து நகர்ந்து ஏனைய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக மற்றொரு சாராரும் சொல்லிக் கொண்டிருக்கையில் நவீன உலகின் மனிதன் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறான். மனிதனின் இடப்பெயர்வு பல்வேறு புற மற்றும் அகக் காரணிகளால் நிகழ்கிறது. அவற்றில் பொருள் ஒரு இன்றியமையாத காரணியாகவும், போர், காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணிகள் இரண்டாம் நிலைக் காரணிகளாகவும் காணக் கிடைக்கின்றன.
மானுட வரலாறு குறித்த உண்மைகளையும், இனக்குழு வாதம் மானுட வரலாற்றில்   ஏற்படுத்திய தாக்கங்களையும் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் உயிர்களின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த அடிப்படைப் புரிதலோடுதான் தொடங்க வேண்டியிருக்கிறது. ஒற்றைச் செல் உயிரிகளின் தோற்றம் அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை மற்றும் மின்னணு ஏற்றத்தோடு பிணைந்து உயிர் வாழ்க்கையை உருவாக்கக்-கூடும் என்பதை பல உயிரியல் அறிஞர்கள் சோதனைகளில் நிறுவி இருக்கிறார்கள்.
குறிப்பாக 1953ஆம் ஆண்டு ஸ்டான்லி மில்லர் மற்றும் ஹரோல்ட் உரே ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகள் ஒரு சோதனையைச் செய்தார்கள். அடைக்கப்பட்ட ஒரு செயற்கை வளி மண்டலத்தை உருவாக்கி சில குறிப்பிட்ட வேதிப் பொருள்களை அதனுள் உள்ளீடு செய்து மின்னணு ஏற்றம் செய்து பார்த்தபோது வியக்கத்தக்க வகையில் பல்வேறு அமினோ அமில வகைகளை அந்தச் செயற்கை வெளியில் அவர்கள் கண்டறிந்தார்கள்.
அமினோ அமிலங்கள் உயிர்ப் பொருள்களின் தோற்றுவாயாக _ அடிப்படையாக இருப்பதை நீங்கள் அறிவீர்களேயானால் புவியில் உயிர்களின் தோற்றம் குறித்த கடவுள் புனைவுகளை மறந்து அறிவின் வழியிலான ஒரு மானுட வரலாற்றுத் தரிசனத்தை நீங்கள் உணர முடியும்.
பிறகு அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கையால் உருவான பாக்டீரியாக்கள், அமீபாக்கள், அவற்றில் இருந்து பரவிய பூச்சிகள், பின்பு மீன்கள், மீன்களில் இருந்து தவளைகள், தவளைகளில் இருந்து பறந்து போன முதல் பறவைகள், பறவைகளில் இருந்து முன்னும் பின்னுமாய் மாறிய விலங்குகள், பாலூட்டிகள், முதுகெலும்பு உள்ள விலங்குகள், தட்டையான மூக்கைக் கொண்ட அணில்கள், அவற்றில் இருந்து மருவிய அணில் குரங்குகள், கைகளை நன்கு பயன்படுத்தத் தொடங்கிய குரங்குகள், பிறகு மனிதக் குரங்குகள், மனிதக் குரங்குகளில் இருந்து தனித்துப் பிரிந்த "ஹோமோ ஹெபிலிஸ் (Homo - Habilis)" வகை மனித முன்னோடிகள், ஹோமோ ஹெபிலிஸ் வகை உயிரியல் இனம் கைகளை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்த முன்னோடி மனித இனம் என்று சொல்லலாம். ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஆப்ரிக்க மண்ணில் இருந்து கிளைத்துப் பரவத் தொடங்கிய இந்த வகை உயிரியல் இனமே நாகரிக மனிதனின் முதல் ஆதித் தாத்தன். ஏனெனில் இவனே கூர்மையான கற்களைப் பயன்படுத்தி இறைச்சியை வெட்டத் தொடங்கினான்.
அடுத்ததாக முதன்முதலில் கைகளை ஊன்றாமல் நடக்கத் தொடங்கிய "ஹோமோ எரெக்டஸ்" வகை, இந்த வகையினரின் உடல் படிமப் புதைவுகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக ஜாவா தீவுகளில் ட்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிமங்கள் ஹோமோ எரெக்டஸ் வகை மனித முன்னோடிக் கூட்டம் நமக்குச் சொல்லித் தந்தது. இந்த வகையே மானுட வரலாற்றை உலகெங்கும் நகர்த்திய பெருமைக்குரியது. சீனாவின் பெக்கிங் மற்றும் அல்ஜீரியாவின் டெர்னிபைன், அய்ரோப்பிய நாடுகள் என்று பல்வேறு இடங்களில் இவற்றின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டன.
இந்த வகை மனித முன்னோடிகளே நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னார் நெருப்பை மூட்டி இறைச்சியைச் சுட்டு கூட்டமாக அமர்ந்து மனித நாகரிகத்தின் வேர்களை அவர்களே நிலைத்து ஊன்றினார்கள். 1966ஆம் ஆண்டு டி லும்லே என்கிற தொல்லியல் ஆய்வாளர் பிரெஞ்ச் ரிவேரியாவுக்கு அருகில் "டெர்ரா அமட்டா" என்னும் இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடையே ஒரு தொன்மக் கடற்கரையைக் கண்டறிந்தார். கடற்கரையில் அவருக்கு ஏராளமான ஹோமோ எரெக்டஸ் வகை மனித முன்னோடிகளின் தொன்மப் படிமங்கள் கிடைத்தன. நெருப்பைப் பயன்படுத்தி உணவைப் பதம் செய்கிற அடுப்பு மாதிரியான அமைப்போடு விலங்குகளின் தோலைப் பயன்படுத்தியும் கட்டப்பட்டிருந்த கூடங்களைப் போன்ற அமைப்புகளை சில மாதங்கள் கடும்பணி புரிந்து அவர் உலகுக்குக் காட்டினார். அவருடைய கண்டுபிடிப்புகளின் காலம் ஏறத்தாழ கி.மு 3,80,000 ஆண்டு. 20 முதல் 40 மனிதர்கள் வரை கூடி இருக்கும் அளவுக்கான கூடங்கள் அவை. "ஹோமோ செப்பியன்ஸ்" மனிதர்களின் முன்னோடிகள் இவர்கள்.
(தொடரும்)
Print

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 8


மனித இனங்களின் உடற்கட்டமைப்பு மற்றும் சிறப்பியல்புகள் குறித்த பல வேறுபாடுகள், அவற்றின்  அடையாளங்களை நமக்குக் கூறின. ஆனால் அவை தவிர்த்த மிக நுட்பமான, சிறப்பான குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தனித்துக் காட்டிய சிறப்புக் கட்டமைப்பு உறுப்புகள் மூன்று.
1) மூளை 2) கைகள் 3) பாதங்கள்
மனிதனின் ஒலிக் குறிப்புகளும், அவற்றில் இருந்து உருவாக்கப்பட்ட மொழிகளும், மனித மூளையை வியப்பான வளர்ச்சி அடைய வைத்தன. பல்வேறு நுட்பமான வேலைகளைத் தொடர்ந்து பழகிய கைகள் தற்கால மனிதன் குரங்கின் இடத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள மிக முக்கியமான காரணியாக இருந்தது.
கைகள் தொடர்ந்து மூளையோடு நெருக்கமான தொடர்பு கொள்ள உழைப்பு ஓர் அற்புதமான காரணியாக அமைந்தது மட்டுமன்றி இன்றைய வியத்தகு நவீன உலகை, மானுடத்தின் அளப்பரிய சாதனைகளை, ஒருகாலத்தில் மரக்கிளைகளில் தொற்றித் திரிந்த குரங்குகள் தங்கள் கடின உழைப்பால் கட்டமைத்தன என்கிற உண்மை மானுடவியல் வரலாற்றில் அளப்பரிய சாதனையாக இருக்கிறது.
தெளிவான ஒலிக் குறிப்புகளைக் கொண்ட சொற்களும், அவை கட்டுப்படுத்தப்படும் மூளையின் நுண்ணிய பகுதிகளும் மனிதனுக்கே உரிய இயல்பான பகுதிகளாக மாறி இருக்கின்றன. பேச்சும், உணர்வும் தொடர்ந்து அடைந்த வளர்ச்சி நிலைகளால் இந்த இரண்டாம் சங்கேத மண்டலப் பகுதி வேறெந்தக் கட்டமைப்பையும்விட மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்ததில் வியப்பொன்றுமில்லை.
மானுட வளர்ச்சியின் அடிப்படைப் பண்புகளில் கைவிரல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் புறணிப் பகுதி மிக முக்கியமான இடம் பெறுகிறது.  இது முன்புற மய்ய நெளிமடிப்பின் கீழ்ப்புறத்தில் ஒரு கூட்டு மண்டலச் செயலகமாகத் தொடர்ந்து இயங்குகிறது.
மேலும், எல்லா மனித இனங்களின் மூளையிலும் ஒரே மாதிரியாகப் பெரிய இடத்தை நிறைக்கிறது. நவீன மனித இனங்களின் வரலாற்றில் தீவிர வளர்ச்சி அடைந்த மூளைப் பகுதிகளில் கைவிரல்களைக் கட்டுப்படுத்தும் புறணிப் பகுதி மிக முக்கியமானது.
மனிதக் கைகள் வெறும் உழைப்புக்கான  உறுப்பு மட்டுமல்ல, மாறாக அவை உழைப்பினால் விளைந்த, தீவிர மாற்றங்களை அடைந்த உறுப்பும்கூட. மனிதக் கைகளின் தனித்தன்மையான பெருவிரல் வளர்ச்சி, ஏனைய நான்கு விரல்களுக்கும் எதிராக தீவிர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
ஒரு சிம்பன்சி குரங்கின் கைவிரல்களைக் கட்டுப்படுத்தும் புறணிப் பகுதியில் கூட்டுக் கட்டுப்பாட்டு இயக்கச் செயல்நிலைப் புறணி குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததைப் போல மனித இனக்குழுக்களில் உள்ளடங்கும் நவீன மனித மூளையில் ஒவ்வொரு விரலின் கட்டுப்பாட்டுக்கும் தனித்தனி இயக்கச் செயல்நிலைக் கட்டுப்பாட்டு மய்யங்கள் ஒரே மாதிரியான வேறுபாடுகளற்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
மிக முக்கியமான உயிரியல் அமைப்பான கைகளின் கட்டமைப்பில் எந்த வாழும் மனித இனமும் தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ இல்லை என்று உயிரியல் ஆய்வுகள் தொடர்ந்து உறுதி செய்கின்றன.
முதன்மை இயக்கப் புறணி (Primary Motor Cortex) என்கிற ஒரு பட்டையான நடுவரிப் பள்ளத்தின் அருகே இருக்கிற இயக்கப் புறணியே (Motor Cortex)  மூளையின் கட்டளை பெற்று இயங்கக்கூடிய எல்லாத் தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இயக்குகிறது.
நியாண்டெர்தெல் வகைகளில் ஒரு மந்தமான கூட்டுச் செயலியக்கப் புறணியாக (Compound Motor Cortex) இருந்த இந்த மூளையின் நரம்பு இழைகள் காலப்போக்கில் மனிதனின் உழைப்பு, அறிவுக் கூர்மை, கூர்ந்து நோக்கும் தன்மை போன்ற காரணங்களால் அளப்பரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.
செயல்பாட்டின் அளவுகளுக்கு ஏற்பவும், கட்டுப்பாட்டுச் சமிக்ஞைகளின் தீவிரத்தைப் பொருத்தும் மனித மூளையின் இயக்கப் புறணிகள் வளர்ச்சி பெற்றன. இன்றைய நவீன மனிதனின் முதுகுத் தண்டைக் கட்டுப்படுத்தும் இயக்கப் புறணிப் பகுதியின் நரம்பிழை அளவைவிட மூளையைக் கட்டுப்படுத்தும் இயக்கப் புறணிப் பகுதியின் நரம்பிழை அளவு மூன்று மடங்கு பெரிதாக இருப்பதை இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இன்னுமொரு நுட்பமான செய்தியை இந்த நேரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, ஒரு மனிதனின் தாய்மொழி அவனது மூளையின் ஒப்பு வரைவு ஒலிக்குறிப்பு இயக்கப் புறணியின் (Tonotopic Maps) மீது என்ன தாக்கம் விளைவிக்கிறது என்பதையும் அதன் தனித்தன்மைகளையும் இவ்விடத்தில் அறிவது பொருத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு மொழியின் சொற்களுக்கும் அகராதியில் காணக் கிடைக்கும் புறப் பொருளுக்கும் (Denotative Meaning), சமூக அரசியல், பண்பாட்டு வழியிலான அகப் பொருள் (Connatative Meaning) ஒன்றுக்குமான வேறுபாட்டையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு சொல் பயன்படுத்தப்படும்போது அதன் வரி வடிவம் பயன்படுத்துகிற மனிதனின் உளவியலில் தன்னையும் அறியாமல் ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்கிறது.
அந்தச் சொல் இதுகாறும் அவனுடைய வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தருணங்கள், நிகழ்வுகள் என்று ஓர் உடலியல் சுழற்சியை வரிவடிவங்கள் உருவாக்கி விடுகின்றன. மேலும் தாய்மொழியுடனான நம்முடைய தொடர்பு என்பது நாம் கருவில் இருக்கிற காலத்தில் இருந்தே தொடங்கி-விடுகிறது. தாயின் சொற்கள்,
தாயின் மொழி, தாயின் சொற்களுக்கான பொருள், அது தரும் அதிர்வுகள்  என்று கருவில் இருக்கும் குழந்தை மொழியைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறது. முதன்மை மொழி அல்லது தாயின் மொழி பெரும்பாலான "பிராகோ" பகுதியின் (Broca’s Area)நியூரான்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது.
பிறகு கற்றுக் கொள்ளப்-படுகிற எந்த இரண்டாம் மொழியும், அதன் வரி வடிவங்களும் வெர்னிக்ஸ் பகுதியின் (Wernicke’s Area)   நியூரான்களில் தங்கி இருந்து கட்டளைகளை உள்வாங்கிக் கொள்கிறது. மிக முக்கியமாக இந்த இடத்தில் ஓர் உண்மையை நாம் உணர வேண்டியிருக்கிறது.
மூளையின் செயலியக்கப் புறணியில் இருக்கும் சாம்பல் பொருளாகட்டும், நரம்பிழைகலா-கட்டும், அளவாகட்டும்,  நாகரிக வளர்ச்சி அடைந்த எல்லா மனித இனக்குழுக்களிலும் இவற்றின் உயிரியல் அளவு (Biological Size & Weight)  ஒன்றாகவே இருக்கிறது.
ஒட்டுமொத்த மூளையின் அளவில் மாறுபாடுகள் இருந்தாலும் இந்த மாறுபாடு சூழல் அல்லது உயிரியல் அடிப்படைகளை வைத்தே உருவாகி இருக்கிறது. மூளையின் ஒட்டுமொத்த அளவை வைத்து ஒரு மனிதனின் அறிவாற்றலையோ செயல்திறனையோ  கணக்கிட முயன்றால் உலகில் மிகுந்த அறிவாற்றல் உள்ளவர்களாக எஸ்கிமோக்களையே நாம் குறிப்பிட வேண்டியிருக்கும்.
ஆக, பிறவியிலேயே அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்கிற ஒரு வகையே இங்கே கிடையாது. அறிவாற்றலையும், செயல்திறனையும் எல்லாத் தரப்பு இனக்குழுக்களும் உலகிற்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
ஒடுக்கப்பட்டவனின் மூளை அறிவார்ந்த செயல்களைச் செய்வதற்குத் தகுதியற்றது. ஒரு பார்ப்பனனின் மூளை பிறவியிலேயே அறிவார்ந்த செயல்களைக் கற்றுக் கொண்டு பூமிக்கு வருகிறது என்பன போன்ற கற்பிதங்கள் உண்மையில் அறிவியல் உண்மைகளுக்கு எதிரான புரட்டுகள்.
தொடர்ந்து இந்திய சமூகத்தில் திட்ட-மிட்டுப் பரப்புரை செய்யப்பட்ட பிராமணன் அல்லது உயர் குலத்தோன் கல்வி மற்றும் சமூக நிலைப்பாடுகளில் பிறவித் தகுதி பெற்றவன் என்கிற கோட்பாடு ஒரு குற்றச் செயல்.
இத்தகைய பரப்புரைகளையும், நம்பிக்கை-களையும் இன்றும் நமது சமூகத்தில் புழக்கத்தில் வைத்திருக்கும் மதம் சார்ந்த பல்வேறு அடிப்படை நூல்களையும், கற்பிதங்களையும் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய அறிவார்ந்த ஏனைய சமூகங்கள் முன்வர வேண்டும்.
சக மனிதனை, தன்னைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்று சொல்கிற எந்தப் புராதன நம்பிக்கையையும் தீயிட்டுக் கொளுத்த அந்த நம்பிக்கைகளால் காலம் காலமாகப் பாதிப்படைந்த சமூகக் குழுக்கள் கிளர்ச்சி செய்தாக வேண்டும்.
கற்பிதங்களும், பிறவி உயர்வு தாழ்வு குறித்த நம்பிக்கை அடிப்படையிலான பிற்போக்குவாதங்களும் எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் எவ்வளவு கொடுமையான உளவியல் தாக்கங்களை உருவாக்கி இருக்கின்றன என்று உணர்ந்து அறிவியலின் வழியே இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் சமமான அறிவாற்றலும், இயங்கு திறனும், வாழுரிமை-களும் கொண்டது என்று நமது இளைய சமூகத்துக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
(தொடரும்)
உண்மை இதழ், ஜனவரி-ஏப்ரல்.2015

1 கருத்து:

 1. திராவிட அடையாளம்

  காஞ்சி வாழ் பிராம்மணர்கள் வேதத்தைப் பரப்பினதற்குப் பெயர் போனவர்கள். வேதம் கற்பதற்கு, பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து காஞ்சிக்கு மக்கள் வந்தனர். பரசுராமர் காலம் தொட்டே மீட்கப் பட்ட திராவிடத்தில் குடியேறின

  ஸரஸ்வத பிராம்மணர்களை, ஆதொண்டை தன் நாட்டில் குடி வைத்திருக்கிறான். அவர்களது திராவிட நாட்டுத் தொடர்பால், காஞ்சியும் அதனைச் சார்ந்த இடங்களும் திராவிட நாடு என்று பெயர் பெற்றிருக்கிறது.

  காஞ்சிக்குத் திராவிட அடையாளம் கொடுத்தவர்கள், பிராம்மணர்களே. சாணக்கியர் காஞ்சி நகரைச் சேர்ந்த திராவிடப் பிராம்மணரே. ஆனால் காஞ்சி நகரம், மஹாபாரதக் காலத்தில் திராவிடம் என்று அழைக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  ஆதி சங்கரருக்குப் பிறகே இந்த திராவிட அடையாளம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. த்ரமிடாசார்யர் என்னும் வைணவ ஆசாரியர், திராவிட தேசத் தொடர்பால் அந்தப் பெயரைக் கொண்டிருந்தார்.

  இவர்கள் அனைவருமே பிராம்மணர்கள் என்பதால், தமிழ்நாட்டு திராவிடவாதிகளின் திராவிடக்கருத்து அடி பட்டுப் போகிறது.

  ..
  ’திராவிட கௌடகர்’ என்னும் பெயரால் ஒரு முனிவர் இருந்தார். கௌடர், திராவிடர் இருவருக்கும், பொதுவான முன்னோர்கள் இருந்தார்கள் என்பதை இந்தப் பெயர் வலியுறுத்துகிறது.

  இதை மேற்கொண்டு ஆராய்ந்தால், இந்தப் பெயர்கள், குறிப்பிட்ட சம்பிரதாயத்தைப் பின் பற்றி உண்டாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

  கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடபதாசாரியார் (ஸரஸ்வதி பிராம்மணர்) என்னும் அத்வைத குருவைப் பின்பற்றிய பிராம்மணார்கள் கௌடர்கள் எனப்பட்டார்கள். இவர்கள் பஞ்சாயதன முறையைப் பின்பற்றியவர்கள்.

  இவர்கள் அனைவரும் ஸரஸ்வதி பிராம்மணர்கள். அதாவது ஸரஸ்வதி நதிக் கரையில் மனுவின் காலம் தொட்டு வசித்தவர்கள்.

  ஆதி சங்கரரைப் பின்பற்றியவர்கள் பஞ்ச திராவிடர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  ஆதி சங்கரர் தன்னை ‘திராவிட சிசு’ என்று அழைத்துக் கொண்டார் (சௌந்தர்ய லஹிரி -75) என்பதே இதற்கு சாட்சி.

  அவரைப் பின்பற்றிய பிராம்மணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.


  திராவிட – கௌடப் பகுதிகளை தமிழ் நிகண்டுகளும் சொல்கின்றன. தமிழ் நாட்டைச் சுற்றி 18 நாடுகள் இருப்பதாக திவாகர நிகண்டு கூறுகிறது. அவற்றுள் திராவிடம் ஒன்று. அதாவது திராவிடம் என்பதைத் தமிழ் நாடு என்று சொல்லவில்லை. அது தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்த நாடு.

  அந்த 18 நாடுகள் வருமாறு:-

  1.அங்கம்,2.வங்கம்,3.கலிங்கம்,4.கௌசிகம்,5.சிந்து,6.சோனகம்,7.திராவிடம்,8.சிங்களம்,9.மகதம்,10.கோசலம்,11.மராடம்,12.கொங்கணம்,13.துளுவம்,14.சாவகம்,15.சீனம்,16.காம்போஜம்,17.பருணம்,18.பர்ப்பரம்.

  இது குறித்து இன்னொரு செய்யுளும் இருக்கிறது. அதன்படி தமிழ் நாட்டைச் சுற்றி 17 நாடுகள் இருந்தன எனப்படுகிறது. அவை

  1.சிங்களம்,2.சோனகம்,3.சாவகம்,4.சீனம்,5.துளு,6.குடகு,7.கொங்கணம்,8.கன்னடம்,9.கொல்லம்,10.தெலுங்கம்,11.அங்கம்,12.மகதம்,13.கடாரம்,14.கௌடம்,15.கருங்குசலம்,16.கலிங்கம்,17.வங்கம்

  இந்த இரண்டில் திராவிடம் ஒன்றிலும், கௌடம் மற்றொன்றிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்கந்த புராணமும் பாரத தேசத்தில் இருந்த நாடுகள் என்று ஒரு பட்டியல் கொடுக்கிறது. (மஹேஸ்வர காண்டம்). அதில் கௌட தேசம் இருக்கிறது. திராவிட தேசம் இல்லை.

  பதிலளிநீக்கு