திங்கள், 30 நவம்பர், 2015

நாடாளுமன்றத்தில் ஆரியர் - திராவிடர்


இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட நாள் என்று கூறி இரண்டு நாள்கள் விவாதம் நடைபெற்றது. அதில் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று பாராட்டப்படும் அண்ணல்  அம்பேத்கர் பற்றி பல கட்சியினரும் பேசினார்கள்.
அதில் நிஜப் புலியை விட வேடம் போட்ட புலி அதிகம் குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதுபோல பிஜேபியினர் அதிகமாகவே அம்பேத்கரை சொந்தம் கொண்டாடினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே மண்டையில் அடிப்பது போல தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்த பார்ப்பனர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
அம்பேத்கரும், நாங்களும் இந்த நாட்டின் பூர்விகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள்! ஆரியக் கூட்டமே ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கு வந்தது. எங்களுக்குத்தான் இந்த மண்ணின் உரிமை உள்ளது. ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியர்களின் கொடுமைகளைச் சகித்து வந்தோம்! என்று நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகப் பெரிய வரலாற்று உண்மையைப் பதிவு செய்த எதிர்க் கட்சித் தலைவரை (காங்) எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.
இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை, நிரந்தர அறியாமையிலும், வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள்அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்குப் பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.
இந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாக கருதப்படுகின்றனர். பார்ப்பனர்களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்நாட்டினர் போல்தான் தோன்றுவர்.
ஒரு ஜெர்மானியருக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் - அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாதவர் களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியர்கள் மட்டுமல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான் என்று கூறுகிறார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். (ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்ததென்ன எனும் நூல்).
இதே கருத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வேறு சொற்களில் தத்துவார்த்தமாகச் சொல்லியுள்ளார்.
என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம், தொட வேண்டாம் என்பவனும் - கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும் நான் தொட்டதைச் சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகன் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பரவாயில்லை நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியானா? என்பதை யோசித்துப் பாருங்கள் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (குடிஅரசு (6.9.1931)
இந்தியாவில் சமூகப் புரட்சிவாதிகள் யாராக இருந்தாலும் இந்த வரலாற்று உண்மையைத்தான் பதிவு செய்தார்கள் - அந்த அடிப்படையிலே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கூறியுள்ளனர். அதனைத் தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க் கட்சித் தலைவர் ஒரு சரியான சந்தர்ப்பத்தில் சட்ட நாளில் - அதுவும் அண்ணல் அம்பேத்கர் பற்றி பேசப்பட வேண்டிய தக்க தருணத்தில் முனை மழுங்காமல், சொல்ல வேண்டிய நேரத்தில் கல்வெட்டுச் செதுக்குவதுபோல பதிவு செய்துள்ளார்.
அரசியல் சட்ட உருவாக்கக் குழுவுக்குத் தலைவராக இருந்த அம்பேத்கர், நாடாளுமன்றத்தில் - மாநிலங்களவையில் கூறிய கருத்து இங்கு எடுத்துக் காட்டத்தகுந்ததாகும்.
சிலர் நான்தான் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள்; அதனை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக நான்தான் இருப்பேன், நான் அந்தச் சட்டத்தை முற்றிலும் வெறுக்கிறேன் என்று ஆந்திர மசோதா பற்றிய விவாதம் மாநிலங்களவையில் நடந்தபோது (3.9.1953) டாக்டர் அம்பேத்கர் முழங்கினாரே!
இந்த வரலாறு எல்லாம் பிஜேபியினருக்கு - பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா?
நாடாளுமன்றத்தில் ஆரியர் - திராவிடர்நான் இந்துவாகப் பிறந்தேன் - ஆனால் இந்துவாகச் சாக மாட்டேன் என்று  கூறியதோடு மட்டுமல்ல; பல லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு புத்த மார்க்கத்தை தழுவியவரும் அண்ணல் அம்பேத்கரே!
இந்த நிலையில், இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்றும், ராம ராஜ்ஜியம் சமைப்போம் என்ற கொள்கை உடையவர்கள் அம்பேத்கரைப் போற்றுவது - பார்ப்பனீயத்துக்கே உரித்தான நயவஞ்சகமே - அணைத்து அழிக்கும் ஆரியக் குணமே என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும் - ஆரியம் விரிக்கும் வலையில் ஏமாந்து விடவும் கூடாது - கூடவே கூடாது.
-விடுதலை,30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக