ஞாயிறு, 22 நவம்பர், 2015

நாம் பிரிந்து கிடக்கிறோம்

- தந்தை பெரியார்

(தம் மனதில் உண்மை என்று படக் கூடிய விசயங்களைச் சமய சந்தர்ப்பம் தயவு தாட்சண்யம் முதலியவற்றைப் பார்க்காமல் மிகவும் தைரியமாக எடுத்துச் சொல்லுபவர் பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய பிரசங்கம் எவ்வளவு தெளிந்த நடையோடும். உணர்ச்சி யூட்டக் கூடியதாகவும் இருக் கிறதோ, அதேபோல அவருடைய கட்டுரையும் அமைந்திருப்பதைக் காணலாம்.  சாதி சமயப் பிரி வினைகளை வேரறுத்து, ஒவ் வொருவரும் தன் மதிப்போடு தானும் மனிதன் என்று தலை நிமிர்ந்து நடக்க இக்கட்டுரை வழிகாட்டட்டும் -_ (பிரசண்ட விகடன்)
தற்காலப் பிரச்சினை திராவிட மக்கள் இந்துக்கள் என்னும் தலைப்புக் கொண்ட கூட்டத்திற்குள் இருப்பதா அல்லது அதைவிட்டு விலகி வெளிவந்து, தங்கள் இனம், நாடு, இனநலன், நாட்டு நலன் தெரி யும்படியான தலைப்புடையவர்களாகி அன்னிய ஆதிக்கத்திலும் சுரண் டலிலும் இருந்து விடுபடுவதா என்பதேயாகும்.
உண்மையாகச் சொல்லுகிறேன், திராவிட மக்கள் இன்று தங்கள் முற்போக்குக்கும் விடுதலைக்குமாக முதலில் கவனிக்க வேண்டியது தங்கள் நாட்டினுடையவும் இனத் தினுடையவும் ஆன பிரச்சினையே யொழிய, அரசியல் பிரச்சினை அல்ல. நமக்கு இன்னும் அரசியல் பிரச் சினையைப் பற்றிப் பேசும்படியான தகுதி ஏற்படவில்லை. ஆரியர்களைப் போலவோ, முசுலீம்களைப் போலவோ நமக்குள் அரசியல் பிரச்  சினைக்கேற்ற ஒற்றுமையும், தகுதியும், திட்டமும் இன்றுவரை இல்லவே இல்லை.
ஆரியர்களுடைய அரசியல் பிரச்சினை, ஆரிய ஆதிக்கமுள்ள இந்து சட்டப்படி மனுமாந்தாதா, இராமன் கொள்கைப்படி ராஜ்ய பாரம் நடைபெற வேண்டியதே ஆகும். மற்றப்படி நாட்டை எவன் ஆண்டாலும் அவர்களுக்கு அக்கறை யில்லை. தங்கள் இஷ்டப்படி, தங்கள் நலனுக்கு ஏற்றவண்ணம் எவன் ஆட்சி நடத்துகிறானோ அவனை இருத்தி வைப்பதும்  மற்றவனை ஒழித்து விடுவதுமே அவர்களுடைய புராண காலம் முதற்கொண்டு நடந்து வந்த கொள்கை ஆகும். இராமா யணக் கதை இந்த நீதியைப் புகட் டுவதே ஆகும்.
இந்து தேச சரித்தி ரமும் இதைப் பெரிதும் மெய்ப்பிக் கும். இதற்கேற்ற ஒற்றுமையும், ஒன்று பட்ட உணர்ச்சியும், கட்டுப்பாடும்  அவர்களிடம் உண்டு. ஆதலால் இன் றைய நிலையில் பிரிட்டிஷார்கூட அல்லாமல் ஜப்பானியரோ, ஜெர் மானியரோ ஏன் அய்ரோபியரோ, ஆப்பிரிக்கரோ இந்நாட்டைக் கைப்பற்றி விட்ட போதிலுங்கூட, அவர்களிடம் தங்கள் நலனுக்குக் கேடில்லாமல், (ஆரிய மதத்தில் பிரவேசிப்பதில்லை என்பதால்) நடப்பதாக வாக்குறுதி வாங்கிக் கொள்ளுவார்கள். அல்லது அப்படி வாக்குறுதி கொடுக்காதவனையோ, கொடுத்த வாக்குறுதியைத் தவறுபவனையோ விரட்டிவிட்டு வேறொருவனை அழைத்து வந்து வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஆட்சியில் அமர வைப்பார்கள். இந்தச் சக்தி அவர்களுக்கும்,  அதுவே கொள்கையாக அவர்கள் மதத்திற்கும் அதற்குத் திட்டமாக அவர்களது புராண இதிகாசக் கதைகளுக்கும் இருக்கின்றன.
அதுபோலவே முசுலீம்களுக்குள் பெரிதும், பாகிஸ்தான் பிரச்சினை இந்துமத ஆட்சியை விட்டு மீண்டு கொள்ளுவதும், தங்கள் இஸ்லாம் கொள்கைக்கு ஏற்ற ஆட்சியே நடைபெற வேண்டும் என்பதுமாகும். அதற்கேற்ற மதமே அவர்களது மதமுமாகும். அதற்குத் தகுந்த ஒற்று மையும் கட்டுப்பாடும் அவர்களிடம் உண்டு.
ஆனால், திராவிடர்களுக்கு அதுபோல் என்ன இருக்கிறது? திரா விடர்களுக்கு வடநாட்டில் நூற்றுக்கு அய்ந்து பேருக்குக்கூடத் தாங்கள் திராவிடர்கள் என்றோ, தங்கள் நாடு திராவிட நாடு என்றோ தெரியாது. தென்னாட்டவர்களை வடநாட்டார் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ கருதுகிறவர் வெகுவெகு அருமையே ஆகும்.
தென்னாட்டவர்களில் தானாகட் டும், திராவிடர்களில் தாங்கள் திராவிடர்கள் என்றும்,  தங்கள் நாடு திராவிட நாடு என்றும், தங்கள் நாட்டில் ஆரிய சமயமும், ஆரிய புராண இதிகாச காவியங்களும் வந்து தங்கள் நிலையைக் குலைத்து, தங்களை ஆரிய அடிமைகளாகவும், முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், கீழான ஜாதியார் ஆகவும், தீண்டாதவராகவும் செய்து விட்டதாக (திராவிடர்களில்) எத்தனை  பேருக்குத் தெரியும்? இந்த நிலையில் திராவிடர்கள் தங்களுக்கு அரசியல் கொள்கையாகவோ திட்டமாகவோ எதைக் கருத முடியும்? முதலாவது திராவிடர்களிடையில் ஆரியர்கள் போலவோ முஸ்லீம்கள் போலவோ சமுதாயத்திலும், சமயத்திலும் ஒன்றுபட்ட உணர்ச்சியும், தாங்கள் யாவரும் ஒன்றேயென்ற ஒற்றுமையும் குறித்துக் காட்டக், காரியத்திற்குத் தொண்டாற்றக் கட்டுப்பாடும் இருப்பதாக யாராவது கூற முடியுமா? ஆரியர்கள் போலவோ, திராவிடர் களுக்கு ஒரு பொது ஸ்தாபனம் எங்கே இருக்கிறது? ஆரியர்களுக்கு ஆரிய தர்மசபை, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக், கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்தவர்கள் சங்கம் (கிறிஸ்டியன் அசோசியேஷன்) இருக்கின்றன.
திராவிடர்களுக்கோ என்றால் அந்தந்த ஜாதியின் பேரால், அதாவது விஸ்வப் பிராமணர் சங்கம், அக்கினி குல க்ஷத்திரியர்கள் சங்கம், வன்னிய குல க்ஷத்திரியர் சங்கம், நகரத்து வைசிய சங்கம், தொண்டை மண்டல வேளாளர் சங்கம், கார்காத்த வேளா ளர் சங்கம், கொங்கு வேளாளர் சங்கம், முக்குலத்தோர் சங்கம், நாடார் மஹாஜன சங்கம், செங்குந்தர் சங்கம், பேரி செட்டியார் சங்கம், 24 மனை வைசியர் சங்கம், ஆரிய வைசிய சங்கம், நாயுடு சங்கம், வெலம நாயுடு சங்கம், காபு நாயுடு சங்கம், கொல்ல நாயுடு சங்கம், நாயர் சமாஜம், தீயர் யோகம், புலையர் சங்கம், (இன்னும் பல கூறலாம்). இப்படியாகச் சின்னா பின்னப்பட்டுப் ப ல ஜாதிகளும் தங்களைப் பல இனங்களாகக்  கருதிக் கொண்டு, ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல் இல்லாமலும், உண்பன தின்பன தண்ணீர் குடித்தல் முதலியவை கூடத் தடுக்கப்பட்டுக் கட்டுக் குலைந்து நெல்லிக்காய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டியது போல் தனித்தனியாய் இருக்கிறோம்.
இதனால்தான் டாக்டர் அம் பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, இன்றைய நிலையில் நமக்குச் சுயராஜ்ஜியம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளா கவே, ஆளப்படுபவர்களாகவே தான் இருப்போம்.
ஆதலால் சுயராஜ்ஜிய ஆட்சி இன்றைய ஆட்சியை விட மேலானதாக இருக்க முடியாது என்று சொன்னார். அதாவது ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்தச் சுயராஜ்ஜியத்திலும் ஆட்சி புரியும் என்றும், அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்ஜியத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத் தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.
பிரசண்ட விகடன் மலரிலிருந்து  திராவிடநாடு 25.2.1945).
 விடுதலை ஞா.ம.,12.1.13


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக